செவ்வாய், 30 ஜூன், 2015

திருவையாறு திருமுறை பதிகம் 18

இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

திருமுறை : ஏழாம் திருமுறை 77 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


பாடல் எண் : 01
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மைப் பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன் நான்
கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கம் குலைக்கீழ்க் கருப்பாலை
அரவம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
கரவின்றி வருகின்ற நீர்ப்பெருக்குக் கமுகங் குலையை விழுங்க, தென்னை மரங்களின் குலைக்கீழ் உள்ள கரும் பாலைகளின் ஓசையோடே கூடி ஒலிக்கின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், யான் உம்மைத் துதிக்கும் முறையை இயற்கையில் சிறிதும் அறியாதேன் ஆகலின், முன்னமே உம்பால் வந்து வழிபடாதொழிந்தேன்; இரவும் பகலும் உம்மையே நினைவேன்; என்றாலும், அழுந்த நினையமாட்டேன்.


பாடல் எண் : 02
எங்கே போவேன் ஆயிடினும் அங்கே வந்து என் மனத்தீராய்
சங்கை ஒன்றும் இன்றியே தலை நாள் கடை நாள் ஒக்கவே
கங்கை சடை மேல் கரந்தானே கலை மான் மறியும் கனல் மழுவும்
தங்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
அடியேன் எங்கே செல்வேனாயினும், முதல் நாளும் இறுதி நாளும் ஒரு பெற்றியவாக, சிறிதும் ஐயம் இன்றி, அங்கே வந்து என் மனத்தில் இருப்பீராய், சடைமேற் கங்கையும், கையில் மானின் ஆண் கன்றும், சுடுகின்ற மழுவுமாய்த் தங்குகின்ற, அலைகளையுடைய, காவிரியாற்றங்கரைக் கண் உள்ள திருவை யாற்றை உமதாக உடைய அடிகேள் ஓலம்!.


பாடல் எண் : 03
மருவிப் பிரிய மாட்டேன் நான் வழி நின்றொழிந்தேன் ஒழிகிலேன்
பருவி விச்சி மலைச்சாரல் பட்டை கொண்டு பகடாடிக்
குருவி ஓப்பி கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டோட்டம்
தரவம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
நீர், பரந்து பெருகி தினை விதைக்கப்பட்ட மலைச்சாரலில் பல பிரிவுகளாய்க் காணப்பட்டு, யானைகளைப் புரட்டி, புனங்களில் குருவிகளையும் கிளிகளையும் ஓட்டித் தினையைக் காக்கும் மகளிரது கூந்தல்மேல் அணிந்த மாலைகளை ஈர்த்துக் கொண்டு ஓடுதலைச் செய்தலால் அழகிய அலைகளை உடைத்தாய் நிற்கும், காவிரிக் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், யான், சிலர்போல, உறுவது சீர் தூக்கி, உற்ற வழிக்கூடி, உறாதவழிப் பிரியமாட்டேன்; என்றும் உம் வழியிலே நின்று விட்டேன்; இனி ஒருகாலும் இந்நிலையினின்றும் நீங்கேன்; ஓலம்!


பாடல் எண் : 04
பழகா நின்று பணி செய்வார் பெற்ற பயன் ஒன்று அறிகிலேன்
இகழாது உமக்கு ஆட்பட்டோர்க்கு ஏகபடம் ஒன்று அரைச் சாத்தி
குழகா வாழை குலை தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே
அழகார் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
வாழைக் குலைகளையும், தென்னங் குலைகளையும் அழகாகக் கொணர்ந்து கரைமேல் எறிதலால் அழகு நிறைந்துள்ள அலைகளையுடைய, காவிரி யாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், உமக்கு அடிமைப்பட்டவர் முன்னே, நீர் ஒற்றை ஆடையையே அரையில் பொருந்த உடுத்து நிற்றலால், உம்மை அணுகி நின்று உமக்குப் பணி செய்பவர், அதனால் பெற்ற பயன் ஒன்றையும் யான் அறிகின்றிலேன்; ஓலம்!.


பாடல் எண் : 05
பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான் பிழையைத் தீரப் பணியாயே
மழைக்கண் நல்லார் குடைந்தாட மலையும் நிலனும் கொள்ளாமை
கழைக்கொள் பிரசம் கலந்து எங்கும் கழனி மண்டிக் கையேறி
அழைக்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
மழைபோலும் கண்களையுடைய அழகியராகிய மகளிர் நீரில் மூழ்கி விளையாட, மலையும் நிலமும் இடம் கொள்ளாத படி பெருகி, மூங்கிலிடத்துப் பொருந்திய தேன் பொருந்தப்பெற்று, வயல்களில் எல்லாம் நிறைந்து, வரம்புகளின் மேல் ஏறி ஒலிக்கின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாகிய உடைய அடிகேள், அடியேன் உமக்குச் செய்த குற்றம் ஒன்று உளதாக அறிந்திலேன்; யான் அறியாதவாறு நிகழ்ந்த பிழை உளதாயின், அது நீங்க அருள்செய்; ஓலம்!.


பாடல் எண் : 06
கார்க்கொள் கொன்றை சடைமேல் ஒன்று உடையாய் விடையாய் கையினான்
மூர்க்கர் புரம் மூன்று எரி செய்தாய் முன் நீ பின் நீ முதல்வன் நீ
வார்கொள் அருவி பலவாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு
ஆர்க்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
கார் காலத்தைக் கொண்ட கொன்றை மலரின் மாலையொன்றைச் சடைமேல் உடையவனே, விடையை ஏறுபவனே, அறிவில்லாதவரது ஊர்கள் மூன்றைச் சிரிப்பினால் எரித்தவனே, ஒழுகு தலைக்கொண்ட பல அருவிகள் வாரிக் கொண்டு வந்த மாணிக்கங்களையும் முத்துக்களையும் கைக்கொண்டு ஆரவாரிக்கின்ற அலைகளையுடைய, காவிரி யாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நினதாக உடைய அடிகேள், எல்லாவற்றுக்கும் முன்னுள்ள வனும் நீயே; பின்னுள்ளவனும் நீயே; எப்பொருட்கும் முதல்வனும் நீயே; ஓலம்!.


பாடல் எண் : 07
மலைக்கண் மடவாள் ஒருபாலாய்ப் பற்றி உலகம் பலி தேர்வாய்
சிலைக்கொள் கணையால் எயில் எய்த செங்கண் விடையாய் தீர்த்தன் நீ
மலைக்கொள் அருவி பலவாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு
அலைக்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
மலையிடத்துத் தோன்றிய மங்கையை ஒரு பாகத்திற் கொண்டு, உலக முழுவதும் பிச்சைக்குத் திரிபவனே, வில்லிடத்துக் கொண்ட அம்பினால் முப்புரத்தை அழித்த, சிவந்த கண்களையுடைய இடபத்தை யுடையவனே, மலையிடத்துப் பெருகிய பல அருவிகள் வாரிக்கொண்டு வந்த மாணிக்கங்களையும் முத்துக் களையும் கைக்கொண்டு இருபக்கங்களையும் அரிக்கின்ற அலைகளை உடைய, காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நினதாக உடைய அடிகேள், இறைவனாவான் நீயே; ஓலம்!.


பாடல் எண் : 08
போழும் மதியும் புனக்கொன்றை புனல்சேர் சென்னிப் புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச் சோதீ உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
பகுக்கப்பட்ட சந்திரனும், புனங்களில் உள்ள கொன்றை மலரும், நீரும் பொருந்திய முடியையுடைய புண்ணிய வடிவினனே, சுற்றி ஊர்கின்ற பாம்பை அணிந்த, சுடர்களையுடைய ஒளி வடிவினனே, உன்னை வணங்குகின்றவர்களது துன்பம் நீங்கு மாறும், ஆங்காங்கு வாழ்கின்றவர்கள் விருப்பத்தினால் வைத்த உள்ளங்கள் அவர்களைச் செலுத்தி மூழ்குவிக்குமாறும், மறித்து வீசுகின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நினதாக உடைய அடிகேள், ஓலம்!.


பாடல் எண் : 09
கதிர்க்கொள் பசியே ஒத்தே நான் கண்டேன் உம்மைக் காணாதேன்
எதிர்த்து நீந்த மாட்டேன் நான் எம்மான் தம்மான் தம்மானே
விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி
அதிர்க்கும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
என் தந்தை தந்தைக்கும் பெருமானே, மேகங்கள் துளிகளைச்சிதறி மழையைப் பொழிதலால் வெள்ளம் நுரையைச் சிதறிப் பரந்து வருகையினாலே முழங்குகின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங்கரைக்கண் உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள், நான் உம்மை, பசியுடையவன் நெற்கதிரைக் கண்டாற் போலக் கண்டேன்; அவன் உணவைக் கண்டாற்போலக் காணேனாயினேன்; நீரின் வேகத்தை எதிர்த்து நீந்தி அக்கரையை அடைய நான் வல்லேனல்லேன்; ஓலம்!.


பாடல் எண் : 10
கூசி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர்
தேச வேந்தன் திருமாலும் மலர்மேல் அயனும் காண்கிலார்
தேசம் எங்கும் தெளிந்தாடத் தெண்ணீர் அருவி கொணர்ந்து எங்கும்
வாசம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
நாடெங்கும் உள்ளவர்கள் ஐயமின்றி வந்து மூழ்குமாறு, தெளிந்த நீராகிய அருவியைக் கொணர்ந்து எங்கும் தங்குகின்ற அலைகளையுடைய காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை நுமதாக உடைய அடிகேள், அடியார் தாம் தம் குறையைச் சொல்ல வெள்கியிருந்தாலும், நீரும் அவர்தம் குறையை அறிந்து தீர்க்கும் குணம் சிறிதும் இல்லீர்; அவ்வாறு தீர்த்தல் வேண்டும் என்னும் எண்ணமும் இல்லீர்; உம்மை, உலகிற்குத் தலைவனாகிய திருமாலும், தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் என்னும் இவர்தாமும் காண்கிலர்; பிறர் எங்ஙனங் காண்பார்! ஓலம்!.


பாடல் எண் : 11
கூடி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர்
ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மை தொண்டன் ஊரனேன்
தேடி எங்கும் காண்கிலேன் திருவாரூரே சிந்திப்பன்
ஆடும் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ.

பாடல் விளக்கம்‬:
அசைகின்ற அலைகளையுடைய, காவிரியாற்றங் கரைக்கண் உள்ள திருவையாற்றை உமதாக உடைய அடிகேள், அடியார் உம்மை விட்டு நீங்காது கூடியே இருந்தாலும் நீர், அவர்க்கு அருள் பண்ணும் குணம் சிறிதும் இல்லீர், `அருள் பண்ணுதல் வேண்டும்` என்னும் எண்ணமும் இல்லீர்; அது நிற்க, நீர் என்பால் பிணக்குக் கொண்டிருந்தும், யான் அதனை உணர்ந்திலேன்; உம் அடியேனும், `நம்பியாரூரன்` என்னும் பெயரினேனும் ஆகிய யான் உம்மை இங்குப் பலவிடத்துந் தேடியும் காண்கின்றிலேன்; அதனால், உம்மை யான் நேர்படக்கண்ட திருவாரூரையே நினைப்பேனா யினேன்; ஓலம்!.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருவையாறு திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

திருவையாறு திருமுறை பதிகம் 17

இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

திருமுறை : ஆறாம் திருமுறை 38 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே 
உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலரெலாம் ஆனாய் நீயே 
மலையான் மருகனாய் நின்றாய் நீயே
பேசப் பெரிதும் இனியாய் நீயே 
பிரானாய் அடியென்மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கெலாம் ஆனாய் நீயே 
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
திருவையாற்றை விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையவனே! பொருளில்லாத வெற்று ஓசையாகவும் பொருளுடைய எழுத்து சொல் என்பனவாக உள்ள ஒலியாகவும் நீ உள்ளாய். இவ்வுலகுக்குத் தன்னிகரில்லாத் தலைவனாக உள்ளாய். மலரில் மணம் போல உலகமெங்கும் பரவியுள்ளாய். இமவான் மருமகனாய் உள்ளாய். உன் பெருமையைப் பேசுதற்கு இனியனாய் உள்ளாய். எனக்குத் தலைவனாய் உன் திருவடிகளை என் தலைமீது வைத்தாய். உலகில் உள்ள ஞாயிறு திங்கள், கோள்கள், விண்மீன்கள் முதலியயாவுமாகியுள்ளாய்.


பாடல் எண் : 02
நோக்கரிய திருமேனி உடையாய் நீயே 
நோவாமே நோக்கருள வல்லாய் நீயே
காப்பரிய ஐம்புலனும் காத்தாய் நீயே 
காமனையும் கண்ணழலால் காய்ந்தாய் நீயே
ஆர்ப்பரிய மாநாகம் ஆர்த்தாய் நீயே 
அடியான் என்று அடி என்மேல் வைத்தாய் நீயே
தீர்ப்பரிய வல்வினை நோய் தீர்ப்பாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
ஊனக்கண்ணால் காணுதற்கு இயலாத திருமேனியை உடையாய்! பசி, பிணி முதலியவற்றினால் வருந்தாதபடி அருட்பார்வையால் காப்பவன். நீ, அடக்க முடியாத என் ஐம்புலன்களையும் அடக்குமாறு செய்தாய். மன்மதனை நெருப்புக் கண்ணால் வெகுண்டாய். கட்டுதற்கு அரிய பெரிய பாம்பினை வில் நாணாகக் கட்டினாய். உன் அடியவன் என்று என் தலையில் உன் திருவடிகளை வைத்தாய். மற்றவரால் போக்க முடியாத ஊழ்வினையால் ஏற்படும் துயரங்களை நீக்கினாய். இவ்வாறு செய்து திருவையாறு அகலாத செம்பொன் சோதியாய் உள்ளாய்.


பாடல் எண் : 03
கனத்தகத்துக் கடுஞ்சுடராய் நின்றாய் நீயே
கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே
தனத்தகத்துக் தலை கலனாக் கொண்டாய் நீயே
சார்ந்தாரைத் தகைந்தாள வல்லாய் நீயே
மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே
மலர்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
சினத்திருந்த திரு நீலகண்டன் நீயே 
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
திருவையாறு அகலாத செம்பொன் சோதியே! நீ மேகத்தில் மின்னல்களாகவும், கடல் மலை மேகம் ஆகாயம் என்பனவாகியும், மண்டை ஓட்டையே செல்வமாகக் கொண்டவனாகவும், உன்னைச் சார்ந்த அடியவர்களைத் தவறான வழிகளில் செல்லாமல் தடுத்து அடிமை கொள்ள வல்லவனாகவும், அடியவர் உள்ளக் கருத்தை அறிந்து நிறைவேற்றுபவனாகவும், என் தலைமேல் தாமரை போன்ற உன் திருவடிகளை வைத்தவனாகவும், சிவந்த திருமேனியில் நீலகண்டனாகவும் உள்ளாய்.


பாடல் எண் : 04
வானுற்ற மாமலைகள் ஆனாய் நீயே 
வடகயிலை மன்னி இருந்தாய் நீயே
ஊனுற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே 
ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே
ஆனுற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே 
அடியான் என்று அடி என்மேல் வைத்தாய் நீயே 
தேனுற்ற சொல் மடவாள் பங்கன் நீயே 
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ வானளாவிய மலைகளில் வடக்கிலுள்ள கயிலை மலையில் உறைவாய். புலால் மணம் கமழும் ஒளி வீசும் மழுப்படையை உடையாய். சடையில் பிறை, பாம்பு, கங்கை இவற்றை வைத்தாய். பஞ்சகவ்விய அபிடேகத்தை விரும்புகிறாய். அடியவன் என்று என் தலை மீது உன் திருவடிகளை வைத்தாய். தேன் போன்ற சொற்களை உடைய பார்வதி பாகனாய் உள்ளாய்.


பாடல் எண் : 05
பெண் ஆண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே
பெரியார்கட்கு எல்லாம் பெரியாய் நீயே
உண்ணா அருநஞ்சம் உண்டாய் நீயே 
ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணாய் உலகெலாம் காத்தாய் நீயே
கழல்சேவடி என்மேல் வைத்தாய் நீயே
திண்ணார் மழுவாள் படையாய் நீயே 
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ பெண்ணும் ஆணும் ஆகிய பிறப்புக்களை இல்லாதவனாய்ப் பெரியவர்களுக்கு எல்லாம் பெரியவனாய், மற்றவர் உண்ணாத கொடிய நஞ்சினை உண்டவனாய், ஊழிகளுக்கெல்லாம் தலைவனாய்ப் பற்றுக்கோடாய் இருந்து உலகங்களை எல்லாம் காத்தவனாய்க் கழலணிந்த சிவந்த திருவடிகளை என் தலைமேல் வைத்தவனாய், வலிமை வாய்ந்த மழுப்படையை உடையவனாய் உள்ளாய்.


பாடல் எண் : 06
உற்றிருந்த உணர்வெலாம் ஆனாய் நீயே
உற்றவர்க்கோர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலைஞானம் ஆனாய் நீயே 
கற்றவர்க்கோர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாயவளின் நல்லாய் நீயே
பிரானாய் அடி என்மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திரு நீலகண்டன் நீயே 
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
திருவையாறு அகலாத செம்பொற் சோதியாகிய நீ பொருள்களில் அவற்றின் பண்புகளாக உள்ளாய். அடியவர்கள் சுற்றமாக உள்ளாய். கற்கும் கலையறிவாகவும் அநுபவப்பொருளை ஞான தேசிகர்பால் கேட்டவர்க்கு வேண்டியவை வழங்கும் கற்பகமாகவும் உள்ளாய். பெற்ற தாயை விட மேம்பட்டவனாய் உள்ளாய். பிரானாய் அடி என்மேல் வைத்தாய். நஞ்சினை அடக்கிய நீல கண்டன் நீயே ஆவாய்.


பாடல் எண் : 07
எல்லா உலகமும் ஆனாய் நீயே 
ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே 
ஞானச் சுடர்விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே 
புகழ்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வம் தருவாய் நீயே 
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ! நீ எல்லா உலகங்களும் ஆனவனாய், ஏகம்பத்தில் விரும்பியிருப்பவனாய், நல்லவர்களின் நன்மையை அறிந்து அவருக்கு அருள் செய்பவனாய், ஞான ஒளி வீசும் விளக்காய், கொடிய வினைகளைப் போக்குபவனாய்ப் புகழ்ச் சேவடி என் மேல் வைத்தவனாய்ச் செல்வங்களுள் மேம்பட்ட வீடுபேற்றுச் செல்வத்தை அருளுபவனாய் உள்ளாய்.


பாடல் எண் : 08
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே
அளவில் பெருமை உடையாய் நீயே
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே
போர்க் கோலம் கொண்டு எயில் எய்தாய் நீயே
நாவில் நடுவுரையாய் நின்றாய் நீயே
நண்ணி அடி என்மேல் வைத்தாய் நீயே
தேவர் அறியாத தேவன் நீயே 
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ! நீ பஞ்ச கவ்விய அபிடேகத்தை உகப்பவனாய், எல்லையற்ற பெருமையை உடையவனாய், பூவினில் நாற்றம் போல எங்கும் பரவியவனாய், போர்க் கோலம் பூண்டு மும்மதில்களையும் அழித்தவனாய், நாவினால் பேசும் நடுவுநிலையான சொற்களை உடையவனாய், நண்ணி என் தலை மீது திருவடிகளை வைத்தவனாய், ஏனைய தேவர்களும் அறிய முடியாத தேவனாய் உள்ளாய்.


பாடல் எண் : 09
எண்டிசைக்கும் ஒண்சுடராய் நின்றாய் நீயே
ஏகம்பம் மேய இறைவன் நீயே
வண்டிசைக்கும் நறுங்கொன்றைத் தாராய் நீயே
வாரா உலகு அருள வல்லாய் நீயே
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே
தூமலர்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
திண்சிலைக்கோர் சரங்கூட்ட வல்லாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ! நீ எண்திசைகளிலும் உள்ள ஒளி வீசும் சுடர்கள் ஆனாய். ஏகம்பம் மேவிய இறைவன் நீ. வண்டுகள் ஒலிக்கும் நறுமணம் கமழும் கொன்றை மாலையை உடையவன். சென்றால் மீண்டு வருதல் இல்லாத வீடுபேற்றை அளிப்பவன். அடியார்கள் உன் திருத்தொண்டில் ஈடுபட்டு உன் திருவடிகளை முன்நின்று துதிக்குமாறு உள்ளாய். தூய மலர்போன்ற உன் சிவந்த திருவடிகளை என் தலை மேல் வைத்தாய். திண்ணிய மலையாகிய வில்லுக்கு ஏற்ற அம்பினை இணைத்துச் செயற்பட்டவன் ஆவாய்.


பாடல் எண் : 10
விண்டார் புரமூன்று மெய்தாய் நீயே
விண்ணவர்க்கு மேலாகி நின்றாய் நீயே
கண்டாரைக் கொல்லும் நஞ்சு உண்டாய் நீயே
காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டா அடியேனை ஆண்டாய் நீயே 
தூமலர்ச் சேவடி என்மேல் வைத்தாய் நீயே
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
திருவையாறு அகலாத செம்பொற் சோதீ! நீ பகைவர் முப்புரங்களை அழித்தாய். தேவர்களுக்கும் மேம்பட்டு நின்றாய். பார்த்தவர்களையே உயிரைப் போக்கும் கொடிய விடத்தை உண்டாய். பல ஊழிக்காலங்களாக நிலைபெற்றிருக்கிறாய். அடியேனைத் தொண்டனாக அடிமை கொண்டாய். தூமலர்ச் சேவடி என்மேல் வைத்தாய். திண்ணிய தோள்களை வீசித் தீயில் கூத்தாடுதலில் திறமை உடையாய்.


பாடல் எண் : 11
ஆரு மறியா இடத்தாய் நீயே 
ஆகாயம் தேர் ஊர வல்லாய் நீயே
பேரும் பெரிய இலங்கை வேந்தன் 
பெரிய முடிபத்து இறுத்தாய் நீயே
ஊரும் புரமூன்றும் அட்டாய் நீயே 
ஒண் தாமரையானும் மாலும் கூடித்
தேரும் அடி என்மேல் வைத்தாய் நீயே 
திருவையாறு அகலாத செம்பொன் சோதீ.

பாடல் விளக்கம்‬:
ஒருவரும் அறிய முடியாத உயர் நிலையில் உள்ளாய். வானத்திலே தேரைச் செலுத்தவல்லமை உடையாய். பெரிய புகழை உடைய இராவணனுடைய பத்துத் தலைகளையும் நசுக்கினாய். வானத்தில் உலாவிய மூன்று மதில்களையும் அழித்தாய். பிரமனும் திருமாலும் கூடித்தேடும் அடிகளை என் தலைமேல் வைத்தாய். அத்தகைய நீ திருவையாற்றை விடுத்து நீங்காத செம்பொன் போன்ற ஒளியை உடையையாய் அனைவருக்கும் காட்சி வழங்குகிறாய்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

திருவையாறு திருமுறை பதிகம் 16

இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

திருமுறை : ஆறாம் திருமுறை 37 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் 
அனலாடி ஆரமுதே என்றேன் நானே
கூரார் மழுவாள் படை ஒன்று ஏந்திக் 
குறள் பூதப்பல் படையாய் என்றேன் நானே
பேர் ஆயிரம் உடையாய் என்றேன் நானே
பிறை சூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே
ஆரா அமுதே என் ஐயாறன்னே 
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
பகைவருடைய முப்புரங்களை அழித்தவனே! தீயில் கூத்து நிகழ்த்துபவனே! கிட்டுதற்கு அரிய அமுதமே! கூரிய மழுப்படையை ஏந்துபவனே! குட்டையான பல பூதங்களைப் படையாக உடையவனே! ஆயிரம் பெயர் உடையவனே! பிறையைச் சூடும் தலைக்கோலம் உடையவனே! ஆரா அமுதமாம் ஐயாற்றெம் பெருமானே! என்று பலகாலும் வாய்விட்டு அழைத்து மனம் உருகி நைகின்றேன்.


பாடல் எண் : 02
தீவாயின் முப்புரங்கள் நீறா நோக்கும் 
தீர்த்தா புராணனே என்றேன் நானே
மூவா மதிசூடி என்றேன் நானே 
முதல்வா முக்கண்ணனே என்றேன் நானே
ஏவார் சிலையானே என்றேன் நானே
இடும்பைக் கடல் நின்றும் ஏற வாங்கி
ஆவா என்று அருள்புரியும் ஐயாறன்னே
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
திரிபுரங்களைச் சுட்டுச் சாம்பலாக்கிய தூயோனே! பழையோய்! பிறைசூடி! முதல்வா! முக்கண்ணா! அம்பு பூட்டிய வில்லினனே! துயர்க்கடலில் அடியேன் அழுந்தாமல் எடுத்துக் கரையேற்றி ஐயோ! என்று இரங்கி அருள் புரியும் ஐயாறனே! என்று வாய்விட்டு அழைத்து நான் மனம் உருகி நிற்கின்றேன்.


பாடல் எண் : 03
அஞ்சுண்ண வண்ணனே என்றேன் நானே
அடியார்கட்கு ஆர் அமுதே என்றேன் நானே
நஞ்சணி கண்டனே என்றேன் நானே
நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே
நெஞ்சுணர உள்புக்கு இருந்த போது 
நிறையும் அமுதமே என்றேன் நானே
அஞ்சாதே ஆள்வானே ஐயாறன்னே 
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
அழகிய நறுமணப் பொடி பூசியவனே! அடியவர்களுக்கு ஆரமுதே! விடம் அணிந்த கழுத்தினை உடையவனே! சான்றோர்கள் ஓதும் நான்கு வேத வடிவினனே! என் மனம் உணருமாறு உள்ளே புகுந்திருக்கும் போதெல்லாம் எனக்கு அமுதம் போன்ற இனியனே! நாங்கள் அஞ்சாதபடி எங்களை ஆட்கொண்ட ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.


பாடல் எண் : 04
தொல்லைத் தொடு கடலே என்றேன் நானே
துலங்கும் இளம்பிறையாய் என்றேன் நானே
எல்லை நிறைந்தானே என்றேன் நானே
ஏழ்நரம்பின் இன்னிசையா என்றேன் நானே
அல்லல் கடல் புக்கு அழுந்து வேனை 
வாங்கி அருள்செய்தாய் என்றேன் நானே
எல்லையாம் ஐயாறா என்றேன் நானே 
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
பழைய மேல் கடலே! சகர புத்திரர்களால் தோண்டப்பட்ட கீழ்க்கடலே! விளங்கும் இளம் பிறை சூடீ! உலகம் முழுதும் நிறைந்தவனே! ஏழ் நரம்பாலும் எழுப்பப்படும் ஏழிசை யானவனே! துயரக் கடலில் மூழ்கி வருந்தும் என்னை கரைக்குக் கொண்டுவந்து அருள் செய்தவனே! ஐயாற்றை உகந்தருளி உறை விடமாகக் கொண்டவனே! என்று நான் அரற்றி நைகின்றேன்.


பாடல் எண் : 05
இண்டைச் சடைமுடியாய் என்றேன் நானே
இருசுடர் வானத்தாய் என்றேன் நானே
தொண்டர் தொழப்படுவாய் என்றேன் நானே
துருத்தி நெய்த்தானத்தாய் என்றேன் நானே
கண்டம் கறுத்தானே என்றேன் நானே 
கனலாகும் கண்ணானே என்றேன் நானே
அண்டத்துக்கு அப்பாலாம் ஐயாறன்னே
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
சடையில் முடி மாலை அணிந்தவனே! சூரிய சந்திரர் உலவும் ஆகாய வடிவினனே! அடியவரால் வணங்கப் படுபவனே! துருத்தியிலும் நெய்த்தானத்திலும் உறைபவனே! நீல கண்டனே! தீக் கண்ணனே! அண்டங்களையும் கடந்த ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.


பாடல் எண் : 06
பற்றார் புரமெரித்தாய் என்றேன் நானே
பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே
கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே 
கடுவிடை ஒன்று ஊர்தியாய் என்றேன் நானே
பற்றானார் நெஞ்சுளாய் என்றேன் நானே
பார்த்தற்கு அருள் செய்தாய் என்றேன் நானே
அற்றார்க்கு அருள் செய்யும் ஐயாறன்னே 
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
பகைவர் திரிபுரத்தை எரித்தவனே! ஆன்மாக்களுக்குத் தலைவனே! பண்டரங்கக் கூத்து ஆடுபவனே! அனுபவப் பொருளை ஞானதேசிகர் பால் அறிந்த சான்றோர்களின் நாவில் இருப்பவனே! விரைந்து செல்லும் காளை வாகனனே! உன்னையே பற்றுக் கோடாக உடையவரின் நெஞ்சினை உறைவிடமாகக் கொண்டவனே! அருச்சுனனுக்கு அருள்செய்தவனே! வேற்றுக் களைகண் இல்லாதவர்களுக்கு அருள் செய்யும் ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.


பாடல் எண் : 07
விண்ணோர் தலைவனே என்றேன் நானே
விளங்கும் இளம்பிறையாய் என்றேன் நானே
எண்ணார் எயில் எரித்தாய் என்றேன் நானே
ஏகம்பம் மேயானே என்றேன் நானே
பண்ணார் மறை பாடி என்றேன் நானே
பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே
அண்ணா ஐயாறனே என்றேன் நானே 
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
தேவர் தலைவனே! விளங்கும் பிறை சூடியே! பகைவருடைய மும்மதிலையும் எரித்தவனே! ஏகம்பத்தில் உறைபவனே! பண் நிறைந்த வேதம் ஓதுபவனே! ஆன்மாக்களின் தலைவனே! வெள்ளிய நீறணிந்தவனே! அண்ணால்! ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.


பாடல் எண் : 08
அவனென்று நானுன்னை அஞ்சாதேனை
அல்லல் அறுப்பானே என்றேன் நானே
சிவனென்று நானுன்னை எல்லாம் சொல்லச்
செல்வம் தருவானே என்றேன் நானே
பவனாகி என் உள்ளத்துள்ளே நின்று
பண்டை வினை அறுப்பாய் என்றேன் நானே
அவன் என்றே ஆதியே ஐயாறன்னே 
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
வீணன் என்று சொல்லுமாறு, உன்னை அஞ்சாது தீய வழியில் சென்று வருந்திய என்னுடைய துன்பங்களைப் போக்கியவனே! இன்பத்துக்குக் காரணன் என்று நான் உன் பெருமை எல்லாம் சொல்ல எனக்கு உன் திருவருட் செல்வத்தை வழங்குகின்றவனே! என் உள்ளத்துள்ளே விளங்கித் தோன்றுபவனாய் இருந்து என் பழைய ஊழ்வினையை நீக்குபவனே! ஆதியே! ஐயாற்றுப் பெருமானே! நீயே யாவுமாய் எங்குமாய் நிற்கும் அவன் எனப்படும் பரம் பொருள் என்று நான் அரற்றி நைகின்றேன்.


பாடல் எண் : 09
கச்சி ஏகம்பனே என்றேன் நானே 
கயிலாயா காரோணா என்றேன் நானே
நிச்சல் மணாளனே என்றேன் நானே 
நினைப்பார் மனத்து உளாய் என்றேன் நானே
உச்சம் போது ஏறு ஏறீ என்றேன் நானே
உள்குவார் உள்ளத்தாய் என்றேன் நானே
அச்சம் பிணி தீர்க்கும் ஐயாறன்னே 
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
கச்சியில் ஏகம்பத்து உறைபவனே! கயிலாயனே! குடந்தை நாகைக் காரோணனே! நித்திய கல்யாணனே! விரும்பி நினைப்பவர் மனத்து உள்ளவனே! நண்பகலில் காளையை இவர்ந்து உலவுபவனே! தியானம் செய்பவர் மனத்தை உறைவிடமாகக் கொள்பவனே! அச்சம், நோய் இவற்றைப் போக்கும் ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.


பாடல் எண் : 10
வில்லாடி வேடனே என்றேன் நானே 
வெண்ணீறு மெய்க்கு அணிந்தாய் என்றேன் நானே
சொல்லாய சூழலாய் என்றேன் நானே 
சுலாவாய தொல்நெறியே என்றேன் நானே
எல்லாமாய் என்னுயிரே என்றேன் நானே
இலங்கையர்கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே;
அல்லா வினை தீர்க்கும் ஐயாறன்னே 
என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே.

பாடல் விளக்கம்‬:
வில்லைச் செலுத்தும் வேடர் வடிவில் தோன்றியவனே! திருமேனியில் வெண்ணீறு அணிந்தவனே! வேதங்கள் ஓதப்படும் இடங்களில் உள்ளவனே! எங்கும் பரவிய நல்லவர்கள் பின்பற்றும் நன்னெறி ஆகியவனே! எனக்கு எல்லாச் செல்வங்களாகவும் உயிராகவும் இருப்பவனே! இராவணனுடைய தோள்களை நெரித்தவனே! உன்னைச் சார்தற்கு இடையூறாக இருக்கும் தீவினையைப் போக்கும் ஐயாற்றுப் பெருமானே! என்று நான் அரற்றி நைகின்றேன்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

திருவையாறு திருமுறை பதிகம் 15

இறைவர் திருப்பெயர் : ஐயாற்றீசர், ஐயாரப்பர், பஞ்சநதீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : அறம் வளர்த்த நாயகி, தர்மசம்வர்த்தினி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 28 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
சிந்தை வண்ணத்தராய் திறம்பா வணம்
முந்தி வண்ணத்தராய் முழுநீறு அணி
சந்தி வண்ணத்தராய் தழல் போல்வதோர்
அந்திவண்ணமும் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர், அடியவர்களின் சிந்தை வண்ணமும்; மாறுபடாத வண்ணம் முன்னே தோன்றிய வண்ணமும், முழுநீறு அணிந்து அந்திவண்ணமாகிய செவ்வண்ணமும், தழல்போல்வதோர் வண்ணமும் உடைய இயல்பினர்.


பாடல் எண் : 02
மூல வண்ணத்தராய் முதலாகிய
கோல வண்ணத்தராகிக் கொழுஞ்சுடர்
நீல வண்ணத்தராகி நெடும் பளிங்கு
ஆல வண்ணத்தர் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர், எல்லா உலகங்களுக்கும் மூலமாகிய இயல்பும், முதலாகித் தோன்றிய திருக்கோலத்தின் இயல்பும், வளமையான சுடர் விடுகின்ற நீலநிறமும் நீண்ட பளிங்கனைய தம் திருவுருவத்தில் நஞ்சின் வண்ணமும் உடையவராய்த் திகழ்வர்.


பாடல் எண் : 03
சிந்தை வண்ணமும் தீயதோர் வண்ணமும்
அந்திப் போது அழகாகிய வண்ணமும்
பந்திக் காலனைப் பாய்ந்ததொர் வண்ணமும்
அந்தி வண்ணமும் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் சிந்தை வண்ணமும், தீயின் வண்ணமும், அழகாகிய அந்திப்போதின் வண்ணமும், தானும், கடாவும், பாசக்கயிறுமாக வரிசையாகவரும் காலனைப் பாய்ந்து உதைத்த இயல்பும் உடையவர்.


பாடல் எண் : 04
இருளின் வண்ணமும் ஏழிசை வண்ணமும்
சுருளின் வண்ணமும் சோதியின் வண்ணமும்
மருளும் நான்முகன் மாலொடு வண்ணமும்
அருளும் வண்ணமும் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர். இருளின் வண்ணமும், ஏழிசைகளின் வண்ணவேற்றுமைகளும், சுருண்ட சடையின் வண்ணமும், ஒளியின் வண்ணமும், நான்முகனும் திருமாலும் விண் பறந்தும் மண் புகுந்தும் காண்டற் கரிதென மருளும் வண்ணமும் அவர்கள் ஆணவம் அடங்கியவழி அருளும் வண்ணமும் உடையவராவர்.


பாடல் எண் : 05
இழுக்கின் வண்ணங்களாகிய வெவ்வழல்
குழைக்கும் வண்ணங்களாகியும் கூடியும்
மழைக்கண் மாமுகிலாகிய வண்ணமும்
அழைக்கும் வண்ணமும் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் நல்லியல்புகளினின்றும் இழுக்கி அல்லவை செய்தால் வெவ்விய அழலைப் போன்று வருத்தும் மறக்கருணை வண்ணமும், மழையைத் தன்னிடத்துடைய பெரிய மேகங்களின் இயல்பு போன்று வரையாது அருள் வழங்கும் வண்ணமும், தம்மடியார்களை அழைத்து அருள் வழங்கும் வண்ணமும் உடையவர்.


பாடல் எண் : 06
இண்டை வண்ணமும் ஏழிசை வண்ணமும்
தொண்டர் வண்ணமும் சோதியின் வண்ணமும்
கண்ட வண்ணங்கள் ஆய்க் கனல் மாமணி
அண்ட வண்ணமும் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் இண்டைமாலை சூடும் இயல்பும், ஏழிசை வடிவாகிய இயல்பும், தொண்டர்கள் நடுவில் நிற்கும் இயல்பும், ஒளி இயல்பும், கண்ட வண்ணங்கள் அனைத்தும், கனல் போன்று செவ்வொளி விரிக்கும் மாணிக்க வண்ணமும், அண்டங்களின் வண்ணமும் ஆகியவர்.


பாடல் எண் : 07
விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமும்
கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும்
விரும்புவார் வினை தீர்த்திடும் வண்ணமும்
அரும்பின் வண்ணமும் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் எல்லோரும் விரும்பும் இயல்பும், வேதத்தின் இயல்பும், கரும்பினையொத்த இனிய மொழியையுடைய உமையம்மையார் இயல்பும், தம்மை விரும்பும் மெய்யடியார்களின் வினைகளைத் தீர்த்திடும் இயல்பும், அரும்பின் இயல்பும் உடையராவர்.


பாடல் எண் : 08
ஊழி வண்ணமும் ஒண்சுடர் வண்ணமும்
வேழ் ஈருரி போர்த்ததொர் வண்ணமும்
வாழித் தீயுருவாகிய வண்ணமும்
ஆழி வண்ணமும் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர் ஊழிகள் தோறும் ஒளிரும் இயல்பும், ஒளிச்சுடர் இயல்பும், யானையின் பச்சைத் தோலைப் போர்த்தருளிய இயல்பும், ஊழித் தீ உருவாகிய இயல்பும், கடல் வண்ணமும் உடையவராவர்.


பாடல் எண் : 09
செய் தவன் திருநீறு அணி வண்ணமும்
எய்த நோக்கரிதாகிய வண்ணமும்
கைது காட்சி அரியதோர் வண்ணமும்
ஐது வண்ணமும் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றில் எழுந்தருளும் இறைவன், ஒருகால் யோகு செய்தவனாகத் திருநீறணிந்த வண்ணத்தினன். காண்பதற்கு அரிய தன்மை வாய்ந்தவன், மனதிலே சிறைப்படுத்தித் தியானித்தற்கு அருமை வாய்ந்த தன்மையன். மென்மை தழுவிய அழகினன்.


பாடல் எண் : 10
எடுத்த வாள் அரக்கன் திறல் வண்ணமும்
இடர்கள் போல் பெரிதாகிய வண்ணமும்
கடுத்த கைந்நரம்பால் இசை வண்ணமும்
அடுத்த வண்ணமும் ஆவர் ஐயாறரே.

பாடல் விளக்கம்‬:
ஐயாற்றுத் தலத்தின்கண் எழுந்தருளியுள்ள இறைவர், திருக்கயிலாயத்தை எடுக்கலுற்ற வாளினை உடைய இராவணன் ஆற்றல், துன்பங்கள் போற் பெரிதாகுமாறு செய்தருளிய இயல்பும், மிகுந்த தன் கை நரம்புகளையே யாழாக்கி அவன் இசைத்தவண்ணம் கண்டு அவனுக்கு அருளாளராக அடுத்த வண்ணமும் உடையவர் ஆவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''