சனி, 30 ஜனவரி, 2016

திருக்கழுக்குன்றம் திருமுறை பதிகம் 03

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வேதகிரீஸ்வரர், ஸ்ரீ பக்தவசலேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சொக்கநாயகி, ஸ்ரீ திரிபுரசுந்தரி

திருமுறை : ஏழாம் திருமுறை 81 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


பாடல் எண் : 01
கொன்று செய்த கொடுமையால் பல சொல்லவே 
நின்ற பாவ வினைகள் தாம் பல நீங்கவே 
சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடம்
கன்றினோடு பிடிசூழ் தண் கழுக்குன்றமே.

பாடல் விளக்கம்‬:
உலகீர், தேவர்களுக்குத் தலைவனாகிய சிவபெருமானது இடம், பிடியானைகள் தங்கள் கன்றுகளோடு சூழ்ந்திருக்கும் தண்ணிய திருக்கழுக்குன்றமே; அதனை, பிற உயிர்களை வருத்து மாற்றாற் செய்த கொடுஞ்செயல்களால், பலரும் பல இகழுரைகளைச் சொல்லுமாறு இழிவெய்த நின்ற பாவமாகிய வினைகள் பலவும் நீங்குதற்பொருட்டுப் பலகாலும் சென்று வணங்குமின்கள்.


பாடல் எண் : 02
இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே
பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம்
நிறங்கள் செய்த மணிகள் நித்திலம் கொண்டிழி
கறங்கு வெள்ளை அருவித் தண் கழுக்குன்றமே.

பாடல் விளக்கம்‬:
உலகீர், விளங்குகின்ற, கொன்றை மாலையை அணிந்த சடையையுடைய எங்கள் பெருமானது இடம், பல நிறங்களையும் காட்டுகின்ற மணிகளோடு, முத்தினையும் தள்ளிக் கொண்டு பாய்கின்ற, ஒலிக்கும் வெண்மையான அருவிகளையுடைய, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே; அதனை, தலை வணங்கிச் சென்று, இனிய இசைகளைப் பாடி வழிபடுமின்கள்.


பாடல் எண் : 03
நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால் 
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத்
தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான்
காள கண்டன் உறையும் தண் கழுக்குன்றமே.

பாடல் விளக்கம்‬:
உலகீர், நம்மை ஆளுகின்ற நம் வினைகள் குறைந்து, முழுதும் ஒழிதற்பொருட்டு, தோள்கள் எட்டினையும் உடைய, சிறந்த மாணிக்கம்போலும் ஒளியை யுடையவனாகிய, நஞ்சணிந்த கண்டத்தை உடையவன் எழுந்தருளியிருக்கின்ற, குளிர்ந்த திருக்கழுக்குன்றத்தை, நாள்தோறும், முறைப்படி, நெடிது நின்று வழிபடுமின்கள்.


பாடல் எண் : 04
வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியை 
முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவிடம்
பிளிறு தீரப் பெருங்கைப் பெய்மதம் மூன்றுடைக் 
களிறினோடு பிடிசூழ் தண் கழுக்குன்றமே.

பாடல் விளக்கம்‬:
உலகீர், வெம்மை பொருந்திய மழுப்படையை உடைய சிவபெருமான் முற்பட்டு எழுந்தருளியிருக்கின்ற இடம், பிளிறுகின்ற, மனவலியையும், பெரிய தும்பிக்கையையும், பொழிகின்ற மதங்கள் மூன்றையும் உடைய களிற்றி யானைகளோடு, பிடி யானைகள் சூழ்ந்துள்ள, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே ; ஆதலின், உங்கள் அறியாமை நீங்குதற்பொருட்டு, அங்குச்சென்று, திருநீற்றில் மூழ்குகின்றவனாகிய அப்பெருமானை வழிபடுமின்கள்.


பாடல் எண் : 05
புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன்
இலைகொள் சூலப்படையன் எந்தை பிரானிடம்
முலைகள் உண்டு தழுவிக் குட்டியொடு முசுக் 
கலைகள் பாயும் புறவில் தண் கழுக்குன்றமே.

பாடல் விளக்கம்‬:
உலகீர், புல்லிய சடையை உடைய அற வடிவினனும், இலை வடிவத்தைக் கொண்ட சூலப்படையை உடைய எம் தந்தையும், எங்கள் தலைவனும் ஆகிய இறைவனது இடம், பாலை உண்டு தழுவுதலை உடைய குட்டியோடு பெண் முசுவும், அதனோடு ஆண் முசுவும் மரக்கிளைகளில் தாவுகின்ற காட்டினையுடைய, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே; அதனை உங்கள் கீழ்மைகள் எல்லாம் நீங்கும் பொருட்டுச் சென்று வழிபடுமின்கள்.


பாடல் எண் : 06
மடமுடைய அடியார் தம் மனத்தே உற 
விடமுடைய மிடறன் விண்ணவர் மேலவன்
படமுடைய அரவன் தான் பயிலும் இடம்
கடமுடைய புறவின் தண் கழுக்குன்றமே.

பாடல் விளக்கம்‬:
நஞ்சினை உடைய கண்டத்தையுடையவனும், தேவர்கட்கு மேலானவனும், படமுடைய பாம்பையுடையவனும் ஆகிய சிவபெருமான், தன்னையன்றி வேறொன்றையும் அறியாத அடியவரது மனத்தில் பொருந்தும் வண்ணம் நீங்காது எழுந்தருளியிருக்கின்ற இடம், காட்டையுடைய, முல்லை நிலத்தோடு கூடிய குளிர்ந்த திருக்கழுக்குன்றமே.


பாடல் எண் : 07
ஊனம் இல்லா அடியார் தம் மனத்தே உற 
ஞான மூர்த்தி நட்டம் ஆடி நவிலும் இடம்
தேனும் வண்டும் மது உண்டு இன்னிசை பாடியே 
கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே.

பாடல் விளக்கம்‬:
ஞான வடிவினனும், நடனம் ஆடுபவனும் ஆகிய சிவபெருமான், குறைபாடு இல்லாத தன் அடியார்களது மனத்திற் பொருந்தும் வண்ணம், நீங்காது எழுந்தருளியிருக்கின்ற இடம், தேனும், வண்டும் தேனை உண்டு இனிய இசையைப்பாட, காட்டில் மயில்கள் அதனைக் கேட்டு இன்புற்றிருக்கின்ற திருக்கழுக்குன்றமே.


பாடல் எண் : 08
அந்தம் இல்லா அடியார் தம் மனத்தே உற 
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன் 
சிந்தை செய்த மலர்கள் நித்தலும் சேரவே 
கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே.

பாடல் விளக்கம்‬:
அளவற்ற அடியார்களது மனத்திற் பொருந்தும் வண்ணமும், திருமாலும் நான்முகனும் நாள்தோறும் வந்து வணங்கி வழிபட்ட, மலர்கள் நாள்தோறும் குவிந்து கிடக்கும் வண்ணமும், நடனமாடுகின்ற சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம், சந்தன மரம் மணம் வீசுகின்ற, முல்லை நிலத்தோடு கூடிய, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே.


பாடல் எண் : 09
பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன்
குழைகொள் காதன் குழகன் தான் உறையும் இடம்
மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை
கழைகொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே.

பாடல் விளக்கம்‬:
உலகீர், பின்னிய சடையின்கண் தலைக் கோலங்களையுடையவனும், `குழை` என்னும் அணியை அணிந்த காதினை உடையவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற இடம், மேகங்கள் மிக முழங்க, மிக உயர்ந்த வேயும், கழையுமாகிய மூங்கில்கள் முத்துக்களைச் சொரிகின்ற, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே; அதனை, உங்கள் குற்றங்களெல்லாம் நீங்குதற் பொருட்டு வழிபடுமின்கள்.


பாடல் எண் : 10
பல்லின் வெள்ளைத் தலையன் தான் பயிலும் இடம்
கல்லின் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினை 
மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினால்
சொல்லல் சொல்லித் தொழுவாரைத் தொழுமின்களே.

பாடல் விளக்கம்‬:
உலகீர், பற்களையுடைய வெண்மையான தலையை உடையவன் நீங்காது எழுந்தருளியிருக்கின்ற இடம், பாறைகளின்மேல் வீழ்கின்ற வெண்மையான அருவிகளையுடைய, குளிர்ந்த திருக்கழுக்குன்றமே; அதனை, வலிமை மிக்க, திரண்ட தோள்களையுடையவனாகிய நம்பியாரூரனது வனப்புடைய பாடல்களால் துதித்து வழிபடுவோரை வழிபடுமின்கள்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருக்கழுக்குன்றம் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக