புதன், 7 ஜனவரி, 2015

தில்லை திருமுறை பதிகங்கள் 10

இறைவர் திருப்பெயர் : கூத்தபிரான், கனகசபாபதி, சபாநாயகர்

இறைவியார் திருப்பெயர் : சிவகாமி, சிவகாமசுந்தரி

திருமுறை   ஆறாம் திருமுறை 2வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது


பாடல் எண் : 01
மங்குல் மதி தவழும் மாட வீதி 
மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார்
கொங்கில் கொடுமுடியார்; குற்றாலத்தார் 
குடமூக்கின் உள்ளார் போய்க் கொள்ளம் பூதூர்த் 
தங்கும் இடம் அறியார் சால நாளார் 
தருமபுரத்து உள்ளார் தக்களூரார்
பொங்கு வெண்நீறு அணிந்து பூதம் சூழ
புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே.

பொருள்:
பொலிவு தரும் வெண்ணீறு அணிந்து, பூதங்கள் தம்மைச் சூழ்ந்து வர, நம்பெருமானார் வானத்தில் உள்ள சந்திரன் தவழ்ந்து செல்லும் உயர்ச்சியை உடைய பெருந்தெருக்களை உடைய மயிலாப்பூர், மருகல், கொங்குநாட்டுக் கொடுமுடி, குற்றாலம், குடமூக்கு, கொள்ளம்பூதூர், தருமபுரம், தக்களூர் என்ற திருத்தலங்களில் பல நாள் தங்கி, தாம் உறுதியாகத் தங்கும் இடமாகப் பிறவற்றை அறியாராய், தில்லைச் சிற்றம்பலத்திலே புகுந்து தங்கி விட்டார்.


பாடல் எண் : 02
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இந்நாள் 
நனிபள்ளி உள்ளார் போய் நல்லூர்த் தங்கிப்
பாகப் பொழுது எலாம் பாசூர்த் தங்கி 
பரிதி நியமத்தார், பன்னிரு நாள் 
வேதமும் வேள்விப் புகையும் ஓவா 
விரிநீர் மிழலை எழுநாள் தங்கி
போகமும் பொய்யாப் பொருளும் ஆனார் 
புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே.

பொருள்:
ஐம்புல இன்பப் பொருள்களும் மெய்ப்பொருளும் ஆகிய, பாம்பினை இடையிலே கட்டிய, நம்மால் விரும்பப்படும் இறைவர் நனிபள்ளி, நல்லூர் இவற்றில் தங்கி ஓர் இராப்பொழுது முழுதும் பாசூரில் தங்கிப் பன்னிருநாள் பரிதிநியமத்திலும் ஏழு நாள் வேதமும் வேள்விப் புகையும் நீங்காத நீர்வளம் மிக்க திருவீழிமிழலையிலும் உகந்திருந்து, இந்நாளில் தில்லைச் சிற்றம்பலத்திலே புகுந்து தங்கிவிட்டார்.


பாடல் எண் : 03
துறங்காட்டி எல்லாம் விரித்தார் போலும் 
தூமதியும் பாம்பும் உடையார் போலும்
மறங்காட்டி மும்மதிலும் எய்தார் போலும் 
மந்திரமும் தந்திரமும் தாமே போலும்
அறங்காட்டி அந்தணர்க்கு அன்று ஆலநீழல் 
அறம் அருளிச்செய்த அரனார் இந்நாள்
புறங்காட்டு எரி ஆடிப் பூதம் சூழப்
புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே.

பொருள்:
உலகவருக்கு ஒழுக்கத்தை அறிவித்து, ஒரு காலத்தில் சனகர் முதலிய அந்தணர் நால்வருக்கு வேதத்தின் விழுமிய பொருளை அருளிச்செய்த சிவபெருமான் நிலையில்லாப் பொருள்களில் பற்றறுத்தலாகிய ஞானத்தை அறிவித்து, மெய்ந்நூற் பொருள்கள் அனைத்தையும் அருளினார். களங்கமற்ற பிறைமதியையும் பாம்பினையும் அணிகலனாக உடையார், தம் வீரத்தை வெளிப்படுத்தி மூன்று மதில்களையும் அம்பு எய்து அழித்தார். மந்திரங்களும் அவற்றை முறையாகப் பயன்படுத்தும் செயல்களும் தாமேயாக உள்ளார். அப்பெருமான் இந்நாள் தாமே உகந்து தில்லைச் சிற்றம்பலமே புகுந்தார்.


பாடல் எண் : 04
வாரேறு வனமுலையாள் பாக மாக 
மழுவாள் கை ஏந்தி மயானத்து ஆடி
சீரேறு தண் வயல் சூழ் ஓத வேலித் 
திரு வாஞ்சியத்தார் திரு நள்ளாற்றார் 
காரேறு கண்டத்தார் காமற் காய்ந்த 
கண் விளங்கு நெற்றியார் கடல் நஞ்சு உண்டார் 
போரேறு தாம் ஏறிப் பூதம் சூழப்
புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே.

பொருள்:
கச்சணிந்த அழகிய திருத்தனங்களை உடைய பார்வதி தம் உடம்பில் ஒரு பகுதியாக அமைய, மழுப்படையைக் கையில் தாங்கிச் சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தி, விடக்கறை தங்கிய கழுத்தினராய், மன்மதனை வெகுண்ட கண் விளங்கும் நெற்றியினராய்க் கடலில் தோன்றிய விடத்தைத்தாம் உண்டு, உலகைப் பாதுகாத்த பெருமானார், சிறப்புமிக்க குளிர்ந்த வயல்களால் சூழப்பட்டதும், நீர் வெள்ளத்தை எல்லையாக உடையதுமாகிய திருவாஞ்சியம், திருநள்ளாறு இவற்றை உகந்தருளின திருத்தலங்களாக உடையவராய், பகைவரோடு போரிடும் காளையை வாகனமாகக் கொண்டு பூதங்கள் தம்மைச் சூழ்ந்துவரத் தில்லைச் சிற்றம்பலமே புகுந்தார்.


பாடல் எண் : 05
காரார் கமழ் கொன்றைக் கண்ணி சூடிக் 
கபாலம் கை ஏந்தி கணங்கள் பாட
ஊரார் இடு பிச்சை கொண்டு உழ(ல்)லும் 
உத்தமராய் நின்ற ஒருவனார்தாம்
சீரார் கழல் வணங்கும் தேவ தேவர் 
திருஆரூர்த் திருமூலட்டானம் மேயார்
போரார் விடை ஏறிப் பூதம் சூழப்
புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே.

பொருள்:
தம் சிறப்பு நிறைந்த திருவடிகளை வணங்கும் தேவர்களுக்கும் தலைவராகிய சிவபெருமானார் கார்காலத்தில் மணம் வீசும் கொன்றைப் பூவாலாகிய முடிமாலையைச் சூடி, மண்டை யோட்டைக் கையில் ஏந்தி, பூதகணங்கள் தம் பெருமையைப் பாட, ஊரிலுள்ளார் வழங்கும் பிச்சையை உணவாகக் கொண்டு திரிகின்ற மேம்பட்டவராய்க் காட்சி வழங்கும் ஒப்பற்றவராய், திருவாரூர்த் திருமூலத்தானத்தில் விரும்பித் தங்கிப் பின் போர் செய்யும் காளை மீது இவர்ந்து பூதங்கள் தம்மைச் சுற்றிவரத் தில்லை சிற்றம்பலத்தில் புகுந்தார்.


பாடல் எண் : 06
காதார் குழையினர் கட்டங்கத்தர்
கயிலாய மாமலையார் காரோணத்தார் 
மூதாயர் மூதாதை இல்லார் போலும் 
முதலும் இறுதியும் தாமே போலும்
மாதாய மாதர் மகிழ அன்று 
வன்மதவேள் தன் உடலம் காய்ந்தார் இந்நாள் 
போதார் சடைதாழப் பூதம் சூழப்
புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே.

பொருள்:
ஆண்டில் மூத்த ஆட்டுவாள், ஊட்டுவாள், ஒல் உறுத்துவாள், நொடி பயிற்றுவாள், கைத்தாய் என்ற ஐவகையராய செவிலித்தாயரும், நற்றாயும் தந்தையும் இல்லாதவராய், உலகிற்கு முதலாயும் முடிவாயும் உள்ளவர் தாமேயாய்க் காதில் குழை அணிந்து கட்டங்கம் என்ற படைக்கலத்தை ஏந்திக் கயிலாய மலையிலும், காரோணப் பதிகளிலும், உகந்தருளியிருக்கும் சிவபெருமான் அழகிய பெண் இனத்தார் மகிழுமாறு பார்வதியின் திருமணத்துக்கு முற்பட்ட காலத்திலே மன்மதனுடைய உடம்பினை அழித்தவராய், இந்நாளில் பூக்கள் நிறைந்த தம் சடைகள் தொங்கவும், பூதங்கள் சூழவும், தில்லைச் சிற்றம்பலத்தில் புகுந்தார்.


பாடல் எண் : 07
இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும்
இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று 
பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் 
பெரியார்தம் பெருமையே பேச நின்று
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும்
மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர்
புறம் தாழ்சடை தாழப் பூதம் சூழப்
புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார்தாமே.

பொருள்:
தம்மை மறந்தவர் மனத்தில் என்றும் விரும்பித் தங்காதவராய்த் திருமறைக்காட்டில் உகந்தருளியிருக்கும் மழுப் படையை உடைய பெருமான் உலகியலில் நின்று வாழ்நாள் இறுதி வந்துழி இறந்தவர். யோகம் முதலியவற்றால் நீண்ட நாள் இறவாது இருந்தவர். தேவர்கள் ஆகிய எல்லோருக்கும் தாமே துணையாய், உலகில் பிறப்பெடுப்பவருக்கும் என்றும் பிறப்பெடுக்கும் நிலையைக் கடந்து வீடுபெற்றவருக்கும் தலைவராய்த் தம் பெருமையையே அவர்கள் என்றும் பேசுமாறு அவர் மனத்துள் என்றும் நிலைபெற்று, பின்புறமாக நீண்டு தொங்கும் சடையை உடையவராய்ப் பூதம் சூழத்தில்லைச் சிற்றம்பலமே புகுந்தார்.


பாடல் எண் : 08
குலாவெண் தலைமாலை என்பு பூண்டு 
குளிர் கொன்றைத்தார் அணிந்து கொல் ஏறு ஏறி 
கலா வெங்களிற்று உரிவைப் போர்வை மூடிக்
கை ஓடு அனல் ஏந்தி காடு உறைவார்
நிலா வெண்மதி உரிஞ்ச நீண்ட மாடம் 
நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர்
புலால்வெண் தலையேந்திப் பூதம் சூழப்
புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே.

பொருள்:
ஒளி விளங்கும் வெண் மதியம் தீண்டுமாறு உயர்ந்த மாடங்களை உடையதாய் மற்ற இடம் எங்கும் நிறைந்த வயல்களால் சூழப்பட்ட திரு நெய்த்தானத்தை உகந்தருளிய பெருமான் வளைந்த வெண்தலைமாலை, எலும்புகள் இவற்றை அணிந்து குளிர்ந்த கொன்றைப் பூ மாலையை மார்பில் சூடி, கொல்லுதலில் வல்ல காளையை இவர்ந்து, உடம்பை ஒட்டிக் கொடிய யானைத் தோலைப் போர்வையாக அணிந்து உடம்பை மறைத்துக் கொண்டு, கைகளில் மண்டை ஓட்டினையும் தீயையும் ஏந்திச் சுடுகாட்டில் தங்கும் இயல்பினர். அவர், புலால் நாற்றம் கமழும் வெள்ளிய மண்டை ஓட்டினைக் கையில் ஏந்திப் பூதங்கள் சூழத் தில்லைச் சிற்றம்பலத்திலே புகுந்தார்.


பாடல் எண் : 09
சந்தித்த கோவணத்தர் வெண்ணூல் மார்பர்
சங்கரனைக் கண்டீரோ கண்டோம் இந்நாள்
பந்தித்த வெள்விடையைப் பாய ஏறி 
படுதலையில் என்கொலோ ஏந்திக் கொண்டு 
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம்
மணி ஆரூர் நின்று அந்தி கொள்ளக் கொள்ள
பொன் தீ மணிவிளக்குப் பூதம் பற்றப் 
புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே.

பொருள்:
கோவணம் அணிந்து வெள்ளிய பூணூல் தரித்தவராய் எல்லோருக்கும் இன்பம் செய்யும் பெருமானைக் கண்டீரோ என்று முக்கணான் முயக்கம் வேட்ட தலைவி தன்பால் அன்புடைய அயலாரை வினவினாள். கட்டியிருந்த வெண்ணிறக் காளையைக் கட்டவிழ்த்து அது விரைந்து செல்லுமாறு அதன் மீது தாவி ஏறி, மண்டை ஓட்டில் எதனையோ ஏந்திக்கொண்டு அழகிய ஆரூரிலே அந்தி நேரத்தில் எங்கள் வெள்வளைகளைத் தாம் முழுமையாய்க் கைக்கொள்வதற்காக நின்று, இந்நாளில் அழகிய தீப்போன்ற ஒளி விளக்குக்களைப் பூதங்கள் ஏந்தி வரத் தில்லைச் சிற்றம்பலத்தில் தாம் விரும்பியவாறு புகுந்தார்.


பாடல் எண் : 10
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த 
பத்திமையால் பணி செய்யும் தொண்டர் தங்கள் 
ஏதங்கள் தீர இருந்தார் போலும்
எழுபிறப்பும் ஆளுடைய ஈசனார் தாம் 
வேதங்கள் ஓதி ஓர் வீணை ஏந்தி 
விடை ஒன்று தாம் ஏறி வேத கீதர்
பூதங்கள் சூழப் புலித்தோல் வீக்கிப்
புலியூர்ச் சிற்றம்பலமே புக்கார் தாமே.

பொருள்:
வினைப்பயன் தொடர்தற்குரிய ஏழு பிறப்புக்களிலும் நம்மை அடியவராகக் கொள்ளும் சிவபெருமான் தம் திருவடிகளைச் சான்றோர்கள் முன்னின்று வழிபட்டுத் துதிக்கப் பக்தியால் அவருடைய உகப்பிற்காகவே தொண்டு செய்யும் அடியார் களுடைய துன்பங்கள் நீங்குமாறு திருத்தலங்களில் உகந்தருளி யுள்ளார். வீணையைக் கையில் ஏந்தி வேதங்களை ஓதிக் கொண்டு காளை மீது இவர்ந்து புலித்தோலை இடையில் கட்டிய அவ்வேத கீதர் பூதங்கள் தம்மைச் சூழ்ந்து வரத் தில்லைச் சிற்றம்பலத்தைத் தாமே விரும்பிச் சேர்ந்தார்.


பாடல் எண் : 11
பட்டு உடுத்து தோல் போர்த்து பாம்பு ஒன்று ஆர்த்து
பகவனார், பாரிடங்கள் சூழ நட்டம் 
சிட்டராய்த் தீயேந்திச் செய்வார் தம்மைத் 
தில்லைச் சிற்றம்பலத்தே கண்டோம் இந்நாள்
விட்டு இலங்கு சூலமே  வெண் நூல் உண்டே
ஓதுவதும் வேதமே வீணை உண்டே
கட்டங்கம் கையதே சென்று காணீர் 
கறைசேர் மிடற்று எம் கபாலி யார்க்கே.

பொருள்:
இடையில் பட்டை உடுத்தி அதனைப் பாம்பு ஒன்றினால் இறுக்கிக் கொண்டு மேலே யானைத் தோலைப் போர்த்துப் பெருமான் பூதங்கள் தம்மைச் சூழத் தீயைக் கையில் ஏந்தி ஆடற் கலையில் வல்லவராய் உள்ளார். அவர் இந்நாள் தில்லைச் சிற்றம்பலத்திலேயே ஒளிவீசும் சூலப்படை ஏந்தி, பூணூல் அணிந்து, வீணையை எழீஇ வேதம் ஓதி, ஒருகையில் கட்டங்கம் என்ற படையை ஏந்தி விடக்கறை பொருந்திய கழுத்தினராய் மண்டை ஓட்டினை ஏந்தியவராய் உள்ள காட்சியை எல்லீரும் சென்று காண்மின்கள்.


"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக