வெள்ளி, 23 ஜனவரி, 2015

திருக்கோவையார்


மாணிக்கவாசகரால் பாடப்பட்ட எட்டாம் திருமுறையில் மொத்தம் 1056 பாடல்கள் உள்ளது. இதில் திருக்கோவையார் 400 பாடல்கள். திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் திருக்கோவையார் என்னும் அகப்பொருள் கோவை நூலைப் பாடினார். இதற்குத் திருச்சிற்றம்பலக் கோவையார் என்ற வேறு பெயரும் உண்டு. இது, அடிகள் திருவாய் மலரத் திருச்சிற்றம்பலமுடையானே தம் கைப்பட எழுதிக் கொண்ட சிறப்பினை உடையது. 

தமிழில் உள்ள பிரபந்த வகைகளுள் கோவை ஒன்று, அகப்பொருள் துறைகளை நிரல்படக் கோத்து அமைத்தமையின் கோவை எனப் பெயர் வழங்கலாயிற்று. இந்நூல் முழுவதும் கட்டளைக் கலித்துறையாப்பால் அமைந்துள்ளது. தில்லைச் சிற்றம்பலவன் இதன் பாட்டுடைத் தலைவன், 400 துறைகள் உள்ளன. அகப்பொருள் துறைகளைத் தழுவியே இந்நூலுள் துறைகள் வகுக்கப் பெற்றுள்ளன. 

ஒவ்வொரு பாடலுக்கும் அதன் கருத்தை விளக்கும் கொளு ஒன்று உள்ளது. இந்நூலுள் இயற்கைப் புணர்ச்சி முதல் பரத்தையிற் பிரிவு ஈறாக இருபத்தைந்து கிளவிக் கொத்துகள் உள்ளன. திருக்குறள் காமத்துப்பாலிலும் இருபத்து ஐந்து அதிகாரங்கள் உள்ளன. சிவபெருமான் பாட்டுடைத் தலைவன். அவனது திருவடிகளைச் சிந்தையிலும் சென்னியிலும் கொண்டு விளங்குபவனே இந்நூலின் கிளவித் தலைவன். 

அறிவன் நூற்பொருளும் உலக நூல் வழக்கும் கலந்து இந்நூலை அடிகள் அருளியுள்ளார். உரை எழுத வந்த பேராசிரியர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். இக்கோவை நூலில் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு உறுதிப் பொருள்களும் அடங்கியுள்ளன. ஆர் விகுதி சேர்த்துத் திருக்கோவையார் என வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு பாட்டிலும் தில்லைநகர் சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. தில்லை மூவாயிரவர் பற்றிய குறிப்பும் திருமால் சயனமும் குறிக்கப் பெற்றுள்ளன. தில்லையேயன்றி இடைமருது, சீர்காழி, குற்றாலம், மதுரை, கயிலை, திருப்பரங்குன்றம், திருப்பூவணம், மலையம், பொதியல், ஈங்கோய்மலை, ஏகம்பம், கடம்பை, கழுக்குன்று, சிவநகர், சுழியல், பெருந்துறை, மூவல், வாஞ்சியம், அம்பர், அரசம்பலம், கொடுங்குன்று, திருவெண்காடு முதலிய தலங்களும் குறிக்கப் பெற்றுள்ளன. 

இராவணனை அடர்த்தது, காமனை எரித்தது, காலனைச் சாய்ந்தது, மேருவை வளைத்தது, யானையை உரித்தது முதலிய புராணச் செய்திகளும் கூறப்பட்டுள்ளன. ஆகம நூற்கருத்துக்கள் பல இந்நூலுள் இடம் பெறுகின்றன. 

கோவை நூல்கள் : அமிழ்தினும் இனிய நம் தமிழ் மொழியில் பொருள் இலக்கணம் மிக்க சிறப்பு வாய்ந்தது. அப்பொருள் அகம், புறம் என இரு கூற்றனவாய்ப் பிரிவு பட்டு வழங்குகிறது. அவற்றுள் ஆகம் என்பது உருவும் திருவும் குறியும் குணனும் பருவமும் ஒத்து, அன்பு வாய்ந்த காதலன் காதலி இருவரின் உள்ளத்தில் கிளைத்தெழுந்து ஓங்கி எழுகின்ற இன்பச் செவ்வி, இச்செவ்வியைக் கிளைந்தெடுத்து ஓதும் தமிழ் நூல்கள் பல. அவற்றுள் முறைப்படுத்தி அந்த இன்பத்துறைகள் எல்லாம் ஒருங்கே முற்ற முடிய விளங்கும் இலக்கிய நூல்களே கோவை என்னும் பெயரில் வழங்கப்பெறுவன். தொடர்புபடுத்திக் கோத்து உரைக்கபடுவதால் இது கோவை எனப்பட்டது. 

திருக்கோவையார் 400 செய்யுட்களைத் தன்னகத்தே கொண்டு சொல்லணி, பொருளணி முதலிய அணிகள் யாவும் ஒருங்கே அமைந்து கற்றார் நெஞ்சம் கனிவு கொள்ளுமாறு இலங்குகின்றது. மற்றைக் கோவைகளைப் போல பாட்டுடைத் தலைவராக மன்னர்களையோ வள்ளல்களையோ கொண்டு பாடப் பெறாமல், தில்லையில் கோயில் கொண்டிருக்கும் நாயகனையே தலைவனாகக் கொண்டு அமைவுறப் பாடப்பட்டுள்ளது. ஆகவே இக்கோவை மற்று எவ்வகைக் கோவையினும் தனக்கொரு சிறப்பினதாய்த் திகழ்ந்து விளங்குகிறது. 

இந்நூல் மற்றைய கோவைகளினும் சிறந்த பொருள்களையும் அருஞ் சொற்றொடர்களையும் கோத்து அமைந்துள்ளதை நோக்குங்கால், இந்நூலாசிரியர் நல்லிசைப் புலமை வல்லுனராகவே உள்ளார். மக்கள் இதனைத் திருச்சிற்றம்பலக் கோவையார் என்பர்; மறையவர் வேதம் என்பர்; சிவ யோகத்தர் ஆகமம் என்பர்; காமுகர் இன்ப நூல் என்பர்; தர்க்க நூலவர் எண்ணூல் என்பர்; தமிழ்ப் புலவர் இலக்கண நூல் என்பர்; இதைப் பாடக் கேட்டவரும் எழுதியவரும் வேதியராகி முன்னின்று அருளிய ஆதியங்கடவுளேயாதலால், இதன் மெய்ச்சிறப்பு நன்குணரப்படும். திருக்கோவையார் உண்மை என்னும் நூலை நோக்கின், அது துகளறு போதப் பொருளை ஒட்டிச் செல்வது என்பது தெற்றென விளங்குகிறது. 

உரையாசிரியர் முதற் பாடலுக்கு உரையெழுதப் புகுங்கால், ஓர் அகவல் பாட்டின் மூலம் இந்நூலில் பொதிந்துள்ள செய்திகளை விளக்குகிறார். அச் செய்திகளாவன: சித்தும் அசித்துமாகிய அட்டமூர்த்தம், ஐந்தொழில்கள், பெத்தம் முத்தி, ஆண்டவனது அணுவும் மகத்துமாகிய இயல்பு, அவனுடைய சொரூபநிலை, அடி முடியறியாப் புராணம், பதிகிருத்தியம், தில்லைத் திருக்கூத்து, சதாசிவமாகிய தாண்டவேசுரர் திருவுருவம், அவரது முப்பத்தெட்டுக் கலை, அவர் அருளால் மாணிக்கவாசகர் பாடிய உண்மை, அவரது தூய ஞானச்செல்வம், அவர் அருளிய இந்நூல் பொருட் பாகுபாடு, அவற்றின் பெயர், அவற்றுள் உணர்த்தற்கரும் பொருள். உணர்த்த நின்ற பொருளின் பெருமை உணர்த்தும் அளவின் சிறுமை, தம் அறிவின் சிறுமை, மரபு வழுவாத தம் முறைமை முதலிய அரும் பேருண்மைகளைக் கூறியுள்ளார்.


திருக்கோவையார் விநாயகர் வணக்கம்



"எண்ணிறைந்த திங்கள் எழுகோ புரந்திகழக்
கண்ணிறைந்து நின்றருளும் கற்பகமே - நண்ணியசீர்த்
தேனூறு செஞ்சொல் திருக்கோவை என்கின்ற
நானூறும் என்மனத்தே நல்கு.!"

பொருள்: 
புகழ்மிக்க தில்லையில் கோயில் கொண்டிருக்கின்ற கற்பக விநாயகரே! சிறப்புமிக்க தேனூறுகின்ற செம்மையான சொற்களையுடைய திருக்கோவையார் என்கின்ற நானூறு செய்யுட்களும் என் மனத்தில் பொருந்துமாறு அருள் செய்வாயாக.!


திருக்கோவையார் நூற்சிறப்பு



"ஆரணங் காணென்பர் அந்தணர்; யோகியர் ஆகமத்தின்
காரணங் காணென்பர்; காமுகர் காமநன் னூலதென்பர்;
ஏரணங் காணென்பர் எண்ணர் எழுத்தென்பர் இன்புலவோர்;
சீரணங் காயசிற் றம்பலக் கோவையைச் செப்பிடினே."

பொருள்:
மக்கள் இதனைத் திருச்சிற்றம்பலக் கோவையார் என்பர், மறையவர் வேதம் என்பர், சிவயோகத்தர் ஆகமம் என்பர், காமுகர் இன்ப நூல் என்பர், தர்க்க நூலவர் எண்ணூல் என்பர், தமிழ்ப் புலவர் இலக்கண நூல் என்பர். 


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக