வியாழன், 8 ஜனவரி, 2015

திருவெம்பாவை 01 - 05

மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் திருவெம்பாவை‬



திருவாதவூரரின் திருவாசகத்தையும், திருக்கோவையையும் தம் கையால் எழுதிய இறைவன் அந்நூல்களை உலகறியச் செய்ய வேண்டி நூலின் முடிவில் "திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து" எனத் திருச்சாத்திட்டுத் தில்லைச் சிற்றம்பலத்தில் வாயிற் படியிலே வைத்தருளினார். இறைவனையே உருக வைத்த திருப்பாடல்களை நமக்குக் கொடுத்த மாணிக்கவாசக நாயனார் அருளிய திருவெம்பாவையை நாமும் பாடி இறையருள் பெறுவோம்.

மாணிக்கவாசக சுவாமிகள் திருவண்ணாமலையில் சிறுமிகள் பாவை நோன்பு நோற்பதைக் கண்டு தன்னையும் பாவையாக பாவித்து பாடிய பதிகம்.

பாடல் எண் : 01
ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன் செவியோ நின் செவிதான்
மாதேவன் வார் கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மி விம்மி மெய் மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசு ஏல் ஓர் எம்பாவாய்! 

பொருள்:
வாள் போன்ற, அகண்ட கண்களை உடைய பெண்ணே! முதலும், முடிவும் இல்லாத ஒளியாகிய சிவனைப் பற்றி, நாங்கள் பாடுவதைக் கேட்ட பின்னாலும், இன்னும் தூங்குகிறாயோ? உன் காது (கேட்காத அளவுக்கு கடினமாகி) உணர்ச்சி அற்றுப் போய்விட்டதோ? மகாதேவனின் பாதங்களை (பாதங்களில் அணிந்த அணிகலன்களை) வாழ்த்தி நாங்கள் எழுப்பிய வாழ்த்தொலி, வழி எங்கும் ஒலிப்பதைக் கேட்ட பின்னும், மலர்கள் தூவப்பட்ட படுக்கையில் உறங்கிக் கொண்டிருந்த நீ, மெய்மறந்து எழுவதும், பின்பு திரும்பப் புரண்டு படுப்பதுமாய் செய்வதறியாது தவிக்கிறாய். என் தோழியே, இது என்ன விதமான ஒரு (தவறான புதுப்) பழக்கம்? பாவையே, எழுந்திரு.!

தத்துவ விளக்கம்:
இப்பாடலில் கண்(சோதி), வாய்(வாழ்த்து), செவி(வாழ்த்தொலி), ஆகிய மூன்று புலன்களும் நேராகவும், தோல்(படுக்கை), மூக்கு(மலர்ப் படுக்கை) ஆகிய மற்ற இரண்டு புலன்களும் மறைமுகமாகவும் சுட்டப்படுகின்றன. ஐம்புலன்களின் பயன்(இலக்கு) அரனை உணர்வதே ஆகும். இந்தப் பாடல் மூலம், ஐம்புலன்களையும் இறைவனை நோக்கித் திருப்ப வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறார், மாணிக்கவாசகர்.



பாடல் எண் : 02
பாசம் பரஞ்சோதிக்கு என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது, எப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையும் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

பொருள்:
அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய், என்கிறார்கள் தோழிகள். உறங்குபவள் எழுந்து, தோழியரே! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது? என்றாள். அவளுக்கு பதிலளித்த தோழியர், கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. நமக்கோ, நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் வாழ்பவன், திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நம்மைத் தேடி வருபவன் மீது நாம் எவ்வளவு தூரம் பாசம் வைக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாயாக, என்றனர்.

தத்துவ விளக்கம்:
ஒளியான இறைவனை அடைவதே இலக்கு என்று சிலசமயம் சொன்ன மனம், திரும்பவும் சோம்பலுக்கு ஆட்பட்டு, மாயையில் அமிழ்ந்து விடுகிறது. அதனைத் திரும்பவும் இறைவனை நோக்கித் திருப்ப வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார், மாணிக்கவாசகர்.



பாடல் எண் : 03
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய், வந்து உன் கடை திறவாய்
பத்து உடையீர் ஈசன் பழஅடியீர் பாங்கு உடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்து ஆட்கொண்டால் பொல்லாதோ
எத்தோ நின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கு ஏல் ஓர் எம்பாவாய்.

பொருள்:
முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற, என்கிறார்கள். தூங்கிக் கொண்டிருந்த தோழி, "ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச வேண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே! என வருந்திச் சொல்கிறாள். வந்த தோழியர் அவளிடம், "அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம், என்றனர்.

தத்துவ விளக்கம்:
ஈசன் மீது நோக்கம் இருந்தபோதும், பலவீனமான மனதினால், மாயைக்கு ஆட்பட்டு, சோம்பலுற்றுக் கிடக்கும் தன்மையச் சுட்டிக் காட்டுகிறார், மாணிக்கவாசகர்.



பாடல் எண் : 04
ஒள் நித்தில நகையாய் இன்னம் புலர்ந்தின்றோ   
வண்ணக் கிளி மொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொண்டு உள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்   
கண்ணைத் துயின்று அவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக்கு ஒருமருந்தை வேத விழுப்பொருளைக்   
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்து உள்ளம்
உள் நெக்கு நின்று உருக யாம் மாட்டோம் நீயே வந்து   
எண்ணிக் குறையில் துயில் ஏல் ஓர் எம்பாவாய்.

பொருள்:
ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை? என்ற பெண்களிடம், உறங்கிய பெண், அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா? என்றாள். எழுப்ப வந்தவர்களோ, அடியே! உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும். அதன் பின்பு எண்ணிக்கையைச் சொல்கிறோம். நாங்கள் தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப் பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கு, என்று கேலி செய்தனர்.

தத்துவ விளக்கம்:
மாயையில் சிக்கிக் கொண்ட மனம், சோம்பலில் தொடர வேண்டி எல்லா வகையான முயற்சிகளையும் மேற்கொள்ளும். அதனை அதன் போக்கில் விடாது, முயற்சி செய்து, இறைவனை நோக்கித் திருப்ப  வேண்டும் என்கிறார் மாணிக்கவாசகர்.



பாடல் எண் : 05
மால் அறியா நான்முகனும் காணா மலையினை நாம்     
போலறிவோம் என்று உள்ள பொக்கங்களே பேசும்
பால் ஊறும் தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்     
ஞாலமே விண்ணே பிறவே அறிவு அரியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டு அருளிக் கோதாட்டும்      
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்று
ஓலம் இடினும் உணராய் உணராய் காண்      
ஏலக் குழலி பரிசு ஏல் ஓர் எம்பாவாய்.

பொருள்:
நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல... இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன் "சிவசிவ" என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவண்ணாமலைப் பெண்கள்.

தத்துவ விளக்கம்:
ஆணவ மலத்தில் கட்டுண்ட மனம், இறைவனைப் பற்றி சிறிதளவு நினைக்கும்பொதே, தான் முழுதும் உணர்ந்து விட்டதாக நம்மை ஏமாற்றும். இந்த மாயையில் சிக்கிக் கொள்ளாமல், முழுமையான விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், அவன் ஆட்கொள்வதற்காக, நம்மை மேலும் மேலும் தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும்  என்பதை உணர்த்துகிறார் மாணிக்கவாசகர்.


ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...! 

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக