இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மகாலட்சுமிநாதர், ஸ்ரீ லக்ஷ்மிபுரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ லோகநாயகி
திருமுறை : முதல் திருமுறை 18 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
பாடல் எண் : 01
சூலம்படை சுண்ணப்பொடி சாந்தம் சுடு நீறு
பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்
காலன்வலி காலினொடு போக்கி கடி கமழும்
நீலம்மலர்ப் பொய்கை நின்றியூரின் நிலையோர்க்கே.
பொருளுரை:
முன்னொரு காலத்தில் காலனின் வலிமையைக் காலால் உதைத்துப் போக்கி, மணம் கமழும் நீல மலர்கள் மலர்ந்த பொய்கைகளை உடைய திருநின்றியூரில் நிலையாக எழுந்தருளியுள்ள இறைவற்குப் படைக்கலன் சூலம். சுண்ணப்பொடியும், சாந்தமும், திருநீறே. பால் போலும் வெண்மையான பிறைமதி அவரது செந்நிறச் சடைமுடியின் மேலது.
பாடல் எண் : 02
அச்சம் இலர் பாவம் இலர் கேடும் இலர் அடியார்
நிச்சம்முறு நோயும் இலர் தாமும் நின்றியூரில்
நச்சம் மிடறு உடையார் நறுங்கொன்றை நயந்து ஆளும்
பச்சம்முடை அடிகள் திருப்பாதம் பணிவாரே.
பொருளுரை:
நஞ்சை மிடற்றிலே நிறுத்தித் தேவர்களைக் காத்தருளியவரும், மணம் கமழும் கொன்றை மலர்களை விரும்பிச் சூடியவரும், தம்மை வழிபடும் அடியவர்களை ஆட்கொண்டருளும் அன்புடையவரும் ஆகிய நின்றியூரில் விளங்கும் இறைவரது பாதம் பணிவார் அச்சம், பாவம், கேடு, நாள்தோறும் வரும் நோய் ஆகியன இலராவர்.
பாடல் எண் : 03
பறையின் ஒலி சங்கின் ஒலி பாங்கு ஆரவும் ஆர
அறையும் ஒலி எங்கும் அவை அறிவார் அவர் தன்மை
நிறையும் புனல் சடை மேலுடை அடிகள் நின்றியூரில்
உறையும் இறை அல்லது எனது உள்ளம் உணராதே.
பொருளுரை:
பறையடிக்கும் ஒலி, சங்கு முழங்கும் முழக்கம், பக்கங்களிலெல்லாம் மிகவும் ஒலிக்கும் ஏனைய ஒலிகள் ஆகியவற்றில் இறைவனது நாத தத்துவத்தை அறிவோர் உணர்வர். நிறைந்த கங்கைப் புனலைச் சடைமிசை உடையவராய் நின்றியூரில் உறையும் அவ்விறைவரை அல்லது என் உள்ளம் பிறபொருள்களுள் ஒன்றனையும் உணராது.
பாடல் எண் : 04
பூண்ட வரைமார்பில் புரிநூலன் விரி கொன்றை
ஈண்ட அதனோடு ஒரு பாலம்மதி அதனைத்
தீண்டும் பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில்
ஆண்ட கழல் தொழல் அல்லது அறியார் அவர் அறிவே.
பொருளுரை:
அணிகலன்களைப் பூண்ட மலைபோன்ற மார்பில் முப்புரிநூலை அணிந்து, விரிந்த கொன்றை மலர் மாலையையும் அதனோடும் பொருந்தப் பால் போன்ற வெண்மையான திங்களையும் சூடி, வானத்தைத் தீண்டும் பொழில்கள் சூழ்ந்த திருநின்றியூரில் எழுந்தருளி, நம்மை ஆண்டருளிய அவ்விறைவன் திருவடிகளைத்தொழுதல் அல்லது, அவன் இயல்புகளை அடியவர் எவரும் அறியார்.
பாடல் எண் : 05
குழலின் இசை வண்டின் இசை கண்டு குயில் கூவும்
நிழலின் எழில் தாழ்ந்த பொழில் சூழ்ந்த நின்றியூரில்
அழலின் வலன் அங்கையது ஏந்தி அனல் ஆடும்
கழலின் ஒலி ஆடும் புரி கடவுள்களை கண்ணே.
பொருளுரை:
குழலிசை வண்டிசை ஆகியவற்றைக் கேட்டுக் குயில்கள் கூவுவதும், நிழலின் அழகு தங்கியதுமாகிய பொழில்களால் சூழப்பட்ட நின்றியூரிடத்து அழலை வலத்திருக்கரத்தில் ஏந்தி அனலிடை நின்று கழல்களின் ஒலிகள் கேட்குமாறு ஆடும் இறைவன் நமக்குக் களைகண் ஆவான்.
பாடல் எண் : 06
மூரன் முறுவல் வெண்ணகை உடையாள் ஒரு பாகம்
சாரன் மதி அதனோடு உடன் சலவஞ்சடை வைத்த
வீரன் மலி அழகுகார் பொழில் மிடையும் திருநின்றி
ஊரன் கழல் அல்லாது எனது உள்ளம் உணராதே.
பொருளுரை:
புன்முறுவலைத் தரும் வெண்மையான பற்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு, சடைமுடியில் சார்ந்துள்ள பிறைமதியோடு கங்கையை வைத்துள்ள வீரனும் அழகு மலிந்த பொழில்கள் செறிந்த திருநின்றியூரில் எழுந்தருளியவனுமாகிய சிவபிரான் திருவடிகளை அல்லாது எனது உள்ளம் வேறு ஒன்றையும் உணராது.
பாடல் எண் : 07
பற்றியொரு தலை கையினில் ஏந்திப் பலி தேரும்
பெற்றியது ஆகித் திரி தேவர் பெருமானார்
சுற்றியொரு வேங்கை அதளோடும் பிறை சூடும்
நெற்றியொரு கண்ணார் நின்றியூரின் நிலையாரே.
பொருளுரை:
பிரமனது தலைகளில் ஒன்றைப் பறித்து அதனைக் கையினில் ஏந்திப் பலிகேட்கும் இயல்பினராய்த் திரிகின்ற தேவர் தலைவரும் புலித்தோலை இடையில் சுற்றியிருப்பதோடு முடியில் பிறை மதியைச் சூடியவரும், நெற்றியில் ஒரு கண்ணை உடையவரும் ஆகிய பெருமானார் திருநின்றியூரின்கண் நிலையாக எழுந்தருளியுள்ளார்.
பாடல் எண் : 08
இப்பதிகத்தில் உள்ள 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
பாடல் எண் : 09
நல்லம் மலர் மேலானொடு ஞாலம்மது உண்டான்
அல்லரென ஆவரென நின்றும் அறிவு அரிய
நெல்லின் பொழில் சூழ்ந்த நின்றியூரில் நிலையார் எம்
செல்வரடி அல்லாதென சிந்தை உணராதே.
பொருளுரை:
நல்ல தாமரை மலர்மேல் உறையும் நான்முகனோடு உலகைத் தன் வயிற்றகத்து அடக்கிக் காட்டிய திருமாலும், சிவபிரானே முழுமுதற் பொருள் ஆவர் எனவும் அல்லர் எனவும் கூறிக்கொண்டு தேடிக் காணுதற்கரியவராய் நின்றவரும் நெல் வயல்களால் சூழப்பட்ட நின்றியூரில் நிலையாக எழுந்தருளிய எம் செல்வருமாகிய சிவபிரான் திருவடிகளை அல்லது என் சிந்தை வேறொன்றையும் உணராது.
பாடல் எண் : 10
நெறியில் வரு பேரா வகை நினையா நினைவு ஒன்றை
அறிவில் சமண் ஆதர் உரை கேட்டும் அயராதே
நெறியில்லவர் குறிகள் நினையாதே நின்றியூரில்
மறியேந்திய கையான் அடி வாழ்த்தும் அது வாழ்த்தே.
பொருளுரை:
சமய நெறியில் பயில்வதால் பேராமலும் மறவாமலும் நினைக்கும் முழுமுதற்பொருளை அறியும் அறிவற்ற சமணர்களாகிய நெறியற்ற கீழ்மக்களின் உரைகளைக் கேட்டு மயங்காமலும், தமக்கென்று உண்மை நெறியல்லாத புறச்சமயிகளின் அடையாளங்களைக் கருதாமலும் நின்றியூரில் மான் ஏந்திய கையனாய் விளங்கும் இறைவன் திருவடிகளை வாழ்த்துவதே வாழ்த்தாகும்.
பாடல் எண் : 11
குன்றம்மது எடுத்தான் உடல் தோளும் நெரிவாக
நின்று அங்கு ஒருவிரலால் உற வைத்தான் நின்றியூரை
நன்றார் தரு புகலித் தமிழ் ஞானம் மிகு பந்தன்
குன்றாத் தமிழ் சொல்லக் குறைவு இன்றி நிறை புகழே.
பொருளுரை:
கயிலை மலையை எடுத்த இராவணனின் உடல் தோள் ஆகியன நெரியத் தன் கால்விரல் ஒன்றால் ஊன்றியவனது நின்றியூர் மீது, நன்மைகளையே செய்யும் புகலிப்பதியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் உரைத்த திருவருள் நலம் குன்றாத இத்திருப்பதிகப் பாடல்களை உரைப்பதனால் குறைவின்றிப் புகழ் நிறையும்.
குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக