வெள்ளி, 13 மார்ச், 2015

பாசுபதேஸ்வரர் திருக்கோயில் திருவேட்களம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு அருகில் அமைந்துள்ளது சிவாலயம் திருவேட்களம் பாசுபதேஸ்வரர் ஆலயம். 




இறைவர் திருப்பெயர் : பாசுபதேஸ்வரரர், பாசுபதநாதர்

இறைவியார் திருப்பெயர் : சற்குணாம்பாள், நல்லநாயகி

தல மரம் : மூங்கில்

தீர்த்தம் : கிருபா தீர்த்தம், தீர்த்தக் குளம். (ஆலயத்தின் எதிரில் உள்ளது.)

வழிபட்டோர் : நாரதர், அர்ச்சுனன் முதலியோர்

புராணப் பெயர் : திருவேட்களம்

பாடியவர்கள் :  திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்


தலத்தின் வரலாறு மற்றும் சிறப்புகள்




தேவாரப்பபாடல் பெற்ற சிவத்தலங்களில் முதலானது சிதம்பரம். இரண்டாவது திருவேட்களம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சிதம்பரத்தை அடுத்துள்ள திருவேட்களம். இரண்டாயிரம் ஆண்டு பழமையான இங்கு தான் அர்ஜுனனுக்கு இறைவன் பாசுபதம் வழங்கினார். அம்மன் நல்லநாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். இவளுக்கு எதிரிலும் நந்தி உள்ளது.

தொழுபவர்க்கு அல்லல் இல்லை என்கிறார் திருநாவுக்கரசர்.

ஒரு முறை சம்பந்தர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வருகிறார். அப்போது அவர் திருவேட்களத்தில் தங்கி சிதம்பரம் நடராஜரை தரிசித்துள்ளார். 

திருவேட்களம் பற்றி சம்பந்தர் பாடும் போது,"வேட்கள நன்னகர்' என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,"சிறப்புடன் வாழ வாழ்வில் ஒரு முறையாவது "திருவேட்களம் போ", என்றும், அம்பிகையை "பெண்ணில் நல்லாள்' என்றும் குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடியுள்ளார்.

பாரதப் போரில் வெற்றி பெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான். அப்போது கிருஷ்ணன், நீ அனைத்து அஸ்திரங்களையும் உனது மானசீக தந்தையான இந்திரனிடமிருந்து பெற்றாய். ஆனால் பாசுபதாஸ்திரத்தை மட்டும் நீ சிவனிடமிருந்து தான் பெற வேண்டும். அதற்கு இந்திரனின் அனுமதி பெற வேண்டும் என்றார். 

இதற்காக அர்ஜுனன் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தான். அர்ஜுனனின் தவத்தை கலைக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். உடனே சிவன் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து பன்றியை கொன்றார். 

நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே வந்தன. அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது.

கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. வேடுவப்பெண்ணாக வந்த பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியிடம் உமையவளே! நீ லோகமாதா! நீ கோபப்பட்டால் இவ்வுலகம் தாங்காது, என சமாதானப்படுத்தி "சற்குணா' (நல்லநாயகி) தள்ளி நில் என்கிறார்.  

சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத தீட்சை பெற்று அன்னையின் கருணையால் இத்தல கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுகிறான். சிவன் பார்வதியுடன் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரத்தை தந்தருளினார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.

அம்பிகையின் சன்னதியில் 4 தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம் புரிதல், இறைவன் வேடன் வடிவம் எடுத்தல், சிவனும் அர்ஜுனனும் சண்டையிடுதல் போன்ற சிற்பங்கள் சிறப்பானவை!


கோவில் அமைவிடம் :
சிதம்பரத்திலிருந்து அண்ணாமலை நகர் செல்லும் சாலையில் உள்ளது. (அண்ணாமலை பல்கலைகழகப் பகுதியைத் கடந்து சென்றால் எளிது)


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!" 

"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''



1 கருத்து: