புதன், 1 ஜூன், 2016

திருநின்றியூர் திருமுறை திருப்பதிகம் 02

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மகாலட்சுமிநாதர், ஸ்ரீ லக்ஷ்மிபுரீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ லோகநாயகி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 23 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
கொடுங்கண் வெண்தலை கொண்டு குறைவிலைப் 
படும் கண் ஒன்று இலராய் பலி தேர்ந்து உண்பர்
நெடுங்கண் மங்கையர் ஆட்டு அயர் நின்றியூர்க் 
கடுங்கைக் கூற்று உதைத்திட்ட கருத்தரே.

பொருளுரை:
நீண்ட கண்களை உடைய மங்கையர்கள் ஆடல் புரிகின்ற நின்றியூரில், கடிய கையுடைய கூற்றுவனை உதைத் திட்டவரும் அன்பர்களின் கருத்தில் உறைபவரும் ஆகிய இறைவர், கொடிய கண்களை உடைய வெள்ளிய கபாலம் கொண்டு, குறை கொண்டு விலை கூவுதற்குப்படும் பொருள் ஏதுமிலராகிய இரவலராய்ப் பலி தேர்ந்து உண்ணும் இயல்புடையவர் ஆவர்.


பாடல் எண் : 02
வீதி வேல் நெடுங்கண்ணியர் வெள்வளை 
நீதியே கொளப்பாலது நின்றியூர் 
வேதம் ஓதி விளங்கு வெண் தோட்டராய்
காதில் வெண்குழை வைத்த எம் கள்வரே.

பொருளுரை:
வேதங்களை ஓதுபவரும், விளங்குகின்ற வெள்ளியதோடும் வெள்ளிய சங்கக்குழையும் உடைய காதினருமாகிய (அர்த்தநாரீசுவரரும்) எமது கள்வரே! வீதியில் வேலனைய நீண்ட கண்களை உடைய பெண்களின் வெள்வளைகளைக் கொள்வது தேவரீர்க்கு நீதியோ? உரைத்தருள்வீராக.


பாடல் எண் : 03
புற்றினார் அரவம் புலித்தோல்மிசைச் 
சுற்றினார் சுண்ணப் போர்வை கொண்டார் சுடர் 
நெற்றிக்கண் உடையார் அமர் நின்றியூர் 
பற்றினாரைப் பற்றா வினைப் பாவமே.

பொருளுரை:
புற்றினைப் பொருந்திய அரவினைப் புலித் தோலின்மேல் சுற்றியவரும், திருநீற்றைப் பூசிய மேனியினரும், சுடர் நெற்றிக்கண்ணை உடையாருமாகிய இறைவர் அமர்கின்ற நின்றியூரைப் பற்றிய அன்பர்களை, வினைகளும் அவற்றான் வரும் பாபங்களும் பற்றமாட்டா.


பாடல் எண் : 04
பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் மல்கி அயலெலாம்
நிறையும் பூம்பொழில் சூழ்திரு நின்றியூர் 
உறையும் ஈசனை உள்கும் என் உள்ளமே.

பொருளுரை:
பறையின் ஓசையும், தெய்வப் பாடல்களின் ஓசையும், வேதங்களின் ஓசையும் நிறைந்து மருங்கெல்லாம் ஒலிக்கின்ற பூம்பொழில் சூழ்ந்த திருநின்றியூரில் உறையும் ஈசனை என் உள்ளம் உள்குகின்றது.


பாடல் எண் : 05
சுனையுள் நீலஞ் சுளியும் நெடுங்கணாள்
இனையன் என்று என்றும் ஏசுவது என் கொலோ 
நினையும் தண்வயல் சூழ்திரு நின்றியூர்ப் 
பனையின் ஈருரி போர்த்த பரமரே.

பொருளுரை:
நினைத்தற்குரிய குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநின்றியூரில். பனை போன்ற துதிக்கையை உடைய யானையின் உரியினைப் போர்த்த பரமரே! சுனையிற் பூத்த நீல மலரும் தோற்றுச் சுளித்தற் கேதுவாய் நெடுங்கண்களை உடையளாகிய இவள்! இத்தன்மை உடையவன், என்று என்றும் ஏசுவதன் காரணம் என்னை.


பாடல் எண் : 06
உரைப்பக் கேண்மின் நும் உச்சி உளான் தனை
நிரைப்பொன் மாமதில் சூழ்திரு நின்றியூர் 
உரைப்பொன் கற்றையர் ஆர் இவரோ எனில்
திரைத்துப் பாடித் திரிதரும் செல்வரே.

பொருளுரை:
உரைப்பக் கேட்பீராக; நும் சென்னியின்கண் உள்ள சிவபிரானை, வரிசையாகிய பொன்மதில் சூழ்ந்த திருநின்றியூரில் மாற்றுரைக்கத்தக்க பொன் போன்ற கற்றைச் சடையுடையராகிய இவரை ஆர் என்று வினவுவீராயின், அலைத்துப் பாடித் திரிதரும் செல்வர் இவர்.


பாடல் எண் : 07
கன்றியூர் முகில் போலும் கருங்களிறு 
இன்றி ஏறலனாலிது என்கொலோ
நின்றியூர் பதியாக நிலாயவன்
வென்றி ஏறுடை எங்கள் விகிர்தனே.

பொருளுரை:
திருநின்றியூரைப் பதியாகப் பொருந்தியவனும், வெற்றி மிக்க ஆனேறு உடையவனுமாகிய எங்கள் விகிர்தன், கறுத்து ஊர்ந்து வருகின்ற முகில் போன்ற கருங்களிறு இன்றி வேறு ஏறி ஊராதது என்னையோ?.


பாடல் எண் : 08
நிலையிலா வெள்ளை மாலையன் நீண்டதோர் 
கொலை விலால் எயில் எய்த கொடியவன்
நிலையினார் வயல் சூழ்திரு நின்றியூர் 
உரையினால் தொழுவார் வினை ஓயுமே.

பொருளுரை:
நிலையில்லாத வெள்ளெலும்புகளை மாலையாக உடையவனும், நீண்டதோர் கொல்லுந் தொழிலுடைய வில்லால் எயில் எய்த கொடியவனும், நிலையினார் வயல்சூழ் திருநின்றியூர் இறைவனும் ஆகிய பெருமானை மொழியினாற் பாடித் தொழுவார் வினைகள் கெடும்.


பாடல் எண் : 09
அஞ்சி ஆகிலும் அன்பு பட்டாகிலும்
நெஞ்சம் வாழி நினை நின்றியூரை நீ
இஞ்சி மாமதில் எய்து இமையோர் தொழக் 
குஞ்சி வான்பிறை சூடிய கூத்தனே.

பொருளுரை:
நெஞ்சமே! இஞ்சியாகிய மதிலையுடைய முப்புரங்களை எய்து, தேவர்கள் தொழ, தன்சடையில் வெள்ளிய பிறையைச் சூடிய கூத்தன் உறைகின்ற நின்றியூரை நீ, அஞ்சியாயினும், அன்பினைப் பொருந்தியாயினும் நினைத்து உய்வாயாக.


பாடல் எண் : 10
எளியனா மொழியா இலங்கைக்கு இறை
களியினால் கயிலாயம் எடுத்தவன்
நெளிய ஊன்ற வல்லான் அமர் நின்றியூர் 
அளியினால் தொழுவார் வினை அல்குமே.

பொருளுரை:
எளியனாக மொழியாத இலங்கைக்கு இறைவனாம் இராவணன் செருக்கினாற் கயிலாயம் எடுத்தபோது நெளியுமாறு திருவிரலால் ஊன்ற வல்லவன் அமர்கின்ற திருநின்றியூரை அன்பினால் தொழுவார்களின் வினைகள் சுருங்கும்.

குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram)  இணையத்திற்கு...

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக