வியாழன், 17 டிசம்பர், 2015

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை 01 - 05

பாவை நோன்பைப் பற்றி ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே "திருப்பாவை" என்று அழைக்கப்படுகிறது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு பூமியிலிருந்த கிடைத்த மகள் தான் கோதை என்ற ஆண்டாள். இவர் கண்ணனின் தீவிர பக்தை. அவரையே நினைத்திருந்து கடைசியில் ஸ்ரீரங்கத்தில் அவரையே மணந்து அவரால் ஆட்கொள்ளப்பட்டவர்.


பாசுரம் 01
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய். 

பாசுர விளக்கம்:
அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வ வளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழு நிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதா பிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.

இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே" பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.


பாசுரம் 02
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ, பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து ஏல் ஓர் எம்பாவாய். 

பாசுர விளக்கம்:
திருமால் கண்ணனாக அவதரித்த ஆயர்பாடியில் வாழும் சிறுமிகளே! நாம், இவ்வுலகில் இருந்து விடுபட்டு, அந்த பரந்தாமனின் திருவடிகளை அடைவதற்காக, நாம் செய்த பாவையை வணங்கி விரதமிருக்கும் வழிமுறைகளைக் கேளுங்கள். நெய் உண்ணக் கூடாது, பால் குடிக்கக்கூடாது. அதிகாலையே நீராடி விட வேண்டும். கண்ணில் மை தீட்டக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது (மார்கழியில் பூக்கும் மலர்கள் அனைத்தும் மாலவனுக்கே சொந்தம்). தீய செயல்களை மனதாலும் நினைக்கக் கூடாது. தீய சொற்களை சொல்வது கூட பாவம் என்பதால் பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. இல்லாதவர்களுக்கும், துறவிகளுக்கும், ஞானிகளுக்கும் அவர்கள் போதும் என்று சொல்லுமளவு தர்மம் செய்ய வேண்டும்.

ஒரு செயலில் வெற்றி பெற கட்டுப்பாடு மிகவும் அவசியம். வாயைக் கட்டிப்போட்டால் மனம் கட்டுப்படும். மனம் கட்டுப்பட்டால் கடவுள் கண்ணுக்குத்தெரிவான். அதனால் தான் பாவை நோன்பின் போது நெய், பால் முதலியவற்றை தவிர்த்து உடலைக் காப்பதுடன், தீயசொற்கள், தீயசெயல்களைத் தவிர்த்து மனதை சுத்தமாக்குவதையும் கடமையாக்குகிறாள் ஆண்டாள்.

எல்லாச் செல்வங்களையும் தன்னிடத்தில் வைத்துக்கொண்டிருப்பதால் வையம் என்ற சொல் பூமியைக் குறிக்கிறது. எனினும் பூமியின் ஒரு பகுதியில் உள்ள திருஆய்ப்பாடியையே உணர்த்துகின்றது. கண்ணன் பிறந்த திருவாய்ப்பாடியில் வாழும் காலத்தில் அவ்விடத்தில் அவனோடு சேர்ந்து வாழும் பெரும்பேறு பெற்றவர்களே! மழைக்காக நாம் செய்யும் நோன்பினை எப்படிச் செய்ய வேண்டும் என்பதைக் கூறுகிறேன் கவனத்துடன் கேளுங்கள்.

அடியார்களுக்கு அருள்வதற்காகவே நாராயணன் பாற்கடலில் அரவணைமேல் பள்ளிகொண்டு யோக நித்திரை செய்கின்றான். அப்படிப்பட்ட பரமனைப் பாடிக்கொண்டே இருக்க வேண்டும். விடியற்காலையில் நீராட வேண்டும். திருஆய்ப்பாடியில் நெய்யும் பாலும் நிறைந்திருந்தாலும் நாம் உண்ணக்கூடாது. மை என்பது மங்களகரமான பொருளாக இருந்தாலும் அதைக் கண்களில் இட்டு அலங்காரம் செய்துகொள்வதையும், தலையில் மலர்களை வைத்துக் கொள்வதையும் விரதகாலம் முடியும் வரை தவிர்க்க வேண்டும். பெரியோர்கள் இப்படிப்பட்ட காலங்களில் எந்தெந்தச் செயல்களைச் செய்யாமல் விட்டார்களோ, அந்தச் செயல்களை நாமும் செய்யாதிருக்க வேண்டும்.

ஒருவர்மேல் ஒருவர் கோள் சொல்வது தீமை பயக்குமாததால், அத்தகைய தீக்குறளைச் சொல்லக்கூடாது. யாசகர்களுக்கு "இல்லை" என்று சொல்லாமல் பொன்னும் பொருளும் வாரி வழங்க வேண்டும். உணவு இடவேண்டும்; பிச்சை இட வேண்டும்; அவ்வாறு கொடுக்கும் இடத்தையும் காட்ட வேண்டும். இவை எல்லாம் நீங்கள் நன்மைபெறும் வழிகள். இவற்றைச் செய்யும் போது மனமுவந்து செய்ய வேண்டும் என்கிறாள் ஆண்டாள். நல்ல அறிவுரைகளைக் கேட்டு நடப்பது நமக்கும் நல்லது; பிறர்க்கும் நல்லது.


பாசுரம் 03
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய். 

பாசுர விளக்கம்:
சிறுமியரே! நம் பரந்தாமன் வாமன அவதாரத்தில் மூன்றடிகளால் விண்ணையும் மண்ணையும் அளந்து தன்னுடையதாக்கிக் கொண்ட உத்தமன். அவனது சிறப்பைக் குறித்து பாடி, நம் பாவைக்கு மலர்கள் சாத்தி வழிபடுவதற்கு முன் நீராடச் செல்வோம். இந்த விரதமிருப்பதால், உலகம் முழுவதும் மாதம் மும்முறை மழை பெய்து தண்ணீர் இல்லாத குறையைப் போக்கும். மழை காரணமாக வயல்களில் செந்நெல் செழித்து வளரும். மீன்கள் வயலுக்குள் பாய்ந்தோடி மகிழும். குவளை மலர்களில் புள்ளிகளையுடைய வண்டுகள் தேன் குடிக்க வந்து கிறங்கிக் கிடக்கும். வள்ளல் போன்ற பசுக்கள் பாலை நிரம்பத்தரும். என்றும் வற்றாத செல்வத்தை இந்த விரதம் தரும்.

திருப்பாவை என்றாலே கிருஷ்ணாவதாரம் குறித்து பாடப்படுவது தான். அதிலே முதல் பத்து, அடுத்த பத்து, அதற்கடுத்த பத்து என மூன்று பிரிவாக்கி அதற்குள் ஒரு பாடலில் வாமன அவதாரத்தை பாடுகிறாள் ஆண்டாள். திருமாலின் பாதம் பட்டால் மோட்சம் நிச்சயம். அதனால், அதை உத்தம அவதாரம் என்று வேறு போற்றுகிறாள். பகவானை வணங்கினால் எல்லா வளமும் சித்திக்கும் என்பதும் ஆண்டாளின் அனுக்கிரஹமாக இருக்கிறது.

மாதம் மும்மாரிப் பெய்து நாடெல்லாம் ஷேமமாக இருக்க வேண்டும் என்று ஆண்டாள் ஆசைப்படுகிறாள். நோன்பு நோற்கிறவர்கள் ஓங்கி உலகளந்த உத்தமனாகிற திரிவிக்கிரமனின் பெயரை (அஷ்டாக்ஷர மஹாமந்திரத்தை) சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு நோன்பு நோற்றால் மாதத்திற்கு மூன்று மழை பொழியும். ஒருநாள் மழை பெய்து அத்தண்ணீர் பூமியில் ஒன்பது நாள் ஊற வேண்டும். அவ்வாறு மழை பொழிந்தால் நாட்டில் எந்தத் தீமையும் ஏற்படாது. வயல்களில் யானை போல் பருத்திருக்கும் கயல் மீன்கள் பயிர்களின் நடுவே செல்ல முடியாமல் மேலே துள்ளி எழுந்து மற்றோரிடத்தில் விழும். வயல்களில் தேங்கி இருக்கும் தண்ணீரில் குவளை மலர்கள் பூத்து மலர்ந்திருக்கும். தேனைப் பருகும் வண்டுகள் அந்த மலர்களிலுள்ள தேனைப் பருகிக்கொண்டே மயங்கி உறங்கும். திருவேங்கடமலைபோல் இருக்கும் பசுக்கள் உள்ள இடத்திற்குத் தயங்காமல் சென்று பால் கறக்கத் தொடங்கினால், வள்ளல் போன்ற பசுக்கள் குடம் குடமாகப் பாலைக் கொடுத்துக்கொண்டே இருக்கும். இவ்வாறு வளம் பெருகி நீங்காத செல்வம் நிறைந்திருக்கும் திருமந்திரத்தைச் சொல்லி, பகவானைப் பாடினால் திருவாய்ப்பாடியில் நீர்வளம், நிலவளம், பால்வளம் எல்லாம் பெருகும். லக்ஷ்மிகடாக்ஷம் பெருகி நிலைத்திருக்கும். பகவானின் திருப்பெயர் எதைத்தான் தராது? எல்லாவற்றையும் கொடுக்கும் என்கிறாள் ஆண்டாள். 


பாசுரம் 04
ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்த்தேரி
ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்
பாழியந் தோளுடைப் பத்மநாபன் கையில்
ஆழிபோல் மின்னி, வலம்புரிபோல் நின்று அதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய். 

பாசுர விளக்கம்:
மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர் நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.

ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, "ஆழிமழைக் கண்ணா" என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் "கண்ணா" என்ற வார்த்தையைப் போல! எனவே "பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக "கண்ணா" என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.


பாசுரம் 05
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்
தாயைக் குடல் விளக்கஞ் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய். 

பாசுர விளக்கம்:
வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர் குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.

உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் என்பது ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை. தேவகி தாய்க்கு கண்ணனை பெற்றதால் பெருமை. "ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்று அவள் பெருமைப்படுகிறாள். குழந்தைகள், பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இதன் உட்கருத்து.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக