இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மகாலட்சுமிநாதர், ஸ்ரீ லக்ஷ்மிபுரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ லோகநாயகி
திருமுறை : ஏழாம் திருமுறை 19 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்
இத்திருப்பதிகம் இறைவரது பெருமைகள் பலவற்றையும் எடுத்தோதி, அவர் திருநின்றியூரை இடமாகக் கொண்டு எழுந்தருளியிருத்தலை வியந்து அருளிச் செய்தது.
பாடல் எண் : 01
அற்றவனார் அடியார் தமக்கு ஆயிழை பங்கினராம்
பற்றவனார் எம் பராபரர் என்று பலர் விரும்பும்
கொற்றவனார் குறுகாதவர் ஊர்நெடு வெஞ்சரத்தால்
செற்றவனார்க்கு இடமாவது நம் திருநின்றியூரே.
பொருளுரை:
பிற பற்றுக்களின்றித் தம் அடியையே பற்றும் அரிய அடியவர்க்குத் தாமும் அவர்க்கு அருளுதலையன்றி வேறு செயலற்றவராய் இருப்பவரும், பெண்ணொரு பாகத்தராகின்ற பற்றினை உடைய வரும் "எம் இறைவர்" என்று பலராலும் விரும்பப்படுகின்ற தலைவரும், பகைவருடைய ஊரினை, பெரிய, கொடிய அம்பினால் அழித்தவரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது நமது திருநின்றியூரே.
பாடல் எண் : 02
வாசத்தினார் மலர்க் கொன்றை உள்ளார் வடிவார்ந்த நீறு
பூசத்தினார் புகலிந்நகர் போற்றும் எம் புண்ணியத்தார்
நேசத்தினால் என்னை ஆளும் கொண்டார் நெடுமால் கடல்சூழ்
தேசத்தினார்க்கு இடமாவது நம் திருநின்றியூரே.
பொருளுரை:
மணம் நிறைந்த கொன்றை மாலையை அணிந்தவரும், அழகிய திருநீற்றைப் பூசுதலுடையவரும், சீகாழிப் பதியை உறைவிடமாகக் கொண்டு பாதுகாக்கின்ற புண்ணிய வடிவினரும், அருள் காரணமாக என்னை ஆளாகவும் கொண்டவரும், நீண்ட பெரிய கடல் சூழ்ந்த உலகத்தை உடையவரும் ஆகிய இறைவருக்கு இடமாய் நிற்பது, நமது திருநின்றியூரே.
பாடல் எண் : 03
அங்கையின் மூவிலை வேலர் அமரர் அடிபரவச்
சங்கையை நீங்க அருளித் தடங்கடல் நஞ்சம் உண்டார்
மங்கையொர் பாகர் மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல்
செங்கயல் பாயும் வயல் பொலியும் திருநின்றியூரே.
பொருளுரை:
அகங் கையில் மூவிலை வேலை (சூலத்தை) உடையவரும், தேவர்கள் தம் திருவடிகளைத் துதிக்க, அவர்கள் தம் மனக்கலக்கத்தை நீங்குமாறு அருள் சுரந்து, பெரிய கடலினின்றும் தோன்றிய நஞ்சினை உண்டவரும் ஆகிய இறைவர், உமாதேவியை ஒரு பாகத்தில் மகிழ்ச்சியுடன் வைத்து எழுந்தருளியிருக்கின்ற இடம், வளப்பம் நிறைந்த மிக்க நீரின் கண் செவ்விய கயல்கள் துள்ளுகின்ற வயல்கள் விளங்கும் திருநின்றியூரே.
பாடல் எண் : 04
ஆறு உகந்தார் அங்கம் நான்மறையார் எங்குமாகி அடல்
ஏறு உகந்தார் இசை ஏழ் உகந்தார் முடிக் கங்கை தன்னை
வேறு உகந்தார் விரிநூல் உகந்தார் பரி சாந்தமதா
நீறு உகந்தார் உறையும் இடமாம் திரு நின்றியூரே.
பொருளுரை:
வேதத்தின் ஆறு அங்கங்களை விரும்பிச் செய்தவரும், நான்கு வேதங்களையும் உடையவரும், எவ்விடத்தும் நிறைந்து நின்று, வெல்லுதலை உடைய எருதை விரும்பி ஏறுபவரும், ஏழிசைகளையும் விரும்பிக் கேட்பவரும், கங்கா தேவியைச் சிறப்பாக விரும்பித் தலையில் மறைத்து வைத்திருப்பவரும், அகன்ற முப்புரி நூலை விரும்பி அணிபவரும், பூசிக்கொள்கின்ற சாந்தமாக திருநீற்றை விரும்புகின்றவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருநின்றியூரே.
பாடல் எண் : 05
வஞ்சம் கொண்டார் மனம் சேரகில்லார் நறுநெய் தயிர் பால்
அஞ்சும் கொண்டாடிய வேட்கையினார் அதிகைப் பதியே
தஞ்சம் கொண்டார் தமக்கு என்றும் இருக்கை சரண் அடைந்தார்
நெஞ்சம் கொண்டார்க்கு இடமாவது நம் திருநின்றியூரே.
பொருளுரை:
வஞ்சனையை உடையவரது மனத்திற் சேராதவரும், `நறுநெய், தயிர், பால்` முதலிய ஆனஞ்சினை ஈட்டிக் கொண்டு முழுகுகின்ற பெருவிருப்புடையவரும், திருவதிகைப் பதியினையே தமக்கு என்றும் இருக்கையாகும்படி அதனைத் தஞ்சமாகக் கொண்ட வரும், தம்மையே புகலிடமாக அடைந்தவரது உள்ளத்தைக் காணியாகக் கொண்டவரும் ஆகிய இறைவர்க்கு இடமாய் நிற்பது, நமது திருநின்றியூரே.
பாடல் எண் : 06
ஆர்த்தவர் ஆடரவம் அரைமேல் புலி ஈருரிவை
போர்த்தவர் ஆனையின் தோலுடல் வெம்புலால் கை அகலப்
பார்த்தவர் இன்னுயிர் பார் படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றைச்
சேர்த்தவருக்கு உறையும் இடமாம் திருநின்றியூரே.
பொருளுரை:
அரையில் புலியினது பசுந்தோலையும், ஆடுகின்ற பாம்பையும் கட்டியவரும், உடம்பில் யானையின் தோலைப் போர்த்தவரும், அவற்றால் தம்மிடத்துத் தீய புலால் நாற்றம் வீசாதவாறு செய்து கொண்டவரும், பூமியில் இனிய உயிர்களைப் படைத்தவனாகிய பிரமதேவனது தலைகள் ஐந்தில் ஒன்றைத் தம் கையில் வைத்துக்கொண்டவரும் ஆகிய இறைவருக்கு இடம் திருநின்றியூரேயாகும்.
பாடல் எண் : 07
தலையிடையார் பலி சென்று அகந்தோறும் திரிந்த செல்வர்
மலையுடையாள் ஒரு பாகம் வைத்தார் கல் துதைந்த நன்னீர்
அலையுடையார் சடை எட்டும் சுழல அருநடஞ்செய்
நிலையுடையார் உறையும் இடமாம் திருநின்றியூரே.
பொருளுரை:
தலை ஓட்டிற் பொருந்துகின்ற பிச்சைக்குச் சென்று இல்லங்கள் தோறும் திரிகின்ற தன்மையை உடைய செல்வரும், மலையைப் பிறந்த இடமாக உடையவளை ஒருபாகத்தில் வைத்தவரும், மலையின்கண் நிறைந்து வீழ்கின்ற நல்ல நீரினது அலையை உடைய நிறைந்த சடைகள் எட்டும் எட்டுத் திசைகளிலும் சுழலுமாறு அரிய நடனத்தைச் செய்கின்ற நிலையினை உடையவரும் ஆகிய இறைவர் எழுந்தருளியிருக்கின்ற இடம் திருநின்றியூரேயாம்.
பாடல் எண் : 08
எட்டு உகந்தார் திசை ஏழ் உகந்தார் எழுத்து ஆறும் அன்பர்
இட்டு உகந்தார் மலர்ப் பூசை இச்சிக்கும் இறைவர் முன்னாள்
பட்டுகும் பாரிடைக் காலனைக் காய்ந்து பலி இரந்து ஊண்
சிட்டு உகந்தார்க்கு இடமாவது நம் திருநின்றியூரே.
பொருளுரை:
திசைகள் எட்டினையும், ஏழ் எழுத்துக்களால் தோற்றுவிக்கப்படும் இசைகள் ஏழினையும், மனம் அடங்கப்பெற்ற அன்பர்கள் விரும்பியிடுதலால் நிறைந்த மலர்களையுடைய வழிபாட்டினையும் முன்னொருநாள் நிலத்தின்கண் இறந்து வீழ்ந்த கூற்றுவனை அவன் அங்ஙனம் ஆமாறு வெகுண்டமையோடு, பிச்சையேற்று உண்ணுதலை உடைய ஒழுக்கத்தினையும் விரும்புகின்றவராகிய இறைவருக்கு இடமாய் நிற்பது, நமது திருநின்றியூரே.
பாடல் எண் : 09
காலமும் ஞாயிறுமாகி நின்றார் கழல்பேண வல்லார்
சீலமும் செய்கையும் கண்டு உகப்பார் அடி போற்றிசைப்ப
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க
நீலநஞ்சு உண்டவருக்கு இடமாம் திருநின்றியூரே.
பொருளுரை:
காலமும், அதனைப் பகுக்கின்ற கதிரவனும் ஆகி நிற்பவரும், தமது திருவடியையே அன்போடு பற்றவல்ல அடியவர்களது நோன்பினையும், செயல்களையும் கண்டு அவர்களை விரும்புகின்றவரும், நீலநிறம் பொருந்திய நஞ்சினை உண்டவருமாகிய இறைவர்க்கு, அவரது திருவடிகளை அவ்வடியவர்கள் துதி செய்யவும் `திருமால், பிரமன், இந்திரன்` முதலியோர் மந்திரம் சொல்லி வணங்கவும், திருநின்றியூரே இடமாய் நிற்கும்.
பாடல் எண் : 10
வாயார் மனத்தால் நினைக்குமவருக்கு அருந்தவத்தில்
தூயார் சுடுபொடி ஆடிய மேனியர் வானில் என்றும்
மேயார் விடை உகந்து ஏறிய வித்தகர் பேர்ந்தவர்க்குச்
சேயார் அடியார்க்கு அணியவர் ஊர் திருநின்றியூரே.
பொருளுரை:
வாயார வாழ்த்தி, மனத்தால் எப்பொழுதும் மறவாது நினைப்பவர்க்கு உண்மைப் பொருளாகின்றவரும், அரியதவக் கோலத்தை உடைய தூயவரும், வெந்த சாம்பலில் மூழ்கிய திருமேனியை உடையவரும் என்றும் பரவெளியிலே இருப்பவரும், இடபத்தை விரும்பி ஏறும் சதுரப்பாட்டினை உடையவரும், தம்மை அடையாதவருக்குச் சேய்மைக் கண்ணராகின்றவரும் ஆகிய இறைவரது ஊர் திருநின்றியூரே.
பாடல் எண் : 11
சேரும் புகழ்த்தொண்டர் செய்கையறாத் திருநின்றியூரில்
சீரும் சிவகதியாய் இருந்தானைத் திருநாவல்
ஆரூரன் உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினைபோய்ப்
பாரும் விசும்பும் தொழ பரமன் அடி கூடுவரே.
பொருளுரை:
திரண்ட புகழையுடைய அடியார்களது தொண்டுகள் எந்நாளும் நீங்காதிருக்கின்ற திருநின்றியூரின் கண் சிறந்த வீடுபேறாய் எழுந்தருளியிருக்கின்ற இறைவனைத் திருநாவலூரினனாகிய நம்பியாரூரன் பாடிய, பொருத்தமான இத்தமிழ்ப் பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர், வினை நீங்கப் பெற்று, மண்ணுலகத் தவரும், விண்ணுலகத்தவரும் வணங்கும் படி, சிவபெருமானது திருவடியை அடைவார்கள்.
குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
A good opportunity to kno the Thirumurai pathigangal.
பதிலளிநீக்குVery useful one
பதிலளிநீக்குVery useful one
பதிலளிநீக்கு