சனி, 28 பிப்ரவரி, 2015

திருநாரையூர் திருமுறை பதிகங்கள் 05

இறைவர் திருப்பெயர் : சௌந்தரநாதர்


இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி

திருமுறை : ஆறாம் திருமுறை 74 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருநாவுக்கரசு சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது


பாடல் எண் : 01
சொல்லானை பொருளானை சுருதி யானைச் 
சுடராழி நெடுமாலுக்கு அருள் செய்தானை
அல்லானைப் பகலானை அரியான் தன்னை
அடியார்கட்கு எளியானை அரண் மூன்று எய்த 
வில்லானை சரம் விசயற்கு அருள் செய்தானை
வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி ஏத்தும் 
நல்லானை தீயாடு நம்பன் தன்னை 
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
சொல்லாகவும் பொருளாகவும் வேதங்களாகவும் திகழ்பவனும், ஒளிமிக்க சக்கராயுதத்தைத் திருமாலுக்கு அருளியவனும், இரவாகவும் பகலாகவும் இருப்பவனும், அன்பர் அல்லா தார்க்கு அரியனாகவும் அடியார்க்கு எளியனாகவும் இலங்குபவனும் அசுரர்க்கு அரணாயமைந்த திரிபுரங்கள் அழிய அம்பு எய்த வில்லினனும், விசயற்குப் பாசுபதம் அருளிய அருளாளனும், சூரியனும் பெருந்தவ முனிவர்களும் விரும்பிப் போற்றும் நல்லவனும், தீயாடுபவனும், விரும்புதற்குரிய தலைவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.


பாடல் எண் : 02
பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் தன்னை
பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை 
மஞ்சுண்ட வானாகி வானம் தன்னில் 
மதியாகி மதி சடை மேல் வைத்தான் தன்னை
நெஞ்சுண்டு என் நினைவாகி நின்றான் தன்னை
நெடுங்கடலைக் கடைந்தவர் போய் நீங்க ஓங்கும் 
நஞ்சுண்டு தேவர்களுக்கு அமுது ஈந்தானை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பட்ட மெல்லிய பாதங்களை உடைய உமையம்மையை ஒரு கூறாகக் கொண்டவனும், நிலமும், நீரும், தீயும் வீசும் காற்றும் ஆனவனும், மேகம் தவழும் வானமும், அவ்வானத்தில் ஊரும் மதியும் ஆகி அம்மதியைத் தன் சடைமுடிமேல் தாங்கியவனும், என் மனத்தைத் தன் வழி நிறுத்தி அதன் நினைவுகள் எல்லாம் தானாகி நின்றவனும், நெடிய கடலைக் கடைந்தார் அனைவரும் ஓடி நீங்கும் வண்ணம் ஓங்கி எழுந்த நஞ்சைத் தான் உண்டு தேவர்கட்கு அமுதம் ஈந்தவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.


பாடல் எண் : 03
மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை 
முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை
தேவாதி தேவர்கட்கும் தேவன் தன்னை
திசைமுகன் தன் சிரம் ஒன்று சிதைத்தான் தன்னை
ஆவாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை
அடியேற்கு நினைதோறும் அண்ணிக்கின்ற 
நாவானை நாவினில் நல் உரை ஆனானை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
யாவர்க்கும் முன்னே தோன்றி வைத்தும் மூப்பு இன்றி என்றும் ஒரு பெற்றியனாய் உள்ளவனும், தேவர்கட்குத் தலைவராகிய நான்முகன், திருமால், இந்திரன் ஆகியோருக்கும் தலைவனாய்த் திகழ்பவனும், நான்முகனுடைய சிரங்களில் ஒன்றைக் கொய்தவனும், காற்றெனக் கடிதியங்குவதும் வெற்றியையுடையதுமாகிய ஆனேற்றை ஊர்தியாக உடையவனும், ஆகி, அடியேன் நினையுந்தொறும் நாவான் நுகரப்படும் தித்திப்பாகும் சுவையாகவும், நாவிற்பயிலும் நல்லுரையானாகவும் விளங்கும் சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.


பாடல் எண் : 04
செம்பொன்னை நன் பவளம் திகழும் முத்தை
செழுமணியை தொழுமவர் தம் சித்தத்தானை
வம்பு அவிழும் மலர்க்கணை வேள் உலக்க நோக்கி 
மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற 
கம்பனை எம் கயிலாய மலையான் தன்னை
கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும் 
நம்பனை எம்பெருமானை நாதன் தன்னை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
செம்பொன், நற்பவளம், ஒளி முத்து, செழுமணி என்றெல்லாம் ஒப்புக் கூறப்படுபவனும், வணங்குவார் சித்தத்தில் உறைபவனும், மணங்கமழும் மலர்களை கணைகளாகக் கொண்ட மன்மதன் இறக்கும் வண்ணம் விழித்து மகிழ்ந்தவனும், மதில் சூழ்ந்த கச்சியில் ஏகம்பனாய் மன்னுபவனும, கயிலாய மலையில் வாழும் எம் தலைவனும், சம்பாதி சடாயு என்ற கழுகுகளும் இராமனும் தமக்கு நன்மை தருவான் இவன் என்று ஆராய்ந்து வணங்கும் இறைவனும், எம்பெருமானும், தலைவனுமாகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.


பாடல் எண் : 05
புரையுடைய கரியுரிவைப் போர்வை யானை
புரிசடை மேல் புனலடைத்த புனிதன் தன்னை 
விரையுடைய வெள் எருக்கு அம் கண்ணி யானை
வெண்ணீறு செம்மேனி விரவினானை
வரையுடைய மகள் தவம் செய் மணாளன் தன்னை
வருபிணிநோய் பிரிவிக்கும் மருந்து தன்னை
நரை விடை நல் கொடி உடைய நாதன் தன்னை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
உட்டொளை பொருந்திய கரத்தையுடைய யானையது தோலைப் போர்வையாகக் கொண்டவனும், முறுக்குண்ட சடையின்மேல் கங்கையைச் செறித்துவைத்த புனிதனும், மணங் கமழும் வெள்ளெருக்கம்பூமாலையை அணிந்தவனும் வெள்ளிய நீறு செம்மேனியிடத்து விரவி விளங்குபவனும், பருவதராசன் மகள் தவம் செய்து அடையப்பெற்ற மணாளனும், வெள்ளிய விடையை உயர்த்திய நற்கொடியை உடைய தலைவனும் ஆகிய சிவபெருமானை நாரையூர் நன்னகரில் நான் கண்டேன்.


பாடல் எண் : 06
பிறவாதும் இறவாதும் பெருகினானை 
பேய்பாட நடமாடும் பித்தன் தன்னை
மறவாத மனத்தகத்து மன்னினானை
மலையானை கடலானை வனத்து உளானை
உறவானை பகையானை உயிர் ஆனானை
உள்ளானை புறத்தானை ஓசையானை 
நறவு ஆரும் பூங்கொன்றை சூடினானை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
பிறவாமையானும், இறவாமையானும் புகழ் பெருகியவனும், பேய்களின் பாட்டிற்கேற்பக் கூத்தாடும் பித்தனும், தன்னை மறவாத மனத்திடத்தே மன்னி நிற்பவனும், மலையிடத்தும் கடலின் கண்ணும் வானின் மேலும் விளங்குபவனும், உறவும் பகையும் உயிரும் ஆகுபவனும், அகத்தும், புறத்தும் திகழ்பவனும், தேனிறைந்த கொன்றைப் பூவைச் சூடியவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.


பாடல் எண் : 07
தக்கனது வேள்வி கெடச் சாடினானைத் 
தலைகலனாப் பலி ஏற்ற தலைவன் தன்னைக்
கொக்கரை சச்சரி வீணைப் பாணியானை
கோணாகம் பூணாகக் கொண்டான் தன்னை
அக்கினொடும் என்பணிந்த அழகன் தன்னை
அறுமுகனோடு ஆனை முகற்கு அப்பன் தன்னை
நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
தக்கனது வேள்வியை அதன் பயன் கெடுமாறு அழித்தவனும், பிரமனது தலையைப் பாத்திரமாகக் கொண்டு பிச்சை ஏற்ற தலைவனும், கொக்கரை, சச்சரி, வீணை ஆகிய இசைக்கருவிகளை வாசிக்கும் கரத்தினனும், உயிரைக் கொள்ளுதலையுடைய நாகத்தை அணியாகப் பூண்டவனும், உருத்திராக்கம் என்பு இவற்றை அணிந்த அழகனும், ஆறுமுகன், ஆனைமுகன் ஆகிய இருவருக்கும் தந்தையும், ஆடை அணியாதவனும், வக்கரை நள்ளாறு என்னுந் தலங்களில் திகழ்பவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.


பாடல் எண் : 08
அரிபிரமர் தொழுது ஏத்தும் அத்தன் தன்னை
அந்தகனுக்கு அந்தகனை அளக்கல் ஆகா 
எரிபுரியும் இலிங்கபுராணத்து உளானை 
எண்ணாகிப் பண் ஆர் எழுத்து ஆனானைத்
திரிபுரம் செற்று ஒருமூவர்க்கு அருள் செய்தானைச்
சிலந்திக்கும் அரசு அளித்த செல்வன் தன்னை 
நரிவிரவு காட்டு அகத்தில் ஆடலானை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
மாலும் நான்முகனும் ஏத்தி வணங்கும் தந்தையும், இயமனுக்கு இறுதியை ஆக்கும் மகாசங்காரக் கடவுளும், அளந்தறிய இயலாத எரிப்பிழம்பாம் இலிங்கத்தினது இயல்புவிரிக்கும் இலிங்க புராணத்து விளங்கித் தோன்றுபவனும், அருமைமிக்க எண்ணும் பண்ணும் எழுத்தும் ஆனவனும், திரிபுரங்களை அழித்து ஆண்டுத் தன்னை மறவாத மூவர்க்கும் அருள் செய்தவனும், சிலந்திக்குப் புவிபுரக்கும் அரசனாம் பேற்றையளித்த செல்வனும் ஏனை விலங்குகளொடு நரிகள் கலந்து திரியும் சுடுகாட்டில் ஆடுபவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.


பாடல் எண் : 09
ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை 
ஆல் அதன் கீழ் அறம் நால்வர்க்கு அருள் செய்தானைப்
பாலாகித் தேனாகிப் பழமும் ஆகி 
பைங்கரும்பு ஆய் அங்கு அருந்தும் சுவை ஆனானை 
மேலாய வேதியர்க்கு வேள்வியாகி
வேள்வியினின் பயனாய விமலன் தன்னை
நாலாய மறைக்கு இறைவன் ஆயினானை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
ஆலால நஞ்சினைத் தன் கழுத்திற்கு அணியாகக் கொண்டு அதன் நச்சுத் தன்மையைக் கெடுத்தவனும், கல்லால மர நிழலில் அமர்ந்து சனகாதி முனிவர் நால்வருக்கும் அறமுரைத்தவனும், பாலும் தேனும் பழமும் பசிய கரும்பும் ஆகி அவற்றின் இனிய சுவையாய்ப் பயில்பவனும், மேன்மைமிக்க வேதியர்க்கு வேள்வியாய் விளங்குபவனும், வேள்வியின் பயனாய் விளைபவனும், குற்ற மற்றவனும், நான் மறைகளாலும் இறைவனாகப் போற்றப்படுபவனும் ஆகிய சிவபெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.


பாடல் எண் : 10
மீளாத ஆள் என்னை உடையான் தன்னை 
வெளி செய்த வழிபாடு மேவினானை
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து
வன்கூற்றின் உயிர் மாள உதைத்தான் தன்னைத்
தோளாண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன்
தோள்வலியும் தாள்வலியும் தொலைவித்து ஆங்கே 
நாளோடு வாள் கொடுத்த நம்பன் தன்னை
நாரையூர் நன்நகரில் கண்டேன் நானே.

பொருள் விளக்கம் ‬:
விட்டுப்பிரியாத அடிமையாக என்னை உடையவனும், அறிவு ஒன்றிச் செய்த வழிபாட்டை விரும்புபவனும், மார்க்கண்டேய மறையவனுக்கு ஒருகாலும் மாளாதவாறு உயிரளித்து வலிய கூற்றின் உயிர் நீங்கும் வண்ணம் உதைத்தவனும், தன் தோள் வலிமையை மதித்துக் கயிலை மலையை எடுக்க முயன்ற காமுகனாகிய இராவணனுடைய தோள்வலியும் முயற்சி மிகுதியும் கெடச் செய்து, அவன் தன்னை உணர்ந்த அப்பொழுதே அவனுக்கு மிகுந்த வாழ் நாளையும் வாளையும் வழங்கிய தலைவனும் ஆகிய சிவ பெருமானை நாரையூராம் நன்னகரில் நான் கண்டேன்.


|| -- திருநாரையூர் திருமுறை பதிகம் முற்றிற்று -- ||


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக