இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அகத்தீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மங்கை நாயகி, ஸ்ரீ பாகம்பிரியாள்
திருமுறை : இரண்டாம் திருமுறை 76 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
கைலாயத்தில் நடக்க இருக்கும் பார்வதி சிவபெருமான் திருமணம் காண தேவர்கள், முனிவர்கள் மற்றும் எல்லோரும் கூடினர். அப்போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. பூமியை சமன் செய்ய இறைவன் அகத்திய முனிவரை தென்திசை செல்லும்படி பணித்தார். அகத்தியர் தனக்கு சிவன் பார்வதி திருமணத்தைக் காணும் பேறு கிடைக்கவில்லையே என்று வருந்தினார்.
சிவபெருமான் அகத்தியருக்கு திருமணக்கோலம் காட்டி அருளுவேன் என்று வாக்களித்தார். அகத்தியரும் புறப்பட்டு தென்திசை வந்து அகத்தியான்பள்ளி தலத்தில் ஒரு ஆசிரமம் அமைத்துக் கொண்டு தங்கினார். சிவலிங்கம் ஒன்றை ஸ்தாபித்து அதற்கு பூஜைகள் செய்து வரலானார். இறைவன் அகத்தியருக்கு கொடுத்த வாக்கின் படி அகத்தியான்பள்ளியில் பார்வதியுடன் நடந்த தனது திருமணக் கோலத்தை காட்டி அருள் புரிந்தார். அகத்தியருக்குக் காட்சி கொடுத்ததால் இத்தலத்து இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார்.
கோவில் அமைப்பு : மக்கள் இக்கோயிலை அகஸ்தியர் கோயில் என்றே கூறுகின்றனர். ஆலயத்தின் தோரண வாயிலிலும் அகஸ்தியர் கோவில் என்றே எழுதப்பட்டுள்ளது. ஆலயத்திற்கு ஒரு தோரண வாயிலும் அதையடுத்து ஒரு 3 நிலை இராஜகோபுரமும் உள்ளது. இத்தலத்தில் மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கியும் இறைவி சௌந்தர நாயகியின் சந்நிதி மேற்கு நோக்கியும் அமைந்துள்ளது.
இங்கு மூலவர் அகத்தீஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சுவாமி கிழக்கு நோக்கியும், அம்பாள் மேற்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். சிவன் பார்வதி திருமணக் கோலம் கருவறையில் சிவலிங்கத்தின் பின்னே கருவறைச் சுவரில் புடைப்புச் சிறபமாக காணப்படுகிறது. அம்பாள் கோயிலுக்குப் பக்கத்தில் சுவாமியைப் பார்த்தவாறு அகத்தியர் கோயில் உள்ளது. கோவிலில் உள்ள அகத்தியர் உருவச்சிலை மிகவும் அழகிய வேலைப்பாடுடன் கூடிய சிற்பமாகும்.
இக்கோவிலில் உள்ள ஒரு கல்வெட்டிலிருந்து குலசேகர பாண்டியன் என்ற அரசனுக்கு இருந்த வியாதி அருகில் உள்ள வேதாரண்யம் திருத்தலத்தில் உற்சவம் நடத்தி நீங்கப் பெற்றது என்ற தகவல் தெரிய வருகிறது. இக்கோயிலில் நவக்கிரகங்கள் ஒரே திசை பார்த்து உள்ளன. இத்தல இறைவனை எமதர்மன் வழிபட்டுள்ளான். தல விருட்சமாக வன்னி மரமும், அகத்தி மரமும் உள்ளன. ஆலயத்தின் தீர்த்தங்களாக கோயிலின் மேற்புறம் உள்ள அகத்திய தீர்த்தம் மற்றும் அக்னி தீர்த்தம் (அருகாமையில் உள்ள கடல்) உள்ளன.
நன்றி shivatemples இணையதளத்திற்கு
பாடல் எண் : 01
வாடிய வெண்தலை மாலை சூடி மயங்கிருள்
நீடுயர் கொள்ளி விளக்குமாக நிவந்தெரி
ஆடிய எம்பெருமான் அகத்தியான் பள்ளியைப்
பாடிய சிந்தையினார்கட்கு இல்லையாம் பாவமே.
பாடல் விளக்கம்:
தசைவற்றிய வெண்டலை மாலையைச் சூடிச் செறிந்த இருளில், பெருகி உயர்கின்ற தீக்கொள்ளி விளக்காக உயர்ந்த இடுகாட்டு எரியில் நின்றாடிய எம்பெருமானது அகத்தியான் பள்ளியை மனம் ஒன்றிப் பாடுவோர்க்குப் பாவம் இல்லை.
பாடல் எண் : 02
துன்னம் கொண்ட உடையான் துதைந்த வெண்ணீற்றினான்
மன்னும் கொன்றை மதமத்தம் சூடினான் மாநகர்
அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியை
உன்னம் செய்த மனத்தார்கள் தம் வினை ஓடுமே.
பாடல் விளக்கம்:
தைத்த உடையை அணிந்தவன். வெண்மை செறிந்த திருநீற்றைப் பூசியவன். பொருந்திய கொன்றை, ஊமத்தை மலர்களைச் சூடியவன். அப்பெருமான் எழுந்தருளியதும் அன்னங்கள் வாழும் பொழில்கள் சூழ்ந்ததுமான அகத்தியான்பள்ளியை நினையும் மனம் உடையவர்களின் வினைகள் நீங்கும்.
பாடல் எண் : 03
உடுத்ததுவும் புலித்தோல் பலி திரிந்து உண்பதும்
கடுத்து வந்த கழற்காலன் தன்னையும் காலினால்
அடர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
தொடுத்ததுவும் சரம் முப்புரம் துகளாகவே.
பாடல் விளக்கம்:
உடுத்துள்ளது புலித்தோல். உண்பது பலியேற்றுத்திரிந்து. கொன்றது சினந்து வந்த கழலணிந்த காலனைக் காலினால். அவ்விறைவன் வாழ்வது பொழில்கள் சூழ்ந்த அகத்தியான்பள்ளி. சரம் தொடுத்தது துகளாகுமாறு திரிபுரங்களை.
பாடல் எண் : 04
காய்ந்ததுவும் அன்று காமனை நெற்றிக் கண்ணினால்
பாய்ந்ததுவும் கழல் காலனை பண்ணின் நான்மறை
ஆய்ந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
ஏய்ந்ததுவும் இமவான் மகளொரு பாகமே.
பாடல் விளக்கம்:
அன்று நெற்றிக்கண்ணால் சினந்தது காமனை. பாய்ந்து கொன்றது கழலணிந்த காலனை. பண்களோடு ஆராய்ந்தது வேதங்களை. ஒரு பாகத்தே ஏய்ந்து கொண்டது இமவான் மகளை அத்தகையோன் அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான்.
பாடல் எண் : 05
போர்த்ததுவும் கரியின் உரி புலித்தோலுடை
கூர்த்ததோர் வெண்மழு ஏந்தி கோளரவம் அரைக்கு
ஆர்த்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
பார்த்ததுவும் அரணம் படரெரி மூழ்கவே.
பாடல் விளக்கம்:
போர்த்துள்ளது யானைத்தோல், உடுத்துள்ளது புலித்தோல், ஏந்தியுள்ளது கூரிய வெண்மழு, அரையில் கட்டியுள்ளது பாம்பு, பரந்த எரியுள் மூழ்குமாறு பார்த்தது முப்புரம், அத்தகையோன் அகத்தியான்பள்ளி இறைவன் ஆவான்.
பாடல் எண் : 06
தெரிந்ததுவும் கணையொன்று முப்புரம் சென்றுடன்
எரிந்ததுவும் முன்னெழிலார் மலர் உறைவான் தலை
அரிந்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
புரிந்ததுவும் உமையாள் ஓர் பாகம் புனைதலே.
பாடல் விளக்கம்:
தெரிவு செய்தது கணை ஒன்று. அக்கணை சென்று உடன் எரியச்செய்தது முப்புரங்களை. முற்காலத்தில் அரிந்தது அழகிய தாமரை மலர் மேல் உறையும் பிரமனின் தலையை. விரும்பி ஒரு பாகமாகப் புனைந்தது உமையவளை. அத்தகையோன் பொழில்கள் சூழ்ந்த அகத்தியான் பள்ளி இறைவன் ஆவான்.
பாடல் எண் : 07
ஓதியெல்லாம் உலகுக்கொர் ஒண் பொருளாகி மெய்ச்
சோதியென்று தொழுவார் அவர் துயர் தீர்த்திடும்
ஆதி எங்கள் பெருமான் அகத்தியான் பள்ளியை
நீதியால் தொழுவார் அவர் வினை நீங்குமே.
பாடல் விளக்கம்:
வேதங்களை ஓதியவனே! உலகுக்கெல்லாம் ஒண் பொருளாகி விளங்குபவனே! நிலையான சோதி வடிவினனே! என்று கூறித் தொழுவாரவர் துயர் தீர்த்திடும் முதல்வனாகிய எங்கள் தலைவன் விளங்கும் அகத்தியான் பள்ளியை முறையாகத் தொழுபவர் வினைகள் நீங்கும்.
பாடல் எண் : 08
செறுத்ததுவும் தக்கன் வேள்வியை திருந்தார் புரம்
ஒறுத்ததுவும் ஒளி மாமலர் உறைவான் சிரம்
அறுத்ததுவும் பொழில் சூழ் அகத்தியான் பள்ளியான்
இறுத்ததுவும் அரக்கன் தன் தோள்கள் இருபதே.
பாடல் விளக்கம்:
சினந்து அழித்தது தக்கன் வேள்வியை ஒறுத்து எரித்தது பகைவர்தம் திரிபுரங்களை அறுத்தது ஒளி பொருந்திய சிறந்த தாமரை மலர் மேலுறையும் பிரமனின் தலையை நெரியச் செய்தது இராவணனின் இருபது தோள்களை அத்தகையோன் அகத்தியான் பள்ளி இறைவன் ஆவான்.
பாடல் எண் : 09
சிரமும் நல்ல மதமத்தமும் திகழ் கொன்றையும்
அரவும் மல்கும் சடையான் அகத்தியான் பள்ளியைப்
பிரமனோடு திருமாலும் தேடிய பெற்றிமை
பரவ வல்லார் அவர் தங்கள் மேல் வினை பாறுமே.
பாடல் விளக்கம்:
தலை மாலையையும், பிறையையும், ஊமத்தை மலரையும், விளங்கும் கொன்றை மலரையும் பாம்பையும் அணிந்துள்ள சடையினனாகிய அகத்தியான்பள்ளியில் உறையும் இறைவனைப் பிரமனும் திருமாலும் தேடிக்காண முடியாத தன்மையைக் கூறிப் பரவவல்லவர் தங்கள் மேல்வரும் வினைகள் அழியும்.
பாடல் எண் : 10
செந்துவர் ஆடையினாரும் வெற்று அரையே திரி
புந்தி இலார்களும் பேசும் பேச்சு அவை பொய்ம்மொழி
அந்தணன் எங்கள் பிரான் அகத்தியான் பள்ளியைச்
சிந்திமின் நும்வினை ஆனவை சிதைந்து ஓடுமே.
பாடல் விளக்கம்:
சிவந்த துவராடையை அணிந்து, ஆடையின்றி வெற்றுடல்களோடு திரியும் அறிவற்றவர்களாகிய சமண புத்தர்கள் பேசும் பேச்சுக்கள் பொய்மொழிகளாகும். அவற்றை விடுத்து அழகிய கருணையாளனும் எங்கள் தலைவனும் ஆகிய அகத்தியான்பள்ளி இறைவனைச் சிந்தியுங்கள். வினைகள் சிதைந்து ஓடும்.
பாடல் எண் : 11
ஞாலம் மல்கும் தமிழ் ஞானசம்பந்தன் மாமயில்
ஆலும் சோலை புடைசூழ் அகத்தியான் பள்ளியுள்
சூலம் நல்ல படையான் அடிதொழுது ஏத்திய
மாலை வல்லார் அவர் தங்கள் மேல்வினை மாயுமே.
பாடல் விளக்கம்:
உலகம் முழுதும் பரவிய புகழாளனாகிய ஞானசம்பந்தன் சிறந்த மயில்கள் ஆடும் சோலைகள் சூழ்ந்த அகத்தியான் பள்ளியுள் விளங்கும் நல்ல சூலப்படையானின் திருவடிகளைத் தொழுது போற்றிப் பாடிய இத்தமிழ் மாலையை ஓதவல்லவர்கள் மேல்வரும் வினைகள் மாயும்.
|| --- திருஅகத்தியான்பள்ளி திருமுறை பதிகம் முற்றிற்று --- ||
|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக