இறைவர் திருப்பெயர் : நித்யசுந்தரேஸ்வரர், நெடுங்களநாதர்
இறைவியார் திருப்பெயர் : மங்களநாயகி, ஒப்பிலா நாயகி
தல மரம் : வில்வம்
தீர்த்தம் : அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம்
வழிபட்டோர் : அகத்தியர்
தேவாரப் பாடல்கள் : சம்பந்தர் - மறையுடையாய் தோலுடையாய்
தலத்தின் வரலாறு மற்றும் சிறப்புகள்
சிவன் தனக்கு இடப்பாகத்தினை சக்திக்கு ஒதுக்கி கொடுத்தவர். இவருக்கு அர்த்தநாரீஸ்வரர் என்று பெயர். மற்ற கோயில்களில் மூலஸ்தானத்தில் நடுநாயகமாக விளங்கும் ஈசன், திருச்சி அருகே திருநெடுங்குளத்தில் மூலஸ்தானத்தில் சக்திக்காக தன் இடப்பாகத்தை ஒதுக்கி கொடுத்து விட்டு சற்று தள்ளி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இங்கு சிவலிங்கம் மட்டுமே இருந்தாலும் இருவருமே இருப்பதாக ஐதீகம்.
இந்தக் கோவில் இரண்டு விமானங்கள் இருப்பது ரொம்ப விசேஷம். காரணம் சிவபெருமான் உமையவளுக்கு தனது திருமேனியின் இடப்பாகத்தில் இடம் கொடுத்ததால், இத்தலத்தின் கருவறையில் ஈசன் சிவலிங்க வடிவமாக இருந்தாலும், அரூப வடிவில் பார்வதியும் உடன் இருப்பதாக ஐதீகம். இதனால் கருவறையின் மேல் இரண்டு விமானங்கள் உள்ளன. கருவறை இரட்டை விமான அமைப்பு, அப்படியே காசி விஸ்வநாதர் கோவில் இரட்டை விமான அமைப்பை ஒத்துள்ளது
திருநெடுங்களம் என்றால் "சமவெளியில் அமைந்த பெரிய ஊர்' என்று பெயர். அன்னை பார்வதி சிவனை நோக்கி இத்தலத்தில் தவம் இருந்தாள். பார்வதியின் தவத்தை மெச்சிய இறைவன் அவள் அறியாது வேறு வடிவில் வந்து தேவியை கைப்பிடிக்கிறார்.
மூலத்தானத்தின் மேல் இரு விமானங்கள் அமைந்து புதுமையாகக் காட்சியளிக்கின்றன.
இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் அமைப்பு அற்புதமானது - யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற்கரங்களில் மான் மழுவும், கீழ்க் கரங்களில் சின் முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கக் காட்சி தருகிறார்.
கல்வெட்டில் இத்தலம் "பாண்டிகுலாசினி வளநாட்டு வடவீர நாட்டு திருநெடுங்களம்" என்றும்; இறைவன் பெயர் "நெடுங்களத்து மகாதேவர் " என்றும் குறிக்கப்பட்டுள்ளது.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
வராகிக்கு விரளி மஞ்சள் இடித்து இராகு காலத்தில் ஞாயிறு, வெள்ளி நாட்களில் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வதால், தடை பட்டு வரும் திருமணங்கள் விரைவில் நடக்கின்றன.
அகத்தியர் வழிபட்டு பேறு பெற்ற தலம் இதுவாகும். வந்திய சோழ மன்னனுக்கு ஈசன் பேரழகுடன் காட்சி கொடுத்த காரணத்தால், இத்தல இறைவன் ‘நித்திய சுந்தரேஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். இத்தல ஈசனை தொடர்ந்து 6 வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் முகப்பொலிவு கூடும். சகல ஜனவசியம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
நெடுங்களம் ஒரு திருப்புகழ் தலம். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நானகு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.
சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியுள்ள இப்பதிகம் "இடர் களையும் திருப்பதிகம்" என்று போற்றப்படுகிறது. இப்பதிகத்தில் உள்ள 10 பாடல்களிலும் இடர்களையாய் என்ற குறிப்பைக் காணலாம். இடர்கள் நீங்கி இன்பம் பெற இப்பதிகத்தை படித்து வந்தால் நலம் பெறுவது உறுதி என்று சம்பந்தர் தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.
கோவில் அமைவிடம்
திருச்சி - தஞ்சை சாலையில் வந்து துவாக்குடி என்னுமிடத்தில் பிரியும் சாலையில் 4 கி. மீ. சென்று நெடுங்களத்தை அடையலாம். திருச்சி மெயின்கார்டு கேட்டிலிருந்து நகரப் பேருந்து செல்கின்றன. திருச்சி - மாங்காவனம், நகரப் பேருந்து இத்தலம் வழியாகச் செல்கிறது.
"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக