திங்கள், 12 அக்டோபர், 2015

திருப்பறியலூர் (கீழப் பரசலூர்) திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : வீரட்டேஸ்வரர், தக்ஷபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : இளங்கொம்பனையாள், வாலாம்பாள்

திருமுறை : முதல் திருமுறை 134 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


தல வரலாறு: தேவர்களுக்கு ஏற்பட்ட பாவத்தைத் தண்டனை மூலம் பறித்ததால் 'பறியலூர் ' என்றும்; தக்கன் யாகம் செய்த தலமாதலின் தக்ஷபுரம் என்றும் இஃது வழங்கலாயிற்று. திருப்பறியலூர் சிவபெருமானின் அட்ட வீரட்ட தலங்களில் ஒன்று. மற்றவை கண்டியூர், திருக்கோவலூர், திருஅதிகை, திருவிற்குடி, வழுவூர், குறுக்கை, திருக்கடவூர் ஆகியவை. சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தையும், தட்சனையும் அழித்த தலம் ஆகும். சிவபெருமானின் மனைவியான தாட்சாயினியின் தந்தை தட்சன் மிகச்சிறந்த சிவ பக்தன். அவனுக்கு வரம் அளித்த சிவன் என்றும் கூட மதியாமல் அவருக்குரிய அவிர்பாகத்தையும் தான் நடத்தும் யாகத்தில் தராமல் ஆணவத்துடன் நடந்து கொண்டான் தட்சன். தட்சன் நடத்தும் யாகத்திற்கு தாட்சாயினி செல்ல ஈசன் அனுமதி கொடுக்கவில்லை. இருந்தும் யாகத்திற்குச் சென்ற தாட்சாயினியை மகள் என்றும் பாராமல் அவமரியாதை செய்தான் தட்சன். திரும்பிச் சென்று ஈசனை பார்க்க மனம் வராத தாட்சாயினியாக குண்டத்தில் கொழுந்து விட்டு எரியும் தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொண்டாள். கோபமுற்ற ஈசன் வீரபத்திரரை அனுப்பி தட்சன் நடத்தும் யாகத்தை அழித்ததுடன் தட்சன் தலையைக் கொய்து அவனை தண்டித்த தலம் திருப்பறியலூர்.

தன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய அந்த யாகத்தில் கலந்து கொண்ட தேவாதி தேவர்களை எல்லாம் சிவபெருமான் தண்டித்தார். அப்போது சூரியனின் பல் உடைந்தது. இதனால் தான் இத்தலத்தில் சூரியன் தனி சன்னதியில் வீற்றிருந்து சிவனை தினமும் வணங்கி வருகிறார். எனவே இத்தலத்தில் நவக்கிரங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை எனபது குறிப்பிடத்தக்கது.

கோவில் அமைப்பு: மேற்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரம், அதையடுத்துது 3 நிலை உள் கோபுரம். ஆலயம் இரண்டு பிரகாரங்களுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. முதல் இராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தவுடன் நந்தி, பலிபீடம் உள்ளன. கொடிமர விநாயகர் உள்ளார். ஆனால் கொடிமரம் இல்லை. வெளிப் பிராகாரம் வலம் வரும்போது விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், தல விநாயகர், நால்வர் சந்நிதி ஆகியவைகளைக் காணலாம். 2 வது கோபுரம் கடந்து உள் பிராகாரம் நுழைந்தால் விநாயகர், விசுவநாதர், பைரவர், சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. 


கருவறைச் சுவரில் தக்கன் ஆட்டுத் தலையுடன் சிவலிங்கத்தைப் பூசிக்கும் சிற்பம் உள்ளது. வீரபத்திரர் தெற்கு நோக்கி எட்டு கரங்களுடன் உள்ளார். இம்மூர்த்தியின் திருவடியில் தக்கன் வீழ்ந்து கிடப்பதைப்போன்று சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கீழே செப்புத் தட்டில் தக்கன் யாகம் செய்வது போலவும் பிரமன் இருப்பது போலவும் சிற்பம் உள்ளது. இதைத் தகட்டால் மூடி வைத்துள்ளனர். சிவாசாரியரிடம் கேட்டு, அத்தகட்டைத் தள்ளச் செய்து, இச்சிற்பத்தைக் கண்டு தரிசிக்கலாம். சம்ஹார மூர்த்திக்குப் பக்கத்தில் நடராசர் சபை உள்ளது. கருவறையில் சிவன் சுயம்பு மூர்த்தியாக வீரட்டேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். மூலவர் பெரிய திருமேனியுடன் சதுர ஆவுடையார் மீது மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மயில் மீது ஒரு காலூன்றி நிற்கும் முருகன், சோமாஸ்கந்தர், விநாயகர், பிரதோஷ நாயகர் முதலியன சிறப்பாகவுள்ளன.

திருப்பகழ் தலம்: திருப்பறியலூர் திருப்பகழ் வைப்புத் தலங்களில் ஒன்று. இங்கு முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நானகு திருக்கரங்களும் கொண்டு விளங்குகிறார். வெளிமுன் மண்டபத்தில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. இக்கோயிலில் பைரவருக்கு அர்த்த சாம பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது.

திருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தின் 9-வது பாடலில் இத்தல இறைவியின் பெயரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலக் கல்வெட்டில் இத்தலம் "ஜயங்கொண்ட சோழவளநாட்டு வீழைநாட்டு ராஜ நாராயண சதுர்வேதி மங்கலமான பறியலூர்" என்றும்; இறைவன் "திருவீரட்டான முடையார்", "தக்ஷேஸ்வரமுடையார்" என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் பாதையில் செம்பொன்னார் கோயிலை அடைந்து, அலகிருந்து நல்லாடை செல்லும் பாதையில் (வலப்புறமாக) சிறிது தூரம் சென்று, "பரசலூர்" என்று கைகாட்டி உள்ள இடத்தில் வலது புறம் பிரியும் சாலையில் திரும்பி 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். கோயில் சாலையோரத்தில் உள்ளது.

நன்றி www.shivatemples இணையதளத்திற்கு


பாடல் எண் : 01
கருத்தன் கடவுள் கனல் ஏந்தி ஆடும்
நிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்
திருத்தம் உடையார் திருப்பறியலூரில்
விருத்தன் எனத் தகும் வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
திருந்திய மனமுடையவர்கள் வாழும் திருப்பறியலூரில் தொன்மையானவனாய் விளங்கும் வீரட்டானத்து இறைவன் அனைத்துலகங்களுக்கும் தலைவனும், கடவுளுமாக இருப்பவன். கையில் கனலேந்தி நடனம் புரிபவன். சடைமுடி மீது இளம்பிறை அணிந்தவன்.


பாடல் எண் : 02
மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்
பெருந்தண் புனல் சென்னி வைத்த பெருமான்
திருந்து மறையோர் திருப்பறியலூரில்
விரிந்த மலர்ச்சோலை வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
ஒழுக்கத்திற் சிறந்த அந்தணர்கள் வாழும் விரிந்த மலர்ச் சோலைகளையுடைய திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவன், பிணி தீர்க்கும் மருந்தாவான். உயிர் காக்கும் அமுதமாவான். மயானத்துள் நின்றாடும் வலியோனாவான். மிகப் பெரியதாகப் பரந்து வந்த குளிர்ந்த கங்கையைத் தன் சென்னியில் தாங்கி வைத்துள்ள பெருமானாவான்.


பாடல் எண் : 03
குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்
விளிந்தான் அடங்க வீந்து எய்தச் செற்றான்
தெளிந்தார் மறையோர் திருப்பறியலூரில்
மிளிர்ந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
அறிவில் தெளிந்த மறையோர்கள் வாழும் மலர்ச்சோலைகளால் சூழப்பட்ட திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவன் குளிர்ந்த சடைமுடியை உடையவன். கொடிய வில்லை வளைத்து மலர்க்கணை தொடுத்த மன்மதனை எரித்து இறக்குமாறு செய்து, இரதிதேவி வேண்ட அவனைத் தோற்றுவித்தவன்.


பாடல் எண் : 04
பிறப்பு ஆதி இல்லான் பிறப்பார் பிறப்புச்
செறப்பு ஆதி அந்தம் செலச் செய்யும் தேசன்
சிறப்பாடு உடையார் திருப்பறியலூரில்
விறல் பாரிடம் சூழ வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
சிறப்புடையவர்கள் வாழ்கின்ற திருப்பறியலூரில் வலிமை பொருந்திய பூதகணங்கள் தன்னைச் சூழ விளங்கும் வீரட்டானத்து இறைவன், பிறப்பும் இறப்பும் இல்லாதவன். இவ்வுலகில் பிறவி எடுக்கும் உயிர்கள் அடையும் பிறப்புக்கும், சிறப்புக்கும் முதலும் முடிவும் காணச்செய்யும் ஒளி வடிவினன்.


பாடல் எண் : 05
கரிந்தார் இடுகாட்டில் ஆடும் கபாலி
புரிந்தார் படுதம் புறங்காட்டில் ஆடும்
தெரிந்தார் மறையோர் திருப்பறியலூரில்
விரிந்தார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
நான்கு வேதங்களையும் ஆராய்ந்தறிந்த மறையவர்கள் வாழும் விரிந்த மலர்ச்சோலைகளையுடைய திருப்பறியலூரில் விளங்கும் வீரட்டானத்து இறைவர், இறந்தவர்களைக் கரிந்தவர்களாக எரிக்கும் சுடுகாட்டில் ஆடும் கபாலி.


பாடல் எண் : 06
அரவுற்ற நாணா அனல் அம்பு அது ஆக
செருவுற்றவர் புரம் தீயெழச் செற்றான்
தெருவில் கொடிசூழ் திருப்பறியலூரில்,
வெருவுற்றவர் தொழும் வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
தெருக்களில் நடப்பட்ட கொடிகளால் சூழப்பெற்ற திருப்பறியலூரில், பிறவிப் பிணிக்கு அஞ்சுபவர்களால் தொழப்படும் வீரட்டானத்து இறைவன், வாசுகி என்னும் பாம்பை மேருவில்லில் நாணாக இணைத்து அனலை அம்பாகக் கொண்டு தன்னோடு போரிட்டவரின் முப்புரங்களைத் தீ எழுமாறு செய்து அழித்தவன்.


பாடல் எண் : 07
நரையார் விடையான் நலங்கொள் பெருமான்
அரையார் அரவம் அழகா அசைத்தான்
திரையார் புனல்சூழ் திருப்பறியலூரில்
விரையார் மலர்ச்சோலை வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
அலைகளையுடைய நீர்க்கால்களால் சூழப்பட்டதும், மணம் பொருந்திய மலர்ச் சோலைகளை உடையதுமான திருப்பறியலூர் வீரட்டத்தில் விளங்கும் இறைவன், வெண்மை நிறம் பொருந்திய விடையேற்றை உடையவன். நன்மைகளைக் கொண்டுள்ள தலைவன், இடையில் பாம்பினைக் கச்சாக அழகுறக் கட்டியவன்.


பாடல் எண் : 08
வளைக்கும் எயிற்றின் அரக்கன் வரைக்கீழ்
இளைக்கும்படி தான் இருந்து ஏழை அன்னம்
திளைக்கும் படுகர்த் திருப்பறியலூரில்
விளைக்கும் வயல் சூழ்ந்த வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
பெண் அன்னங்கள் ஆண் அன்னங்களோடு கூடித்திளைக்கும் ஆழமான மடுக்களை உடையதும், மிகுதியான நெல் விளைவைத் தரும் வயல்களால் சூழப்பட்டதுமான திருப்பறியலூர் வீரட்டானத்து இறைவன், வளைந்த பற்களையுடைய இராவணனைக் கயிலை மலையின்கண் அகப்படுத்தி அவனை வலிமை குன்றியவனாகும்படி கால் விரலால் அடர்த்து எழுந்தருளி இருப்பவனாவான்.


பாடல் எண் : 09
விளங்கொண் மலர்மேல் அயன் ஓத வண்ணன்
துளங்கும் மனத்தார் தொழ தழலாய் நின்றான்
இளங்கொம்பு அனாளோடு இணைந்தும் பிணைந்தும்
விளங்கும் திருப்பறியல் வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
இளைய பூங்கொம்பு போன்றவளாகிய உமையம்மையோடு இணைந்தும், இடப்பாகமாக அவ்வம்மையைக் கொண்டும் விளங்குபவனாகிய திருப்பறியல் வீரட்டத்து இறைவன், ஒளி விளங்கும் தாமரை மலர்மேல் உறையும் பிரமனும் கடல் வண்ணனாகிய திருமாலும் அச்சத்தால் நடுங்கிய மனத்தையுடையவராய்த் தன்னைத் தொழத் தழல் உருவாய் நின்றவனாவான்.


பாடல் எண் : 10
சடையன் பிறையன் சமண் சாக்கியரோடு
அடை அன்பு இலாதான் அடியார் பெருமான்
உடையன் புலியின் உரிதோல் அரைமேல்
விடையன் திருப்பறியல் வீரட்டத் தானே.

பாடல் விளக்கம்‬:
திருப்பறியல் வீரட்டத்தில் உறையும் இறைவன், சடையில் பிறை அணிந்தவன். சமணர், புத்தர் ஆகியோர்க்கு அருள்புரிதற்கு உரிய அன்பிலாதவன். புலியின் தோலை இடைமேல் ஆடையாக உடுத்தவன். விடையேற்றினை உடையவன்.


பாடல் எண் : 11
நறு நீர் உகும் காழி ஞான சம்பந்தன்
வெறி நீர்த் திருப்பறியல் வீரட்டத்தானை
பொறி நீடு அரவன் புனை பாடல் வல்லார்க்கு
அறும் நீடு அவலம் அறும் பிறப்புத் தானே.

பாடல் விளக்கம்‬:
நல்ல நீர் பாயும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், மணங்கமழும் நீர் வளமுடைய திருப்பறியல் வீரட்டானத்து உறையும் புள்ளிகளையுடைய நீண்ட பாம்பினை அணிந்த இறைவனைப் புனைந்து போற்றிய இப்பதிகப் பாடல்களை வல்லவர்கட்குப் பெரிய துன்பங்களும் பிறப்பும் நீங்கும்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருப்பறியலூர் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக