இறைவர் திருப்பெயர் : சௌந்தரநாதர்
இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி
திருமுறை : இரண்டாம் திருமுறை 102வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி
திருமுறை : இரண்டாம் திருமுறை 102வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது
பாடல் எண் : 01
காம்பினை வென்ற மென்தோளி பாகம் கலந்தான் நலம் தாங்கு
தேம்புனல் சூழ்திகழ் மா மடுவின் திருநாரையூர் மேய
பூம் புனல் சேர் புரி புன்சடையான் புலியின் உரி தோல்மேல்
பாம்பினை வீக்கிய பண்டரங்கன் பாதம் பணிவோமே.
பாடல் விளக்கம்:
சிவபெருமான், மூங்கிலைப் போன்ற தோளையுடைய உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக் கொண்டவர். நலம் தரும் இனிய நீர் சூழ்ந்த சிறந்த நீர்நிலைகளையுடைய திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். அழகிய கங்கையையும், முறுக்குண்ட சிவந்த சடையையுமுடையவர். புலித்தோலாடை அணிந்தவர். பாம்பைக் கச்சாகக் கட்டியவர். பண்டரங்கன் என்னும் திருப்பெயர் உடையவர். அத்தகைய சிவபெருமானின் திருப்பாதங்களை நாம் பணிவோமாக.
பாடல் எண் : 02
தீவினை ஆயின தீர்க்க நின்றான் திருநாரையூர் மேயான்
பூவினை மேவு சடை முடியான் புடை சூழப் பலபூதம்
ஆவினில் ஐந்தும் கொண்டு ஆட்டு உகந்தான் அடங்கார் மதில் மூன்றும்
ஏவினை எய்து அழித்தான் கழலே பரவா எழுவோமே.
பாடல் விளக்கம்:
சிவபெருமான் தம்மை வழிபடுபவர்களின் தீவினைகளைத் தீர்த்தருள்பவர். திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர். பூமாலையணிந்த சடைமுடி உடையவர். பூதகணங்கள் புடைசூழ விளங்குபவர். பசுவிலிருந்து பெறப்படும் ஐந்து பொருள்களால் (பஞ்சகவ்வியம்) அபிடேகம் செய்து கொள்வதில் விருப்பமுடையவர். அடங்காது திரிந்த பகையசுரர்களின் மும்மதில்களை ஓர் அம்பு எய்து அழித்தவர். அப்பெருமானின் திருவடிகளை நாம் வழிபட்டு உயர்வடைவோமாக.
பாடல் எண் : 03
மாயவன் சேயவன் வெள்ளியவன் விடம் சேரும் மைமிடற்றன்
ஆயவன் ஆகி ஒர் அந்தரமும் அவன் என்று வரை ஆகம்
தீ அவன் நீர் அவன் பூமி அவன் திருநாரையூர் தன்னில்
மேயவனைத் தொழுவார் அவர் மேல்வினை ஆயின வீடுமே.
பாடல் விளக்கம்:
கருநிறமுடைய திருமால், செந்நிறமுடைய உருத்திரன், வெள்ளைத் தாமரைப் பூவில் வீற்றிருக்கும் பிரமன் விடமுண்ட நீலகண்டமுடைய மகேசுவரன் ஆகிய மூர்த்தி பேதங்களும், மற்றும் பல வேறுபாடான மூர்த்தி பேதங்களும் தாமேயாகியவர். மலை போன்ற திருமேனி உடையவர். நெருப்பு, நீர், பூமி (உப லட்சணத்தால் காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர்) இவற்றையும் உடம்பாக உடையவர். திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவர். அப்பெருமானைத் தொழுவாருடைய வினைகள் முழுதும் அவர்களைவிட்டு நீங்கும்.
பாடல் எண் : 04
துஞ்சு இருள் ஆடுவர் தூ முறுவல் துளங்கும் உடம்பினராய்
அம் சுடர் ஆர் எரி ஆடுவர் ஆர் அழல் ஆர் விழிக்கண்
நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர் நலன் ஓங்கு நாரையூர்
எம் சிவனார்க்கு அடிமைப்படுவார்க்கு இனி இல்லை ஏதமே.
பாடல் விளக்கம்:
சிவபெருமான் அனைத்தும் ஒடுங்குகின்ற ஊழிக் காலத்தில் திருநடனம் செய்பவர். தூய புன்சிரிப்போடு விளங்கும் திருமேனியர். அழகிய சுடரானது நன்கு எரியும்படி கைகளை வீசி ஆடுவார். நெற்றியில் நெருப்புக் கண்ணுடையவர். நஞ்சைக் கக்கும் நாகத்தை அரையில் கச்சாகக் கட்டியவர். நலம் பெருகச் செய்யும் திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற எம் சிவபெருமானுக்கு அடிமைத் தொண்டு செய்பவர்கட்கு இனி எந்நாளும் துன்பம் என்பதே இல்லை.
பாடல் எண் : 05
பொங்கு இளங் கொன்றையினார் கடலில் விடம் உண்டு இமையோர்கள்
தங்களை யாரிடர் தீர நின்ற தலைவர் சடைமேலோர்
திங்களை வைத்து அனல் ஆடலினார், திருநாரையூர் மேய
வெங்கனல் வெண் நீறு அணிய வல்லார் அவரே விழுமியரே.
பாடல் விளக்கம்:
சிவபெருமான், செழித்து விளங்கும் இளங் கொன்றை மலரைச் சூடியவர். பாற்கடலில் தோன்றிய விடத்தை உண்டு தேவர்களின் பெருந்துயரைத் தீர்த்த தலைவர். சடைமேல் ஒரு சந்திரனை அணிந்து நெருப்பைக் கையிலேந்தி ஆடுபவர். திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். வெங்கனலால் நீறாக்கப்பட்ட வெண்ணீற்றினை அணியவல்ல அப்பெருமானே யாவரினும் மேலானவர் ஆவர்.
பாடல் எண் : 06
பார் உறு வாய்மையினார் பரவும் பரமேட்டி பைங்கொன்றைத்
தார் உறு மார்பு உடையான் மலையின் தலைவன் மலைமகளைச்
சீர் உறும் மா மறுகின் சிறைவண்டு அறையும் திருநாரையூர்
உறை எம் இறைவர்க்கு இவை ஒன்றொடு ஒன்று ஒவ்வாவே.
பாடல் விளக்கம்:
சிவபெருமான், இந்நிலவுலகம் முழுவதும் புகழ் பரவும் மெய்யுணர்வுடையவர்களால் வணங்கப்படும் மேலான பரம்பொருள் ஆவார். பசுமை வாய்ந்த கொன்றை மாலையை அணிந்த மார்புடையவர். கைலைமலையின் தலைவர். மலைமகளைச் சிறப்புடன் ஒரு பாகமாகக் கொண்டவர். வீதிகளில் சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்கின்ற இறைவர் அணிந்துள்ள பொருள்கள் ஒன்றோடொன்று ஒவ்வாதனவாம்.
பாடல் எண் : 07
கள்ளி இடுதலை ஏந்து கையர் கரிகாடர் கண்ணுதலர்
வெள்ளிய கோவண ஆடை தன்மேல் மிளிர் ஆடு அரவு ஆர்த்து
நள் இருள் நட்டம் அது ஆடுவர் நன்நலன் ஓங்கு நாரையூர்
உள்ளிய போழ்தில் எம்மேல் வரு வல்வினை ஆயின ஓடுமே.
பாடல் விளக்கம்:
சிவபெருமான் கள்ளிச் செடிகள் நிறைந்த சுடு காட்டில் இடப்பட்ட மண்டையோட்டை ஏந்திய கையையுடையவர். சுடுகாட்டில் இருப்பவர். நெற்றிக் கண்ணர். வெண்ணிறக் கோவண ஆடையை அணிந்து, அதன் மேல் ஒளிரும், ஆடுகின்ற பாம்பைக் கச்சாகக் கட்டி நள்ளிருளில் நடனமாடுபவர். நல்ல நலன்களை எல்லாம் மேன்மேலும் பெருகத் தருகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை நினைத்த மாத்திரத்தில் எம்மேல் வருகின்ற வலிய வினைகள் யாவும் ஓடிவிடும்.
பாடல் எண் : 08
நாமம் எனைப்பலவும் உடையான் நலன் ஓங்கு நாரையூர்
தாம் ஒம்மெனப் பறை யாழ் குழல் தாளார் கழல்பயில
ஈம விளக்கு எரி சூழ் சுடலை இயம்பும் இடுகாட்டில்
சாமம் உரைக்க நின்று ஆடுவானும் தழல் ஆய சங்கரனே.
பாடல் விளக்கம்:
நலன்களைப் பெருகச் செய்யும் திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் பல திருப்பெயர்களை உடையவர். பறை, யாழ், குழல் முதலியன தாம் ஒம் என ஒலிக்க, அவற்றொடு ஒத்துத் தம் திருவடிகளில் அணிந்துள்ள கழல்கள் ஒலிக்க, காட்டில், கொள்ளி விளக்கு எரிய, சாமகானம் ஒலிக்க நின்றாடுகின்ற பெருமான் நெருப்புருவான சங்கரனே ஆவார்.
பாடல் எண் : 09
ஊனுடை வெண்தலை கொண்டு உழல்வான் ஒளிர் புன்சடைமேலோர்
வானிடை வெண்மதி வைத்து உகந்தான் வரிவண்டு யாழ்முரலத்
தேனுடை மா மலர் அன்னம் வைகும் திருநாரையூர் மேய
ஆனிடை ஐந்து உகந்தான், அடியே பரவா அடைவோமே.
பாடல் விளக்கம்:
சிவபெருமான் ஊனுடை மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டு, பிச்சையேற்றுத் திரிபவர். ஒளிர்கின்ற சடைமேல், வானத்தில் தவழும் வெண்ணிறச் சந்திரனை அணிந்து, மகிழ்பவர். வரிகளையுடைய வண்டுகள் யாழிசைபோல் ஒலிக்க, தேன் உடைய சிறந்த தாமரை மலரில் அன்னம் தங்க விளங்கும் திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். பசுவில் இருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் அபிடேகம் செய்யப் படுதலை விரும்புபவர். அப்பெருமானின் திருவடிகளை வணங்கி நற் கதி அடைவோமாக.
பாடல் எண் : 10
தூசு புனை துவர் ஆடை மேவும் தொழிலார் உடம்பினிலுள்
மாசு புனைந்து உடை நீத்தவர்கள் மயல் நீர்மை கேளாதே,
தேசு உடையீர்கள் தெளிந்து அடைமின் திருநாரையூர் தன்னில்
பூசு பொடித் தலைவர் அடியார் அடியே பொருத்தமே.
பாடல் விளக்கம்:
மஞ்சட் காவி உடை உடுத்தும் புத்தர்களும், உடம்பிலும், உள்ளத்திலும், அழுக்கினைக் கொண்டு ஆடை உடுத்தலை ஒழித்தவர்களாகிய சமணர்களும் கூறும் மயக்கும் தன்மையுடைய மொழிகளைக் கேளாதீர்கள். மெய்யறிவுடையவர்களே! சிவபெருமானே மெய்ப்பொருள் என்பதைத் தெளிவாக உணர்ந்து, திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற, திருவெண்ணீறு பூசிய தலைவராகிய சிவபெருமானின் திருவடிகளையும், அவர் அடியார்களின் திருவடிகளையும் வணங்குவதே பொருந்தும் எனக்கொண்டு அவற்றைச் சரணாக அடையுங்கள்.
பாடல் எண் : 11
தண்மதி தாழ்பொழில் சூழ் புகலித் தமிழ் ஞானசம்பந்தன்,
ஒண்மதி சேர் சடையான் உறையும் திருநாரையூர் தன்மேல்
பண் மதியால் சொன்ன பாடல் பத்தும் பயின்றார் வினைபோகி
மண் மதியாது போய் வான் புகுவர் வானோர் எதிர்கொளவே.
பாடல் விளக்கம்:
குளிர்ச்சி பொருந்திய சந்திரன் தவழ்கின்ற சோலைகள் சூழ்ந்த திருப்புகலி என்னும் திருத்தலத்தில் அவதரித்த தமிழ் வல்ல ஞானசம்பந்தன், ஒளி பொருந்திய சந்திரனை அணிந்த சடையையுடைய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் திருநாரையூர் என்னும் திருத்தலத்தின் மேல், பயில்வோருக்கு இசையறிவு உண்டாகும் வண்ணம் பாடியருளிய இப்பாடல்கள் பத்தையும் பயின்று ஓத வல்லவர்கள் மண்ணுலக வாழ்க்கை நிலையற்றதென உணர்ந்து அதனை மதியாது, தேவர்கள் எதிர் கொண்டழைக்க வானுலகை அடைவர்.
"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக