வெள்ளி, 13 மே, 2016

திருக்கோலக்கா திருமுறை திருப்பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சப்தபுரீஸ்வரர், ஸ்ரீ தாளபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஓசைகொடுத்த நாயகி, ஸ்ரீ த்வனிபிரதாம்பாள்

திருமுறை : ஏழாம் திருமுறை 62 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்


பாடல் எண் : 01
புற்றில் வாளரவு ஆர்த்த பிரானைப் 
பூத நாதனைப் பாதமே தொழுவார் 
பற்றுவான் துணை எனக்கெளி வந்த 
பாவ நாசனை மேவரி யானை
முற்றலார் திரிபுரம் ஒரு மூன்றும் 
பொன்ற வென்றி மால்வரை அரி அம்பாக்
கொற்ற வில்லங்கை ஏந்திய கோனைக்
கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

பாடல் விளக்கம்‬:
புற்றில் வாழும் கொடிய பாம்பைக் கட்டியுள்ள பெருமானும், பூத கணங்கட்கு முதல்வனும், தன் திருவடியையே வணங்குவோர் விடாது பற்றுகின்ற சிறந்த துணைவனும், எனக்கு எளியவனாய் எதிர் வந்தவனும், அடியவரது பாவங்களைப் போக்கும் தொழிலை உடையவனும், யாவராலும் அடைதற்கு அரியவனும், செருக்கு மிக்கவர்களது மூன்று ஊர்கள் அழியுமாறு, திருமால் அம்பாகி நிற்க, வெற்றியைத் தரும் பெரிய மலையாகிய வில்லை அங்கையில் ஏந்திய தலைவனும் ஆகிய இறைவனை, அடியேன், திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.


பாடல் எண் : 02
அங்கம் ஆறும் மாமறை ஒரு நான்கும் 
ஆய நம்பனை வேய்புரை தோளி 
தங்கு மாதிரு உருவுடையானைத் 
தழல் மதிச் சடைமேல் புனைந்தானை
வெங்கண் ஆனையின் ஈருரி யானை 
விண்ணுளாரொடு மண்ணுளார் பரசும்
கொங்குலாம் பொழில் குரவெறி கமழும் 
கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

பாடல் விளக்கம்‬:
துணை நூல்களாகிய ஆறும், முதல் நூல்களாகிய வேதம் நான்கும் ஆகி நிற்கின்ற நம்பனும், மூங்கில் போலும் தோள்களையுடைய உமாதேவி பொருந்தியுள்ள, சிறந்த திருமேனியை யுடையவனும், ஒளிர்கின்ற பிறையைச் சடையின் மேற் சூடியவனும், சினத்தால் எரிகின்ற கண்களையுடைய யானையினது உரித்த தோலை யுடையவனும் ஆகிய இறைவனை, அடியேன், விண்ணில் உள்ளவர்களும், மண்ணில் உள்ளவர்களும் துதிக்கின்ற, தேன் பொருந்திய சோலையின்கண் குரா மலர்கள் மணங்கமழ்கின்ற திருக்கோலக்காவினில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.


பாடல் எண் : 03
பாட்டகத்து இசையாகி நின்றானைப் 
பத்தர் சித்தம் பரிவு இனியானை 
நாட்டகத்தேவர் செய்கை உளானை 
நட்டம் ஆடியை நம் பெருமானைக்
காட்டகத்துறு புலியுரி யானைக் 
கண்ணோர் மூன்றுடை அண்ணலை அடியேன் 
கோட்டகப் புனலார் செழுங் கழனிக் 
கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

பாடல் விளக்கம்‬:
பாட்டின்கண் இசைபோன்று எல்லாப் பொருளிலும் வேறறக் கலந்து நிற்பவனும், அடியார்களது உள்ளம் அன்பு செய்தற்கு இன்பமாகிய பயனாய் உள்ளவனும், மண்ணில் வாழும் தேவராகிய அந்தணர்களது வழிபாட்டின் கண் விளங்குகின்றவனும், நடனம் ஆடு பவனும், நமக்குத் தலைவனும், காட்டின்கண் வாழ்கின்ற புலியினது தோலை உடையவனும், கண்கள் மூன்று உடைய பெருமையுடையவனும் ஆகிய இறைவனை, அடியேன், வரம்பகத்து நீர் நிறைந்த செழுமையான வயல்களையுடைய திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.


பாடல் எண் : 04
ஆத்தம் என்று எனை ஆள் உகந்தானை 
அமரர் நாதனைக் குமரனைப் பயந்த 
வார்த் தயங்கிய முலைமட மானை 
வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்த 
தீர்த்தனை சிவனை செழுந்தேனைத்
தில்லை அம்பலத்துள் நிறைந்து ஆடும் 
கூத்தனை குரு மாமணி தன்னைக்
கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

பாடல் விளக்கம்‬:
என்னை ஆளாகக் கொள்ளுதலே தனக்கு வாய்மை யாவது என்று கருதி என்னை அவ்வாறே விரும்பி ஆண்டருளினவனும், தேவர்கட்குத் தலைவனும், முருகனைப் பெற்ற கச்சின்கண் விளங்குகின்ற தனங்களையுடைய இளைய மான்போலும் தேவியை இடப்பாகத்தில் வைத்து, வானுலகத்தில் உள்ள கங்கையைச் சடையின் கண் மறைத்த தூயவனும், மங்கலம் உடையவனும், செழுமையான தேன்போல இனிப்பவனும், தில்லையம்பலத்துள் நிறைந்து நின்று ஆடுகின்ற கூத்தினை யுடையவனும், ஒளியையுடைய மாணிக்கம் போல்பவனும் ஆகிய இறைவனை, அடியேன், திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.


பாடல் எண் : 05
அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் 
ஆள் அது ஆக என்று ஆவணம் காட்டி
நின்று வெண்ணெய் நல்லூர்மிசை ஒளித்த 
நித்திலத் திரள் தொத்தினை முத்திக்கு 
ஒன்றினான் தனை உம்பர் பிரானை 
உயரும் வல்லரணம் கெடச் சீறும் 
குன்ற வில்லியை மெல்லியல் உடனே 
கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

பாடல் விளக்கம்‬:
அன்று அந்தணனாய்த் திருநாவலூரில் வந்து, அகன்ற இப்பூமியில் உள்ளார் பலர் முன்பும், "நீ எனக்குச் செய்யும் அடிமையைச் செய்க" என்று சொல்லி ஓலை காட்டி வழக்குப்பேசி நின்று, பின்பு, திருவெண்ணெய்நல்லூரில் சென்று மறைந்த, முத்தினது திரட்சியமைந்த கொத்துப் போல்பவனும், முத்தியளித்தற்குப் பொருந்தியவனும், தேவர்கட்குத் தலைவனும், உயர்ந்த வலிய மதில்கள் அழியுமாறு சினந்த, மலைவில்லை உடையவனும் ஆகிய இறைவனை, இறைவியுடனே, அடியேன் திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.


பாடல் எண் : 06
காற்றுத் தீப்புனலாகி நின்றானைக் 
கடவுளைக் கொடு மால்விடை யானை 
நீற்றுத் தீயுருவாய் நிமிர்ந்தானை 
நிரம்பு பல்கலையின் பொருளாலே 
போற்றித் தன்கழல் தொழுமவன் உயிரைப் 
போக்குவான் உயிர் நீக்கிடத் தாளால் 
கூற்றைத் தீங்குசெய் குரை கழலானைக் 
கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

பாடல் விளக்கம்‬:
காற்றும், தீயும், நீரும் ஆகி நிற்பவனும், எல்லாப் பொருள்களையும் கடந்தவனும், கொடிய பெரிய இடப ஊர்தியை யுடையவனும், நீற்றைத் தரும் நெருப்புருவாய் ஓங்கி நிற்பவனும், நிறைந்த பல நூல்களினது பொருள் வழியே துதித்துத் தன் திருவடியை வணங்குகின்ற அவனது உயிரைப் போக்குவோனது உயிர் நீங்கும்படி தனது திருவடியால் கூற்றுவனுக்கு அழிவைச் செய்த, ஒலிக்கின்ற கழலையணிந்தவனும் ஆகிய இறைவனை, அடியேன் திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.


பாடல் எண் : 07
அன்று அயன் சிரம் அரிந்து அதில் பலிகொண்டு 
அமரருக்கு அருள் வெளிப்படுத்தானைத்
துன்று பைங்கழலில் சிலம்பு ஆர்த்த 
சோதியை சுடர்போல் ஒளியானை
மின்தயங்கிய இடைமட மங்கை 
மேவும் ஈசனை வாசமா முடிமேல் 
கொன்றை அஞ்சடைக் குழகனை அழகார் 
கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

பாடல் விளக்கம்‬:
அன்று பிரமனது தலையை அரிந்து அதன்கண் பிச்சை ஏற்றுத் தேவர்கட்குத் தனது திருவருள் நிலையை வெளிப்படுத்தியவனும், நெருங்கிய பசிய கழலையணிதற்கு உரிய திருவடியில் சிலம்பையணிந்த ஒளிவடிவினனும், விளக்குப்போலும் விளக்கம் உடையவனும், மின்னலினது தன்மை விளங்கிய இடையினையுடைய இளமங்கை விரும்பும் கடவுளும், மணங்கமழுமாறு தலையின் மேல் கொன்றை மாலையையணிந்த அழகிய சடையை உடைய அழகனும் ஆகிய இறைவனை, அடியேன், அழகு நிறைந்த திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.


பாடல் எண் : 08
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் 
ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன் 
தாளம் ஈந்தவன் பாடலுக்கு இரங்கும் 
தன்மை யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாட நின்றாடும் 
அங்கணன் தனை எண்கணம் இறைஞ்சும் 
கோளிலிப் பெருங்கோயில் உள்ளானைக் 
கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

பாடல் விளக்கம்‬:
எந்நாளும் இனிய இசையால் தமிழ்ப்பாடலை எங்கணும் பரவச்செய்த திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகளுக்கு, அவர் தம் கைகளால் ஒற்றறுத்துப் பாடுதலுக்கு இரங்கி, பலருங் காணத் தாளம் ஈந்த கருணையாளனும், என் உள்ளத்துள் கொள்ளப்படும் பொருளாய் உள்ளவனும், தன்னால் ஆளப்படும் பூதங்கள் பாடல் களைப்பாட, அவற்றிற்கு ஏற்ப நின்று ஆடுகின்ற அருள் பொருந்திய கண்களையுடையவனும், பதினெண் கணங்களாலும் வணங்கப்படுபவனும், திருக்கோளிலியில் உள்ள பெருங்கோயிலில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய இறைவனை அடியேன், திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.


பாடல் எண் : 09
அரக்கன் ஆற்றலை அழித்து அவன் பாட்டுக்கு 
அன்று இரங்கிய வென்றியினானைப் 
பரக்கும் பார் அளித்து உண்டு உகந்தவர்கள் 
பரவியும் பணிதற்கு அரியானைச்
சிரக்கண் வாய் செவி மூக்கு உயர் காயம்
ஆகித் தீவினை தீர்த்த எம்மானைக்
குரக்கு இனம் குதி கொண்டு உகள் வயல்சூழ் 
கோலக்காவினில் கண்டு கொண்டேனே.

பாடல் விளக்கம்‬:
அன்று இராவணனது வலிமையை முதலில் அழித்து, பின்பு அவன் பாடிய இசைக்கு இரங்கி அருள்புரிந்த வெற்றியை யுடையவனும், விரிந்த உலகத்தைப் படைத்தும், உண்டும் களித்தவர்கள் துதித்துப் பணிதற்கும் அரியனாய் உள்ளவனும், தலையில் அமைந்த, `கண், வாய், காது, மூக்கு` என்பவற்றோடு, நீண்ட உடம்புமாய் நின்று, தீமையைத் தரும் வினையை ஒழித்த எம்பெருமானும் ஆகிய இறைவனை, அடியேன், சோலைகளில் குரங்குக் கூட்டம் குதித்துத் திரிகின்ற, வயல் சூழ்ந்த, திருக்கோலக்காவில் வெளிப்படக் கண்டு கொண்டேன்.


பாடல் எண் : 10
கோடரம் பயில் சடையுடைக் கரும்பைக் 
கோலக்காவுள் எம்மானை மெய்ம் மானப் 
பாடரங்குடி அடியவர் விரும்பப் 
பயிலும் நாவல் ஆரூரன் வன்தொண்டன்
நாடிரங்கி முன் அறியும் அந்நெறியால் 
நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர் 
காடுரங்கு என நடம் நவின்றான்பாற் 
கதியும் எய்துவர் பதி அவர்க்கு அதுவே.

பாடல் விளக்கம்‬:
ஆலம் விழுது போலும் சடைகளையுடையவனும், கரும்பு போல இனிப்பவனும் ஆகிய, திருக்கோலக்காவில் எழுந்தருளியுள்ள எம் இறைவனை, உண்மையமைந்த பெரிய பாடல்களைப் பாடும் வழிவழி அடியவர் பலரும் விரும்புமாறு, அத்திருத்தொண்டிலே பழகும், திருநாவலூரில் தோன்றிய, வன்றொண்டனாகிய நம்பியாரூரன், உலகில் உள்ளவர் தாமும் மனம் உருகி அவனை முற்பட உணருமாற்றால் பாடிய பத்துப் பாடல்களாகிய இவைகளைப் பாடிய மாந்தர், காடே அரங்கமாக நடனம் செய்பவனாகிய சிவ பிரானிடத்து உயர்கதியையும் பெறுவர்; என்றும் நீடு வாழும் இடமும் அவர்க்கு அக்கதியேயாம்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருக்கோலக்கா திருமுறை திருப்பதிகம் முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக