வியாழன், 29 ஜனவரி, 2015

திருநாரையூர்

இறைவர் திருப்பெயர் : சௌந்தரநாதர்

இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி

தல மரம் : புன்னாகம்

தீர்த்தம் : காருண்ய தீர்த்தம்

வழிபட்டோர் : நம்பியாண்டார் நம்பி, நாரை

பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர்


தலத்தின் சிறப்புகள்

நாரை பூஜித்ததால் தலத்திற்கு இப்பெயர். தேவாரத் திருமுறைகள் தில்லை கனகசபையின் ஒரு அறையில் இருந்ததை நம்பியாண்டார் நம்பி மூலமாக வெளிப்படுத்திய பொல்லாப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் தலம்.

நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த தலம்.

திருநாரையூர் திருத்தலம் தேவாரப் பாடல் பெற்ற, சோழ நாட்டுக் காவிரியின் வடகரைத் தலங்களில் 33-வது திருத்தலமாக விளங்குகின்றது. திருஞானசம்பந்த சுவாமிகளின் மூன்று பதிகங்களும், அப்பர் பெருமானின் இரண்டு பதிகங்களும் கொண்ட இத்திருத்தலத்து இறைவன் திருநாமம் சௌந்தரேஸ்வரர். அம்பிகையின் திருநாமம் திரிபுரசுந்தரி.




பொல்லாப் பிள்ளையார் சன்னதி மிகச் சிறப்பு.(பொள்ளா என்பது பொல்லா என்றாயிற்று. பொள்ளா என்பது உளி முதலியவற்றால் செய்யப்படாதது. சுயம்பு மூர்த்தி.)


கி.பி.11ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட கல்வெட்டுகள் நான்கு உள்ளன.

முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி விநாயகரின் ஆறாவது படை வீடாகும். பொல்லாப்பிள்ளையார் சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார்.

மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவகிரகம், சனி பகவான், பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர்.

தலத்தின் வரலாறு

தவசிரேஷ்டரான துர்வாச முனிவர் ஒரு சமயம் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அச்சமயம், ஆகாய மார்க்கமாக கந்தர்வர்கள் சிலர் பறந்து சென்றார்கள். அவர்களில் தேவதத்தன் என்னும் கந்தர்வன் பழங்களைச் சாப்பிட்டுவிட்டு கொட்டைகளைக் கீழே போட, அவை மகரிஷி துர்வாச முனிவரின் மேல் விழுந்து முனிவரின் தவம் கலைந்தது. கண் திறந்த முனிவர் மிகுந்த சினம் கொண்டு அந்த கந்தர்வனைச் சபித்தார்.

பழக் கொட்டையைப் பறவைபோல் உதிர்த்த நீ நாரையாய்ப் போகக் கடவது! எனச் சாபமிட்டார். முனிவரின் சாபம் உடனடியாகப் பலித்துவிட்டது. கந்தர்வன் நாரையாக உருமாறினான். நாரை தன் பாவத்துக்கு விமோசனம் வேண்ட, முனிவரே வழி சொன்னார்: இங்கே இருக்கும் பெருமானுக்குத் தினமும் கங்கை நீரைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்தால், உனக்குச் சாப விமோசனம் கிடைக்கும் என வழிகூறி அருளினார்.

நாரையும் அப்படியே செய்து இறைவனைப் பூசித்து வந்தது. ஒரு நாள், இறைவனின் சோதனையால் காசியிலிருந்து கங்கை நீர் கொண்டு வரும்போது பெரும் மழை பெய்து, கடும் புயலும் வீசியது. அதனால், நாரை பறக்க முடியாமல் தவித்தது. அதன் சிறகுகள் ஒவ்வொன்றாகக் காற்றில் பிய்ந்து விழுந்தன.

அவ்வாறு சிறகுகள் விழுந்த இடம் சிறகிழந்த நல்லூர் என்று வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஊர் இப்போதும் திருநாரையூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவனின் திருநாமம் ஞானபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. சிறகுகளே இல்லாத நாரை தவழ்ந்து வந்து சிவனை வழிப்பட்டு மோட்சம் பெற்றது. அதனால் இந்த ஊர் திருநாரையூர் என்று அழைக்கப்படுகிறது. நாரைக்கு அருள் செய்த இத்தலத்து இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் சுயம்பிரகாசர் எனவும் வழங்கப்படுகிறார்.

சௌந்தரேஸ்வரரின் சந்நிதிக்குத் தென்மேற்குத் திசையில் தனிச் சந்நிதியில் பொல்லாப் பிள்ளையார் தரிசனம் தருகிறார். அவரது உண்மைத் திருநாமம் பொள்ளாப் பிள்ளையார் என்பதே.

பொள்ளாத என்றால் உளியால் செதுக்கப்படாத அல்லது கல்லைப் பொளியாமல் தோன்றிய என்று அர்த்தம். இந்தப் பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாகத் தானே தோன்றிய காரணத்தால் பொள்ளாப் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். அதுவே தற்போது மருவி பொல்லாப்பிள்ளையார் என வழங்கப்படுகிறது.

சுப்பிரமணியருக்கு எவ்வாறு அறுபடை வீடுகள் உள்ளனவோ, அதுபோலவே விநாயகருக்கும் உண்டு. அதில் முதன்மையானது திருநாரையூர் மற்ற விநாயகர் தலங்கள் திருவண்ணாமலை, திருக்கடவூர், மதுரை, திருமுதுகுன்றம், காசி ஆகியவையாகும். பொள்ளாப் பிள்ளயார் இல்லாவிட்டால் தேவாரப் பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்காது.

பொள்ளாப் பிள்ளையார் சந்நிதியில் பக்தியுடன் தினமும் பூசித்து வந்தார், ஆதிசைவர் மரபில் தோன்றிய அனந்தேசர். இவரின் துணைவியார் கல்யாணி அம்மையார். இவர்களது புதல்வன் நம்பி. தினந்தோறும் நைவேத்தியத்தைக் கோயிலில் விநியோகித்தே திரும்புவார் அனந்தேசர். பிரசாதம் கேட்கும் தன் புதல்வன் நம்பியிடம் பிள்ளையார் சாப்பிட்டுவிட்டார் எனப் பதில் சொல்வார் தந்தை.

ஒருமுறை தந்தை வெளியூர் போக, சிறுவன் நம்பி பக்தியுடன் பூசை செய்துவிட்டு, தாயார் கொடுத்த நைவேத்தியத்தைப் பிள்ளையார் முன் வைத்து விநாயகப் பெருமானை சாப்பிடும்படி வேண்டினான்! பிள்ளையார் சாப்பிடவில்லை. மன்றாடினான். தான் ஏதோ தவறு செய்துவிட்டதால்தான் பிள்ளயார் உணவை ஏற்க மறுக்கிறார் என்று எண்ணி வேதனையுடன் விழுந்து, புரண்டு அரற்றினான். தலையைக் கல்லில் முட்டி, மோதி அழுதான்.


தும்பிக்கை நாதன் நம்பியைத் தம் திருக்கரத்தால் தாங்கித் தடுத்தருளி நம்பி பொறு எனக் கூறித் துதிக்கையை வலப்புறமாக நீட்டிச் சாப்பிட்டார். மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பிய நம்பி, விஷயத்தைத் தாயாரிடம் சொன்னான். எப்படி நம்புவாள் அவள்? மறுநாள் நம்பியின் தந்தை மறைந்திருந்து பார்க்க மீண்டும் அதே அற்புதம் நடைபெற்றது. நம்பி சமர்பித்த நைவேத்தியத்தைத் தும்பிக்கைப் பிரான் ஏற்று உண்ட காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்தார் அனந்தேசர்.

திருமுறைகள் தந்த திருநாரையூர்

நம்பியாண்டார் நம்பி, சோழப் பேரரசன் இராஜ ராஜ சோழன் ஆகிய இருவர் மூலமாக தேவாரத் திருமுறைகள் நமக்குக் கிடைக்கச் செய்தார் பொள்ளாப் பிள்ளையார். 

நம்பியாண்டார் நம்பியின் சிறப்புகள் இராஜராஜ சோழனின் காதுகளுக்கு எட்டியது. சைவத் திருமுறைகளின் இருப்பிடம் தேடி அவற்றைத் தொகுக்கும் மாபெரும் பணியை முடித்துவிடவேண்டும் என்ற அவனது நெடுநாளைய ஆசைக்கு பொள்ளாப் பிள்ளையாரின் ஆசி வேண்டி வந்தான். திருமுறை இருக்கும் இடம் காட்டி அருள வேண்டும் என்று இராஜராஜனும், நம்பியும் வேண்ட, தில்லை நடராஜர் ஆலயத்தின் தென்மேற்கு மண்டபத்தில் சுவடிகள் கிடைக்கும் எனத் தெய்வவாக்கு ஒலித்தது. (இன்றும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் மேற்கு உள்பிரகாரத்தில் திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது).

இராஜராஜன், தில்லைவாழ் அந்தணர்களிடம் சென்று திருமுறைகளைத் தொகுக்க அனுமதி கேட்டான். அவர்கள் சொல்படி, சைவ மூவர் சிலைகளை வடித்து வைத்துப் பூசித்து அவற்றின் முன்னிலையில் திருமுறைச் சுவடிகள் இருந்த அறையைத் திறக்கச் செய்தான். திறந்தவுடன் ஏடுகள் புற்றால் மூடியிருக்கக் கண்டு திடுக்கிட்டு, உள்ளம் நொந்தனர். இக்காலத்துக்குத் தேவையானவற்றை மட்டும் வைத்துப் பிறவற்றைச் செல்லரிக்கச் செய்தோம் என்ற திருவருள் வாக்கால் ஒருவாறு அமைதி பெற்றனர். திருநாரையூர் நம்பியைக் கொண்டு அவற்றைப் பதினோரு திருமுறைகளாய்த் தொகுக்கச் செய்தான்.


தொகுத்த தேவாரப் பதிகங்களுக்கு, பண்முறை அமைக்க விரும்பிய நம்பியும் அரசனும் திருஎருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வேண்டினார்கள்.(திருஎருக்கத்தம்புலியூர் என்னும் ஸ்தலம் தற்போது இராஜேந்திரப்பட்டினம் என வழங்கப்படுகிறது. 

திருஞானசம்பந்தர் சுவாமிகள் பதிகம் பெற்ற நடுநாட்டு ஸ்தலம் இது. இறைவன் திருநாமம் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் இறைவி திருநாமம் ஸ்ரீ நீலமலர்க்கண் அம்மை இத்தலம் விருத்தாசலத்திற்கு அருகில் அமைந்துள்ளது). திருநீலகண்ட பெரும்பாணன் மரபில் பிறந்த ஒரு பெண்ணுக்கு (பாடினி) பண்களை அருளினோம். இத்தலத்திலுள்ள அப்பெண்ணை அழைத்துச் சென்று பதிகங்களுக்குப் பண்முறை அமைக்கச் செய்வீர் என்று தெய்வவாக்கு கிடைத்தது.(இப்பிறவியிலேயே வாய் பேச முடியாதவள். இப்பெண்ணிற்கு இறைவன் அருள் புரிந்து பதிகங்களுக்கு பண்முறை அமைக்கச் செய்து அப்பண்னோடு திருமுறை பாட அருள் புரிந்தார்) மனம் மகிழ்ந்த மன்னனும் நம்பியும் அத்தலத்திலுள்ள அந்த பெண்ணைக் கண்டறிந்து தில்லை கனகசபைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எல்லோரது முன்னிலையிலும் அப்பெண்ணைக் கொண்டு தேவாரப் பதிகங்களுக்கு, பண்முறைகளை முறையாக அமைக்கச் செய்தனர். 

இன்று தேவாரப் பதிகங்கள் தக்கப்பண்களுடன் நமக்கு கிடைக்க ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி, இராஜ ராஜ சோழன் இவர்கள் இருவர் மூலமாக அருளியவர் திருநரையூர் ஸ்ரீ பொள்ளப் பிள்ளையார். 

ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி இயற்றிய நூல்கள் (பதினோராந் திருமுறை): ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி திருநாரையூர் விநாயகர் திரு இரட்டை மணிமாலை தவிர சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் மீது கோயில் திருப்பண்ணியர் விருத்தம் திருத்தொண்ட தொகை திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் மீது திருவந்தாதி, திருச்சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திருவுலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை. மற்றும் திருநாவுக்கரசு சுவாமிகள் மீது திருவேகாதசமாலையும் பாடியருளினார். தாம் அருளிச்செய்த இந்த பத்து நூல்களையும் சோழ மகாராஜாஷடைய வேண்டுகோளின்படி பதினோராந் திருமுறையிலேயே சேர்ந்தருளினார். திருமுறைகளை கண்டெடுத்த காரணத்தால் சோழ மன்னனும் திருமுறை கண்ட சோழன் என சிறப்பு பெயர் பெற்றார். 

கோவிலுக்கு வெளியே சற்று தூரத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி அவதரித்து வசித்து வந்த பவித்ரமான இடத்தில் தற்போது சிறிய மண்டபத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி சிற்ப வடிவில் நமக்கு அருள்பாலிக்கின்றார். 

திருஞான சம்பந்தர் சுவாமிகள் திருக்கடம்பூரைத் தரிசித்துக் கொண்டு திருநாரையூர் இறைவனைத் தரிசித்து செந்தமிழ் மாலை பாடினார் என்கிறார் சேக்கிழார்.

தில்லைக் கூத்தனைத் தரிசித்துவிட்டு சீர்காழியை நோக்கிச் சென்றபொழுது இடை வழியில் திருநாரையூரைத் தரிசித்து இறைவனது பெருமைகளைத் திருநாவுக்கரசு சுவாமிகள் பாடினார் எனப் பெரியபுராணம் குறிப்பிடுகின்றது.

தினசரி ஐந்துகாலப் பூசைகள் நடைபெறுகின்றன. சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, கிருத்திகை, ஐப்பசி கந்தர் சஷ்டி விழா, பிரதோஷம், மகா சிவராத்திரி, நவராத்திரி முதலியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. 

ஒவ்வொரு வருடமும் வைகாசித் திங்கள் புனர்பூச நட்சத்திரத்தில் (நம்பியாண்டார் நம்பி முக்தி அடைந்த நாள்) நம்பி குருபூசை விழா சிறந்த திருமுறை விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. நாரை முக்தி அடைந்த வைகாசி விசாகம் அன்றும் ஒவ்வொரு வருடமும் சிறப்பு வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.

சங்கடஹர சதுர்த்தியன்று பொள்ளாப் பிள்ளையாருக்கு விசேஷப் பூசைகள் நடைபெறும். மேலும் அன்று இரவு வானில் இருக்கும் சந்திரனுக்காக பொள்ளாப் பிள்ளையார் சந்நிதிக்கு வெளியே ஒரு குத்துவிளக்கு ஏற்றி, நிலாவை நோக்கி தீபாராதனை காட்டுவார்கள். இதைத் தரிசித்தபின்புதான் பக்தர்கள் தங்கள் விரதத்தை நிறைவு செய்வார்கள்.

வடதிருநாரையூர் : தேசமுற்ற புகழ் செம்மை பெற்ற திருநாரையூர் என்று இவ்வூரைத் திருநாவுக்கரசு சுவாமிகள் சிறப்பித்துள்ளதை மெய்ப்பிக்கும் வகையில் சென்னை சைதாப்பேட்டையில் பிராமணர் தெருவில் வடதிருநாரையூர் என்னும் தலம் உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

திருநாரையூர் திருத்தலத்தைச் சுற்றி சுமார் 20 கி.மீ. தொலைவிற்குள் திருவேட்களம் (அண்ணாமலை நகர்), திருநெல்வாயில் (சிவபுரி), திருக்கழிப்பாலை, திருஓமாம்புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர், திருக்கடம்பூர் (கரக்கோவில்) முதலிய தேவாரப் பாடல் பெற்ற தலங்களும், வைணவ அபிமானத் தலமான காட்டுமன்னார்கோவிலும் அமைந்துள்ளன.

சைவ - வைணவ ஒற்றுமை

சைவர்களின் தமிழ்வேதமான தேவாரத்தைத் தொகுத்தருளிய நம்பியாண்டார் நம்பி அவதரித்த திருநாரையூருக்கு அருகில்தான் (சுமார் 8 கி.மீ. தொலைவில்) வைணவர்களின் தமிழ்வேதமான நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைக் கண்டெடுத்துத் தொகுத்தருளிய நாதமுனிகள் அவதரித்த காட்டுமன்னார்கோயிலும் (வீர நாராயணபுரம்) அமைந்துள்ளது சிறப்பான ஒன்றாகும்.

கோவில் அமைவிடம்

திருநாரையூர் என்னும் திருத்தலம், சிதம்பரம் & திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் – காட்டுமன்னார் கோவில் இடையே சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ தொலைவிலும், காட்டுமன்னார் கோவிலி லிருந்து 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. பேருந்து வசதி நிரம்ப உள்ளது.


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''


செவ்வாய், 27 ஜனவரி, 2015

விடம் தீர்த்த திருப்பதிகம்

திருமுறை   நான்காம் திருமுறை 18வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்



அப்பூதியடிகள் என்னும் அந்தணர் நாவுக்கரசர் மீது அளவிலாப் பற்றுக் கொண்டிருந்தார். அப்பூதியடிகளின் மூத்த மகன் (திருநாவுக்கரசு) பாம்பு கடித்துவிட இறந்துவிட்டான். இதனை அறிந்த நாவுக்கரசர் “ஒன்று கொலாம்” என்று தொடங்கும் விடம் தீர்த்த பதிகம் அருளினார்.

பாடல் எண் : 01
ஒன்று கொலாம் அவர் சிந்தை உயர் வரை
ஒன்று கொலாம் உயரும் மதி சூடுவர்
ஒன்று கொலாம் இடு வெண்தலை கையது
ஒன்று கொலாம் அவர் ஊர்வது தானே

பாடல் விளக்கம்:
சிவபிரானது உள்ளம் அவர் இருக்கும் ஒப்பற்ற கயிலை மலை போன்று மிகவும் உயர்வானது. சிவபிரானின் கருணையால் ஒப்பற்ற நிலைக்கு உயர்ந்த சந்திரனை தனது சென்னியில் சூடியவர் சிவபெருமான். தனது கையில் வெண் தலையை ஒப்பற்ற பலிப் பாத்திரமாக ஏந்தியுள்ளவர் சிவபிரான். அவரது வாகனமாகிய இடபமும் ஒப்பற்றது.


பாடல் எண் : 02
இரண்டு கொலாம் இமையோர் தொழு பாதம்
இரண்டு கொலாம் இலங்கும் குழை பெண் ஆண்
இரண்டு கொலாம் உருவம் சிறு மான் மழு
இரண்டு கொலாம் அவர் எய்தின தாமே.

பாடல் விளக்கம்:
இமையோர் தொழும் சிவபிரானின் பாதங்கள் இரண்டு. அவரது காதினில் அணிந்திருக்கும் ஆபரணம் தோடு, குழை என்று இரண்டு வகையானது. அவரது உருவம் பெண் ஆண் என்று இரண்டு தன்மையையும் கொண்டது. அவர் திருக்கைகளில் ஏந்தியிருக்கும் பொருள்கள் இரண்டு, மான் மற்றும் மழு ஆகும்.


பாடல் எண் : 03
மூன்று கொலாம் அவர் கண் நுதல் ஆவன
மூன்று கொலாம் சூலத்தின் மொய்யிலை
மூன்று கொலாம் கணை கையது வில் நாண்
மூன்று கொலாம் புரம் எய்தன தாமே.

பாடல் விளக்கம்:
அவரது நெற்றிக்கண்ணையும் சேர்த்து சிவபிரானின் கண்கள் மூன்று. அவர் ஏந்தியிருக்கும் சூலம் மூன்று இலைகளைக் கொண்டது. அவர் கையில் திகழும் வில், மூன்று வேறு வேறு பொருட்களை (வில்லாக இருக்கும் மேருமலை, நாணாகத் திகழ்வது வாசுகி பாம்பு, அம்பாக இருப்பது திருமால் என்று மூன்று பொருட்களை) தனது அங்கங்களாக உடையது. அந்த வில்லில் உள்ள அம்பு எய்யப்பட்டது மூன்று புரங்களை நோக்கி.  .


பாடல் எண் : 04
நாலு கொலாம் அவர் தம் முகமாவன
நாலு கொலாம் சனனம் முதல் தோற்றமும்
நாலு கொலாம் அவர் ஊர்தியின் பாதங்கள்
நாலு கொலாம் மறை பாடின தாமே.

பாடல் விளக்கம்:
எம்பெருமானுடைய திருமுகங்கள் நான்கு. அவரால் படைக்கப்பட்ட படைப்பு - நிலம், கருப்பை, முட்டை, வியர்வை, இவற்றிலிருந்து தோன்றும் நால்வகையது. அவர் வாகனமாகிய காளையின் பாதங்கள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன. அவர் பாடிய வேதங்கள் இருக்கு, யசுர், சாமம், அதர்வம் என்ற நான்கு போலும்.


பாடல் எண் : 05
அஞ்சு கொலாம் அவர் ஆடரவின் படம்
அஞ்சு கொலாம் அவர் வெல் புலன் ஆவன
அஞ்சு கொலாம் அவர் காயப்பட்டான் கணை
அஞ்சு கொலாம் அவர் ஆடின தாமே.

பாடல் விளக்கம்:
சிவபிரான் தன் திருமேனியில் ஆபரணமாக அணிந்திருக்கும் நாகத்தின் படங்கள் ஐந்து. சிவபிரான் வென்ற புலன்கள், மெய், வாய், கண் மூக்கு செவி என்று ஐந்தாவன. சிவபிரானால் காயப்பட்ட மன்மதன் பயன்படுத்தும் பூங்கணைகள், தாமரை, அசோகு, மா, முல்லை மற்றும் கருங்குவளை ஆகிய ஐந்து பூக்கள். சிவபிரான் விரும்பி நீராடுவது, பசுக்களிலிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், கோசலம் மற்றும் கோமியம் ஆகியவற்றால் செய்யப்படும் பஞ்சகவியம் ஆகும்.


பாடல் எண் : 06
ஆறு கொலாம் அவர் அங்கம் படைத்தன
ஆறு கொலாம் அவர்தம் மகனார் முகம்
ஆறு கொலாம் அவர் தார் மிசை வண்டின் கால்
ஆறு கொலாம் சுவை ஆக்கின தாமே.

பாடல் விளக்கம்:
சிவபிரான் படைத்த வேதத்தின் அங்கங்கள், சிட்சை, கல்பம், வியாகரணம், நிருத்தம், சந்தம், சோதிடம் ஆகிய ஆறு. அவரது மகனார் முருகனின் முகங்கள் ஆறு. அவர் சூடியிருக்கும் மாலையைச் சூழும் வண்டுகளின் கால்கள் ஆறு. அவரால் ஏற்படுத்தப்பட்ட சுவைகள், இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உப்பு, காரம் என்னும் ஆறு வகையில் அடங்குவன.


பாடல் எண் : 07
ஏழு கொலாம் அவர் ஊழி படைத்தன
ஏழு கொலாம் அவர் கண்ட இருங்கடல்
ஏழு கொலாம் ஆளும் உலகங்கள்
ஏழு கொலாம் இசை ஆக்கின தாமே.

பாடல் விளக்கம்:
ஒவ்வொரு ஊழிக் காலத்தின் தொடக்கத்திலும் இறைவன் படைக்கும் உயிரினங்கள் ஏழு வகைப் பட்டன. அவர் படைத்தவை ஏழு கடல்கள், அவர் ஆட்சி செய்வன ஏழு உலகங்கள். அவர் தோற்றுவித்த இசை ஏழு வடிவங்கள் உடையவை.


பாடல் எண் : 08
எட்டு கொலாம் அவர் ஈறில் பெருங்குணம்
எட்டு கொலாம் அவர் சூடும் இன மலர்
எட்டு கொலாம் தோள் இணையாவன
எட்டு கொலாம் திசை ஆக்கின தாமே.

பாடல் விளக்கம்:
சிவபிரானின் அழிவில்லாத குணங்கள் எட்டு. அவர் விரும்பி சூடும் மலர்கள் எட்டு. ஒன்றுக்கொன்று இணையாக காணப்படும் அவரது தோள்கள் எட்டு. அவர் ஆக்கிய திசைகள் எட்டு.


பாடல் எண் : 09
ஒன்பது போல் அவர் வாசல் வகுத்தன
ஒன்பது போல் அவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போல் அவர் கோலக் குழற்சடை
ஒன்பது போல் அவர் பாரிடம் தானே.

பாடல் விளக்கம்:
இவ்வுடம்பில் அவர் வகுத்த துவாரங்கள் ஒன்பது. அவர் மார்பில் அணிந்த பூணூலின் இழைகள் ஒன்பது. அவருடைய அழகிய சுருண்ட சடை ஒன்பதாக வகுக்கப்பட்டது. அவர் படைத்த நிலவுலகம் ஒன்பது கண்டங்களை உடையது போலும்.


பாடல் எண் : 10
பத்து கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்
பத்து கொலாம் எயிறும் நெரிந்து உக்கன
பத்து கொலாம் அவர் காயப் பட்டான் தலை
பத்து கொலாம் அடியார் செய்கை தானே.

பாடல் விளக்கம்:
அவர் அணிந்த ஐந்தலைப் பாம்பின் கண்களும் உயிரைப் போக்கும் பற்களும் பத்து. அவரால் கோபிக்கப்பட்ட இராவணனுடைய தலைகளும் பத்து. அவர் அழுத்தியதால் நொறுங்கிய அவன் பற்களும் பத்து. அப்பெருமானுடைய அடியார்களுடைய தசகாரியம் என்னும் செயல்களும் பத்துப் போலும்.


இந்த பதிகம் பாடி முடித்த பின்னர், உடலில் இருந்த விடம் நீங்கவே அப்பூதி அடிகளாரின் மூத்த மகன் உறக்கம் கலைந்து எழுபவன் போல் எழவே, அப்பர் பிரான் அவனுக்கும் திருநீறு அணிவித்து பின்னர் அமுது அருந்தினார். பாம்பு கடித்து இறந்த தனது மகன் மீண்டும் உயிர்பெற்று எழுந்ததற்கு மகிழ்ச்சி அடைவதற்கு பதிலாக அப்பூதி அடிகள், வருத்தம் அடைகின்றார். அவரது வருத்தத்திற்கு காரணம், மூத்த மகனின் இறப்பினால் அப்பர் பிரான் அமுது அருந்துவது தாமதப்பட்டது என்பதே ஆகும்.


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

திங்கள், 26 ஜனவரி, 2015

திருநீலகண்டம் திருப்பதிகம்

திருமுறை   முதல் திருமுறை 116வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்



பாடல் எண் : 01
அவ்வினைக்கு இவ்வினை ஆம் என்று சொல்லும் அஃது அறிவீர்!
உய்வினை நாடாது இருப்பதும் உம்தமக்கு ஊனம் அன்றே?
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாம் அடியோம்
செய்வினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.!

பாடல் விளக்கம்:
நாம் முற்பிறவிகளிற் செய்த வினைகளுக்கேற்பவே, இப்பிறவியில் வினைகளைச் செய்து அவற்றாலாய பயன்களை நுகர்கிறோம் என்று சொல்லப் பெறுவதை நீங்கள் அறிவீர்கள். இவற்றிலிருந்து விடுதிபெறும் வழியை நீவிர் தேடாதிருப்பது உமக்குக் குறையன்றோ? நாம் அனைவரும் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம். அவ்விறைவனை நோக்கிச் சரியை, கிரியை முதலான சிவப்பணிகளைச் செய்து அவ்விறைவன் கழலைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் நாம் செய்த பழவினைகள் நம்மை வந்து அணுகா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.


பாடல் எண் : 02
காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்
“ஏ வினையால் எயில் மூன்று எரித்தீர்” என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்து எமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்.!

பாடல் விளக்கம்:
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? நந்தவனம் சோலை முதலியவற்றை வளர்த்தும் குளங்கள் பல தோண்டியும் நல்லறங்கள் பலவற்றைச் செய்து, கனிந்த மனத்தோடு "கணையொன்றால் முப்புரங்களை எரித்தவனே" என்று காலை மாலை இருபொழுதும் பூக்களைக் கொய்து வந்து அணிவித்துச் சிவபிரானுடைய மலர்போலும் திருவடிகளைப் போற்றுவோம். அவ்வாறு செய்யின் கொடிய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.


பாடல் எண் : 03
முலைத்தடம் மூழ்கிய போகங்களும் மற்று எவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டு எமை ஆண்ட விரிசடையீர்! 
இலைத்தலைச் சூலமும் தண்டும் மழுவும் இவை உடையீர்!
சிலைத்து எமைத் தீவினை தீண்டப்பெறா திரு நீலகண்டம்.!

பாடல் விளக்கம்:
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி மகளிர் இன்பத்தில் திளைத்து மகிழ்தல் முதலான உலக நுகர்வுகள் எல்லாம் நம்மை விலையாகக் கொண்டு, அலைக்காதவாறு சிவபெருமானாரை "எம்மை ஆட்கொண்டருளிய விரிந்த சடையை உடையவரே"முத்தலைச் சூலம், தண்டாயுதம், மழு முதலியவற்றைப் படைக்கலங்களாக உடையவரே! எனப் போற்றுவோமாயின், பழைய தீவினைகள் ஆரவாரித்து வந்து நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.


பாடல் எண் : 04
விண்ணுலகு ஆள்கின்ற விச்சா தரர்களும் வேதியரும்
“புண்ணியர்” என்று இரு போதும் தொழப்படும் புண்ணியரே!
கண் இமையாதன மூன்று உடையீர்! உம் கழல் அடைந்தோம்;
திண்ணிய தீவினை தீண்டப்பெறா திரு நீலகண்டம்.!

பாடல் விளக்கம்:
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி, விண்ணுலகை ஆளுகின்ற வித்யாதரர்களும், வேதியர்களும் "புண்ணிய வடிவமானவர்" என்று காலை மாலை இருபோதும் துதித்துத் தொழப்படும் புண்ணியரே. இமையாத முக்கண்களை உடையவரே! உம் திருவடிகளைப் புகலாக அடைந்தோம் எனப் போற்றுவோமாயின் பழையதான வலிய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.


பாடல் எண் : 05
மற்றிணை இல்லா மலை திரண்டன்ன திண்தோள் உடையீர்!
கிற்றெமை ஆட்கொண்டு கேளாது ஒழிவதும் தன்மைகொல்லோ?
சொற்றுணை வாழ்க்கை துறந்து உம் திருவடியே அடைந்தோம்
செற்று எமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்.!

பாடல் விளக்கம்:
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி ஒப்பற்ற மலைபோல் திரண்ட திண்மையான தோள்களை உடையவரே!. எம்மைப் பெருவலிமை கொண்டு ஆட்கொண்டும் சிறிதேனும் எம் குறையைக் கேளாதொழிவது உமது பெருமைக்கு ஏற்புடையதாமோ?. இல்லற வாழ்க்கைக்குச் சொல்லப்படும் எல்லாத் துணைகளையும் விடுத்து உம் திருவடிகளையே சரணாக அடைந்தோம் எனப் போற்றுவோமாயின், நாம் முற்பிறவிகளில் செய்த தீவினைகள் பெருவலிமை கொண்டு வருத்தி நம்மை வந்து அடையமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.


பாடல் எண் : 06
மறக்கும் மனத்தினை மாற்றி எம் ஆவியை வற்புறுத்தி
பிறப்பில் பெருமான் திருந்து அடிக்கீழ்ப் பிழையாத வண்ணம்
பறித்த மலர்கொடு வந்துமை ஏத்தும் பணி அடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்.!

பாடல் விளக்கம்:
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அவ்விறைவனை நோக்கி மறக்கும் இயல்பை உடைய நம் மனத்தை மாற்றி மலமறைப்பால் தடுமாறும் உயிரை வற்புறுத்திப் பிறப்பற்ற பெருமானாகிய அச்சிவபெருமானுடைய அழகிய திருவடியின் கீழ் தவறாதவாறு மனத்தை நிறுத்தி அப்பொழுது பறித்த மலர்களைக் கொண்டு பூசித்து "உம்மை ஏத்தும் பணியை உடைய அடியவர் நாங்கள்" எனக் கூறி வழிபட்டுவரின் சிறப்பற்ற தீய பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.


பாடல் எண் : 08
கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்து உம் கழல் அடிக்கே
உருகி மலர்கொடு வந்துமை ஏத்துதும், நாம் அடியோம்;
செரு இல் அரக்கனைச் சீரில் அடர்த்து அருள்செய்தவரே!
திருவிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்.!

பாடல் விளக்கம்:
நாம் சிவனுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ! பிறவியை அறுத்து உலக வாழ்க்கையை வெறுத்து அவன் திருவடிக்கண் நல்ல மலர்களைக் கொண்டு அருச்சித்துப் போற்றித் "தன்னை எதிர்ப்பாரில்லாத வலிய இராவணனைப் பலரும் போற்ற அடர்த்துப்பின் அருள் செய்த பெருமானே!" என உருகிப் போற்றுவோமாயின் சிவனடி வழுத்தும் செல்வத்தைப் போக்கும் இந்தப் பழைய தீவினைகள் நம்மை வந்து தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின் மேல் ஆணை.


பாடல் எண் : 09
நாற்றமலர் மிசை நான்முகன் நாரணன் வாதுசெய்து
தோற்றம் உடைய அடியும் முடியும் தொடர்வு அரியீர்!
தோற்றினும் தோற்றும் தொழுது வணங்குதும் நாம் அடியோம்
சீற்ற அது ஆம் வினை தீண்டப் பெறா திரு நீலகண்டம்.!

பாடல் விளக்கம்:
நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? அப்பெருமானை நோக்கி, மணங்கமழும் தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும், திருமாலும் தங்களுக்குள் யார் பெரியவர் என வாது செய்தபோது, அவர்கட்கு எதிரே கட்புலனாகத் தோன்றி, அவர்களால் அடியும் முடியும் அறியப்பெறாத்தன்மையை உடையவரே!, என்று அழைத்து, நாம் காணத் தோன்றுதலையும் செய்யும் அவ்விறைவனை நாம் தொழுது வணங்குவோம். அவ்வாறு வழிபடின், சினந்துவரும் பழவினைகள் நம்மைத் தீண்டமாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.


பாடல் எண் : 10
சாக்கியப் பட்டும் சமண் உரு ஆகி உடை ஒழிந்தும்
பாக்கியம் இன்றி இருதலைப் போகமும் பற்றுவிட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர்! அடி போற்றுகின்றோம்
தீக்குழித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்.!

பாடல் விளக்கம்:
நாம் சிவபிரானுக்கு அடியவர்கள் ஆவோம் அல்லமோ? சிலர் புத்த மதத்தைச் சார்ந்தும், சமண சமயத்தைச் சார்ந்து ஆடையின்றித் திரிந்தும் சிவபிரானை வணங்கும் பாக்கியமின்றி இம்மை மறுமை இன்பங்களையும் அவற்றைப் பெறும் பற்றையும் விட்டுப் பயனற்றவராயினர். நாம் அவ்விறைவனை நோக்கிக் கொன்றை மலர் மணக்கும் சடையை உடையவரே! உம் திருவடிகளைப் போற்றுகின்றோம் எனக் கூறிச் செயற்படின் தீக்குழி போலக் கனலும் பழைய தீவினைகள் நம்மைத் தீண்ட மாட்டா. இது திருநீலகண்டத்தின்மேல் ஆணை.


பாடல் எண் : 11
பிறந்த பிறவியில் பேணி எம்செல்வன் கழலடைவான்
இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண்
திறம்பயின் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர்கோனொடும் கூடுவரே.

பாடல் விளக்கம்:
மக்கட் பிறப்பெடுத்த இப்பிறவியிலேயே சிவபிரான் திருவடிகளை விரும்பி வழிபடின் முத்திப்பேறு அடையலாம். மீண்டும் பழவினைகளால் பிறப்பு உளதாயின், தேவர்களின் தலைவனாகிய சிவபிரான் திருவடிகளின் பெருமைகளை அறிந்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகச் செந்தமிழ்ப் பாடல்கள் பத்தையும் ஓத வல்லவர்களாயின், அவர்கள் இமையவர்கள் நிறைந்த வானுலகில் அவ்வானவர் கோனொடும் கூடி மகிழும் பதவியைப் பெற்று இன்புறுவர்.


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''


வெள்ளி, 23 ஜனவரி, 2015

திருக்கோவையார்


மாணிக்கவாசகரால் பாடப்பட்ட எட்டாம் திருமுறையில் மொத்தம் 1056 பாடல்கள் உள்ளது. இதில் திருக்கோவையார் 400 பாடல்கள். திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் திருக்கோவையார் என்னும் அகப்பொருள் கோவை நூலைப் பாடினார். இதற்குத் திருச்சிற்றம்பலக் கோவையார் என்ற வேறு பெயரும் உண்டு. இது, அடிகள் திருவாய் மலரத் திருச்சிற்றம்பலமுடையானே தம் கைப்பட எழுதிக் கொண்ட சிறப்பினை உடையது. 

தமிழில் உள்ள பிரபந்த வகைகளுள் கோவை ஒன்று, அகப்பொருள் துறைகளை நிரல்படக் கோத்து அமைத்தமையின் கோவை எனப் பெயர் வழங்கலாயிற்று. இந்நூல் முழுவதும் கட்டளைக் கலித்துறையாப்பால் அமைந்துள்ளது. தில்லைச் சிற்றம்பலவன் இதன் பாட்டுடைத் தலைவன், 400 துறைகள் உள்ளன. அகப்பொருள் துறைகளைத் தழுவியே இந்நூலுள் துறைகள் வகுக்கப் பெற்றுள்ளன. 

ஒவ்வொரு பாடலுக்கும் அதன் கருத்தை விளக்கும் கொளு ஒன்று உள்ளது. இந்நூலுள் இயற்கைப் புணர்ச்சி முதல் பரத்தையிற் பிரிவு ஈறாக இருபத்தைந்து கிளவிக் கொத்துகள் உள்ளன. திருக்குறள் காமத்துப்பாலிலும் இருபத்து ஐந்து அதிகாரங்கள் உள்ளன. சிவபெருமான் பாட்டுடைத் தலைவன். அவனது திருவடிகளைச் சிந்தையிலும் சென்னியிலும் கொண்டு விளங்குபவனே இந்நூலின் கிளவித் தலைவன். 

அறிவன் நூற்பொருளும் உலக நூல் வழக்கும் கலந்து இந்நூலை அடிகள் அருளியுள்ளார். உரை எழுத வந்த பேராசிரியர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். இக்கோவை நூலில் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களும் அடங்கியுள்ளன. ஆர் விகுதி சேர்த்துத் திருக்கோவையார் என வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு பாட்டிலும் தில்லைநகர் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. தில்லை மூவாயிரவர் பற்றிய குறிப்பும் திருமால் சயனமும் குறிக்கப் பெற்றுள்ளன. தில்லையேயன்றி இடைமருது, சீர்காழி, குற்றாலம், மதுரை, கயிலை, திருப்பரங்குன்றம், திருப்பூவணம், மலையம், பொதியல், ஈங்கோய்மலை, ஏகம்பம், கடம்பை, கழுக்குன்று, சிவநகர், சுழியல், பெருந்துறை, மூவல், வாஞ்சியம், அம்பர், அரசம்பலம், கொடுங்குன்று, திருவெண்காடு முதலிய தலங்களும் குறிக்கப் பெற்றுள்ளன. 

இராவணனை அடர்த்தது, காமனை எரித்தது, காலனைச் சாய்ந்தது, மேருவை வளைத்தது, யானையை உரித்தது முதலிய புராணச் செய்திகளும் கூறப்பட்டுள்ளன. ஆகம நூற்கருத்துக்கள் பல இந்நூலுள் இடம் பெறுகின்றன. 

கோவை நூல்கள் : அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழியில் பொருள் இலக்கணம் மிக்க சிறப்பு வாய்ந்தது. அப்பொருள் அகம், புறம் என இரு கூற்றனவாய்ப் பிரிவு பட்டு வழங்குகிறது. அவற்றுள் ஆகம் என்பது உருவும் திருவும் குறியும் குணனும் பருவமும் ஒத்து, அன்பு வாய்ந்த காதலன் காதலி இருவரின் உள்ளத்தில் கிளைத்தெழுந்து ஓங்கி எழுகின்ற இன்பச் செவ்வி, இச்செவ்வியைக் கிளைந்தெடுத்து ஓதும் தமிழ் நூல்கள் பல. அவற்றுள் முறைப்படுத்தி அந்த இன்பத்துறைகள் எல்லாம் ஒருங்கே முற்ற முடிய விளங்கும் இலக்கிய நூல்களே கோவை என்னும் பெயரில் வழங்கப்பெறுவன். தொடர்புபடுத்திக் கோத்து உரைக்கபடுவதால் இது கோவை எனப்பட்டது. 

திருக்கோவையார் 400 செய்யுட்களைத் தன்னகத்தே கொண்டு சொல்லணி, பொருளணி முதலிய அணிகள் யாவும் ஒருங்கே அமைந்து கற்றார் நெஞ்சம் கனிவு கொள்ளுமாறு இலங்குகின்றது. மற்றைக் கோவைகளைப் போல பாட்டுடைத் தலைவராக மன்னர்களையோ வள்ளல்களையோ கொண்டு பாடப் பெறாமல், தில்லையில் கோயில் கொண்டிருக்கும் நாயகனையே தலைவனாகக் கொண்டு அமைவுறப் பாடப்பட்டுள்ளது. ஆகவே இக்கோவை மற்று எவ்வகைக் கோவையினும் தனக்கொரு சிறப்பினதாய்த் திகழ்ந்து விளங்குகிறது. 

இந்நூல் மற்றைய கோவைகளினும் சிறந்த பொருள்களையும் அருஞ் சொற்றொடர்களையும் கோத்து அமைந்துள்ளதை நோக்குங்கால், இந்நூலாசிரியர் நல்லிசைப் புலமை வல்லுனராகவே உள்ளார். மக்கள் இதனைத் திருச்சிற்றம்பலக் கோவையார் என்பர்; மறையவர் வேதம் என்பர்; சிவ யோகத்தர் ஆகமம் என்பர்; காமுகர் இன்ப நூல் என்பர்; தர்க்க நூலவர் எண்ணூல் என்பர்; தமிழ்ப் புலவர் இலக்கண நூல் என்பர்; இதைப் பாடக் கேட்டவரும் எழுதியவரும் வேதியராகி முன்னின்று அருளிய ஆதியங்கடவுளேயாதலால், இதன் மெய்ச்சிறப்பு நன்குணரப்படும். திருக்கோவையார் உண்மை என்னும் நூலை நோக்கின், அது துகளறு போதப் பொருளை ஒட்டிச் செல்வது என்பது தெற்றென விளங்குகிறது. 

உரையாசிரியர் முதற் பாடலுக்கு உரையெழுதப் புகுங்கால், ஓர் அகவல் பாட்டின் மூலம் இந்நூலில் பொதிந்துள்ள செய்திகளை விளக்குகிறார். அச் செய்திகளாவன: சித்தும் அசித்துமாகிய அட்டமூர்த்தம், ஐந்தொழில்கள், பெத்தம் முத்தி, ஆண்டவனது அணுவும் மகத்துமாகிய இயல்பு, அவனுடைய சொரூபநிலை, அடி முடியறியாப் புராணம், பதிகிருத்தியம், தில்லைத் திருக்கூத்து, சதாசிவமாகிய தாண்டவேசுரர் திருவுருவம், அவரது முப்பத்தெட்டுக் கலை, அவர் அருளால் மாணிக்கவாசகர் பாடிய உண்மை, அவரது தூய ஞானச்செல்வம், அவர் அருளிய இந்நூல் பொருட் பாகுபாடு, அவற்றின் பெயர், அவற்றுள் உணர்த்தற்கரும் பொருள். உணர்த்த நின்ற பொருளின் பெருமை உணர்த்தும் அளவின் சிறுமை, தம் அறிவின் சிறுமை, மரபு வழுவாத தம் முறைமை முதலிய அரும் பேருண்மைகளைக் கூறியுள்ளார்.


திருக்கோவையார் விநாயகர் வணக்கம்



"எண்ணிறைந்த திங்கள் எழுகோ புரந்திகழக்
கண்ணிறைந்து நின்றருளும் கற்பகமே - நண்ணியசீர்த்
தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற
நானூறும் என்மனத்தே நல்கு.!"

பொருள்: 
புகழ்மிக்க தில்லையில் கோயில் கொண்டிருக்கின்ற கற்பக விநாயகரே! சிறப்புமிக்க தேனூறுகின்ற செம்மையான சொற்களையுடைய திருக்கோவையார் என்கின்ற நானூறு செய்யுட்களும் என் மனத்தில் பொருந்துமாறு அருள் செய்வாயாக.!


திருக்கோவையார் நூற்சிறப்பு



"ஆரணங் காணென்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின்
காரணங் காணென்பர்; காமுகர் காமநன் னூலதென்பர்;
ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்;
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே."

பொருள்:
மக்கள் இதனைத் திருச்சிற்றம்பலக் கோவையார் என்பர், மறையவர் வேதம் என்பர், சிவயோகத்தர் ஆகமம் என்பர், காமுகர் இன்ப நூல் என்பர், தர்க்க நூலவர் எண்ணூல் என்பர், தமிழ்ப் புலவர் இலக்கண நூல் என்பர். 


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''


புதன், 21 ஜனவரி, 2015

தில்லை திருமுறை பதிகங்கள் 11

இறைவர் திருப்பெயர் : கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்

இறைவியார் திருப்பெயர் : சிவகாமி, சிவகாமசுந்தரி

திருமுறை   ஏழாம் திருமுறை 90வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது


பாடல் எண் : 01
மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனே! நீ வாழும் நாளும் 
தடுத்தாட்டித் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரி அகலும் கரிய பாம்பும் 
பிடித்தாடிப் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, நீ குஞ்சித்து ஆடுகின்ற தனது திருவடிக்குச் செய்யும் தொண்டின் கண் வாழாமல் உண்டு உடுத்தே வாழும் நாள்களிலும், உன்னை அவ்வாறே சென்று கெடாதவாறு தடுத்து, தனது இச்சைவழி நடாத்தி, பின்பு நீ முன்செய்த பாவத்தின் பொருட்டு உன்னைக் கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும் போது அதனையும் தடுத்து ஆட்கொள்பவனாகிய, கையில் தமருகத்தையும், நெருப்பு எரிகின்ற தகழியையும், சினந்து ஆடுகின்ற கரிய பாம்பையும் பிடித்துக்கொண்டு ஆடுகின்ற, பெரும்பற்றப் புலியூரில் திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம்பெருமானை அடைந்து விட்டோமன்றே, இனி நாம் பெறவேண்டுவது யாது!


பாடல் எண் : 02
பேராது காமத்தில் சென்றார் போல் அன்றியே, பிரியாது உள்கி 
சீரார்ந்த அன்பராய் சென்று முன் அடி வீழும் திருவினாரை 
ஓராது தருமனார் தமர் செக்கில் இடும்போது, தடுத்து ஆட்கொள்வான்
பேராளர் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, சாங்காறும், நீங்காது உலக இன்பத்தில் சென்றவர்போலவன்றி, புகழ் நிறைந்த அன்பையுடையவர்களாய், தன்னை இடைவிடாது நினைத்து, திருமுன் சென்று தனது திருவடியில் வீழ்ந்து வணங்கும் திருவுடையவரை, அவரது நிலையை அறியாமல், கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய, பெருமையுடையவர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே, இனி நாம் பெறவேண்டுவது யாது! (பேராளர் என்றது தில்லைவாழ் அந்தணரை)


பாடல் எண் : 03
நரியார் தம் கள்ளத்தால் பக்கான பரிசு ஒழிந்து நாளும் உள்கித்
பிரியாத அன்பராய் சென்று முன் அடி வீழும் சிந்தையாரைத்
தரியாது தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
பெரியோர்கள் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, நரியினது வஞ்சனைபோலும் வஞ்சனையினால் இரண்டுபட்ட தன்மையின் நீங்கி, நாள்தோறும் தன்னை நினைத்து, மாறுபடாத அன்பை உடையவராய்த் திருமுன்சென்று, தனது திருவடியில் வீழ்ந்து வணங்குங் கருத்துடையவரை, கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது சிறிதும் தாழாது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனாகிய, பெரியோர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே, இனி நாம் பெறவேண்டுவது யாது!


பாடல் எண் : 04
கருமையார் தருமனார் தமர் நம்மைக் கட்டிய கட்டு அறுப்பிப்பானை
அருமை ஆம் தன் உலகம் தருவானை மண்ணுலகம் காவல் பூண்ட 
உரிமையால் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கம் செய்யும்
பெருமையார் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, கருமை நிறம் பொருந்திய கூற்றுவனது ஏவலர் நம்மைக் கட்டுவராயின், அக் கட்டினை அறுத்தெறிபவனும், நமக்கு, பிறர் பெறுதற்கரிய தனது உலகத்தையே தருபவனும், பல்லவ மன்னன் இந்நிலவுலகத்தை நன்நெறியில் வைத்துக் காத்தலை மேற் கொண்ட இயைபினால், அவனுக்குத் திறைகொடாது மாறுபடும் பிற மன்னர்களை வருத்துதல் செய்கின்றவனும் ஆகிய, பெருமையுடையவர்களது பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே, இனி நாம் பெறவேண்டுவது யாது!


பாடல் எண் : 05
கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல் வெண்மதியக் கண்ணி யானை
உருமன்ன கூற்றத்தை உருண்டோட உதைத்து உகந்து உலவா இன்பம் 
தருவானை தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
பெருமானார் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, யானையினது தோலைப் போர்வையாக உடைய, சிவந்த சடைமேல் வெள்ளிய பிறையாகிய கண்ணியைச் சூடினவனும், இடிபோல முழங்கும் கூற்றுவனை நிலத்தில் உருண்டு ஒழியும்படி உதைத்துப் பின் அருள் செய்து, அவனால் வெருட்டப் பட்ட சிறுவனுக்கு அழியாத இன்பத்தைத் தந்தவனும், நம்மை, அக்கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும்போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும் ஆகிய, பெருமை நீங்காதவர்களது பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே, இனி நாம் பெறவேண்டுவது யாது!


பாடல் எண் : 06
உய்த்து ஆடித் திரியாதே, உள்ளமே! ஒழிகண்டாய் ஊன் கண் ஓட்டம்! 
எத்தாலும் குறைவில்லை என்பர் காண் நெஞ்சமே! நம்மை நாளும்
பைத்தாடும் அரவினன் படர்சடையன் பரஞ்சோதி பாவம் தீர்க்கும் 
பித்தாடி புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, படம் எடுத்து ஆடும் பாம்பையும், விரிந்த சடையையும் உடையவனும், மேலான ஒளியாய் உள்ளவனும், அடைந்தவரது பாவங்களை நீக்குகின்றவனும், பித்துக்கொண்டு ஆடுகின்றவனும் ஆகிய, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்துவிட்டோ மன்றே, இனி நாம் பெற வேண்டுவது யாது! இதனால், நமக்கு எதனாலும் குறைவில்லாத வாழ்வு உளதாயிற்று என்று நம்மை நாள்தோறும் பலரும் புகழ்கின்றனர்; ஆதலின், மனமே, இனி நீ, உடம்பின் மேற் கண்ணோட்டம் செலுத்தி அலைந்து திரியாது, அதனை முற்றிலும் ஒழி.


பாடல் எண் : 07
முட்டாத முச்சந்தி மூ ஆயிரவர்க்கும் மூர்த்தி என்னப்
பட்டானை பத்தராய்ப் பாவிப்பார் பாவமும் வினையும் போக 
விட்டானை மலை எடுத்த இராவணனைத் தலைபத்தும் நெரியக் காலால்- 
தொட்டானை புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, "தப்பாத, முப்போதும் செய்யும் வழி பாட்டினையுடைய மூவாயிரவர் அந்தணர்க்கும் ஒரு மூர்த்தியே" என்று அனைவராலும் சொல்லப்பட்டவனும், அடியவராய் நின்று தன்னை நினைப்பவரது, பாவமும் புண்ணியமும் ஆகிய இரு வினைகளும் விலகுமாறு நீக்குகின்றவனும், தனது மலையை எடுத்த இராவணனை, அவனது பத்துத் தலைகளும் நெரியும்படி காலால் ஊன்றினவனும் ஆகிய, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே, இனி நாம் பெறவேண்டுவது யாது!


பாடல் எண் : 08
கல்-தானும் குழையும் ஆறு அன்றியே கருதுமா கருத கிற்றார்க்கு 
எற்றாலும் குறைவு இல்லை என்பர்காண் உள்ளமே! நம்மை நாளும்
செற்று ஆட்டித் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
பெற்றேறிப் புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, கல்லும் தன் தன்மை மாறி உருகும் படி, தன்னை நினைக்கும் முறையில் நினைக்க வல்லராயினார்க்கு, எத்தன்மைத்தாய பொருளாலும் குறைவில்லை என்று பெரியோர் சொல்லுவர்; அவ்வகையில் நாம், நம்மை, கூற்றுவனது ஏவலர்கள் பலகாலும் ஆட்டக்கருதிச் செக்கிலிட முயலும்போது, அதனைத் தடுத்து ஆட்கொள்ளுகின்ற, விடையேறுபவனாகிய, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்கும் நம் பெருமானை அடைந்துவிட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது!


பாடல் எண் : 09
நாடுடைய நாதன் பால் நன்று என்றும் செய் மனமே! நம்மை நாளும்
தாடுடைய தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
மோடுடைய சமணர்க்கும் முடையுடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த
பீடுடைய புலியூர்ச் சிற்றம்பலத்து எம்பெருமானைப் பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, நம்மை, தலைமையையுடைய கூற்றுவனது ஏவலர் பலநாளும் செக்கிலிட்டு ஆட்ட முயலும்போது, அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும், முடை நாற்றத்தையுடைய சமணர்கட்கும், வயிற்றையுடைய சாக்கியர்கட்கும் அறியாமையை வைத்த பெருமையை யுடையவனும் ஆகிய, பெரும்பற்றப்புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தின்கண் விளங்குகின்ற நம் பெருமானை அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டியது யாது! அதனால் உயர்ந்தோரால் விரும்பப்படுதலையுடைய அவ்விறைவனிடத்தில் என்றும் நன்றாய தொண்டினைச் செய்.


பாடல் எண் : 10
பாரூரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைங்கண் ஏற்றன் 
ஊரூரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான் 
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீ கொங்கில் அணி காஞ்சிவா அய்ப் 
பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே.!

பொருள்:
மனமே, நிலத்தில் ஊர்ந்து செல்கின்ற பாம்பினது படம்போலும் அல்குலையுடைய "உமை" என்னும் நங்கையது பாகத்தையுடையவனும், பசிய கண்களையுடைய இடபத்தையுடையவனும், ஊர் தோறும் எழுந்தருளியிருப்பவனும் நம்மை, கூற்றுவனது ஏவலர்கள் ஒறுக்க முயலும் போது அதனைத் தடுத்து ஆட்கொள்பவனும், நம்பியாரூரனுக்குத் தலைவனும், திருவாரூரை உடையவனும், மேற்றிசையில் உள்ள கொங்கு நாட்டில், அழகிய காஞ்சி நதியின் கரையில் விளங்கும் பேரூரில் உள்ளவரது கடவுளும் ஆகிய இறைவனை, பெரும்பற்றப் புலியூரில் உள்ள திருச்சிற்றம்பலத்தில் அடைந்து விட்டோமன்றே; இனி நாம் பெறவேண்டுவது யாது.!


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''