சனி, 30 ஜனவரி, 2016

திருக்கழுக்குன்றம் திருமுறை பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வேதகிரீஸ்வரர், ஸ்ரீ பக்தவசலேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சொக்கநாயகி, ஸ்ரீ திரிபுரசுந்தரி

திருமுறை : முதல் திருமுறை 103 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
தோடுடையான் ஒரு காதில் தூய குழை தாழ
ஏடுடையான் தலை கலனாக இரந்து உண்ணும்
நாடுடையான் நள்ளிருள் ஏம நடமாடும்
காடுடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

பாடல் விளக்கம்‬:
ஒரு காதில் தோடும் பிறிதொரு காதில் தூய குழையும் தாழ்ந்து தொங்கத், தாமரை மலரில் தங்கும் பிரமனின் தலையோட்டை உண் கலனாகக் கொண்டு இரந்துண்ணும் நாடுகளை உடையவன். நள்ளிருள் யாமத்தில் மகிழ்வோடு சுடு காட்டில் நடனம் ஆடுபவன். அத்தகையோன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றமாகும்.


பாடல் எண் : 02
கேண வல்லான் கேழல் வெண் கொம்பு குறளாமை
பூண வல்லான் புரிசடைமேலொர் புனல் கொன்றை
பேண வல்லான் பெண் மகள் தன்னை ஒருபாகம்
காண வல்லான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

பாடல் விளக்கம்‬:
திருமாலாகிய பன்றியினது வெண்மையான கொம்பை அகழ்ந்து அணியவல்லவன். வாமனனாக அவதரித்த திருமாலின் கூர்மாவதார ஆமையோட்டினை அணிகலனாகக் கோத்துப் பூணவல்லவன். முறுக்கிய சடைமுடிமேல் ஒப்பற்ற கங்கை, கொன்றை மாலை ஆகியவற்றை விரும்பி அணிபவன். பெண்ணின் நல்லவளான உமையம்மையைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் காணுமாறு செய்தருளியவன். அத்தகையோன் காதல் செய்யும் கோயில் திருக்கழுக்குன்றமாகும்.


பாடல் எண் : 03
தேனகத்தார் வண்டு அது உண்ட திகழ் கொன்றை-
தானகத்தார் தண்மதி சூடித் தலைமேலோர்
வானகத்தார் வையகத்தார்கள் தொழுது ஏத்தும்
கானகத்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

பாடல் விளக்கம்‬:
தேனை அகத்தே இருந்து வண்டுகள் உண்ட, விளங்கிய கொன்றை மாலையைச் சூடிய தலையில் மதியைச் சூடி, வானகத்தவரும், வையகத்தவரும் தொழுதேத்தும் வண்ணம் சுடுகாட்டைத் தனக்கு இடமாகக் கொண்ட இறைவன் விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்குன்றம்.


பாடல் எண் : 04
துணையல் செய்தான் தூய வண்டு யாழ்செய் சுடர்க்கொன்றை
பிணையல் செய்தான் பெண்ணின் நல்லாளை ஒருபாகம்
இணையல் செய்யா இலங்கு எயில் மூன்றும் எரியுண்ணக்
கணையல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

பாடல் விளக்கம்‬:
வண்டுகள் யாழ்போல் ஒலித்து மொய்க்கும் தூய ஒளி நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவனும், பெண்ணின் நல்லவளான உமையம்மையைக்கூடி அவளைத்தன் உடலில் ஒரு பாகமாகப் பிணைத்திருப்பவனும், தன்னோடு இணைந்து வாராத புரங்கள் மூன்றையும் எரி உண்ணுமாறு கணையை விடுத்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.


பாடல் எண் : 05
பையுடைய பாம்பொடு நீறு பயில்கின்ற
மெய்யுடையான் வெண்பிறை சூடி விரிகொன்றை
மையுடைய மாமிடற்று அண்ணல் மறி சேர்ந்த
கையுடையான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

பாடல் விளக்கம்‬:
நச்சுப் பையையுடைய பாம்போடு திருநீறு அணிந்த திருமேனியை உடையவனும், வெண்பிறையையும், விரிந்த கொன்றையையும் முடியில் சூடியவனும், விடம் பொருந்தியமிடற்றினை உடைய தலைமையாளனும், மானேந்திய கையை உடையவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.


பாடல் எண் : 06
வெள்ளமெல்லாம் விரிசடைமேல் ஓர் விரிகொன்றை
கொள்ள வல்லான் குரைகழல் ஏத்தும் சிறுத்தொண்டர்
உள்ளமெல்லாம் உள்கி நின்று ஆங்கே உடனாடும்
கள்ளம் வல்லான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

பாடல் விளக்கம்‬:
விரிந்த சடைமுடியின்மேல் வெள்ளமாகப் பெருகி வந்த கங்கையின் அனைத்து நீரையும் விரிந்த கொன்றை மாலையோடு சூடியிருப்பவனும், தனது ஒலிக்கின்ற கழல் அணிந்த திருவடிகளை ஏத்தித் துதிக்கும் சிறிய தொண்டர்களின் உள்ளமெல்லாம் நிறைந்து, அவர்கள் தியானித்து நின்று ஆடத்தானும் உடன் ஆடும் கள்ளம் வல்லவனுமாகிய, சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.


பாடல் எண் : 07
இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.


பாடல் எண் : 08
ஆதல் செய்தான் அரக்கர்தம் கோனை அருவரையின்
நோதல் செய்தான் நொடிவரையின் கண் விரல் ஊன்றி
பேர்தல் செய்தான் பெண்மகள் தன்னோடு ஒரு பாகம்
காதல் செய்தான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

பாடல் விளக்கம்‬:
அரக்கர் கோனை அரிய கயிலை மலையின்கீழ் அகப்படுத்தி, நொடிப்பொழுதில் கால் விரலை ஊன்றி, அவனை நோதல் செய்தவனும், பிறகு அவனுக்கு ஆக்கம் வழங்கியவனும், பெண்மகளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காதல் செய்தவனுமாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.


பாடல் எண் : 09
இடந்த பெம்மான் ஏனமதாயும் அனம் ஆயும்
தொடர்ந்த பெம்மான் தூமதிசூடி வரையார்தம்
மடந்தை பெம்மான் வார்கழலோச்சிக் காலனைக்
கடந்த பெம்மான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

பாடல் விளக்கம்‬:
அடிமுடி காணப் பன்றி உருவோடு நிலத்தை அகழ்ந்து சென்ற திருமாலும், அன்னமாய்ப் பறந்து சென்ற நான்முகனும், தொடர்ந்த பெருமானாய், தூய மதியை முடியிற் சூடியவன், மலைமகளின் தலைவன், வார்கழலணிந்த திருவடியை உயர்த்திக் காலனைக் காய்ந்தவன் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.


பாடல் எண் : 10
தேய நின்றான் திரிபுரம் கங்கை சடைமேலே
பாய நின்றான் பலர் புகழ்ந்தேத்த உலகெல்லாம்
சாய நின்றான் வன் சமண் குண்டர் சாக்கீயர்
காய நின்றான் காதல் செய் கோயில் கழுக்குன்றே.

பாடல் விளக்கம்‬:
முப்புரங்களை அழியுமாறு செய்தவனும், பெருகிவந்த கங்கை தன் சடை மேல் பாய நின்றவனும், பலரும் புகழ்ந்து போற்ற உலகனைத்தும் ஊழி இறுதியில் அழியுமாறு நின்றவனும், வலிய சமண் குண்டர்களும், புத்தர்களும் கெடுமாறு நின்றவனும் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.


பாடல் எண் : 11
கண்ணுதலான் காதல் செய் கோயில் கழுக்குன்றை
நண்ணியசீர் ஞானசம்பந்தன் தமிழ்மாலை
பண் இயல்பால் பாடியபத்தும் இவைவல்லார்
புண்ணியராய் விண்ணவரோடும் புகுவாரே.

பாடல் விளக்கம்‬:
நெற்றியில் கண்ணுடையவனாகிய சிவபிரான் காதல் செய்யும் கோயிலாகிய திருக்கழுக்குன்றத்தைப் புகழ் பொருந்திய ஞானசம்பந்தன் பண் அமைதியோடு பாடிய தமிழ் மாலையாகிய பத்துப் பாடல்களையும் பாடிப் போற்றுபவர் புண்ணியராய்த் தேவர்களோடு வானுலகம் புகுவர்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக