வியாழன், 5 பிப்ரவரி, 2015

திருநாரையூர் திருமுறை பதிகங்கள் 03

இறைவர் திருப்பெயர் : சௌந்தரநாதர்

இறைவியார் திருப்பெயர் : திரிபுரசுந்தரி

திருமுறை : மூன்றாம் திருமுறை 107 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்

இத்தலம் சோழநாட்டிலுள்ளது


பாடல் எண் : 01
கடலிடை வெங்கடு நஞ்சமுண்ட கடவுள் விடையேறி
உடல் இடையில் பொடிப் பூச வல்லான் உமையோடு ஒருபாகன்
அடல் இடையில் சிலை தாங்கி எய்த அம்மான் அடியார் மேல்
நடலை வினைத் தொகை தீர்த்து உகந்தான் இடம் நாரையூர் தானே. 

‪‎பொருள் விளக்கம் ‬:
கடலில் தோன்றிய வெப்பம் மிகுந்த கடுமையான நஞ்சையுண்ட கடவுள் இடபவாகனத்தில் ஏறி, திருமேனியில் திரு வெண்ணீற்றினைப் பூசி, உமாதேவியைத் தம் ஒரு பாகமாகக் கொண்டவர். முப்புர அசுரர்களுடன் போரிடும் சமயத்தில் மேரு மலையாகிய வில்லைத் தாங்கிக் கணைஎய்த பெருமான், தம்முடைய அடியார்கள் மேல் வரும் துன்பம்தரும் வினைத் தொகுதிகளைத் தொலைத்து மகிழ்பவர். இத்தகைய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருநாரையூர் என்னும் திருத்தலமாகும். 


பாடல் எண் : 02
விண்ணின்மின் நேர் மதி, துத்தி நாகம் விரி பூ மலர்க்கொன்றை
பெண்ணின் முன்னே மிக வைத்து உகந்த பெருமான் எரி ஆடி
நண்ணிய தன் அடியார்களோடும் திருநாரையூரான் என்று
எண்ணுமின்! நும் வினை போகும் வண்ணம் இறைஞ்சும்! நிறைவாமே.

பொருள் விளக்கம் :
ஆகாயத்தில் விளங்கும், மின்னல் போன்ற ஒளியுடைய சந்திரனையும், படப்புள்ளிகளையுடைய பாம்பினையும், விரிந்த கொன்றை மலரையும், கங்கா தேவிக்கு முன்னே சடையிலணிந்து மிகவும் மகிழ்ந்த பெருமான், நெருப்பேந்தி ஆடுபவர். திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அச்சிவ பெருமானை மனம், வாக்கு, காயத்தால் வழிபடுகின்ற அடியார்கள் கூட்டத்தோடு நீங்களும் சேர்ந்து தியானம் செய்யுங்கள். உங்கள் வினைகள் தொலைந்து போகும் வண்ணம் வணங்குங்கள். எல்லா நலன்களும் நிறையக் குறைவிலா இன்பம் உண்டாகும். 


பாடல் எண் : 03
தோடொரு காதொரு காது சேர்ந்த குழையான் இழை தோன்றும்
பீடொரு கால் பிரியாது நின்ற பிறையான் மறையோதி
நாடொரு காலமும் சேர நின்ற திருநாரையூரானைப்
பாடுமின் நீர் பழி போகும் வண்ணம்! பயிலும்! உயர்வாமே.

பொருள் விளக்கம் :
சிவபெருமான் இடக் காதில் தோடும், வலக் காதில் குழையும் அணிந்துள்ளவர். மார்பில் பூணூல் அணிந்துள்ளவர். ஒரு காலத்திலும் பெருமை நீங்காமல் நிலைத்து நிற்பவர். பிறைச் சந்திரனை அணிந்துள்ளவர். வேதங்களை ஓதுபவர். ஒவ்வொரு காலத்திலும் நாட்டிலுள்ள அடியார்கள் வணங்குதற்கு வந்து சேரும்படி வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர்ப் பெருமானைப் பாடுவீர்களாக. உங்கள் பழிகள் நீங்கும் வண்ணம் இடைவிடாது வணங்குங்கள். உங்கட்கு உயர்வு உண்டாகும்.


பாடல் எண் : 04
வெண் நிலவு அம் சடை சேர வைத்து விளங்கும் தலையேந்திப்
பெண்ணில் அமர்ந்து ஒரு கூறு அது ஆய பெருமான் அருளார்ந்த
அண்ணல் மன்னி உறை கோயில் ஆகும் அணி நாரையூர் தன்னை
நண்ணல் அமர்ந்து உறவு ஆக்குமின்கள்! நடலைகரிசு அறுமே. 

பொருள் விளக்கம் :
வெண்ணிறப் பிறைச்சந்திரனைத் தலையிலே அணிந்து, விளங்குகின்ற பிரமகபாலத்தைக் கையிலேந்தி, உமா தேவியைத் தன்னுடம்பில் ஒரு கூறாகக் கொண்ட பெருமானும், அருள் நிறைந்த தலைவனுமாகிய சிவபெருமான் நிலையாக வீற்றிருந் தருளும் கோயிலுள்ள அழகிய திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் சேர்ந்து இறைவனிடம் அன்பு செலுத்துங்கள். உங்கள் துன்பங்கள் நீங்கும்.  


பாடல் எண் : 05
வானமர் தீ வளி நீர் நிலனாய் வழங்கும் பழியாகும்
ஊன் அமர் இன்னுயிர் தீங்கு குற்றம் உறைவால் பிறிதின்றி
நான் அமரும் பொருளாகி நின்றான் திருநாரையூர் எந்தை
கோன் அவனைக் குறுகக் குறுகா, கொடுவல் வினைதானே. 

பொருள் விளக்கம் :
ஆகாயம், நெருப்பு, காற்று, நீர், நிலம், ஆகிய ஐம்பூதங்களின் தொடர்பாய் விளங்குகின்ற, பழிக்கு இடமாகிய தசையாகிய இவ்வுடம்பில் தங்குகின்ற இனிய உயிர் தீமை பயக்கும் குற்றம் புரியும் இயல்பாயுள்ளது. அக்குற்றங்களிலிருந்து உய்தி பெறப் பிறிதொரு வழியின்றி, அடியேன் விரும்பிச் சார்தற்குப் பற்றுக் கோடாக விளங்கும் பெருமான் திருநாரையூரில் வீற்றிருந்தருளுகின்ற என் தந்தையும், தலைவனுமாவான். அப்பெருமானைச் சரணடையக் கொடிய வல்வினைகள் நம்மை வந்து சாரா. 


பாடல் எண் : 06
கொக்கு இறகும் குளிர் சென்னி மத்தம் குலாய மலர் சூடி
அக்கு அரவோடு அரை ஆர்த்து உகந்த அழகன் குழகாக
நக்கு அமரும் திருமேனியாளன் திருநாரையூர் மேவிப்
புக்கு அமரும் மனத்தோர்கள் தம்மைப் புணரும் புகல்தானே. 

பொருள் விளக்கம் :
சிவபெருமான் தலையில் கொக்கின் இறகையும், குளிர்ந்த பொன்னூமத்தையின் செழித்த மலரையும் சூடியவர். எலும்பைப் பாம்போடு சேர்த்து இடுப்பில் கட்டி மகிழும் அழகர். இளமையாய்த் திகம்பரராய்த் திகழும் திருமேனியுடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தை அடைந்து, அவரை விரும்பி வழிபடும் மனத்தையுடையவர்களிடத்துத் திருவருட்சத்தி பதியும்.


பாடல் எண் : 07
ஊழியும் இன்பமும் காலமாகி உயரும் தவமாகி
ஏழ் இசையின் பொருள் வாழும் வாழ்க்கை வினையின் புணர்ப்பாகி
நாழிகையும் பல ஞாயிறாகி நளிர் நாரையூர் தன்னில்
வாழியர் மேதகு மைந்தர் செய்யும் வகையின் விளைவாமே.

பொருள் விளக்கம் :
சிவபெருமான் ஊழிக்காலமும், இன்பமும், காலங்களும் ஆகியவர். உயர்ந்த தவம் ஆகியவர். ஏழிசையின் பயனாக விளங்குபவர். வாழ்கின்ற வாழ்க்கையில் உயிர்கள் செய்கின்ற வினையின் பயன்களை உயிர்கட்குச் சேர்ப்பிப்பவர். நாழிகை முதலிய சிறு காலங்களின் அளவுகளாகிப் பலவாகிய நாள்களும் ஆகியவர். இவைகளெல்லாம் குளிர்ச்சி பொருந்திய திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவ பெருமானின் அருள் விளையாடல்களின் விளைவுகளேயாகும்.


பாடல் எண் : 08
கூசம் இலாது அரக்கன் வரையைக் குலுங்க எடுத்தான் தோள்
நாசம் அது ஆகி இற அடர்த்த விரலான் கரவாதார்
பேச வியப்பொடு பேண நின்ற பெரியோன் இடம்போலும்
தேசம் உறப் புகழ் செம்மை பெற்ற திருநாரையூர் தானே. 

பொருள் விளக்கம் :
கூசுதல் இல்லாது திருக்கயிலாய மலையைக் குலுங்க எடுத்த இராவணனுடைய தோள்கள் நெரியும் படி அடர்த்த திருப்பாத விரலையுடையவர் சிவபெருமான். நெஞ்சில் வஞ்ச மில்லாத உண்மையடியார்கள் மிகவும் வியப்போடு பேசும் படியும், இடைவிடாது தியானிக்கும் படியும் நின்ற பெருமையுடையவர். இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், தேசம் முழுவதும் புகழுகின்ற சிறப்புடைய திருநாரையூர் என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 09
பூமகனும் அவனைப் பயந்த புயலார் நிறத்தானும்
ஆம் அளவும் திரிந்து ஏத்திக் காண்டல் அறிதற்கு அரியான் ஊர்
பா மருவும் குணத்தோர்கள் ஈண்டிப் பலவும் பணி செய்யும்,
தேம் மருவும் திகழ் சோலை சூழ்ந்த திருநாரையூர் தானே.

பொருள் விளக்கம் :
தாமரைப் பூவில் வீற்றிருந்தருளும் பிரமனும், அவனைப் பெற்ற மேகம் போன்ற நிறத்தையுடைய திருமாலும், தங்களால் இயன்ற அளவு திரிந்து தேடியும், ஏத்தியும் காண்பதற்கு அரியவனாக விளங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர், நீதி நூல்களில் சொல்லிய நற்குண, நற்செய்கை உடையவர்கள் கூடி, திருத்தொண்டுகள் பலவும் செய்யும், தேன்மணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருநாரையூர் என்னும் திருத்தலமாகும்.


பாடல் எண் : 10
வெற்று அரை ஆகிய வேடம் காட்டித் திரிவார் துவராடை
உற்ற (அ)ரையோர்கள் உரைக்கும் சொல்லை உணராத எழுமின்கள்
குற்றம் இலாதோர் கொள்கை எம்மான் குழகன் தொழில் ஆரப்
பெற்று அரவு ஆட்டி வரும் பெருமான் திருநாரையூர் சேரவே.

பொருள் விளக்கம் :
ஆடையற்ற கோலத்துடன் திரியும் சமணர்களும், மஞ்சட் காவியாடை போர்த்துத் திரியும் புத்தர்களும் உரைக்கின்ற சொற்களை ஏற்க வேண்டா. குற்றமில்லாத கொள்கை உடைய எம் தலைவரும், இளமையான வரும், அடியவர்கட்கு அருள்புரியும் தொழிலையுடையவரும், அரவம் அணிந்துள்ளவருமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருநாரையூர் என்னும் திருத்தலத்தைச் சேர்ந்து, வழிபட்டு உய்வீர்களாக.


பாடல் எண் : 11
பாடு இயலும் திரை சூழ் புகலித் திருஞானசம்பந்தன்,
சேடு இயலும் புகழ் ஓங்கு செம்மைத் திருநாரையூரான் மேல்
பாடிய தண் தமிழ்மாலை பத்தும் பரவித் திரிந்தாக
வாடிய சிந்தையினார்க்கு நீங்கும் அவலக்கடல் தானே. 

பொருள் விளக்கம் :
அலை ஓசையுடைய கடல் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த திருஞானசம்பந்தன், பெருமை பொருந்தியதும் ஓங்கும் புகழ் உடையதும், சிவத்தன்மை உடையதுமான திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் மீது பாடிய பத்துப் பாடல்களாலாகிய இத்தண்டமிழ் மாலையாகிய பதிகத்தைப் பாடித் துதிக்கும் சிந்தையுடைய அடியார்களின் கடல் போன்ற பெருந்துன்பம் நீங்கும்.


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக