இறைவர் திருப்பெயர் : சௌந்தரநாதர்
இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி
தல மரம் : புன்னாகம்
தீர்த்தம் : காருண்ய தீர்த்தம்
வழிபட்டோர் : நம்பியாண்டார் நம்பி, நாரை
பாடியவர்கள் : அப்பர், சம்பந்தர்
தலத்தின் சிறப்புகள்
நாரை பூஜித்ததால் தலத்திற்கு இப்பெயர். தேவாரத் திருமுறைகள் தில்லை கனகசபையின் ஒரு அறையில் இருந்ததை நம்பியாண்டார் நம்பி மூலமாக வெளிப்படுத்திய பொல்லாப் பிள்ளையார் எழுந்தருளியிருக்கும் தலம்.
நம்பியாண்டார் நம்பிகள் அவதரித்த தலம்.
திருநாரையூர் திருத்தலம் தேவாரப் பாடல் பெற்ற, சோழ நாட்டுக் காவிரியின் வடகரைத் தலங்களில் 33-வது திருத்தலமாக விளங்குகின்றது. திருஞானசம்பந்த சுவாமிகளின் மூன்று பதிகங்களும், அப்பர் பெருமானின் இரண்டு பதிகங்களும் கொண்ட இத்திருத்தலத்து இறைவன் திருநாமம் சௌந்தரேஸ்வரர். அம்பிகையின் திருநாமம் திரிபுரசுந்தரி.
பொல்லாப் பிள்ளையார் சன்னதி மிகச் சிறப்பு.(பொள்ளா என்பது பொல்லா என்றாயிற்று. பொள்ளா என்பது உளி முதலியவற்றால் செய்யப்படாதது. சுயம்பு மூர்த்தி.)
கி.பி.11ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட கல்வெட்டுகள் நான்கு உள்ளன.
முருகப்பெருமானுக்கு 6 படை வீடு இருப்பது அனைவருக்கும் தெரியும். இதே போல் விநாயகருக்கும் 6 படை வீடு இருக்கிறது. இத்தலத்தில் கோயிலில் இடது பக்கம் உள்ள பொல்லாப்பிள்ளையார் சன்னதி விநாயகரின் ஆறாவது படை வீடாகும். பொல்லாப்பிள்ளையார் சுயம்பு விநாயகராக அருள்பாலிக்கிறார்.
மூன்று நிலைகளுடன் கிழக்கு நோக்கிய ராஜகோபுரம். பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவகிரகம், சனி பகவான், பைரவர், சூரியன் ஆகியோர் உள்ளனர்.
தலத்தின் வரலாறு
தவசிரேஷ்டரான துர்வாச முனிவர் ஒரு சமயம் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அச்சமயம், ஆகாய மார்க்கமாக கந்தர்வர்கள் சிலர் பறந்து சென்றார்கள். அவர்களில் தேவதத்தன் என்னும் கந்தர்வன் பழங்களைச் சாப்பிட்டுவிட்டு கொட்டைகளைக் கீழே போட, அவை மகரிஷி துர்வாச முனிவரின் மேல் விழுந்து முனிவரின் தவம் கலைந்தது. கண் திறந்த முனிவர் மிகுந்த சினம் கொண்டு அந்த கந்தர்வனைச் சபித்தார்.
பழக் கொட்டையைப் பறவைபோல் உதிர்த்த நீ நாரையாய்ப் போகக் கடவது! எனச் சாபமிட்டார். முனிவரின் சாபம் உடனடியாகப் பலித்துவிட்டது. கந்தர்வன் நாரையாக உருமாறினான். நாரை தன் பாவத்துக்கு விமோசனம் வேண்ட, முனிவரே வழி சொன்னார்: இங்கே இருக்கும் பெருமானுக்குத் தினமும் கங்கை நீரைக் கொண்டு வந்து அபிஷேகம் செய்தால், உனக்குச் சாப விமோசனம் கிடைக்கும் என வழிகூறி அருளினார்.
நாரையும் அப்படியே செய்து இறைவனைப் பூசித்து வந்தது. ஒரு நாள், இறைவனின் சோதனையால் காசியிலிருந்து கங்கை நீர் கொண்டு வரும்போது பெரும் மழை பெய்து, கடும் புயலும் வீசியது. அதனால், நாரை பறக்க முடியாமல் தவித்தது. அதன் சிறகுகள் ஒவ்வொன்றாகக் காற்றில் பிய்ந்து விழுந்தன.
அவ்வாறு சிறகுகள் விழுந்த இடம் சிறகிழந்த நல்லூர் என்று வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஊர் இப்போதும் திருநாரையூரிலிருந்து 1 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் இறைவனின் திருநாமம் ஞானபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் ஞானாம்பிகை. சிறகுகளே இல்லாத நாரை தவழ்ந்து வந்து சிவனை வழிப்பட்டு மோட்சம் பெற்றது. அதனால் இந்த ஊர் திருநாரையூர் என்று அழைக்கப்படுகிறது. நாரைக்கு அருள் செய்த இத்தலத்து இறைவன் சுயம்புவாகத் தோன்றியதால் சுயம்பிரகாசர் எனவும் வழங்கப்படுகிறார்.
சௌந்தரேஸ்வரரின் சந்நிதிக்குத் தென்மேற்குத் திசையில் தனிச் சந்நிதியில் பொல்லாப் பிள்ளையார் தரிசனம் தருகிறார். அவரது உண்மைத் திருநாமம் பொள்ளாப் பிள்ளையார் என்பதே.
பொள்ளாத என்றால் உளியால் செதுக்கப்படாத அல்லது கல்லைப் பொளியாமல் தோன்றிய என்று அர்த்தம். இந்தப் பிள்ளையார் உளியால் செதுக்கப்படாமல் சுயம்புவாகத் தானே தோன்றிய காரணத்தால் பொள்ளாப் பிள்ளையார் என அழைக்கப்படுகிறார். அதுவே தற்போது மருவி பொல்லாப்பிள்ளையார் என வழங்கப்படுகிறது.
சுப்பிரமணியருக்கு எவ்வாறு அறுபடை வீடுகள் உள்ளனவோ, அதுபோலவே விநாயகருக்கும் உண்டு. அதில் முதன்மையானது திருநாரையூர் மற்ற விநாயகர் தலங்கள் திருவண்ணாமலை, திருக்கடவூர், மதுரை, திருமுதுகுன்றம், காசி ஆகியவையாகும். பொள்ளாப் பிள்ளயார் இல்லாவிட்டால் தேவாரப் பாடல்கள் நமக்குக் கிடைத்திருக்காது.
பொள்ளாப் பிள்ளையார் சந்நிதியில் பக்தியுடன் தினமும் பூசித்து வந்தார், ஆதிசைவர் மரபில் தோன்றிய அனந்தேசர். இவரின் துணைவியார் கல்யாணி அம்மையார். இவர்களது புதல்வன் நம்பி. தினந்தோறும் நைவேத்தியத்தைக் கோயிலில் விநியோகித்தே திரும்புவார் அனந்தேசர். பிரசாதம் கேட்கும் தன் புதல்வன் நம்பியிடம் பிள்ளையார் சாப்பிட்டுவிட்டார் எனப் பதில் சொல்வார் தந்தை.
ஒருமுறை தந்தை வெளியூர் போக, சிறுவன் நம்பி பக்தியுடன் பூசை செய்துவிட்டு, தாயார் கொடுத்த நைவேத்தியத்தைப் பிள்ளையார் முன் வைத்து விநாயகப் பெருமானை சாப்பிடும்படி வேண்டினான்! பிள்ளையார் சாப்பிடவில்லை. மன்றாடினான். தான் ஏதோ தவறு செய்துவிட்டதால்தான் பிள்ளயார் உணவை ஏற்க மறுக்கிறார் என்று எண்ணி வேதனையுடன் விழுந்து, புரண்டு அரற்றினான். தலையைக் கல்லில் முட்டி, மோதி அழுதான்.
தும்பிக்கை நாதன் நம்பியைத் தம் திருக்கரத்தால் தாங்கித் தடுத்தருளி நம்பி பொறு எனக் கூறித் துதிக்கையை வலப்புறமாக நீட்டிச் சாப்பிட்டார். மகிழ்ச்சியுடன் இல்லம் திரும்பிய நம்பி, விஷயத்தைத் தாயாரிடம் சொன்னான். எப்படி நம்புவாள் அவள்? மறுநாள் நம்பியின் தந்தை மறைந்திருந்து பார்க்க மீண்டும் அதே அற்புதம் நடைபெற்றது. நம்பி சமர்பித்த நைவேத்தியத்தைத் தும்பிக்கைப் பிரான் ஏற்று உண்ட காட்சியைக் கண்டு மெய் சிலிர்த்தார் அனந்தேசர்.
திருமுறைகள் தந்த திருநாரையூர்
நம்பியாண்டார் நம்பி, சோழப் பேரரசன் இராஜ ராஜ சோழன் ஆகிய இருவர் மூலமாக தேவாரத் திருமுறைகள் நமக்குக் கிடைக்கச் செய்தார் பொள்ளாப் பிள்ளையார்.
நம்பியாண்டார் நம்பியின் சிறப்புகள் இராஜராஜ சோழனின் காதுகளுக்கு எட்டியது. சைவத் திருமுறைகளின் இருப்பிடம் தேடி அவற்றைத் தொகுக்கும் மாபெரும் பணியை முடித்துவிடவேண்டும் என்ற அவனது நெடுநாளைய ஆசைக்கு பொள்ளாப் பிள்ளையாரின் ஆசி வேண்டி வந்தான். திருமுறை இருக்கும் இடம் காட்டி அருள வேண்டும் என்று இராஜராஜனும், நம்பியும் வேண்ட, தில்லை நடராஜர் ஆலயத்தின் தென்மேற்கு மண்டபத்தில் சுவடிகள் கிடைக்கும் எனத் தெய்வவாக்கு ஒலித்தது. (இன்றும் சிதம்பரம் நடராஜர் ஆலயத்தின் மேற்கு உள்பிரகாரத்தில் திருமுறை காட்டிய விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது).
இராஜராஜன், தில்லைவாழ் அந்தணர்களிடம் சென்று திருமுறைகளைத் தொகுக்க அனுமதி கேட்டான். அவர்கள் சொல்படி, சைவ மூவர் சிலைகளை வடித்து வைத்துப் பூசித்து அவற்றின் முன்னிலையில் திருமுறைச் சுவடிகள் இருந்த அறையைத் திறக்கச் செய்தான். திறந்தவுடன் ஏடுகள் புற்றால் மூடியிருக்கக் கண்டு திடுக்கிட்டு, உள்ளம் நொந்தனர். இக்காலத்துக்குத் தேவையானவற்றை மட்டும் வைத்துப் பிறவற்றைச் செல்லரிக்கச் செய்தோம் என்ற திருவருள் வாக்கால் ஒருவாறு அமைதி பெற்றனர். திருநாரையூர் நம்பியைக் கொண்டு அவற்றைப் பதினோரு திருமுறைகளாய்த் தொகுக்கச் செய்தான்.
தொகுத்த தேவாரப் பதிகங்களுக்கு, பண்முறை அமைக்க விரும்பிய நம்பியும் அரசனும் திருஎருக்கத்தம்புலியூரில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை வேண்டினார்கள்.(திருஎருக்கத்தம்புலியூர் என்னும் ஸ்தலம் தற்போது இராஜேந்திரப்பட்டினம் என வழங்கப்படுகிறது.
திருஞானசம்பந்தர் சுவாமிகள் பதிகம் பெற்ற நடுநாட்டு ஸ்தலம் இது. இறைவன் திருநாமம் ஸ்ரீ நீலகண்டேஸ்வரர் இறைவி திருநாமம் ஸ்ரீ நீலமலர்க்கண் அம்மை இத்தலம் விருத்தாசலத்திற்கு அருகில் அமைந்துள்ளது). திருநீலகண்ட பெரும்பாணன் மரபில் பிறந்த ஒரு பெண்ணுக்கு (பாடினி) பண்களை அருளினோம். இத்தலத்திலுள்ள அப்பெண்ணை அழைத்துச் சென்று பதிகங்களுக்குப் பண்முறை அமைக்கச் செய்வீர் என்று தெய்வவாக்கு கிடைத்தது.(இப்பிறவியிலேயே வாய் பேச முடியாதவள். இப்பெண்ணிற்கு இறைவன் அருள் புரிந்து பதிகங்களுக்கு பண்முறை அமைக்கச் செய்து அப்பண்னோடு திருமுறை பாட அருள் புரிந்தார்) மனம் மகிழ்ந்த மன்னனும் நம்பியும் அத்தலத்திலுள்ள அந்த பெண்ணைக் கண்டறிந்து தில்லை கனகசபைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எல்லோரது முன்னிலையிலும் அப்பெண்ணைக் கொண்டு தேவாரப் பதிகங்களுக்கு, பண்முறைகளை முறையாக அமைக்கச் செய்தனர்.
இன்று தேவாரப் பதிகங்கள் தக்கப்பண்களுடன் நமக்கு கிடைக்க ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி, இராஜ ராஜ சோழன் இவர்கள் இருவர் மூலமாக அருளியவர் திருநரையூர் ஸ்ரீ பொள்ளப் பிள்ளையார்.
ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி இயற்றிய நூல்கள் (பதினோராந் திருமுறை): ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி திருநாரையூர் விநாயகர் திரு இரட்டை மணிமாலை தவிர சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் மீது கோயில் திருப்பண்ணியர் விருத்தம் திருத்தொண்ட தொகை திருஞானசம்பந்தமூர்த்தி சுவாமிகள் மீது திருவந்தாதி, திருச்சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திருவுலாமாலை, திருக்கலம்பகம், திருத்தொகை. மற்றும் திருநாவுக்கரசு சுவாமிகள் மீது திருவேகாதசமாலையும் பாடியருளினார். தாம் அருளிச்செய்த இந்த பத்து நூல்களையும் சோழ மகாராஜாஷடைய வேண்டுகோளின்படி பதினோராந் திருமுறையிலேயே சேர்ந்தருளினார். திருமுறைகளை கண்டெடுத்த காரணத்தால் சோழ மன்னனும் திருமுறை கண்ட சோழன் என சிறப்பு பெயர் பெற்றார்.
கோவிலுக்கு வெளியே சற்று தூரத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி அவதரித்து வசித்து வந்த பவித்ரமான இடத்தில் தற்போது சிறிய மண்டபத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பி சிற்ப வடிவில் நமக்கு அருள்பாலிக்கின்றார்.
திருஞான சம்பந்தர் சுவாமிகள் திருக்கடம்பூரைத் தரிசித்துக் கொண்டு திருநாரையூர் இறைவனைத் தரிசித்து செந்தமிழ் மாலை பாடினார் என்கிறார் சேக்கிழார்.
தில்லைக் கூத்தனைத் தரிசித்துவிட்டு சீர்காழியை நோக்கிச் சென்றபொழுது இடை வழியில் திருநாரையூரைத் தரிசித்து இறைவனது பெருமைகளைத் திருநாவுக்கரசு சுவாமிகள் பாடினார் எனப் பெரியபுராணம் குறிப்பிடுகின்றது.
தினசரி ஐந்துகாலப் பூசைகள் நடைபெறுகின்றன. சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, கிருத்திகை, ஐப்பசி கந்தர் சஷ்டி விழா, பிரதோஷம், மகா சிவராத்திரி, நவராத்திரி முதலியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.
ஒவ்வொரு வருடமும் வைகாசித் திங்கள் புனர்பூச நட்சத்திரத்தில் (நம்பியாண்டார் நம்பி முக்தி அடைந்த நாள்) நம்பி குருபூசை விழா சிறந்த திருமுறை விழாவாகக் கொண்டாடப்படுகின்றது. நாரை முக்தி அடைந்த வைகாசி விசாகம் அன்றும் ஒவ்வொரு வருடமும் சிறப்பு வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.
சங்கடஹர சதுர்த்தியன்று பொள்ளாப் பிள்ளையாருக்கு விசேஷப் பூசைகள் நடைபெறும். மேலும் அன்று இரவு வானில் இருக்கும் சந்திரனுக்காக பொள்ளாப் பிள்ளையார் சந்நிதிக்கு வெளியே ஒரு குத்துவிளக்கு ஏற்றி, நிலாவை நோக்கி தீபாராதனை காட்டுவார்கள். இதைத் தரிசித்தபின்புதான் பக்தர்கள் தங்கள் விரதத்தை நிறைவு செய்வார்கள்.
வடதிருநாரையூர் : தேசமுற்ற புகழ் செம்மை பெற்ற திருநாரையூர் என்று இவ்வூரைத் திருநாவுக்கரசு சுவாமிகள் சிறப்பித்துள்ளதை மெய்ப்பிக்கும் வகையில் சென்னை சைதாப்பேட்டையில் பிராமணர் தெருவில் வடதிருநாரையூர் என்னும் தலம் உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
திருநாரையூர் திருத்தலத்தைச் சுற்றி சுமார் 20 கி.மீ. தொலைவிற்குள் திருவேட்களம் (அண்ணாமலை நகர்), திருநெல்வாயில் (சிவபுரி), திருக்கழிப்பாலை, திருஓமாம்புலியூர், திருக்கானாட்டுமுள்ளூர், திருக்கடம்பூர் (கரக்கோவில்) முதலிய தேவாரப் பாடல் பெற்ற தலங்களும், வைணவ அபிமானத் தலமான காட்டுமன்னார்கோவிலும் அமைந்துள்ளன.
சைவ - வைணவ ஒற்றுமை
சைவர்களின் தமிழ்வேதமான தேவாரத்தைத் தொகுத்தருளிய நம்பியாண்டார் நம்பி அவதரித்த திருநாரையூருக்கு அருகில்தான் (சுமார் 8 கி.மீ. தொலைவில்) வைணவர்களின் தமிழ்வேதமான நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்களைக் கண்டெடுத்துத் தொகுத்தருளிய நாதமுனிகள் அவதரித்த காட்டுமன்னார்கோயிலும் (வீர நாராயணபுரம்) அமைந்துள்ளது சிறப்பான ஒன்றாகும்.
கோவில் அமைவிடம்
திருநாரையூர் என்னும் திருத்தலம், சிதம்பரம் & திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சிதம்பரம் – காட்டுமன்னார் கோவில் இடையே சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ தொலைவிலும், காட்டுமன்னார் கோவிலி லிருந்து 8 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. பேருந்து வசதி நிரம்ப உள்ளது.
"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநம்பியாண்டார் நம்பி கதை எந்த நூலில் உள்ளது ? யார் அவரை பற்றி சொல்லியிருக்கிறார்கள் ? தெரிந்தால் உதவியாக இருக்கும் ஐயா.
பதிலளிநீக்கு