செவ்வாய், 7 ஜூன், 2016

திருக்கானப்பேர் திருமுறை திருப்பதிகம் 02

(காளையார்கோயில்)

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ காளீஸ்வரர், ஸ்ரீ சோமேஸ்வரர், ஸ்ரீ சுந்தரேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சொர்ணவல்லி, ஸ்ரீ சௌந்தர நாயகி, ஸ்ரீ மீனாட்சி

திருமுறை : ஏழாம் திருமுறை 84 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


பாடல் எண் : 01
தொண்டர் அடித்தொழலும் சோதி இளம்பிறையும் 
சூதன மென்முலையாள் பாகமும் ஆகிவரும் 
புண்டரிகப் பரிசாம் மேனியும் வானவர்கள் 
பூசலிடக் கடல் நஞ்சுண்ட கருத்தமரும்
கொண்டல் எனத் திகழும் கண்டமும் எண்தோளும் 
கோல நறுஞ்சடைமேல் வண்ணமும் கண்குளிரக் 
கண்டு தொழப்பெறுவது என்று கொலோ அடியேன்
கார் வயல்சூழ் கானப்பேர் உறை காளையையே.

பொருளுரை:
அடியேன், மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த "திருக்கானப்பேர்" என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற காளை வடிவத்தினனாகிய பெருமானை, அவனது அடியவர்கள் வணங்குகின்ற திருவடியையும், ஒளியையுடைய இளைய பிறைச்சூட்டினையும், சூதாடு கருவிபோலும், மெல்லிய தனங்களையுடைய உமையவளது கூறாய் விளங்கும் இடப்பாகத்தையும், ஒளிவிடுகின்ற செந்தாமரை மலர்போலும் திருமேனியையும், தேவர்கள் ஓலமிட, அதற்கு இரங்கிக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட நினைவுக்குறி நீங்காதிருக்கின்ற மேகம்போல விளங்குகின்ற கண்டத்தையும், எட்டுத்தோள்களையும், அழகிய நல்ல சடையின்மேல் உள்ள அணிகளையும் கண்குளிரக் கண்டு வணங்கப் பெறுவது எந்நாளோ!.


பாடல் எண் : 02
கூதலிடும் சடையும் கோளரவும் விரவும் 
கொக்கு இறகும் குளிர்மா மத்தமும் ஒத்துனதாள் 
ஓதல் உணர்ந்து அடியார் உன் பெருமைக்கு நினைந்து 
உள்ளுருகா விரசும் ஓசையைப் பாடலும் நீ 
ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன் 
அங்கையின் மாமலர் கொண்டு என் கணது அல்லல் கெடக்
காதலுற தொழுவது என்று கொலோ அடியேன் 
கார் வயல்சூழ் கானப்பேர் உறை காளையையே.

பொருளுரை:
மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த "திருக்கானப்பேர்" என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற காளை வடிவுடைய தலைவனை, அடியேன் என்பால் உள்ள துன்பங்களெல்லாம் கெடுமாறு, அடியவர் உனது பெருமைகளை நினைந்து மனம் உருகி, செறிந்த இசையைப் பாடுதலும், அவர் நீயேயாகும் பேற்றைப் பெறுதலை உணர்ந்து, அவரோடு அன்பு மிகுந்து, உனது திருவடியை மனம் பொருந்திப் பாடுமாற்றைக் கற்று, உனது குளிர்மிகுந்த சடை முடியையும், அதன்கண் பொருந்திய கொடிய பாம்பையும், கொக்கிறகையும், குளிர்ந்த ஊமத்த மலரையும், அன்பு மேலும் மேலும் பெருகுமாறு, அகங்கையிற் சிறந்த மலர்களைக் கொண்டு வணங்கப் பெறுவது எந்நாளோ!.


பாடல் எண் : 03
நானுடை மாடெனவே நன்மை தரும் பரனை 
நற்பதம் என்று உணர்வார் சொற்பதமார் சிவனைத்
தேனிடை இன்னமுதை பற்று அதனில் தெளிவைத் 
தேவர்கள் நாயகனைப் பூவுயர் சென்னியனை
வானிடை மாமதியை மாசுறு சோதியனை 
மாருதமும் அனலும் மண்டலமும்மாய
கானிடை மாநடனென் என்று எய்துவது என்று கொலோ
கார் வயல்சூழ் கானப்பேர் உறை காளையையே.

பொருளுரை:
நான் உடைமையாகப் பெற்றுள்ள செல்வம்போல எனக்கு நன்மையைத் தருகின்ற மேலானவனும், தன்னையே வீடு பேறாக உணர்பவரது சொல்நிலையில் நிறைந்து நிற்கும் மங்கல குணத்தினனும், தேனிடத்தும், அதன் தெளிவிடத்தும் உள்ள சுவை போல்பவனும், தேவர்களுக்குத் தலைவனும், பூக்கள் உயர்ந்து தோன்றுகின்ற முடியை உடையவனும், வானத்தில் உள்ள சிறந்த சந்திரனும், குற்றம் அற்ற ஒளியையுடைய கதிரவனும், காற்றும், தீயும், நிலமும் ஆகி நிற்பவனும் ஆகிய மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த "திருக்கானப்பேர்" என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவத்தினனாகிய பெருமானை, "காட்டில் சிறந்த நடனம் ஆடுபவன்" என்று சொல்லித் துதித்துத் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!.


பாடல் எண் : 04
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலைத் தொழிலார் 
சேவகம் முன் நினைவார் பாவகமும் நெறியும்
குற்றமில் தன்னடியார் கூறும் இசைப்பரிசும் 
கோசிகமும் அரையில் கோவணமும் அதளும்
தன்னடியார் திண்புயமும் மார்பிடை நீறுதுதை 
மாமலை மங்கையுமை சேர் சுவடும் புகழக் 
கற்றனவும் பரவிக் கைதொழல் என்று கொலோ 
கார் வயல்சூழ் கானப்பேர் உறை காளையையே.

பொருளுரை:
மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த, "திருக்கானப்பேர்" என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெருமானை அவனது பகைத்தவரது முப்புரங்களை அன்று அழித்த, வில்தொழில் பொருந்திய வீரத்தையும் தன்னை நினைவாரது நினைவின் வண்ணம் நிற்கும் நிலையையும், அவர்களை நடத்துகின்ற முறையையும், குற்றமில்லாத அவனது அடியார்கள் சொல்லுகின்ற புகழின் வகைகளையும், அரையில் உடுக்கின்ற கோவணமும், பட்டும், தோலும் ஆகிய உடைகளையும், வலிமை விளங்குகின்ற திண்ணிய தோள்களையும், நீறு செறிந்த மார்பின்கண், பெருமையையுடைய மலைமகள் தழுவியதனால் உண்டாகிய வடுவினையும், அடியேன், புகழ்ந்து பாடக்கற்றன பலவற்றாலும் துதித்துக் கைகூப்பி வணங்குதல் எந்நாளோ!.


பாடல் எண் : 05
கொல்லை விடைக் குழகும் கோல நறுஞ்சடையில் 
கொத்து அலரும் இதழித் தொத்தும் அதனருகே 
முல்லை படைத்த நகை மெல்லியலால் ஒருபால் 
மோகம் மிகுத்து இலங்கும் கூறுசெய் எப்பரிசும்
தில்லை நகர்ப் பொதுவுற்று ஆடிய சீர் நடமும் 
திண்மழுவும் கைமிசைக் கூர் எரியும் அடியார் 
கல்லவடப் பரிசும் காணுவது என்று கொலோ 
கார் வயல்சூழ் கானப்பேர் உறை காளையையே.

பொருளுரை:
மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த, "திருக்கானப்பேர்" என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானது, முல்லை நிலத்திற்கு உரிய விடையினது அழகையும், அழகிய நல்ல சடையின் கண் கொத்தாய் உள்ள பூக்களையும், மார்பில் கொன்றை மலரின் மாலையையும், அதன் அருகே ஒரு பாகத்தில், முல்லை அரும்பின் தன்மையைக் கொண்ட நகையினையும், மெல்லிய இயல்பினையும் உடையவளாகிய உமாதேவி, காதலை மிகுதியாகக்கொண்டு விளங்குகின்ற அப்பகுதி தருகின்ற எல்லாத் தன்மைகளையும், தில்லை நகரில் உள்ள சபையிற் பொருந்தி நின்று ஆடுகின்ற புகழையுடைய நடனத்தையும், கையில் உள்ள வலிய மழு, மிக்க தீ என்னும் இவற்றையும், அடியவர் சாத்தும் மணிவடத்தின் அழகையும் காண்பது எந்நாளோ!.


பாடல் எண் : 06
பண்ணு தலைப் பயனார் பாடலும் நீடுதலும் 
பங்கய மாதனையார் பத்தியும் முத்தி அளித்து 
எண்ணு தலைப்பெருமான் என்று எழுவார் அவர்தம் 
ஏசறவும் இறையாம் எந்தையையும் விரவி 
நண்ணு தலைப்படும் ஆறு எங்ஙனம் என்று அயலே 
நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும் 
கண்ணு தலைகனியைக் காண்பதும் என்று கொலோ 
கார் வயல்சூழ் கானப்பேர் உறை காளையையே.

பொருளுரை:
தாமரை மலரில் உள்ள திருமகளைப் போலும் மகளிரது, யாழை முறைப்படி யமைத்தலைப் பயன்படச் செய்கின்ற பாடலின் சிறப்பையும், அதன்கண்ணே அவர்கள் நெடிது நிற்றலையும், அதற்கு ஏதுவாகிய அவர்களது பத்தியையும், தான் ஒருவனே வீடு பேற்றை அளித்தலால், அதனை விரும்புவோர் யாவராலும் உள்ளத்து இருத்தப்படுகின்ற முதற்கடவுள் என்று தன்னை நினைந்து துயிலெழுகின்ற மெய்யுணர்வுடையோர், அதன் பொருட்டு அவன் முன் வாடி நிற்கும் வாட்டத்தினையும், யாவர்க்கும் இறைவனாகிய என் தந்தையையும் ஒருங்கு காணுதலைப் பொருந்துமாறு எவ்வாறு என்று, சேய்மையில் நின்று வருந்துகின்ற என்னையும் பொருளாக நினைந்து உய்தி பெறும்படி அருள்செய்யும் கண்ணுதற் கடவுளும், கனிபோல இனிப்பவனும் ஆகிய, மிக்க நீரையுடைய "திருக்கானப்பேர்" என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெருமானை அடியேன் காணப்பெறுவதும் எந்நாளோ!.


பாடல் எண் : 07
மாவை உரித்து அதள் கொண்டு அங்கம் அணிந்தவனை 
வஞ்சர் மனத்து இறையும் நெஞ்சு அணுகாதவனை
மூவர் உருத்தனதாம் மூல முதற்கருவை
மூசிடு மால்விடையின் பாகனை ஆகமுறப் 
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை 
பால் நறுநெய் தயிர் ஐந்தாடு பரம்பரனைக்
காவல் எனக்கு இறையென்று எய்துவது என்று கொலோ 
கார் வயல்சூழ் கானப்பேர் உறை காளையையே.

பொருளுரை:
யானையை உரித்து அத்தோலைப் போர்வையாகக் கொண்டு, எலும்பை மாலையாக அணிந்தவனும், வஞ்சனையுடைய வரது மனத்தின்கண் தனது நெஞ்சினாலும் சிறிதும் அணுகாதவனும், மும்மூர்த்திகளது உருவமும் தன் உருவமே யாகின்ற முதல்முதற் காரணனும், `மூசு` என்னும் ஒலியுண்டாக உயிர்க்கின்ற பெரிய இடபத்தை நடத்துகின்றவனும், போலியாகவன்றி உண்மையாகவே தன்னை மனத்துட் பொருந்தப் பற்றுகின்ற அவர்கட்கு அமுதம் போல்பவனும், பால், நறுநெய், தயிர் முதலிய ஐந்திலும் மூழ்குகின்றவனும், மேலோர்க்கெல்லாம் மேலானவனும் ஆகிய மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த, `திருக்கானப்பேர்' என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெருமானை, அடியேன், எனக்குக் காவலனாகிய தலைவனாகக் கிடைக்கப்பெறுவது எந்நாளோ!.


பாடல் எண் : 08
தொண்டர் தமக்கு எளிய சோதியை வேதியனைத் 
தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல் நஞ்சு 
உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை 
ஊழி படைத்தவனோடு ஒள் அரியும் உணரா 
அண்டனை அண்டர் தமக்கு ஆகம நூல்மொழியும் 
ஆதியை மேதகுசீர் ஓதியை வானவர்தம் 
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்று கொலோ 
கார் வயல்சூழ் கனப்பேர் உறை காளையையே.

பொருளுரை:
அடியார்களுக்கு எளிய ஒளியுருவினனும், வேதத்தை ஓதுபவனும், அத்தூய வேதத்தின் பொருளாய் உள்ள நீதி வடிவினனும், நீண்ட கடலில் எழுந்த நஞ்சினை உண்டு, அதனால் இறவாது எக்காலத்தும் இருப்பவனும், பல கற்பங்களில் உலகத்தைப் படைப்பவனாகிய பிரமனும், அழகிய திருமாலும் அறிய வொண்ணாத தேவனும், தேவர்களுக்கு ஞானநூலைச் சொல்லிய முதல்வனும். தேவர்களது கூற்றில் உள்ளவனும், தனது மேலான தகுதியையுடைய புகழைப் பலரானும் சொல்லப்படுபவனும் ஆகிய, மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த, "திருக்கானப்பேர்" என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெருமானை அடியேன், அன்போடு சென்று அடையப்பெறுவது எந்நாளோ.


பாடல் எண் : 09
நாதனை நாதம் மிகுந்த ஓசையது ஆனவனை 
ஞான விளக்கொளியாம் ஊனுயிரைப் பயிரை 
மாதனை மேதகு தன்பத்தர் மனத்து இறையும் 
பற்று விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத்
தூதனை என்தனையாள் தோழனை நாயகனைத் 
தாழ் மகரக் குழையும் தோடும் அணிந்ததிருக்
காதனை நாயடியேன் எய்துவது என்று கொலோ 
கார் வயல்சூழ் கானப்பேர் உறை காளையையே.

பொருளுரை:
உலகிற்குத் தலைவனும், நுண்ணிய எழுத்தோசையும், பரியதாகிய இசையோசையுமாயும், ஞானமாகிய விளக்கினது ஒளியாயும், உடம்பின்கண் உள்ள உயிரும்! நிலத்தில் வளரும் பயிருமாயும் நிற்பவனும், மாதொரு பாகத்தை உடையவனும். மேலான தகுதியையுடைய, தன் அடியார்களது உள்ளத்தின்மேல் வைத்துள்ள பற்றினைச் சிறிதும் நீங்காதவனும், குற்றம் இல்லாத கொள்கையையுடையவனும், என்னைத் தன் தொண்டினிடத்து ஆளுகின்ற என் தூதனும், தோழனும், தலைவனும் ஆகியவனும், தாழத் தூங்குகின்ற மகரக் குழையையும் தோட்டையும் அணிந்த அழகிய காதினையுடையவனும் ஆகிய, மிக்க நீரையுடைய, "திருக்கானப்பேர்" என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெருமானை, நாய்போலும் அடியேன் தலைக்கூடப்பெறுவது எந்நாளோ!.


பாடல் எண் : 10
கன்னலை இன்னமுதை கார் வயல்சூழ் கானப்
பேருறை காளையை ஒண் சீருறை தண் தமிழால்
உன்னி மனத்தயரா உள்ளுருகி பரவும் 
ஒண்பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன் 
பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார் 
பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ
மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும் 
மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே.

பொருளுரை:
கரும்பும், இனிய அமுதமும் போல்பவனாகிய, மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த, "திருக்கானப்பேர்" என்னுந் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெருமானை, "எய்துவது என்று கொலோ" என்று நினைந்து மனம் உளைந்து, உளம் உருகி, அழகிய, புகழ் பொருந்திய, தண்ணிய தமிழால் துதிக்க முயன்ற அழகிய சோலைகளையுடைய திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இவ்விசைப் பாடல்கள் பத்தினையும் பாடவல்லவர்கள், சிவனடியார்க்கு உள்ள இயல்புகள் அனைத்தையும் எய்தி, எல்லாத் திசைகளும் புகழ நெடிது வாழ்ந்து, பின்பு ஒருகால் பிறவி எய்துவாராயினும், மண்ணுலகிற்குத் தலைவராய் வாழ்தல் திண்ணம்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருக்கானப்பேர் திருமுறை திருப்பதிகம் முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

திருக்கானப்பேர் திருமுறை திருப்பதிகம் 01

(காளையார்கோயில்)

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ காளீஸ்வரர், ஸ்ரீ சோமேஸ்வரர், ஸ்ரீ சுந்தரேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சொர்ணவல்லி, ஸ்ரீ சௌந்தர நாயகி, ஸ்ரீ மீனாட்சி

திருமுறை : முன்றாம் திருமுறை 26 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
பிடியெலாம் பின்செலப் பெருங்கைமா மலர்தழீஇ
விடியலே தடமூழ்கி விதியினால் வழிபடும்
கடியுலாம் பூம்பொழில் கானப்பேர் அண்ணல் நின்
அடியலால் அடைசரண் உடையரோ அடியரே.

பொருளுரை:
பெண் யானைகள் பின்தொடர, பெரிய தும்பிக்கையுடைய ஆண் யானையானது, விடியற்காலையிலேயே குளத்தில் மூழ்கி, மலர்களை ஏந்தி விதிமுறைப்படி வழிபடுகின்ற நறுமணம் கமழும் பூஞ்சோலையுடைய திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளையன்றி, அடியவர்கள் சரணம் புகுவதற்கு யாது உள்ளது.


பாடல் எண் : 02
நுண்ணிடைப் பேரல்குல் நூபுர மெல்லடிப்
பெண்ணின் நல்லாளையோர் பாகமாப் பேணினான்
கண்ணுடை நெற்றியான் கருதிய கானப்பேர்
விண்ணிடை வேட்கையார் விரும்புதல் கருமமே.

பொருளுரை:
நுண்ணிய இடையையும், பெரிய அல்குலையும், சிலம்பணிந்த மென்மையான பாதங்களையும் உடைய பெண்ணின் நல்லாளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்ட நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தை, விண்ணுலகை ஆளும் விருப்பமுடையவர்கள் விரும்பி ஏத்துதல் கடமையாகும்.


பாடல் எண் : 03
வாவிவாய்த் தங்கிய நுண்சிறை வண்டினம்
காவிவாய்ப் பண்செயும் கானப்பேர் அண்ணலை
நாவிவாய்ச் சாந்துளும் பூவுளும் ஞானநீர்
தூவிவாய்ப் பெய்து நின்று ஆட்டுவார் தொண்டரே.

பொருளுரை:
பகலில் குளத்திலுள்ள தாமரை மலர்களில் தங்கித் தேனைப் பருகிய வண்டினம், இரவில் அப்போது மலரும் நீலோற்பல மலரை அடைந்து தேனுண்ட மகிழ்ச்சியில் பண்ணிசைக்க விளங்கும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை, கஸ்தூரி என்னும் மான், புழுகுப்பூனை இவற்றிலிருந்து பெறப்படும் வாசனைப்பொருள், சந்தனம், புனித நீர் முதலியன கொண்டு அடியவர்கள் திருமுழுக்காட்டி, மலர்தூவி அர்ச்சித்துப் போற்றி வழிபடுவர்.


பாடல் எண் : 04
நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளும்
கறையுடை மிடற்று அண்ணல் கருதிய கானப்பேர்
குறையுடை அவர்க்கலாற் களைகிலார் குற்றமே.

பொருளுரை:
திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நஞ்சுண்ட கறுத்த கண்டத்தையுடைய சிவபெருமானை, மனத்தைப் பொறிவழி ஓடாது ஒருமுகப்படுத்தி நிறுத்திய நெஞ்சுடன், பூவும் நீரும் கொண்டு, முழவு முழங்க, இறைவனின் புகழைப்பாடி நைவேத்தியம் செய்து வழிபடுகின்ற மெய்யடியார்களுக்கு அல்லாது ஏனையோர்களுக்குக் குறைகள் தீருமோ.


பாடல் எண் : 05
ஏனப்பூண் மார்பின்மேல் என்பு பூண்டு ஈறிலா
ஞானப் பேராயிரம் பேரினான் நண்ணிய
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீதிலர்
வானப்பேர் ஊர் புகும் வண்ணமும் வல்லரே.

பொருளுரை:
பன்றிக்கொம்பை ஆபரணமாக அணிந்த மார்பின்மேல், எலும்பு மாலையும் அணிந்து, அழிவில்லாத சிவஞானம் தருகின்ற திருநாமம் ஆயிரம் கொண்டு திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தினை விரும்பித் தொழும் அடியவர்கள் தீவினைகளற்றவர் ஆவர். தேவர்களின் நகரமான அமராவதியை அடையும் சிறப்புடையவர் ஆவர்.


பாடல் எண் : 06
பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்த நீர்
வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான்
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்கும் என் உள்ளமே.

பொருளுரை:
பள்ளம் போன்ற படர்ந்த சடையில், வெள்ளம் போலப் பாய்ந்த கங்கையைத் தாங்கி வெண்ணிறச் சந்திரனையும் சூடினான் சிவபெருமான். கள்ளம் என்பதை அறியாது வெள்ளை உள்ளத்துடன் இறைவனை வழிபடுகின்ற, திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்திலுள்ள மெய்யடியார்களின் உள்ளத்தில் இறைவன் விளங்குவதால், அவ்வடியவர்களின் திருவுள்ளத்தைக் கோயிலாக நினைத்து என் மனம் வழிபடும்.


பாடல் எண் : 07
மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்
கானமார் கடகரி வழிபடும் கானப்பேர்
ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெட எண்ணில்
ஞானமாம் மலர்கொடு நணுகுதல் நன்மையே. 

பொருளுரை:
பெரிய பெண் யானை தன் வலியகையால் அலகிடக் கானகத்திலுள்ள மதமுடைய பெரிய ஆண் யானையானது வழிபடுகின்ற திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்திலுள்ள இறைவனை, குற்றமுடைய இவ்வுடம்பிலுள்ள உயிரைப் பிணித்துள்ள ஆணவமாகிய நோய் தீர ஞானமாகிய மலர்கொண்டு மனம், வாக்கு, காயத்தால் வழிபட நன்மைகள் உண்டாகும.


பாடல் எண் : 08
வாளினான் வேலினான் மால்வரை எடுத்த திண்
தோளினான் நெடுமுடி தொலையவே ஊன்றிய
தாளினான் கானப்பேர் தலையினால் வணங்குவார் 
நாளும் நாள் உயர்வதோர் நன்மையைப் பெறுவரே.

பொருளுரை:
வாட்போர் வலியாலும், வேற்படைப் பயிற்சியாலும், பெரிய கயிலை மலையை எடுத்த வலிமை வாய்ந்த தோள்களை உடைய இராவணனின் நீண்டமுடிகள் நலியுமாறு, பெருவிரலை ஊன்றிய திருவடிகளையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தைத் தலையால் வணங்கும் அடியவர்கள் நாளுக்கு நாள் உயர்நிலை அடைந்து எல்லா நலன்களையும் பெறுவார்கள்.


பாடல் எண் : 09
சிலையினால் முப்புரம் தீயெழச் செற்றவன்
நிலையிலா இருவரை நிலைமை கண்டு ஓங்கினான்
கலையினார் புறவில் தேன் கமழ்தரு கானப்பேர்
தலையினால் வணங்குவார் தவம் உடையார்களே.

பொருளுரை:
மேருமலையை வில்லாகக் கொண்டு முப்புரத்தைத் தீப்பற்றும்படி செய்து அழித்த சிவபெருமான், நிலையிலா பிரமன், திருமால் இவர்களின் செருக்கைக் கண்டு அவர்கள் காணாத வண்ணம் நெருப்பு மலையாய் ஓங்கி நின்றான். அழகிய குறிஞ்சியும், முல்லையும் சார்ந்த நிலமான, தேன் மணம் கமழத் திகழும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தைத் தொழுது போற்றுபவர்கள் தவமுடையவர்கள் ஆவர்.


பாடல் எண் : 10
உறித்தலைச் சுரையொடு குண்டிகை பிடித்து உச்சி
பறித்தலும் போர்த்தலும் பயனிலை பாவிகாள்
மறித்தலை மடப்பிடி வளர் இளங் கொழுங்கொடி
கறித்தெழு கானப்பேர் கைதொழல் கருமமே.

பொருளுரை:
உறியினிடத்துச் சுரைக் குடுக்கை, கமண்டலம் இவற்றைத் தாங்கிக் கையில் பிடித்து அலையும், இறைவனை உணராத பாவிகளாகிய சமணர், புத்தர்கள் முறையே செய்யும் தலையிலுள்ள முடிகளைப் பறித்தலும், காவியாடை போர்த்தலும் ஆகிய செயல்களால் பயனில்லை. மடமையுடைய பெண் யானையும் வளர்கின்ற இளங்கொழுங்கொடியும் போன்ற உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தைக் கைகூப்பித் தொழுவது நம் கடமையாகும்.


பாடல் எண் : 11
காட்டகத்து ஆடலான் கருதிய கானப்பேர்
கோட்டகத்து இளவரால் குதிகொளும் காழியான்
நாட்டகத்து ஓங்கு சீர் ஞானசம்பந்தன்
பாட்டகத்து இவை வலார்க்கு இல்லையாம் பாவமே. 

பொருளுரை:
சுடுகாட்டில் ஆடுகின்ற சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தை, இளவரால் மீன்கள் துள்ளிப்பாயும் நீர்நிலைகளையுடைய வளமையான சீகாழி என்னும் நகரில் அவதரித்த மிகுந்த புகழுடைய ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தால் போற்ற வல்லவர்கட்குப் பாவம் இல்லை. (அவர்கள் பாவத்திற்குக் காரணமான தீவினைகளைலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர்).

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

ஸ்ரீ காளீஸ்வரர் திருக்கோவில் திருக்கானப்பேர்

(காளையார்கோயில்)

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ காளீஸ்வரர், ஸ்ரீ சோமேஸ்வரர், ஸ்ரீ சுந்தரேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சொர்ணவல்லி, ஸ்ரீ சௌந்தர நாயகி, ஸ்ரீ மீனாட்சி

கோவில் அமைப்பு: இவ்வாலயம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் 157 அடி உயரம் கொண்ட 9 நிலை இராஜகோபுரம், மற்றும் 5 நிலை கொண்ட மற்றொரு கோபுரம் ஆக இரண்டு கோபுரங்களுடன் கிழக்கு நோக்கி விளங்குகிறது. இவைகளில் சிறிய கோபுரம் முதலாம் சுந்தரபாண்டியனாலும், பெரிய இராஜகோபுரம் மருது சகோதரர்களாலும் கட்டப்படவையாகும். இரண்டு பிரகாரங்களைக் கொண்ட இக்கோவில் மூன்று இறைவன் சந்நிதிகளைக் கொண்டு தனித்தனியே விளங்குகிறது.


மூன்று சந்நிதிகளில் நடுவே இருப்பவர் சுவர்ணகாளீசுவரர். இவரே இத்தலத்தின் தேவாரப் பாடல் பெற்ற மூர்த்தியாவார். வலது பக்கத்தில் இருப்பவர் சோமேசுவரர். இடது பக்கத்தில் இருப்பவர் சுந்தரேசர் கோவில் செத்துக்கள் யாவும் சுவர்ணகாளீசுவரர் பெயரில் தான் உள்ளன. விழாக்காலங்களில் சோமேசுவரர் கோவில் மூர்த்திகள் தான் வீதியுலா வருவர். படையல் நிவேதனம் முதலியவைகள் சுந்தரேசுவரருக்குத் தான் நடைபெறும். இவ்வாறு சுவர்ணகாளீஸ்வரர் கோயிலில் மூன்று சிவன், மூன்று அம்பாள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இறைவன் சந்நிதிகள் மூன்றும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இறைவி சுவர்ணவல்லி சந்நிதி சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மற்ற இரண்டு அம்பாள் சந்நிதிகளும் தெற்கு நோக்கி அமைந்துள்ளன.


தல வரலாறு: சண்டாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவம் நீங்க காளி இத்தலத்தை அடைந்து இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி சிவபெருமானை வழிபட்டாள். பின் காளி தனது கரிய உருவமும், அசுரனைக் கொன்ற பாவமும் நீங்கப்பெற்று சுவர்ணவல்லியாக உருமாறி காளீசுவரரை திருமணம் புரிந்து கொண்ட தலம் திருக்கானப்பேர் என்ற காளையார்கோவில்.

ஐராவதம் வழிபட்டது: இந்திரனின் வாகனமான ஐராவத யானை, மகரிஷி ஒருவரால் தரப்பட்ட பிரசாத மாலையைத் தரையில் வீசி எறிந்தது. இதனால் சாபம் பெற்ற அந்த யானை, சாப நிவர்த்திக்காக இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டது. தன் தந்தத்தால் பூமியைக் கீறி ஒரு பள்ளத்தை உண்டாக்கி தீர்த்தமெடுத்து இறைவனை வழிபட்டு தனது சாபம் நீங்கி தேவலோகம் சென்றது. யானை உண்டாக்கிய பள்ளத்தில் தண்ணீர் பெருகி, ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு யானை மடு (கஜபுஷ்கரணி) என்று பெயர். இத்தீர்த்தம் என்றும் வற்றாத நிலையில் இருக்கிறது. சதுர வடிவில் உள்ள இந்த தீர்த்தக்குளத்தின் நடுவில் அழகான நீராழி மண்டபம் அமைந்துள்ளது. இராமபிரான் ராவணனை அழித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க இத்தீர்த்தத்தில் நீராடியதாக ஸ்கந்த புராணத்தில் உள்ளது. இந்த கஜபுஷ்கரணி தீர்த்தம் கோவிலுக்கு வெளியே கோபுரங்களுக்கு எதிரிலுள்ளது.


இத்தலத்திலுள்ள சிவகங்கை தீர்த்தம் காளி தனது வழிபாட்டிற்காக உருவாக்கியதாகும். மேலும் விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் முதலிய தீர்த்தங்களும் உள்ளன. தலவிருட்சமாக கொக்குமந்தாரை விளங்குகிறது. இத்தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி என்று தலபுராணம் கூறுகிறது.. 

இத்தல இறைவனை வணங்கினால் பூர்வ ஜென்ம பாவம் விலகும். இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை போக்க பல சிவாலயங்களை தரிசித்து வந்தபோது இத்தலம் வந்தவுடன் ஆயிரம் சிவாலயங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைத்ததாக உணர்ந்தான். இதன் அடிப்படையிலேயே இங்கு சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தங்கத்தால் ஆன பள்ளியறை இங்குள்ளது மற்றொரு சிறப்பம்சம்.


இத்தலத்திலுள்ள பெரிய இராஜகோபுரத்தைப் பற்றி ஒரு வரலாறு உண்டு. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கும் மருதுபாண்டிய சகோதரர்களுக்கும் மூண்ட போரில் தப்பித்த மருது சகோதரர்கள் காட்டில் ஒளிந்து இருந்தனர். மருதுபாண்டிய சகோதரர்களைக் கைது செய்ய எண்ணிய ஆங்கிலேயர், அவர்கள் வந்து சரணடையாவிட்டால் இந்த பெரிய கோபுரத்தை இடித்துவிடப் போவதாகப் பறை சாற்றினர். காட்டில் திரிந்து வாழ்ந்து கொண்டிருந்த மருதுபாண்டியர் இதையறிந்து கோபுரத்தைக் காக்க விரும்பி தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் வந்து சரணடைந்து, பின்னர் வெள்ளையரால் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்றனர்.


சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமானுடன் தலயாத்திரை செய்த போது திருச்சுழியல் தலத்திற்கு வந்தார். அங்கு இறைவனை வழிபட்டுவிட்டு இரவு தங்கினார். இரவில் அவர் கனவில் காளை வடிவம் தாங்கிக் கையில் பொற்செண்டு பிடித்துத் கொண்டு திருமுடியில் சுழியும் அணிந்து காட்சி தந்த இறைவன் "யாம் இருப்பது கானப்பேர்" எனக்கூறி மறைந்தார். கண் விழித்த சுந்தரர், சேரர் பெருமானுடன் இத்தலத்திற்கு வந்து பணிந்து பதிகம் பாடிப் பரவினார். கானப்பேர் திருத்தலத்தில் காளை வடிவில் குடியிருக்கும் இறைவனே என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார். இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.

திருக்காணப்பேர் தற்போது காளையார்கோவில் என்று வழங்கப்படுகிறது. இத்தலம் சிவகங்கையில் இருந்து தொண்டி செல்லும் சாலையில் சுமார் 20 கி.மி. தொலைவில் உள்ளது. சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மதுரை ஆகிய ஊர்களிலிருந்து இத்தலத்திற்குப் பேருந்து வசதிகள் உள்ளன.

நன்றி shivatemples இணையதளத்திற்கு


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

புதன், 1 ஜூன், 2016

திருநின்றியூர் திருமுறை திருப்பதிகம் 04

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மகாலட்சுமிநாதர், ஸ்ரீ லக்ஷ்மிபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ லோகநாயகி

திருமுறை : ஏழாம் திருமுறை 65 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


பாடல் எண் : 01
திருவும் வண்மையும் திண்திறல் அரசும் சிலந்தியார் செய்த செய்பணி கண்டு
மருவு கோச்செங்கணான் தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலரடி அடைந்தேன்
பெருகு பொன்னி வந்து உந்து பன்மணியைப் பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணி
தெருவும் தெற்றியும் முற்றமும் பற்றி திரட்டும் தென்திரு நின்றியூரானே.

பொருளுரை:
பெருகி வருகின்ற காவிரியாற்றின் நீர், கொணர்ந்து தள்ளிய பல மணிகளை, சிறுமகாரது பல குழுக்கள், விளையாட்டிற் சென்று எடுத்து, தெருக்களிலும், திண்ணைகளிலும், முற்றங்களிலும் குவிக்கின்ற, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, நீ, சிலந்தி செய்த செய்கைத் தொண்டினைக் கண்டு, அதன் மறுபிறப்பாய் வந்த கோச்செங்கட் சோழ நாயனார்க்கு, செல்வத்தையும், கொடைத் தன்மையையும், திண்ணிய ஆற்றலை உடைய அரசாட்சியையும் அளித்த செய்தியைக் கேட்டு, அடியேன் உனது மலர் போலும் திருவடியைப் புகலிடமாக அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.


பாடல் எண் : 02
அணிகொள் ஆடையம் பூணணி மாலை அமுது செய்த அமுதம் பெறு சண்டி
இணைகொள் ஏழெழு நூறிரு பனுவல் ஈன்றவன் திருநாவினுக்கு அரையன்
கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற காதல் இன்னருள் ஆதரித்து அடைந்தேன்
திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியும் செல்வத் தென்திரு நின்றியூரானே.

பொருளுரை:
திணை வரையறையைக் கொண்ட செவ்விய தமிழைப் பசிய கிளிகள் ஆராய்ந்து சொல்லுகின்ற, செல்வத்தையுடைய, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, உன்பால், பாலைக் கொணர்ந்து ஆட்டி, அழகினைக் கொண்ட ஆடை, அழகிய அணிகலம், சூடுகின்ற மாலை, திருவமுது என்னும் இவற்றைப் பெற்ற சண்டேசுர நாயனாரும், தனக்குத்தானே நிகராய் உள்ள பாடல்கள் நாலாயிரத்துத் தொள்ளாயிரத்தை அருளிச் செய்தவராகிய திருநாவுக்கரசரும், அம்பைக் கையிலே கொண்ட கண்ணப்ப நாயனாரும் பெற்ற, அன்பின் பயனாகிய இனிய திருவருளை விரும்பி, அடியேன் உனது திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.


பாடல் எண் : 03
மொய்த்த சீர் முந்நூற்று அறுபது வேலி மூன்று நூறு வேதியரொடு நுனக்கு 
ஒத்த பொன்மணிக் கலசங்கள் ஏந்தி ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்பப்
பத்தி செய்த அப்பரசுராமற்குப் பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன்
சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வத் தென்திரு நின்றியூரானே.

பொருளுரை:
சித்தர், தேவர், அசுரர், ஆகியோர் வணங்குகின்ற, செல்வத்தையுடைய, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, உன்னிடத்து அன்பு செய்த பரசுராமன் உனக்கு மிக்க புகழையுடைய முந்நூறு வேதியரோடு, முந்நூற்றறுபது வேலிப் பரப்புள்ள நிலத்தை, என்றும் விளங்கும் `திருநின்றியூர்` என்று பெயரிட்டு ஏற்புடைய பொன்னாலாகிய அழகிய கலசங்களைக் கொண்டு நீர் வார்த்து அளிக்க, அவனுக்கு உன் திருவடியை அளித்த முறைமையை அறிந்து, அடியேன், உனது திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.


பாடல் எண் : 04
இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன்முலைக் கலசங்கள் ஏந்திச்
சுரபி பால் சொரிந்து ஆட்டி நின்பாதம் தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டு
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து, நுன் பாதத்தை அடைந்தேன்
நிரவி நித்திலம் அத்தகு செம்பொன் அளிக்கும் தென்திரு நின்றியூரானே.

பொருளுரை:
மேலானவனே, நெற்பயிர்கள் முத்துக்களைப் பரப்பி, அம்முத்துக்களோடு ஒத்து மதிப்புடைய செம்பொன்போலும் நெற்களை அளிக்கின்ற திருநின்றியூரில் உள்ள இறைவனே, உன்னை, பசு ஒன்று, சூரியனது நீண்ட ஒளி தோன்றுவதற்கு முன்பே எழுந்து, தன் மடியாகிய கலசத்தை ஏந்திப் பால் சொரிந்து வழிபட்டு நின் திருவடியை அடைந்த செய்தியை உறுதிப்படக் கேட்டு, அடியேன், உனது திருவடியை நினைத்துத் துதித்து, பற்றுக்களை எல்லாம் விடுத்து வந்து அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள்.


பாடல் எண் : 05
வந்தோர் இந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடு நீ ஆள்க என அருளிச்
சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்திச் சகளி செய்து இறைஞ்சு அகத்தியர் தமக்குச் 
சிந்து மாமணி அணி திருப்பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவும் செல்வத் தென்திரு நின்றியூரானே.

பொருளுரை:
செவ்விய தண்ணிய சிறந்த தாமரை மலரின்கண் இருக்கும் திருமகள் வாழும், செல்வத்தையுடைய, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, இந்திரன் ஒருவன், உன்னிடத்து வந்து உன்னை வழிபட, அதற்கு மகிழ்ந்து, அவனுக்கு, `நீ விண்ணுலகை ஆள்க` என்று சொல்லி வழங்கிய தலைமையையும், `காலை, நண் பகல், மாலை` என்னும் மூன்று சந்திகளிலும், இலிங்க உருவத்தை நிறுவி, கலையுருவத்தை அமைத்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு அருவிகள் மணிகளைச் சிதறுகின்ற, அழகிய திருப்பொதியில் மலையில் வீற்றிருக்க அருளிய பெருமையையும் அறிந்து, அடியேன், உனது திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.


பாடல் எண் : 06
காது பொத்தரைக் கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயம்
கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக் கோல ஆல்நிழற் கீழறம் பகர
ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு நின் இணையடி அடைந்தேன்
நீதி வேதியர் நிறை புகழ் உலகில் நிலவு தென்திரு நின்றியூரானே.

பொருளுரை:
நீதியையுடைய அந்தணர்கள் நிறைந்திருத்தலால் உளதாகிய புகழ், உலக முழுதும் விளங்குகின்ற அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, கேள்வியால் துளைக்கப்பட்ட செவியினையுடைய நால்வர் முனிவர்கள் `கின்னரர், புலி, கடிக்கும் இயல்புடைய பாம்பு, பற்றுதற்கு அரிய சிங்கம், குற்றம் அற்ற பெரிய தவத்தவர் குழாம்` என்ற இவருடன் இருந்து கேட்ப, நீ, அழகிய ஆல் நிழலில் இருந்து, அறத்தின் உண்மைகளை எல்லாம் சொல்ல, அவற்றைக் கேட்டுப் பின்பு வேதங்களை இயற்றி அவர்கள் அடைந்த இன்பத்தினைக் கேட்டறிந்து, அடியேனும், உனது திருவடியிணையை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.


பாடல் எண் : 07
கோடு நான்குடைக் குஞ்சரங் குலுங்க நலங்கொள் பாதம் நின்று ஏத்திய பொழுதே 
பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின் பொன்கழல் அடைந்தேன்
பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும் பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார் 
நீடு மாடங்கள் மாளிகை தோறும் நிலவு தென்திரு நின்றியூரானே.

பொருளுரை:
பெண் மயில்கள் போலவும், இளைய பெண் மான்கள் போலவும், இளைய கிளிகள் போலவும், பிறைபோலும் நெற்றியையுடைய மகளிர், உயர்ந்த மாடங்களையுடைய மாளிகை தோறும் விளங்குகின்ற, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, நான்கு கொம்புகளையுடைய யானை, உன்முன் நின்று, தனது உடல், அன்பினால் நடுங்கத் துதித்தபொழுதே, முன்னை வடிவத்தையும், விண்ணுலகத்தை அடையும் பெருமையையும் பெற்ற தன்மையைக் கேட்டு அடியேன், உனது பொன்போலும் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.


இப்பதிகத்தில் மீதமுள்ள செய்யுட்கள் சிதைந்து போயிற்று.


குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருநின்றியூர் திருமுறை திருப்பதிகம் முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

திருநின்றியூர் திருமுறை திருப்பதிகம் 03

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மகாலட்சுமிநாதர், ஸ்ரீ லக்ஷ்மிபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ லோகநாயகி

திருமுறை : ஏழாம் திருமுறை 19 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


இத்திருப்பதிகம் இறைவரது பெருமைகள் பலவற்றையும் எடுத்தோதி, அவர் திருநின்றியூரை இடமாகக் கொண்டு எழுந்தருளியிருத்தலை வியந்து அருளிச் செய்தது.

பாடல் எண் : 01
அற்றவனார் அடியார் தமக்கு ஆயிழை பங்கினராம்
பற்றவனார் எம் பராபரர் என்று பலர் விரும்பும் 
கொற்றவனார் குறுகாதவர் ஊர்நெடு வெஞ்சரத்தால் 
செற்றவனார்க்கு இடமாவது நம் திருநின்றியூரே.

பொருளுரை:
பிற பற்றுக்களின்றித் தம் அடியையே பற்றும் அரிய அடியவர்க்குத் தாமும் அவர்க்கு அருளுதலையன்றி வேறு செயலற்றவராய் இருப்பவரும், பெண்ணொரு பாகத்தராகின்ற பற்றினை உடைய வரும் "எம் இறைவர்" என்று பலராலும் விரும்பப்படுகின்ற தலைவரும், பகைவருடைய ஊரினை, பெரிய, கொடிய அம்பினால் அழித்தவரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே.


பாடல் எண் : 02
வாசத்தினார் மலர்க் கொன்றை உள்ளார் வடிவார்ந்த நீறு 
பூசத்தினார் புகலிந்நகர் போற்றும் எம் புண்ணியத்தார்
நேசத்தினால் என்னை ஆளும் கொண்டார் நெடுமால் கடல்சூழ் 
தேசத்தினார்க்கு இடமாவது நம் திருநின்றியூரே.

பொருளுரை:
மணம் நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவரும், அழகிய திருநீற்றைப் பூசுதலுடையவரும், சீகாழிப் பதியை உறைவிடமாகக் கொண்டு பாதுகாக்கின்ற புண்ணிய வடிவினரும், அருள் காரணமாக என்னை ஆளாகவும் கொண்டவரும், நீண்ட பெரிய கடல் சூழ்ந்த உலகத்தை உடையவரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது, நமது திருநின்றியூரே.


பாடல் எண் : 03
அங்கையின் மூவிலை வேலர் அமரர் அடிபரவச்
சங்கையை நீங்க அருளித் தடங்கடல் நஞ்சம் உண்டார்
மங்கையொர் பாகர் மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல் 
செங்கயல் பாயும் வயல் பொலியும் திருநின்றியூரே.

பொருளுரை:
அகங் கையில் மூவிலை வேலை (சூலத்தை) உடையவரும், தேவர்கள் தம் திருவடிகளைத் துதிக்க, அவர்கள் தம் மனக்கலக்கத்தை நீங்குமாறு அருள் சுரந்து, பெரிய கடலினின்றும் தோன்றிய நஞ்சினை உண்டவரும் ஆகிய இறைவர், உமாதேவியை ஒரு பாகத்தில் மகிழ்ச்சியுடன் வைத்து எழுந்தருளியிருக்கின்ற இடம், வளப்பம் நிறைந்த மிக்க நீரின் கண் செவ்விய கயல்கள் துள்ளுகின்ற வயல்கள் விளங்கும் திருநின்றியூரே.


பாடல் எண் : 04
ஆறு உகந்தார் அங்கம் நான்மறையார் எங்குமாகி அடல் 
ஏறு உகந்தார் இசை ஏழ் உகந்தார் முடிக் கங்கை தன்னை 
வேறு உகந்தார் விரிநூல் உகந்தார் பரி சாந்தமதா 
நீறு உகந்தார் உறையும் இடமாம் திரு நின்றியூரே.

பொருளுரை:
வேதத்தின் ஆறு அங்கங்களை விரும்பிச் செய்தவரும், நான்கு வேதங்களையும் உடையவரும், எவ்விடத்தும் நிறைந்து நின்று, வெல்லுதலை உடைய எருதை விரும்பி ஏறுபவரும், ஏழிசைகளையும் விரும்பிக் கேட்பவரும், கங்கா தேவியைச் சிறப்பாக விரும்பித் தலையில் மறைத்து வைத்திருப்பவரும், அகன்ற முப்புரி நூலை விரும்பி அணிபவரும், பூசிக்கொள்கின்ற சாந்தமாக திருநீற்றை விரும்புகின்றவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருநின்றியூரே.


பாடல் எண் : 05
வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லார் நறுநெய் தயிர் பால் 
அஞ்சும் கொண்டாடிய வேட்கையினார் அதிகைப் பதியே 
தஞ்சம் கொண்டார் தமக்கு என்றும் இருக்கை சரண் அடைந்தார் 
நெஞ்சம் கொண்டார்க்கு இடமாவது நம் திருநின்றியூரே.

பொருளுரை:
வஞ்சனையை உடையவரது மனத்திற் சேராதவரும், `நறுநெய், தயிர், பால்` முதலிய ஆனஞ்சினை ஈட்டிக் கொண்டு முழுகுகின்ற பெருவிருப்புடையவரும், திருவதிகைப் பதியினையே தமக்கு என்றும் இருக்கையாகும்படி அதனைத் தஞ்சமாகக் கொண்ட வரும், தம்மையே புகலிடமாக அடைந்தவரது உள்ளத்தைக் காணியாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் நிற்பது, நமது திருநின்றியூரே.


பாடல் எண் : 06
ஆர்த்தவர் ஆடரவம் அரைமேல் புலி ஈருரிவை
போர்த்தவர் ஆனையின் தோலுடல் வெம்புலால் கை அகலப் 
பார்த்தவர் இன்னுயிர் பார் படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றைச் 
சேர்த்தவருக்கு உறையும் இடமாம் திருநின்றியூரே.

பொருளுரை:
அரையில் புலியினது பசுந்தோலையும், ஆடுகின்ற பாம்பையும் கட்டியவரும், உடம்பில் யானையின் தோலைப் போர்த்தவரும், அவற்றால் தம்மிடத்துத் தீய புலால் நாற்றம் வீசாதவாறு செய்து கொண்டவரும், பூமியில் இனிய உயிர்களைப் படைத்தவனாகிய பிரமதேவனது தலைகள் ஐந்தில் ஒன்றைத் தம் கையில் வைத்துக்கொண்டவரும் ஆகிய இறைவருக்கு இடம் திருநின்றியூரேயாகும்.


பாடல் எண் : 07
தலையிடையார் பலி சென்று அகந்தோறும் திரிந்த செல்வர்
மலையுடையாள் ஒரு பாகம் வைத்தார் கல் துதைந்த நன்னீர்
அலையுடையார் சடை எட்டும் சுழல அருநடஞ்செய் 
நிலையுடையார் உறையும் இடமாம் திருநின்றியூரே.

பொருளுரை:
தலை ஓட்டிற் பொருந்துகின்ற பிச்சைக்குச் சென்று இல்லங்கள் தோறும் திரிகின்ற தன்மையை உடைய செல்வரும், மலையைப் பிறந்த இடமாக உடையவளை ஒருபாகத்தில் வைத்தவரும், மலையின்கண் நிறைந்து வீழ்கின்ற நல்ல நீரினது அலையை உடைய நிறைந்த சடைகள் எட்டும் எட்டுத் திசைகளிலும் சுழலுமாறு அரிய நடனத்தைச் செய்கின்ற நிலையினை உடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருநின்றியூரேயாம்.


பாடல் எண் : 08
எட்டு உகந்தார் திசை ஏழ் உகந்தார் எழுத்து ஆறும் அன்பர் 
இட்டு உகந்தார் மலர்ப் பூசை இச்சிக்கும் இறைவர் முன்னாள் 
பட்டுகும் பாரிடைக் காலனைக் காய்ந்து பலி இரந்து ஊண் 
சிட்டு உகந்தார்க்கு இடமாவது நம் திருநின்றியூரே.

பொருளுரை:
திசைகள் எட்டினையும், ஏழ் எழுத்துக்களால் தோற்றுவிக்கப்படும் இசைகள் ஏழினையும், மனம் அடங்கப்பெற்ற அன்பர்கள் விரும்பியிடுதலால் நிறைந்த மலர்களையுடைய வழிபாட்டினையும் முன்னொருநாள் நிலத்தின்கண் இறந்து வீழ்ந்த கூற்றுவனை அவன் அங்ஙனம் ஆமாறு வெகுண்டமையோடு, பிச்சையேற்று உண்ணுதலை உடைய ஒழுக்கத்தினையும் விரும்புகின்றவராகிய இறைவருக்கு இடமாய் நிற்பது, நமது திருநின்றியூரே.


பாடல் எண் : 09
காலமும் ஞாயிறுமாகி நின்றார் கழல்பேண வல்லார் 
சீலமும் செய்கையும் கண்டு உகப்பார் அடி போற்றிசைப்ப
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க 
நீலநஞ்சு உண்டவருக்கு இடமாம் திருநின்றியூரே.

பொருளுரை:
காலமும், அதனைப் பகுக்கின்ற கதிரவனும் ஆகி நிற்பவரும், தமது திருவடியையே அன்போடு பற்றவல்ல அடியவர்களது நோன்பினையும், செயல்களையும் கண்டு அவர்களை விரும்புகின்றவரும், நீலநிறம் பொருந்திய நஞ்சினை உண்டவருமாகிய இறைவர்க்கு, அவரது திருவடிகளை அவ்வடியவர்கள் துதி செய்யவும் `திருமால், பிரமன், இந்திரன்` முதலியோர் மந்திரம் சொல்லி வணங்கவும், திருநின்றியூரே இடமாய் நிற்கும்.


பாடல் எண் : 10
வாயார் மனத்தால் நினைக்குமவருக்கு அருந்தவத்தில்
தூயார் சுடுபொடி ஆடிய மேனியர் வானில் என்றும் 
மேயார் விடை உகந்து ஏறிய வித்தகர் பேர்ந்தவர்க்குச் 
சேயார் அடியார்க்கு அணியவர் ஊர் திருநின்றியூரே.

பொருளுரை:
வாயார வாழ்த்தி, மனத்தால் எப்பொழுதும் மறவாது நினைப்பவர்க்கு உண்மைப் பொருளாகின்றவரும், அரியதவக் கோலத்தை உடைய தூயவரும், வெந்த சாம்பலில் மூழ்கிய திருமேனியை உடையவரும் என்றும் பரவெளியிலே இருப்பவரும், இடபத்தை விரும்பி ஏறும் சதுரப்பாட்டினை உடையவரும், தம்மை அடையாதவருக்குச் சேய்மைக் கண்ணராகின்றவரும் ஆகிய இறைவரது ஊர் திருநின்றியூரே.


பாடல் எண் : 11
சேரும் புகழ்த்தொண்டர் செய்கையறாத் திருநின்றியூரில் 
சீரும் சிவகதியாய் இருந்தானைத் திருநாவல் 
ஆரூரன் உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினைபோய்ப்
பாரும் விசும்பும் தொழ பரமன் அடி கூடுவரே.

பொருளுரை:
திரண்ட புகழையுடைய அடியார்களது தொண்டுகள் எந்நாளும் நீங்காதிருக்கின்ற திருநின்றியூரின் கண் சிறந்த வீடுபேறாய் எழுந்தருளியிருக்கின்ற இறைவனைத் திருநாவலூரினனாகிய நம்பியாரூரன் பாடிய, பொருத்தமான இத்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர், வினை நீங்கப் பெற்று, மண்ணுலகத் தவரும், விண்ணுலகத்தவரும் வணங்கும் படி, சிவபெருமானது திருவடியை அடைவார்கள்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||