வெள்ளி, 31 ஜூலை, 2015

திருக்கொள்ளம்பூதூர் திருமுறை பதிகம்

இறைவர் திருப்பெயர் : வில்வாரண்யேஸ்வரர், வில்வவனநாதர்

இறைவியார் திருப்பெயர் : சௌந்தரநாயகி, அழகு நாச்சியார்

திருமுறை : மூன்றாம் திருமுறை 06 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


சம்பந்தர் தம் அடியார்களுடன் கொள்ளம்புதூர் இறைவனை தரிசிக்க திருக்கொள்ளம்புதூர் வரும் போது காவிரி ஆற்றின் கிளை நதிகளில் ஒன்றான முள்ளியாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது. அக்கரையில் உள்ள கொள்ளம்புதூர் ஆலயத்திற்குச் செல்ல ஓடக்காரன் ஒருவரும் காணப்படவில்லை. அடியார்கள் திகைத்து அக்கரை செல்வது எப்படி என்று கவலைப்பட்டுக் கொண்டு இருந்தனர். 

அப்போது சம்பந்தர் கொள்ளம்புதூர் இறைவனை எண்ணித் துதித்து ஓடக்காரன் இல்லாமலேயே ஓடத்தில் தம் அடியார்களுடன் ஏறி கொட்ட மேகமழுங் கொள்ளம் பூதூர் என்று தொடங்கும் பதிகம் பாடினார். இறைவனின் திருவருளால் ஓடமும் தானாகவே வெள்ளத்தில் ஓடி சம்பந்தரையும் அவர்தம் அடியார்களையும் அக்கரை கொண்டு சேர்த்தது. திருஞான சம்பந்தர் கோயிலை அடைந்து மீதி பாடல்களைப் பாடி இறைவனை வழிபட்டு, அங்கேயே தங்கினார் என்பது வரலாறு. இந்த ஓடத்திருவிழா ஆண்டு தோறும் ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் சிறப்பாக நடக்கிறது. ஆற்றின் அக்கரையில் சம்பந்தருக்கு தனி கோவில் ஒன்றும் உள்ளது. இந்த ஆற்றை மக்கள் வழக்கில் ஓடம் போக்கி ஆறு என்று வழங்குகின்றனர்.

கோவில் அமைப்பு: ஒரு முகப்பு வாயிலுடன் கிழக்கு நோக்கி இவ்வாலயம் அமைந்துள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தே ரிஷபாரூடர், விநாயகர், சுப்பிரமணியர் திருமேனிகள் வண்ணத்தில் சுதையில் அமைக்கப்பட்டுள்ளன. துவார விநாயகர் இருபுறமும் உள்ளார். கோயிலின் முன் பிரம்ம தீர்த்தம் உள்ளது. உள்ளே நுழைந்ததும் விசாலமான முற்றவெளியைக் காணலாம். வலது புறம் நந்தவனத்தின் மத்தியில் மகாலட்சுமி சந்நிதி உள்ளது. இரண்டாவது வாயிலிலுள்ள கோபுரம் ஐந்து நிலைகளையுடையது. வாயிலின் இருபுறமும் பொய்யாத விநாயகர், தண்டபாணி சந்நிதிகள் தனித்தனிக் கோயில்களாக உள்ளன. வெளிப்பிராகாரத்தில் சந்நிதிகள் எவையுமில்லை. தெற்கு வெளிப் பிரகாரத்தில் இருந்து 2-ம் பிரகாரத்துள் நுழைய ஒரு மூன்று நிலை கோபுரம் உள்ளது. இதன் வழியே உள்ளே நுழைந்தால் நேரே அம்பாள் சந்நிதி உள்ளது.

5 நிலை கோபுர வாயில் வழியே நுழைந்ததும் காணும் மண்டபத்திலுள்ள வலப்பக்க கற்தூணில் சம்பந்தர் ஓடம் ஏறிச் செலுத்தும் சிற்பம் உள்ளதைக் கண்டு மகிழலாம். உள் பிராகாரத்தில் வலம் வரும் போது நால்வர், வலம்புரி விநாயகர், சோமாஸ்கந்தர், கஜமுத்தீசர், முல்லைவனநாதர், சாட்சிநாதர், பாதாளவரதர், மகாலிங்கர், விநாயகர், கங்கையம்மன், தட்சிணாமூர்த்தி, சரஸ்வதி, விசாலாட்சி, சோழமன்னன், அவன் மனைவி ஆகிய சந்நிதிகள் உள்ளன. அடுத்தாற் போல ஆறுமுக சுவாமி, மகாலட்சுமி, பைரவர், பள்ளியறை, நவக்கிரகங்கள், சனிபகவான், சூரியன் சந்நிதிகள் உள்ளன.


வலம் வந்து தரிசித்து, செப்புக் கவசமிட்ட கொடி மரத்தையும், கொடி மரத்து விநாயகரையும் வணங்கி, மண்டபத்தில் சென்றால் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. சந்நிதிக்கு முன்னால் வெளியில் மண்டபத்தின் மேற்புறத்தில் பன்னிரண்டு ராசிகளின் உருவங்கள் உரிய கட்டட அமைப்பில் வடிக்கப்பட்டுள்ளது.

அம்பாள் நின்ற திருக்கோலத்தில் தெற்கு நோக்கி அருட்காட்சி தருகிறாள். சந்நிதிகளின் எதிரில் உள்ள தூண்களில் இத்திருக்கோயிலில் திருப்பணியைச் செய்வித்த நகரத்துச் செட்டியார் உருவங்கள் உள்ளன. துவாரபாலகர்களையும் துவார விநாயகரையும் முருகனையும் தரிசித்து மூலவர் மண்டபத்தை அடையலாம். நேரே மூலவர் தரிசனம். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். கோஷ்டமூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டேஸ்வரர் தனி சந்நிதியில் எழுந்தருளியுள்ளார்.

கொரடாச்சேரியில் இருந்து 7 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தெற்கே 20 கி.மி. தூரத்தில் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து கொரடாச்சேரி செல்லும் வழியில் செல்லூரில் இறங்கி சுமார் ஒரு கி.மி. சென்று இத்தலத்தை அடையலாம். கோவில் வரை பாதை உள்ளது.

நன்றி www.shivatemples இணையதளத்திற்கு


பாடல் எண் : 01
கொட்டமே கமழும் கொள்ளம்பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
நல்லமணம் கமழும் திருக்கொள்ளம்பூதூர் என்னும் திருத்தலத்தில் திருநடனமாடும் இறைவனைத் தியானிப்பதால், இந்த ஓடமாவது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. எம் நம்பிக்கைக்கும், விருப்பத்திற்குமுரிய சிவபெருமானே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வணங்க அருள்புரிவாயாக.


பாடல் எண் : 02
கோட்டகக் கழனிக் கொள்ளம்பூதூர்
நாட்டு அகத்து உறை நம்பனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
நீர் நிலைகளும், வயல்களும் கொண்டு விளங்கும் திருக்கொள்ளம்பூதூர் என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற நம்பனைத் தியானிக்க, இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


பாடல் எண் : 03
குலையினார் தெங்கு சூழ் கொள்ளம்பூதூர்
விலையில் ஆட்கொண்ட விகிர்தனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ,
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
குலைகளோடு கூடிய தென்னை மரங்கள் சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில், விலை கொடுத்து வாங்கிய பொருளைப் போன்ற அருமையுடன் என்னை ஆட்கொண்ட விகிர்தனாகிய உன்னைத் தியானிக்க இந்த ஓடமாவது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


பாடல் எண் : 04
குவளை கண் மலரும் கொள்ளம்பூதூர்த்
தவள நீறணி தலைவனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
பெண்களின் கண்களைப் போன்று குவளை மலர்கள் மலர்ந்துள்ள திருக்கொள்ளம்பூதூரில் வீற்றிருக்கின்ற திருவெண்ணீறு அணிந்துள்ள தலைவனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள். புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


பாடல் எண் : 05
கொன்றை பொன் சொரியும் கொள்ளம்பூதூர்
நின்ற புன்சடை நிமலனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
கொன்றை மரமானது பொன்னிறப் பூக்களை உதிர்க்கின்ற திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ள நிமலனைத் தியானிக்க இந்த ஓடமானது ஆற்றைக் கடக்கத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


பாடல் எண் : 06
ஓடம் வந்தணையும் கொள்ளம்பூதூர்
ஆடல் பேணிய அடிகளை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
திருநடனம் செய்யும் தலைவனான சிவபெருமானைத் தியானிக்க ஓடமானது திருக்கொள்ளம்பூதூர் என்னும் தலத்தினை அடையும்படி ஆற்றைக் கடக்கத் தானாகவே தள்ளப் படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


பாடல் எண் : 07
ஆறு வந்தணையும் கொள்ளம்பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
ஆறு வந்தடைகின்ற திருக்கொள்ளம்பூதூரில் இடபம் தாங்கிய இறைவனைத் தியானிக்க ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


பாடல் எண் : 08
குரக்கு இனம் பயிலும் கொள்ளம்பூதூர்
அரக்கனைச் செற்ற ஆதியை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
குரங்குக் கூட்டங்கள் மரங்களில் ஆடிக் குதிப்பதால் உண்டாகும் ஒலி நிறைந்த திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியிருக்கின்றவனும், இராவணனை மலையின் கீழ் நெருக்கியவனுமான ஆதி முதல்வனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


பாடல் எண் : 09
பருவரால் உகளும் கொள்ளம்பூதூர்
இருவர் காண்பரியான் கழல் உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
பருத்த வரால் மீன்கள் துள்ளுகின்ற திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியிருக்கின்ற, திருமாலும், பிரமனும் காண்பதற்கு அரியவனாய் நின்ற சிவபெருமானின் திருவடிகளைத் தியானிக்க இந்த ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


பாடல் எண் : 10
நீர் அகக் கழனிக் கொள்ளம்பூதூர்த்
தேரமண் செற்ற செல்வனை உள்கச்
செல்ல உந்துக சிந்தையார் தொழ
நல்குமாறு அருள் நம்பனே.

பாடல் விளக்கம்‬:
நீர்வளம் மிக்க வயல்களையுடைய திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ளவனாய், புத்தர்களும், சமணர் களும் பகைத்துப் பேசும் செல்வனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடம் தானே தள்ளப்படுவதாக. நம்பனே! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியார்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக.


பாடல் எண் : 11
கொன்றை சேர்சடையான் கொள்ளம்பூதூர்
நன்று காழியுள் ஞானசம்பந்தன்
இன்று சொல் மாலை கொண்டு ஏத்த வல்லார் போய்
என்றும் வானவரோடு இருப்பாரே.

பாடல் விளக்கம்‬:
கொன்றை மலர்களை அணிந்த சடைமுடியுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கொள்ளம்பூதூரில் நற்புக ழுடைய காழியில் வசிக்கும் ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகப் பாமாலையால் இறைவனைப் போற்ற வல்லவர்கள் எப்பொழுதும் தேவர்களோடு கூடி மகிழ்வர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருக்கொள்ளம்பூதூர் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக