இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ மகாலட்சுமிநாதர், ஸ்ரீ லக்ஷ்மிபுரீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ லோகநாயகி
திருமுறை : ஏழாம் திருமுறை 65 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : சுந்தரமூர்த்தி சுவாமிகள்
பாடல் எண் : 01
திருவும் வண்மையும் திண்திறல் அரசும் சிலந்தியார் செய்த செய்பணி கண்டு
மருவு கோச்செங்கணான் தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலரடி அடைந்தேன்
பெருகு பொன்னி வந்து உந்து பன்மணியைப் பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணி
தெருவும் தெற்றியும் முற்றமும் பற்றி திரட்டும் தென்திரு நின்றியூரானே.
பொருளுரை:
பெருகி வருகின்ற காவிரியாற்றின் நீர், கொணர்ந்து தள்ளிய பல மணிகளை, சிறுமகாரது பல குழுக்கள், விளையாட்டிற் சென்று எடுத்து, தெருக்களிலும், திண்ணைகளிலும், முற்றங்களிலும் குவிக்கின்ற, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, நீ, சிலந்தி செய்த செய்கைத் தொண்டினைக் கண்டு, அதன் மறுபிறப்பாய் வந்த கோச்செங்கட் சோழ நாயனார்க்கு, செல்வத்தையும், கொடைத் தன்மையையும், திண்ணிய ஆற்றலை உடைய அரசாட்சியையும் அளித்த செய்தியைக் கேட்டு, அடியேன் உனது மலர் போலும் திருவடியைப் புகலிடமாக அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
பாடல் எண் : 02
அணிகொள் ஆடையம் பூணணி மாலை அமுது செய்த அமுதம் பெறு சண்டி
இணைகொள் ஏழெழு நூறிரு பனுவல் ஈன்றவன் திருநாவினுக்கு அரையன்
கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற காதல் இன்னருள் ஆதரித்து அடைந்தேன்
திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியும் செல்வத் தென்திரு நின்றியூரானே.
பொருளுரை:
திணை வரையறையைக் கொண்ட செவ்விய தமிழைப் பசிய கிளிகள் ஆராய்ந்து சொல்லுகின்ற, செல்வத்தையுடைய, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, உன்பால், பாலைக் கொணர்ந்து ஆட்டி, அழகினைக் கொண்ட ஆடை, அழகிய அணிகலம், சூடுகின்ற மாலை, திருவமுது என்னும் இவற்றைப் பெற்ற சண்டேசுர நாயனாரும், தனக்குத்தானே நிகராய் உள்ள பாடல்கள் நாலாயிரத்துத் தொள்ளாயிரத்தை அருளிச் செய்தவராகிய திருநாவுக்கரசரும், அம்பைக் கையிலே கொண்ட கண்ணப்ப நாயனாரும் பெற்ற, அன்பின் பயனாகிய இனிய திருவருளை விரும்பி, அடியேன் உனது திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
பாடல் எண் : 03
மொய்த்த சீர் முந்நூற்று அறுபது வேலி மூன்று நூறு வேதியரொடு நுனக்கு
ஒத்த பொன்மணிக் கலசங்கள் ஏந்தி ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்பப்
பத்தி செய்த அப்பரசுராமற்குப் பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன்
சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வத் தென்திரு நின்றியூரானே.
பொருளுரை:
சித்தர், தேவர், அசுரர், ஆகியோர் வணங்குகின்ற, செல்வத்தையுடைய, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, உன்னிடத்து அன்பு செய்த பரசுராமன் உனக்கு மிக்க புகழையுடைய முந்நூறு வேதியரோடு, முந்நூற்றறுபது வேலிப் பரப்புள்ள நிலத்தை, என்றும் விளங்கும் `திருநின்றியூர்` என்று பெயரிட்டு ஏற்புடைய பொன்னாலாகிய அழகிய கலசங்களைக் கொண்டு நீர் வார்த்து அளிக்க, அவனுக்கு உன் திருவடியை அளித்த முறைமையை அறிந்து, அடியேன், உனது திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
பாடல் எண் : 04
இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன்முலைக் கலசங்கள் ஏந்திச்
சுரபி பால் சொரிந்து ஆட்டி நின்பாதம் தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டு
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து, நுன் பாதத்தை அடைந்தேன்
நிரவி நித்திலம் அத்தகு செம்பொன் அளிக்கும் தென்திரு நின்றியூரானே.
பொருளுரை:
மேலானவனே, நெற்பயிர்கள் முத்துக்களைப் பரப்பி, அம்முத்துக்களோடு ஒத்து மதிப்புடைய செம்பொன்போலும் நெற்களை அளிக்கின்ற திருநின்றியூரில் உள்ள இறைவனே, உன்னை, பசு ஒன்று, சூரியனது நீண்ட ஒளி தோன்றுவதற்கு முன்பே எழுந்து, தன் மடியாகிய கலசத்தை ஏந்திப் பால் சொரிந்து வழிபட்டு நின் திருவடியை அடைந்த செய்தியை உறுதிப்படக் கேட்டு, அடியேன், உனது திருவடியை நினைத்துத் துதித்து, பற்றுக்களை எல்லாம் விடுத்து வந்து அடைந்தேன்; என்னை ஏன்றுகொண்டருள்.
பாடல் எண் : 05
வந்தோர் இந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடு நீ ஆள்க என அருளிச்
சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்திச் சகளி செய்து இறைஞ்சு அகத்தியர் தமக்குச்
சிந்து மாமணி அணி திருப்பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன்
செந்தண் மாமலர்த் திருமகள் மருவும் செல்வத் தென்திரு நின்றியூரானே.
பொருளுரை:
செவ்விய தண்ணிய சிறந்த தாமரை மலரின்கண் இருக்கும் திருமகள் வாழும், செல்வத்தையுடைய, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, இந்திரன் ஒருவன், உன்னிடத்து வந்து உன்னை வழிபட, அதற்கு மகிழ்ந்து, அவனுக்கு, `நீ விண்ணுலகை ஆள்க` என்று சொல்லி வழங்கிய தலைமையையும், `காலை, நண் பகல், மாலை` என்னும் மூன்று சந்திகளிலும், இலிங்க உருவத்தை நிறுவி, கலையுருவத்தை அமைத்து வழிபட்ட அகத்திய முனிவருக்கு அருவிகள் மணிகளைச் சிதறுகின்ற, அழகிய திருப்பொதியில் மலையில் வீற்றிருக்க அருளிய பெருமையையும் அறிந்து, அடியேன், உனது திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
பாடல் எண் : 06
காது பொத்தரைக் கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயம்
கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக் கோல ஆல்நிழற் கீழறம் பகர
ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு நின் இணையடி அடைந்தேன்
நீதி வேதியர் நிறை புகழ் உலகில் நிலவு தென்திரு நின்றியூரானே.
பொருளுரை:
நீதியையுடைய அந்தணர்கள் நிறைந்திருத்தலால் உளதாகிய புகழ், உலக முழுதும் விளங்குகின்ற அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, கேள்வியால் துளைக்கப்பட்ட செவியினையுடைய நால்வர் முனிவர்கள் `கின்னரர், புலி, கடிக்கும் இயல்புடைய பாம்பு, பற்றுதற்கு அரிய சிங்கம், குற்றம் அற்ற பெரிய தவத்தவர் குழாம்` என்ற இவருடன் இருந்து கேட்ப, நீ, அழகிய ஆல் நிழலில் இருந்து, அறத்தின் உண்மைகளை எல்லாம் சொல்ல, அவற்றைக் கேட்டுப் பின்பு வேதங்களை இயற்றி அவர்கள் அடைந்த இன்பத்தினைக் கேட்டறிந்து, அடியேனும், உனது திருவடியிணையை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
பாடல் எண் : 07
கோடு நான்குடைக் குஞ்சரங் குலுங்க நலங்கொள் பாதம் நின்று ஏத்திய பொழுதே
பீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின் பொன்கழல் அடைந்தேன்
பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும் பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார்
நீடு மாடங்கள் மாளிகை தோறும் நிலவு தென்திரு நின்றியூரானே.
பொருளுரை:
பெண் மயில்கள் போலவும், இளைய பெண் மான்கள் போலவும், இளைய கிளிகள் போலவும், பிறைபோலும் நெற்றியையுடைய மகளிர், உயர்ந்த மாடங்களையுடைய மாளிகை தோறும் விளங்குகின்ற, அழகிய திருநின்றியூரில் உள்ள இறைவனே, நான்கு கொம்புகளையுடைய யானை, உன்முன் நின்று, தனது உடல், அன்பினால் நடுங்கத் துதித்தபொழுதே, முன்னை வடிவத்தையும், விண்ணுலகத்தை அடையும் பெருமையையும் பெற்ற தன்மையைக் கேட்டு அடியேன், உனது பொன்போலும் திருவடியை அடைந்தேன்; என்னை ஏன்று கொண்டருள்.
இப்பதிகத்தில் மீதமுள்ள செய்யுட்கள் சிதைந்து போயிற்று.
குறிப்பு: இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். பதிகத்திற்கான பொருளுரை தேவாரம்(thevaaram) என்ற இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. நன்றி தேவாரம்(thevaaram) இணையத்திற்கு...
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| --- திருநின்றியூர் திருமுறை திருப்பதிகம் முற்றிற்று --- ||
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக