வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

திருஅஞ்சைக்களம் திருமுறை திருப்பதிகம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அஞ்சைக்களத்தீஸ்வரர், மகாதேவர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ உமையம்மை

திருமுறை : ஏழாம் திருமுறை 04 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்

தேவாரப்பாடல் பெற்ற திருத்தலங்களில் கேரளாவில் இருக்கும் ஒரே சிவத்தலம் திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயில் ஆகும். இக்கோயிலில் அம்மன் தனி சன்னதியில் இல்லாமல் சிவனின் கருவறைக்குள் அவருடன் இணைந்து சதாசிவ பாவத்தில் அருள்பாலிக்கிறார். பரசுராமர் தன் தாயின் மரணத்தினால் ஏற்பட்ட பாவம் தீர இங்கு வந்து பூஜை செய்துள்ளார்.


சமயக்குரவர்களில் சுந்தரர் பாடிய தலம் இது. இவர் விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் பிறந்தவர். ஒரு முறை சேர மன்னன் திருவாரூர்க்கு வர, சுந்தரர் அவரை வரவேற்று உபசரித்தார். சில நாட்களுக்கு பின் சேரமானுடன் தாமும் புறப்பட்டு பாண்டிய நாடு, சோழநாடு, கொங்கு நாடுகளில் உள்ள தலங்களை வழிபட்டுப் பதிகம் பாடிக்கொண்டே கேரளாவில் உள்ள கொடுங்கலூரை அடைந்தார். அங்கு சேரமன்னனால் உபசரிக்கப்பட்டு சில காலம் அங்கு தங்கினார். மறுபடி தமிழக கோயில்களுக்கு வந்து பாடல் பாடினார்.

இந்த சிவன் சோழ மன்னர்களின் குல தெய்வமாக விளங்கியவர். இங்குள்ள சிலையை சிதம்பரத்தில் இருந்து எடுத்து வந்து, 1801-ல் பிரதிஷ்டை செய்ததாக கல்வெட்டு கூறுகிறது. தனி சன்னதியில் சுந்தரரும் சேரமானும் சேர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார்கள். கோயிலின் சுற்றுப்பிரகாரத்தில் 25 க்கும் அதிகமான தெய்வங்கள் தனித்தனி சன்னனதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சுந்தரர் தனது 18வது வயதில் தன் நண்பர் சேரமானுடன் கேரளாவில் உள்ள திருவஞ்சிக்குளம் மகாதேவ சுவாமி கோயிலுக்கு வந்தார். அங்குள்ள இறைவனிடம், இவ்வுலக வாழ்வை அகற்றிட வேண்டி “தலைக்கு தலை மாலை” என்ற பதிகம் பாடினார். சுந்தரர் பூமியில் பாடிய கடைசிப்பதிகம் இதுதான். அப்போது இறைவன் சுந்தரரை வெள்ளை யானையில் ஏற்றி கைலாயம் அழைத்து வரும்படி தேவர்களுக்கு கட்டளையிட்டார். 

இறைவனின் கட்டளைப்படி சுந்தரரை தேவர்கள் கைலாயம் அழைத்து சென்றனர். அப்போது தன் உயிர்த்தோழன் சேரமானை நினைத்தார் சுந்தரர். உடனே சேரமான் குதிரையில் சுந்தரரை மூன்று முறை வலம் வந்து சுந்தரருக்கு முன்னே கைலாயம் சென்று விட்டார். சுந்தரர் இறைவனின் பெரும் கருணையை நினைத்து வானில் செல்லும் போதும்,”தானெனை முன்படைத்தான் அதறிந்து தன் பொன்னடிக்கே” என்னும் பதிகம் பாடினார். இந்த பாடல் முடிந்தவுடன் சுந்தரர் கைலாயம் சென்றடைந்தார். இறைவனின் உத்தரவுப்படி வருணபகவான் இந்தப்பாடலை திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயிலில் சேர்ப்பித்து விட்டார்.
-
இங்குள்ள நடராசர் பஞ்சலோகச்சிலை; இதன் கீழ் "திருவஞ்சைக் களத்து சபாபதி" என்று எழுதப்பட்டுள்ளது. சுந்தரர் கயிலை சென்ற ஆடி, சுவாதி நன்னாளன்று ஆண்டுதோறும் சுந்தரர், சேரமான் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து விழா கொண்டாடுகிறார்கள். இந்த ஒரு நாள் மட்டும் தமிழ்நாட்டு முறைப்படி ஆகம பூஜை செய்யப்படுகின்றது.


இத்திருப்பதிகம், சிவபிரான் உலகத்தவர் வெறுக்கும் கோலங்கள் பலவற்றை விரும்பி மேற்கொள்ளுதற்குக் காரணம் என்னை என்று வினவும் முகத்தால் அவையனைத்தும் அவன் தன்பொருட்டன்றி உயிர்களின் பாசத்தை அறுத்தற்பொருட்டே கொள்கின்றனவாதலைப் பெறவைத்து, தமது வாழ்க்கையாகிய பாசத்தையும் அறுத்திட வேண்டும் என்னும் குறிப்புத் தோன்ற அருளிச்செய்தது.

பாடல் எண் : 01
தலைக்குத் தலை மாலை அணிந்தது என்னே 
சடைமேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே
அலைக்கும் புலித்தோல் கொண்டு அசைத்தது என்னே 
அதன் மேல் கதநாகம் கச்சு ஆர்த்தது என்னே
மலைக்கு(ந்) நிகர் ஒப்பன வன் திரைகள் 
வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அலைக்கும் கடலங்கரை மேல்மகோதை 
அணியா பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

பாடல் விளக்கம்‬:
மலைக்கு நிகராகிய தன்மையால் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள் வலம்புரிச் சங்குகளைப் பற்றி ஈர்த்து வந்து எறிந்து முழங்கி மோதுகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் நகரத்தின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய, "திருவஞ்சைக்களம்" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ தலைக்கு அணிகலமாகத் தலை மாலையை அணிந்தது என்? சடையின்மேல் "கங்கை" என்னும் ஆற்றைத் தாங்கியது என்? கொல்லும் தன்மையுடைய புலியினது தோலை உரித்தெடுத்து அரையில் உடுத்தது என்? அவ்வுடையின்மேல் சினத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டியது என்?.


பாடல் எண் : 02
பிடித்து ஆட்டி ஓர் நாகத்தைப் பூண்டது என்னே 
பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே 
பொடித்தான் கொண்டு மெய்ம் முற்றும் பூசிற்று என்னே 
புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே
மடித்து ஓட்டந்து வன்திரை எற்றியிட 
வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய
அடித்தார் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

பாடல் விளக்கம்‬:
வலிய அலைகள் தம் வடிவத்தைச் சுருளாகச் செய்து ஓடிவந்து மோதுதலினால், கரு வளர்கின்ற சங்குகள் வாய் திறந்து முத்துக்களை ஈன, இங்ஙனம் அலைத்து முழங்குகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ, விரும்பத் தகாத பாம்பை பிடித்து ஆட்டுதலையும், பூணாகப் பூணுதலையும் மேற்கொண்டது என்? விளங்குகின்ற சடையின்கண் பிறையைச் சூடியது என்? சாம்பலை எடுத்து உடம்பு முழுதும் பூசிக் கொண்டது என்? இழிந்த எருதினையே ஊர்தியாகக் கொள்ள விரும்பியது என்?.


பாடல் எண் : 03
சிந்தித்து எழுவார்க்கு நெல்லிக்கனியே 
சிறியார் பெரியார் மனத்து ஏறல் உற்றால்
முந்தித் தொழுவார் இறவார் பிறவார் 
முனிகள் முனியே அமரர்க்கு அமரா
சந்தித் தடமால் வரை போற்றிரைகள் 
தணியாது இடறும் கடலங்கரை மேல் 
அந்தித்தலைச் செக்கர்வானே ஒத்தியால் 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

பாடல் விளக்கம்‬:
மூங்கில்களையுடைய பெரிய மலைகள் போலும் அலைகள் இடைவிடாது மோதுகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய, அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, உன்னை நினைந்து துயிலுணர்வார்க்கு நெல்லிக்கனி போன்றவனே, முனிவர்கட்கெல்லாம் முனிவனே, தேவர்கட்கெல்லாம் தேவனே, உன்னை உள்ளந்தெளியப்பெற்றால், சிறியாரும் பெரியாராவர். விரைந்து வந்து உன்னை வணங்குபவர், இறத்தலும் பிறத்தலும் இலராவர். அவரது உள்ளத்தைப் பிணித்தற்கு, நீ, மாலைக் காலத்தில் தோன்றும் செவ்வானம் போலும் அழகிய திருமேனியை உடையையாய் இருக்கின்றனை.


பாடல் எண் : 04
இழைக்கும் எழுத்துக்கு உயிரே ஒத்தியால் 
இலையே ஒத்தியால் உளையே ஒத்தியால்
குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால் 
அடியார் தமக்கோர் குடியே ஒத்தியால் 
மழைக்கு(ந்) நிகர் ஒப்பன வன் திரைகள் 
வலித்தெற்றி முழங்கி வலம்புரி கொண்டு 
அழைக்கும் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

பாடல் விளக்கம்‬:
துளிகளைத் தூற்றுதலால் மேகத்திற்கு நிகராகும் தன்மையில் தம்மில் ஒப்பனவாகிய வலிய அலைகள், பல பொருள்களை ஈர்த்து வந்து மோதி முழங்கி, வலம்புரிச் சங்கின் இனிய ஓசையால் யாவரையும் தன்பால் வருவிக்கின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் தலத்தில் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ, உலகத்தை இயக்குதலில், எழுதப்படும் எழுத்துக்களுக்கு உயிரெழுத்துப் போல்கின்றாய்; இல்லாதாய் போல்கின்றாய்; ஆயினும் உள்ளாய் போல்கின்றாய்; உயிர்கட்கு உதவுதலில் தளிர்க்கும் பயிர்க்கு மேகம் போல்கின்றாய்; அடியார்களுக்கு அணியையாதலில், அவரோடு ஒருகுடிப் பிறப்பினை போல்கின்றாய்.


பாடல் எண் : 05
வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் 
விடை ஏறுவது என் மதயானை நிற்கக்
கூடும் மலை மங்கை ஒருத்தியுடன் 
சடைமேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே 
பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என் 
நிதியம் பல செய்த கலச்செலவின் 
ஆடும் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

பாடல் விளக்கம்‬:
பொன், மணி முதலிய செல்வங்களைத் தந்த மரக்கலங்களினது செலவினையுடைய, மூழ்குதற்குரிய கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய, "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, நீ "வீடு, பிறப்பு" என்னும் இரண்டனுள் ஒன்றையே அமையாது, மறுதலைப் பொருள்களாகிய அவ்விரண்டனையும் அமைத்ததன் பயன் யாது? மதத்தையுடைய யானை இருக்க, எருதினை ஊர்வது என்? திருமேனியில் நீங்காது பொருந்தியுள்ள மலைமகளாகிய ஒருத்தியோடு கங்கை என்பவளையும் சடையில் வைத்தது என்? உன்னைப் பாடுகின்ற புலவர்க்கு நீ அளிக்கும் பரிசில் யாது?.


பாடல் எண் : 06
இரவத்து இடு காட்டெரி ஆடிற்று என்னே 
இறந்தார் தலையில் பலி கோடல் என்னே
பரவித் தொழுவார் பெறு பண்டம் என்னே 
பரமா பரமேட்டி பணித்து அருளாய்
உரவத்தொடு சங்கமொடு இப்பி முத்தம் 
கொணர்ந்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அரவக் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

பாடல் விளக்கம்‬:
யாவர்க்கும் மேலானவனே, எல்லார்க்கும் மேலிடத்தில் உள்ளவனே, வலிமையோடு "சங்கு, இப்பி, முத்து" என்பவற்றைக் கொணர்ந்து வீசி, வலம்புரிச்சங்கை மேலே கொண்டு முழங்கி, ஆர்ப்பரவத்தையுடையதாகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள அழகு நிறைந்த சோலைகளையுடைய திருவஞ்சைக்களம் என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தந்தையே, நீ இராப்பொழுதில் புறங்காட்டில் எரியில் நின்று ஆடியது என்? இறந்தவரது தலையில் பிச்சையேற்றல் என்? உன்னை ஏத்தி வணங்குவோர் பெறும்பொருள் யாது? சொல்லியருளாய்.


பாடல் எண் : 07
ஆக்கும் அழிவும் அமைவும் நீ என்பன் நான் 
சொல்லுவார் சொல்பொருள் அவை நீ என்பன் நான்
நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் 
நலனே இனி நான் உனை நன்கு உணர்ந்தேன்
நோக்கும் நிதியம் பல எத்தனையும் 
கலத்தில் புகப் பெய்து கொண்டு ஏற நுந்தி 
ஆர்க்கும் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

பாடல் விளக்கம்‬:
எப்பொருட்கும் தலைவனே, இன்பம் தருபவனே, விரும்புகின்ற நுகர்ச்சிப் பொருள்கள் எத்துணை வகையினவற்றையும் மிகுதியாக மரக்கலங்களில் ஏற்றி நடுவண் செல்லச் செலுத்தி ஆரவாரிக்கின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய "திருவஞ்சைக்களம்" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தந்தையே, அடியேன் இதுபோழ்து உன்னை நன்குணர்ந்தேன் ஆதலின், எப்பொருளின் ஆக்கத்திற்கும், அழிவிற்கும் காரணன் நீயே என்றும், அவற்றிற்குக் காரணங்களாகப் பிறவற்றைச் சொல்லுவாரது சொற்பொருள்களும் நீயே என்றும், புலனுணர்வுக்குக் காரணமான நாக்கு, செவி, கண் என்பனவும் நீயே என்றும் துணிந்து சொல்லுவேன்.


பாடல் எண் : 08
வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழிந்தேன் 
விளங்கும் குழைக் காதுடை வேதியனே
இறுத்தாய் இலங்கைக்கு இறையாயவனைத் 
தலை பத்தொடு தோள் பல இற்று விழக்
கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் 
கடுகப் பிரமன் தலை ஐந்திலும் ஒன்று 
அறுத்தாய் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

பாடல் விளக்கம்‬:
ஒளிவிடுகின்ற குழையையணிந்த காதினையுடைய அந்தணனே, கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள, அழகு நிறைந்த சோலைகளையுடைய "திருவஞ்சைக்களம்" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ, இலங்கைக்கு அரசனாகிய இராவணனை அவனது பத்துத் தலைகளோடு பல தோள்களும் அற்று விழுவன போலும்படி நெரித்தாய். பாற்கடலில் தோன்றிய நஞ்சினை அமுதமாக உண்டு, கண்டம் கறுப்பாயினாய். பிரமன் தலைகள் ஐந்தனுள் ஒன்றை விரைவில் அறுத்தலும் செய்தாய். அடியேன் எனது மனை வாழ்க்கையை மனத்தாலும் வெறுத்தேன், உடம்பாலும் துறந்து விட்டேன்.


பாடல் எண் : 09
பிடிக்குக் களிறே ஒத்தியால் எம்பிரான் 
பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும் பிரான்
நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரியச் 
சிலை தொட்டவனே உனை நான் மறவேன் 
வடிக்கின்றன போல் சில வன் திரைகள் 
வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு 
அடிக்கும் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே.

பாடல் விளக்கம்‬:
மூன்று அரண்கள், ஒருமுறை கைந்நொடிக்கும் அளவிலே எரிந்தொழியுமாறு வில்லை வளைத்தவனே, முத்துக்கள் முதலியவற்றை வடித்தெடுத்துச் சேர்ப்பனபோல, சில வலிய அலைகள் அவைகளை ஈர்த்து வந்து வீசி, வலம்புரிச் சங்கினால், கரையிலுள்ளாரைத் தாக்குகின்ற கடலினது அழகிய கரையின் கண்ணதாகிய "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள அழகிய சோலைகளையுடைய, "திருவஞ்சைக்களம்" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையே, நீ பெண் யானைக்கு ஆண் யானை போல உயிர்கட்கு யாண்டும் உடன் செல்லும் துணைவனாய் உள்ளாய்; என் போலும் மக்கட்கும், பிரமன் திருமால் முதலிய தேவர்கட்கும் தலைவனாய் உள்ளாய்; இவற்றையெல்லாம் உணர்ந்து, அடியேன் உன்னை மறத்தல் ஒழிந்தேன்.


பாடல் எண் : 10
எம் தம் அடிகள் இமையோர் பெருமான் 
எனக்கு என்றும் அளிக்கும் மணிமிடற்றன்
அந்தண் கடலங்கரை மேல்மகோதை 
அணியார் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை
மந்தம் முழவும் குழலும் இயம்பும் 
வளர் நாவலர் கோன் நம்பி ஊரன் சொன்ன 
சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு 
அடிவீழ வல்லார் தடுமாற்று இலரே.

பாடல் விளக்கம்‬:
என்போலும் அடியவர்கட்கு முதல்வனும், தேவர்கட்குத் தலைவனும், எனக்கு எஞ்ஞான்றும் அருள்பண்ணும் சிவனும் ஆகிய, அழகிய குளிர்ந்த கரையின் கண்ணதாகிய, "மகோதை" என்னும் நகரின்கண் உள்ள, "திருவஞ்சைக்களம்" என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற தந்தையை, மத்தளமும் வேய்ங்குழலும், "மந்தம்" என்னும் அளவாக இயம்பப்படுகின்ற, நன்மை வளர்கின்ற திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் போற்றிய இசை நலம் மிக்க, தமிழ்ச்சொற்கள் என்னும் மலர்களால் இயன்ற இம்மாலைகளை வாயிலாகக்கொண்டு அப்பெருமானது திருவடிகளில் பணிய வல்லவர் நிலையாமை நீங்கப் பெற்று, நிலைபேறுடையவராவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருஅஞ்சைக்களம் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

திருக்கானாட்டுமுள்ளூர் திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பதஞ்சலி ஈஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ கானார் குழலி, ஸ்ரீ அம்புஜாட்சி

திருமுறை : ஏழாம் திருமுறை 40 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


பதஞ்சலி வழிபட்டடு பேறு பெற்றத் தலம். பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் சிவபெருமானின் நடனத்தை தரிசனம் செய்யும் விருப்பத்தை வெளியிட்டார் ஆதிசேஷன். மகாவிஷணுவின் ஆணைப்படி பதஞ்சலி முனிவராக அவதாரம் எடுத்து சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். சிவன் அவருக்கு சிதம்பரத்தில் தன் நடனக் காட்சியை காட்டி அருளினார். பதஞ்சலி முனிவர் ஒருமுறை இத்தலத்திற்கு வந்தார். வந்த இடத்தில் சிவபெருமானின் நடனத்தைக் காணவேண்டும் என்று விருமினார். அவருக்கு சிவன் இத்தலத்திலும் தன் நடனத்தைக் காட்டி அருள் செய்தார். பதஞ்சலி ஈஸ்வரர் என்ற பெயரையும் இத்தல இறைவன் பெற்றார்.


பாடல் எண் : 01
வள்வாய மதிமிளிரும் வளர் சடையினானை 
மறையவனை வாய்மொழியை வானவர்தம் கோனை
புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கி உமிழ்ந்தானைப் 
பொன்னிறத்தின் முப்புரிநூல் நான் முகத்தினானை 
முள்வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று 
மொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்
கள்வாய கருங்குவளை கண் வளரும் கழனிக் 
கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே.

பாடல் விளக்கம்:
கூரிய வாயை உடைய பிறை ஒளிரும் நீண்ட சடையை உடையவனும், "வேதம் வாயாற் சொல்லப்படும் பிற சொற்கள், இந்திரன், திருமால், பிரமன்" என்னும் பொருள்களாய் உள்ளவனும் ஆகிய இறைவனை, அடியேன், தாழையரும்புகள், வளைந்த தாழை மரத்தினால் ஈன்றிடப்பட்டு, முட்களையுடைய வாயினையுடைய இதழ்களைப் பொருந்தி மலர்ந்து மணம் வீசுகின்ற, தேன் மிகுந்த சோலைகள் சூழ்ந்த, மதுவொழுகும் வாயினையுடைய கருங்குவளை மலர்கள் கண்ணுறங்குவது போலக் காணப்படுகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டு முள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு!.


பாடல் எண் : 02
ஒருமேக முகிலாகி ஒத்துலகம் தானாய் 
ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானாய்ப்
பொருமேவு கடலாகிப் பூதங்கள் ஐந்தாய்ப் 
புனைந்தவனைப் புண்ணியனைப் புரிசடையினானைத்
திருமேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த 
திருத்தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் 
கருமேதி செந்தாமரை மேயும் கழனிக் 
கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே.

பாடல் விளக்கம்:
உலகிற்கு ஒரு பெருந்துணையாய் உள்ள மேகமாகியும், தம்முள் ஒத்த உலகங்கள் பலவும் தானேயாகியும், அவற்றில் உள்ள ஊர்வனவும், நிற்பனவுமாகிய உயிர்களும், அவற்றின் தோற்ற ஒடுக்கங்கட்குக் காரணமாகிய ஊழிக் காலங்களும் தானே யாகியும், அலையால் கரையை மோதுகின்ற கடல்களாகியும், ஐந்து பூதங்களாகியும் அவற்றைப் படைத்து நிற்பவனும், அறவடிவினனும், புரிந்த சடையை உடையவனும் ஆகிய இறைவனை, அடியேன், திருமகளும் விரும்பத்தக்க செல்வத்தை உடையவர்களது மாளிகைகளும், முத்தீயையும் வளர்க்கின்ற மேலான தகுதியுடைய அந்தணர்கள் வேதத்தை ஓதி வாழ்கின்ற மாளிகைகளும் உள்ள இடங்களிலெல்லாம், கரிய எருமைகள் செந்தாமரை மலர்களை மேய்கின்ற வயல் களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு.


பாடல் எண் : 03
இரும்பு உயர்ந்த மூவிலைய சூலத்தினானை 
இறையவனை மறையவனை எண் குணத்தினானைச்
சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூமதியம் சூடும் 
சடையானை விடையானை சோதியெனும் சுடரை
அரும்பு உயர்ந்த அரவிந்தத்து அணி மலர்கள் ஏறி 
அன்னங்கள் விளையாடும் அகன் துறையின் அருகே 
கரும்பு உயர்ந்து பெருஞ்செந்நெல் நெருங்கிவிளை கழனிக் 
கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே.

பாடல் விளக்கம்:
வலிமை மிகுந்த மூன்று இலைகளை உடைய சூலத்தை உடையவனும், இறைவனும், வேதத்தை ஓதுபவனும், எட்டுக் குணங்களை உடையவனும், வண்டுகள் மேலே சூழ்கின்ற கொன்றை மாலையோடு, வெள்ளிய சந்திரனைச் சூடிய சடையை உடையவனும், இடபத்தை ஏறுபவனும், "சுயஞ்சோதி" எனப்படுகின்ற ஒளியானவனும் ஆகிய இறைவனை, அடியேன், அன்னப்பறவைகள், அரும்புகள் மேலெழுந்து காணப்படுகின்ற தாமரையினது ஒப்பற்ற மலர்களின்மேல் ஏறி விளையாடுகின்ற, அகன்ற நீர்த்துறையின் அருகே கரும்புகள் வளரப்பட்டு, செந்நெற்பயிர்கள் செறிந்து விளைகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு.


பாடல் எண் : 04
பூளை புனை கொன்றையொடு புரிசடையினானைப் 
புனலாகி அனலாகி பூதங்கள் ஐந்தாய்
நாளை இன்று நெருநலாய் ஆகாயமாகி 
ஞாயிறாய் மதியமாய் நின்ற எம்பரனை
பாளைபடு பைங்கமுகின் சூழல் இளந்தெங்கின் 
படுமதஞ்செய் கொழுந்தேறல் வாய்மடுத்துப் பருகிக்
காளை வண்டு பாடமயில் ஆலும் வளர் சோலைக் 
கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே.

பாடல் விளக்கம்:
பூளைப் பூவையும், அழகிய கொன்றை மாலையையும், புரித்த சடையின்கண் உடையவனும், நீராகியும், நெருப்பாகியும், ஐம்பூதங்களாகியும், "நாளை, இன்று, நேற்று" என்னும் நாள்களாகியும், பரவெளியாகியும், சூரியனாகியும், சந்திரனாகியும் நிற்கின்ற எங்கள் இறைவனை, அடியேன், பாளைகள் உளவாகின்ற, பசிய கமுகுகளினது செறிவினிடத்தே உள்ள இளமையான தென்னையினது, மிக்க மயக்கத்தை உண்டாக்குகின்ற கள்ளினை இளைய ஆண் வண்டுகள் உட்கொண்டு திளைத்து இசையைப் பாட, மயில்கள் ஆடுகின்ற, உயர்ந்த சோலையையுடைய, திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப் பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு.


பாடல் எண் : 05
செருக்கு வாய்ப் பைங்கண் வெள்ளரவு அரையினானைத்
தேவர்கள் சூளாமணியைச் செங்கண் விடையானை
முருக்கு வாய் மலர் ஒக்கும் திருமேனியானை 
முன்னிலையாய் முழுது உலகமாய பெருமானை
இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் 
வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும் நகரெங்கும் 
கருக்கு வாய்ப் பெண்ணையொடு தெங்குமலி 
சோலை கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே.

பாடல் விளக்கம்:
சீறுகின்ற வாயினையும், பசிய கண்களையும் உடைய, வெள்ளிய பாம்பினை அரையிற் கட்டியவனும், தேவர்கள் முடியிற் பதிக்கும் மணிபோன்றவனும், சிவந்த கண்களையுடைய இடப ஊர்தியை உடையவனும், முருக்க மரத்தின்கண் பொருந்தியுள்ள மலர்போலும் திருமேனியை உடையவனும், எல்லாவற்றிற்கும் சான்றாய் நிற்பவனும், உலகமுழுதும் தானேயாய் நிறைந்தவனும் ஆகிய இறைவனை, அடியேன், எழுவகைப் பிறப்பினவாகிய உயிர்கள் உள்ள இடங்களில் எல்லாம் வேதத்தை ஓதுகின்ற அந்தணர்கள் வேள்வி வேட்டிருத்தலால், அவர்கட்கு மிக்க நிதிகளை வழங்குகின்ற மாளிகையின் பக்கங்களில் எல்லாம், கருக்குவாயினையுடைய பனைமரங்களும், தென்னை மரங்களும் நிறைந்த சோலைகளையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு.


பாடல் எண் : 06
விடையரவக் கொடியேந்தும் விண்ணவர் தம் கோனை 
வெள்ளத்து மாலவனும் வேத முதலானும் 
அடியிணையும் திருமுடியும் காண அரிதாய 
சங்கரனைத் தத்துவனைத் தையல் மடவார்கள் 
உடை அவிழக் குழல் அவிழக் கோதை குடைந்து ஆடக் 
குங்குமங்கள் உந்திவரு கொள்ளிடத்தின் கரைமேல்
கடைகள் விடுவார் குவளைகளை வாரும் கழனிக் 
கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே.

பாடல் விளக்கம்:
எருதினை எழுதிய ஒலிக்குங் கொடியை ஏந்துகின்ற தேவர் பெருமானும், நீரில் துயில்கின்ற திருமாலும், வேதத்திற்குத் தலைவனாகிய பிரமனும் அடி இணையையும், அழகிய முடியினையும் காண்டல் அரிதாகிய, `சங்கரன்` என்னும் காரணப் பெயரை உடையவனும், மெய்ப்பொருளானவனும் ஆகிய இறைவனை, அடியேன், இளைய பெண்கள் தங்கள் உடை அவிழவும், மாலையை அணிந்த கூந்தல் அவிழவும் மூழ்கி விளையாடுதலால் கிடைத்த குங்குமச் சேற்றைத் தள்ளிக்கொண்டு வருகின்ற கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள, கடையர்கள் தாங்கள் களைந்த நீண்ட குவளைக் கொடிகளைச் சேர்த்து எடுக்கின்ற திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு.


பாடல் எண் : 07
அருமணியை முத்தினை ஆனஞ்சும் ஆடும் 
அமரர்கள் தம் பெருமானை அருமறையின் பொருளைத்
திருமணியைத் தீங்கரும்பின் ஊறலிருந் தேனைத் 
தெரிவரிய மாமணியைத் திகழ்தரு செம்பொன்னைக் 
குருமணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரைவாய்க் 
கோல்வளையார் குடைந்தாடும் கொள்ளிடத்தின் கரைமேல்
கருமணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனிக்  
கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே.

பாடல் விளக்கம்:
அரிய மணியாகிய மாணிக்கம் போல்பவனும், முத்துப்போல்பவனும், ஆனைந்தினை ஆடுகின்ற தேவர் பெருமானும், அரிய வேதத்தின் பொருளாய் உள்ளவனும், அழகிய பிற மணிகள் போல்பவனும், இனிய கரும்பினின்றும் வடிதலையுடைய மிக்க சாறுபோல்பவனும், அறிதற்கரிய மணியாகிய சிந்தாமணி போல்பவனும், மாற்று விளங்குகின்ற செம்பொன் போல்பவனும் ஆகிய இறைவனை, அடியேன் முன்னே, நிறம் பொருந்திய மணிகளைக் கொழித்து மலையினின்றும் பாய்ந்து, பின்பு நிலத்தில் சுழித்துக் கொண்டு ஓடுகின்ற, அலைகளுக்கிடையில், வரிசையான வளையல்களை அணிந்துள்ள மகளிர் மூழ்கி விளையாடுகின்ற கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள, நீலோற்பல மலர்கள் நீலமணிபோல மலர்கின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு.


பாடல் எண் : 08
இழை தழுவு வெண்ணூலும் மேவு திருமார்பின் 
ஈசன் தன் எண்தோள்கள் வீசி எரியாடக்
குழை தழுவு திருக்காதில் கோளரவம் அசைத்து 
கோவணம் கொள் குழகனை குளிர் சடையினானைத் 
தழை தழுவு தண்ணிறத்த செந்நெல் அதன் அயலே 
தடந்தரள மென் கரும்பின் தாழ்கிடங்கின் அருகே 
கழை தழுவித் தேன் கொடுக்கும் கழனி சூழ் பழனக் 
கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே.

பாடல் விளக்கம்:
பாம்பாகிய அணிகலமும், அதனோடு சேர்ந்த வெண்மையான முப்புரிநூலும் பொருந்திய அழகிய மார்பினையுடைய கடவுளும், தனது எட்டுத் தோள்களையும் வீசி நடனம் ஆடுதற் பொருட்டு, குழை பொருந்திய காதில் கொடிய பாம்பையும் இட்டு, உடையைக் கோவணமாக உடுத்த அழகனும், கங்கை நீராற் குளிர்ந்த சடையை உடையவனும் ஆகிய இறைவனை, அடியேன், தழைத்தலை உடைய பசுமையான நிறத்தையுடைய செந்நெற் பயிரின் பக்கத்தில், பெரிய முத்துக்களை உடைய மென்மையான கரும்பின் ஆழ்ந்த கிடங்குகளின் அருகே வண்டுகள் அக்கரும்பைப் பொருந்தித் தேன் கூட்டை அமைக்கின்ற வயல்கள் சூழ்ந்த பண்ணைகளையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன். இஃது என் தவப் பயன் இருந்தவாறு.


பாடல் எண் : 09
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானைக் 
குண்டலம் சேர் காதவனை வண்டினங்கள் பாடப் 
பனி உதிரும் சடையானைப் பால் வெண்ணீற்றானைப் 
பல உருவும் தன்னுருவே ஆய பெருமானைத் 
துனிவு இனிய தூய மொழித் தொண்டை வாய் நல்லார் 
தூ நீலம் கண் வளரும் சூழ்கிடங்கின் அருகே 
கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில் சோலைக் 
கானாட்டு முள்ளூரில் கண்டுதொழுதேனே.

பாடல் விளக்கம்:
வளைந்த இனிய ஒளியையுடைய சந்திரனைச் சூடியதும், வண்டுக் கூட்டங்கள் பாட, நீர்த்துளிகள் சிந்துகின்றதுமாகிய சடையினையும், குண்டலம் பொருந்திய காதினையும் உடையவனும், பால்போலும் வெள்ளிய நீற்றை அணிந்தவனும், எல்லா உருவங்களும் தன் உருவமேயாய் நிற்கின்ற பெருமானும் ஆகிய இறைவனை, அடியேன், தூய நீலோற்பலங்கள், ஊடலிலும் இனியன வாயும் தூயனவாயும் தோன்றும் மொழிகளையும், கொவ்வைக் கனிபோலும் வாயினையும் உடைய அழகிய பெண்கள்போலக் கண் வளர்கின்ற, நிறைந்த கிடங்கின் அருகில் உள்ள, பழங்களைப் பழுத்த, இனிய வாழைத் தோட்டங்களைப் பொருந்தியுள்ள சோலைகளையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு.


பாடல் எண் : 10
தேவியம் பொன்மலைக்கோமன் தன் பாவையாகத் 
தனதுருவம் ஓருபாகம் சேர்த்துவித்த பெருமான்
மேவிய வெந்நரகத்தில் அழுந்தாமை நமக்கு 
மெய்ந்நெறியைத் தான் காட்டும் வேதமுதலானைத்
தூவியவாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப 
துறைக் கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாடக்
காவிவாய் வண்டுபல பண் செய்யும் கழனிக் 
கானாட்டு முள்ளூரில் கண்டு தொழுதேனே.

பாடல் விளக்கம்:
அழகிய பொன்மலைக்கு அரசன் மகள் தனக்கு மனைவியாய் வாய்க்க, அவளைத் தனது திருமேனியில் ஒருபாகமாகச் சேர்ந்திருக்கும்படி வைத்த பெருமானும், பாவிகள் விரும்பும் கொடிய நரகத்தில் வீழாதபடி நமக்கு மெய்ந்நெறியைக் காட்டுகின்ற, வேதத்தால் துணியப்பட்ட முதற்கடவுளும் ஆகிய இறைவனை, சிறகுகள் வாய்ந்த நாரைகளும், குருகுகளும் பறந்து ஒலிக்க, நீர்த் துறைகளில் கெண்டை பிறழ, பிற மீன்கள் துள்ளி விளையாட, குவளைப் பூவின் கண் வண்டுகள் பலவகையான இசைகளைப் பாடுகின்ற வயல்களையுடைய திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு வணங்கப்பெற்றேன். இஃது என் தவப்பயன் இருந்தவாறு.


பாடல் எண் : 11
திரையினார் கடல் சூழ்ந்த தென்னிலங்கைக் கோனைச் 
செற்றவனை செஞ்சடைமேல் வெண் மதியினானைக் 
கரையினார் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரைமேல் 
கானாட்டு முள்ளூரில் கண்டு கழல் தொழுது
உரையினார் மதயானை நாவல் ஆரூரன் 
உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார் 
வரையினார் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் 
தாம்போய் வானவர்க்கும் தலைவராய் நிற்பர் அவர் தாமே.

பாடல் விளக்கம்:
புகழ் மிகுந்த, மதம் பொருந்திய யானையையுடைய திருநாவலூரில் தோன்றிய நம்பியாரூரன், அலையால் நிறைந்த கடல் சூழ்ந்த தென்னிலங்கைக்கு அரசனாகிய இராவணனைச் செருக்கடக்கியவனும், செம்மையான சடையின்மேல் வெண்மையான சந்திரனை அணிந்தவனும் ஆகிய இறைவனை, கரையின்கண் நிரம்பிய நீரைப் பொருந்திய கொள்ளிட நதியின் கரைமேல் உள்ள திருக்கானாட்டுமுள்ளூரிற் கண்டு அடிவணங்கி, வணங்கப்பெற்ற அவ்வுரிமையினால் பாடிய இவ்வொளி பொருந்திய தமிழ்ப்பாடலைப் பாட வல்லவர்கள், எல்லையாற் பொருந்திய வகைகளையுடைய நிலவுலகத்தை ஆளுகின்ற அரசர்கட்கும் தலைவராய், பின்பு சென்று வானுலகத்தார்க்கும் தலைவராய் நெடிது வாழ்வர்.


|| --- திருக்கானாட்டுமுள்ளூர் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

திருஅகத்தியான்பள்ளி திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அகத்தீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மங்கை நாயகி, ஸ்ரீ பாகம்பிரியாள்

திருமுறை : இரண்டாம் திருமுறை 76 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

கைலாயத்தில் நடக்க இருக்கும் பார்வதி சிவபெருமான் திருமணம் காண தேவர்கள், முனிவர்கள் மற்றும் எல்லோரும் கூடினர். அப்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. பூமியை சமன் செய்ய இறைவன் அகத்திய முனிவரை தென்திசை செல்லும்படி பணித்தார். அகத்தியர் தனக்கு சிவன் பார்வதி திருமணத்தைக் காணும் பேறு கிடைக்கவில்லையே என்று வருந்தினார். 


சிவபெருமான் அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டி அருளுவேன் என்று வாக்களித்தார். அகத்தியரும் புறப்பட்டு தென்திசை வந்து அகத்தியான்பள்ளி தலத்தில் ஒரு ஆசிரமம் அமைத்துக் கொண்டு தங்கினார். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து அதற்கு பூஜைகள் செய்து வரலானார். இறைவன் அகத்தியருக்கு கொடுத்த வாக்கின் படி அகத்தியான்பள்ளியில் பார்வதியுடன் நடந்த தனது திருமணக் கோலத்தை காட்டி அருள் புரிந்தார். அகத்தியருக்குக் காட்சி கொடுத்ததால் இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார்.

கோவில் அமைப்பு : மக்கள் இக்கோயிலை அகஸ்தியர் கோயில் என்றே கூறுகின்றனர். ஆலயத்தின் தோரண வாயிலிலும் அகஸ்தியர் கோவில் என்றே எழுதப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு ஒரு தோரண வாயிலும் அதையடுத்து ஒரு 3 நிலை இராஜகோபுரமும் உள்ளது. இத்தலத்தில் மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியும் இறைவி சௌந்தர நாயகியின் சந்நிதி மேற்கு நோக்கியும் அமைந்துள்ளது. 

இங்கு மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். சிவன் பார்வதி திருமணக் கோலம் கருவறையில் சிவலிங்கத்தின் பின்னே கருவறைச் சுவரில் புடைப்புச் சிறபமாக காணப்படுகிறது. அம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் சுவாமியைப் பார்த்தவாறு அகத்தியர் கோயில் உள்ளது. கோவிலில் உள்ள அகத்தியர் உருவச்சிலை மிகவும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சிற்பமாகும்.

இக்கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டிலிருந்து குலசேகர பாண்டியன் என்ற அரசனுக்கு இருந்த வியாதி அருகில் உள்ள வேதாரண்யம் திருத்தலத்தில் உற்சவம் நடத்தி நீங்கப் பெற்றது என்ற தகவல் தெரிய வருகிறது. இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே திசை பார்த்து உள்ளன. இத்தல இறைவனை எமதர்மன் வழிபட்டுள்ளான். தல விருட்சமாக வன்னி மரமும், அகத்தி மரமும் உள்ளன. ஆலயத்தின் தீர்த்தங்களாக கோயிலின் மேற்புறம் உள்ள அகத்திய தீர்த்தம் மற்றும் அக்னி தீர்த்தம் (அருகாமையில் உள்ள கடல்) உள்ளன.

நன்றி shivatemples இணையதளத்திற்கு


பாடல் எண் : 01
வாடிய வெண்தலை மாலை சூடி மயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப் 
பாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே.

பாடல் விளக்கம்‬:
தசைவற்றிய வெண்டலை மாலையைச் சூடிச் செறிந்த இருளில், பெருகி உயர்கின்ற தீக்கொள்ளி விளக்காக உயர்ந்த இடுகாட்டு எரியில் நின்றாடிய எம்பெருமானது அகத்தியான் பள்ளியை மனம் ஒன்றிப் பாடுவோர்க்குப் பாவம் இல்லை.


பாடல் எண் : 02
துன்னம் கொண்ட உடையான் துதைந்த வெண்ணீற்றினான்
மன்னும் கொன்றை மதமத்தம் சூடினான் மாநகர் 
அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியை 
உன்னம் செய்த மனத்தார்கள் தம் வினை ஓடுமே.

பாடல் விளக்கம்‬:
தைத்த உடையை அணிந்தவன். வெண்மை செறிந்த திருநீற்றைப் பூசியவன். பொருந்திய கொன்றை, ஊமத்தை மலர்களைச் சூடியவன். அப்பெருமான் எழுந்தருளியதும் அன்னங்கள் வாழும் பொழில்கள் சூழ்ந்ததுமான அகத்தியான்பள்ளியை நினையும் மனம் உடையவர்களின் வினைகள் நீங்கும்.


பாடல் எண் : 03
உடுத்ததுவும் புலித்தோல் பலி திரிந்து உண்பதும்
கடுத்து வந்த கழற்காலன் தன்னையும் காலினால் 
அடர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான் 
தொடுத்ததுவும் சரம் முப்புரம் துகளாகவே.

பாடல் விளக்கம்‬:
உடுத்துள்ளது புலித்தோல். உண்பது பலியேற்றுத்திரிந்து. கொன்றது சினந்து வந்த கழலணிந்த காலனைக் காலினால். அவ்விறைவன் வாழ்வது பொழில்கள் சூழ்ந்த அகத்தியான்பள்ளி. சரம் தொடுத்தது துகளாகுமாறு திரிபுரங்களை.


பாடல் எண் : 04
காய்ந்ததுவும் அன்று காமனை நெற்றிக் கண்ணினால்
பாய்ந்ததுவும் கழல் காலனை பண்ணின் நான்மறை
ஆய்ந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான் 
ஏய்ந்ததுவும் இமவான் மகளொரு பாகமே.

பாடல் விளக்கம்‬:
அன்று நெற்றிக்கண்ணால் சினந்தது காமனை. பாய்ந்து கொன்றது கழலணிந்த காலனை. பண்களோடு ஆராய்ந்தது வேதங்களை. ஒரு பாகத்தே ஏய்ந்து கொண்டது இமவான் மகளை அத்தகையோன் அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான்.


பாடல் எண் : 05
போர்த்ததுவும் கரியின் உரி புலித்தோலுடை 
கூர்த்ததோர் வெண்மழு ஏந்தி கோளரவம் அரைக்கு
ஆர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான் 
பார்த்ததுவும் அரணம் படரெரி மூழ்கவே.

பாடல் விளக்கம்‬:
போர்த்துள்ளது யானைத்தோல், உடுத்துள்ளது புலித்தோல், ஏந்தியுள்ளது கூரிய வெண்மழு, அரையில் கட்டியுள்ளது பாம்பு, பரந்த எரியுள் மூழ்குமாறு பார்த்தது முப்புரம், அத்தகையோன் அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான்.


பாடல் எண் : 06
தெரிந்ததுவும் கணையொன்று முப்புரம் சென்றுடன் 
எரிந்ததுவும் முன்னெழிலார் மலர் உறைவான் தலை
அரிந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான் 
புரிந்ததுவும் உமையாள் ஓர் பாகம் புனைதலே.

பாடல் விளக்கம்‬:
தெரிவு செய்தது கணை ஒன்று. அக்கணை சென்று உடன் எரியச்செய்தது முப்புரங்களை. முற்காலத்தில் அரிந்தது அழகிய தாமரை மலர் மேல் உறையும் பிரமனின் தலையை. விரும்பி ஒரு பாகமாகப் புனைந்தது உமையவளை. அத்தகையோன் பொழில்கள் சூழ்ந்த அகத்தியான் பள்ளி இறைவன் ஆவான்.


பாடல் எண் : 07
ஓதியெல்லாம் உலகுக்கொர் ஒண் பொருளாகி மெய்ச் 
சோதியென்று தொழுவார் அவர் துயர் தீர்த்திடும் 
ஆதி எங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை 
நீதியால் தொழுவார் அவர் வினை நீங்குமே.

பாடல் விளக்கம்‬:
வேதங்களை ஓதியவனே! உலகுக்கெல்லாம் ஒண் பொருளாகி விளங்குபவனே! நிலையான சோதி வடிவினனே! என்று கூறித் தொழுவாரவர் துயர் தீர்த்திடும் முதல்வனாகிய எங்கள் தலைவன் விளங்கும் அகத்தியான் பள்ளியை முறையாகத் தொழுபவர் வினைகள் நீங்கும்.


பாடல் எண் : 08
செறுத்ததுவும் தக்கன் வேள்வியை திருந்தார் புரம்
ஒறுத்ததுவும் ஒளி மாமலர் உறைவான் சிரம்
அறுத்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான் 
இறுத்ததுவும் அரக்கன் தன் தோள்கள் இருபதே.

பாடல் விளக்கம்‬:
சினந்து அழித்தது தக்கன் வேள்வியை ஒறுத்து எரித்தது பகைவர்தம் திரிபுரங்களை அறுத்தது ஒளி பொருந்திய சிறந்த தாமரை மலர் மேலுறையும் பிரமனின் தலையை நெரியச் செய்தது இராவணனின் இருபது தோள்களை அத்தகையோன் அகத்தியான் பள்ளி இறைவன் ஆவான்.


பாடல் எண் : 09
சிரமும் நல்ல மதமத்தமும் திகழ் கொன்றையும்
அரவும் மல்கும் சடையான் அகத்தியான் பள்ளியைப் 
பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை 
பரவ வல்லார் அவர் தங்கள் மேல் வினை பாறுமே.

பாடல் விளக்கம்‬:
தலை மாலையையும், பிறையையும், ஊமத்தை மலரையும், விளங்கும் கொன்றை மலரையும் பாம்பையும் அணிந்துள்ள சடையினனாகிய அகத்தியான்பள்ளியில் உறையும் இறைவனைப் பிரமனும் திருமாலும் தேடிக்காண முடியாத தன்மையைக் கூறிப் பரவவல்லவர் தங்கள் மேல்வரும் வினைகள் அழியும்.


பாடல் எண் : 10
செந்துவர் ஆடையினாரும் வெற்று அரையே திரி 
புந்தி இலார்களும் பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி
அந்தணன் எங்கள் பிரான் அகத்தியான் பள்ளியைச் 
சிந்திமின் நும்வினை ஆனவை சிதைந்து ஓடுமே.

பாடல் விளக்கம்‬:
சிவந்த துவராடையை அணிந்து, ஆடையின்றி வெற்றுடல்களோடு திரியும் அறிவற்றவர்களாகிய சமண புத்தர்கள் பேசும் பேச்சுக்கள் பொய்மொழிகளாகும். அவற்றை விடுத்து அழகிய கருணையாளனும் எங்கள் தலைவனும் ஆகிய அகத்தியான்பள்ளி இறைவனைச் சிந்தியுங்கள். வினைகள் சிதைந்து ஓடும்.


பாடல் எண் : 11
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன் மாமயில் 
ஆலும் சோலை புடைசூழ் அகத்தியான் பள்ளியுள்
சூலம் நல்ல படையான் அடிதொழுது ஏத்திய 
மாலை வல்லார் அவர் தங்கள் மேல்வினை மாயுமே.

பாடல் விளக்கம்‬:
உலகம் முழுதும் பரவிய புகழாளனாகிய ஞானசம்பந்தன் சிறந்த மயில்கள் ஆடும் சோலைகள் சூழ்ந்த அகத்தியான் பள்ளியுள் விளங்கும் நல்ல சூலப்படையானின் திருவடிகளைத் தொழுது போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர்கள் மேல்வரும் வினைகள் மாயும்.


|| --- திருஅகத்தியான்பள்ளி திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

திருக்குடமூக்கு (கும்பகோணம்) திருமுறை பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ கும்பேஸ்வரர், ஸ்ரீ அமுதேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மங்களாம்பிகை, ஸ்ரீ மங்கள நாயகி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 22 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
பூ வணத்தவன் புண்ணியன் நண்ணி அங்கு 
ஆவணத்து உடையான் அடியார்களைத்
தீ வணத் திருநீறு மெய்பூசியோர்
கோவணத்து உடையான் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
குடமூக்கிலே உள்ள பெருமான், பூவின் வண்ணத்தை உடையவன், புண்ணியமே வடிவானவன், அடியார்கள் ஆகும் வண்ணம் நண்ணி அருள்புரிந்து அடிமைச் சீட்டெழுதி ஆட்கொள்பவன், தீயின் நிறத்தை உடைய செம்மேனியில் திருநீறு பூசியவன், கோவண ஆடை உடையவன்.


பாடல் எண் : 02
பூத்து ஆடிக் கழியாதே நீர் பூமியீர்
தீத்து ஆடி(த்) திறம் சிந்தையுள் வைம்மினோ
வேர்த்தாடும் காளிதன் விசை தீர்கென்று
கூத்தாடி உறையும் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
உலகில் உள்ளவர்களே! நீர் பிறந்து வாளா திரிந்து இறந்து போகாமல், எல்லா உலகங்களையும் எரித்து சர்வசங்கார காலத்தில் ஆடும் இறைவனின் திறத்தைச் சிந்தையுள் இருத்துவீராக! வேர்வை தோன்றுமாறு விரைந்து ஆடிய காளியின் ஆடலை வெல்லுமாறு கூத்து ஆடிய பெருமான் குடமூக்கில் உறைபவன் ஆவான்.


பாடல் எண் : 03
நங்கையாள் உமையாள் உறை நாதனார்
அம் கையாளொடு அறுபதம் தாழ்சடைக் 
கங்கையாள் அவள் கன்னி எனப்படும் 
கொங்கையாள் உறையும் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
உமைநங்கையாளை ஒரு பாகத்திற்கொண்ட தலைவர். அங்கையாளொடு வண்டு தாழ்சடையினளாகிய கங்கையாளும், உறையும் குடமூக்கில் காவிரியுமாகிய தீர்த்தச் சிறப்புக்கள் உள்ளன.


பாடல் எண் : 04
ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல்
ஏதானும் இனிதாகும் இயமுனை
சேதா ஏறுடையான் அமர்ந்த இடம்
கோதாவிரி உறையும் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
ஓதாதே உணர்ந்த முதல்வன் திறத்தை எவ்வளவேனும் கூறினால் இனிதாகும்; யமுனையும் கோதாவிரியும் தீர்த்தங்களாகப் பொருந்திய குடமூக்கே சிவந்த ஆனேறுடையானாகிய சிவபிரான் உறையும் இடம்.


பாடல் எண் : 05
நக்க அரையனை நாள்தொறும் நன்னெஞ்சே 
வக்கரை உறைவானை வணங்கு நீ
அக்கு அரையோடு அரவு அரை ஆர்த்தவன்
கொக்கரை உடையான் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
நல்ல நெஞ்சே! நீ, திக்குகளையே ஆடையாக உடைய தலைவனும் வக்கரையென்னும் திருத்தலத்து உறைவானும் ஆகிய இறைவனை வணங்குவாயாக! அக்கு மாலையினையும், அரவினையும் அரையில் கட்டியவனும், கொக்கரையென்னும் பாடலையும் கூத்தையும் உடையவனுமாகிய பெருமான் குடமூக்கிலே உள்ளான்.


பாடல் எண் : 06
துறவி நெஞ்சினராகிய தொண்டர்காள்
பிறவி நீங்கப் பிதற்றுமின் பித்தராய்
மறவனாய்ப் பார்த்தன்மேல் கணை தொட்ட எம் 
குறவனார் உறையும் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
பற்றுக்களைத் துறக்கும் நெஞ்சுடையவர்களாகிய தொண்டர்களே! மறவனாகிய பார்த்தன்மேற் கணைதொடுத்த எம் குறவேடம் கொண்ட பெருமானும், குடமூக்கில் உறைபவனுமாகிய இறைவனை உமது பிறவி நீங்குமாறு பித்தராய் நின்று பிதற்றுவீர்களாக.


பாடல் எண் : 07
தொண்டராகித் தொழுது பணிமினோ 
பண்டை வல்வினை பற்றற வேண்டுவீர்
விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரைக் 
கொண்டவன் உறையும் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
பழையதாகிய வலிய வினைகளாம் பற்று அற வேண்டுவோரே! பகைவராகி யெதிர்ந்த முப்புராதிகளது மூன்று நகரங்களையும் ஒரு மாத்திரைப் போதில் எரியுண்ணக் கொண்டவன் உறையும் குடமூக்கில், தொண்டராகித் தொழுது பணிவீர்களாக!.


பாடல் எண் : 08
காமியம் செய்து காலம் கழியாதே 
ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்மினோ 
சாமியோடு சரச்சுவதி அவள்
கோமியும் உறையும் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
பயன் கருதிய செயல்களையே வாளா செய்து காலம் கழிக்காமல் வேள்விகள் பல செய்து, தன் கணவனாகிய பிரமனோடு சரசுவதியும் கோமி (கோதாவரி) யும், உறையும் குடமூக்கிற் பெருமானை, உள்ளத்தே உணர்வீர்களாக!.


பாடல் எண் : 09
சிரமம் செய்து சிவனுக்குப் பத்தராய்ப் 
பரமனைப் பல நாளும் பயிற்றுமின் 
பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கெலாம்
குரவனார் உறையும் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
பிரமன், திருமால் முதலிய தேவர்க்கெல்லாம் பரம ஞானாசாரியனாக விளங்கும் பரமன் உறையும் குடமூக்கில், பல நாளும் பயின்று சிவனுக்குப் பக்தர்களாக முயற்சி செய்து வாழ்வீர்களாக.


பாடல் எண் : 10
அன்று தான் அரக்கன் கயிலாயத்தைச் 
சென்று தானெடுக்க உமை அஞ்சலும் 
நன்று தான் நக்கு நல்விரல் ஊன்றி பின் 
கொன்று கீதம் கேட்டான் குடமூக்கிலே.

பாடல் விளக்கம்‬:
அரக்கனாகிய இராவணன் திருக்கயிலாயத்தை அன்று சென்று தான் எடுக்க, உமை அஞ்சுதலும் தான் பெரிதும் சிரித்துத் தன் நல்விரலை ஊன்றிப் பிறகு அவனை வருத்திச் சாமவேதம் கேட்ட பெருமான் குடமூக்கிலே உறைபவன் ஆவான்.


|| --- திருக்குடமூக்கு திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||