சனி, 28 பிப்ரவரி, 2015

திருநாரையூர் திருமுறை பதிகங்கள் 05

இறைவர் திருப்பெயர் : சௌந்தரநாதர்


இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி

திருமுறை : ஆறாம் திருமுறை 74 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது


பாடல் எண் : 01
சொல்லானை பொருளானை சுருதி யானைச் 
சுடராழி நெடுமாலுக்கு அருள் செய்தானை
அல்லானைப் பகலானை அரியான் தன்னை
அடியார்கட்கு எளியானை அரண் மூன்று எய்த 
வில்லானை சரம் விசயற்கு அருள் செய்தானை
வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி ஏத்தும் 
நல்லானை தீயாடு நம்பன் தன்னை 
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
சொல்லாகவும் பொருளாகவும் வேதங்களாகவும் திகழ்பவனும், ஒளிமிக்க சக்கராயுதத்தைத் திருமாலுக்கு அருளியவனும், இரவாகவும் பகலாகவும் இருப்பவனும், அன்பர் அல்லா தார்க்கு அரியனாகவும் அடியார்க்கு எளியனாகவும் இலங்குபவனும் அசுரர்க்கு அரணாயமைந்த திரிபுரங்கள் அழிய அம்பு எய்த வில்லினனும், விசயற்குப் பாசுபதம் அருளிய அருளாளனும், சூரியனும் பெருந்தவ முனிவர்களும் விரும்பிப் போற்றும் நல்லவனும், தீயாடுபவனும், விரும்புதற்குரிய தலைவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.


பாடல் எண் : 02
பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் தன்னை
பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை 
மஞ்சுண்ட வானாகி வானம் தன்னில் 
மதியாகி மதி சடை மேல் வைத்தான் தன்னை
நெஞ்சுண்டு என் நினைவாகி நின்றான் தன்னை
நெடுங்கடலைக் கடைந்தவர் போய் நீங்க ஓங்கும் 
நஞ்சுண்டு தேவர்களுக்கு அமுது ஈந்தானை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பட்ட மெல்லிய பாதங்களை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவனும், நிலமும், நீரும், தீயும் வீசும் காற்றும் ஆனவனும், மேகம் தவழும் வானமும், அவ்வானத்தில் ஊரும் மதியும் ஆகி அம்மதியைத் தன் சடைமுடிமேல் தாங்கியவனும், என் மனத்தைத் தன் வழி நிறுத்தி அதன் நினைவுகள் எல்லாம் தானாகி நின்றவனும், நெடிய கடலைக் கடைந்தார் அனைவரும் ஓடி நீங்கும் வண்ணம் ஓங்கி எழுந்த நஞ்சைத் தான் உண்டு தேவர்கட்கு அமுதம் ஈந்தவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.


பாடல் எண் : 03
மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை 
முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை
தேவாதி தேவர்கட்கும் தேவன் தன்னை
திசைமுகன் தன் சிரம் ஒன்று சிதைத்தான் தன்னை
ஆவாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை
அடியேற்கு நினைதோறும் அண்ணிக்கின்ற 
நாவானை நாவினில் நல் உரை ஆனானை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
யாவர்க்கும் முன்னே தோன்றி வைத்தும் மூப்பு இன்றி என்றும் ஒரு பெற்றியனாய் உள்ளவனும், தேவர்கட்குத் தலைவராகிய நான்முகன், திருமால், இந்திரன் ஆகியோருக்கும் தலைவனாய்த் திகழ்பவனும், நான்முகனுடைய சிரங்களில் ஒன்றைக் கொய்தவனும், காற்றெனக் கடிதியங்குவதும் வெற்றியையுடையதுமாகிய ஆனேற்றை ஊர்தியாக உடையவனும், ஆகி, அடியேன் நினையுந்தொறும் நாவான் நுகரப்படும் தித்திப்பாகும் சுவையாகவும், நாவிற்பயிலும் நல்லுரையானாகவும் விளங்கும் சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.


பாடல் எண் : 04
செம்பொன்னை நன் பவளம் திகழும் முத்தை
செழுமணியை தொழுமவர் தம் சித்தத்தானை
வம்பு அவிழும் மலர்க்கணை வேள் உலக்க நோக்கி 
மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற 
கம்பனை எம் கயிலாய மலையான் தன்னை
கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் 
நம்பனை எம்பெருமானை நாதன் தன்னை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
செம்பொன், நற்பவளம், ஒளி முத்து, செழுமணி என்றெல்லாம் ஒப்புக் கூறப்படுபவனும், வணங்குவார் சித்தத்தில் உறைபவனும், மணங்கமழும் மலர்களை கணைகளாகக் கொண்ட மன்மதன் இறக்கும் வண்ணம் விழித்து மகிழ்ந்தவனும், மதில் சூழ்ந்த கச்சியில் ஏகம்பனாய் மன்னுபவனும, கயிலாய மலையில் வாழும் எம் தலைவனும், சம்பாதி சடாயு என்ற கழுகுகளும் இராமனும் தமக்கு நன்மை தருவான் இவன் என்று ஆராய்ந்து வணங்கும் இறைவனும், எம்பெருமானும், தலைவனுமாகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.


பாடல் எண் : 05
புரையுடைய கரியுரிவைப் போர்வை யானை
புரிசடை மேல் புனலடைத்த புனிதன் தன்னை 
விரையுடைய வெள் எருக்கு அம் கண்ணி யானை
வெண்ணீறு செம்மேனி விரவினானை
வரையுடைய மகள் தவம் செய் மணாளன் தன்னை
வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை
நரை விடை நல் கொடி உடைய நாதன் தன்னை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
உட்டொளை பொருந்திய கரத்தையுடைய யானையது தோலைப் போர்வையாகக் கொண்டவனும், முறுக்குண்ட சடையின்மேல் கங்கையைச் செறித்துவைத்த புனிதனும், மணங் கமழும் வெள்ளெருக்கம்பூமாலையை அணிந்தவனும் வெள்ளிய நீறு செம்மேனியிடத்து விரவி விளங்குபவனும், பருவதராசன் மகள் தவம் செய்து அடையப்பெற்ற மணாளனும், வெள்ளிய விடையை உயர்த்திய நற்கொடியை உடைய தலைவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.


பாடல் எண் : 06
பிறவாதும் இறவாதும் பெருகினானை 
பேய்பாட நடமாடும் பித்தன் தன்னை
மறவாத மனத்தகத்து மன்னினானை
மலையானை கடலானை வனத்து உளானை
உறவானை பகையானை உயிர் ஆனானை
உள்ளானை புறத்தானை ஓசையானை 
நறவு ஆரும் பூங்கொன்றை சூடினானை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
பிறவாமையானும், இறவாமையானும் புகழ் பெருகியவனும், பேய்களின் பாட்டிற்கேற்பக் கூத்தாடும் பித்தனும், தன்னை மறவாத மனத்திடத்தே மன்னி நிற்பவனும், மலையிடத்தும் கடலின் கண்ணும் வானின் மேலும் விளங்குபவனும், உறவும் பகையும் உயிரும் ஆகுபவனும், அகத்தும், புறத்தும் திகழ்பவனும், தேனிறைந்த கொன்றைப் பூவைச் சூடியவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.


பாடல் எண் : 07
தக்கனது வேள்வி கெடச் சாடினானைத் 
தலைகலனாப் பலி ஏற்ற தலைவன் தன்னைக்
கொக்கரை சச்சரி வீணைப் பாணியானை
கோணாகம் பூணாகக் கொண்டான் தன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை
அறுமுகனோடு ஆனை முகற்கு அப்பன் தன்னை
நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
தக்கனது வேள்வியை அதன் பயன் கெடுமாறு அழித்தவனும், பிரமனது தலையைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சை ஏற்ற தலைவனும், கொக்கரை, சச்சரி, வீணை ஆகிய இசைக்கருவிகளை வாசிக்கும் கரத்தினனும், உயிரைக் கொள்ளுதலையுடைய நாகத்தை அணியாகப் பூண்டவனும், உருத்திராக்கம் என்பு இவற்றை அணிந்த அழகனும், ஆறுமுகன், ஆனைமுகன் ஆகிய இருவருக்கும் தந்தையும், ஆடை அணியாதவனும், வக்கரை நள்ளாறு என்னுந் தலங்களில் திகழ்பவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.


பாடல் எண் : 08
அரிபிரமர் தொழுது ஏத்தும் அத்தன் தன்னை
அந்தகனுக்கு அந்தகனை அளக்கல் ஆகா 
எரிபுரியும் இலிங்கபுராணத்து உளானை 
எண்ணாகிப் பண் ஆர் எழுத்து ஆனானைத்
திரிபுரம் செற்று ஒருமூவர்க்கு அருள் செய்தானைச்
சிலந்திக்கும் அரசு அளித்த செல்வன் தன்னை 
நரிவிரவு காட்டு அகத்தில் ஆடலானை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
மாலும் நான்முகனும் ஏத்தி வணங்கும் தந்தையும், இயமனுக்கு இறுதியை ஆக்கும் மகாசங்காரக் கடவுளும், அளந்தறிய இயலாத எரிப்பிழம்பாம் இலிங்கத்தினது இயல்புவிரிக்கும் இலிங்க புராணத்து விளங்கித் தோன்றுபவனும், அருமைமிக்க எண்ணும் பண்ணும் எழுத்தும் ஆனவனும், திரிபுரங்களை அழித்து ஆண்டுத் தன்னை மறவாத மூவர்க்கும் அருள் செய்தவனும், சிலந்திக்குப் புவிபுரக்கும் அரசனாம் பேற்றையளித்த செல்வனும் ஏனை விலங்குகளொடு நரிகள் கலந்து திரியும் சுடுகாட்டில் ஆடுபவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.


பாடல் எண் : 09
ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை 
ஆல் அதன் கீழ் அறம் நால்வர்க்கு அருள் செய்தானைப்
பாலாகித் தேனாகிப் பழமும் ஆகி 
பைங்கரும்பு ஆய் அங்கு அருந்தும் சுவை ஆனானை 
மேலாய வேதியர்க்கு வேள்வியாகி
வேள்வியினின் பயனாய விமலன் தன்னை
நாலாய மறைக்கு இறைவன் ஆயினானை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
ஆலால நஞ்சினைத் தன் கழுத்திற்கு அணியாகக் கொண்டு அதன் நச்சுத் தன்மையைக் கெடுத்தவனும், கல்லால மர நிழலில் அமர்ந்து சனகாதி முனிவர் நால்வருக்கும் அறமுரைத்தவனும், பாலும் தேனும் பழமும் பசிய கரும்பும் ஆகி அவற்றின் இனிய சுவையாய்ப் பயில்பவனும், மேன்மைமிக்க வேதியர்க்கு வேள்வியாய் விளங்குபவனும், வேள்வியின் பயனாய் விளைபவனும், குற்ற மற்றவனும், நான் மறைகளாலும் இறைவனாகப் போற்றப்படுபவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.


பாடல் எண் : 10
மீளாத ஆள் என்னை உடையான் தன்னை 
வெளி செய்த வழிபாடு மேவினானை
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து
வன்கூற்றின் உயிர் மாள உதைத்தான் தன்னைத்
தோளாண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன்
தோள்வலியும் தாள்வலியும் தொலைவித்து ஆங்கே 
நாளோடு வாள் கொடுத்த நம்பன் தன்னை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
விட்டுப்பிரியாத அடிமையாக என்னை உடையவனும், அறிவு ஒன்றிச் செய்த வழிபாட்டை விரும்புபவனும், மார்க்கண்டேய மறையவனுக்கு ஒருகாலும் மாளாதவாறு உயிரளித்து வலிய கூற்றின் உயிர் நீங்கும் வண்ணம் உதைத்தவனும், தன் தோள் வலிமையை மதித்துக் கயிலை மலையை எடுக்க முயன்ற காமுகனாகிய இராவணனுடைய தோள்வலியும் முயற்சி மிகுதியும் கெடச் செய்து, அவன் தன்னை உணர்ந்த அப்பொழுதே அவனுக்கு மிகுந்த வாழ் நாளையும் வாளையும் வழங்கிய தலைவனும் ஆகிய சிவ பெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.


|| -- திருநாரையூர் திருமுறை பதிகம் முற்றிற்று -- ||


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  


வியாழன், 19 பிப்ரவரி, 2015

திருநாரையூர் திருமுறை பதிகங்கள் 04

இறைவர் திருப்பெயர் : சௌந்தரநாதர்

இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 55 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது



பாடல் எண் : 01
வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்
கூறன் ஆகிலும் கூன்பிறை சூடிலும் 
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு 
ஆறு சூடலும் அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
மணம் வீசுகின்ற பூம்பொழில்களை உடைய நாரையூரின்கண் எழுந்தருளியுள்ள நம் இறைவர், பிறிதொன்றற்கில்லாத பெருஞ்சிறப்புடைய திருக்கயிலாயத்தை உடையவர். உமையம்மையை ஒருபங்கில் உடையவர்; வளைந்த பிறை சூடியவர். ஆயினும் கங்கையாற்றினைச் சடையிற் சூடல் மிக்க அழகும் வியப்பும் உடையதே.


பாடல் எண் : 02
புள்ளி கொண்ட புலி உரி ஆடையும் 
வெள்ளி கொண்ட வெண்பூதி மெய் ஆடலும்
நள்ளி தெண்திரை நாரையூரான் நஞ்சை 
அள்ளி உண்டலும் அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
தெளிந்த நீர் வளம் உடைய நாரையூரின்கண் எழுந்தருளியுள்ள பெருமான், புள்ளிகளை உடைய புலித்தோலாடையும், வெள்ளி போன்ற நிறம் கொண்ட திருநீற்றுப் பூச்சுடைய திருமேனியும் உடையவராயினும், நஞ்சை அள்ளி உண்டல் மிக்க அழகும் வியப்பும் உடையதேயாகும்.


பாடல் எண் : 03
வேடு தங்கிய வேடமும் வெண்தலை
ஓடு தங்கிய உண் பலி கொள்கையும்
நாடு தங்கிய நாரையூரான் நடம்
ஆடு பைங்கழல் அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
நாட்டின்கண் தங்கிய புகழை உடைய நாரையூரில் எழுந்தருளியுள்ள பெருமான், வேடத்தன்மை தங்கிய திருவேடமும், வெண்தலை ஓட்டில் தங்கிய உணவை உண்ணும் கொள்கையும் உடையவராயினும், நடம் ஆடுகின்ற பைங்கழல் சேவடி மிக்க அழகும் வியப்பும் உடையதேயாகும்.


பாடல் எண் : 04
கொக்கின் தூவலும் கூவிளம் கண்ணியும்
மிக்க வெண் தலை மாலை விரிசடை 
நக்கன் ஆகிலும் நாரையூர் நம்பனுக்கு 
அக்கின் ஆரமும் அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
திருநாரையூரில் எழுந்தருளியுள்ள நம் பெருமான் கொக்கு வடிவாய் நின்ற அசுரனின் இறகும், கூவிள மலராலாகிய தலைக் கண்ணியும், மிகுந்த வெண் தலை மாலையும், விரிந்த சடையும் உடைய திகம்பரனேயாயினும் அக்கின் மாலை அணிந்திருத்தல் மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும்.


பாடல் எண் : 05
வடிகொள் வெண்மழு மான் அமர் கைகளும்
பொடிகொள் செம்பவளம் புரை மேனியும்
நடிகொள் நன்மயில் சேர் திரு நாரையூர் 
அடிகள் தம் வடிவு அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
வடித்தலைக்கொண்ட ஒளியால் வெள்ளிய மழுப்படையும் மானும் விரும்புகின்ற கரங்களும், திருநீற்று வெண் பொடி பூசிய செம்பவளம் ஒத்த மேனியும், ஒருபங்கில் இருக்கும் நடித்தலைக் கொண்ட நன்மயில் போன்ற உமாதேவியும் உடைய திருநாரையூர்ப் பெருமான் வடிவு மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும்.


பாடல் எண் : 06
சூலம் மல்கிய கையும் சுடரொடு
பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும்
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு
ஆல நீழலும் அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
உலகத்தில் புகழ் நிறைந்த திருநாரையூர், நம் பெருமான் சுடரொடு நிறைந்த சூலம் பொருந்திய கையும், பால், நெய், தயிர் முதலிய பஞ்சகவ்வியம் ஆடிய தன்மையும் உடையவராயினும், ஆலநிழலில் இருந்து அறம் உரைத்தல் மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும்.


பாடல் எண் : 07
பண்ணின் நால்மறை பாடலொடு ஆடலும், 
எண்ணிலார் புரம் மூன்று எரிசெய்தலும்
நண்ணினார் துயர் தீர்த்தலும் நாரையூர் 
அண்ணலார் செய்கை அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
இசையொடு பொருந்திய நான்மறைகளைப் பாடுதலும், ஆடுதலும், நல்ல எண்ணமில்லாத தீயோர்களது முப்புரங்களை எரித்தலும், தம்மைப் பொருந்தியவரது துயரங்களைத் தீர்த்தலும் ஆகிய திருநாரையூர் அண்ணலார் செய்கைகள் அனைத்தும் மிக்க வியப்பும் அழகும் உடையனவேயாம்.


பாடல் எண் : 08
என்பு பூண்டு எருது ஏறி இளம்பிறை 
மின் புரிந்த சடைமேல் விளங்கவே 
நன் பகல் பலி தேரினும் நாரையூர் 
அன்பனுக்கு அது அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
எலும்புகளைப் பூண்டு, எருதின் மேல் ஏறி, இளம் பிறையினை மின்னலை முறுக்கினாலொத்த ஒளிச்சடையின் மேல் விளங்கச் சூடி, நல்ல பகலிலும் பலிதேர்வராயினும், திருநாரையூரில் உள்ள அன்பு வடிவாய சிவபெருமானுக்கு அது மிக்க வியப்பும் அழகும் உடையதே.


பாடல் எண் : 09
முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே
இரவில் நின்று எரி ஆடலும் நீடுவான் 
நரலும் வாரி நன்நாரையூர் நம்பனுக்கு 
அரவும் பூணுதல் அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
ஒலிக்கின்ற கின்னரமும், மொந்தையும் முழங்க, நீண்டு நிகழும் இரவில் இடுகாட்டில் நின்று எரித்து ஆடுதலும், அரவினைப் பூணுதலும் ஆகியவை கடல் ஒலிக்கும் திருநாரையூர் நம் பெருமானுக்கு மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும்.


பாடல் எண் : 10
கடுக்கை அம் சடையன் கயிலை(ம்) மலை 
எடுத்த வாள் அரக்கன் தலை ஈர் அஞ்சும் 
நடுக்கம் வந்து இற நாரையூரான் விரல் 
அடுத்த தன்மையும் அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
கொன்றையினை உடைய அழகார்ந்த சடையனுக்குரிய திருக்கயிலாயத் திருமலையை எடுக்கலுற்ற வாளினை உடைய இராவணனது பத்துத் தலைகளும் நடுங்கி நெரியும் வண்ணம் திருநாரையூர்ப் பெருமான் திருவிரல் இயக்கிய தன்மை வியப்பும் அழகும் உடையதேயாகும்.



"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  


சனி, 7 பிப்ரவரி, 2015

திருவாவடுதுறைப் திருப்பதிகம்

திருமுறை   மூன்றாம் திருமுறை 004 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்


வறுமை நீங்க, செல்வம் கொழிக்க சம்பந்தர் பொன்வேண்டிப் பாடிய திருவாவடுதுறைப் திருப்பதிகம் 

பாடல் எண் : 01
இடரினும் தளரினும் எனது உறு நோய்
தொடரினும் உன கழல் தொழுது எழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.! 


பொருள் விளக்கம் :
திருப்பாற்கடலில், அமுதம் பெறும் பொருட்டுக் கடைந்த போது தோன்றிய நஞ்சினைக் கழுத்தில் அடக்கித் தேவர்களைக் காத்த வேதநாயகனே! வாழ்க்கையில் இடையூறு ஏற்பட்டுத் துன்பம் உண்டானாலும், இளமை நீங்கி மூப்பினால் தளர்ச்சி யுற்றாலும், தீவினைப் பயனால் நோய் தொடர்ந்து வந்தாலும், உன் திருவடிகளைத் தொழுது வணங்குவேன். அத்தகைய அடியேனை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ? திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே (உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவைப்படுகின்ற பொருளை நீ எனக்குத் தர வில்லையானால் அஃது உன் திருவருளுக்கு அழகாகுமா?  



பாடல் எண் : 02
வாழினும் சாவினும் வருந்தினும் போய்
வீழினும் உன கழல் விடுவேன் அல்லேன்
தாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழ் இளமதி வைத்த புண்ணியனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.!  


பொருள் விளக்கம் :
ஒளிர்கின்ற செஞ்சடையில் குளிர்ச்சியான கங்கையையும், பிறைச் சந்திரனையும் அணிந்த சிவபெருமானே! இம்மையில் மண்ணுலகில் நல்வினைப் பயனால் இன்பம் அனுபவிக்கின்ற காலத்திலும், தீவினைப் பயனால் துன்புற்று வருந்தும் காலத்திலும், நன்னெறியினின்று விலகித் தீநெறியில் செல்கின்ற காலத்திலும், வினைப் பயன்களை அனுபவித்து முடித்துச் சாகப்போகும் காலத்திலும், உன்னுடைய திருவடிகளை இறுகப் பற்றியதிலிருந்து நீங்கியவன் அல்லேன். இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளும் தன்மை இதுவோ? திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் சிவபெருமானே! (உலக நன்மையின் பொருட்டுத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்காக) எனக்குப் பொருள் தாரா விடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா?  



பாடல் எண் : 03
நனவினும் கனவினும் நம்பா உன்னை
மனவினும் வழிபடல் மறவேன் அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனல்எரி அனல்புல்கு கையவனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.! 


பொருள் விளக்கம் :
கங்கையையும், நறுமணம் கமழும் கொன்றையையும் அணிந்து கனன்று எரிகின்ற நெருப்பைக் கையிலேந்தி உள்ளவனே! அனைவரின் நம்பிக்கைக்கும், விருப்பத்திற்கு உரிய உன்னை நனவிலும், கனவிலும், மனம் ஒன்றி வணங்குவதற்கு மறந்திலேன். இத்தகைய என்னை நீ ஆட்கொள்ளுமாறு இதுவோ? திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! (உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாரா விடில், அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா? 



பாடல் எண் : 04
தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்,
அம்மலர் அடியலால் அரற்றாது என் நா
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதில் எரிஎழ முனிந்தவனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.! 


பொருள் விளக்கம் :
கையிலே மேருமலையை வில்லாக ஏந்தி அக்கினியைக் கணையாகத் தொடுத்து முப்புரங்களை எரியும்படி செய்தவனே! தும்மல், அவற்றின் உபாதைகள் இவற்றால் துன்பம் வரும் பொழுதும் உன்னுடைய மலர் போன்ற திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் நவிலாது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! இத்தகைய தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ?  (உலக நன்மைக்காகத் தந்தை செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாரா விடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா? 



பாடல் எண் : 05
கையது வீழினும் கழிவுறினும்
செய்கழல் அடியலால் சிந்தை செய்யேன்
கொய்யணி நறுமலர் குலாய சென்னி
மையணி மிடறுடை மறையவனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.! 


பொருள் விளக்கம் :
கொய்து அணியப்பெறும் நறுமணம் கமழும் மலர்களைச் சூடியுள்ள முடியையும், மை போன்ற கருநிறக் கண்டத்தையும் உடைய மறையவனே! கைப்பொருள்கள் யாவும் இழந்து வருந்தும் காலத்திலும், பிறரால் இழிவாகக் கருதப்பட்டுக் கழிவுப் பொருள் போன்று ஒதுக்கப்பட்ட காலத்திலும், உன்னுடைய செம்மை வாய்ந்த திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல், வேறெதனையும் நான் சிந்தை செய்யேன். திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! இத்தன்மையுடைய என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாரா விடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா? 



பாடல் எண் : 06
வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாய் உன் அடி அலால் ஏத்தாது என் நா
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த
சந்த வெண்பொடி அணி சங்கரனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.! 


பொருள் விளக்கம் :
ஐந்து தலைகளையுடைய பாம்பை அரையில் கச்சாகக் கட்டி, நறுமணம் கமழும் திருவெண்ணீற்றினைத் திருமேனியில் அணிந்துள்ள சங்கரனே! கொடிய துன்பத்தால் அச்சமுற்றாலும், எம் தந்தையே! உன்திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் என் நா வேறெதனையும் சொல்லாது. அங்ஙனமிருக்க திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! நீ எம்மை ஆட்கொள்ளும் வகை இதுவோ. (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்பும் வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாரா விடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா? 



பாடல் எண் : 07
வெப்பொடு விரவியோர்  வினைவரினும்
அப்பா உன் அடி அலால் அரற்றாது என் நா
ஒப்புடை ஒருவனை உருவழிய
அப்படி அழல் எழ விழித்தவனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.! 


பொருள் விளக்கம் :
அழகில் தனக்கு ஒப்புமையாகத் தன்னைத் தவிரப் பிறரைச் சொல்ல முடியாத மன்மதனை, அவனுடைய வடிவம் அழியுமாறு நெருப்புத் தோன்ற நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்தவனே! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! கொடிய வினையினால் துன்பம் நெருப்புப் போல வந்து தாக்கினாலும், அனைத்துயிர்கட்கும் தந்தையான உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறொன்றையும் நவிலாது. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாரா விடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா? 



பாடல் எண் : 08
பேரிடர் பெருகி ஓர் பிணி வரினும்
சீருடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்
ஏருடை மணி முடி இராவணனை
ஆரிடர் படவரை அடர்த்தவனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.! 


பொருள் விளக்கம் :
அழகிய மணிமுடியணிந்த இராவணன் பொறுத்தற் கரிய துன்பமடையும் படி கயிலை மலையின்கீழ் அடர்த்தவனே! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! தீவினையால் பெருந்துன்பம் தரும் நோய் வரினும் வாழ்வு தரும் உன் திருவடிகளைப் போற்றுதல் அல்லாமல் வேறெதனையும் நான் சிந்தனை செய்ததில்லை. இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவையான பொருளை எனக்குத் தாரா விடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா?



பாடல் எண் : 09
உண்ணினும் பசிப்பினும் உறங்கினும் நின்
ஒண் மலர் அடி அலால் உரையாது என் நா
கண்ணனும் கடி கமழ் தாமரை மேல்
அண்ணலும் அளப்பு அரிது ஆயவனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல், 
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.! 


பொருள் விளக்கம் :
திருமாலும், மணங்கமழ் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் அளந்தறிதற்கு அரியவனே! திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! நான் உண்ணும் நிலையிலும், பசியால் களைத்திருக்கும் நிலையிலும், உறங்கும் நிலையிலும் ஒளிபொருந்திய உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் நவிலாது. அப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்யும் வேள்விக்குத்) தேவைப்படும் பொருளை எனக்குத் தாரா விடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா?


பாடல் எண் : 10
பித்தொடு மயங்கியோர் பிணி வரினும்,
அத்தா உன் அடிஅலால் அரற்றாது என் நா
புத்தரும் சமணரும் புறன் உரைக்க
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே.!

இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு இல்லையேல்
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே.!


பொருள் விளக்கம் :
புத்தரும், சமணரும் புறங்கூறினாலும் பொருட்படுத்தாது உன்னை வணங்குகின்ற பக்தர்கட்கு அருள்புரிகின்றவனே! பித்த நோயால் மயங்கும் நிலையுற்றாலும், தலைவா! உன் திருவடிகளைப் போற்றுதலல்லாமல் என் நா வேறெதையும் பேசாது. திருவாவடுதுறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே! இப்படிப்பட்ட என்னை நீ ஆட்கொள்ளும் முறை இதுவோ? (உலக நன்மைக்காகத் தந்தையார் செய்ய விரும்புகின்ற வேள்விக்குத்) தேவைப்படும் பொருளை எனக்குத் தாரா விடில் அஃது உனது இன்னருளுக்கு அழகாகுமா?  



பாடல் எண் : 11
அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த
இலை நுனை வேல்படை எம் இறையை
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார்

வினை ஆயின நீங்கிப் போய் விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர் நிலம்மிசை நிலையிலரே.

பொருள் விளக்கம் :
அலைகளையுடைய காவிரிவளம் பொருந்திய திருவாவடுதுறையில் வீற்றிருக்கும் இலை போன்ற நுனியையுடைய திரிசூலப் படையேந்திய எம் இறைவனைப் பற்றி உலக நலன்களை விரும்பிய ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய அருந்தமிழ் மாலையாகிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் வினையாவும் நீங்கப் பெற்று விரிந்த விண்ணுலகில் நிலையாக வீற்றிருப்பர். துன்பம் தரும் இம்மண்ணுலகில் மீண்டும் வந்து பிறவார்.   

  
   "ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''


வியாழன், 5 பிப்ரவரி, 2015

திருநாரையூர் திருமுறை பதிகங்கள் 03

இறைவர் திருப்பெயர் : சௌந்தரநாதர்

இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி

திருமுறை : மூன்றாம் திருமுறை 107 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது


பாடல் எண் : 01
கடலிடை வெங்கடு நஞ்சமுண்ட கடவுள் விடையேறி
உடல் இடையில் பொடிப் பூச வல்லான் உமையோடு ஒருபாகன்
அடல் இடையில் சிலை தாங்கி எய்த அம்மான் அடியார் மேல்
நடலை வினைத் தொகை தீர்த்து உகந்தான் இடம் நாரையூர் தானே. 

‪‎பொருள் விளக்கம் ‬:
கடலில் தோன்றிய வெப்பம் மிகுந்த கடுமையான நஞ்சையுண்ட கடவுள் இடபவாகனத்தில் ஏறி, திருமேனியில் திரு வெண்ணீற்றினைப் பூசி, உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக் கொண்டவர். முப்புர அசுரர்களுடன் போரிடும் சமயத்தில் மேரு மலையாகிய வில்லைத் தாங்கிக் கணைஎய்த பெருமான், தம்முடைய அடியார்கள் மேல் வரும் துன்பம்தரும் வினைத் தொகுதிகளைத் தொலைத்து மகிழ்பவர். இத்தகைய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருநாரையூர் என்னும் திருத்தலமாகும். 


பாடல் எண் : 02
விண்ணின்மின் நேர் மதி, துத்தி நாகம் விரி பூ மலர்க்கொன்றை
பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான் எரி ஆடி
நண்ணிய தன் அடியார்களோடும் திருநாரையூரான் என்று
எண்ணுமின்! நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும்! நிறைவாமே.

பொருள் விளக்கம் :
ஆகாயத்தில் விளங்கும், மின்னல் போன்ற ஒளியுடைய சந்திரனையும், படப்புள்ளிகளையுடைய பாம்பினையும், விரிந்த கொன்றை மலரையும், கங்கா தேவிக்கு முன்னே சடையிலணிந்து மிகவும் மகிழ்ந்த பெருமான், நெருப்பேந்தி ஆடுபவர். திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அச்சிவ பெருமானை மனம், வாக்கு, காயத்தால் வழிபடுகின்ற அடியார்கள் கூட்டத்தோடு நீங்களும் சேர்ந்து தியானம் செய்யுங்கள். உங்கள் வினைகள் தொலைந்து போகும் வண்ணம் வணங்குங்கள். எல்லா நலன்களும் நிறையக் குறைவிலா இன்பம் உண்டாகும். 


பாடல் எண் : 03
தோடொரு காதொரு காது சேர்ந்த குழையான் இழை தோன்றும்
பீடொரு கால் பிரியாது நின்ற பிறையான் மறையோதி
நாடொரு காலமும் சேர நின்ற திருநாரையூரானைப்
பாடுமின் நீர் பழி போகும் வண்ணம்! பயிலும்! உயர்வாமே.

பொருள் விளக்கம் :
சிவபெருமான் இடக் காதில் தோடும், வலக் காதில் குழையும் அணிந்துள்ளவர். மார்பில் பூணூல் அணிந்துள்ளவர். ஒரு காலத்திலும் பெருமை நீங்காமல் நிலைத்து நிற்பவர். பிறைச் சந்திரனை அணிந்துள்ளவர். வேதங்களை ஓதுபவர். ஒவ்வொரு காலத்திலும் நாட்டிலுள்ள அடியார்கள் வணங்குதற்கு வந்து சேரும்படி வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர்ப் பெருமானைப் பாடுவீர்களாக. உங்கள் பழிகள் நீங்கும் வண்ணம் இடைவிடாது வணங்குங்கள். உங்கட்கு உயர்வு உண்டாகும்.


பாடல் எண் : 04
வெண் நிலவு அம் சடை சேர வைத்து விளங்கும் தலையேந்திப்
பெண்ணில் அமர்ந்து ஒரு கூறு அது ஆய பெருமான் அருளார்ந்த
அண்ணல் மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர் தன்னை
நண்ணல் அமர்ந்து உறவு ஆக்குமின்கள்! நடலைகரிசு அறுமே. 

பொருள் விளக்கம் :
வெண்ணிறப் பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்து, விளங்குகின்ற பிரமகபாலத்தைக் கையிலேந்தி, உமா தேவியைத் தன்னுடம்பில் ஒரு கூறாகக் கொண்ட பெருமானும், அருள் நிறைந்த தலைவனுமாகிய சிவபெருமான் நிலையாக வீற்றிருந் தருளும் கோயிலுள்ள அழகிய திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் சேர்ந்து இறைவனிடம் அன்பு செலுத்துங்கள். உங்கள் துன்பங்கள் நீங்கும்.  


பாடல் எண் : 05
வானமர் தீ வளி நீர் நிலனாய் வழங்கும் பழியாகும்
ஊன் அமர் இன்னுயிர் தீங்கு குற்றம் உறைவால் பிறிதின்றி
நான் அமரும் பொருளாகி நின்றான் திருநாரையூர் எந்தை
கோன் அவனைக் குறுகக் குறுகா, கொடுவல் வினைதானே. 

பொருள் விளக்கம் :
ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், நிலம், ஆகிய ஐம்பூதங்களின் தொடர்பாய் விளங்குகின்ற, பழிக்கு இடமாகிய தசையாகிய இவ்வுடம்பில் தங்குகின்ற இனிய உயிர் தீமை பயக்கும் குற்றம் புரியும் இயல்பாயுள்ளது. அக்குற்றங்களிலிருந்து உய்தி பெறப் பிறிதொரு வழியின்றி, அடியேன் விரும்பிச் சார்தற்குப் பற்றுக் கோடாக விளங்கும் பெருமான் திருநாரையூரில் வீற்றிருந்தருளுகின்ற என் தந்தையும், தலைவனுமாவான். அப்பெருமானைச் சரணடையக் கொடிய வல்வினைகள் நம்மை வந்து சாரா. 


பாடல் எண் : 06
கொக்கு இறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி
அக்கு அரவோடு அரை ஆர்த்து உகந்த அழகன் குழகாக
நக்கு அமரும் திருமேனியாளன் திருநாரையூர் மேவிப்
புக்கு அமரும் மனத்தோர்கள் தம்மைப் புணரும் புகல்தானே. 

பொருள் விளக்கம் :
சிவபெருமான் தலையில் கொக்கின் இறகையும், குளிர்ந்த பொன்னூமத்தையின் செழித்த மலரையும் சூடியவர். எலும்பைப் பாம்போடு சேர்த்து இடுப்பில் கட்டி மகிழும் அழகர். இளமையாய்த் திகம்பரராய்த் திகழும் திருமேனியுடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தை அடைந்து, அவரை விரும்பி வழிபடும் மனத்தையுடையவர்களிடத்துத் திருவருட்சத்தி பதியும்.


பாடல் எண் : 07
ஊழியும் இன்பமும் காலமாகி உயரும் தவமாகி
ஏழ் இசையின் பொருள் வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி
நாழிகையும் பல ஞாயிறாகி நளிர் நாரையூர் தன்னில்
வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவாமே.

பொருள் விளக்கம் :
சிவபெருமான் ஊழிக்காலமும், இன்பமும், காலங்களும் ஆகியவர். உயர்ந்த தவம் ஆகியவர். ஏழிசையின் பயனாக விளங்குபவர். வாழ்கின்ற வாழ்க்கையில் உயிர்கள் செய்கின்ற வினையின் பயன்களை உயிர்கட்குச் சேர்ப்பிப்பவர். நாழிகை முதலிய சிறு காலங்களின் அளவுகளாகிப் பலவாகிய நாள்களும் ஆகியவர். இவைகளெல்லாம் குளிர்ச்சி பொருந்திய திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவ பெருமானின் அருள் விளையாடல்களின் விளைவுகளேயாகும்.


பாடல் எண் : 08
கூசம் இலாது அரக்கன் வரையைக் குலுங்க எடுத்தான் தோள்
நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான் கரவாதார்
பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன் இடம்போலும்
தேசம் உறப் புகழ் செம்மை பெற்ற திருநாரையூர் தானே. 

பொருள் விளக்கம் :
கூசுதல் இல்லாது திருக்கயிலாய மலையைக் குலுங்க எடுத்த இராவணனுடைய தோள்கள் நெரியும் படி அடர்த்த திருப்பாத விரலையுடையவர் சிவபெருமான். நெஞ்சில் வஞ்ச மில்லாத உண்மையடியார்கள் மிகவும் வியப்போடு பேசும் படியும், இடைவிடாது தியானிக்கும் படியும் நின்ற பெருமையுடையவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், தேசம் முழுவதும் புகழுகின்ற சிறப்புடைய திருநாரையூர் என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 09
பூமகனும் அவனைப் பயந்த புயலார் நிறத்தானும்
ஆம் அளவும் திரிந்து ஏத்திக் காண்டல் அறிதற்கு அரியான் ஊர்
பா மருவும் குணத்தோர்கள் ஈண்டிப் பலவும் பணி செய்யும்,
தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த திருநாரையூர் தானே.

பொருள் விளக்கம் :
தாமரைப் பூவில் வீற்றிருந்தருளும் பிரமனும், அவனைப் பெற்ற மேகம் போன்ற நிறத்தையுடைய திருமாலும், தங்களால் இயன்ற அளவு திரிந்து தேடியும், ஏத்தியும் காண்பதற்கு அரியவனாக விளங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர், நீதி நூல்களில் சொல்லிய நற்குண, நற்செய்கை உடையவர்கள் கூடி, திருத்தொண்டுகள் பலவும் செய்யும், தேன்மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருநாரையூர் என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 10
வெற்று அரை ஆகிய வேடம் காட்டித் திரிவார் துவராடை
உற்ற (அ)ரையோர்கள் உரைக்கும் சொல்லை உணராத எழுமின்கள்
குற்றம் இலாதோர் கொள்கை எம்மான் குழகன் தொழில் ஆரப்
பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான் திருநாரையூர் சேரவே.

பொருள் விளக்கம் :
ஆடையற்ற கோலத்துடன் திரியும் சமணர்களும், மஞ்சட் காவியாடை போர்த்துத் திரியும் புத்தர்களும் உரைக்கின்ற சொற்களை ஏற்க வேண்டா. குற்றமில்லாத கொள்கை உடைய எம் தலைவரும், இளமையான வரும், அடியவர்கட்கு அருள்புரியும் தொழிலையுடையவரும், அரவம் அணிந்துள்ளவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தைச் சேர்ந்து, வழிபட்டு உய்வீர்களாக.


பாடல் எண் : 11
பாடு இயலும் திரை சூழ் புகலித் திருஞானசம்பந்தன்,
சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மைத் திருநாரையூரான் மேல்
பாடிய தண் தமிழ்மாலை பத்தும் பரவித் திரிந்தாக
வாடிய சிந்தையினார்க்கு நீங்கும் அவலக்கடல் தானே. 

பொருள் விளக்கம் :
அலை ஓசையுடைய கடல் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன், பெருமை பொருந்தியதும் ஓங்கும் புகழ் உடையதும், சிவத்தன்மை உடையதுமான திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் மீது பாடிய பத்துப் பாடல்களாலாகிய இத்தண்டமிழ் மாலையாகிய பதிகத்தைப் பாடித் துதிக்கும் சிந்தையுடைய அடியார்களின் கடல் போன்ற பெருந்துன்பம் நீங்கும்.


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''