சனி, 30 ஜனவரி, 2016

திருக்கழுக்குன்றம் திருமுறை பதிகம் 03

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வேதகிரீஸ்வரர், ஸ்ரீ பக்தவசலேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சொக்கநாயகி, ஸ்ரீ திரிபுரசுந்தரி

திருமுறை : ஏழாம் திருமுறை 81 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


பாடல் எண் : 01
கொன்று செய்த கொடுமையால் பல சொல்லவே 
நின்ற பாவ வினைகள் தாம் பல நீங்கவே 
சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம்
கன்றினோடு பிடிசூழ் தண் கழுக்குன்றமே.

பாடல் விளக்கம்‬:
உலகீர், தேவர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமானது இடம், பிடியானைகள் தங்கள் கன்றுகளோடு சூழ்ந்திருக்கும் தண்ணிய திருக்கழுக்குன்றமே; அதனை, பிற உயிர்களை வருத்து மாற்றாற் செய்த கொடுஞ்செயல்களால், பலரும் பல இகழுரைகளைச் சொல்லுமாறு இழிவெய்த நின்ற பாவமாகிய வினைகள் பலவும் நீங்குதற்பொருட்டுப் பலகாலும் சென்று வணங்குமின்கள்.


பாடல் எண் : 02
இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே
பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம்
நிறங்கள் செய்த மணிகள் நித்திலம் கொண்டிழி
கறங்கு வெள்ளை அருவித் தண் கழுக்குன்றமே.

பாடல் விளக்கம்‬:
உலகீர், விளங்குகின்ற, கொன்றை மாலையை அணிந்த சடையையுடைய எங்கள் பெருமானது இடம், பல நிறங்களையும் காட்டுகின்ற மணிகளோடு, முத்தினையும் தள்ளிக் கொண்டு பாய்கின்ற, ஒலிக்கும் வெண்மையான அருவிகளையுடைய, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே; அதனை, தலை வணங்கிச் சென்று, இனிய இசைகளைப் பாடி வழிபடுமின்கள்.


பாடல் எண் : 03
நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால் 
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்
தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்
காள கண்டன் உறையும் தண் கழுக்குன்றமே.

பாடல் விளக்கம்‬:
உலகீர், நம்மை ஆளுகின்ற நம் வினைகள் குறைந்து, முழுதும் ஒழிதற்பொருட்டு, தோள்கள் எட்டினையும் உடைய, சிறந்த மாணிக்கம்போலும் ஒளியை யுடையவனாகிய, நஞ்சணிந்த கண்டத்தை உடையவன் எழுந்தருளியிருக்கின்ற, குளிர்ந்த திருக்கழுக்குன்றத்தை, நாள்தோறும், முறைப்படி, நெடிது நின்று வழிபடுமின்கள்.


பாடல் எண் : 04
வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியை 
முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவிடம்
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்மதம் மூன்றுடைக் 
களிறினோடு பிடிசூழ் தண் கழுக்குன்றமே.

பாடல் விளக்கம்‬:
உலகீர், வெம்மை பொருந்திய மழுப்படையை உடைய சிவபெருமான் முற்பட்டு எழுந்தருளியிருக்கின்ற இடம், பிளிறுகின்ற, மனவலியையும், பெரிய தும்பிக்கையையும், பொழிகின்ற மதங்கள் மூன்றையும் உடைய களிற்றி யானைகளோடு, பிடி யானைகள் சூழ்ந்துள்ள, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே ; ஆதலின், உங்கள் அறியாமை நீங்குதற்பொருட்டு, அங்குச்சென்று, திருநீற்றில் மூழ்குகின்றவனாகிய அப்பெருமானை வழிபடுமின்கள்.


பாடல் எண் : 05
புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்
இலைகொள் சூலப்படையன் எந்தை பிரானிடம்
முலைகள் உண்டு தழுவிக் குட்டியொடு முசுக் 
கலைகள் பாயும் புறவில் தண் கழுக்குன்றமே.

பாடல் விளக்கம்‬:
உலகீர், புல்லிய சடையை உடைய அற வடிவினனும், இலை வடிவத்தைக் கொண்ட சூலப்படையை உடைய எம் தந்தையும், எங்கள் தலைவனும் ஆகிய இறைவனது இடம், பாலை உண்டு தழுவுதலை உடைய குட்டியோடு பெண் முசுவும், அதனோடு ஆண் முசுவும் மரக்கிளைகளில் தாவுகின்ற காட்டினையுடைய, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே; அதனை உங்கள் கீழ்மைகள் எல்லாம் நீங்கும் பொருட்டுச் சென்று வழிபடுமின்கள்.


பாடல் எண் : 06
மடமுடைய அடியார் தம் மனத்தே உற 
விடமுடைய மிடறன் விண்ணவர் மேலவன்
படமுடைய அரவன் தான் பயிலும் இடம்
கடமுடைய புறவின் தண் கழுக்குன்றமே.

பாடல் விளக்கம்‬:
நஞ்சினை உடைய கண்டத்தையுடையவனும், தேவர்கட்கு மேலானவனும், படமுடைய பாம்பையுடையவனும் ஆகிய சிவபெருமான், தன்னையன்றி வேறொன்றையும் அறியாத அடியவரது மனத்தில் பொருந்தும் வண்ணம் நீங்காது எழுந்தருளியிருக்கின்ற இடம், காட்டையுடைய, முல்லை நிலத்தோடு கூடிய குளிர்ந்த திருக்கழுக்குன்றமே.


பாடல் எண் : 07
ஊனம் இல்லா அடியார் தம் மனத்தே உற 
ஞான மூர்த்தி நட்டம் ஆடி நவிலும் இடம்
தேனும் வண்டும் மது உண்டு இன்னிசை பாடியே 
கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே.

பாடல் விளக்கம்‬:
ஞான வடிவினனும், நடனம் ஆடுபவனும் ஆகிய சிவபெருமான், குறைபாடு இல்லாத தன் அடியார்களது மனத்திற் பொருந்தும் வண்ணம், நீங்காது எழுந்தருளியிருக்கின்ற இடம், தேனும், வண்டும் தேனை உண்டு இனிய இசையைப்பாட, காட்டில் மயில்கள் அதனைக் கேட்டு இன்புற்றிருக்கின்ற திருக்கழுக்குன்றமே.


பாடல் எண் : 08
அந்தம் இல்லா அடியார் தம் மனத்தே உற 
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன் 
சிந்தை செய்த மலர்கள் நித்தலும் சேரவே 
கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே.

பாடல் விளக்கம்‬:
அளவற்ற அடியார்களது மனத்திற் பொருந்தும் வண்ணமும், திருமாலும் நான்முகனும் நாள்தோறும் வந்து வணங்கி வழிபட்ட, மலர்கள் நாள்தோறும் குவிந்து கிடக்கும் வண்ணமும், நடனமாடுகின்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம், சந்தன மரம் மணம் வீசுகின்ற, முல்லை நிலத்தோடு கூடிய, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே.


பாடல் எண் : 09
பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்
குழைகொள் காதன் குழகன் தான் உறையும் இடம்
மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை
கழைகொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே.

பாடல் விளக்கம்‬:
உலகீர், பின்னிய சடையின்கண் தலைக் கோலங்களையுடையவனும், `குழை` என்னும் அணியை அணிந்த காதினை உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம், மேகங்கள் மிக முழங்க, மிக உயர்ந்த வேயும், கழையுமாகிய மூங்கில்கள் முத்துக்களைச் சொரிகின்ற, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே; அதனை, உங்கள் குற்றங்களெல்லாம் நீங்குதற் பொருட்டு வழிபடுமின்கள்.


பாடல் எண் : 10
பல்லின் வெள்ளைத் தலையன் தான் பயிலும் இடம்
கல்லின் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினை 
மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினால்
சொல்லல் சொல்லித் தொழுவாரைத் தொழுமின்களே.

பாடல் விளக்கம்‬:
உலகீர், பற்களையுடைய வெண்மையான தலையை உடையவன் நீங்காது எழுந்தருளியிருக்கின்ற இடம், பாறைகளின்மேல் வீழ்கின்ற வெண்மையான அருவிகளையுடைய, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே; அதனை, வலிமை மிக்க, திரண்ட தோள்களையுடையவனாகிய நம்பியாரூரனது வனப்புடைய பாடல்களால் துதித்து வழிபடுவோரை வழிபடுமின்கள்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருக்கழுக்குன்றம் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

திருக்கழுக்குன்றம் திருமுறை பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வேதகிரீஸ்வரர், ஸ்ரீ பக்தவசலேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சொக்கநாயகி, ஸ்ரீ திரிபுரசுந்தரி

திருமுறை : ஆறாம் திருமுறை 92 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
மூவிலை வேல் கையானை மூர்த்தி தன்னை
முது பிணக்காடு உடையானை முதல் ஆனானை
ஆவினில் ஐந்து உகந்தானை அமரர் கோனை
ஆலாலம் உண்டு உகந்த ஐயன் தன்னை
பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக்
காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னை
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பாடல் விளக்கம்‬:
மூவிலை வேலாகிய சூலத்தைப் பிடித்த கையினனும், அழகிய கடவுளும், பிணமுதுகாட்டை உடையவனும், எல்லாவற்றிற்கும் அடியானவனும், தேவர்களுடைய அரசனும், ஆலகால விடத்தை மகிழ்ந்துண்ட தலைவனும், தாமரைமேல் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் வணங்குதற்கு நெருங்க முடியாத பெருமானும், புனிதனும், எல்லாவற்றையும் காப்பவனும், கழுக்குன்றில் அமர்ந்தவனும் ஆகிய கற்பகத்தை நான் கண்ணாரக்கண்டேன்.


பாடல் எண் : 02
பல்லாடு தலை சடை மேலுடையான் தன்னைப் 
பாய் புலித்தோல் உடையானை பகவன் தன்னைச்
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னைச்
சுடர் உருவில் என்பறாக் கோலத்தானை
அல்லாத காலனை முன் அடர்த்தான் தன்னை
ஆலின் கீழ் இருந்தானை, அமுது ஆனானை 
கல்லாடை புனைந்து அருளும் காபாலியைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.

பாடல் விளக்கம்‬:
பற்கள் வெளியே தோன்றுகின்ற வெண் தலையைச் சடைமேல் தரித்தவனும், பாயும் புலியை உரித்துக்கொண்ட தோலாகிய உடையினனும், சிறந்த ஆறு குணங்களை உடையவனும், சொற்களும் பொருள்கள் எல்லாமும் ஆனவனும், என்புஅணி நீங்கப்பெறாத தோற்றத்துடன் ஒளிவிட்டுத் திகழ்பவனும், முறையல்லாத செயலை மேற்கொண்ட காலனை முன் ஒறுத்தவனும், ஆலின் கீழ் இருந்தவனும், அமுதமானவனும், கல்லாடை புனைந்தருளும் காபாலியும் ஆகிய கற்பகத்தை நான் கண்ணாரக் கண்டேன்.


இப்பதிகத்தில் முதலிரண்டு செய்யுட்கள் தவிர ஏனைய செய்யுட்கள் மறைந்து போயின.


தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

திருக்கழுக்குன்றம் திருமுறை பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வேதகிரீஸ்வரர், ஸ்ரீ பக்தவசலேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சொக்கநாயகி, ஸ்ரீ திரிபுரசுந்தரி

திருமுறை : முதல் திருமுறை 103 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
தோடுடையான் ஒரு காதில் தூய குழை தாழ
ஏடுடையான் தலை கலனாக இரந்து உண்ணும்
நாடுடையான் நள்ளிருள் ஏம நடமாடும்
காடுடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

பாடல் விளக்கம்‬:
ஒரு காதில் தோடும் பிறிதொரு காதில் தூய குழையும் தாழ்ந்து தொங்கத், தாமரை மலரில் தங்கும் பிரமனின் தலையோட்டை உண் கலனாகக் கொண்டு இரந்துண்ணும் நாடுகளை உடையவன். நள்ளிருள் யாமத்தில் மகிழ்வோடு சுடு காட்டில் நடனம் ஆடுபவன். அத்தகையோன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றமாகும்.


பாடல் எண் : 02
கேண வல்லான் கேழல் வெண் கொம்பு குறளாமை
பூண வல்லான் புரிசடைமேலொர் புனல் கொன்றை
பேண வல்லான் பெண் மகள் தன்னை ஒருபாகம்
காண வல்லான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

பாடல் விளக்கம்‬:
திருமாலாகிய பன்றியினது வெண்மையான கொம்பை அகழ்ந்து அணியவல்லவன். வாமனனாக அவதரித்த திருமாலின் கூர்மாவதார ஆமையோட்டினை அணிகலனாகக் கோத்துப் பூணவல்லவன். முறுக்கிய சடைமுடிமேல் ஒப்பற்ற கங்கை, கொன்றை மாலை ஆகியவற்றை விரும்பி அணிபவன். பெண்ணின் நல்லவளான உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் காணுமாறு செய்தருளியவன். அத்தகையோன் காதல் செய்யும் கோயில் திருக்கழுக்குன்றமாகும்.


பாடல் எண் : 03
தேனகத்தார் வண்டு அது உண்ட திகழ் கொன்றை-
தானகத்தார் தண்மதி சூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுது ஏத்தும்
கானகத்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

பாடல் விளக்கம்‬:
தேனை அகத்தே இருந்து வண்டுகள் உண்ட, விளங்கிய கொன்றை மாலையைச் சூடிய தலையில் மதியைச் சூடி, வானகத்தவரும், வையகத்தவரும் தொழுதேத்தும் வண்ணம் சுடுகாட்டைத் தனக்கு இடமாகக் கொண்ட இறைவன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றம்.


பாடல் எண் : 04
துணையல் செய்தான் தூய வண்டு யாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல் செய்தான் பெண்ணின் நல்லாளை ஒருபாகம்
இணையல் செய்யா இலங்கு எயில் மூன்றும் எரியுண்ணக்
கணையல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

பாடல் விளக்கம்‬:
வண்டுகள் யாழ்போல் ஒலித்து மொய்க்கும் தூய ஒளி நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவனும், பெண்ணின் நல்லவளான உமையம்மையைக்கூடி அவளைத்தன் உடலில் ஒரு பாகமாகப் பிணைத்திருப்பவனும், தன்னோடு இணைந்து வாராத புரங்கள் மூன்றையும் எரி உண்ணுமாறு கணையை விடுத்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.


பாடல் எண் : 05
பையுடைய பாம்பொடு நீறு பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறை சூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற்று அண்ணல் மறி சேர்ந்த
கையுடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

பாடல் விளக்கம்‬:
நச்சுப் பையையுடைய பாம்போடு திருநீறு அணிந்த திருமேனியை உடையவனும், வெண்பிறையையும், விரிந்த கொன்றையையும் முடியில் சூடியவனும், விடம் பொருந்தியமிடற்றினை உடைய தலைமையாளனும், மானேந்திய கையை உடையவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.


பாடல் எண் : 06
வெள்ளமெல்லாம் விரிசடைமேல் ஓர் விரிகொன்றை
கொள்ள வல்லான் குரைகழல் ஏத்தும் சிறுத்தொண்டர்
உள்ளமெல்லாம் உள்கி நின்று ஆங்கே உடனாடும்
கள்ளம் வல்லான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

பாடல் விளக்கம்‬:
விரிந்த சடைமுடியின்மேல் வெள்ளமாகப் பெருகி வந்த கங்கையின் அனைத்து நீரையும் விரிந்த கொன்றை மாலையோடு சூடியிருப்பவனும், தனது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளை ஏத்தித் துதிக்கும் சிறிய தொண்டர்களின் உள்ளமெல்லாம் நிறைந்து, அவர்கள் தியானித்து நின்று ஆடத்தானும் உடன் ஆடும் கள்ளம் வல்லவனுமாகிய, சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.


பாடல் எண் : 07
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.


பாடல் எண் : 08
ஆதல் செய்தான் அரக்கர்தம் கோனை அருவரையின்
நோதல் செய்தான் நொடிவரையின் கண் விரல் ஊன்றி
பேர்தல் செய்தான் பெண்மகள் தன்னோடு ஒரு பாகம்
காதல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

பாடல் விளக்கம்‬:
அரக்கர் கோனை அரிய கயிலை மலையின்கீழ் அகப்படுத்தி, நொடிப்பொழுதில் கால் விரலை ஊன்றி, அவனை நோதல் செய்தவனும், பிறகு அவனுக்கு ஆக்கம் வழங்கியவனும், பெண்மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காதல் செய்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.


பாடல் எண் : 09
இடந்த பெம்மான் ஏனமதாயும் அனம் ஆயும்
தொடர்ந்த பெம்மான் தூமதிசூடி வரையார்தம்
மடந்தை பெம்மான் வார்கழலோச்சிக் காலனைக்
கடந்த பெம்மான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

பாடல் விளக்கம்‬:
அடிமுடி காணப் பன்றி உருவோடு நிலத்தை அகழ்ந்து சென்ற திருமாலும், அன்னமாய்ப் பறந்து சென்ற நான்முகனும், தொடர்ந்த பெருமானாய், தூய மதியை முடியிற் சூடியவன், மலைமகளின் தலைவன், வார்கழலணிந்த திருவடியை உயர்த்திக் காலனைக் காய்ந்தவன் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.


பாடல் எண் : 10
தேய நின்றான் திரிபுரம் கங்கை சடைமேலே
பாய நின்றான் பலர் புகழ்ந்தேத்த உலகெல்லாம்
சாய நின்றான் வன் சமண் குண்டர் சாக்கீயர்
காய நின்றான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

பாடல் விளக்கம்‬:
முப்புரங்களை அழியுமாறு செய்தவனும், பெருகிவந்த கங்கை தன் சடை மேல் பாய நின்றவனும், பலரும் புகழ்ந்து போற்ற உலகனைத்தும் ஊழி இறுதியில் அழியுமாறு நின்றவனும், வலிய சமண் குண்டர்களும், புத்தர்களும் கெடுமாறு நின்றவனும் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.


பாடல் எண் : 11
கண்ணுதலான் காதல் செய் கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
பண் இயல்பால் பாடியபத்தும் இவைவல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.

பாடல் விளக்கம்‬:
நெற்றியில் கண்ணுடையவனாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயிலாகிய திருக்கழுக்குன்றத்தைப் புகழ் பொருந்திய ஞானசம்பந்தன் பண் அமைதியோடு பாடிய தமிழ் மாலையாகிய பத்துப் பாடல்களையும் பாடிப் போற்றுபவர் புண்ணியராய்த் தேவர்களோடு வானுலகம் புகுவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வெள்ளி, 29 ஜனவரி, 2016

ஸ்ரீ வேதகிரீஸ்வரர் திருக்கோயில் திருக்கழுக்குன்றம்

இறைவர் திருப்பெயர்  : ஸ்ரீ வேதகிரீஸ்வரர் (மலைமேல் இருப்பவர்)

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பக்தவசலேஸ்வரர் (தாழக்கோயிலில் இருப்பவர்)

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சொக்கநாயகி (மலைமேல் இருப்பவர்)

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ திரிபுரசுந்தரி (தாழக்கோயிலில் இருப்பவர்)

தேவாரப்பதிகம் : திருஞானசம்பந்தர் - 1, திருநாவுக்கரசர் - 1, சுந்தரர் - 1


அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பதிகம் பாடப்பெற்ற திருமுறைத் தலங்கள் 44. அவற்றில் திருக்கழுக்குன்றம் தலமும் ஒன்றாகும். வேதமே மலையாய் இருப்பதால் இத்தலம் வேதகிரி எனப் பெயர் பெற்றது. வேதாசலம், கதலிவனம், கழுக்குன்றம் என்பன இத்தலத்திற்குரிய வேறு பெயர்கள். மலைமேல் ஒரு கோயிலும், ஊருக்குள் ஒரு கோயிலும் உள்ளது. இவை முறையே திருமலை, தாழக்கோயில் என்றழைக்கப்பபடுகிறது. 

மலைக்கோவிலில் இறைவன் வேதபுரீஸ்வரர் என்ற பெயரிலும், தாழக்கோவிலில் இறைவன் பக்தவத்சலேஸ்வரர் என்ற பெயரிலும் குடி கொண்டுள்ளனர். ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய பாறைகளாக இருப்பதாகவும், அவற்றுள் அதர்வணவேத பாறை உச்சியில் சிவபெருமான் கோவில் கொண்டுள்ளார் என்று தலபுராணம் விவரிக்கிறது.

மலைக்கோவில் சுமார் 4 கி.மி. சுற்றளவும், 500 அடி உயரமும் கொண்டு மலைமேல் இராஜகோபுரம், ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. மலை மீது ஏறிச்செல்ல நல்ல முறையில் அமைக்கப்பட்ட படிகள் உள்ளன. மூலவர் வாழைப் பூக்குருத்துப் போன்று சுயம்புலிங்க மூர்த்தியாக வேதகிரீஸ்வரர் என்ற பெயருடனும், அம்மன் சொக்கநாயகி என்கிற பெண்ணினல்லாளம்மை என்ற பெயரிலும் எழுந்தருளி இருக்கின்றனர். 

கழுகுகள் பூசித்துப் பேறு பெற்ற காரணத்தால் கழுக்குன்றம் என்று பெயர் ஏற்பட்டது. முதல் யுகத்த்தில் சாபம் பெற்ற சண்டன், பிரசண்டன் என்னும் கழுகுகளும், இரண்டாம் யுகத்தில் சம்பாதி, ஜடாயு என்னும் கழுகுகளும், மூன்றாம் யுகத்தில் சம்புகுத்தன், மாகுத்தன் என்னும் கழுகுகளும், நான்காம் யுகத்தில் சம்பு, ஆதி என்னும் கழுகுகளும் முறையே வழிபட்டுப் பேறு பெற்றன. மலையில் நாள்தோறும் உச்சிப் பொழுதில் இரண்டு கழுகுகள் வந்து சில ஆண்டுகள் முன்பு வரை உணவு பெற்றுச் சென்றுள்ளன. இப்போது அவைகள் வருவதில்லை.

மலைக்கோவிலுக்கு ஏறிச் செல்லும் படிகள் வழியாகவே கீழே இறங்கி வரலாம். ஆயினும் கீழே இறங்குவதற்கு மற்றொரு பாதையும் உள்ளது. அவ்வழியே இறங்கி வந்தால் பல்லவர் மகேந்திரவர்மன் காலத்திய (கி. பி. 610 - கி.பி. 640) குடைவரைக் கோவில் ஒன்றுள்ளதைக் காணலாம். கோவிலினுள்ளே ஒரு சிவலிங்கம் உள்ளது.

தாழக்கோவில் இக்கோவில் சுமார் 12 ஏக்கர் நிலப்பரளவில் நான்கு புறமும் கோபுரங்களுட்ன் அமைந்துள்ளது. இவற்றில் 7 நிலையுள்ள கிழக்கிலுள்ள கோபுரமே இராஜகோபுரம். ஆலயம் மூன்று பிராகாரங்களுடன் அமைந்துள்ளது. இக்கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேர் எதிரே ஒரு 4 கால் மண்டபம் உள்ளது, வலது புறம் உள்ள மண்டபத்தில் கோவில் அலுவலகம் உள்ளது. அலுவலக மண்டபக் கற்சுவரில் அழகான அஷ்டபுஜ துர்க்கையின் சிற்பம் உள்ளது. இடதுபுறம் 16 கால் மண்டபம். இதிலுள்ள தூண்களில் அழகிய சிற்பங்கள் உள்ளன. 4 கால் மண்டபத்தையடுத்து 2வது கோபுரம். கோபுரத்தின் இருபுறமும் விநாயகரும் சுப்பிரமணியரும் உள்ளனர். வெளிப் பிராகாரம் வலம் வரும்போது வடக்குச் சுற்றில் நந்தி தீர்த்தமும், கரையில் நந்தியும் உள்ளது.

2வது கோபுர வாயிலில் நுழைந்து பிராகாரம் வலம் வரும் போது சோமாஸ்கந்தர் சந்நிதி உள்ளது. இப்பிராகாரத்தில் பீடம் மட்டுமே கொண்டஆத்மநாதர் சந்நிதி உள்ளது. பாணப்பகுதி இல்லை. இதன் எதிரில் மாணிக்கவாசகர் சந்நிதி, ஏகாம்பரநாதர், தல விநாயகரான வண்டுவன விநாயகர், ஜம்புகேஸ்வரர், அருணாசலேஸ்வரர் முதலிய சந்நிதிகள் தனித் தனிக் கோயில்களாக அமைந்துள்ளன. 


ஆறுமுகப்பெருமான் சந்நிதியும் இப்பிராகாரத்திலுள்ளது. அழகான முன் மண்டபத்துடன் உள்ள அம்பாள் சந்நிதியும் இப்பிராகாரத்தில் அமைந்துள்ளது. அம்பாள் சந்நிதி சுற்றி வலம் வர வசதி உள்ளது. உள்ளே கருவறையில் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அம்மன் திரிபுரசுந்தரி அருட்காட்சி தருகிறாள். அம்பிகைக்கு தினமும் பாதத்தில் தான் அபிஷேகம் நடைபெறுகிறது. ஓராண்டில் மூன்று நாட்கள் மட்டுமே (ஆடிப்பூரம் 11ம் நாள், நவராத்திரி 9ம் நாள், பங்குனி உத்திரம் இரவு) திருவுருவம் முழுவதும் அபிஷேகம் செய்யப்படுகிறது.

அம்பாளுக்கு எதிரில் பிரத்யட்ச வேதகிரீஸ்வரர் சந்நிதி உள்ளது. அதையடுத்து நடராச சபை உள்ளது. பிராகாரம் வலம் வந்து மரத்தாலான கொடிமரத்தின் முன்பு நின்று வலது புறம் உள்ள அகோர வீரபத்திரரைத் தொழுது, துவார பாலகர்களை வணங்கி உள்ளே சென்று, உள்சுற்றில் வலம் வரும் போது சூரியன் சந்நிதியும், அதையடுத்து விநாயகர், 63 மூவர் மூலத்திருமேனிகளும், அடுத்து ஏழு சிவலிங்கங்களும், அதனையடுத்து 63 நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகளும் உள்ளன. 

பைரவர் வாகனமின்றி உள்ளார். மூலவர் சதுரபீட ஆவுடையாரில் பக்தவத்சலேஸ்வரர் என்ற பெயருடன் கிழக்கு நோக்கி எழுந்தரிளியுள்ளார். கருவறை கஜப்பிரஷ்ட அமைப்புடையது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் தனி சந்நிதியில் உள்ளார். உட்பிராகாரத்திலுள்ள சுமார் 7 அடி உயரமுள்ள அகோர வீரபத்திரர் திருவுருவம் பார்த்து மகிழ வேண்டியதாகும்.


சங்கு தீர்த்தம்: கிழக்கிலுள்ள இராஜகோபுரத்திற்கு நேநே உள்ள தெருவின் மறு கோடியில் மிக்க புகழுடைய "சங்கு தீர்த்தம்" உள்ளது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறக்கின்றது. இவ்வாறு கிடைத்த சங்குகள் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. மார்க்கண்டேயர் இறைவனை வழிபடப் பாத்திரமின்றித் தவித்த போது இறைவன் சங்கை உற்பத்தி செய்து தந்ததாகவும், அதுமுதற்கொண்டு 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை இக்குளத்தில் சங்கு பிறப்பதாகவும் சொல்லப்படுகிறது. 2011-ம் ஆண்டு இக்குளத்தில் சங்கு கிடைத்துள்ளது. நீராழி மண்டபமும், நீராடுவதற்குரிய படித்துறை மண்டபமும் உள்ளன. சங்கு தீர்த்தத்தில் விடியற்காலையில் நீராடி, மலையை கிரிவலம் வருபவர்களின் நோய்கள் யாவும் நீங்கும் என்பது நம்பிக்கை.

நன்றி shivatemples இணையதளத்திற்கு


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

புதன், 27 ஜனவரி, 2016

திருக்கொட்டையூர் திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ கோடீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ கந்துக கிரீடாம்பாள், ஸ்ரீ பந்தாடு நாயகி

திருமுறை : ஆறாம் திருமுறை 73 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் சுயம்பு மூர்த்தியாக லிங்கம் வெளிப்பட்டதால் ஊர் கொட்டையூர் என்று பெயர் பெற்றது. சோழ மன்னனுக்கும் ஏரண்ட முனிவருக்கும் கோடி லிங்கமாகக் காட்சி தந்தமையால் கோடீஸ்வரர் என்று சுவாமிக்கும் கோடீச்சரம் என்று கோயிலுக்கும் பெயர் வந்தது. ஏரண்டம் என்றால் ஆமணக்கு கொட்டைச் செடியைக் குறிக்கும். அதன் கீழிருந்து தவம் செய்தமையால் அம்முனிவர் ஏரண்ட முனிவர் என்று பெயர் பெற்றார். இத்தலத்திற்கு வில்வாரண்யம், ஏரண்டபுரம் என்றும் வேறு பெயர்கள் உண்டு. ஊர் மக்களிடம் கோடீஸ்வரர் கோயில் என்று பெயர் சொல்லிக் கேட்டால் மக்கள் எளிதில் கோயிலைக் காட்டுகிறார்கள். இத்தலத்தில் மார்க்கண்டேயர் இறைவனை வழிபட்டுள்ளார். பத்திரயோகி முனிவருக்கு இறைவன் கோடி விநாயகராக, கோடி அம்மையாக, கோடி முருகனாக, கோடி தம் திருவுருவாகக் காட்சி தந்ததால் இறைவன் கோடீஸ்வரர் எனப்பட்டார்.


கிழக்கு நோக்கிய ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் விளங்குகிறது. பிராகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமி சந்நிதிகள் உள்ளன. இறைவன் கோடீஸ்வரர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். மூலவர் மீது பாணம் முழுவதிலும் கொட்டை கொட்டையாக - ஆமணக்குச் செடியின் காய் காய்த்த மாதிரி காணப்படுகிறது. இத்தலத்தில் புண்ணியம் செய்தாலும் பாவஞ் செய்தாலும் கோடி மடங்காகப் பெருகும் என்பது நம்பிக்கை. இங்குப் பாவஞ் செய்தால் கோடி மடங்காகப் பெருகுவதால் அதற்குக் கழுவாயே இல்லாமற் போகும் என்பதை "கொட்டையூரிற் செய்த பாவம் கட்டையோடே" என்னும் பழமொழியால் அறியலாம். 

திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஐந்து மூர்த்திகளையும் காண்போர் வேறு தலங்களில் கோடித் திருவுருவம் கண்ட பயனைடவர். இங்குச் செய்த எப்புண்ணியமும் பிற தலங்களிற் செய்த புண்ணியங்களினும் கோடி மடங்கு பயன் தருமென்று தல புராணம் கூறுகிறது. இத்தலத்திலுள்ள நவக்கிரக சந்நிதி மண்டபம் சிறப்பானது. இக்கோயிலில் உள்ள நவக்கிரகங்கள் தங்களுக்குரிய வாகனங்களுடன், மண்டலம் பொருந்தி குடையுடன் அருமையாகக் காட்சி தருகின்றனர். இக்கோவிலின் தீர்த்தங்கள் காவிரியாறு, அமுதக் கிணறு எனகிற கோடி தீர்த்தம் என்பவை. அமுதக் கிணறு கோயிலின் முதல் பிரகாரத்தில் உள்ளது. தல விருட்சமாக ஆமணக்கு கொட்டைச் செடி உள்ளது.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. உட்பிரகாரத்திலுள்ள முருகப் பெருமான கோடி சுப்பிரமணயர் என்ற பெயருடன் உள்ளார். இவர் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். கோவிலின் நுழைவாயிலில் தண்டாயுதபாணி சந்நிதி உள்ளது.


அம்பாள் பந்தாடு நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாள் சிலையின் ஒரு கால் பந்தை உதைப்பது போன்ற தோற்றத்தில் உள்ளது. செய்த பாவங்களை தன் காலால் எட்டி உதைத்து அருள்செய்பவள் என்ற பொருளில் இவ்வாறு சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூறலாம். விளையாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் முன்னேற இந்த அம்மனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இங்குள்ள அமுதக் கிணறு தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டால் புறத்தூய்மை மட்டுமின்றி அகத்தூய்மையும் கிடைப்பதாகவும் மேலும் கல்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றை இந்த தீர்த்தம் தருவதாக நம்பிக்கை.

காவிரி நதி திருவலஞ்சுழியில் வலம் சுழித்துச் செல்கிறது. அவ்வாறு வலம் சுழித்துச் சென்ற காவிரியில் இருந்து வெளிப்பட்ட ஆதிசேஷனால் ஒரு பெரிய பிலத்துவாரம் (பள்ளம்) ஏற்பட்டது. பாய்ந்து வந்த காவிரியாறு ஆதிசேஷன் வெளிப்பட்ட பள்ளத்தில் பாய்ந்து பாதாளத்தில் இறங்கி விட்டது. அது கண்ட சோழ மன்னன் கவலையுற்றுத் திகைத்தபோது, அசரீரியாக இறைவன், "மன்னனோ மகரிஷியோ இறங்கி அப்பாதாளத்தில் பலியிட்டுக் கொண்டால் அப்பிலத்துவாரம் மூடிக்கொள்ளும். அப்போது காவிரி வெளிப்படும்" என்றருளினார். அதுகேட்ட மன்னன் கொட்டையூர் என்ற இந்த ஊரில் ஏரண்டம் என்னும் கொட்டைச் செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ள இடத்தில் தவம் செய்த ஏரண்ட முனிவரையடைந்து அசரீரி செய்தியைச் சென்னான். இதைக் கேட்ட ஏரண்ட முனிவர் நாட்டுக்காகத் தியாகம் செய்ய முன்வந்தார். அவர் அந்த பிலத்துவாரத்தில் இறங்கி தன்னைப் பலி கொடுக்கவும் பள்ளம் மூடிக்கொள்ள காவிரி வெளி வருகிறாள். இந்த ஏரண்ட முனிவருக்கு கோடீஸ்வரர் கோவிலில் தனி சந்நிதி உள்ளது.


திருநாவுக்கரசர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகம் திருக்கொட்டையூர் மற்றும் திருவலஞ்சுழி (காவிரி தென்கரைத் தலம்) ஆகிய இரண்டு பாடல் பெற்ற சிவஸ்தலங்களுக்கும் பொதுவானது.

கும்பகோணம் - திருவையாறு சாலையில் கும்பகோணத்தில் இருந்து 4 கி.மி. தொலைவில் சுவாமிமலை செல்லும் வழியில் திருக்கொட்டையூர் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் நகரப் பேருந்து கொட்டையூர் வழியாகச் செல்கிறது. சாலையோரத்திலேயே கோயில், ஊர் உள்ளது.

நன்றி www.shivatemples இணையதளத்திற்கு


பாடல் எண் : 01
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய்
கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய்
பருமணி மாநாகம் பூண்டான் கண்டாய்
பவளக்குன்று அன்ன பரமன் கண்டாய் 
வருமணி நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய் 
குருமணி போல் அழகு அமரும் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
நிறம் வாய்ந்த மணி போன்ற அழகுடையவனும், கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும், தலைவனுமாகிய சிவபெருமான் நீலமணி போற்றிகழும் கரிய கழுத்தால் அழகு மிக்கவனும் கல்லால மரநிழலில் இருந்தவனும், பருத்த மணிகளை உடைய பெரிய பாம்பினை அணியாகப் பூண்டவனும், பவளக்குன்றுபோல் காட்சியளிக்கும் மேலோனும், தெளிந்த நீர் ஓடிவரும் காவிரியின் கரையில் உள்ள வலஞ்சுழியில் உறைபவனும், தேவர்க்கெல்லாம் தலைவன் ஆகிய தேவனும், யாவர்க்கும் வரமருளும் வரதனும் ஆவான்.


பாடல் எண் : 02
கலைக் கன்று தங்கு கரத்தான் கண்டாய்
கலை பயில்வோர் ஞானக்கண் ஆனான் கண்டாய்
அலைக் கங்கை செஞ்சடைமேல் ஏற்றான கண்டாய் 
அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய்
மலைப் பண்டம் கொண்டு வரும்நீர்ப் பொன்னி
வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் 
குலைத்தெங்கு அம்சோலை சூழ் கொட்டையூரில்
கோடிச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
குலைகளை உடைய தெங்குகள் நிறைந்த சோலையால் சூழப்பட்ட கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவன் ஆகிய சிவபெருமான் மான்கன்றை ஏந்திய கரத்தனும், கலைகளைப் பயில்வோருக்கு ஞானக் கண்ணாய் விளங்குபவனும், அலைகள் பொருந்திய கங்கையாற்றைத் தன்செஞ்சடையில் ஏற்றவனும், அண்டச் சுவரின் உச்சிக்கும் அப்பாலவனும், மலைபடுபொருள்களை அடித்துக்கொண்டுவரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்து மேவிய மைந்தனும் ஆவான்.


பாடல் எண் : 03
செந்தாமரைப் போது அணிந்தான் கண்டாய் 
சிவன் கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்
பந்தாடு மெல்விரலாள் பாகன் கண்டாய்
பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய்
மந்தாரம் உந்தி வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய் 
கொந்தார் பொழில் புடைசூழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
பூங்கொத்துக்கள் நிறைந்த சோலைகள் நான்கு பக்கங்களிலும் சூழ விளங்கும் கொட்டையூரில் உள்ள கோடீச்சரத்து உறையும் தலைவன் செந்தாமரை மலரை அணிந்தவனும், சிவன் என்னும் நாமம் தனக்கே உரியவனும், தேவர்க்குத் தலைவனும், பந்தாடும் மெல்லிய விரல்களையுடைய பார்வதியைத் தன் ஆகத்தின் பாகத்தில் கொண்டவனும், பால், தயிர், நெய், தேன் இவற்றில் ஆடப் பெறுபவனும், மந்தார மரங்களைத் தள்ளிக் கொண்டு வரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்து நிலைபெற்று நிற்கும் மணவாளனும் ஆவான்.


பாடல் எண் : 04
பொடியாடு மேனிப் புனிதன் கண்டாய் 
புள் பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய்
இடியார் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய்
எண் திசைக்கும் விளக்காகி நின்றான் கண்டாய்
மடலார் திரை புரளும் காவிரி வாய்
வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய் 
கொடியாடு நெடுமாடக் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
துகில் கொடிகள் அசையும் உயர்ந்த மாடங்கள் நிறைந்த கொட்டையூரில் உள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான் திருநீறு திகழுந் திருமேனியை உடைய புனிதனும், கருட வாகனனாகிய திருமாலுக்குச் சக்கராயுதத்தை உதவியவனும், இடிபோன்று அச்சந்தரும் முழக்கத்தையுடைய இடபத்தினை ஊர்பவனும், எட்டுத் திசைகளுக்கும் விளக்கமாய் நிற்பவனும், பூவிதழ்களைச் சுமந்த அலைகள் புரளும் காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியிடத்துப் பொருந்திய மைந்தனும் ஆவான்.


பாடல் எண் : 05
அக்கரவம் அரைக்கசைத்த அம்மான் கண்டாய்
அருமறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய் 
தக்கனது பெருவேள்வி தகர்த்தான் கண்டாய் 
சதாசிவன்காண் சலந்தரனைப் பிளந்தான் கண்டாய்
மைக்கொள் மயில் தழை கொண்டு வருநீர்ப் பொன்னி
வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய் 
கொக்கமரும் வயல் புடைசூழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
கொக்குக்கள் அமர்ந்திருக்கும் வயல்கள் நாற்புறமும் சூழ்ந்துள்ள கொட்டையூரில் கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், சங்கு மணியையும், பாம்பையும் இடையில் கட்டியவனாய், உணர்தற்கரிய நான்மறைகளும் ஆறங்கங்களும் ஆனவனாய், தக்கனது பெருவேள்வியைத் தகர்த்தவனாய், சதாசிவனாய், சலந்தரன் உடலைப் பிளந்தவனாய், நீலநிற மயிற் பீலியை அடித்துக் கொண்டு வரும் நீரினையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய், கையில் மழு ஏந்தியவனாய் விளங்குபவன் ஆவான்.


பாடல் எண் : 06
சண்டனை நல் அண்டர் தொழச் செய்தான் கண்டாய்
சதாசிவன் கண்டாய் சங்கரன் தான் கண்டாய்
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் 
சுடரொளியாய்த் தொடர்வரிதாய் நின்றான் கண்டாய்
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் 
மாமுனிவர் தம்முடைய மருந்து கண்டாய் 
கொண்டல் தவழ் கொடிமாடக் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
கொடிகள் கட்டப்பட்டு, மேகங்கள் தவழும் வண்ணம் மிக உயர்ந்த மாடங்களைக் கொண்ட கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், சண்டேசுரனை நல்ல தேவர்கள் தொழுமாறு செய்தவனும், சதாசிவனும், சங்கரனும், தொண்டர் பலரும் புகழ்ந்து வணங்கும் திருவடிகளை உடையவனும், பற்றிப் பின் தொடர்வதற்கு அரிய பேரொளிப் பிழம்பாய் நின்றவனும், மிக்குவரும் புனலையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனும், பெருமைமிக்க தவத்தவர் நுகரும் அமிர்தமும் ஆவான்.


பாடல் எண் : 07
அணவரியான் கண்டாய் அமலன் கண்டாய்
அவிநாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய்
பணமணி மாநாகம் உடையான் கண்டாய்
பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்
மணல் வரும் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் 
மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய் 
குணமுடை நல்லடியார் வாழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
நற்குணமிக்க அடியார்கள் வாழ்கின்ற கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், எட்டுதற்கரியவனாய், குற்றமற்றவனாய், அழிவில்லாதவனாய், மேலுலகத்து உள்ளவனாய், படமுடைய பெரிய நாகத்தை அணிபவனாய், பண்டரங்கக் கூத்தினை ஆடுபவனாய், ஐசுவரியம் முதலிய ஆறு குணங்களை உடையவனாய், மணலை வாரிக் கொண்டுவரும் நீரையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய், திருமாலுக்கும் பிரமனுக்கும் அவர்கள் விரும்பிய அதிகாரத்தை வழங்குபவனாய் விளங்குபவன் ஆவான்.


பாடல் எண் : 08
விரை கமழும் மலர்க் கொன்றைத் தாரான் கண்டாய் 
வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய்
அரையதனிற் புள்ளியதளுடையான் கண்டாய் 
அழலாடி கண்டாய் அழகன் கண்டாய்
வருதிரை நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய் 
குரவமரும் பொழில் புடைசூழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
குராமரங்கள் நிறைந்த சோலைகள் நாற்புறமுஞ் சூழ்ந்த கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான். மணங்கமழும் கொன்றைப் பூ மாலையை உடையவனும், வேதங்களால் போற்றப்படும் தலைவனும், புள்ளிகளை உடைய புலித்தோலை இடையில் உடையாக உடுத்தியவனும், அழலாடுபவனும், அழகனும், தொடர்ந்து வரும் அலைகளையுடையதும் நீர் நிரம்பியதும் ஆகிய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனும், வஞ்சமனத்தாரால் உணரப்படாத மைந்தனும் ஆவான்.


பாடல் எண் : 09
தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய்
தசரதன் தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்
இளம்பிறையும் முதிர்சடைமேல் வைத்தான் கண்டாய்
எட்டு எட்டு இருங்கலையும் ஆனான் கண்டாய்
வளம் கிளர் நீர்ப்பொன்னி வலஞ்சுழியான் கண்டாய்
மாமுனிகள் தொழுதெழு பொற்கழலான் கண்டாய்
குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
குளிர்ந்த குளங்களில் செங்குவளை மலர் மேலெழுந்து விளங்கும் கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், இதழ்கள் மிக்க தாமரை மலரை ஆதனமாக உடையவனாய், தயரதராமனுடைய துன்பங்களைக் களைந்தவனாய், இளம்பிறையையும் பாம்பினையும் கங்கையையும். தன் பழைய சடையில் வைத்தவனாய், கலைகள் அறுபத்து நான்கும் ஆனவனாய், வளத்தை மிகுவிக்கும் நீர்ப் பெருக்கினையுடைய காவிரியின் கரையிலுள்ள வலஞ்சுழியில் வாழ்பவனாய், முனிவர்கள் வணங்கி எழும் பொற்பாதங்களை உடையவனாய் விளங்குபவன் ஆவான்.


பாடல் எண் : 10
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் 
விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய்
தண் தாமரையானும் மாலும் தேடத் 
தழற்பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்
வண்டார் பூஞ்சோலை வலஞ்சுழியான் கண்டாய்
மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம் 
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில்
கோடீச்சுரத்து உறையும் கோமான் தானே.

பாடல் விளக்கம்‬:
ஓதிய நான்மறை ஆறங்க, வழி ஒழுகும் வேதியர்கள் வாழ்கின்ற கொட்டையூரிலுள்ள கோடீச்சரத்துறையும் தலைவனாகிய சிவபெருமான், பகைவர் புரமூன்றையும் எரித்தவனும், வலிய அரக்கனாகிய இராவணன் உடலைக் கயிலை மலையின் கீழ் வைத்துச் சிதைத்தவனும், குளிர்ந்த தாமரையில் வாழ் நான்முகனும் திருமாலும் தேட நெருப்புப் பிழம்பாய் நீண்டவனாகிய கழலை உடையவனும், வண்டுகள் மொய்க்கும் பூஞ்சோலைகள் மிக்க வலஞ்சுழியில் வாழ்பவனும், தேவர்க்குத் தேவனும் ஆவான்.

நன்றி thevaaram இணையத்திற்கு

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருக்கொட்டையூர் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||