புதன், 16 டிசம்பர், 2015

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை 16 - 20


பாடல் எண் : 16
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்து உடையாள்
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள் இட்டிடையின்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலை குலவி நம் தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழை ஏலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதி தேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ விடாமல் பொழிவாயாக.

தத்துவ விளக்கம்:
இங்கு சிவனின் அடியவர்களுக்கு உமையானவள் எவ்வாறு கருணைகாட்டி அருள் புரிவாள் என்பதை, மழையின் உவமை கொண்டு விளக்குவதோடு, மழை எப்படி எல்லோர்க்கும் பொழிகிறதோ அவ்வாறே, இறைவனும் எல்லா உயிர்களையும் உய்விக்கும்பொருட்டு, தன் கருணையைப் பொழிகின்றான் என்கிறார் மாணிக்கவாசகர்.


பாடல் எண் : 17
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம் நம்பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்து அருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோம் எங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு ஏலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
தேன் சிந்தும் மலர்களைச் சூடிய கருங்கூந்தலை உடைய பெண்களே! செந்தாமரைக் கண்ணனான நாராயணன், பிரம்மா, பிற தேவர்கள் யாரும் தராத இன்பத்தை அள்ளி வழங்க நம் தலைவனாகிய சிவபெருமான், இதோ! வீடுகள் தோறும் எழுந்தருளுகிறான். அவனது தாமரை போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் இறங்கி வருகிறான். அழகிய கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதமானவனும், நமது தலைவனுமான அந்தச் சிவனை வணங்கி நலம் பல பெறும் பொருட்டு, தாமரை மலர்கள் மிதக்கும் இந்த பொய்கையில் பாய்ந்து நீராடி அவன் தரிசனம் காண தயாராவோம்.

தத்துவ விளக்கம்:
அடியவரின் தூய்மையான அன்புக்கு ஆட்பட்டு, மிகவும் எளிமையான சேவகன் போல், அவர்களின் வீடு தோறும் வந்து, தேவர்களுக்கெல்லாம் கிடைக்கப்பெறாத இன்பத்தைத் தனது அடியவர்களுக்குத் தருகின்ற கருணை உள்ளவன் இறைவன் என்கிறார் மாணிக்கவாசகர்.


பாடல் எண் : 18
அண்ணா மலையான் அடிக்கமலம் சென்று இறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறு அற்றாற்போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாம் அகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல் பாடிப்
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்து ஆடு ஏலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும் விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி மறைந்தனவோ, அப்படி அண்ணாமலையாரின் திருவடியைப் பணிந்ததும், தேவர்களின் மணிமுடியிலுள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்தன. பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் என முப்பிரிவாகவும் திகழும் அவர் வானமாகவும், பூமியாகவும், இவையல்லாத பிற உலகங்களாகவும் திகழ்கிறார். கண்ணுக்கு இனிய அமுதம் போல் தோன்றும் அவரது சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி. பூக்கள் மிதக்கும் இந்தக் குளத்தில் பாய்ந்து நீராடுங்கள்.

தத்துவ விளக்கம்:
எப்படி கதிரவன் முன்னால், மற்ற விண்மீன்கள் ஒளி இழக்கின்றனவோ, அது போலவே இறைவனின் முன்னால் மற்ற பொருள்வகைச் செல்வங்கள் தங்களது முக்கியத்துவத்தை இழக்கின்றன, இதனை மனதிற்கொண்டு, பொருளின் மீது பற்றுக் கொள்ளாமல், இறை அருளின் மீது மனதைச் செலுத்த வேண்டும் என்ற கருத்தை உணர்த்துகிறார் மாணிக்கவாசகர்.


பாடல் எண் : 19
உன் கையில் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க
எம் கை உனக்கு அல்லாது எப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கு இப்பரிசே எமக்கு எம்கோன் நல்குதியேல்
எங்கு எழில் என் ஞாயிறு எமக்கு ஏலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
உன்னிடம் கொடுக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று ஒரு தந்தை தன் மகளை ஒருவனிடம் திருமணம் செய்து கொடுக்கும் போது சொல்லும் பழமொழி இருக்கிறது. அதன் காரணமாக, எங்களைத் திருமணம் செய்வோர் எப்படி இருக்க வேண்டும் என்று உன்னிடம் கேட்கும் உரிமையுடன் விண்ணப்பிக்கிறோம். எங்களைத் தழுவுவோர் உன் பக்தர்களாக மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் கைகள் உனக்கு மட்டுமே பணி செய்வதற்கு அவர்கள் அனுமதிப்பவர்களாய் இருக்க வேண்டும். எங்கள் பார்வையில் உனக்கு பணி செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும். பிற தீமைகள் எதுவும் பார்வையில் படவே கூடாது. இப்படி ஒரு பரிசை எம்பெருமானான நீ எங்களுக்கு தருவாயானால், சூரியன் எங்கே உதித்தால் எங்களுக்கென்ன?.

தத்துவ விளக்கம்:
அவனது அடியார்களுக்குத் தொண்டு செய்வதும், அவனது தாள் வணங்கியும், இரவும் பகலும் எப்போதும் அவன் நினைவாகவும், பார்க்கும் பொருளில் எல்லாம் அவன் தன்மையைப் பார்க்கும் நிலையையும் அடைவது தான் பிறவியின் பயன் ஆகும் என்பதை இப்பாடல் வழியாக உணர்த்துகிறார் மாணிக்கவாசகர்.


பாடல் எண் : 20
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றி யாம் உய்ய ஆட்கொண்டு அருளும் பொன்மலர்கள்
போற்றி யாம் மார்கழி நீராட ஏலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாதமலர்களை வணங்குகிறோம். எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள உன் மென்மையான திருவடிகளை பணிகின்றோம். எல்லா உயிர்களையும் படைக்கின்ற உன் பொற்பாதங்களை சரணடைகின்றோம். எல்லா உயிர்களுக்கும் வாழும் காலத்தில் இன்பமான வாழ்வு தரும் மலரடிகளை பிரார்த்திக்கிறோம். உயிர்களை அழித்து இறுதிக் காலத்தை தருகின்ற இணையற்ற காலடிகளைப் போற்றுகின்றோம். திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை பாதங்களைக் காண்பதில் பெருமிதமடைகின்றோம். எங்களுக்கு பிறப்பற்ற நிலை தரும் பொன் போன்ற திருவடிகளை பற்றுகின்றோம். இவ்வாறு உன்னோடு ஐக்கியமாகி, உன் நினைவுகளுடன் நீர் நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.

தத்துவ விளக்கம்:
இந்தப் பிறவிப் பெருங்கடலைக் கடக்கும் வழிகளை இவ்வாறு 20 பாடல்களின் மூலம் உணர்த்தும் மாணிக்கவாசகர், முத்தாய்ப்பாக, "தான்"  என்னும் ஆணவம் ஒழித்து, அவனுடைய பாதங்களை முழுமையாகச் சரணடைந்து விடுவதே எல்லா வழிகளிலும் ஏற்ற வழியென்பதைக் குறிப்பாக உணர்த்துகிறார்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| --- திருவெம்பாவை  திருப்பதிகம் முற்றிற்று --- ||


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக