வியாழன், 17 டிசம்பர், 2015

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை 21 - 25


பாசுரம் 21
ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
கறக்கும் நேரமெல்லாம் பாத்திரங்கள் நிரம்பி வழியும் வகையில் பாலைச் சுரக்கும் வள்ளல் தன்மை கொண்ட பசுக்களுக்கு உரிமையாளரான நந்தகோபனின் மகனே! கண்ணனே! நீ எழுவாயாக. வேதங்களால் போற்றப்படும் வலிமையானவனே! அந்த வேதங்களாலும் அறிய முடியாத பெரியவனே! உலகிற்கே ஒளிகாட்டும் சுடரே! துயில் எழுவாயாக! உன்னை எதிர்த்தவர்களெல்லாம் வலிமையிழந்து, உன் வாசலில் உன் பாதத்தில் விழ காத்துக் கிடப்பது போல, நாங்களும் உன் திருவடியைப் புகழ்ந்து பாட காத்திருக்கிறோம். எங்கள் வேண்டுகோளை ஏற்பாயாக.

மன்னாதி மன்னர்களெல்லாம் உன் காலில் விழ காத்துக் கிடப்பது உன்னிடமுள்ள பயத்தால்! ஆனால், நாங்கள் அவர்களைப் போல பயந்த சுபாவம் உள்ளவர்கள் அல்ல! நாங்கள் வா என்று அழைத்தால் நீ வந்தாக வேண்டும். வர மறுத்தால், உன்னை எங்கள் அன்பென்னும் கயிறால் கட்டிப் போட்டு விடுவோம். அப்போது, நீ தப்பவே முடியாது என்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். ஆம்...ஆண்டாள் மாலைக்குள் புதைந்து கிடந்த ஒரு தலைமுடியால் அவனைக் கட்டிப் போட்டு விட்டாளே! அந்த ரங்கநாதன் அவளிடம் வசமாக சிக்கிக் கொண்டானே! இதுதான் பக்தியின் உச்சநிலை. பகவானிடம் நம்மை அர்ப்பணித்து விட்டால், அவன் நம்மிடமிருந்து தப்பி ஓடமுடியாது என்பது இப்பாடலின் உட்கருத்து. 


பாசுரம் 22
அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டிற்கீழே
சங்கமிருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே
செங்கண் சிறுகச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல்
அங்கண் இரண்டுங்கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்து ஏல் ஓர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
கண்ணா! எங்களை விட உயர்ந்த வீரர்கள் இருக்கிறார்களா என தங்களைப் பற்றி பெருமையடித்துக் கொண்டவர்களும், இந்த பரந்த பூமியை ஆட்சி செய்தவர்களுமான அரசர்கள் மிகுந்த பணிவுடன் உன் பள்ளி கொண்டுள்ள கட்டிலைச் சுற்றிலும், சத்சங்கத்துக்கு வந்த பக்தர்கள் போல் காத்து நிற்கிறார்கள். அவர்களைப் போல் நாங்களும் உன் அருகில் நிற்கிறோம். எங்கள் மீது, கிண்கிணி என ஒலிக்கும் சிறுமணியின் வாய்போலவும், தாமரைப்பூ மெதுவாக மலர்வது போலவும், உன் சிவந்த தாமரைக் கண்களை சிறுகச் சிறுக திறந்து விழிக்கமாட்டாயா? சந்திரனும், சூரியனும் உதித்தது போல, அந்தக் கண்களைக் கொண்டு எங்களைப் பார்ப்பாயானால், எங்கள் மீதுள்ள எல்லா பாவங்களும் சாபங்களும் தீர்ந்து விடுமே!.

இறைவனின் கடைக்கண் பார்வை பட்டால் போதும். சாபங்கள் கருகிப்போகும். எப்படி அவனது பார்வையை நம் மீது திருப்புவது. மிக எளிதாக ஆண்டாள் பாடிய திருப்பாவையின் பாடல்களையும் மார்கழியில் மட்டுமல்ல! எந்நாளும் பக்தியுடன் படித்தால் போதுமே! அதற்கு அவகாசமில்லையா! அவள் சொல்லியிருக்கிறாளே! இந்த பாவையில் கோவிந்தா, விக்ரமா போன்ற எளிய பதங்களை... அவற்றைச் சொன்னாலே போதுமே! அவனது பார்வை பட்டுவிடும்.

இந்தப் பாசுரத்தில் கோபியர்கள் கண்ணனின் அருளைப் பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். கோபியர்களே! நீங்கள் எல்லோரும் வந்த காரணம் என்ன? என்று கண்ணன் கேட்கிறான். உன்னை விட்டுப் பிரிந்திருந்த சாபம் நீங்கவேண்டும். இனியும் அப்படி ஒருநிலை ஏற்படக்கூடாது. அழகு, விசாலம், போகப் பொருள்கள் நிறைந்த இந்த பூமியில் வாழும் அரசர்கள் தங்களது அபிமானம் இழந்து, உன்னுடைய அருள் நோக்கே வேண்டும் என்று கூட்டங் கூட்டமாக திருப்பள்ளி அறையின் வாசலில் நிற்பதுபோல், நாங்களும் ஸ்த்ரீத்வ அபிமானம் இழந்து வந்து நிற்கிறோம். உன்னை வந்து அடைவோமோ என்று எண்ணினோம், அடைந்துவிட்டோம். 

கிண்கிணியைப் போன்று இருக்கும் அழகிய தாமரைக் கண்ணால் எங்களை மெல்ல கடாக்ஷிக்க வேண்டும். வாடிய பயிரின் மேல் ஒரு பாட்டம் பெருமழை பொழிவதுபோல் இல்லாமல், மாத உபவாசிக்குப் புறச்சோறு இடுவதுபோல் கொஞ்சம் கொஞ்சமாகக் கடாக்ஷிக்க வேண்டும். ஒருவன், ஒருமாத காலம் பட்டினி இருந்தால், ஒரு மாதத்திற்குப் பிறகு, அவனுடைய உடலுக்கு உணவுச்சத்து பிடிப்பதற்கு, சோற்றை நன்கு அரைத்து உடம்பில் பூசுவார்களாம். இது முற்காலத்தில் செய்யும் வைத்தியம். இதனால் உடம்பில் சக்தி கொஞ்சம் கொஞ்சமாக வரும். அதுபோல் நீ சிறிது சிறிதாகப் பார்த்தால், உன்னை விட்டுப் பிரிந்திருக்கும் பிரிவாற்றாமை என்னும் நோய் நீங்கும். சூரியனையும் சந்திரனையும் போன்ற கண்களால் எங்களைக் கடாக்ஷித்தால் எங்கள் மீது இருக்கும் சாபமும் நீங்கும். 


பாசுரம் 23 
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரி மயிர்ப்பொங்க எப்பாடும் பேர்ந்து உதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமா போலே நீ பூவைப் பூவண்ணா உன்
கோயில் நின்று இங்ஙனே போந்தருளி, கோப்புடைய
சீரிய சிங்காசனத்திலிருந்து யாம் வந்த
காரியம் ஆராய்ந்து அருள் ஏல் ஓர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
மழைக்காலத்தில் மலையிலுள்ள குகையில் உறங்கும் பெருமை மிக்க சிங்கம் விழிக்கிறது. அதன் கண்களில் நெருப்பு பொறி பறக்கிறது. நாற்புறமும் நடமாடி பிடரி மயிரை சிலிர்த்து, பெருமையுடன் நிமிர்ந்து கர்ஜனையுடன் வெளியே கிளம்புகிறது. அதுபோல, காயாம்பூ நிறத்தையுடைய கண்ணனே! நீயும் வீரநடை போட்டு உன் கோயிலில் இருந்து வெளியேறி, இங்கே வந்து அருள் செய். வேலைப்பாடுகளைக் கொண்ட மிகச்சிறந்த சிம்மாசனத்தில் அமர்ந்து, நாங்கள் எதற்காக இங்கே வந்தோம் என்பதை அறிந்து, அந்த கோரிக்கைகளைப் பரிசீலனை செய்து நிறைவேற்றி அருள வேண்டுகிறோம்.

எதிரே இருப்பவன் கடவுள் என்பதற்காக வீட்டைக் கொடு, பொருளைக் கொடு, நகையைக் கொடு, வாகனத்தைக் கொடு...என நம் கோரிக்கைகளை ஆண்டவன் முன்னால் வைக்கக்கூடாது. அவை நமக்கு அமைய வேண்டுமென்ற விதியிருந்தால், நம் உழைப்பைப் பொறுத்து அவை இறைவனால் நமக்குத் தரப்பட்டு விடும். எனவே, நியாயமான கோரிக்கைகளையே இறைவனிடம் சொல்ல வேண்டும். இதைத்தான் ஆயர்குலப் பெண்கள் நாங்கள் கேட்பது நியாயம் எனத் தெரிந்தால் மட்டும் அதைக் கொடு எனக் கேட்கிறார்கள். அவர்கள் கேட்டது என்ன? அந்தக் கண்ணனையே கேட்டார்கள். அவனோடு கலந்து விட்டால் சோறு எதற்கு? வாகனம் எதற்கு? இதர வசதிகள் எதற்கு? அதற்கெல்லாம் மேலான பேரின்பமல்லவா கிடைக்கும். அதனால் அவனையே கேட்டார்கள் ஆயர்குலப் பெண்கள்.

கண்ணன் கோபியர்களை இன்னமும் உங்களுக்கு வேண்டியது என்ன? என்று கேட்க, உன்னுடைய நடையழகையும், வீற்றிருந்த திருக்கோலத்தையும் சேவிக்க வேண்டும். பழைய காலத்தில், மலைக்குகையில் ஓர் அசேதனப் பொருள்போல் ஒன்றும் அறியாமல் உறங்கிக் கொண்டிருக்கும் சீரிய சிங்கம், மழைக்காலம் முடிந்தவுடன், அறிவுபெற்று, கோபத்துடன் கண்ணைத் திறந்து, சுற்றும் முற்றும் பார்த்து, தன்னுடைய உடம்பில் படிந்திருக்கும் வேரிமயிர்கள் வாசனையைக் காட்டிக்கொண்டு எழுந்திருந்து, கால்களை முன்னும் பின்னும் நீட்டி மடக்கி, கர்ஜித்து வெளியில் வருவதுபோல், நீயும் சயன அறையிலிருந்து புறப்பட்டு உனக்குரிய சிங்காசனத்தில் அமர்ந்து கொள்ளவேண்டும். அப்போது, எங்களது தேவையைக் கூறுகிறோம். சொல்ல முடியாத குறைகளை நீயாகவே ஆராய்ந்து அருளவேண்டும் என்று வேண்டுகிறார்கள். கண்ணனுடைய நின்ற திருக்கோலத்தையும், நடையழகையும் காண்கிறார்கள்.


பாசுரம் 24
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
கொன்றடச்சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி
என்றென்றுன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கு ஏல் ஓர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
மகாபலி இந்த உலகத்தை கைப்பற்றிய காலத்தில், அதை மூன்றடிகளால் அளந்து உன்னுடையது என்று உணர்த்தியவனே! உன் திருவடிகளுக்கு வணக்கம். ராமாவதாரம் எடுத்தபோது, சீதையை மீட்க தெற்கிலுள்ள இலங்கைக்கு சென்று ராவணனை வெற்றி கொண்டவனே! உன் வீரத்துக்கு நமஸ்காரம். சக்கர வடிவில் வந்த சகடன் எனற அசுரனை ஒரே உதையில் வீழ்த்தியவனே! உன் புகழுக்கு வந்தனம். கன்று வடிவில் வந்த வத்சாசுரனை தடியாகக் கருதி, அவனை விளாமர வடிவில் வந்த கபித்தாசுரன் மீது எறிந்து அழித்தவனே! உன் கால்களில் அணிந்த வீரக்கழலுக்கு மங்களம் உண்டாகட்டும். கோவர்த்தன கிரியை குடையாக்கி ஆயர் குலத்தவரை இந்திரன் அனுப்பிய மழையில் இருந்து காத்தவனே! உன் இரக்க குணத்துக்கு தலை வணங்குகிறோம். பகைவர்கள் எவ்வளவு பலவான்களாயினும் அவர்களை உன் கையிலுள்ள வேலால் அழித்தவனே! அந்த வேலாயுதத்துக்கு நமஸ்காரம். உன் வீரச்செயல்களைப் பாடி, உன்னருளைப் பெறுவதற்கு, இப்போது நாங்கள் வந்துள்ளோம். எங்கள் மீது இரக்கம் காட்ட வேண்டுகிறோம்.

இந்த பாசுரம் மிக முக்கியமானது. இதை தினமும் நாம் பாராயணம் செய்யலாம். இதை "போற்றிப் பாசுரம்" என்பர். இந்த பாசுரத்தை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்து, கண்ணன் பாலகனாக இருந்த போது நிகழ்த்திய வீரச்செயல்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதன் மூலம் அவர்கள் தைரியத்தை வளர்த்துக் கொள்வார்கள். 


பாசுரம் 25
ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலான் ஆகித்தான் தீங்கு நினைத்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே உன்னை
அருத்தித்து வந்தொம் பறை தருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
தேவகியின் மைந்தனாக நள்ளிரவில் பிறந்தவனே! அன்று இரவே யசோதையிடம் ஒளிந்து வளர்வதற்காகச் சென்றவனே! அவ்வாறு மறைந்து வளர்வதைப் பொறுக்க முடியாத கம்சன் உன்னை அழிக்க வேண்டும் என்று நினைத்தான். அந்த கருத்து அழியும் வகையில், அவனது வயிற்றில் பயத்தால் ஏற்படும் நெருப்பை விளைவித்த உயர்ந்த குணங்களையுடைய திருமாலே! உனது அருளை யாசித்து நாங்கள் வந்தோம். அந்த அருளைத் தந்தாயானால், உனது விரும்பத்தக்க செல்வச் சிறப்பையும், பக்தர்களுக்காக நீ செய்த பணிகளையும் பாராட்டி நாங்கள் பாடுவோம். உனது பெருமையைப் பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.

பக்தன் பக்தி செலுத்தும் போது, இறைவன் அவனுக்கு சேவகனாகி விடுகிறான். தனது உயிருக்குயிரான பக்தன் பிரகலாதனுக்கும் அவனது தந்தை இரணியனுக்கும் வாதம் நடக்கிறது. உன் நாராயணன் எங்கே இருக்கிறான்? என்று இரணியன் கேட்க, பெருமாளுக்கு கை, கால் உதறி விடுகிறது. உடனே உலகிலுள்ள எல்லா ஜீவன்களுக்குள்ளும் அவன் சென்று விட்டான். ஒரு அணுவைக் கூட அவன் பாக்கி வைக்கவில்லை. பிரகலாதன் என்ன பதில் சொன்னாலும் அதற்குள் இருந்து வெளிப்பட வேண்டுமே என்ற பயத்தில் அவன் இருந்தான். அவன் "தூண்" என்று சொல்லவே, அதற்குள்ளும் மறைந்திருந்த பகவான், நரசிம்மமாய் வெளிப்பட்டார். பக்தனுக்கு அவர் செய்த சேவையைப் பார்த்தீர்களா! தன்னிடம் பக்தி செலுத்திய பாண்டவர்களுக்காக அமாவாசை நேரத்தையே மாற்றிய தயாள குணம் படைத்தவரல்லவா! இவற்றையெல்லாம் படித்தாலே நாம் அவனை அடைந்து விடலாம் என்பது இப்பாடலின் உட்கருத்து.

மழைக்காலமாகிய ஆவணி மாதத்தில் ரோகிணி நட்சத்திரத்தில் கம்சனுடைய சிறைச்சாலையில் தேவகிக்கு மகனாகப் பிறந்து, அந்த இரவில் ஒருவருக்கும் தெரியாமல் வசுதேவரால் எடுத்துச் செல்லப்பட்டு ஸ்ரீ நந்தகோபரின் வீட்டில், யசோதைக்கு மகனாய் வளர்ந்தாய். உனக்குத் தாய், தகப்பனார் என்று ஒருவரும் இல்லாத போதும், அவதாரத்துக்கு தேவகியை தாயாகவும், வசுதேவரை தகப்பனாகவும் கொண்டாய். கம்சனுக்குத் தெரியாமல் இவை நடந்தாலும், உன்னுடைய பிறப்பை அவனால் பொறுக்க முடியவில்லை. உனக்கு தீங்கு செய்ய நினைத்தான். பல அசுரர்களை ஏவினான். ஆனால் அவனது எண்ணம் நிறைவேறவில்லை. அவனுடைய வயிற்றில் எப்போதும் நெருப்பாக இருந்தாய். எங்கள் மீது அன்பு கொண்ட பெருமானே! நீ அந்தப் பறையைக் கொடுத்தால் வருத்தம் தீர்ந்து மகிழ்வோம் என்கிறார்கள்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக