(காளையார்கோயில்)
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ காளீஸ்வரர், ஸ்ரீ சோமேஸ்வரர், ஸ்ரீ சுந்தரேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ சொர்ணவல்லி, ஸ்ரீ சௌந்தர நாயகி, ஸ்ரீ மீனாட்சி
திருமுறை : ஏழாம் திருமுறை 84 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்
பாடல் எண் : 01
தொண்டர் அடித்தொழலும் சோதி இளம்பிறையும்
சூதன மென்முலையாள் பாகமும் ஆகிவரும்
புண்டரிகப் பரிசாம் மேனியும் வானவர்கள்
பூசலிடக் கடல் நஞ்சுண்ட கருத்தமரும்
கொண்டல் எனத் திகழும் கண்டமும் எண்தோளும்
கோல நறுஞ்சடைமேல் வண்ணமும் கண்குளிரக்
கண்டு தொழப்பெறுவது என்று கொலோ அடியேன்
கார் வயல்சூழ் கானப்பேர் உறை காளையையே.
பொருளுரை:
அடியேன், மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த "திருக்கானப்பேர்" என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற காளை வடிவத்தினனாகிய பெருமானை, அவனது அடியவர்கள் வணங்குகின்ற திருவடியையும், ஒளியையுடைய இளைய பிறைச்சூட்டினையும், சூதாடு கருவிபோலும், மெல்லிய தனங்களையுடைய உமையவளது கூறாய் விளங்கும் இடப்பாகத்தையும், ஒளிவிடுகின்ற செந்தாமரை மலர்போலும் திருமேனியையும், தேவர்கள் ஓலமிட, அதற்கு இரங்கிக் கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட நினைவுக்குறி நீங்காதிருக்கின்ற மேகம்போல விளங்குகின்ற கண்டத்தையும், எட்டுத்தோள்களையும், அழகிய நல்ல சடையின்மேல் உள்ள அணிகளையும் கண்குளிரக் கண்டு வணங்கப் பெறுவது எந்நாளோ!.
பாடல் எண் : 02
கூதலிடும் சடையும் கோளரவும் விரவும்
கொக்கு இறகும் குளிர்மா மத்தமும் ஒத்துனதாள்
ஓதல் உணர்ந்து அடியார் உன் பெருமைக்கு நினைந்து
உள்ளுருகா விரசும் ஓசையைப் பாடலும் நீ
ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன்
அங்கையின் மாமலர் கொண்டு என் கணது அல்லல் கெடக்
காதலுற தொழுவது என்று கொலோ அடியேன்
கார் வயல்சூழ் கானப்பேர் உறை காளையையே.
பொருளுரை:
மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த "திருக்கானப்பேர்" என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற காளை வடிவுடைய தலைவனை, அடியேன் என்பால் உள்ள துன்பங்களெல்லாம் கெடுமாறு, அடியவர் உனது பெருமைகளை நினைந்து மனம் உருகி, செறிந்த இசையைப் பாடுதலும், அவர் நீயேயாகும் பேற்றைப் பெறுதலை உணர்ந்து, அவரோடு அன்பு மிகுந்து, உனது திருவடியை மனம் பொருந்திப் பாடுமாற்றைக் கற்று, உனது குளிர்மிகுந்த சடை முடியையும், அதன்கண் பொருந்திய கொடிய பாம்பையும், கொக்கிறகையும், குளிர்ந்த ஊமத்த மலரையும், அன்பு மேலும் மேலும் பெருகுமாறு, அகங்கையிற் சிறந்த மலர்களைக் கொண்டு வணங்கப் பெறுவது எந்நாளோ!.
பாடல் எண் : 03
நானுடை மாடெனவே நன்மை தரும் பரனை
நற்பதம் என்று உணர்வார் சொற்பதமார் சிவனைத்
தேனிடை இன்னமுதை பற்று அதனில் தெளிவைத்
தேவர்கள் நாயகனைப் பூவுயர் சென்னியனை
வானிடை மாமதியை மாசுறு சோதியனை
மாருதமும் அனலும் மண்டலமும்மாய
கானிடை மாநடனென் என்று எய்துவது என்று கொலோ
கார் வயல்சூழ் கானப்பேர் உறை காளையையே.
பொருளுரை:
நான் உடைமையாகப் பெற்றுள்ள செல்வம்போல எனக்கு நன்மையைத் தருகின்ற மேலானவனும், தன்னையே வீடு பேறாக உணர்பவரது சொல்நிலையில் நிறைந்து நிற்கும் மங்கல குணத்தினனும், தேனிடத்தும், அதன் தெளிவிடத்தும் உள்ள சுவை போல்பவனும், தேவர்களுக்குத் தலைவனும், பூக்கள் உயர்ந்து தோன்றுகின்ற முடியை உடையவனும், வானத்தில் உள்ள சிறந்த சந்திரனும், குற்றம் அற்ற ஒளியையுடைய கதிரவனும், காற்றும், தீயும், நிலமும் ஆகி நிற்பவனும் ஆகிய மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த "திருக்கானப்பேர்" என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவத்தினனாகிய பெருமானை, "காட்டில் சிறந்த நடனம் ஆடுபவன்" என்று சொல்லித் துதித்துத் தலைக்கூடப் பெறுவது எந்நாளோ!.
பாடல் எண் : 04
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலைத் தொழிலார்
சேவகம் முன் நினைவார் பாவகமும் நெறியும்
குற்றமில் தன்னடியார் கூறும் இசைப்பரிசும்
கோசிகமும் அரையில் கோவணமும் அதளும்
தன்னடியார் திண்புயமும் மார்பிடை நீறுதுதை
மாமலை மங்கையுமை சேர் சுவடும் புகழக்
கற்றனவும் பரவிக் கைதொழல் என்று கொலோ
கார் வயல்சூழ் கானப்பேர் உறை காளையையே.
பொருளுரை:
மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த, "திருக்கானப்பேர்" என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெருமானை அவனது பகைத்தவரது முப்புரங்களை அன்று அழித்த, வில்தொழில் பொருந்திய வீரத்தையும் தன்னை நினைவாரது நினைவின் வண்ணம் நிற்கும் நிலையையும், அவர்களை நடத்துகின்ற முறையையும், குற்றமில்லாத அவனது அடியார்கள் சொல்லுகின்ற புகழின் வகைகளையும், அரையில் உடுக்கின்ற கோவணமும், பட்டும், தோலும் ஆகிய உடைகளையும், வலிமை விளங்குகின்ற திண்ணிய தோள்களையும், நீறு செறிந்த மார்பின்கண், பெருமையையுடைய மலைமகள் தழுவியதனால் உண்டாகிய வடுவினையும், அடியேன், புகழ்ந்து பாடக்கற்றன பலவற்றாலும் துதித்துக் கைகூப்பி வணங்குதல் எந்நாளோ!.
பாடல் எண் : 05
கொல்லை விடைக் குழகும் கோல நறுஞ்சடையில்
கொத்து அலரும் இதழித் தொத்தும் அதனருகே
முல்லை படைத்த நகை மெல்லியலால் ஒருபால்
மோகம் மிகுத்து இலங்கும் கூறுசெய் எப்பரிசும்
தில்லை நகர்ப் பொதுவுற்று ஆடிய சீர் நடமும்
திண்மழுவும் கைமிசைக் கூர் எரியும் அடியார்
கல்லவடப் பரிசும் காணுவது என்று கொலோ
கார் வயல்சூழ் கானப்பேர் உறை காளையையே.
பொருளுரை:
மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த, "திருக்கானப்பேர்" என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானது, முல்லை நிலத்திற்கு உரிய விடையினது அழகையும், அழகிய நல்ல சடையின் கண் கொத்தாய் உள்ள பூக்களையும், மார்பில் கொன்றை மலரின் மாலையையும், அதன் அருகே ஒரு பாகத்தில், முல்லை அரும்பின் தன்மையைக் கொண்ட நகையினையும், மெல்லிய இயல்பினையும் உடையவளாகிய உமாதேவி, காதலை மிகுதியாகக்கொண்டு விளங்குகின்ற அப்பகுதி தருகின்ற எல்லாத் தன்மைகளையும், தில்லை நகரில் உள்ள சபையிற் பொருந்தி நின்று ஆடுகின்ற புகழையுடைய நடனத்தையும், கையில் உள்ள வலிய மழு, மிக்க தீ என்னும் இவற்றையும், அடியவர் சாத்தும் மணிவடத்தின் அழகையும் காண்பது எந்நாளோ!.
பாடல் எண் : 06
பண்ணு தலைப் பயனார் பாடலும் நீடுதலும்
பங்கய மாதனையார் பத்தியும் முத்தி அளித்து
எண்ணு தலைப்பெருமான் என்று எழுவார் அவர்தம்
ஏசறவும் இறையாம் எந்தையையும் விரவி
நண்ணு தலைப்படும் ஆறு எங்ஙனம் என்று அயலே
நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும்
கண்ணு தலைகனியைக் காண்பதும் என்று கொலோ
கார் வயல்சூழ் கானப்பேர் உறை காளையையே.
பொருளுரை:
தாமரை மலரில் உள்ள திருமகளைப் போலும் மகளிரது, யாழை முறைப்படி யமைத்தலைப் பயன்படச் செய்கின்ற பாடலின் சிறப்பையும், அதன்கண்ணே அவர்கள் நெடிது நிற்றலையும், அதற்கு ஏதுவாகிய அவர்களது பத்தியையும், தான் ஒருவனே வீடு பேற்றை அளித்தலால், அதனை விரும்புவோர் யாவராலும் உள்ளத்து இருத்தப்படுகின்ற முதற்கடவுள் என்று தன்னை நினைந்து துயிலெழுகின்ற மெய்யுணர்வுடையோர், அதன் பொருட்டு அவன் முன் வாடி நிற்கும் வாட்டத்தினையும், யாவர்க்கும் இறைவனாகிய என் தந்தையையும் ஒருங்கு காணுதலைப் பொருந்துமாறு எவ்வாறு என்று, சேய்மையில் நின்று வருந்துகின்ற என்னையும் பொருளாக நினைந்து உய்தி பெறும்படி அருள்செய்யும் கண்ணுதற் கடவுளும், கனிபோல இனிப்பவனும் ஆகிய, மிக்க நீரையுடைய "திருக்கானப்பேர்" என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெருமானை அடியேன் காணப்பெறுவதும் எந்நாளோ!.
பாடல் எண் : 07
மாவை உரித்து அதள் கொண்டு அங்கம் அணிந்தவனை
வஞ்சர் மனத்து இறையும் நெஞ்சு அணுகாதவனை
மூவர் உருத்தனதாம் மூல முதற்கருவை
மூசிடு மால்விடையின் பாகனை ஆகமுறப்
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை
பால் நறுநெய் தயிர் ஐந்தாடு பரம்பரனைக்
காவல் எனக்கு இறையென்று எய்துவது என்று கொலோ
கார் வயல்சூழ் கானப்பேர் உறை காளையையே.
பொருளுரை:
யானையை உரித்து அத்தோலைப் போர்வையாகக் கொண்டு, எலும்பை மாலையாக அணிந்தவனும், வஞ்சனையுடைய வரது மனத்தின்கண் தனது நெஞ்சினாலும் சிறிதும் அணுகாதவனும், மும்மூர்த்திகளது உருவமும் தன் உருவமே யாகின்ற முதல்முதற் காரணனும், `மூசு` என்னும் ஒலியுண்டாக உயிர்க்கின்ற பெரிய இடபத்தை நடத்துகின்றவனும், போலியாகவன்றி உண்மையாகவே தன்னை மனத்துட் பொருந்தப் பற்றுகின்ற அவர்கட்கு அமுதம் போல்பவனும், பால், நறுநெய், தயிர் முதலிய ஐந்திலும் மூழ்குகின்றவனும், மேலோர்க்கெல்லாம் மேலானவனும் ஆகிய மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த, `திருக்கானப்பேர்' என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெருமானை, அடியேன், எனக்குக் காவலனாகிய தலைவனாகக் கிடைக்கப்பெறுவது எந்நாளோ!.
பாடல் எண் : 08
தொண்டர் தமக்கு எளிய சோதியை வேதியனைத்
தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல் நஞ்சு
உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை
ஊழி படைத்தவனோடு ஒள் அரியும் உணரா
அண்டனை அண்டர் தமக்கு ஆகம நூல்மொழியும்
ஆதியை மேதகுசீர் ஓதியை வானவர்தம்
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்று கொலோ
கார் வயல்சூழ் கனப்பேர் உறை காளையையே.
பொருளுரை:
அடியார்களுக்கு எளிய ஒளியுருவினனும், வேதத்தை ஓதுபவனும், அத்தூய வேதத்தின் பொருளாய் உள்ள நீதி வடிவினனும், நீண்ட கடலில் எழுந்த நஞ்சினை உண்டு, அதனால் இறவாது எக்காலத்தும் இருப்பவனும், பல கற்பங்களில் உலகத்தைப் படைப்பவனாகிய பிரமனும், அழகிய திருமாலும் அறிய வொண்ணாத தேவனும், தேவர்களுக்கு ஞானநூலைச் சொல்லிய முதல்வனும். தேவர்களது கூற்றில் உள்ளவனும், தனது மேலான தகுதியையுடைய புகழைப் பலரானும் சொல்லப்படுபவனும் ஆகிய, மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த, "திருக்கானப்பேர்" என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெருமானை அடியேன், அன்போடு சென்று அடையப்பெறுவது எந்நாளோ.
பாடல் எண் : 09
நாதனை நாதம் மிகுந்த ஓசையது ஆனவனை
ஞான விளக்கொளியாம் ஊனுயிரைப் பயிரை
மாதனை மேதகு தன்பத்தர் மனத்து இறையும்
பற்று விடாதவனைக் குற்றமில் கொள்கையனைத்
தூதனை என்தனையாள் தோழனை நாயகனைத்
தாழ் மகரக் குழையும் தோடும் அணிந்ததிருக்
காதனை நாயடியேன் எய்துவது என்று கொலோ
கார் வயல்சூழ் கானப்பேர் உறை காளையையே.
பொருளுரை:
உலகிற்குத் தலைவனும், நுண்ணிய எழுத்தோசையும், பரியதாகிய இசையோசையுமாயும், ஞானமாகிய விளக்கினது ஒளியாயும், உடம்பின்கண் உள்ள உயிரும்! நிலத்தில் வளரும் பயிருமாயும் நிற்பவனும், மாதொரு பாகத்தை உடையவனும். மேலான தகுதியையுடைய, தன் அடியார்களது உள்ளத்தின்மேல் வைத்துள்ள பற்றினைச் சிறிதும் நீங்காதவனும், குற்றம் இல்லாத கொள்கையையுடையவனும், என்னைத் தன் தொண்டினிடத்து ஆளுகின்ற என் தூதனும், தோழனும், தலைவனும் ஆகியவனும், தாழத் தூங்குகின்ற மகரக் குழையையும் தோட்டையும் அணிந்த அழகிய காதினையுடையவனும் ஆகிய, மிக்க நீரையுடைய, "திருக்கானப்பேர்" என்னும் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெருமானை, நாய்போலும் அடியேன் தலைக்கூடப்பெறுவது எந்நாளோ!.
பாடல் எண் : 10
கன்னலை இன்னமுதை கார் வயல்சூழ் கானப்
பேருறை காளையை ஒண் சீருறை தண் தமிழால்
உன்னி மனத்தயரா உள்ளுருகி பரவும்
ஒண்பொழில் நாவலர்கோன் ஆகிய ஆரூரன்
பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார்
பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ
மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும்
மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே.
பொருளுரை:
கரும்பும், இனிய அமுதமும் போல்பவனாகிய, மிக்க நீரையுடைய வயல்கள் சூழ்ந்த, "திருக்கானப்பேர்" என்னுந் தலத்தில் எழுந்தருளியிருக்கின்ற, காளை வடிவினனாகிய பெருமானை, "எய்துவது என்று கொலோ" என்று நினைந்து மனம் உளைந்து, உளம் உருகி, அழகிய, புகழ் பொருந்திய, தண்ணிய தமிழால் துதிக்க முயன்ற அழகிய சோலைகளையுடைய திருநாவலூரில் உள்ளார்க்குத் தலைவனாகிய நம்பியாரூரன் பாடிய இவ்விசைப் பாடல்கள் பத்தினையும் பாடவல்லவர்கள், சிவனடியார்க்கு உள்ள இயல்புகள் அனைத்தையும் எய்தி, எல்லாத் திசைகளும் புகழ நெடிது வாழ்ந்து, பின்பு ஒருகால் பிறவி எய்துவாராயினும், மண்ணுலகிற்குத் தலைவராய் வாழ்தல் திண்ணம்.
குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| --- திருக்கானப்பேர் திருமுறை திருப்பதிகம் முற்றிற்று --- ||
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||