வியாழன், 19 பிப்ரவரி, 2015

திருநாரையூர் திருமுறை பதிகங்கள் 04

இறைவர் திருப்பெயர் : சௌந்தரநாதர்

இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி

திருமுறை : ஐந்தாம் திருமுறை 55 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது



பாடல் எண் : 01
வீறு தானுடை வெற்பன் மடந்தையோர்
கூறன் ஆகிலும் கூன்பிறை சூடிலும் 
நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு 
ஆறு சூடலும் அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
மணம் வீசுகின்ற பூம்பொழில்களை உடைய நாரையூரின்கண் எழுந்தருளியுள்ள நம் இறைவர், பிறிதொன்றற்கில்லாத பெருஞ்சிறப்புடைய திருக்கயிலாயத்தை உடையவர். உமையம்மையை ஒருபங்கில் உடையவர்; வளைந்த பிறை சூடியவர். ஆயினும் கங்கையாற்றினைச் சடையிற் சூடல் மிக்க அழகும் வியப்பும் உடையதே.


பாடல் எண் : 02
புள்ளி கொண்ட புலி உரி ஆடையும் 
வெள்ளி கொண்ட வெண்பூதி மெய் ஆடலும்
நள்ளி தெண்திரை நாரையூரான் நஞ்சை 
அள்ளி உண்டலும் அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
தெளிந்த நீர் வளம் உடைய நாரையூரின்கண் எழுந்தருளியுள்ள பெருமான், புள்ளிகளை உடைய புலித்தோலாடையும், வெள்ளி போன்ற நிறம் கொண்ட திருநீற்றுப் பூச்சுடைய திருமேனியும் உடையவராயினும், நஞ்சை அள்ளி உண்டல் மிக்க அழகும் வியப்பும் உடையதேயாகும்.


பாடல் எண் : 03
வேடு தங்கிய வேடமும் வெண்தலை
ஓடு தங்கிய உண் பலி கொள்கையும்
நாடு தங்கிய நாரையூரான் நடம்
ஆடு பைங்கழல் அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
நாட்டின்கண் தங்கிய புகழை உடைய நாரையூரில் எழுந்தருளியுள்ள பெருமான், வேடத்தன்மை தங்கிய திருவேடமும், வெண்தலை ஓட்டில் தங்கிய உணவை உண்ணும் கொள்கையும் உடையவராயினும், நடம் ஆடுகின்ற பைங்கழல் சேவடி மிக்க அழகும் வியப்பும் உடையதேயாகும்.


பாடல் எண் : 04
கொக்கின் தூவலும் கூவிளம் கண்ணியும்
மிக்க வெண் தலை மாலை விரிசடை 
நக்கன் ஆகிலும் நாரையூர் நம்பனுக்கு 
அக்கின் ஆரமும் அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
திருநாரையூரில் எழுந்தருளியுள்ள நம் பெருமான் கொக்கு வடிவாய் நின்ற அசுரனின் இறகும், கூவிள மலராலாகிய தலைக் கண்ணியும், மிகுந்த வெண் தலை மாலையும், விரிந்த சடையும் உடைய திகம்பரனேயாயினும் அக்கின் மாலை அணிந்திருத்தல் மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும்.


பாடல் எண் : 05
வடிகொள் வெண்மழு மான் அமர் கைகளும்
பொடிகொள் செம்பவளம் புரை மேனியும்
நடிகொள் நன்மயில் சேர் திரு நாரையூர் 
அடிகள் தம் வடிவு அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
வடித்தலைக்கொண்ட ஒளியால் வெள்ளிய மழுப்படையும் மானும் விரும்புகின்ற கரங்களும், திருநீற்று வெண் பொடி பூசிய செம்பவளம் ஒத்த மேனியும், ஒருபங்கில் இருக்கும் நடித்தலைக் கொண்ட நன்மயில் போன்ற உமாதேவியும் உடைய திருநாரையூர்ப் பெருமான் வடிவு மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும்.


பாடல் எண் : 06
சூலம் மல்கிய கையும் சுடரொடு
பாலும் நெய் தயிர் ஆடிய பான்மையும்
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு
ஆல நீழலும் அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
உலகத்தில் புகழ் நிறைந்த திருநாரையூர், நம் பெருமான் சுடரொடு நிறைந்த சூலம் பொருந்திய கையும், பால், நெய், தயிர் முதலிய பஞ்சகவ்வியம் ஆடிய தன்மையும் உடையவராயினும், ஆலநிழலில் இருந்து அறம் உரைத்தல் மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும்.


பாடல் எண் : 07
பண்ணின் நால்மறை பாடலொடு ஆடலும், 
எண்ணிலார் புரம் மூன்று எரிசெய்தலும்
நண்ணினார் துயர் தீர்த்தலும் நாரையூர் 
அண்ணலார் செய்கை அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
இசையொடு பொருந்திய நான்மறைகளைப் பாடுதலும், ஆடுதலும், நல்ல எண்ணமில்லாத தீயோர்களது முப்புரங்களை எரித்தலும், தம்மைப் பொருந்தியவரது துயரங்களைத் தீர்த்தலும் ஆகிய திருநாரையூர் அண்ணலார் செய்கைகள் அனைத்தும் மிக்க வியப்பும் அழகும் உடையனவேயாம்.


பாடல் எண் : 08
என்பு பூண்டு எருது ஏறி இளம்பிறை 
மின் புரிந்த சடைமேல் விளங்கவே 
நன் பகல் பலி தேரினும் நாரையூர் 
அன்பனுக்கு அது அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
எலும்புகளைப் பூண்டு, எருதின் மேல் ஏறி, இளம் பிறையினை மின்னலை முறுக்கினாலொத்த ஒளிச்சடையின் மேல் விளங்கச் சூடி, நல்ல பகலிலும் பலிதேர்வராயினும், திருநாரையூரில் உள்ள அன்பு வடிவாய சிவபெருமானுக்கு அது மிக்க வியப்பும் அழகும் உடையதே.


பாடல் எண் : 09
முரலும் கின்னரம் மொந்தை முழங்கவே
இரவில் நின்று எரி ஆடலும் நீடுவான் 
நரலும் வாரி நன்நாரையூர் நம்பனுக்கு 
அரவும் பூணுதல் அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
ஒலிக்கின்ற கின்னரமும், மொந்தையும் முழங்க, நீண்டு நிகழும் இரவில் இடுகாட்டில் நின்று எரித்து ஆடுதலும், அரவினைப் பூணுதலும் ஆகியவை கடல் ஒலிக்கும் திருநாரையூர் நம் பெருமானுக்கு மிக்க வியப்பும் அழகும் உடையதேயாகும்.


பாடல் எண் : 10
கடுக்கை அம் சடையன் கயிலை(ம்) மலை 
எடுத்த வாள் அரக்கன் தலை ஈர் அஞ்சும் 
நடுக்கம் வந்து இற நாரையூரான் விரல் 
அடுத்த தன்மையும் அம்ம அழகிதே.!

பொருள் விளக்கம் ‬:
கொன்றையினை உடைய அழகார்ந்த சடையனுக்குரிய திருக்கயிலாயத் திருமலையை எடுக்கலுற்ற வாளினை உடைய இராவணனது பத்துத் தலைகளும் நடுங்கி நெரியும் வண்ணம் திருநாரையூர்ப் பெருமான் திருவிரல் இயக்கிய தன்மை வியப்பும் அழகும் உடையதேயாகும்.



"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக