வெள்ளி, 13 மே, 2016

திருக்கோலக்கா திருமுறை திருப்பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சப்தபுரீஸ்வரர், ஸ்ரீ தாளபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஓசைகொடுத்த நாயகி, ஸ்ரீ த்வனிபிரதாம்பாள்

திருமுறை : ஏழாம் திருமுறை 62 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


பாடல் எண் : 01
புற்றில் வாளரவு ஆர்த்த பிரானைப் 
பூத நாதனைப் பாதமே தொழுவார் 
பற்றுவான் துணை எனக்கெளி வந்த 
பாவ நாசனை மேவரி யானை
முற்றலார் திரிபுரம் ஒரு மூன்றும் 
பொன்ற வென்றி மால்வரை அரி அம்பாக்
கொற்ற வில்லங்கை ஏந்திய கோனைக்
கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

பாடல் விளக்கம்‬:
புற்றில் வாழும் கொடிய பாம்பைக் கட்டியுள்ள பெருமானும், பூத கணங்கட்கு முதல்வனும், தன் திருவடியையே வணங்குவோர் விடாது பற்றுகின்ற சிறந்த துணைவனும், எனக்கு எளியவனாய் எதிர் வந்தவனும், அடியவரது பாவங்களைப் போக்கும் தொழிலை உடையவனும், யாவராலும் அடைதற்கு அரியவனும், செருக்கு மிக்கவர்களது மூன்று ஊர்கள் அழியுமாறு, திருமால் அம்பாகி நிற்க, வெற்றியைத் தரும் பெரிய மலையாகிய வில்லை அங்கையில் ஏந்திய தலைவனும் ஆகிய இறைவனை, அடியேன், திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.


பாடல் எண் : 02
அங்கம் ஆறும் மாமறை ஒரு நான்கும் 
ஆய நம்பனை வேய்புரை தோளி 
தங்கு மாதிரு உருவுடையானைத் 
தழல் மதிச் சடைமேல் புனைந்தானை
வெங்கண் ஆனையின் ஈருரி யானை 
விண்ணுளாரொடு மண்ணுளார் பரசும்
கொங்குலாம் பொழில் குரவெறி கமழும் 
கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

பாடல் விளக்கம்‬:
துணை நூல்களாகிய ஆறும், முதல் நூல்களாகிய வேதம் நான்கும் ஆகி நிற்கின்ற நம்பனும், மூங்கில் போலும் தோள்களையுடைய உமாதேவி பொருந்தியுள்ள, சிறந்த திருமேனியை யுடையவனும், ஒளிர்கின்ற பிறையைச் சடையின் மேற் சூடியவனும், சினத்தால் எரிகின்ற கண்களையுடைய யானையினது உரித்த தோலை யுடையவனும் ஆகிய இறைவனை, அடியேன், விண்ணில் உள்ளவர்களும், மண்ணில் உள்ளவர்களும் துதிக்கின்ற, தேன் பொருந்திய சோலையின்கண் குரா மலர்கள் மணங்கமழ்கின்ற திருக்கோலக்காவினில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.


பாடல் எண் : 03
பாட்டகத்து இசையாகி நின்றானைப் 
பத்தர் சித்தம் பரிவு இனியானை 
நாட்டகத்தேவர் செய்கை உளானை 
நட்டம் ஆடியை நம் பெருமானைக்
காட்டகத்துறு புலியுரி யானைக் 
கண்ணோர் மூன்றுடை அண்ணலை அடியேன் 
கோட்டகப் புனலார் செழுங் கழனிக் 
கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

பாடல் விளக்கம்‬:
பாட்டின்கண் இசைபோன்று எல்லாப் பொருளிலும் வேறறக் கலந்து நிற்பவனும், அடியார்களது உள்ளம் அன்பு செய்தற்கு இன்பமாகிய பயனாய் உள்ளவனும், மண்ணில் வாழும் தேவராகிய அந்தணர்களது வழிபாட்டின் கண் விளங்குகின்றவனும், நடனம் ஆடு பவனும், நமக்குத் தலைவனும், காட்டின்கண் வாழ்கின்ற புலியினது தோலை உடையவனும், கண்கள் மூன்று உடைய பெருமையுடையவனும் ஆகிய இறைவனை, அடியேன், வரம்பகத்து நீர் நிறைந்த செழுமையான வயல்களையுடைய திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.


பாடல் எண் : 04
ஆத்தம் என்று எனை ஆள் உகந்தானை 
அமரர் நாதனைக் குமரனைப் பயந்த 
வார்த் தயங்கிய முலைமட மானை 
வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த 
தீர்த்தனை சிவனை செழுந்தேனைத்
தில்லை அம்பலத்துள் நிறைந்து ஆடும் 
கூத்தனை குரு மாமணி தன்னைக்
கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

பாடல் விளக்கம்‬:
என்னை ஆளாகக் கொள்ளுதலே தனக்கு வாய்மை யாவது என்று கருதி என்னை அவ்வாறே விரும்பி ஆண்டருளினவனும், தேவர்கட்குத் தலைவனும், முருகனைப் பெற்ற கச்சின்கண் விளங்குகின்ற தனங்களையுடைய இளைய மான்போலும் தேவியை இடப்பாகத்தில் வைத்து, வானுலகத்தில் உள்ள கங்கையைச் சடையின் கண் மறைத்த தூயவனும், மங்கலம் உடையவனும், செழுமையான தேன்போல இனிப்பவனும், தில்லையம்பலத்துள் நிறைந்து நின்று ஆடுகின்ற கூத்தினை யுடையவனும், ஒளியையுடைய மாணிக்கம் போல்பவனும் ஆகிய இறைவனை, அடியேன், திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.


பாடல் எண் : 05
அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் 
ஆள் அது ஆக என்று ஆவணம் காட்டி
நின்று வெண்ணெய் நல்லூர்மிசை ஒளித்த 
நித்திலத் திரள் தொத்தினை முத்திக்கு 
ஒன்றினான் தனை உம்பர் பிரானை 
உயரும் வல்லரணம் கெடச் சீறும் 
குன்ற வில்லியை மெல்லியல் உடனே 
கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

பாடல் விளக்கம்‬:
அன்று அந்தணனாய்த் திருநாவலூரில் வந்து, அகன்ற இப்பூமியில் உள்ளார் பலர் முன்பும், "நீ எனக்குச் செய்யும் அடிமையைச் செய்க" என்று சொல்லி ஓலை காட்டி வழக்குப்பேசி நின்று, பின்பு, திருவெண்ணெய்நல்லூரில் சென்று மறைந்த, முத்தினது திரட்சியமைந்த கொத்துப் போல்பவனும், முத்தியளித்தற்குப் பொருந்தியவனும், தேவர்கட்குத் தலைவனும், உயர்ந்த வலிய மதில்கள் அழியுமாறு சினந்த, மலைவில்லை உடையவனும் ஆகிய இறைவனை, இறைவியுடனே, அடியேன் திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.


பாடல் எண் : 06
காற்றுத் தீப்புனலாகி நின்றானைக் 
கடவுளைக் கொடு மால்விடை யானை 
நீற்றுத் தீயுருவாய் நிமிர்ந்தானை 
நிரம்பு பல்கலையின் பொருளாலே 
போற்றித் தன்கழல் தொழுமவன் உயிரைப் 
போக்குவான் உயிர் நீக்கிடத் தாளால் 
கூற்றைத் தீங்குசெய் குரை கழலானைக் 
கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

பாடல் விளக்கம்‬:
காற்றும், தீயும், நீரும் ஆகி நிற்பவனும், எல்லாப் பொருள்களையும் கடந்தவனும், கொடிய பெரிய இடப ஊர்தியை யுடையவனும், நீற்றைத் தரும் நெருப்புருவாய் ஓங்கி நிற்பவனும், நிறைந்த பல நூல்களினது பொருள் வழியே துதித்துத் தன் திருவடியை வணங்குகின்ற அவனது உயிரைப் போக்குவோனது உயிர் நீங்கும்படி தனது திருவடியால் கூற்றுவனுக்கு அழிவைச் செய்த, ஒலிக்கின்ற கழலையணிந்தவனும் ஆகிய இறைவனை, அடியேன் திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.


பாடல் எண் : 07
அன்று அயன் சிரம் அரிந்து அதில் பலிகொண்டு 
அமரருக்கு அருள் வெளிப்படுத்தானைத்
துன்று பைங்கழலில் சிலம்பு ஆர்த்த 
சோதியை சுடர்போல் ஒளியானை
மின்தயங்கிய இடைமட மங்கை 
மேவும் ஈசனை வாசமா முடிமேல் 
கொன்றை அஞ்சடைக் குழகனை அழகார் 
கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

பாடல் விளக்கம்‬:
அன்று பிரமனது தலையை அரிந்து அதன்கண் பிச்சை ஏற்றுத் தேவர்கட்குத் தனது திருவருள் நிலையை வெளிப்படுத்தியவனும், நெருங்கிய பசிய கழலையணிதற்கு உரிய திருவடியில் சிலம்பையணிந்த ஒளிவடிவினனும், விளக்குப்போலும் விளக்கம் உடையவனும், மின்னலினது தன்மை விளங்கிய இடையினையுடைய இளமங்கை விரும்பும் கடவுளும், மணங்கமழுமாறு தலையின் மேல் கொன்றை மாலையையணிந்த அழகிய சடையை உடைய அழகனும் ஆகிய இறைவனை, அடியேன், அழகு நிறைந்த திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.


பாடல் எண் : 08
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் 
ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் 
தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும் 
தன்மை யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாட நின்றாடும் 
அங்கணன் தனை எண்கணம் இறைஞ்சும் 
கோளிலிப் பெருங்கோயில் உள்ளானைக் 
கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

பாடல் விளக்கம்‬:
எந்நாளும் இனிய இசையால் தமிழ்ப்பாடலை எங்கணும் பரவச்செய்த திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளுக்கு, அவர் தம் கைகளால் ஒற்றறுத்துப் பாடுதலுக்கு இரங்கி, பலருங் காணத் தாளம் ஈந்த கருணையாளனும், என் உள்ளத்துள் கொள்ளப்படும் பொருளாய் உள்ளவனும், தன்னால் ஆளப்படும் பூதங்கள் பாடல் களைப்பாட, அவற்றிற்கு ஏற்ப நின்று ஆடுகின்ற அருள் பொருந்திய கண்களையுடையவனும், பதினெண் கணங்களாலும் வணங்கப்படுபவனும், திருக்கோளிலியில் உள்ள பெருங்கோயிலில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவனை அடியேன், திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.


பாடல் எண் : 09
அரக்கன் ஆற்றலை அழித்து அவன் பாட்டுக்கு 
அன்று இரங்கிய வென்றியினானைப் 
பரக்கும் பார் அளித்து உண்டு உகந்தவர்கள் 
பரவியும் பணிதற்கு அரியானைச்
சிரக்கண் வாய் செவி மூக்கு உயர் காயம்
ஆகித் தீவினை தீர்த்த எம்மானைக்
குரக்கு இனம் குதி கொண்டு உகள் வயல்சூழ் 
கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

பாடல் விளக்கம்‬:
அன்று இராவணனது வலிமையை முதலில் அழித்து, பின்பு அவன் பாடிய இசைக்கு இரங்கி அருள்புரிந்த வெற்றியை யுடையவனும், விரிந்த உலகத்தைப் படைத்தும், உண்டும் களித்தவர்கள் துதித்துப் பணிதற்கும் அரியனாய் உள்ளவனும், தலையில் அமைந்த, `கண், வாய், காது, மூக்கு` என்பவற்றோடு, நீண்ட உடம்புமாய் நின்று, தீமையைத் தரும் வினையை ஒழித்த எம்பெருமானும் ஆகிய இறைவனை, அடியேன், சோலைகளில் குரங்குக் கூட்டம் குதித்துத் திரிகின்ற, வயல் சூழ்ந்த, திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.


பாடல் எண் : 10
கோடரம் பயில் சடையுடைக் கரும்பைக் 
கோலக்காவுள் எம்மானை மெய்ம் மானப் 
பாடரங்குடி அடியவர் விரும்பப் 
பயிலும் நாவல் ஆரூரன் வன்தொண்டன்
நாடிரங்கி முன் அறியும் அந்நெறியால் 
நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர் 
காடுரங்கு என நடம் நவின்றான்பாற் 
கதியும் எய்துவர் பதி அவர்க்கு அதுவே.

பாடல் விளக்கம்‬:
ஆலம் விழுது போலும் சடைகளையுடையவனும், கரும்பு போல இனிப்பவனும் ஆகிய, திருக்கோலக்காவில் எழுந்தருளியுள்ள எம் இறைவனை, உண்மையமைந்த பெரிய பாடல்களைப் பாடும் வழிவழி அடியவர் பலரும் விரும்புமாறு, அத்திருத்தொண்டிலே பழகும், திருநாவலூரில் தோன்றிய, வன்றொண்டனாகிய நம்பியாரூரன், உலகில் உள்ளவர் தாமும் மனம் உருகி அவனை முற்பட உணருமாற்றால் பாடிய பத்துப் பாடல்களாகிய இவைகளைப் பாடிய மாந்தர், காடே அரங்கமாக நடனம் செய்பவனாகிய சிவ பிரானிடத்து உயர்கதியையும் பெறுவர்; என்றும் நீடு வாழும் இடமும் அவர்க்கு அக்கதியேயாம்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருக்கோலக்கா திருமுறை திருப்பதிகம் முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

திருக்கோலக்கா திருமுறை திருப்பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சப்தபுரீஸ்வரர், ஸ்ரீ தாளபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஓசைகொடுத்த நாயகி, ஸ்ரீ த்வனிபிரதாம்பாள்

திருமுறை : முதல் திருமுறை 23 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

சீர்காழியில் பிறந்து வளர்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோலக்கா அல்லது திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கும் இத்தலத்தில் இருந்து தான் தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத் தொடங்கினார். சீர்காழியில் ஞானப்பாலுண்டு பதிகம் பாடத் தொடங்கிய சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் தனது முதல் தல யாத்திரையாக சென்றது இத்தலத்திற்குத் தான். தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இத்தலத்தில் இறைவனைத் துதித்து பதிகம் பாடினார். கைகள் வலிக்குமே என்று சம்பந்தருக்காக இரக்கப்பட்ட இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து அருளினார். இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். ஆதலின் இத்தலத்து அம்பிகைக்கு ஓசை கொடுத்த நாயகி என்று பெயர். சம்பந்தருக்கு பொற்றாளம் தந்த இறைவனை சுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

பிற்காலத்தில் இப்பகுதியில் தன் ஊமை மகன் பேசும் ஆற்றலைப் பெறவேண்டும் என்று, பிரார்த்தித்துக் கொண்ட தாய் ஒருத்தி, அவ்வாறே இறையருளால் தன் மகன் பேசும் வல்லமை வெற, மகிழ்ந்து, கோயிலுக்குத் தன் காணிக்கையாகச் செய்து தந்துள்ள "பொற்றாளம்" கோயிலில் உள்ளது. சீர்காழியில் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறும்போது இங்குத் தாளம் வழங்கும் ஐதீகவிழா நடைபெறுகிறது.

கோவில் அமைப்பு: மக்கள் வழக்கில் தாளமுடையார் கோவில் என்று அறியப்படும் கிழக்கு நோக்கி உள்ள இவ்வாலயத்திறகு கோபுரம் இல்லை. முகப்பு வாயிலுக்கு எதிரே திருக்குளம் ஆனந்ததீர்த்தம் உள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுதையில் ரிஷபாரூடர் தரிசனம் தருகிளார். கிழக்கு நோக்கி இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. முதல் நுழைவு வாயிலைக் கடந்தவுடன் திறந்த வெளிமுற்றம் உள்ளது. இரண்டாவது நுழைவு வாயில் வழியாக உட்புகுந்தவுடன் நேர் எதிரே பலிபீடம், நந்தி இவற்றைக் கடந்தால் இறைவன் சந்நிதி உள்ளது. உள்ளே சம்பந்தருக்கு பொற்தாளம் கொடுத்த இறைவன் தாளபுரீஸ்வரர் லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார். 

இந்திரன் மற்றும் சூரியன் இத்தலத்தில் இறைவன் சப்தபுரீஸ்வரரை வணங்கி வழிபட்டுள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைப் பிரகாரத்தின் மேற்குச் சுற்றில் கிழக்கு நோக்கிய வள்ளி தேவசேனாவுடன் இருக்கும் முருகர் சந்நிதி இருக்கிறது. மேற்குச் சுற்றில் முருகர் சந்நிதியை அடுத்து மகாலட்சுமி சந்நிதி உள்ளது. 

இத்தலத்தில் உள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். மகாலட்சுமி இங்கு சிவபெருமானை தவம் செய்து அதன் பயனாக மகாவிஷ்னுவை திருமணம் செய்து கொண்டாள். திருமகள் திருமணம் செய்து கொண்ட தலம் ஆதலால் திருகோலக்கா என்று இத்தலம் பெயர் பெற்றது. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் இங்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்தால் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்பது ஐதீகம். இறைவி ஓசைகொடுத்த நாயகியின் சந்நிதி ஒரு தனிக் கோவிலாக இறைவன் சந்நிதிக்கு இடது புறம் அமைந்துள்ளது. வெளிப் பிரகாரத்தின் வடக்குச் சுற்றில் உள்ள வாயில் வழியாக இறைவியின் சந்நிதியை அடையலாம்.

நன்றி shivatemples இணையதளத்திற்கு


பாடல் எண் : 01
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்
சடையும் பிறையும் சாம்பல் பூச்சும் கீள்
உடையும் கொண்ட உருவம் என்கொலோ.

பாடல் விளக்கம்‬:
நீரைத் தேக்கி வெளிவிடும் மடையில் வாளை மீன்கள் துள்ளிப் பாயுமாறு பெண்கள் கையால் குடைந்து நீராடும் பொய்கைகளை உடைய திருக்கோலக்காவில் எழுந்தருளியுள்ள இறைவன், சடைமுடியையும், அதன்கண் பிறையையும், திருமேனி முழுவதும் திருநீற்றுப்பூச்சையும் இடையில் ஆடையாகக் கீள் உடையையும் கொண்ட உருவம் உடையவனாய் இருப்பது ஏனோ?.


பாடல் எண் : 02
பெண்தான் பாகமாகப் பிறைச் சென்னி
கொண்டான் கோலக்காவு கோயிலாக்
கண்டான் பாதம் கையால் கூப்பவே
உண்டான் நஞ்சை உலகம் உய்யவே.

பாடல் விளக்கம்‬:
உமையம்மையைத் தன் திருமேனியில் இடப் பாதியாகக்கொண்டு, கலைகள் ஒன்றொன்றாகக் குறைந்து வந்த இளம் பிறையைச் சடைமுடி மீது ஏற்றுக் கொண்டவனாகிய சிவபிரான், கோலக்காவிலுள்ள கோயிலைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன். திருப்பாற்கடலில் நஞ்சு தோன்றியபோது காவாய் என அனைவரும் கைகூப்பி வணங்க உலகம் உய்யுமாறு அந்நஞ்சினை உண்டு அருளியவன்.


பாடல் எண் : 03
பூணற் பொறிகொள் அரவம் புன்சடைக்
கோணல் பிறையன் குழகன் கோலக்கா
மாணப் பாடி மறை வல்லானையே
பேணப் பறையும் பிணிகள் ஆனவே.

பாடல் விளக்கம்‬:
அழகிய புள்ளிகளை உடைய பாம்பை அணிகலனாகக் கொண்டு, சிவந்த சடையின்மேல் வளைந்த பிறைமதியைச் சூடிய, என்றும் மாறா இளமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளி விளங்கும் திருக்கோலக்காவை மாட்சிமை தங்கப் பாடி, வேதங்களை அருளிய அப்பெருமானைப் பேணித் தொழப் பிணிகளானவை நீங்கும்.


பாடல் எண் : 04
தழுக்கொள் பாவம் தளர வேண்டுவீர்
மழுக்கொள் செல்வன் மறிசேர் அம் கையான்
குழுக்கொள் பூதப்படையான் கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே.

பாடல் விளக்கம்‬:
பல்வேறு சமயங்களிலும் செய்த பாவங்கள் நீங்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களே! மழுவாயுதத்தைப் படைக்கலனாகக் கொண்ட செல்வனும், மானை ஏந்திய அழகியகையை உடையவனும், பூதங்களின் குழுக்களை உடையவனும் ஆகிய சிவபிரானது கோலக்காவைத் தவறாமல் சென்று தரிசித்து வாருங்கள். நும் பாவங்கள் அகலும்.


பாடல் எண் : 05
மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.

பாடல் விளக்கம்‬:
ஆண் மயில் போலும் கட்புலனாகிய மென்மையை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும், அசுரர்களின் முப்புரங்கள் கெடுமாறு அவற்றை எரித்தவனும் ஆகிய எம் தந்தையாகிய சிவபிரானது, குயில்கள் நிறைந்து வாழும் சோலைகளை உடைய திருக்கோலக்காவைப் பலகாலும் நினைக்கப் பாவங்கள் நீங்கும்.


பாடல் எண் : 06
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள் விழவார் கோலக்காவுள் எம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே.

பாடல் விளக்கம்‬:
ஒன்றிலிருந்து பிறிதொன்று கிளைக்கும் வினைப்பகையை நீக்கிக்கொள்ள விரும்புகின்றவர்களே! மணம் பொருந்திய கொன்றை மலர் விரவிய சென்னியை உடையோனும், கொடிகள் கட்டப்பெற்று விழாக்கள் பலவும் நிகழ்த்தப்பெறும் கோலக்காவில் விளங்கும் எம் தலைவனும் ஆகிய பெருமான் திருப்பாதங்களை அடைந்து வாழ்வீர்களாக.


பாடல் எண் : 07
நிழலார் சோலை நீலவண்டு இனம்
குழலார் பண்செய் கோலக்கா உளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கல் துயரம் இல்லையே.

பாடல் விளக்கம்‬:
நிழல் செறிந்த சோலைகளில் நீல நிறம் பொருந்திய வண்டினங்கள் வேய்ங்குழல் போல இசை வழங்கும் திருக்கோலக்காவில் விளங்கும் சிவபிரானுடைய வீரக்கழல் செறிந்த திருவடிகளைக் கைகூப்பித் தொழுபவர் பக்கம் துயரம் வாராது.


பாடல் எண் : 08
எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்தனை
முறையார் தடக்கை அடர்த்த மூர்த்தி தன்
குறியார் பண்செய் கோலக்காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.

பாடல் விளக்கம்‬:
அலைகள் எறியும் கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னனாகிய இராவணனை, அவன் நீண்ட கைகள் முரிதலைப் பொருந்துமாறு அடர்த்த சிவபிரானைச் சுரத்தானங்களைக் குறித்த பண்ணிசையால் கோலக்காவில் சிவாகம நெறிகளின்படி வழிபடுவார் வினைகள் நீங்கும்.


பாடல் எண் : 09
நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்
ஆற்றலணை மேலவனும் காண்கிலா
கூற்றம் உதைத்த, குழகன் கோலக்கா
ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே.

பாடல் விளக்கம்‬:
மணம் பொருந்திய தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும், ஆற்றல் பொருந்திய ஆதிசேடனாகிய அணையில் உறங்கும் திருமாலும் காணுதற்கு இயலாத, இயமனை உதைத்த குழகன் ஆகிய கோலக்காவில் விளங்கும் ஆன்ஏற்றை வாகனமாகக் கொண்ட இறைவன் திருவடிகளைப் போற்றி வாழ்வீர்களாக.


பாடல் எண் : 10
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்
உற்ற துவர் தோய் உருவிலாளரும்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவ பறையும் பாவமே.

பாடல் விளக்கம்‬:
நீராடாமல் தம் உடலிற் சேர்ந்த மாசுடன் தோன்றும் சமணரும், தம் உடலிற் பொருந்திய கல்லாடையால் தம் உருவை மறைத்துக் கொள்ளும் புத்தர்களும், குற்றமுடைய சமய நெறியை மேற்கொண்டவராவர். அவர்கள் தம் தெய்வம் என்று ஏற்றுக் கொள்ளாத கோலக்கா இறைவனைப் பற்றிப்போற்றப் பாவம் தீரும்.


பாடல் எண் : 11
நலங்கொள் காழி ஞானசம்பந்தன்
குலங்கொள் கோலக்கா உளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.

பாடல் விளக்கம்‬:
இயற்கை நலங்கள் யாவும் நிறைந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், பண்பால் உயர்ந்த குலத்தினரைக் கொண்டுள்ள கோலக்காவில் விளங்கும் இறைவனைப் பாடிய திருவருள் வென்றியைக் கொண்ட இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபடவல்ல வாய்மையாளர், மலைபோலும் திண்ணிய வினைகள் நீங்கப்பெற்றுச் சிறந்து வாழ்வர்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

வியாழன், 12 மே, 2016

திருப்பல்லவனீச்சுரம் திருமுறை திருப்பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பல்லவனேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சௌந்தர நாயகி

திருமுறை : மூன்றாம் திருமுறை 112 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
பரசு பாணியர் பாடல் வீணையர் 
பட்டினத்துறை பல்லவனீச்சுரத்து
அரசுபேணி நின்றார் இவர் தன்மை அறிவார் யார்

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் மழுப்படையைக் கையில் ஏந்தியவர். வீணையில் பாட்டிசைப்பவர். காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் ஆட்சி புரிந்து அருள்புரிபவர். இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார்? ஒருவரும் அறியார். 


பாடல் எண் : 02
பட்டநெற்றியர் நட்டமாடுவர் 
பட்டினத்துறை பல்லவனீச்சுரத்து
இட்டமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் யார்

பாடல் விளக்கம்‬:
தலைமைப் பட்டத்திற்குரிய அடையாள அணிகலன் அணிந்த நெற்றியர். திருநடனம் செய்பவர். காவிரிப்பூம் பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார்?.


பாடல் எண் : 03
பவளமேனியர் திகழும் நீற்றினர் 
பட்டினத்துறை பல்லவனீச்சுரத்து
அழகராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் யார்

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் பவளம் போன்ற சிவந்த மேனியுடையவர், ஒளிபொருந்திய திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவர். காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் அழகர். இவரது தன்மை எத்தன்மையது என்பதை யாவரே அறிவார்?.


பாடல் எண் : 04
பண்ணில் யாழினர் பயிலும் மொந்தையர் 
பட்டினத்துறை பல்லவனீச்சுரத்து
அண்ணலாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் யார்

பாடல் விளக்கம்‬:
இறைவன் பண்ணிசைக்கும் யாழினை உடையவர். மொந்தை என்னும் வாத்தியத்தை வாசிப்பவர். காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் தலைவர். இவரது தன்மை எத்தகையது என்பதை யார் அறிவார்?.


பாடல் எண் : 05
பல்லில் ஓட்டினர் பலி கொண்டு உண்பவர் 
பட்டினத்துறை பல்லவனீச்சுரத்து
எல்லியாட்டு உகந்தார் இவர் தன்மை அறிவார் யார்

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் பற்களே இல்லாத மண்டையோட்டில் பிச்சையேற்று உண்பவர். காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர். இரவில் நடனம் ஆடுதலை விரும்புபவர். இவர் தன்மை யார் அறிவார்?.


பாடல் எண் : 06
பச்சை மேனியர் பிச்சை கொள்பவர் 
பட்டினத்துறை பல்லவனீச்சுரத்து
இச்சையாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் யார்

பாடல் விளக்கம்‬:
சிவபெருமான் பச்சைநிறம் கொண்ட திருமேனி உடையவர். பிச்சையேற்று உண்பவர். காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். இவர் தன்மை யார் அறிவார்?.


பாடல் எண் : 07
பைங்கண் ஏற்றினர் திங்கள் சூடுவர் 
பட்டினத்துறை பல்லவனீச்சுரத்து
எங்குமாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் யார் 

பாடல் விளக்கம்‬:
இறைவன் பசிய கண்களையுடைய எருதின்மேல் ஏறுபவர். பிறைச்சந்திரனை சூடியுள்ளவர். காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளினாலும், எங்கும் வியாபித்துள்ளவர். இவர் தன்மை யார் அறிவார்?.


பாடல் எண் : 08
பாதம் கைதொழ வேதம் ஓதுவர் 
பட்டினத்துறை பல்லவனீச்சுரத்து
ஆதியாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் யார் 

பாடல் விளக்கம்‬:
தம் திருவடிகளைக் கைகளால் தொழுது உலகத்தினர் நன்மையடையும் பொருட்டு வேதங்களைச் சிவபெருமான் அருளிச்செய்தார். காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தியாய் இருப்பவர். இவரது தன்மையை யார் அறிவார்?.


பாடல் எண் : 09
படிகொள் மேனியர் கடிகொள் கொன்றையர்
பட்டினத்துறை பல்லவனீச்சுரத்து
அடிகளாய் இருப்பார் இவர் தன்மை அறிவார் யார்

பாடல் விளக்கம்‬:
இறைவன் உலகம் முழுவதையும் தம் திருமேனியாகக் கொண்டவர். நறுமணம் கமழும் கொன்றை மாலையை அணிந்துள்ளவன். காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன். இவன் தன்மை யார் அறிவார்?.


பாடல் எண் : 10
பறைகொள் பாணியர் பிறைகொள் சென்னியர் 
பட்டினத்துறை பல்லவனீச்சுரத்து
இறைவராய் இருப்பார் இவர் தன்மை அறிவார் யார்

பாடல் விளக்கம்‬:
இறைவன் பறை என்னும் இசைக்கருவியை உடையவன். பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்துள்ளவன். காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் யாவர்க்கும் தலைவனாய் விரும்பி வீற்றிருந்தருளுபவன். இவர் தன்மை யார் அறிவார்?.


பாடல் எண் : 11
வானம் ஆள்வதற்கு ஊனம் ஒன்று இலை மாதர் 
பல்லவனீச் சுரத்தானை
ஞானசம்பந்தன் நற்றமிழ் சொல்ல வல்லவர் நல்லவரே.

பாடல் விளக்கம்‬:
அழகிய காவிரிப்பூம்பட்டினப் பல்லவனீச்சரத்து இறைவனைப் போற்றி, ஞானசம்பந்தன் அருளிய இந்நற்றமிழ்த் திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் நற்குணங்கள் வாய்க்கப் பெறுவர். அவர்கள் மறுமையில் வானுலகை ஆள்வதற்குத் தடையொன்றுமில்லை. 

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருப்பல்லவனீச்சுரம் திருமுறை திருப்பதிகம் முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

திருப்பல்லவனீச்சுரம் திருமுறை திருப்பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பல்லவனேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சௌந்தர நாயகி

திருமுறை : முதல் திருமுறை 65 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

பல்லவனீச்சரம் என்னும் இத்தலம் இன்று காவிரிப்பூம்பட்டினம் - பூம்புகார் என்று வழங்கப்படுகிறது. பட்டினத்தாரின் அவதாரப் பதி. இயற்பகை நாயனார் அவதரித்து சிவத்தொண்டாற்றிய திருப்பதி. இத்தலத்திற்கு அருகில்தான் காவிரி நதி வங்காள விரிகுடா கடலுடன் சங்கமிக்கிறது. இந்த சங்கமமே இத்தலத்தின் தீர்த்தமாகும். காலவ மகரிஷி இத்தலத்தில் சிவனை வழிபட்டுள்ளார்.


இங்கு சிவனுக்கு பிரம்மோற்ஸவம் கிடையாது. பட்டினத்தாருக்காகே விழா எடுக்கப்படுகிறது. பட்டினத்தார் திருவிழா 12 நாட்கள் நடக்கிறது. விழாவின் 10ம் நாளில் பட்டினத்தாருக்கு, சிவன் மோட்சம் தரும் நிகழ்ச்சி பெரியளவில் நடக்கும். பட்டினத்தார் இங்கிருந்து திருத்தல யாத்திரை மேற்கொண்டு, தொண்டை நாட்டுத் தலமான திருவொற்றியூரில் முக்தி பெற்றார். காவிரிப்பூம்பட்டினத்தில் பிறந்தவர் என்பதால் இவர் "பட்டினத்தார்" என்றழைக்கப்பட்டார்.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இரண்டு பதிகங்களும் 1 மற்றும் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. 1-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ள பதிகத்தில் காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தின் சிறப்புகளைப் குறிப்பிட்டு, அத்தகைய தலத்திலுறையும் இறைவனைப் பற்றி தான் பாடிய பதிகத்தை மனம் ஒன்றிச் சொல்லி வழிபடும் மக்கள், தீ வினையும், நோயும் இல்லாதவராய், அமைந்த ஒப்புடையவர் என்று கூறத் தேவர் உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வர் என்று குறிப்பிடுகிறார்.

சம்பந்தர் பதிகம் பாடிய காலத்தில் பல்லவனீச்சரம் எப்படி இருந்தது என்று தன் பதிகத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வாயில்களோடு கூடிய மாடவீடுகள் எங்கும் உயர்ந்து விளங்குவதும், வான வெளியைத் தடவும் மதில்களால் சூழப்பட்டதும், நன்கு அமைக்கப்பட்ட சோலைகளில் அழகிய வண்டுகள் நாள்தோறும் தேனுண்டு இசைபாடும், ஆழமான கடலினது வெள்ள நீரால் தானும்மேலே உயர்ந்துள்ள நீர் நிலையாகிய பொய்கைகளில் தாமரை மலர்கள் பூத்திருக்கும், போர் செய்யத் தகுதியான கூரிய வேல் போலும் கண்களையுடைய மாதர்களும் இளைஞர்களும் கூடி இசை பாடுதலால் அதனைக் கேட்க மக்கள் வெள்ளம் போல் திரண்டிருப்பர், மேகங்கள் வந்து அழுந்தி முகக்கும் கடல், கிளர்ந்து எழும் காலங்களிலும் அழியாது உணரப்படும் சிறப்பினதும், மக்கள் அக்குமணிமாலை பூண்டு போற்றி வாழும் பெருமையுடையது, பழியற்ற நன்மக்கள் வாழும் இடம் என்று புகார் என்கிற பல்லவனீச்சரத்தைப் பற்றி பாடுகிறார்.

சீர்காழி - பூம்புகார் (காவிரிப்பூம்பட்டிணம்) சாலையில் இந்த சிவஸ்தலம் உள்ளது. பூம்புகாருக்குள் நுழையும்போது, எல்லையில் உள்ள கண்ணகி வளைவைத் தாண்டியதும் சாலை ஓரத்திலேயே கோயில் உள்ளது. சீர்காழி மற்றும் மயிலாடுதுறையில் இருந்து காவிரிப்பூம்பட்டிணம் செல்ல பேருந்து வசதிகள் இருக்கின்றன.

நன்றி shivatemples இணையதளத்திற்கு


பாடல் எண் : 01
அடையார் தம் புரங்கள் மூன்றும் ஆரழலில் அழுந்த
விடையார் மேனியராய்ச் சீறும் வித்தகர் மேயவிடம்
கடையார் மாடம் நீடியெங்கும் கங்குல் புறந்தடவப்
படையார் புரிசைப் பட்டினஞ்சேர் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
பகைவராய அசுரர்களின் திரிபுரங்கள் தாங்குதற்கரிய அழலில் அழுந்துமாறு விடைமிசை ஏறிவரும் திருமேனியராய்ச் சென்று சினந்த வித்தகராகிய சிவபிரான் மேவிய இடம், வாயில்களோடு கூடிய மாடவீடுகள் எங்கும் உயர்ந்து விளங்குவதும், வான வெளியைத் தடவும் மதில்களால் சூழப்பட்டதும் ஆகிய காவிரிப் பூம்பட்டினத்தைச் சேர்ந்த திருப்பல்லவனீச்சரமாகும்.


பாடல் எண் : 02
எண்ணார் எயில்கள் மூன்றும் சீறும் எந்தை பிரான் இமையோர்
கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்ணுதல் நண்ணுமிடம்
மண்ணார் சோலைக் கோலவண்டு வைகலும் தேன் அருந்திப்
பண்ணார் செய்யும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
பகைவராய அசுரர்களின் கோட்டைகளாய திரி புரங்களைச் சினந்தழித்த எந்தையாகிய பெருமானும், தேவர்களின் கண்களாய் விளங்குவோனும், இவ்வுலகைக் காக்கின்ற கண்ணுதலும் ஆகிய சிவபிரான் மேவிய இடம், நன்கு அமைக்கப்பட்ட சோலைகளில் அழகிய வண்டுகள் நாள்தோறும் தேனுண்டு இசைபாடும் காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.


பாடல் எண் : 03
மங்கை அங்கோர் பாகமாக வாள் நிலவார் சடைமேல்
கங்கை அங்கே வாழவைத்த கள்வன் இருந்த இடம்
பொங்கயஞ்சேர் புணரி ஓதம் மீதுயர் பொய்கையின் மேல்
பங்கயஞ்சேர் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு ஒளி பொருந்திய பிறை தங்கிய சடையின்மேல் கங்கை நங்கையையும் வாழ வைத்துள்ள கள்வனாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், மிக்க ஆழமான கடலினது வெள்ள நீரால் தானும்மேலே உயர்ந்துள்ள நீர் நிலையாகிய பொய்கைகளில் தாமரை மலர்கள் பூத்துள்ள காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.


பாடல் எண் : 04
தாரார் கொன்றை பொன் தயங்கச் சாத்திய மார்பகலம்
நீரார் நீறு சாந்தம் வைத்த நின்மலன் மன்னுமிடம்
போரார் வேற்கண் மாதர் மைந்தர் புக்கிசை பாடலினால்
பாரார்கின்ற பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
மாலையாகக் கட்டிய கொன்றை மலர்கள் பொன் போல் விளங்குமாறு சூட்டியுள்ள மார்பின் பரப்பில், நீரில் குழைத்த சாம்பலைச் சந்தனத்தைப் போலப் பூசியுள்ள குற்றமற்ற சிவபிரான் எழுந்தருளிய இடம், போர்செய்யத் தகுதியான கூரிய வேல் போலும் கண்களையுடைய மாதர்களும் இளைஞர்களும் கூடி இசை பாடுதலால் அதனைக் கேட்க மக்கள் வெள்ளம்போல் திரண்டுள்ள காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.


பாடல் எண் : 05
மைசேர் கண்டர் அண்டவாணர் வானவரும் துதிப்ப
மெய்சேர் பொடியர் அடியார் ஏத்த மேவி இருந்த இடம்
கைசேர் வளையார் விழைவினோடு காதன்மையால் கழலே
பைசேர் அரவார் அல்குலார் சேர் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
கருமை நிறம் பொருந்திய கண்டத்தினை உடைய வரும், மண்ணக மக்களும் விண்ணகத் தேவரும் துதிக்க மேனிமிசைத் திருநீறுபூசியவனும் ஆகிய நிமலன், அடியவர் புகழ மேவியிருந்தருளும் இடம், கைகளில் மிகுதியான வளையல்களை அணிந்தபாம்பின் படம் போன்ற அல்குலை உடைய இளமகளிர் விழைவோடும் காதலோடும் திருவடிகளை வழிபடச் சேர்கின்ற திருப்பல்லவனீச்சரமாகும்.


பாடல் எண் : 06
குழலின் ஓசை வீணை மொந்தை கொட்ட முழவதிரக்
கழலின் ஓசை ஆர்க்க ஆடும் கடவுள் இருந்த இடம் 
சுழியிலாரும் கடலில் ஓதம் தெண்திரை மொண்டெறியப்
பழியிலார்கள் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
குழலோசைக்கு ஏற்ப வீணை, மொந்தை ஆகியன முழங்கவும், முழவு ஒலிக்கவும், காலில் அணிந்துள்ள வீரக்கழல் நடனத்துக்கு ஏற்பச் சதங்கை போல இசைக்கவும் ஆடும் கடவுளாகிய சிவபிரான் எழுந்தருளிய இடம், சுழிகள் பொருந்திய கடலில் காவிரி வெள்ளநீர் தெளிந்த நீரை முகந்து எறியுமாறு விளங்குவதும், பழியற்ற நன்மக்கள் வாழ்வதுமான புகார் நகரிலுள்ள பல்லவனீச்சரமாகும்.


பாடல் எண் : 07
வெந்தலாய வேந்தன் வேள்வி வேரறச் சாடி விண்ணோர்
வந்தெலாம் முன் பேண நின்ற மைந்தன் மகிழ்ந்த இடம்
மந்தலாய மல்லிகையும், புன்னைவளர் குரவின்
பந்தலாரும் பட்டினத்துப் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
தகுதி இல்லாத மிக்க கூட்டத்தை உடைய தக்கன் என்னும் வேந்தன் செய்த வேள்வியை அடியோடு அழித்துத் தேவர்கள் எல்லோரும் வந்து தன்னை விரும்பி வழிபட நின்ற பெருவீரனாகிய சிவபிரானது இடம், மென்மையான மல்லிகை, வளர்ந்து பரவியுள்ள புன்னை குரா மரம் ஆகியவற்றில் படர்ந்துள்ள, காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரமாகும்.


பாடல் எண் : 08
தேர் அரக்கன் மால்வரையைத் தெற்றி எடுக்க அவன்
தார் அரக்கும் திண் முடிகள் ஊன்றிய சங்கரனூர்
கார் அரக்கும் கடல் கிளர்ந்த காலமெலாம் உணர
பார் அரக்கம் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
சிறந்த தேரை உடைய இராவணன் பெருமை மிக்க கயிலை மலையைக் கைகளைப்பின்னி அகழ்ந்து எடுக்க, மாலைகள் அழுத்தும் அவனது திண்ணிய தலைகள் பத்தையும் கால் விரலால் ஊன்றி நெரித்த சங்கரனது ஊர், மேகங்கள் வந்து அழுந்தி முகக்கும் கடல், கிளர்ந்து எழும் காலங்களிலும் அழியாது உணரப்படும் சிறப்பினதும், மக்கள் அக்குமணிமாலை பூண்டு போற்றி வாழும் பெருமையுடையதுமாகிய, புகார் நகரைச் சேர்ந்த பல்லவனீச்சரமாகும்.


பாடல் எண் : 09
அங்கம் ஆறும் வேதம் நான்கும் ஓதும் அயன் நெடுமால்
தம் கணாலும் நேடநின்ற சங்கரன் தங்குமிடம்
வங்கம் ஆரும் முத்தம் இப்பி வார்கடல் ஊடு அலைப்ப
பங்கமில்லார் பயில் புகாரில் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
ஆறு அங்கங்களையும், நான்கு வேதங்களையும், முறையே ஓதும் பிரமனும், திருமாலும் தம் கண்களால் தேருமாறு உயர்ந்து நின்ற சங்கரன் தங்கும் இடம், மரக்கலங்களை உடைய கடல் முத்துக்களையும் சங்கங்களையும் அலைக்கரங்களால் அலைத்துத் தருவதும், குற்றமற்றோர் வாழ்வதுமாய புகாரில் அமைந்துள்ள பல்லவனீச்சரம் ஆகும்.


பாடல் எண் : 10
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார்
கண்டு உடுக்கை மெய்யில் போர்த்தார் கண்டறியாத இடம்
தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார்
பண்டு இடுக்கண் தீர நல்கும் பல்லவனீச்சுரமே.

பாடல் விளக்கம்‬:
அளவுக்கு மீறி உண்டு ஆடையின்றி ஊரார் சிரிக்கத் திரியும் சமணர்களும், அவர்களைக் கண்டு தாமும் அவ்வாறு திரியாது ஆடையை மெய்யில் போர்த்து உழலும் புத்தர்களும் கண்டு அறியாத இடம், தண்டு, உடுக்கை, தாளம், தக்கை இவை பொருந்த நடனம் புரிபவராய், அடியவர் இடுக்கண்களைப் பண்டு முதல் தீர்த்தருளிவரும் பரமனார் எழுந்தருளிய பல்லவனீச்சரமாகும்.


பாடல் எண் : 11
பத்தர் ஏத்தும் பட்டினத்துப் பல்லவனீச்சுரத்து எம்
அத்தன் தன்னை அணிகொள் காழி ஞானசம்பந்தன் சொல்
சித்தஞ்சேரச் செப்பும் மாந்தர் தீவினை நோயிலராய்
ஒத்தமைந்த உம்பர்வானில் உயர்வினொடு ஓங்குவரே.

பாடல் விளக்கம்‬:
பக்தர்கள் போற்றும் காவிரிப் பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில் விளங்கும் எம் தலைவனாகிய இறைவனை அழகிய சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய இப்பதிகச் செழுந்தமிழை மனம் ஒன்றிச் சொல்லி வழிபடும் மக்கள், தீவினையும் நோயும் இல்லாதவராய், அமைந்த ஒப்புடையவர் என்று கூறத் தேவர் உலகில் உயர்வோடு ஓங்கி வாழ்வர்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||