திங்கள், 20 ஏப்ரல், 2015

நமச்சிவாயத் திருப்பதிகம்

திருமுறை நான்காம் திருமுறை 11 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்

தருமசேனர் என்ற பெயருடன் தங்களுக்கு குருவாக இருந்து வழிகாட்டி வந்தவர் சைவ சமயத்திற்கு மாறினார் என்பதை அறிந்த சமணர்கள் தங்களுக்கு பல்லவ மன்னனிடம் இருந்த செல்வாக்கினை பயன்படுத்தி, நாவுக்கரசுப் பெருமானை கொல்வதற்கு பல வகையிலும் சூழ்ச்சிகள் செய்தனர். நீற்றறையில் இடுதல், நஞ்சு கலந்த சோறு அளித்தல், என்ற பல சூழ்ச்சிகள் பயன் தராத நிலையில், பட்டத்து யானையைக் கொண்டு அவரது தலையை இடறச் செய்ய ஏற்பாடு செய்தனர். 

திருநாவுக்கரசர் மீது ஏவப்பட்ட யானை அவரை வலம் வந்து அவரை வணங்கியது; யானைப்பாகன் யானையை மறுபடியும் நாவுக்கரசர் மீது ஏவியபோது, யானை பாகனை வீசி எறிந்ததும் அல்லாமல் அருகிலிருந்த சமணர்களையும் துரத்திக் கொண்டு ஓடியது. தப்பிச் சென்ற சில சமணர்கள் மன்னனிடம் சென்று, நாவுக்கரசரைக் கொன்றால் தான், யானையிடமிருந்து அவர் தப்பியதால் மன்னனுக்கு நேர்ந்த அபகீர்த்தி மறையும் என்றும் கூறினார்கள். மேலும் அவர்கள் கல்லோடு பிணைத்து நாவுக்கரசரை கடலில் விட்டுவிடலாம் என்றும் ஆலோசனை கூறினார்கள். மன்னனின் கட்டளையை அவனது காவலாளர்கள் நிறைவேற்ற, நாவுக்கரசர் தான் எந்த நிலையிலும் சிவபிரானை புகழ்ந்து பாடுவேன் என்று அருளிய பதிகம் தான் இந்தப் பதிகம்.


பாடல் எண் : 01
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக் கைதொழ
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சிவாயவே.

பாடல் விளக்கம்:
புனிதமான சொற்கள் கொண்ட வேதங்களுக்குத் துணையாக இருந்து அவற்றை அருளியவனும், ஒளியாக இருந்து நமக்கு வழிகாட்டுபவனும் ஆகிய சிவபிரானின் பொன் போன்று பொலியும் இணையான திருவடிகளை நமது மனத்தினில் பொருந்த வைத்து நாம் கையால் தொழுது வழிபட்டால், கல்லுடன் பிணைக்கப்பட்டு கடலில் நாம் தள்ளிவிடப் பட்டாலும், நமக்கு பெரிய துணையாக இருந்து சிவபிரானின் திருநாமம் ஆகிய நமச்சிவாய நம்மை காப்பாற்றும்.


பாடல் எண் : 02
பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சாடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.

பாடல் விளக்கம்:
பூக்களுக்குள் விலைமதிப்பரிய ஆபரணம் இதழ்கள் மிக்க தாமரையாகும். பசுக்களுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் சிவபெருமான் அபிடேகத்துக்குப் பஞ்சகவ்வியம் உதவுதல். அரசனுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் செங்கோல் வளையாமல் ஆட்சி செய்வதாம். நாவினுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் திருவைந்தெழுத்தேயாகும்.


பாடல் எண் : 03
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகத்தில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.

பாடல் விளக்கம்:
ஆகாயம் வரை மிகவும் உயரமாக கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள குவியல் ஆயினும், ஒரு தீப்பொறி அந்த அடுக்கினில் படர்ந்துப் பற்றிக்கொண்டால் அனைத்து கட்டைகளும் சாம்பலாக மாறி ஒன்றும் இல்லாத நிலை ஏற்படுவது போல், நாம் இந்த உலகினில் தொடர்ந்து செய்த பாவங்கள் எத்தனை ஆயினும் அவை அனைத்தையும் சுட்டெரிக்கும் தன்மை வாய்ந்து நமச்சிவாய என்னும் திருநாமம்.


பாடல் எண் : 04
இடுக்கண் பட்டிருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கில் பிரான் என்று வினவுவோம் அல்லோம்
அடுக்கல் கீழ் கிடக்கினும் அருளின் நாம் உற்ற
நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே.

பாடல் விளக்கம்:
எந்த வகையான இடுக்கண் தன்னை எதிர் நோக்கினும். அந்த இடுக்கண்களிலிருந்து நீர் என்னை விடுவிக்க வேண்டும் என்று எவரையும் இறைஞ்சும் நிலையில் நான் இல்லை. அருளின் வயமாகிய சிவபிரானின் நாமமாகிய நமச்சிவாய மந்திரம், மலையின் கீழ் மாட்டிக் கொண்டு எழமாட்டாத நிலையில் இருந்தாலும், அதனால் எனக்கு ஏற்படும் நடுக்கத்தை கெடுத்து காப்பாற்றும்.


பாடல் எண் : 05
வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கெலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.

பாடல் விளக்கம்:
விரதத்தை மேற்கொண்ட சான்றோர்களுக்குத் திருநீறு சிறந்த அணியாகும். நான்மறை ஆறங்கம் ஓதுதல் அந்தணர்களுக்குச் சிறந்த அணியாகும். பிறைக்குச் சிவபெருமானுடைய அழகிய சடை சிறந்த அணியாகும். எம்மைப் போன்ற அடியார்களுக்குச் சிறந்த அணி திருவைந்தெழுத்தேயாகும்.


பாடல் எண் : 06
சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்கு அலால்
நலமிலன் நாள்தோறும் நல்குவான் நலம்
குலமிலன் ஆகிலும் குலத்துக்கு ஏற்பதோர்
நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே.

பாடல் விளக்கம்:
அனைவருக்கு ஒரே தன்மையாக காணப்படும் சிவபெருமான், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு எப்போதும் நன்மை செய்பவன்; சிவபிரான் தன்னைச் சாராதவர்களுக்கு நன்மை அளிக்காதவன். நற்குலத்தில் பிறவாதாரும், சிவபிரானின் நாமத்தை ஓதினால், அவர்களுக்கும் நற்குலத்தோர் அடையும் நன்மைகளை அளிப்பவன் சிவபெருமான். 


பாடல் எண் : 07
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச்சென்று உருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே.

பாடல் விளக்கம்:
வீடுபேறு அடையும் நோக்கத்துடன், உலகப் பற்றினை விட்டொழிந்த சிறந்த தொண்டர்கள் ஒன்று கூடி சிவநெறியைச் சிந்தித்தனர். நானும் அவர்களைப் பின்பற்றிச் சென்று அவர்கள் கூறிய அஞ்செழுத்து மந்திரத்தைப் பற்றினேன்; அந்த நமச்சிவாய மந்திரமும் என்னைப் பற்றிக்கொண்டு பல நன்மைகள் புரிந்தது.


பாடல் எண் : 08
இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.

பாடல் விளக்கம்:
வீட்டில் உள்ள விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்குவதாம். சொல்லின் அகத்து நின்று விளக்குவதாய், ஒளியுடைய தாய், பல இடங்களையும் விளக்குவதாய்ப் பல சமயத்தாரும் தம்மை அறியாமலே காண நிற்பதாய் ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப் போல ஒளியை நல்குவது திருவைந்தெழுத்து மந்திரமே.


பாடல் எண் : 09
முன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரண் ஆதல் திண்ணமே
அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன்னெறியாவது நமச்சிவாயவே.

பாடல் விளக்கம்:
முதல்வனாகிய முக்கண்ணனே அனைவருக்கும் முன்னே தோன்றிய நெறியாவான். அத்தகைய சிறப்பு வாய்ந்த சிவபிரானின் செம்மையான நெறியை உறுதியுடன் சரணம் என்று வாழும் அடியார்களுக்கெல்லாம் மிகவும் நன்மை பயப்பதான வீடுபேறு எனப்படும் நன்னெறியினை அளிப்பது நமச்சிவாய என்னும் மந்திரமாகும்,


பாடல் எண் : 10
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன்
பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே.

பாடல் விளக்கம்:
மான் கன்றினை இடது கையில் ஏந்தியும், இடது பாகத்தில் உமையம்மையை ஏற்றுக் கொண்டும் காட்சி அளிக்கும் சிவபிரானின் திருவடிகளை, அனைவரும் மலர்கள் தூவி வழிபடுவதால் எப்போதும் பூக்களுடன் இணைபிரியாது இருக்கும் திருவடிகளை நமது மனத்தினில் பொருத்தி, நமது நாவுடன் நமச்சிவாயப் பதிகத்தினை பிணைத்து சிவபிரானை புகழ்ந்து பாட வல்லவர்களுக்கு எத்தைகைய துயரங்களும் ஏற்படாது.

வாழ்வில் எத்தனைத் துன்பம் வந்தாலும் அவற்றை வெற்றி கொண்டு மீளவும், பயணம் மேற்கொள்ளும்போது நன்மை தரும் வழித் துணைகள் அமையவும், பிறப்பு இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலை பெறவும் நாம் ஓத வேண்டிய பதிகம் என்று பெரியோர்களால் கருதப்படுகின்றது.

நன்றி: திரு என். வெங்கடேஸ்வரன் மற்றும் திரு ஆதிரை


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

வியாழன், 16 ஏப்ரல், 2015

தசபுராண திருப்பதிகம்

திருமுறை நான்காம் திருமுறை 14 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்

பதினெட்டு புராணங்களில் பத்து புராணங்கள் சிவபுராணங்கள்; நான்கு புராணங்கள் வைணவத்தைச் சார்ந்தவை: பிரம புராணமும் பதும புராணமும் பிரமன் பற்றியவை, எஞ்சியுள்ள இரண்டு புராணங்கள், கைவர்த்த புராணம் (சூரியன் பற்றியது) மற்றும் ஆக்னேய புராணம் (அக்னிக்கு உரியது. சைவ புராணம், பவுடிக புராணம், மார்க்கண்டேய புராணம், இலிங்க புராணம், கந்த புராணம், வராக புராணம், வாமன புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், பிரமாண்ட புராணம் என்பன சைவ புராணங்கள். இவை தச புராணங்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. இந்த தச புராணங்களில் சொல்லப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை குறிப்பிடும் பாடல்கள் கொண்ட பதிகம் என்பதால் தசபுராணத் திருப்பதிகம் என்று அழைக்கப்படுகின்றது.


பாடல் எண் : 01
பருவரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர் இரிந்து பயமாய்த்
திருநெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய்ப்
பெருகிட மற்று இதற்கோர் பிதிகாரம் ஒன்றை அருளாய், பிரானே எனலும்
அருள் கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர் அரசே.

பாடல் விளக்கம்:
பெரிய மந்தர மலையை மத்தாக பயன்படுத்தி, வாசுகி பாம்பினை கயிறாக அந்த மலையுடன் சேர்த்து வைத்து கட்டி பாற்கடலைக் கடைந்து கொண்டிருந்த தேவர்கள், பாற்கடலிலிருந்து கொடிய விடம் வெளிப்படவே, பயந்து போய் தாங்கள் கடைந்து கொண்டிருந்த செயலைக் கைவிட்டுவிட்டு ஓடினார்கள். அப்போது அங்கே வெளிப்பட்ட விடம், திருமால் முதலான தேவர்களை அழிப்பது போன்றும், ஆகாயத்தை சுட்டெரிப்பது போன்றும், வேகமாக அனைத்து இடங்களிலும் பரவியது; அஞ்சி ஓடிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று, தலைவரே இந்த விடத்திலிருந்து நாங்கள் எவ்வாறு தப்பிப்பது, எங்களுக்கு மாற்று வழி நீங்கள் தான், அருள வேண்டும் என்று வேண்டியபோது, தேவர்கள் பால் இருந்த கருணையினால் கொடிய ஆலகால விடத்தை, அந்த விடம் மற்றவர்களைத் தாக்காதவாறு தானே உட்கொண்ட சிவபிரான் தான் அனைத்து உலகங்களுக்கும் அரசனாவான்.


பாடல் எண் : 02
நிரவொலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அதுவப்
பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணியப்
பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன்
பர முதலாய தேவர் சிவனாய மூர்த்தி அவன் நமக்கொர் சரணே.


பாடல் விளக்கம்:
எங்கும் பரவிய ஒலியுடன் வெள்ளப் பெருக்கெடுத்து நீர் சுழித்து ஓடி, அனைத்து அண்டங்களையும் மூழ்கடிப்ப, நிலத்திலே நின்ற தீப்பிழம்பாக பரம்பொருள் சிவபெருமான் நின்ற போது, இந்த தீப்பிழம்பினை ஒத்த அழற்தூண் இதற்கு முன்னர் தொன்றியதில்லை என்பதை உணர்ந்த திருமாலும் பிரமனும், அந்த தீப்பிழம்பின் இருபுறத்திலும் நின்று பணிந்து பின்னர் அதன் அடியையும் முடியையும் தேட முற்பட்ட போது, அவர்களால் அடி முடி காணாத வண்ணம் ஓங்கி நின்ற பெருமான், பரம் என்று சொல்லிக்கொண்டு தங்களுக்குள் வாதம் செய்த பிரமன், திருமால் இருவருக்கும் மற்றுமுள்ள தேவர்களுக்கும் பெரியோனாகிய மூர்த்தி ஆவான். அத்தகைய பரம்பொருள் தான், நமக்கு ஒப்பற்ற அடைக்கலப் பொருளாக விளங்குகின்றான்.


பாடல் எண் : 03
காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உருவாகி மூவர் உருவில்
சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உருவாகி நின்ற தழலோன்
ஞாலமும் மேலை விண்ணொடு உலகேழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல்
பாலனும் ஆயவர்க்கு ஒர் பரமாய மூர்த்தி அவனா நமக்கு ஒர் சரணே.

பாடல் விளக்கம்:
இருபத்தேழு நட்சத்திரங்கள் மற்றும் காலங்களால் பகுக்கப்பட்ட நாட்களுக்கும் முன்னமேயும், ஊழிக் காலத்தையும் கடந்தும், ஒரே உருவமாகத் திகழ்பவனும், மூன்று மூர்த்திகளின் உருவாகவும், அவர்களின் உயிராகவும் அமைந்த சிவபெருமான் ஆறு சமயத்தவர்களுக்கும் அவரவர்களின் சமயத்தின் பொருளாக விளங்குகின்றான்: சோதி வடிவாகத் திகழும் இந்த சிவபெருமான், ஊழிக்காலத்தில் அனைத்து உலகங்களையும் தனது வயிற்றில் அடக்கி ஒரு ஆலிலையின் மேல் துயில்பவனும் ஆகிய திருமாலுக்கும் மேம்பட்ட மூர்த்தியாக உள்ளான். இந்த சிவபெருமான் தான் சரண் அடையத்தக்க பரம்பொருள் ஆவான்.


பாடல் எண் : 04
நீடுயர் விண்ணும் மண்ணும் நெடுவேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலியச்
சூடிய கையராகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும்
ஓடிய தாரகன் தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய
ஆடிய மாநடத்து எம் அனலாடி பாதம் அவையாம் நமக்கு ஒர் சரணே.

பாடல் விளக்கம்:
நெடிது உயர்ந்த ஆகாயம், நிலவுலகம், கடல், மலைகள், மற்றுமுள்ள ஏழுலகங்கள் அனைத்தும் வருந்துமாறு தாரகன் துன்புறுத்த, அதனால் வருந்திய தேவர்கள் சிவபிரானை அணுகி, தங்களது கைகளைத் தலை மேல் குவித்து அவரைத் தொழுது வேண்டினார்கள்: அதனால் மனம் மகிழ்ந்த சிவபிரான், பார்வதி தேவியின் அம்சமாகிய காளிக்கு வேண்டிய வல்லமை அளித்து தருகனைக் கொல்லுமாறு பணித்தார்: மிகுந்த வல்லமையுடன் காளி வருவதைக் கண்டு, தனது இறுதி நாள் நெருங்கிவிட்டதை உணர்ந்த தாரகன் தப்பி ஓட முயற்சி செய்த போது, அவனைத் துரத்திக் கொன்ற பின்னும் தனது கோபம் தணியாமல் காளியம்மை இருந்த போது, போட்டி நடனம் ஆடி அவளது கோபத்தைத் தணித்த சிவபெருமானின் திருப்பாதங்கள் நமக்கு ஒப்பற்ற அடைக்கலமாகும்.


பாடல் எண் : 05
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம் செய்து ஓடு புரம் மூன்று
அலை நலி அஞ்சி ஓடி அரியோடு தேவர் அரணம் புக தன் அருளால்
கொலை நலி வாளி மூள அரவு அம் கை நாணும் அனல் பாய நீறு புரமா
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவனா நமக்கு ஒர் சரணே.

பாடல் விளக்கம்:
மண்ணுலகையும் விண்ணுலகையும் அழித்துக் கொண்டு பறக்கும் கோட்டைகளில் உலவிக் கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் வல்லமையைக் கண்டு அவர்களுக்கு எதிரே நிலைத்து நின்று சண்டையிடும் ஆற்றல் இல்லாததால், அவர்கள் இழைத்த துன்பங்களுக்கு அஞ்சி, திருமால் முதலான தேவர்கள் அஞ்சி சிவபிரானிடத்தில் தஞ்சம் புகுந்தனர்: அவர்கள் மீது கருணை கொண்ட சிவபிரான், கொலைத் தொழிலில் வல்லவராகிய திருமால் கூர்மை மிகுந்த அம்பாகவும், வாசுகி பாம்பு நாணாகவும், அம்பினில் தீக்கடவுள் இணையவும், மேருமலையை வில்லாக வளைவித்து, மூன்று புரங்களையும் சாம்பலாகச் எரித்தார். இத்தகைய வல்லமை பெற்ற சிவபிரான் தான் நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவர் ஆவார்.


பாடல் எண் : 06
நீல நன்மேனி செங்கண் வளை வெள்ளெயிற்றன் எரிகேசன் நேடி வருநாள்
காலை நன்மாலை கொண்டு வழிபாடு செய்யும் அளவின் கண் வந்து குறுகிப்
பாலனை ஓட ஓடப் பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அக்
காலனை வீடு செய்த கழல் போலும் அண்டர் தொழுது ஓது சூடு கழலே.

பாடல் விளக்கம்:
கருநீலநிறம் உடைய உடலையும், சிவந்த கண்களையும், வளைந்த வெண்மையான கோரைக் பற்களையும், நெருப்பு போன்று சிவந்த முடியினையும் கொண்ட காலன், சிறுவன் மார்க்கண்டேயனைத் தேடி வந்த அன்று, அந்த சிறுவன் அன்று காலையில் மலர்ந்த மலர்களைப் பறித்து சிவபிரானுக்கு வழிபாடு செய்து கொண்டிருந்தான்: அதனைப் பொருட்படுத்தாமல், அந்த சிறுவனை அச்சுறுத்தி, அவனது உயிரினை கவருவதற்காக தனது கையில் இருந்த பாசக் கயிற்றினை காலன் வீசவும், அந்த காலனை தனது காலால் உதைத்து அழித்த சிவபிரானின் திருவடிகள், தேவர்கள் தொழுது வாழ்த்தித் தங்கள் தலை மேல் சூடிக் கொள்ளும் திருவடிகளாகும்.


பாடல் எண் : 07
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி தன்னில் அவி உண்ண வந்த இமையோர்
பயமுறும் எச்சன் அங்கு மதியோனும் உற்ற படி கண்டு நின்று பயமாய்
அயனொடு மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்று இறைஞ்சி அகலச்
சயமுறு தன்மை கண்ட தழல் வண்ணன் எந்தை கழல் கண்டு கொள்கை கடனே.

பாடல் விளக்கம்:
தவத்தில் மேம்பட்ட தக்கன் நடத்திய சிறப்பான வேள்வியில் கிடைக்கும் அவிர் பாகத்தை உண்ணுவதற்காக அந்த வேள்வியில் பங்கு கொண்ட வேள்வித் தலைவன், தேவர்களாகிய அக்னி, சந்திரன் ஆகியோர் பெற்ற தண்டனையைக் கண்ட பிரமனும் திருமாலும், நாங்கள் அறியாமையால் செய்த தவற்றினை மன்னித்து அருள வேண்டும் என்று வேண்டிய படியே வேள்விச் சாலையிலிருந்து அகன்று செல்லுமாறு, வெற்றி கண்ட, செந்தீயின் நிறத்தை ஒத்த மேனியை உடைய சிவபிரானின் திருப்பாதங்களைக்கண்டு வழிபடுவதே அனைத்து உயிர்களின் கடமையாகும்.


பாடல் எண் : 08
நலமலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயனத் தலங்கள் கரமா
உலகினை ஏழும் முற்றும் இருள் மூட மூட இருள் ஓட நெற்றி ஒரு கண்
அலர் தர அஞ்சி மற்றை நயனம் கை விட்டு மடவாள் இறைஞ்ச மதி போல்
அலர் தரு சோதி போல் அலர் வித்த முக்கண் அவனா நமக்கு ஓர் சரணே.

பாடல் விளக்கம்:
அழகும் பண்பும் நிறைந்த பார்வதி தேவி, விளையாட்டாக சிவபிரானின் இரண்டு கண்களையும் பொத்தின போது, பெருமானின் இரண்டு கண்களும் சூரிய சந்திரர்களாக விளங்கும் காரணத்தால், உலகெங்கும் இருள் சூழ்ந்தது. உலகினில் இருள் சூழ்ந்து, உலகினில் உள்ள அனைத்து உயிர்களும் வாடின. உயிர்களின் வாட்டத்தை நீக்கவேண்டி, சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணினைத் திறந்து ஒளி பரப்பவே உலகினைச் சூழ்ந்திருந்த இருள் அகன்றது. மூன்றாவது கண்ணிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தைத் தாங்க முடியாமல், பார்வதி தேவி தனது இரு கைகளையும் எடுத்து, தான் செய்த தவறினை மன்னித்து அருளுமாறு இறைவனை வேண்டினாள். மீண்டும், சந்திரனைப் போலவும், சூரியனைப் போலவும் தனது இரண்டு கண்களையும் ஒளிரச் செய்து உலகினில் ஒளி பரப்பிய முக்கண் மூர்த்தி நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் தருபவராவார்.


பாடல் எண் : 09
கழை படு காடு தென்றல் குயில் கூவ அஞ்சு கணையோன் அணைந்து புகலும்
மழை வடி வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலரான தொட்ட மதனன்
எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகலத்
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல் வண்ணன் எந்தை சரணே.

பாடல் விளக்கம்:
கரும்புகள் காடு போல் வளர்ந்துள்ள கரும்புக் கொல்லையில் தென்றல் காற்று வீச, குயில்கள் கூவ, வசந்தகாலச் சூழ்நிலை நிலவியது: அப்போது ஐந்து மலர்களை அம்புகளாகக் கொண்ட மன்மதன், தன்னை இந்த முயற்சியில் பலவந்தமாக ஈடுபடுத்திய இந்திரன், திருமால், பிரமன் ஆகியோரை விட்டு நீங்கி, சிவபெருமான் தவம் செய்யும் இடத்திற்கு வந்து, மலர் அம்புகளை சிவபிரான் மீது எய்தான். மன்மதனின் அம்புகளால் தனது தவம் கலையவே, கோபம் கொண்டு எழுந்த சிவபிரான் தனது நெற்றிக் கண்ணினைத் திறந்தார்; உடன் நிற்பதாகச் சொல்லி மன்மதனை அழைத்து வந்த தேவர்கள், சிவபிரானின் நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த நெருப்பினைக் கண்டதும் பயந்து ஓடினார்கள். அந்த தீ மன்மதனை எரித்து சாம்பலாக்கியது. இவ்வாறு, ஒப்பற்ற மூன்றாவது கண்ணினை உடைய, சிவபிரான் தான் நமக்கு அடைக்கலம் அளிக்க கூடியவன் ஆவான்.


பாடல் எண் : 10
தடமலர் ஆயிரங்கள் குறைவு ஒன்றதாக நிறைவு என்று தன் கண் அதனால்
உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து மிகவும்
சுடர் அடியால் முயன்று சுழல் வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை
அடல் வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவனா நமக்கு ஒர் சரணே.

பாடல் விளக்கம்:
பெரிய தாமரை மலர்கள் ஆயிரம் கொண்டு தனது வழிபாட்டினைத் தொடங்கிய, திருமால், ஒரு பூ குறைவதைக் கண்டு, குறைந்த மலருக்கு பதிலாக தனது கண்ணினையே தோண்டி மலராக இறைவனுக்கு அளித்து வழிபாடு செய்தார். இவ்வாறு திருமால் செய்த வழிபாட்டினை மிகவும் உகந்து சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். முன்னொரு நாள் அரக்கன் சலந்தரனின் வலிமை வாய்ந்த மார்பினைப் பிளந்த கூர்மை மிக்க சக்கரத்தை, பாற்கடலில் படுக்கை அமைத்துக் கொண்ட திருமாலுக்கு பரிசாக சிவபிரான் அளித்தார், இந்த சக்கரப் படையானது, தனது ஒளி மிகுந்த செம்மையான திருவடியால், சிவபெருமான் நிலத்தில் ஒரு வட்டம் இட, அந்த வட்டம் சுழன்று ஆழிப்படையாக மாறியது. இவ்வாறு சிறப்பாக தயாரிக்கப்பட்ட படையினையும், தன்னை வழிபட்ட திருமாலுக்கு பரிசாக அளித்த கருணை உள்ளம் கொண்ட சிவபிரானே நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவன் ஆவான்.


பாடல் எண் : 11
கடுகிய தேர் செலாது கயிலாயம் மீத கருதேல் உன் வீரமொழி நீ
முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா
விடு விடு என்று சென்று விரைவுற்று அரக்கன் வரை உற்று எடுக்க முடி தோள்
நெடு நெடு விற்று வீழ விரல் உற்ற பாதம் நினைவு உற்றது எந்தன் மனனே.

பாடல் விளக்கம்:
வானில் மிகவும் விரைந்து செல்லும் ஆற்றல் படைத்த தேராயினும், இந்த புட்பகத் தேர், கயிலாய மலை மீது செல்லாது; உனது வீரத்தைப் பெரிதாகக் கருதாது நீ செய்யும் முயற்சியை கைவிட்டு விடு, நான் உனக்கு சொல்லும் புத்திமதியைக் கொள்ளாது என்னிடம் நீ கோபம் கொள்வது அறமன்று என்று சொல்லி தேரை நிறுத்திய தேர்ப்பாகனின் நன்மை தரும் மொழிகளைப் புறக்கணித்து, அரக்கன் இராவணன் பாகனை வெகுண்டு, மிகவும் விரைவாக கயிலை மலை நோக்கிச் சென்றான் தான் செல்லும் வழியில் குறுக்கிட்டது என்று கருதி கயிலை மலையினை பெயர்த்து எடுக்க இராவணன் முயற்சி செய்த போது, அவனது தலைகளும் நெடிய தோள்களும், நெடிய உடலும் நொறுங்குமாறு, கயிலை மலையைத் தனது விரலால் அழுத்திய சிவபிரானின் பாதம் எனது நினைவிற்கு வந்தது. அத்தகைய திருவடிகளை நான் எண்ணுகின்றேன்.

நன்றி: திரு என். வெங்கடேஸ்வரன் ஐயா


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

திங்கள், 13 ஏப்ரல், 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 11

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை நான்காம் திருமுறை 52 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்


திருவாரூர் நகரத்தில் பல நாட்கள் தங்கியிருந்த அப்பர் பிரான், அங்கே உழவாரப் பணி செய்தவாறே இறைவனையும் வணங்கி ஏத்திய இருபத்தொரு பதிகங்கள் நமக்கு தற்போது கிடைத்துள்ளன. முதல் ஏழு திருமுறைகளிலும் இடம் பெறும் பெருமை திருவாரூர் தலத்திற்கு உள்ளது. கச்சி ஏகம்பம் மற்றும் திருமறைக்காடு தலங்களை குறிக்கும் பதிகங்களும் முதல் ஏழு திருமுறைகளிலும் இடம் பெறுகின்றன. மணிவாசகரின் திருப்புலம்பல் பதிகம், திருவாரூரில் அருளியதாக கருதப்படுகின்றது.

உலகம் வாழ அப்பர் பிரான் திருத்தொண்டு செய்ததாக சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகின்றார். இனிமையான சொற்களைக் கொண்ட தீந்தமிழ் பாடல்கள், அப்பர் பிரானின் திருவாயில் சென்று சேர்ந்தன என்று இங்கே சேக்கிழார் கூறுகின்றார். சிவபிரான் ஒருவனையே பற்றுக் கோடாகக் கொண்ட அவரது உள்ளம் கசிந்து, கண்களில் ஆறாகப் பெருகும் நீர் மார்பினை நனைக்க, திருவீதிப் பணிகளைச் செய்து கொண்டே பதிகங்கள் பாடியதாக சேக்கிழார் கூறுகின்றார். அந்த தருணத்தில் வழங்கிய பதிகங்களில் இதுவும் ஒன்று.

பாடல் எண் : 01
படு குழிப் பவ்வத்து அன்ன பண்டியைப் பெய்த ஆற்றால்
கெடுவது இம்மனிதர் வாழ்க்கை காண்தொறும் கேதுகின்றேன்
முடுகுவர் இருந்து உள் ஐவர் மூர்க்கரே இவர்களோடும்
அடியனேன் வாழ மாட்டேன் ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
கடல் போன்று பெரிய பள்ளமாகிய வயிற்றினை நிரப்புவதற்கான வழிகளில் மனிதன் ஈடுபடுவதால் அவனது வாழ்க்கை பல இன்னல்களுக்கு ஆளாகி அல்லற்படுகின்றது. இதனைக் காணும் நான் மிகவும் வருத்தம் அடைந்து கலங்குகின்றேன். மேலும் எனது உடலில் உள்ள அறிவற்றதும் முரட்டுத் தன்மை கொண்டதும் ஆகிய ஐம்பொறிகளும், தங்களது விருப்பத்திற்கு ஏற்ப செயல்படுமாறு என்னைத் தூண்டுகின்றன. என்னால் இந்த பொறிகளை கட்டுப்படுத்த இயலவில்லை எனவே இவைகளுடன் சேர்ந்து வாழ என்னால் முடியாது. ஆரூர் மூலத்தானத்தில் உறையும் இறைவனே, நீ தான் எனக்கு அருள் புரிந்து ஐம்பொறிகளை அடக்கும் திறனை எனக்கு நல்க வேண்டும்.


பாடல் எண் : 02
புழுப்பெய்த பண்டி தன்னைப் புறம் ஒரு தோலால் மூடி
ஒழுக்கு அறா ஒன்பது வாய் ஒற்றுமை ஒன்றும் இல்லை
சழக்குடை இதனுள் ஐவர் சங்கடம் பலவும் செய்ய
அழிப்பனாய் வாழ மாட்டேன் ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
புழுக்களை உள்ளே அடக்கி வைத்த வயிற்றினை, மேலே ஒரு தோலால் மூடப்பட்டு உள்ள உடலில் காணப்படும் ஒன்பது துளைகளும் (கண்கள், காதுகள், மூக்கு துவாரங்கள், வாய், கருவாய், எருவாய்) தங்களுக்குள் ஒற்றுமை ஏதும் இல்லாத வகையில் செயல்படுகின்றன. இந்த துளைகளிலிருந்து மலங்கள் ஒழுகிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறான குற்றங்கள் கொண்டுள்ள உடலினை ஐந்து பொறிகளும் தத்தம் வழியில், வருத்தி துயரம் இழைக்கின்றன. இவ்வாறு, ஒன்பது துளைகளாலும் ஐந்து பொறிகளாலும் கலக்கம் அடைந்து, அந்த கலக்கத்தின் விளைவால், வாழ முடியாதவனாக நான் உள்ளேன். ஆரூர் மூலத்தானத்தில் உறையும் இறைவனே, நீ தான் எனது கலக்கங்களைத் தீர்த்து, பயனுள்ள வாழ்க்கை நான் வாழுமாறு வழிகாட்ட வேண்டும்.


பாடல் எண் : 03
பஞ்சின் மெல்லடியினார்கள் பாங்கராய் அவர்கள் நின்று
நெஞ்சில் நோய் பலவும் செய்து நினையினும் நினைய ஒட்டார்
நஞ்சு அணி மிடற்றினானே நாதனே நம்பனே நான்
அஞ்சினேற்கு அஞ்சல் என்னீர் ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
நஞ்சினை உண்டதால் கருமையாக மாறிய கழுத்தினை உடையவனே, தலைவனே, அடியார்களின் நம்பிக்கைக்கு உரியவனே, எனது உடலில் உள்ள ஐம்பொறிகள், பஞ்சினைப் போன்ற மென்மையான அடிகள் கொண்டுள்ள பெண்கள் பக்கம் சார்ந்து, நான் உன்னை நினைக்க முயற்சி செய்தாலும், எனது நெஞ்சத்தில் பல விதமான எண்ணங்களையும் நோய்களையும் தோற்றுவித்து, என்னை அவ்வாறு நினைக்க ஒட்டாமல் தடுக்கின்றன. இவ்வாறு செயல்படும் ஐம்பொறிகளுக்கு நான் மிகவும் அஞ்சுகின்றேன். ஆரூர் மூலத்தானத்தில் உறையும் இறைவனே, நீ தான் எனது அச்சத்தைத் தவிர்த்து, அஞ்சேல் என்று சொல்லி அடைக்கலம் அளிக்க வேண்டும்.


பாடல் எண் : 04
கெண்டையம் தடங்கண் நல்லார் தம்மையே கெழும வேண்டிக்
குண்டராய்த் திரி தந்து ஐவர் குலைத்து இடர்க் குழியின் நூக்கக்
கண்டு நான் தரிக்க கில்லேன் காத்துக் கொள் கறை சேர் கண்டா
அண்ட வானவர் போற்றும் ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
நீலகண்டரே, எல்லா உலகங்களிலும் உள்ள தேவர்கள் போற்றும் தலைவனே, கெண்டை மீன் போன்று அழகிய அகன்ற கண்களை உடைய பெண்களுடன் தொடர்பு கொண்டு அவர்களுடன் நான் இணைய வேண்டும் என்று வல்லமை வாய்ந்த எனது ஐந்து பொறிகளும் என்னை நிலைகுலையச் செய்கின்றன. மேலும் அந்த ஐம்பொறிகள் என்னைத் துன்பக் குழியில் ஆழ்த்துகின்றன. இந்தச் செயல்களைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல் இல்லாதவனாக நான் உள்ளேன். ஆரூர் மூலத்தானத்தில் உறையும் சிவபெருமானே, நீ தான், நான் துன்பக் குழியில் இல்லாதவாறு பாதுகாத்து, என்னை உனது உனது அடிமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.


பாடல் எண் : 05
தாழ் குழல் இன்சொல் நல்லார் தங்களைத் தஞ்சம் என்று
ஏழையேனாகி நாளும் என் செய்வேன் எந்தை பெம்மான்.
வாழ்வதேல் அரிது போலும் வைகலும் ஐவர் வந்து
ஆழ் குழிப் படுக்க ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
எனது பெருமானே, தாழ்ந்த கூந்தலையும் இனிய சொற்களையும் உடைய மகளிரைத் தஞ்சம் என்று அடைந்து, அறிவில்லாதவனாக வாழ்ந்து கொண்டிருக்கும் அடியேன் என்ன செய்வது என்பதை அறியாமல் திகைக்கின்றேன். எப்போதும் ஐந்து பொறிகளும் என்னை துன்பம் என்னும் ஆழ்குழியில் ஆழ்த்துவதற்கு முயற்சி செய்கின்றன. அதனால் வாழ்க்கை நடத்துவதே மிகவும் அரிய செயலாக உள்ளது. ஆரூர் மூலத்தானத்தில் உறையும் இறைவனே, நீ தான் என்னை காப்பாற்ற வேண்டும்.


பாடல் எண் : 06
மாற்றம் ஒன்று அருள கில்லீர் மதியிலேன் விதியிலாமை
சீற்றமும் தீர்த்தல் செய்யீர் சிக்கன உடையராகிக்
கூற்றம் போல் ஐவர் வந்து குலைத்திட்டுக் கோகு செய்ய
ஆற்றவும் கில்லேன் நாயேன் ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
அடியேன் நல்லறிவு இல்லாத காரணத்தால், வேதங்களிலும் ஆகமங்களிலும் விதிக்கப்பட்ட வழிகளை பின்பற்றி வழிபாடு செய்ய முடியாதவனாக உள்ளேன். அதனால் தாங்கள் என் மீது கொண்டுள்ள கோபத்தை தணிக்காமல் இருக்கின்றீர் போலும்: எனது இயலாமையை கருத்தில் கொண்டு நீங்கள் என்னை மன்னித்து அருளவேண்டும். தங்களது விருப்பத்தின் வழியே என்னைச் செயல்பட வைப்பதில் மிகுந்த உறுதி கொண்டவர்களாக விளங்கும் ஐந்து பொறிகளும், கூற்றுவன் வருத்துவது போல் என்னை வருத்தி, எனது சிந்தனையை குலைத்திட்டு என்னை இழிவான தன்மைக்குத் தள்ளுகின்றார்கள். நாயினும் கீழான தன்மை உடையவனாகிய நான், ஐந்து பொறிகளால் விளையும் துயரத்தினை பொறுக்க முடியாமல் தவிக்கின்றேன். ஆரூர் மூலத்தானத்தில் உறையும் சிவபெருமானே, நீர் எனது துன்பங்களைத் தீர்த்து நான் உய்வதற்கான வழியை அருளாமல் இருக்கின்றீர். அவ்வாறு இராமல், நீங்கள் நான் உய்வதற்கான வழியினைக் காட்டவேண்டும்.


பாடல் எண் : 07
உயிர் நிலை உடம்பே காலா உள்ளமே தாழியாகத்
துயரமே ஏற்றமாகத் துன்பக் கோல் அதனைப் பற்றி
பயிர் தனைச் சுழியவிட்டுப் பாழ்க்கு நீர் இறைத்து மிக்க
அயர்வினால் ஐவர்க்கு ஆற்றேன் ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
உயிர் நிற்பதுற்கு உரிய இந்த உடல் ஏற்றத்தின் காலாக செயல்பட, துயரம் எனப்படும் ஏற்றத்தின் மூலம், துன்பக் கோலாகிய ஏற்றக் கோலால் தடுக்கப்பட்டு, எனது உள்ளம் எனும் தாழியில் எனது உணர்வாகிய நீரினை மொண்டு வந்து, அந்த உணர்வினை சிவலோகம் எனப்படும் நல்ல நிலத்திற்கு அளிக்காமல், பாழ் நிலத்தில் பாய்ச்சுவது போன்று வேறு வழிகளில் செலுத்துகின்றேன். இதனால் எனது உள்ளமாகிய நிலத்தில் சிவபெருமானைப் பற்றிய சிந்தனை வளராமல், நான் செய்யும் முயற்சிகள் வீணாகக் கழிய எனது உடலும் உள்ளமும் அயர்ந்து போகின்றன. இவ்வாறு நடைபெறுவது ஐம்பொறிகளின் ஆதிக்கத்தில் எனது உள்ளம் கட்டுண்டு இருப்பதால் தான். ஆரூர் மூலத்தானத்தில் உறையும் சிவபெருமானே, நீ தான் என்னை ஐந்து பொறிகளின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து, எனது உணர்வினை இறைநெறியில் ஈடுபட வழி வகுக்க வேண்டும்.


பாடல் எண் : 08
கற்றதேல் ஒன்றும் இல்லை காரிகையாரோடு ஆடிப்
பெற்றதேல் பெரிதும் துன்பம் பேதையேன் பிழைப்பினாலே
முற்றினால் ஐவர் வந்து முறை முறை துயரம் செய்ய
அற்று நான் அலந்து போனேன் ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
ஆரூர் மூலத்தானத்தில் உறையும் பெருமானே, தகுந்த குருவை அடைந்து அடியேன் பயன் தரும் கல்வி ஏதும் நான் கற்கவில்லை: சிற்றின்பத்தையும் இல்லற சுகத்தையும் பெரியதாக கருதி, பெண்கள் பின்னே திரிந்த நான், இறுதியில் அடைந்தது துன்பம் தான். இவ்வாறு மூடனாக இருந்த நான் செய்த தவறுகளால், தமது ஆற்றலில் முழுமை அடைந்திருந்த ஐந்து பொறிகளும் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக மறுபடியும் மறுபடியும் என்னை வருத்தி தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டன: இந்த ஐம்பொறிகளை எதிர்த்து நிற்கும் ஆற்றல் இல்லாத காரணத்தால், என்னால் அவற்றை கட்டுப்படுத்த இயலவில்லை: இதனால் எனது உயிர் மேலும் மேலும் துயருற்றது. இறைவனே, நீ தான் என்னை ஐம்பொறிகளின் பிடியில் இருந்து விடுவித்து எனது உயிர் அடையும் துயரங்களை நீக்கவேண்டும்.


பாடல் எண் : 09
பத்தனாய் வாழமாட்டேன் பாவியேன் பரவி வந்து
சித்தத்துள் ஐவர் தீய செய்வினை பலவும் செய்ய
மத்துறு தயிரே போல மறுகும் என் உள்ளம் தானும்
அத்தனே அமரர் கோவே ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
எனது தலைவனே, அமரர்களின் அரசனே, பக்தனாக உனது திருவடிகளை வணங்கி உன்னை வாழ்த்தி வணங்காமல் இருக்கின்றேன்: ஐம்பொறிகள் அனைத்தும் சேர்ந்து, எனது உள்ளம் பல தீய வினைகள் செய்த வண்ணம் இருக்கின்றன. அதனால் எனது உள்ளம், மத்தால் கடையப்படும் தயிர் போன்று ஒரு நிலையில் நில்லாமல் சுழன்று கொண்டே இருக்கின்றது. ஆரூர் மூலத்தானத்தில் உறையும் இறைவனே, நீ தான் எனது உள்ளம், ஐம்பொறிகளின் ஆளுகையிலிருந்து விடுபட்டு நிலையாக இருக்குமாறு செய்ய வேண்டும்.


பாடல் எண் : 10
தடக்கை நாலைந்தும் கொண்டு தடவரை தன்னைப் பற்றி
எடுத்தவன் பேர்க்க ஓடி இரிந்தன பூதம் எல்லாம்
முடித் தலை பத்தும் தோளும் முறி தர இறையே ஊன்றி
அடர்த்து அருள் செய்தது என்னே ஆரூர் மூலட்டனீரே.

பாடல் விளக்கம்:
நீண்ட இருபது கைகளைக் கொண்டு, பெரிய மலையாகிய கயிலை மலையை அரக்கன் இராவணன் பேர்த்தெடுக்க முயற்சி செய்த போது, கயிலை மலையில் இருந்த பூத கணங்கள், அச்சத்தால் பல திசைகளில் சிதறி ஓடின. அரக்கனது முடிகள் கொண்ட பத்து தலைகள் மற்றும் இருபது கைகளும் முறியுமாறு, தனது கால் விரலைச் சிறிதே ஊன்றி, இராவணனை மலையின் கீழ் நெருக்கியவர் ஆரூர் மூலத்தானத்தில் குடி கொண்டிருக்கும் சிவபிரான் தான்.

நன்றி: திரு என். வெங்கடேஸ்வரன் ஐயா


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''