திங்கள், 2 பிப்ரவரி, 2015

திருக்கோவையார் - இயற்கைப் புணர்ச்சி


தமிழ் இலக்கியங்கள் வெளிப்படுத்தும் அகப்பொருள் செய்திகள் களவு, கற்பு என் இருவகைப்படும். களவு என்பது ஊழின் முறைமையால் ஆடவனும் பெண்ணும் (தலைவனும் தலைவியும்) தமியராய் ஓரிடத்தில் எதிர்ப்பட்டு, கண்டு, காதலித்து வாழ்வதாம். இக்காதல் பிறர் அறியாதவாறு இது களவு எனப் பெற்றது. 

கற்பு என்பது காதலித்து இருவரும் பின்னர் திருமணம் செய்துகொண்டு இல்லற வாழ்வில் வாழத் தலைப்படுதலாம். முதற்பகுதியான களவு இயற்கைப் புணர்ச்சி முதலாக நான்கு வகைகளை உடையது. முதலாவதான இயற்கைப் புணர்ச்சி என்பது தலைவனும் தலைவியும் எவ்வித காரணமும் இல்லாமல் இயல்பாகச் சந்திக்கின்ற புணர்ச்சியாகும். 

இதில் புணர்ச்சி என்ற சொல் மனத்தால் ஒன்று படுவதைக் குறிப்பதாகும். இது பதினெட்டுத் துறைகளை உடையது. தன்னுடைய தோழர்களோடு காதல் தலைவன் வேட்டையாடுதல் போன்ற தொழில் காரணமாகச் செல்லுகின்ற பொழுது ஊழின் வயத்தால் அவர்களை விட்டுப்பிரிந்து செல்ல இவனைப் போல காதல் தலைவியும் தன் தோழியரைவிட்டு நீங்கி தனியே நிற்க அவளை அவன் காணுதல் காட்சியாகும்.



இயற்கைப் புணர்ச்சி - 01. காட்சி


காட்சி என்பது தலைமகளைத் தலைமகன் கண்ணுற்று, இஃதொரு வியப்பென்றல். 

கொளு 
"மதிவாணுதல் வளர்வஞ்சியைக்
கதிர் வேலவன் கண்ணுற்றது." 

கொளுவின் பொருள்: 

பிறையை ஒத்து ஒளி சிறந்த நெற்றியையுடைய இளைய வஞ்சிக் கொம்பை நிகரானவளை, ஒளி சிறந்த வேலினை உடையவன் கண்டது.

"திருவளர் தாமரை சீர்வளர் காவிகள் ஈசர்தில்லைக் 
குருவளர் பூங்குமிழ் கோங்குபைங் காந்தள்கொண்(டு) ஓங்குதெய்வ 
மருவளர் மாலையொர் வல்லியின் ஒல்கி அனநடைவாய்ந்(து) 
உருவளர் காமன்தன் வென்றிக் கொடிபோன்(று) ஒளிர்கின்றதே.!"

பாடல் விளக்கம்:

அழகு மிக்க தாமரைப் பூவையும் சிறப்புடைய நீலப் பூவையும், சிவனுடைய சிதம்பரத்தில், நிறமிகுந்து பொலிவுடைய குமிழம் பூவையும் கோங்கு அரும்புகளையும் செவ்விக் காந்தட் பூக்களையும் இம்மலர்களை அவயவமாகக் கொண்டு (எங்ஙனமெனில், தாமரைப் பூவை முகமாகவும், செங்கழுநீர்ப் பூக்களைக் கண்களாகவும், குமிழ மலரை நாசியாகவும், கோங்கரும்புகளை முலைகளாகவும் செங்காந்தட் பூவைக் கரங்களாகவும் இப்படி அவயவமாகக் கொண்டு) உயர்ந்த தெய்வ வாசனை மிக்க மாலை ஒரு வல்லி சாதகக் கொடிபோல் நுடங்கி, அன்னத்தின் நடைபோல நடையும் வாய்ந்து, வடிவமிகுந்த மாரவேளின் வெற்றிக்கொடியை ஒத்து விளங்கா நின்றது. என்ன அதிசயமோ!

தத்துவப் பொருள்

சிவஞானம் பெற்றிட, சத்திநிபாதம் பெற்ற ஆன்மா சிவத்தலைவியைக் கண்டது.



இயற்கைப் புணர்ச்சி - 02. ஐயம்


ஐயம் என்பது கண்ணுற்ற பின்னர் இங்ஙனம் தோன்றா நின்ற இம்மாது திருமகள் முதலாகிய தெய்வமோ அன்றி மக்கள் உள்ளாள் கொல்லோ என்று ஐயுறா நிற்றல். 

கொளு
"தெரிய அரியதோர் தெய்வ என்ன
அருவரை நாடன் ஐயுற்றது."

கொளுவின் பொருள் :

அறிவதற்கு அருமையானதொரு தெய்வமென்று அரிய மலைநாட்டை உடையவன் சந்தேகித்தது.

"போதா விசும்போ புனலோ பணிக ளதுபதியோ
யாதோ அறிகுவ(து) ஏதும் அரிதி யமன் விடுத்த
தூதோ அனங்கன் துணையோ இணையிலி தொல்லைத்தில்லை
மாதோ மடமயிலோ என நின்றவர் வாழ்பதியே."

பாடல் விளக்கம்:

பூமியிலுள்ள இளைஞரை எல்லாம் கொல்ல வேண்டிக் காலன் வரவிட்ட தூதோ? வசித்தற்கு அரியாரை வசிக்க அனங்கற்கு உண்டாயிற்றோர் துணையோ? தன்னை நிகரில்லாத திருஅம்பலவாணனுடைய சிதம்பரத்தில் வாழும் மாதரோ? மடப்பத்தையுடைய மயிலோ? என்று யாம் சொல்லும்படி நின்ற இவர் வாழும் இடம், தாமரைப் பூவோ, ஆகாயமோ, நீரோ, பாம்புகளின் பதியாகிய நாகர் உலகமோ இன்ன இடம் என்று அறிதற்குச் சிறிதும் அறியாதிருந்தது.

தத்துவப் பொருள்

அறிவதற்கு முடியாத இறைவனின் ஞானத்தை தரும் சிவத்தலைவியின் திருமேனி எங்கே உள்ளதோ என ஐயப்பட்டது.



இயற்கைப் புணர்ச்சி - 03. தெளிதல்


தெளிதல் என்பது ஐயுற்ற பின்னர் அவயவம் இயங்கக் கண்டு இவள் தெய்வம் அல்லள் என்று தெளியா நிற்றல்.

கொளு
"அணங்கல்லள்என்(று) அயில்வேலவன்
குணங்களை நோக்கிக் குறித்துரைத்தது."

கொளுவின் பொருள்:

உறுப்புகளைக் கண்டு தலைவியைத் தெய்வம் அல்லள் மானுடத்தவளே எனத் தெளிதலாகும்

"பாயும் விடையரன் தில்லையன் னாள்படைக் கண்ணிமைக்கும்
தோயும் நிலத்தடி தூமலர் வாடும் துயரமெய்தி
ஆயும் மனனே அணங்கல்லள் அம்மா முலைசுமந்து
தேயும் மருங்குல் பெரும்பணைத் தோளிச் சிறுநுதலே."

பாடல் விளக்கம்:

பாய்ந்து செல்லுகின்ற இடபத்தை உடைய (காளையை) சிவபெருமானின் திருத்தலமான தில்லையை ஒப்பாகிய தலைவியினுடைய வேல்போலும் கண்கள் இமைக்கின்றன. பாதங்கள் பூமியில் பொருந்துகின்றன. அவள் சூடியுள்ள பூக்களும் வருகின்றன. எனவே ஐயப்பட்டு ஆராய்கின்ற மனமே அவள் தெய்வம் அல்லள்! காண். அழகிய முலைகளைச் சுமந்து வருந்துகின்ற இடையினையும், (மூங்கிலை வென்ற) தோளினையும், சிறு நெற்றியினையும் உடையவள் இவள் தெய்வமல்லள்.

தத்துவப் பொருள்:

சிவம். ஆன்மாவிற்கு ஞானம் வழங்க மானுடச் சட்டை தாங்கி, சிவத்தலைவியாய் வந்தமை தெளிதல்.


தொடரும் பாடல்களுக்கு விளக்கம் அடுத்த பதிவில்..........!


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக