புதன், 16 டிசம்பர், 2015

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை 11 - 15


பாடல் எண் : 11
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழி அடியோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல் போல்
செய்யா வெண்ணீறு ஆடி செல்வா சிறு மருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயா நீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகை எல்லாம் உய்ந்து ஒழிந்தோம்
எய்யாமற் காப்பாய் எமை ஏலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
சிவபெருமானே! உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில் முகேர் என சப்தம் எழுப்பி குதித்து, தண்ணீரைக் குடைந்து நீந்தியபடியே உன் திருவடிகளை எண்ணிப் பாடினோம். வழி வழியாக இந்த பாவை நோன்பை நிறைவேற்றி வருவதை நீ அறிவாய். சிவந்த நெருப்பைப் போன்றவனே! உடலெங்கும் திருநீறு அணிந்தவனே! செல்வத்தின் அதிபதியே! சிறிய இடையையும், மையிட்ட அழகிய கண்களையும் உடைய பார்வதி தேவியின் மணாளனே! ஐயனே! நீ இந்த உயிர்களை ஆட்கொண்டதும் அவை என்னவெல்லாம் நன்மையடையுமோ, அவை அனைத்தையும் அடைந்து விட்ட உணர்வு உன்னைப் பாடினாலே எங்களுக்கு கிடைத்து விடுகிறது! இந்த பேரின்பநிலை மறைந்து விடாமல் என்றும் நிலைத்திருக்க அருள்செய்வாயாக!

தத்துவ விளக்கம்:
வாழ்க்கை என்ற குளத்தில் நாம் அனைவரும் குதித்து நீந்திக் கொண்டு இருக்கிறோம். இறைவனுடைய திருவடிகளை எப்போதும் சிந்தையில் நிறுத்தி நீந்தினால், அவனால் நாம் ஆட்கொள்ளப்பட்டு, எந்தவிதத் துன்பமும் அடையாமல் கரையேறலாம் என்ற கருத்தை வலியுறுத்துகிறார் மாணிக்கவாசகர்.


பாடல் எண் : 12
ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தம் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்
ஆர்ப்ப அரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்ப
பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனை நீர் ஆடு ஏலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், கையில் அக்னியுடன் நடனமாடும் கலைஞனும், வானத்தையும், பூலோகத்தையும், பிற உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான தன்மைகளைக் கொண்டவர் நம் சிவபெருமான். அவரை, நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, "சிவாயநம" என்னும் மந்திரம் சொல்லி, அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.

தத்துவ விளக்கம்:
நீர், ஆகாயம் (வானம்), நிலம் (குவலயம்), தீ, காற்று (ஒலி) ஆகிய ஐம்பூதங்களையும் தன்னுள் அடக்கி, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் ஒரு விளையாட்டாகக் கொண்டுள்ள அந்த இறைவனின் திருவடிகளைப் பற்றி நிற்க வேண்டும் என்கிறார் மாணிக்கவாசகர்.


பாடல் எண் : 13
பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம் கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்து ஆர்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடு ஏலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
கரிய நிற குவளை மலர்கள் குளத்தின் நடுவிலே உள்ளன. அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன. நீர் காக்கைகள் நீரில் மிதக்கின்றன. இந்தக் குளத்தில் தங்கள் அழுக்கை களைய மக்கள் வருகிறார்கள். அவர்கள் "நமசிவாய" என சொல்லி சப்தம் எழுப்புகிறார்கள். இந்தக் காரணங்களால், இந்தக் குளம் எங்கள் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது. தாமரை மலர்கள் நிறைந்த இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் கலகலவென ஒலியெழுப்ப, மார்புகள் விம்ம, பாய்ந்து நடுப்பகுதிக்கு சென்று நீராடுவோம்.

தத்துவ விளக்கம்:
ஒரு குளமானது தன்னைத் தேடி வந்தவர்களின் அழுக்குகளை நீக்கிக் களைவதுபோல, இறைவனும் தன்னை எண்ணி இறைஞ்சி நிற்பவரின் ஆணவ / பாவ அழுக்குக்களை நீக்குகிறான்.


பாடல் எண் : 14
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள் பாடி அப்பொருள்ஆ மாபாடிச்
சோதி திறம் பாடிச் சூழ்கொன்றைத் தார் பாடி
ஆதி திறம் பாடி அந்தம்ஆ மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்து எடுத்த பெய்வளை தன்
பாதத் திறம் பாடி ஆடு ஏலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
ஆண்கள் அணிந்துள்ள காதணிகள் தண்ணீரில் ஆட, அவர்களின் தங்க நகைகள் ஆட, பெண்களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில் மலர்கள் அணிந்திருந்ததால் ஏற்பட்ட வாசனை கருதி அதை முகர வண்டுகள் ஆட, குளிர்ந்த நீரில் ஆடுங்கள். அவ்வாறு நீராடும் போது சிற்றம்பலத்தில் நடனமிடும் சிவபெருமானின் புகழ் பாடுங்கள். வேதத்தின் பொருளையும், வேதத்தின் பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும் சொல்லி நீராடுங்கள். ஜோதி வடிவாய் திருவண்ணாமலையிலே காட்சி தரும் அந்த சிவனின் மாபெரும் விருத்தாத்தங்களையெல்லாம் சொல்லுங்கள். அவனது மார்பில் தவழும் கொன்றை மாலையின் மகிமை பற்றி பேசுங்கள். முதலும் முடிவும் இல்லாத அந்த இறைவனின் புகழைப் பாடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மைப் பிரிக்கும் வளையல்கள் அணிந்த தாயுமானவாய் விளங்கும் அந்த சிவனின் பாதமலர்களைப் பாடி நீராடுங்கள்.

தத்துவ விளக்கம்:
வேதமாகவும், வேதத்தின் உட்பொருளாகவும், முதலாகவும், முடிவாகவும் உள்ள அவன் தாள் வணங்கி, அறியாமை இருளில் இருந்து வெளியேற வேண்டும் என்கிறார் மாணிக்கவாசகர்.


பாடல் எண் : 15
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தம் களி கூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண் பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப் பூம்புனல் பாய்ந்து ஆடு ஏலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
அழகிய மார்பு கச்சையும், ஆபரணங்களும் அணிந்த பெண்களே! நம் தோழி எம்பெருமானே என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள். அவரது சிறப்புகளை நிறுத்தாமல் பேசுவாள். மனம் மகிழ இவ்வாறு அவள் அவரது சிறப்புகளைப் பேசுவதால் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும். அந்த பக்திப் பரவச உலகில் இருந்து அவளால் இந்த பூமிக்கு மீண்டும் வரவே இயலாத நிலை ஏற்படும். அவள் விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள். சிவபெருமான் மட்டுமே தனது தெய்வம் என்ற நிலையில் பித்துப் பிடித்து நிற்பாள். அவளைப் போலவே நம்மையும் ஆட்கொள்ளக் காத்திருக்கும் வித்தகனான சிவனின் தாள் பணிந்து பாடுவோம். பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.

தத்துவ விளக்கம்:
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட ஒருவரின் நிலையான –  எல்லாப் புலன்களும் அவனை நோக்கியே நகர்ந்து போகும் பித்தான நிலை –  எப்படி இருக்கும் என்பதை, இங்கு மாணிக்கவாசகர் காட்டுகிறார்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக