வெள்ளி, 13 மே, 2016

திருக்கோலக்கா திருமுறை திருப்பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ சப்தபுரீஸ்வரர், ஸ்ரீ தாளபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ ஓசைகொடுத்த நாயகி, ஸ்ரீ த்வனிபிரதாம்பாள்

திருமுறை : முதல் திருமுறை 23 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

சீர்காழியில் பிறந்து வளர்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோலக்கா அல்லது திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கும் இத்தலத்தில் இருந்து தான் தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத் தொடங்கினார். சீர்காழியில் ஞானப்பாலுண்டு பதிகம் பாடத் தொடங்கிய சுமார் மூன்று வயதுடைய சம்பந்தர் தனது முதல் தல யாத்திரையாக சென்றது இத்தலத்திற்குத் தான். தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இத்தலத்தில் இறைவனைத் துதித்து பதிகம் பாடினார். கைகள் வலிக்குமே என்று சம்பந்தருக்காக இரக்கப்பட்ட இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து அருளினார். இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். ஆதலின் இத்தலத்து அம்பிகைக்கு ஓசை கொடுத்த நாயகி என்று பெயர். சம்பந்தருக்கு பொற்றாளம் தந்த இறைவனை சுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

பிற்காலத்தில் இப்பகுதியில் தன் ஊமை மகன் பேசும் ஆற்றலைப் பெறவேண்டும் என்று, பிரார்த்தித்துக் கொண்ட தாய் ஒருத்தி, அவ்வாறே இறையருளால் தன் மகன் பேசும் வல்லமை வெற, மகிழ்ந்து, கோயிலுக்குத் தன் காணிக்கையாகச் செய்து தந்துள்ள "பொற்றாளம்" கோயிலில் உள்ளது. சீர்காழியில் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறும்போது இங்குத் தாளம் வழங்கும் ஐதீகவிழா நடைபெறுகிறது.

கோவில் அமைப்பு: மக்கள் வழக்கில் தாளமுடையார் கோவில் என்று அறியப்படும் கிழக்கு நோக்கி உள்ள இவ்வாலயத்திறகு கோபுரம் இல்லை. முகப்பு வாயிலுக்கு எதிரே திருக்குளம் ஆனந்ததீர்த்தம் உள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுதையில் ரிஷபாரூடர் தரிசனம் தருகிளார். கிழக்கு நோக்கி இரண்டு நுழைவு வாயில்கள் உள்ளன. முதல் நுழைவு வாயிலைக் கடந்தவுடன் திறந்த வெளிமுற்றம் உள்ளது. இரண்டாவது நுழைவு வாயில் வழியாக உட்புகுந்தவுடன் நேர் எதிரே பலிபீடம், நந்தி இவற்றைக் கடந்தால் இறைவன் சந்நிதி உள்ளது. உள்ளே சம்பந்தருக்கு பொற்தாளம் கொடுத்த இறைவன் தாளபுரீஸ்வரர் லிங்க உருவில் எழுந்தருளியுள்ளார். 

இந்திரன் மற்றும் சூரியன் இத்தலத்தில் இறைவன் சப்தபுரீஸ்வரரை வணங்கி வழிபட்டுள்ளனர். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கருவறைப் பிரகாரத்தின் மேற்குச் சுற்றில் கிழக்கு நோக்கிய வள்ளி தேவசேனாவுடன் இருக்கும் முருகர் சந்நிதி இருக்கிறது. மேற்குச் சுற்றில் முருகர் சந்நிதியை அடுத்து மகாலட்சுமி சந்நிதி உள்ளது. 

இத்தலத்தில் உள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். மகாலட்சுமி இங்கு சிவபெருமானை தவம் செய்து அதன் பயனாக மகாவிஷ்னுவை திருமணம் செய்து கொண்டாள். திருமகள் திருமணம் செய்து கொண்ட தலம் ஆதலால் திருகோலக்கா என்று இத்தலம் பெயர் பெற்றது. திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் இங்கு தொடர்ந்து ஆறு வாரங்கள் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்தால் தடைப்பட்ட திருமணம் விரைவில் நடைபெறும் என்பது ஐதீகம். இறைவி ஓசைகொடுத்த நாயகியின் சந்நிதி ஒரு தனிக் கோவிலாக இறைவன் சந்நிதிக்கு இடது புறம் அமைந்துள்ளது. வெளிப் பிரகாரத்தின் வடக்குச் சுற்றில் உள்ள வாயில் வழியாக இறைவியின் சந்நிதியை அடையலாம்.

நன்றி shivatemples இணையதளத்திற்கு


பாடல் எண் : 01
மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்
சடையும் பிறையும் சாம்பல் பூச்சும் கீள்
உடையும் கொண்ட உருவம் என்கொலோ.

பாடல் விளக்கம்‬:
நீரைத் தேக்கி வெளிவிடும் மடையில் வாளை மீன்கள் துள்ளிப் பாயுமாறு பெண்கள் கையால் குடைந்து நீராடும் பொய்கைகளை உடைய திருக்கோலக்காவில் எழுந்தருளியுள்ள இறைவன், சடைமுடியையும், அதன்கண் பிறையையும், திருமேனி முழுவதும் திருநீற்றுப்பூச்சையும் இடையில் ஆடையாகக் கீள் உடையையும் கொண்ட உருவம் உடையவனாய் இருப்பது ஏனோ?.


பாடல் எண் : 02
பெண்தான் பாகமாகப் பிறைச் சென்னி
கொண்டான் கோலக்காவு கோயிலாக்
கண்டான் பாதம் கையால் கூப்பவே
உண்டான் நஞ்சை உலகம் உய்யவே.

பாடல் விளக்கம்‬:
உமையம்மையைத் தன் திருமேனியில் இடப் பாதியாகக்கொண்டு, கலைகள் ஒன்றொன்றாகக் குறைந்து வந்த இளம் பிறையைச் சடைமுடி மீது ஏற்றுக் கொண்டவனாகிய சிவபிரான், கோலக்காவிலுள்ள கோயிலைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன். திருப்பாற்கடலில் நஞ்சு தோன்றியபோது காவாய் என அனைவரும் கைகூப்பி வணங்க உலகம் உய்யுமாறு அந்நஞ்சினை உண்டு அருளியவன்.


பாடல் எண் : 03
பூணற் பொறிகொள் அரவம் புன்சடைக்
கோணல் பிறையன் குழகன் கோலக்கா
மாணப் பாடி மறை வல்லானையே
பேணப் பறையும் பிணிகள் ஆனவே.

பாடல் விளக்கம்‬:
அழகிய புள்ளிகளை உடைய பாம்பை அணிகலனாகக் கொண்டு, சிவந்த சடையின்மேல் வளைந்த பிறைமதியைச் சூடிய, என்றும் மாறா இளமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளி விளங்கும் திருக்கோலக்காவை மாட்சிமை தங்கப் பாடி, வேதங்களை அருளிய அப்பெருமானைப் பேணித் தொழப் பிணிகளானவை நீங்கும்.


பாடல் எண் : 04
தழுக்கொள் பாவம் தளர வேண்டுவீர்
மழுக்கொள் செல்வன் மறிசேர் அம் கையான்
குழுக்கொள் பூதப்படையான் கோலக்கா
இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே.

பாடல் விளக்கம்‬:
பல்வேறு சமயங்களிலும் செய்த பாவங்கள் நீங்க வேண்டும் என்று விரும்புகின்றவர்களே! மழுவாயுதத்தைப் படைக்கலனாகக் கொண்ட செல்வனும், மானை ஏந்திய அழகியகையை உடையவனும், பூதங்களின் குழுக்களை உடையவனும் ஆகிய சிவபிரானது கோலக்காவைத் தவறாமல் சென்று தரிசித்து வாருங்கள். நும் பாவங்கள் அகலும்.


பாடல் எண் : 05
மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.

பாடல் விளக்கம்‬:
ஆண் மயில் போலும் கட்புலனாகிய மென்மையை உடைய உமையம்மையை ஒரு பாகமாக உடையவனும், அசுரர்களின் முப்புரங்கள் கெடுமாறு அவற்றை எரித்தவனும் ஆகிய எம் தந்தையாகிய சிவபிரானது, குயில்கள் நிறைந்து வாழும் சோலைகளை உடைய திருக்கோலக்காவைப் பலகாலும் நினைக்கப் பாவங்கள் நீங்கும்.


பாடல் எண் : 06
வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்
கடிகொள் கொன்றை கலந்த சென்னியான்
கொடிகொள் விழவார் கோலக்காவுள் எம்
அடிகள் பாதம் அடைந்து வாழ்மினே.

பாடல் விளக்கம்‬:
ஒன்றிலிருந்து பிறிதொன்று கிளைக்கும் வினைப்பகையை நீக்கிக்கொள்ள விரும்புகின்றவர்களே! மணம் பொருந்திய கொன்றை மலர் விரவிய சென்னியை உடையோனும், கொடிகள் கட்டப்பெற்று விழாக்கள் பலவும் நிகழ்த்தப்பெறும் கோலக்காவில் விளங்கும் எம் தலைவனும் ஆகிய பெருமான் திருப்பாதங்களை அடைந்து வாழ்வீர்களாக.


பாடல் எண் : 07
நிழலார் சோலை நீலவண்டு இனம்
குழலார் பண்செய் கோலக்கா உளான்
கழலால் மொய்த்த பாதம் கைகளால்
தொழலார் பக்கல் துயரம் இல்லையே.

பாடல் விளக்கம்‬:
நிழல் செறிந்த சோலைகளில் நீல நிறம் பொருந்திய வண்டினங்கள் வேய்ங்குழல் போல இசை வழங்கும் திருக்கோலக்காவில் விளங்கும் சிவபிரானுடைய வீரக்கழல் செறிந்த திருவடிகளைக் கைகூப்பித் தொழுபவர் பக்கம் துயரம் வாராது.


பாடல் எண் : 08
எறியார் கடல்சூழ் இலங்கைக் கோன்தனை
முறையார் தடக்கை அடர்த்த மூர்த்தி தன்
குறியார் பண்செய் கோலக்காவையே
நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.

பாடல் விளக்கம்‬:
அலைகள் எறியும் கடலால் சூழப்பட்ட இலங்கை மன்னனாகிய இராவணனை, அவன் நீண்ட கைகள் முரிதலைப் பொருந்துமாறு அடர்த்த சிவபிரானைச் சுரத்தானங்களைக் குறித்த பண்ணிசையால் கோலக்காவில் சிவாகம நெறிகளின்படி வழிபடுவார் வினைகள் நீங்கும்.


பாடல் எண் : 09
நாற்ற மலர்மேல் அயனும் நாகத்தில்
ஆற்றலணை மேலவனும் காண்கிலா
கூற்றம் உதைத்த, குழகன் கோலக்கா
ஏற்றான் பாதம் ஏத்தி வாழ்மினே.

பாடல் விளக்கம்‬:
மணம் பொருந்திய தாமரை மலர்மேல் விளங்கும் நான்முகனும், ஆற்றல் பொருந்திய ஆதிசேடனாகிய அணையில் உறங்கும் திருமாலும் காணுதற்கு இயலாத, இயமனை உதைத்த குழகன் ஆகிய கோலக்காவில் விளங்கும் ஆன்ஏற்றை வாகனமாகக் கொண்ட இறைவன் திருவடிகளைப் போற்றி வாழ்வீர்களாக.


பாடல் எண் : 10
பெற்ற மாசு பிறக்கும் சமணரும்
உற்ற துவர் தோய் உருவிலாளரும்
குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப்
பற்றிப் பரவ பறையும் பாவமே.

பாடல் விளக்கம்‬:
நீராடாமல் தம் உடலிற் சேர்ந்த மாசுடன் தோன்றும் சமணரும், தம் உடலிற் பொருந்திய கல்லாடையால் தம் உருவை மறைத்துக் கொள்ளும் புத்தர்களும், குற்றமுடைய சமய நெறியை மேற்கொண்டவராவர். அவர்கள் தம் தெய்வம் என்று ஏற்றுக் கொள்ளாத கோலக்கா இறைவனைப் பற்றிப்போற்றப் பாவம் தீரும்.


பாடல் எண் : 11
நலங்கொள் காழி ஞானசம்பந்தன்
குலங்கொள் கோலக்கா உளானையே
வலங்கொள் பாடல் வல்ல வாய்மையார்
உலங்கொள் வினைபோய் ஓங்கி வாழ்வரே.

பாடல் விளக்கம்‬:
இயற்கை நலங்கள் யாவும் நிறைந்த சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன், பண்பால் உயர்ந்த குலத்தினரைக் கொண்டுள்ள கோலக்காவில் விளங்கும் இறைவனைப் பாடிய திருவருள் வென்றியைக் கொண்ட இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபடவல்ல வாய்மையாளர், மலைபோலும் திண்ணிய வினைகள் நீங்கப்பெற்றுச் சிறந்து வாழ்வர்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருள் விளக்கம் தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக