புதன், 16 டிசம்பர், 2015

மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை 06 - 10


பாடல் எண் : 06
மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசை பகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டு அருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடு ஏலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன் என்றாய். ஆனால், நாங்கள் வந்து உன்னை எழுப்பும்படியாகி விட்டது. உன் சொல் போன திசை எங்கே? மேலும், சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா? உனக்கு இன்னும் விடியவில்லையா? வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர்களும் அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே உடனே எழுந்து நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில் நம் தலைவனைப் புகழ்ந்து பாடு.

தத்துவ விளக்கம்:
மனம் எப்போதும் உறுதியற்ற நிலைப்பாடுகளை எடுக்கும். "நாளை முதல் நான் உறுதியாக இறைவனைப் பற்றி நிற்பேன்" என்று சொல்லும். மறு நாளே, சோம்பலில் தோய்ந்து, தன்னுடைய முடிவுகளைத் தானே பின்பற்றாது. இவ்வாறான நிலையற்ற மனத்தை நம்பிக் கெடாமல் எப்போதும் இறைமீது சித்தத்தைச் செலுத்த வேண்டும் என்று கூறுகிறார் மாணிக்கவாசகர்.


பாடல் எண் : 07
அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற்கு அரியான் ஒருவன் இரும் சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவன் என்றே வாய் திறப்பாய்
தென்னா என்னா முன்னம் தீ சேர் மெழுகு ஒப்பாய்
என்னானை என் அரையன் இன் அமுது என்று எல்லோமும்
சொன்னோம் கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ
வன் நெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசு ஏலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே "சிவ சிவ" என்பாயே! அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில் பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சிவசப்படுவாயே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம். இதையெல்லாம் கேட்டும், இன்று உன் உறக்கத்துக்கு காரணம் என்ன? பெண்ணே! பெண்களின் நெஞ்சம் இறுகிப்போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருக்கிறாய். அந்த தூக்கத்தை நீ என்ன ஒருபரிசாகக் கருதுகிறாயா?.

தத்துவ விளக்கம்:
தேவரே ஆனாலும், ஊனும் உள்ளமும் உருகி வழிபட்டால் மட்டுமே இறைவன் காணக் கிடைப்பான். அவ்வாறிருக்கையில் இறைவனை அடைய எந்த முயற்சியும் செய்யாது சும்மா சோம்பிக் கிடப்பதால் பயன் ஏதும் இல்லை என்கிறார் மாணிக்கவாசகர்.


பாடல் எண் : 08
கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
தோழியை எழுப்ப வந்த பெண்கள், அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன. நம் அண்ணாமலையார் கோயிலில் வெண் சங்குகள் முழங்குகின்றன. இந்த இனிய வேளையில், உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளை பாடுகின்றோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய். இந்த உறக்கத்துக்கு சொந்தமானவளே! இன்னும் பேசமாட்டேன் என்கிறாயே! வாழ்க நீ! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவபக்தியைப் பற்றி தெரியுமல்லவா? (அவர் வராக வடிவமெடுத்து சிவனின் திருவடி காணச்சென்றவர்). அப்படிப்பட்ட பெருமையுடைய உலகத்துக்கே தலைவனான சிவனை, ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படு.

தத்துவ விளக்கம்:
மனிதனைவிட அறிவில் குறைவான உயிரினங்கள் தங்களின் இயல்பு மாறாமல் தம் கடமைகளைச் செய்கின்றன. ஆனால் இறைவனை உணர்வதற்காகவே, அறிவு கொடுக்கப்பட்ட மனிதன் அதனைப் பயன்படுத்தாது மாயைக்குள் ஆழ்ந்து கிடக்கிறான்.


பாடல் எண் : 09
முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீர் அடியோம்
உன்னடியார் தாள் பணிவோம் ஆங்கு அவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம் கணவர் ஆவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
கோடி வருடங்களுக்கும் முற்பட்ட பழமையான பொருள் இது என்று சொல்லப்படும் பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே! இன்னும் லட்சம் ஆண்டுகள் கழித்து இப்படித்தான் இருக்கும் இந்த உலகம் என்று கணிக்கப்படும் புதுமைக்கெல்லாம் புதுமையான சிவனே! உன்னை தலைவனாகக் கொண்ட நாங்கள், உனது அடியார்களுக்கு மட்டுமே பணிவோம். அவர்களுக்கே தொண்டு செய்வோம். உன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்கு கணவராக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாகக் கருதி, மிகவும் கீழ்ப்படிதலுடன் பணி செய்வோம். இந்த பிரார்த்தனையை மட்டும் நீ ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையைப் பெறுவோம். இவ்வாறு எழுந்து நீராடி கோயிலுக்கு வந்த பெண்கள் இறைவனை நோக்கி இவ்வாறு வழிபடுகின்றனர்.

தத்துவ விளக்கம்:
இறைவனை அடைவதற்கான எளிய வழி, அவனுடைய அடியார்க்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்துத் தொண்டு செய்வது தான் என்பதை உணர்த்துகிறார் மாணிக்கவாசகர்.


பாடல் எண் : 10
பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதம் முதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டர் உளன்
கோதில் குலத்து அரன் தன் கோயில் பிணாப்பிள்ளைகாள்
ஏது அவன் ஊர் ஏது அவன் பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏது அவனைப் பாடும் பரிசு ஏலோர் எம்பாவாய். 

பாடல் விளக்கம்‬:
தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப்பாதங்கள் ஏழுபாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கிறது. பல்வேறு மலர்களை அணியும் திருமுடியானது வானத்தின் எல்லைகளைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. சக்தியை மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது. யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன். ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு ஊர் எது? அவனது பெயர் என்ன? யார் அவனது உறவினர்கள்? யார் அவனது பக்கத்து வீட்டுக்காரர்கள்? எந்தப் பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும்? சொல்லத் தெரியவில்லையே!. கோயிலில் பணி செய்து கொண்டிருக்கும் சிறு பெண்களை நோக்கி இவ்வாறு கேட்கின்றனர்.

தத்துவ விளக்கம்:
இறைவன் நம் அறிவின் அளவீடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். அதே நேரத்தில் ஆணவம் இல்லாமல் தூய அன்பு செலுத்தினால், நம் தோழனாகி, நம் உள்ளத்தில் குடி கொள்வான்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருச்சிற்றம்பலம் ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக