வெள்ளி, 12 பிப்ரவரி, 2016

திருக்குடமூக்கு (கும்பகோணம்) திருமுறை பதிகம் 01

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ கும்பேஸ்வரர், ஸ்ரீ அமுதேஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மங்களாம்பிகை, ஸ்ரீ மங்கள நாயகி

திருமுறை : மூன்றாம் திருமுறை 59 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம். சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதி கும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார்.

இத்தலத்தில் பதினான்கு கோயில்களும், பதினான்கு தீர்த்தங்களும் உள்ளன. கும்பகோணத்தில் குடமூக்கு - கும்பேசுவரர் கோயில், குடந்தைகீழ்க் கோட்டம் - நாகேசுவர சுவாமி கோயில், குடந்தைக் காரோணம் - சோமேசர் கோயில் என வழங்கப்படுகிறது.

ஆதி கும்பேஸ்வரர் கோவில் மூன்று கோபுரங்களையும், மூன்று பிரகாரங்களையும் உடையது. கிழக்கிலுள்ள கோபுர வாயிலே பிரதான வாயிலாகும். இராஜகோபுரம் சுமார் 128 அடி உயரமுடையதாகும். இறைவன் கும்பேஸ்வரர் மண்ணால் ஆன குடவடிவம் உடையவர் என்பதால் தங்கக் கவசம் சார்த்தியே அபிஷேகம் நடைபெறுகிறது. பௌர்ணமி நாட்களில் மட்டும் புணுகு சாத்தி வழிபாடு செய்யப்படும். கொடிக் கம்பத்திற்கருகில் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் சந்நிதி இருக்கிறது. இக்கோவிலில் ஆறுமுகப்பெருமானுக்கு ஆறு முகங்கள் இருந்தாலும் கைகள் 12 இல்லாமல் 6 மட்டுமே உள்ளது. மேலும் இக்கோவிலில் உள்ள சித்திர நடன மண்டபமும் அதிலுள்ள சிறப வேலைப்பாடுகளும் காணத் தக்கவையாகும்.


இத்தலத்தில் அநேக சந்நிதிகள் உள்ளன. நவக்கிரக சந்நிதி, வல்லப விநாயகர் சந்நிதி, அறுபத்துமூவர் திருமேனிகள், உற்சவ மூர்த்தங்கள், வீரபத்திரர், சப்தகன்னியர், அஷ்ட லிங்கங்கள் முதலிய சந்நிதிகள், சோமாஸ்கந்தர் சந்நிதி, வலஞ்சுழி விநாயகர், மகாலிங்கேசுவரர், பிட்சாடனர், சண்முகர், கார்த்திகேயர், சிவலிங்கமூர்த்தங்கள். அன்னபூரணி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோர் என்ற் ஏராளமான சந்நிதிகள். அமுதகடத்தை வில்லாலடித்துச் சிதறச்செய்த மூர்த்தியாக - கிராதகோலத்தில் காட்சி தரும் இறைவன், பைரவர், மூன்று திருவடிகளுடன் ஜ்வரஹரேசுவரர் ஆகியோரின் திருவுருவங்களையும் நாம் இங்கே காணலாம்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். மூர்க்க நாயனார் தொண்டு செய்து வாழ்ந்த பதி. கும்பேஸ்வரருக்குப் பின்புறம் முருகப் பெருமான கார்த்திகேயன் என்ற பெயருடன் எழுந்தருளியுள்ளார். ஆறு திருமுகங்களும், ஆறு திருக்கரங்களும் கொண்டு மயிலின் முன்னே தனது தேவியர் இருக்க எழுந்தருளியுள்ளார். ஆறு திருமுகங்களும், ஆறு திருக்கரங்களும் கொண்டு விளங்கும் முருகப் பெருமான் தமிழகத்தில் குடந்தையில் மட்டுமே காட்சி தருகிறார். கோவிலின் வெளிப் பிரகாரத்தில் தண்டபாணி சுவாமி சந்நிதி உள்ளது. இம்மூர்த்தி தெய்வீகப் பொலிவுடன் காட்சி தருகின்றார்.

மகாமகக் குளம்: கும்பகோணத்தில் நடைபெறும் விழாக்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் பெயர் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குரு சிம்மராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருக்கும் சேர்க்கை நடைபெறும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது. 

மகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் நீராட நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மக்கள் கும்பகோணத்தில் கூடுவர். காசியில் பிறந்தோர் பாவம் கும்பகோணத்தில் போகும், கும்பகோணத்தில் பிறந்தோர் பாவம் மகாமகக் குளத்தில் நீராடினால் போகும் என்று புராணங்கள் கூறுகின்றன. மகாமக உற்சவநாளில் கங்கை முதலிய ஒன்பது புண்ணிய நதிகளும் (கங்கை, சரயு, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா, காவிரி) - நவகன்னியர்களாக, மக்கள் தங்களுக்குள் மூழ்கி தொலைத்த பாவங்களை போக்க, இங்கு வந்து மகாமக குளத்தில் நீராடியதால் இத்தீர்த்தம் "கன்னியர் தீர்த்தம்" என்னும் பெயரையும் பெற்றது. இந்த மகாமகக் குளம் சுமார் 20 ஏக்கர் பரப்புடையது.

நன்றி shivatemples இணையதளத்திற்கு


பாடல் எண் : 01
அரவிரி கோடல் நீடலணி காவிரியாற்று அயலே
மரவிரி போது மௌவல் மண மல்லிகை கள் அவிழும்
குரவிரி சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா
இரவிரி திங்கள் சூடி இருந்தான் அவன் எம் இறையே.

பாடல் விளக்கம்:
பாம்பைப் போலும் தண்டோடு மலர் விரிந்த காந்தட் செடிகள் செழித்திருத்தலால், அழகிய காவிரியாற்றின் பக்கம், மராமரங்கள் விரிந்த மலர்களும், முல்லையும், மணம் வீசும் மல்லிகையும், தேனோடு முறுக்கு உடையும் மலர்களை உடைய குராமரங்களும் விரிந்த சோலை சூழ்ந்த கும்பகோணத்தினை இடமாகக் கொண்டு குழகனாகிய சிவபெருமான், இரவில் ஒளிரும் சந்திரனைச் சூடி வீற்றிருக்கிறான். அப்பெருமானே எம் இறைவன். 


பாடல் எண் : 02
ஓத்து அரவங்களோடும் ஒலி காவிரி ஆர்த்து அயலே
பூத்து அரவங்களோடும் புகை கொண்டு அடி போற்றி நல்ல
கூத்து அரவங்கள் ஓவா குழகன் குடமூக்கு இடமா
ஏத்து அரவங்கள் செய்ய இருந்தான் அவன் எம் இறையே.

பாடல் விளக்கம்:
வேதங்கள் ஓதப்படும் ஒலியோடு, காவிரியாறு பாயும் ஒலியும் சேர்ந்தொலிக்க, பக்கத்திலுள்ள பூஞ்சோலைகளில் மலர்ந்துள்ள பூக்களைக் கொண்டு தூவி, தூபதீபம் காட்டி இறைவனைப் போற்றுவதால் உண்டாகும் ஒலி விளங்க, திருநடனம் புரியும் அழகனாகிய சிவபெருமான், திருக்குடமூக்கினை இடமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றான். எல்லோரும் போற்றி வணங்கும் புகழுடைய அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான்.


பாடல் எண் : 03
மயில் பெடை புல்கியால மணல் மேல் மட அன்னம் மல்கும்
பயில் பெடை வண்டு பண்செய் பழங்காவிரிப் பைம்பொழில்வாய்க்
குயில் பெடையோடு பாடலுடையான் குடமூக்கு இடமா
இயலொடு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே. 

பாடல் விளக்கம்:
ஆண் மயில் பெண் மயிலைத் தழுவி ஆட, காவிரியாற்றின் கரையிலுள்ள மணலின் மீது ஆண் அன்னம் தன் பெண் அன்னத்தோடு நடைபயில, வண்டுகள் பண்ணிசைக்க, நிறைய பழங்கள் கனிந்துள்ள பசுமையான சோலைகளில் குயிலானது பெடையோடு சேர்ந்து கீதமிசைக்கத் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் விண்ணோர்கள் வேதாகம முறைப்படி பூசிக்க வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம் வணங்கும் கடவுளாவான்.


பாடல் எண் : 04
மிக்கரை தாழவேங்கை உரி ஆர்த்து உமையாள் வெருவ
அக்கு அரவு ஆமை ஏனமருப்போடு அவை பூண்டு அழகார்
கொக்கரையோடு பாடலுடையான் குடமூக்கு இடமா
எக்கரையாரும் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே.

பாடல் விளக்கம்:
சிவபெருமான் புலியின் தோலை உரித்து நன்கு தாழ இடுப்பில் கட்டியவர். உமாதேவி அஞ்சுமாறு எலும்பு, பாம்பு, ஆமையோடு, பன்றியின் கொம்பு ஆகியவற்றை அழகிய ஆபரணமாகப் பூண்டு, கொக்கரை என்னும் வாத்தியம் இசைக்கப் பாடும் சிவபெருமான் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் எத்தன்மையோரும் போற்றி வணங்க வீற்றிருந்தருளுகின்றான். அவனே யாம் வணங்கும் கடவுளாவான். 


பாடல் எண் : 05
வடிவடை வாள் தடங்கண் உமை அஞ்ச ஒர் வாரணத்தைப்
பொடியணி மேனி மூட உரிகொண்டவன் புன்சடையான்
கொடி நெடுமாடம் ஓங்கும் குழகன் குடமூக்கு இடமா
இடிபடு வானம் ஏத்த இருந்தான் அவன் எம் இறையே.

பாடல் விளக்கம்:
அழகிய உருவமுடைய வாள்போன்ற ஒளி பொருந்திய அகன்ற கண்களையுடைய உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்து, திருவெண்ணீறணிந்த திருமேனி மீது போர்த்தவனும், சடைமுடியுடையவனும், அழகனும் ஆன சிவபெருமான், கொடிகள் அசைகின்ற ஆகாயத்தைத் தொடும்படி ஓங்கி வளர்ந்துள்ள நீண்ட மாடங்கள் நிறைந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் வானவர்கள் போற்ற வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான். 


பாடல் எண் : 06
கழை வளர் கவ்வை முத்தம் கமழ் காவிரியாற்று அயலே
தழை வளர் மாவின் நல்ல பலவின் கனிகள் தயங்கும்
குழை வளர் சோலை சூழ்ந்த குழகன் குடமூக்கு இடமா
இழை வளர் மங்கையோடும் இருந்தான் அவன் எம் இறையே.  

பாடல் விளக்கம்:
முற்றிய மூங்கில்களிலிருந்து மிகுதியாகக் கிடைக்கும் ஒலிக்கின்ற முத்துக்கள் நிறைந்த காவிரியாற்றின் பக்கத்திலே, தழைகள் மிகுந்த மாங்கனிகளும், பலாவின் கனிகளும் கொத்தாக விளைகின்ற சோலைகள் சூழ்ந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில், அழகான சிவபெருமான், நல்ல ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான்.


பாடல் எண் : 07
மலைமலி மங்கை பாகம் மகிழ்ந்தான் எழில் வையம் உய்யச்
சிலைமலி வெங்கணையால் சிதைத்தான் புரம் மூன்றினையும்
குலைமலி தண்பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா
இலைமலி சூலம் ஏந்தி இருந்தான் அவன் எம் இறையே.

பாடல் விளக்கம்:
மலைமகளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, மகிழ்ந்து விளங்கும் சிவபெருமான் எழில் மிக்க இவ்வுலகம் உய்யுமாறு மேருமலையை வில்லாகக் கொண்டு, அக்கினியைக் கணையாக்கித் தொடுத்து, மூன்று புரங்களையும் சிதைத்தவன். கொத்தாகக் காய்க்கும் பலாக்கனிகள் தாமாகவே கனிந்து வீழும் வளம் நிறைந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் இலைபோன்ற சூலப்படையை ஏந்தி வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம் வணங்கும் கடவுளாவான்.


பாடல் எண் : 08
நெடுமுடி பத்துடைய நிகழ் வாள் அரக்கன் உடலைப்
படுமிடர் கண்டு அயர பருமால் வரைக்கீழ் அடர்த்தான்
கொடுமடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா
இடு மணல் எக்கர் சூழ இருந்தான் அவன் எம் இறையே. 

பாடல் விளக்கம்:
நீண்ட முடிகள் பத்துடைய வாளுடைய இராவணனின் உடலானது துன்பப்படுமாறு கயிலை மலையின் கீழ் அடர்த்த பெருமானாய், வளைந்த மடல்களையுடைய தென்னை மரங்களிலிருந்து முற்றிய காய்கள் விழும் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் மணல் திட்டு சூழ வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம் வணங்கும் கடவுளாவான்.


பாடல் எண் : 09
ஆரெரி ஆழியானும் அலரானும் அளப்பரிய
நீரிரி புன்சடை மேல் நிரம்பா மதிசூடி நல்ல
கூரெரி ஆகி நீண்ட குழகன் குடமூக்கு இடமா
ஈருரி கோவணத்தோடு இருந்தான் அவன் எம் இறையே. 

பாடல் விளக்கம்:
அக்கினி போல் ஒளிரும் சக்கராயுதப் படையுடைய திருமாலும், பிரமனும் அளக்க முடியாதவனாய், கட்டுப்படுத்த முடியாமல் பெருக்கெடுத்த கங்கையைப் புன்சடைமேல் தாங்கி, இளம்பிறைச் சந்திரனைச் சூடி, நல்ல நெருப்புப் பிழம்பு போல் ஓங்கி நின்ற அழகனான சிவபெருமான், திருகுடமூக்கு என்னும் திருத்தலத்தில் தோலும் கோவண ஆடையும் அணிந்து வீற்றிருந்தருளுகின்றான். அவனே யாம் வணங்கும் கடவுள் ஆவான்.


பாடல் எண் : 10
மூடிய சீவரத்தார் முது மட்டையர் மோட்டு அமணர்
நாடிய தேவர் எல்லாம் நயந்து ஏத்திய நன்னலத்தான்
கூடிய குன்றமெல்லாம் உடையான் குடமூக்கு இடமா
ஏடலர் கொன்றை சூடி இருந்தான் அவன் எம் இறையே.

பாடல் விளக்கம்:
மஞ்சட் காவியுடையணிந்த, இறைவனை உணராத பேதையராகிய புத்தர்களும், இறுமாப்புடைய சமணர்களும், கூறுவன பயனற்றவை. தன்னை நாடித் தேவர்கள் எல்லாம் விரும்பி வழிபட, அவர்கட்கு நல்லதையே அருளும் சிவபெருமான், மன்னுயிரைக் குன்றவைக்கும் தீவினையால் வரும் குற்றங்களை நீக்கி அருள்புரிவான். திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் இதழ் விரிந்த கொன்றை மாலையைச் சூடி வீற்றிருந்தருளும் அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான்.


பாடல் எண் : 11
வெண்கொடி மாடமோங்கு விறல் வெங்குரு நன்னகரான்
நண்பொடு நின்ற சீரான் தமிழ் ஞானசம்பந்தன் நல்ல
தண் குடமூக்கு அமர்ந்தான் அடிசேர் தமிழ் பத்தும் வல்லார்
விண்புடை மேலுலகம் வியப்பு எய்துவர் வீடு எளிதே. 

பாடல் விளக்கம்:
வெண்கொடி அசைகின்ற மாடங்கள் ஓங்கி விளங்கும் வெங்குரு எனப்படும் சீகாழியில் அனைவரிடத்தும் நட்புக் கொண்டு பழகும் புகழ்மிக்க தமிழ் ஞானசம்பந்தன் நல்ல குளிர்ந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வானிலுள்ள சுவர்க்கலோகத்தை அடைந்து இன்புறுவர். அவர்கட்கு முக்திப்பேறு எளிதாகக் கைகூடும்.


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக