வியாழன், 17 டிசம்பர், 2015

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை 11 - 15


பாசுரம் 11
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறல் அழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லோரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக்கு உறங்கும் பொருள் ஏல் ஓர் எம்பாவாய். 

பாசுர விளக்கம்:
கன்றுகளோடு கூடிய பசுக்களிடமிருந்து பால் கறப்பவனாகவும், தங்களைப் பகைத்தவர்களை எதிர்த்து நின்று போரிடும் தன்மையுடையவனும், மாசுமருவற்றவனுமான கோபாலனை தழுவத் துடிக்கின்ற பொற்கொடியே! புற்றில் இருக்கும் பாம்பின் படத்தைப் போன்ற அல்குலை உடைய மயில் போன்றவளே! நம் சுற்றுப்புறத்திலுள்ள எல்லாத் தோழியரும் உன் வீட்டு வாசலில் வந்து கூடிவிட்டார்கள். அவர்கள் மேகவண்ணனாகிய கண்ணனைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருக்கிறார்கள். செல்வத்தையும், பெண்மையையும் புனிதமாய் காப்பவளே! இதையெல்லாம் கேட்டும் அசையாமலும், பேசாமலும் உறங்கிக்கொண்டிருக்கிறாயே! அர்த்தமற்ற இந்த உறக்கத்தினால் உனக்கு என்ன பலன் கிடைக்கப் போகிறது?.

நேரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தோழியோ எழுந்து வந்தபாடில்லை! நாமாக இருந்தால் என்ன செய்திருப்போம்? அவளை விட்டு விட்டு, நீராடச் சென்றிருப்போம். ஆனால், பக்தி நெறிக்கு இது அழகல்ல. பிறரை விட்டு விட்டு, தான் மட்டும் இறைவனை அடைய முயன்றால் அது நடக்காத ஒன்று. எல்லோருமாய் இறைவனை நாட வேண்டும், அவன் புகழ் பேச வேண்டும். அப்போது தான் அவனருள் கிடைக்கும். இதனால் தான் கூட்டுப் பிரார்த்தனைக்கு மகத்துவம் அதிகமாக இருக்கிறது.


பாசுரம் 12
கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசல் கடை பற்றி
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்
அனைத்து இல்லத்தாரும் அறிந்து ஏல் ஓர் எம்பாவாய். 

பாசுர விளக்கம்:
பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?.

எருமைகள் பால் சொரிந்து உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள், அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்பு கிறார்களாம் இந்தப் பாடலில். தலையிலோ பனி பெய்கிறது. மார்கழியில் எழுந்து குளிர்தாங்காமல் வெந்நீரில் குளிப்பவர்கள், இவர்கள் படும் கஷ்டத்தை உணர வேண்டும். கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி, மேலே பனியின் குளிர்ச்சி, இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய எத்தனிக்கிறார்கள் இவர்கள். எவ்வளவு சிரமப் பட்டேனும் ஒருவர் விடாமல் எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.


பாசுரம் 13
புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண்! போது அரிக்கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்து ஏல் ஓர் எம்பாவாய். 

பாசுர விளக்கம்:
பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடிய படியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது. கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல் நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.

"கள்ளம் தவிர்ந்து" என்கிறாள் ஆண்டாள். தூக்கம் ஒரு திருட்டுத்தனம். பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல! நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்! அதிலும், பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும் நமக்கு நாமே செய்யும் திருட்டு தான். வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலமே என நினைக்கக் கூடாது. அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும். சில நேரங்களில் பாட முடியாமலே போய்விடும். இந்தப் பாடல் வெளியாகும் பத்திரிகையைப் பிடிக்க முடியாமல் கைகள் நடுங்கும். அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்? இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?.

கண்ணழகு மிகுந்தவன் கண்ணன். அவனைத் தாமரைக் கண்ணன் என்றும் கூறுவார்கள். கண்ணனையும் இராமனையும் சேர்த்துப் பாட இசைந்து, இப் பாடலில் "புள்ளின் வாய்க் கீண்டானை" என்று கண்ணனையும், "பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானை" என்று இராமனையும் பாடினார்கள். கண்ணன் மாடுகளை மேய்த்துக் கொண்டு ஒரு நீர் நிலைக்குச் செல்லும்போது, கம்சனால் ஏவப்பட்ட ஓர் அசுரன் கொக்கு வடிவத்தில் இருந்துகொண்டு கண்ணனருகில் ஓடிவந்தான். கண்ணன் அந்தப் பகாசுரன் மீது பாய்ந்து அதன் அலகுகளை இரண்டாகப் பிளந்து அவனைக் கொன்ற நிகழ்ச்சியையும், ராமன், பொல்லாவரக்கனான ராவணனை எளிதில் அழித்த வீர சரித்திரத்தையும் பாடிக்கொண்டே எல்லாப் பெண்களும், ஒன்று சேரும் இடமாகிய பாவைக் களத்திற்குச் சென்றுவிட்டார்கள். வானத்தில் வியாழன் நட்சத்திரம் மறைந்து வெள்ளியும் தோன்றிவிட்டது. பறவைகளும் சிலம்புகின்றன. இத்தகைய நல்ல வேளையில் யமுனையாற்றில் குள்ளக்குளிர அமிழ்ந்து நீராடாமல் படுத்திருக்கிறாயே! இது ஒரு நன்னாள்! தனிமையில் கொள்ளும் இறையின்பமும் கள்ளம். இப்படிப்பட்ட கள்ளம் தவிர்த்து எங்களோடு சேர்ந்து கண்ணனை அனுபவிக்கலாம் எழுந்து வா! என்று அழைக்கிறார்கள் என்று இப்பாசுரம் கூறுகிறது.


பாசுரம் 14
உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கொயில் சங்டகிடுவான் போகின்றார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு ஏல் ஓர் எம்பாவாய். 

பாசுர விளக்கம்:
எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே! 

கொடுத்த வாக்கை தவற விடவே கூடாது. வாக்கு கொடுப்பது மிக எளிது. அதைக் காப்பாற்ற முடியுமா என தெரிந்து பேச வேண்டும். வாக்கு கொடுத்து விட்டு பிறரை ஏமாற்றுபவர்கள், கொஞ்சம் கூட வெட்கமின்றித் திரிகிறார்களே என ஆண்டாள் வருந்துகிறாள். நாக்கு சரியானதை மட்டுமே பேச வேண்டும், சொன்னதைச் செய்ய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

எல்லோருக்கும் முன்னதாகவே தான் எழுந்திருந்து எங்களை எழுப்புவதாகச் சொல்லிவிட்டு, எல்லோரும் வந்து எழுப்பும்படி படுத்திருக்கும் ஓர் ஆயர் மகளை நங்காய்! நாணாதாய்! என்றெல்லாம் சொல்லி எழுப்புகிறார்கள் தோழியர்கள். கதிரவன் தோன்றியதும் செங்கழுநீர் மலர் மலர்ந்து, ஆம்பல் வாய் மூடிக் கொள்வதை ஓரிடத்தில் பார்த்த பெண்கள், அதையே அனுமான ப்ரமாணமாகக் கொண்டு, உங்கள் வீட்டுப் புழக்கடையில் உள்ள வாவியில், செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின என்றும், செங்கற் பொடியின் நிறத்தைப் போன்று செந்நிறமுடைய ஆடையை அணிந்த துறவியர் சத்துவகுணம் நிறைந்த விடியற்காலையை உணர்த்துவதற்காகச் சங்கு ஒலிக்கத் தாங்கள் தங்கள் கோயிலுக்குச் சென்றுவிட்டார்கள். 

சிலர் சென்றுகொண்டு இருக்கிறார்கள் என்று கூறி, வாய்ச்சொல்லில் வல்லவளே எங்களை எழுப்புவதாகச் சொன்னாயே தவிர செயலில் காட்டவில்லையே! இதற்கு நீ வெட்கப்படுவதாகவும் தெரியவில்லை! ஆனால், நீ பேச்சில் வல்லவள், அனுமன் முதன் முதலில் ராமனைச் சந்தித்தபோது அவனோடு சிறிது உரையாடினான். அவனுடைய பேச்சில் ராமன் தன் மனதைப் பறிகொடுத்தான். 

நீயும் உன் சொற்களால் கண்ணனின் மனதைக் கவரக்கூடியவள். பெண்களில் சிறந்தவளே! கண்ணன் அன்புமிக்க அடியார்களுக்கு நான்கு கைகளைக் கொண்டவனாகவே காட்சியளிப்பான்; பகைவர்களுக்குக் காட்சியளிக்கும்போது இரண்டு கைகளை உடையவனாகவே தோன்றுவான். கண்ணன் கமலக்கண்ணன்! அவனுடைய கண்ணழகையும், மிகவும் ஒளிபொருந்திய திருச்சக்கரத்தையும், செங்கமல நாண்மலர்மேல் தேன் நுகரும் அன்னம் போன்ற வெள்ளை விளிசங்கினையும் ஏந்தி இருக்கும் அழகோடு சேர்த்துப் பாடுவதற்கு எழுந்து வாராய்! என்று எழுப்புகிறார்கள். ஒவ்வொருவரும் விடியற்காலையிலே உறங்கி எழுந்தவுடன் இறைவனைப் பக்தியோடு நினைப்பதும், அவன் பெருமைகளைப் பாடுவதும் சிறந்த செயலாகும். அது வாழ்க்கையை ஒளிர்விக்கும்.


பாசுரம் 15
எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ
சில்லென்று அழையேன் மின் நங்கைமீர் போதருகின்றேன்
வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும்
வல்லீர்கள் நீங்களே நான் தான் ஆயிடுக
ஒல்லை நீ போதாய் உனக்கு என்ன வேறு உடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக் கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயானை பாடு ஏல் ஓர் எம்பாவாய். 
பாசுர விளக்கம்:
ஏலே என் தோழியே! இளமைக் கிளியே! நாங்களெல்லாம் உனக்காக இவ்வளவு நேரம் காத்திருந்தும், இப்படியெல்லாம் அழைத்தும் உறங்குகிறாயே? என்று சற்று கடுமையாகவே தோழிகள் அவளை அழைத்தனர். அப்போது அந்த தோழி, கோபத்துடன் என்னை அழைக்காதீர்கள்! இதோ வந்து விடுகிறேன், என்கிறாள்.

உடனே தோழிகள், உன்னுடைய வார்த்தைகள் மிக நன்றாக இருக்கிறது. இவ்வளவு நேரம் தூங்கிவிட்டு இப்போது எங்களிடம் கோபிக்காதே என்கிறாயே, என்று சிடுசிடுத்தனர். அப்போது அவள், சரி..சரி...எனக்கு பேசத்தெரியவில்லை. நீங்களே பேச்சில் திறமைசாலிகளாய் இருங்கள். நான் ஏமாற்றுக்காரியாக இருந்து விட்டுப் போகிறேன், என்கிறாள். அடியே! நாங்களெல்லாம் முன்னமே எழுந்து வர வேண்டும். உனக்காக காத்திருக்க வேண்டும். அப்படியென்ன எங்களிடமில்லாத சிறப்பு உனக்கு இருக்கிறது? என்று கடிந்து கொள்கிறார்கள். அவளும் சண்டைக்காரி. பேச்சை விட மறுக்கிறாள். என்னவோ நான் மட்டும் எழாதது போல் பேசுகிறீர்களே! எல்லாரும் வந்துவிட்டார்களா? என்கிறாள். தோழிகள் அவளிடம், நீயே வெளியே வந்து இங்கிருப்போரை எண்ணிப் பார். வலிமை பொருந்திய குவலயாபீடம் என்னும் யானையை அழித்தவனும், எதிரிகளை வேட்டையாடும் திறம் கொண்டவனுமான மாயக்கண்ணனை வணங்கி மகிழ உடனே வருவாய், என்கிறார்கள்.

ஒரு பாடலை இருதரப்பார் பாடுவது போல், அவர்களின் பெயரைக் குறிப்பிடாமலே இனிமைபட பாடியிருக்கிறாள் ஆண்டாள். பெண்களுக்கு பேசக்கற்றுத்தரவா வேண்டும்! இந்தப் பாடலில் ஒரு பெண்ணை மற்ற பெண்கள் கலாய்க்கும் படியான ஒரு சூழலை நகைச்சுவை ததும்ப பாடியிருக்கிறாள். படிக்கப்படிக்க சர்க்கரைத் துண்டாய் இனிக்கும் பாடல் இது. இந்தப் பாட்டுடன் தோழியை எழுப்பும் படலம் முடிந்து விடுகிறது.

அடியார்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கும் கூட்டத்தைக் காணவேண்டும் என்று ஆசைப்படுகிறவள் ஓர் ஆயர்மகள். அப்படிப்பட்டவளை இப் பாசுரத்தில் எழுப்புகிறார்கள் தோழியர்கள். ஏனைய பாசுரங்கள் போல் இல்லாமல் இந்தப் பாசுரம் உரையாடல் நடையில் அமைந்துள்ளது. தோழியர்கள் இவளுடைய வீட்டுக்கு வரும்போது, இவள் இனிய குரலில் கண்ணனைப் பாடிக்கொண்டிருப்பதைக் கண்டார்கள். வந்தவர்கள் வந்த நோக்கத்தை மறந்து இவளுடைய அழகிலும் இசையிலும் மனதைப் பறிகொடுத்து, "எல்லே இளங்கிளியே!" என்று புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கும் வேளையில், தோழியர் எழுப்புவது தன் செயலுக்கு இடையூறு என்று நினைத்த அப்பெண் "சில்" என்று அழைக்காதீர்கள்! நங்கைமீர்! இதோ வந்துகொண்டிருக்கிறேன் என்று சினத்துடன் பதில் கூறினாள்.

இவள் கூறியதைக் கேட்ட தோழியர், "நீ இவ்வாறு கடுமையாகப் பேசுவாய் என்பது எங்களுக்கு வெகுநாள்களாகவே தெரியும்' என்றார்கள். கடுமையாகப் பேசுவதில் நீங்களே வல்லவர்கள் என்று மிகக் கடுமையாகச் சொன்ன ஆயர்மகள், அடியார்களோடு வாதிடக்கூடாது என்று கூறப்படுவதால் கடுமையைக் குறைத்துக்கொண்டு, "நானே பேச்சில் வல்லவளாக இருந்துவிட்டுப் போகிறேன்" என்று கூறி அடங்கிவிட்டாள். அப்படியாகில் "எங்களோடு சேர்வதைவிட நீ என்ன பெரிய வாய்ப்பை எதிர்பார்க்கிறாய்! விரைவாக வந்துசேர்" என்றார்கள் தோழியர்கள். எல்லாரும் வந்தனரா? என்றாள் படுத்திருப்பவள். வந்துவிட்டனர் நீ வந்து ஒவ்வொருவராக எண்ணிப் பார்த்துக்கொள்! வலிமை மிக்க குவலயாபீடம் என்கிற யானையை அழித்தவனும், பகைவர்களின் பகையை நீக்கவல்லவனும் முதலில் கோபியர்களுக்குத் தோற்று, பிறகு அவர்களைத் தோற்கடிப்பவனுமாகிய மாயனைப் பாட எழுந்துவாராய் என்று அழைக்கிறார்கள்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக