இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ நெல்லையப்பர், ஸ்ரீ வேணுவனநாதர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ காந்திமதி அம்மை, ஸ்ரீ வடிவுடையம்மை
திருமுறை : மூன்றாம் திருமுறை 92 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
கோவில் தோன்றிய வரலாறு : முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம். அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். இன்றும் மூல லிங்கத் திருமேனியின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம். சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.
தல வரலாறு : முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக திகழ்ந்தார். தன் மேல் அளவு கடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பெற்ற நெல்லை சந்நிதி முன் உலரப் போட்டு குளிக்கச் செல்வது அவரது வழக்கம். அவ்வாறு செய்து வந்த நாளில் ஒரு நாள் திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது.
குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில் நெல் நனைந்து விடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் நெல்லை கொண்டு செல்லாத படி இருப்பதையும் நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு வியப்புற்றார். மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சரியப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காண விரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் வியப்புற்றார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலிநாதர் என்றும், அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி என்றும் அழைக்கலானார்கள்.
தமிழ் நாட்டில் இறைவன் சிவபெருமான் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற முக்கியமான ஐந்து சிவசபைகளில் இரண்டு சபைகள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் சுமார் 14 ஏக்கர் நிலப்பரவளவில் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. அம்பாளுக்கும் சுவாமிக்கும் தனித்தனியே கோவில்கள் எழுப்பப் பட்டு, இடையே அழகிய கல் மண்டபம் கொண்டு இணைக்கப் பட்டுள்ளது. இக்கோயிலில் நெல்லையப்பர் என்கிற பெயரில் மூலவரும், காந்திமதி என்கிற பெயரில் அம்பாளும் வீற்றிருக்கின்றனர். புராண காலத்தில் இவ்வூர் வேணுவனம் என்றே அழைக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது. அம்பாள் சன்னதியில் உள்ள ஆயிரம் கால் மண்டபமும் அதில் நடைபெறும் சுவாமி அம்பாள் திருகல்யாணமும் கண்கொள்ளாக் காட்சியாகும்.
கோவில் அமைப்பு : கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தியைக் காணலாம். அடுத்துள்ள கொடிமரத்தைச் சுற்றிவிட்டு உள்ளே சென்றால் மூலவரைக் காணலாம். மூலவரைக் காண்பதற்கு முன் சுமார் 9 அடி உயரம் உள்ள மிகப்பெரிய விநாயகரைத் தரிசிக்கலாம். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல கோஷ்ட மூர்த்திகளாக தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோரையும், மற்றும் சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் ஆகியோரை நாம் காணலாம். கோவிந்தப் பெருமாள் சந்நிதியும் சிவனுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே "ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்" உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் "தாமிர சபை" உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்டலக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.
மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியதாகவும் அகலமாகவும் அமைந்துள்ளது. இப்பிரகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்ல வழி உள்ளது. மீண்டும் அம்மா மண்டபம் வழியாகத் திரும்பி வந்தால், மூன்றாவது பிரகாரத்தை அடையலாம். இல்லையெனில் அம்மன் சந்நிதியில் இருந்து அப்படியே வெளியேறவும வழி உண்டு.
மூன்றாவது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சந்நிதி உள்ளது. ஒரே கல்லில் ஆறுமுகமும் பன்னிரு கரங்களும் கொண்டு மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருபுறமும் வள்ளி தெய்வானையுடன் ஆறுமுக நாயினார் என்னும் திருநாமத்துடன் தெற்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருநெல்வேலி நெல்லையப்பர் ஆலயம் திருப்புகழ் வைப்புத் தலங்களில் ஒன்றாகும்.
கோயிலின் உள்ளே பொற்றாமரைக் குளம் உள்ளது. நாற்புறமும் நல்ல படிகளுடனும், நடுவில் நீராழி மண்டபத்துடனும் இந்த தெப்பக்குளம் உள்ளது. இக்கோயிலில் ஊஞ்சல் மண்டபம், திருக்கல்யாண மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், வசந்த மண்டபம், சங்கிலி மண்டபம், சோமவார மண்டபம், நவக்கிரக மண்டபம், மகா மண்டபம் போன்ற மண்டபங்கள் சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகின்றன.
இக்கோயிலில் உள்ள சுரதேவர் சந்நிதி மிகவும் சிறப்புடையது. மூன்று தலைகள், மூன்று கால்கள், மூன்று கைகளுடன் இம்மூர்த்தி, கையில் தண்டம், மணி, சூலத்துடன் காட்சி தருகின்றார். எவருக்கேனும் சுரம் இருப்பின், இம்மூர்த்திக்கு மிளகு அரைத்துச் சார்த்தி வெந்நீரால் அபிஷேகம் செய்தால் தீரும் என்பது மக்களின் நம்பிக்கை.
நடராஜர் நடனம் ஆடிய பஞ்ச சபைகளுள் இத்தலம் தாமிரசபையாகும். இச்சபை தனியே உள்ளது. இங்குள்ள நடராசர் "தாமிர சபாபதி" என்றழைக்கப்படுகிறார். சபைக்கு மேலே தாமிரத் தகடு வேயப்பட்டுள்ளது. இச்சபையின் உள்ளே ருத்திர விஷ்ணு, பேதங்கள், ரிஷிகளின் உருவங்கள் உள்ளன. கீழே மரத்தாலும் மேலே தாமிரத்தாலும் ஆக்கப்பட்டு ஏழு அடுக்குகளைக் கொண்டு திகழும் இச்சபை சித்திர வேலைப்பாடுகளுடன் அருமையாகத் திகழ்கின்றது. பின்னால் உள்ள நடராஜர் சிலாரூபத்தில் சந்தன சபாபதி என்றழைக்கப்படுகிறார். மற்ற கோவில்களைப் போல மார்கழி மாதம் விடியற்காலையில் இவ்வாலயம் திறப்பதில்லை. மாற்றாக கார்த்திகை மாதத்தில் காலை 4 மணிக்கெல்லாம் கோயில் தரிசனத்திற்காகத் திறக்கப்படும். கார்த்திகை மாதத்தில் வரும் சோம வாரங்களில் இறைவனுக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.
தமிழ்நாட்டின் முக்கிய நகரமான திருநெல்வேலி நகரத்திற்கு தமிழ்நாட்டில் சென்னை மற்றும் அனைத்து முக்கிய நகரங்களில் இருந்து பேருந்து, ரயில் பயண வசதிகள் அதிக அளவில் உள்ளது. திருநெல்வெலி நகரில் தாமிரபரணி ஆற்றின் கரையில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது.
நன்றி shivatemples இணையதளத்திற்கு
பாடல் எண் : 01
மருந்தவை மந்திரம் மறுமை நன்நெறி அவை மற்றுமெல்லாம்
அருந்துயர் கெடுமவர் நாமமே சிந்தைசெய் நன்னெஞ்சமே
பொருந்து தண்புறவினில் கொன்றை பொன் சொரிதரத் துன்று பைம்பூம்
செருந்தி செம்பொன்மலர் திருநெல்வேலி உறை செல்வர் தாமே.
பாடல் விளக்கம்:
நல்ல நெஞ்சமே! இறைவனின் திருநாமத்தைச் சிந்தனை செய்வாயாக. அத்திருநாமமானது மருந்தாக இருந்து நோயைத் தீர்க்கும். மந்திரமாக விளங்கி அச்சத்தைப் போக்கும். மறுமையில் நற்கதி தரும். மற்றும் உயிர்கள் அடைதற்கேற்ற பயன்கள் யாவும் தரும். போக்க முடியாத துன்பத்தைப் போக்கும். அத்திருநாமத்திற்குரிய இறைவன் குளிர்ச்சிமிக்க சோலையில் கொன்றை மரங்கள் பொன்னிறப் பூக்களை உதிர்க்க, நெருங்கியுள்ள, பசுமையான அழகிய செருந்தி மரங்கள் செம்பொன் போன்ற மலர்களைப் பூக்கின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருள்கிற அருட்செல்வர் ஆவார்.
பாடல் எண் : 02
என்றும் ஓர் இயல்பினர் என நினைவு அரியவர் ஏறு அது ஏறிச்
சென்று தாம் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பு அதுவே
துன்று தண்பொழில் நுழைந்து எழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல் வந்து உலவிய திருநெல்வேலி உறை செல்வர் தாமே.
பாடல் விளக்கம்:
நெருங்கிய குளிர்ந்த சோலையில் நுழைந்து, செழித்து வளர்ந்துள்ள தாழம்பூவில் படிந்து தென்றல் காற்று வந்து வீசுகின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் எப்போதும் ஒரே தன்மையுடையவர் என்று நினைப்பதற்கு முடியாதவர் ஆவர். அவர் இடப வாகனத்திலேறிச் செடிச்சியர் போன்ற தாழ்குலத்தோர் மனைதோறும் சென்று பிச்சை ஏற்கும் இயல்பும் உடையவர். அவரை வழிபடுவீர்களாக.
பாடல் எண் : 03
பொறி கிளர் அரவமும் போழ் இளமதியமும் கங்கை என்னும்
நெறிபடு குழலியைச் சடைமிசைச் சுலவி வெண்ணீறு பூசிக்
கிறிபட நடந்து நல் கிளி மொழியவர் மனம் கவர்வர் போலும்
செறி பொழில் தழுவிய திருநெல்வேலி உறை செல்வர் தாமே.
பாடல் விளக்கம்:
புள்ளிகளையுடைய பாம்பையும், ஒரு கூறாகிய இளம்பிறைச் சந்திரனையும் கங்கை என்ற சுருண்ட கூந்தலையுடையவளையும் சடைமீது சுற்றி அணிந்து, வெண்மையான திருநீற்றைப் பூசி, பிறர் மயங்கும் வண்ணம் நடந்து, நல்ல கிளி போலும் இனிமையான சொற்களைப் பேசும் தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகளின் மனத்தை வசப்படுத்தும் சிவபெருமான், நெருங்கிய சோலைகள் சூழ்ந்த திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட் செல்வர் ஆவார். அவரை வழிபடுவீர்களாக.
பாடல் எண் : 04
காண் தகு மலைமகள் கதிர் நிலா முறுவல் செய்து அருளவேயும்
பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி
ஈண்டு மா மாடங்கள், மாளிகை மீது எழு கொடி மதியம்
தீண்டி வந்து உலவிய திருநெல்வேலி உறை செல்வர் தாமே.
பாடல் விளக்கம்:
நெருங்கிய பெரிய மாடங்களிலும், மாளிகைகளிலும், மேலே கட்டப்பட்ட கொடிகள் சந்திர மண்டலத்தைத் தொட்டு அசைகின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற அருட்செல்வரான சிவபெருமான், தரிசிப்பதற்கு இனிய மலைமகளான உமாதேவி ஒளிவிடும் பற்களால் புன்முறுவல் செய்து அருகிலிருந்தருளவும், பாம்பை ஆபரணமாக அணிந்து ஊருக்குப் புறம்பேயுள்ள சுடுகாட்டை அரங்கமாகக் கொண்டு நடனமாடுதலை விரும்புபவர். அவரை வழிபடுவீர்களாக.
பாடல் எண் : 05
ஏனவெண் கொம்பொடும் எழில் திகழ் மத்தமும் இளவரவும்
கூனல் வெண்பிறை தவழ் சடையினர் கொல் புலித் தோலுடையார்
ஆனின் நல் ஐந்து உகந்து ஆடுவர் பாடுவர் அருமறைகள்
தேனில் வண்டமர் பொழில் திருநெல்வேலி உறை செல்வர் தாமே.
பாடல் விளக்கம்:
தேன்பருக வண்டுகள் அமர்கின்ற பூக்கள் நிறைந்த சோலைகளையுடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமான் பன்றியின் கொம்புடன், அழகிய ஊமத்த மலரையும், இளம் பாம்பையும், வளைந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனையும், அணிந்த சடைமுடி உடையவர். கொல்லும் தன்மையுடைய புலித்தோலை ஆடையாக உடுத்தவர். பசுவிலிருந்து பெறப்படும் பால், தயிர், நெய், கோசலம், கோமயம், ஆகிய பஞ்சகவ்வியத்தால் திருமுழுக்காட்டப்படுபவர். அரிய வேதங்களை அருளியவர்.
பாடல் எண் : 06
வெடிதரு தலையினர் வேனல் வெள்ளேற்றினர் விரிசடையர்
பொடியணி மார்பினர் புலியதள ஆடையர் பொங்கரவர்
வடிவுடை மங்கையோர் பங்கினர் மாதரை மையல் செய்வார்
செடிபடு பொழிலணி திருநெல்வேலி உறை செல்வர் தாமே.
பாடல் விளக்கம்:
புதர்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமான், மண்டையோட்டை மாலையாக உடையவர். சினமிகு வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவர். விரிந்த சடையுடையவர். திருவெண்ணீறு அணிந்த மார்பினர். புலித்தோலாடை அணிந்தவர். கோபம் பொங்கும் பாம்பை அணிந்தவர், அழகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டுள்ளவர். தாருகாவனத்து முனிவர்களின் பத்தினிகளை மயங்கும்படி செய்தவர். அவரை வழிபடுவீர்களாக.
பாடல் எண் : 07
அக்குலாம் அரையினர் திரையுலாம் முடியினர் அடிகளன்று
தக்கனார் வேள்வியைச் சாடிய சதுரனார் கதிர்கொள் செம்மை
புக்கதோர் புரிவினர் வரிதரு வண்டு பண் முரலும் சோலைத்
திக்கெலாம் புகழ் உறும் திருநெல்வேலி உறை செல்வர் தாமே.
பாடல் விளக்கம்:
வரிகளையுடைய வண்டுகள் பண்ணிசைக்கின்ற சோலைகளையுடைய எல்லாத் திசைகளிலும் புகழ் பரவிய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளுகின்ற அருட்செல்வராகிய சிவபெருமான், சங்கு மணிகளைக் கட்டிவிளங்கும் இடையினையுடையவர். அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய சடைமுடியை உடைய தலைவர். அவரை மதியாது தக்கன் செய்த யாகத்தை அழித்த திறமையையுடையவர். செவ்வொளி படரும் சடையினர். அவரை வழிபடுவீர்களாக.
பாடல் எண் : 08
முந்தி மா விலங்கல் அன்று எடுத்தவன் முடிகள் தோள் நெரி தரவே
உந்தி மா மலரடி ஒரு விரல் உகிர் நுதியால் அடர்த்தார்
கந்தமார் தருபொழில் மந்திகள் பாய்தர மதுத்திவலை
சிந்து பூந்துறை கமழ் திருநெல்வேலி உறை செல்வர் தாமே.
பாடல் விளக்கம்:
நறுமணம் கமழும் சோலைகளில் பெண் குரங்குகள் தாவுதலால் தேன்துளிகள் சிந்துகின்ற, பூக்களைக் கொண்ட நீர்த் துறைகளை உடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வராகிய சிவபெருமான், பெருமை மிகுந்த கயிலை மலையை அந்நாளில் பெயர்த்தெடுத்த இராவணனின் தலைகளும், தோள்களும் நெரியும் வண்ணம், சிறந்த மலர் போன்ற திருவடியின் ஒரு விரல் நக நுனியை ஊன்றி வருத்தினார். அவரை வழிபடுவீர்களாக.
பாடல் எண் : 09
பைங் கண்வாள் அரவு அணையவனொடு பனி மலரோனும் காணாது
அங்கணா அருள் என அவரவர் முறைமுறை இறைஞ்ச நின்றார்
சங்க நான்மறையவர் நிறைதர அரிவையர் ஆடல் பேணத்
திங்கள் நாள் விழமல்கு திருநெல்வேலி உறை செல்வர் தாமே.
பாடல் விளக்கம்:
பசுமையான, வாள்போன்ற ஒளிபொருந்திய கூரிய கண்களையுடைய ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் பள்ளி கொள்ளும் திருமாலுடன், குளிர்ந்த தாமரைப் பூவில் வீற்றிருக்கின்ற பிரமனும் முழுமுதற்பொருளான இறைவனைக் காணமுடியாமல், அழகிய கண்களையுடைய பெருமானே அருள்புரிக என்று அவரவர் தாம்தாம் அறிந்த முறையில் வணங்கும் வண்ணம் விளங்கும் சிவபெருமானே, அந்தணர்கள் ஒன்றுகூடி நால் வேதங்களைப் பாடவும், பெண்கள் நடனமாடவும், மாத விழாக்களும், நாள் விழாக்களும் நிறைந்துள்ள திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வராவார். அவரை வழிபடுவீர்களாக.
பாடல் எண் : 10
துவருறு விரி துகில் ஆடையர் வேடமில் சமணரென்னும்
அவருறு சிறு சொலை அவம் என நினையும் எம் அண்ணலார் தாம்
கவருறு கொடி மல்கு மாளிகைச் சூளிகை மயில்களாலத்
திவருறு மதி தவழ் திருநெல்வேலி உறை செல்வர் தாமே.
பாடல் விளக்கம்:
மருதந்துவரில் தோய்த்த மஞ்சட் காவி ஆடை அணியும் புத்தர்களும், வேடநெறி நில்லாத சமணர்களும் கூறுகின்ற புன்மொழிகளைப் பயனற்றன என்று நினையுங்கள். எம் தலைவராகிய சிவபெருமான், கண்டார் மனங்களைக் கவர்கின்ற, கொடி விளங்கும் மாளிகையின் நிலா முற்றத்தில் மயில்கள் நடமாட, அதனைக் காணத் தேவர்களும் வருகின்ற, சந்திரன் தவழ்கின்ற திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வர் ஆவார். அவரை வழிபடுங்கள்.
பாடல் எண் : 11
பெருந்தண்மா மலர்மிசை அயன் அவன் அனையவர் பேணு கல்வித்
திருந்துமா மறையவர் திருநெல்வேலி உறை செல்வர் தம்மை
பொருந்து நீர்த்தடம் மல்கு புகலியுள் ஞானசம்பந்தன் சொன்ன
அருந்தமிழ் மாலைகள் பாடியாடக் கெடும், அருவினையே.
பாடல் விளக்கம்:
பெரிய குளிர்ந்த, சிறந்த தாமரைப் பூவில் வீற்றிருக்கும் பிரமனைப் போன்றவர்களான தாம் விரும்பும் கல்வியினால் மனம் பண்பட்ட, சிறந்த வேதங்களை உணர்ந்த அந்தணர்களை உடைய திருநெல்வேலியில் வீற்றிருந்தருளும் அருட்செல்வரான சிவபெருமானைப் போற்றி, பொருந்திய நீர்நிலைகள் நிரம்பிய சீகாழி ஞானசம்பந்தன் பாடிய பாமாலைகளைப் பாடிப் பரவசத்துடன் ஆட, போக்க முடியாத வினைகளெல்லாம் அழிந்து போகும்.
தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்
|| --- திருநெல்வேலி திருமுறை பதிகம் முற்றிற்று --- ||
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
Miga ARUMAI
பதிலளிநீக்கு