வியாழன், 17 டிசம்பர், 2015

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை 16 - 20


பாசுரம் 16
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள் திறவாய்
ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயில் எழப் பாடுவான்
வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ
நேய நிலைக் கதவம் நீக்கு ஏல் ஓர் எம்பாவாய். 

பாசுர விளக்கம்:
எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். அதெல்லாம் முடியாது என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.

ஒருவர் ஒரு செயலைச் செய்யப் போவதாக தெரிந்த ஒருவரிடம் சொல்கிறார். ஒருவேளை, அது அவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கூட, ஆரம்பத்திலேயே, இதைச் செய்யாதே, நீ செய்யப் போவது உருப்படவா போகுது போன்ற அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. "அப்படியா? என்று ஆரம்பித்து, செய்யப்போகும் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பின், "இப்படி செய்தால் நன்றாக இருக்குமே என்று சாந்தமாக அறிவுரை சொல்லலாம். சொற்கள் மனித வாழ்வில் மிக முக்கியமானவை என்று ஆண்டாள் இப்பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறாள்.

கோபியர்கள் எல்லோருமாகச் சேர்ந்து, கண்ணனை எழுப்புவதற்காக ஸ்ரீ நந்தகோபரின் மாளிகைக்குச் செல்கிறார்கள். அங்கு சென்று கோயில் காப்பானையும், வாயில் காப்பானையும் எழுப்புகிறார்கள். இறைவன் இருப்பிடம் கோயில். எங்களுக்கு நாயகனாய் இருக்கும் நந்தகோபருடைய கோயிலைக் காப்பவனே! எழுந்திராய்! என்று எழுப்பி உள்ளே செல்கிறார்கள். கொடிகள் கட்டியிருக்கும் வாயில் காப்பானே! நவரத்தின மணிகளால் இழைக்கப்பட்ட கதவின் தாழ்ப்பாளைத் திறந்து எங்களை உள்ளே விடு. நாங்கள் எல்லோரும் ஆயர் சிறுமியர்கள்! எங்களுடைய நோன்புக்குரிய பறையை நேற்றே கொடுப்பதாகக் கண்ணன் கூறியிருக்கிறான். நாங்கள் அகத்தூய்மை, புறத்தூய்மையுடன் வந்திருக்கிறோம். திருப்பள்ளியெழுச்சி பாட வந்திருக்கிறோம். முதன் முதலில், நாங்கள் விரும்பும் கோரிக்கையை மறுத்துவிடாதே! ஒன்றோடொன்று பிணைந்திருக்கும் கதவுகளை நீ திறப்பாயாக! என்கிறார்கள். கோயிலுக்குப் போகும் போது ஒருவரை தடுக்கக்கூடாது.


பாசுரம் 17
அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே
எம்பெருமாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே! உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேல் ஓர் எம்பாவாய். 

பாசுர விளக்கம்:
ஆடைகளையும், குளிர்ந்த நீரையும், உணவும் பிறர் திருப்திப்படும் அளவுக்கு தர்மம் செய்யும் எங்கள் தலைவரான நந்தகோபரே! தாங்கள் எழுந்தருள வேண்டும். கொடிபோன்ற இடைகளையுடைய பெண்களுக்கு எல்லாம் தலைவியான இளகிய மனம் கொண்ட யசோதையே! மங்களகரமான தீபம் போன்ற முகத்துடன் பிரகாசிப்பவளே! நீ எழ வேண்டும். விண்ணையே கிழித்து உன் திருவடிகளால் உலகளந்த தேவர்களின் தலைவனான எங்கள் கண்ணனே! நீ கண் விழிக்க வேண்டும். செம்பொன்னால் செய்த சிலம்புகளை அணிந்த செல்வத் திருமகனான பலராமனே! நீயும், உன் தம்பியும் உறக்கத்தில் இருந்து எழுந்து எங்களுக்கு தரிசனம் தர வேண்டும்.

திருப்பாவையில் வாமன அவதாரத்தைச் சிறப்பாக பாடுகிறாள் ஆண்டாள். மூன்று பாசுரங்களில் இந்த அவதாரத்தை அவள் சிறப்பித்திருக்கிறாள். "ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி என்று மூன்றாவது பாடலிலும், இந்தப் பாடலிலும், 24வது பாடலில் அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி என்றும் சொல்கிறாள். அசுரனாயினும் நல்லவனான மகாபலி, தேவர்களை அடக்கி கர்வம் கொண்டிருந்தான். இந்த கர்வம் அடங்கினால் இறைவனை அடைவது உறுதி என்பதாலேயே நாராயணன் வாமனனாக வந்து அவனை ஆட்கொண்டார். திருப்பாவை பாடுபவர்கள் "தான் என்ற கர்வத்தை அடக்க வேண்டும்" என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

நந்தகோபரின் மாளிகை நான்கு அறைகளாக அமைந்திருக்கிறது. அதில் முதற் கட்டில் படுத்திருக்கும் நந்தகோபரை, உடை, தண்ணீர், உணவு ஆகியவற்றை எல்லோருக்கும் வாரி வழங்கும் வள்ளலே! எழுந்திரு! என்று எழுப்பினர். அடுத்த அறைக்குச் சென்று, பெண்கள் குலத்துக்கே கொழுந்து போன்றவளே! குலவிளக்கே! எங்கள் தலைவியே எழுந்திரு! என்று யசோதையை எழுப்பினர். ஒரு சமயம் வாமன அவதாரம் எடுத்து, மகாபலி சக்கரவர்த்தியிடம் சென்று, மூவடி மண்கேட்டு, பெரிய உருவங்கொண்டு மூன்று அடிகளால் எல்லா உலகங்களையும் திருவடியால் அளந்துகொண்ட தேவாதி தேவனே! உறங்காதே எழுந்திரு என்று எழுப்பி, அடுத்த அறைக்குச் சென்றனர். செம்பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழல் அணிந்த செல்வனே! பலராமனே! நீயும் உன் தம்பியான கண்ணனும் உறங்காதே எழுந்திருங்கள் என்கின்றனர். இந்தப் பாசுரம் ஸ்ரீ நந்தகோபர், யசோதை, கண்ணன், பலராமன் ஆகிய நால்வரையும், எழுப்புவதாகும். 

முதல் இரண்டடிகள் நந்தகோபரைச் சொல்வதாக இருந்தாலும் ஆசார்யரைக் குறிக்கிறது. மூன்றாவது நான்காவது அடிகள் யசோதையைக் குறித்தாலும், "மந்த்ரோ மாதா'" என்றபடி ஆசார்யன் உபதேசிக்கும் அஷ்டாக்ஷர திருமந்திரத்தைக் குறிப்பிடுகிறது. ஐந்து, ஆறாவது அடிகள் மந்திரத்துக்கு உள்ளீடான பகவானைக் குறிக்கிறது. ஏழு, எட்டு அடிகள் பகவானுக்குத் தொண்டுசெய்யும் அடியார்களைக் குறிக்கிறது என்பதாகக் கூறுவர்.


பாசுரம் 18
உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலீ! கடைதிறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில் இனங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய். 

பாசுர விளக்கம்:
மதநீர் சிந்தும் யானைகளை உடையவனும், போரில் பின்வாங்காத தோள்வலிமை உடையவனுமான நந்தகோபனின் மருமகளே! நப்பின்னை பிராட்டியே! வாசனை சிந்தும் கூந்தலை உடையவளே! உன் வாசல் கதவைத் திற! கோழிகள் கூவும் ஒலி நாலாபுறத்தில் இருந்தும் கேட்கிறது. குருக்கத்திக் கொடியின் மேல் அமர்ந்து குயில்கள் பாடத் துவங்கி விட்டன. பூப்பந்தைப் போன்ற மென்மையான விரல்களைக் கொண்டவளே! உன் கணவனின் புகழ் பாட நாங்கள் வந்துள்ளோம். அளவுமாறாத உன் அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரைக் கையால் உன் வாசல் கதவைத் திறந்தால் எங்கள் உள்ளம் மகிழ்ச்சியடையும்.

பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை தான்  முதலில் சேவிக்க வேண்டும். வீட்டில் கூட அப்படித் தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் "எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார். அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்...அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

இந்தப் பாசுரம் நப்பின்னைப் பிராட்டியின் பெருமையைக்கூறி அவளை எழுப்புகிறது. உந்து மதகளிற்றன் என்ற சொல் கண்ணனாகிற யானைக்கன்றை உடையவன் நந்தகோபன் என்றும் கூறலாம். பெரியாழ்வார் "தொடர்ச்சங்கிலிகை" என்ற பாசுரத்தில், அணிந்துகொண்டு இருக்கும்படியான அணிகலன்கள் ஒலிக்க, யானை (வாரணம்) வருவதுபோல் அழகிய திருவடிகளால் கம்பீரமாக நடந்து வா என்று கண்ணனைக் கூறுகிறார். எனவே, நந்தகோபருக்கு கண்ணனே ஒரு யானை என்றும் கூறலாம். 

பகவான் நான்கு வகை நடைகளை உடையவன். அதில் கம்பீரமாக நடந்து வருவதை "கஜகதி" (யானை போன்ற நடை) என்பர். உந்து மதகளின் என்பதற்கு மதங்கொண்ட யானையை எதிர்த்துப் போரிடுபவன் என்றும், யானையை உடையவன் என்றும் பொருள். மதங்கொண்ட யானையை உடையவரும், போர்க்களத்தில் புறமுதுகு காட்டி ஓடாமல் வலிமையை உடையவரான ஸ்ரீ நந்தகோபரின் மருமகளே! நறுமணம் வீசும் கேச பாசத்தை உடையவளுமான நப்பின்னைப் பிராட்டியே! கதவைத்திற. உதயமாவதற்கு அடையாளமாக எல்லா இடங்களிலும் கோழிகள் கூவி அழைக்கின்றன, வந்துபார். மாதவிக் கொடி படர்ந்த பந்தலின் மேல், குயில்கள் பலமுறை கூவுகின்றன. கண்ணனோடு வந்து விளையாடி, வெற்றிபெற்ற கையிலே பந்தை வைத்துக்கொண்டிருப்பவளே! கண்ணனின் பெயரைப் பாடுவோம். கையிலே அணிந்திருக்கும் வளையல்கள் ஒலிக்க, எங்களுக்காக எழுந்துவந்து கதவைத் திறந்து உதவ வேண்டும் என்கிறார்கள். வளையொலி செவிகளுக்கும், பாடுவது வாய்க்கும், நப்பின்னையைக் காண்பது கண்ணுக்கும், அவளது கேசபாசம் மூக்குக்கும் அவளுடன் சேர்வது உடலுக்குமாக விருந்தாக இந்தப் பாசுரம் அமைகிறது.


பாசுரம் 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய். 

பாசுர விளக்கம்:
குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தால் ஆன கட்டில் மேல் விரிக்கப்பட்ட மிருதுவான பஞ்சுமெத்தையில், விரிந்த கொத்தாக பூ சூடிய நப்பின்னையின் மார்பில் தலை வைத்து கண் மூடியிருக்கும் மலர் மாலை தரித்த கண்ணனே! நீ எங்களுடன் பேசுவாயாக. மை பூசிய கண்களை உடைய நப் பின்னையே! நீ உன் கணவனாகிய கண்ணனை எவ்வளவு நேரமானாலும் தூக்கத்தில் இருந்து எழுப்புவதில்லை. காரணம், கணநேரம் கூட அவனைப் பிரிந்திருக்கும் சக்தியை இழந்து விட்டாய். இப்படிசெய்வது உன் சுபாவத்துக்கு தகுதியாகுமா?.

பஞ்சசயனம் என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தையில், தன் மனைவியின் மார்பின் மீது தலை வைத்து தூங்குகிறானாம் கண்ணன். எழுவானா? அவள் தான் எழ விடுவாளா? ஆனாலும், கண்ணன் ஓரக்கண்ணால் தன் பக்தைகளைப் பார்க்கிறானாம். "நீ எங்களுடன் பேசு என்று பாவைப் பெண்கள் கோரிக்கை எழுப்ப, அவன் ஓரக்கண்களால் பார்த்து "நீங்களே அவளிடம் சொல்லுங்கள் என்று தன் மனைவியை நோக்கி சைகை காட்டுகிறானாம். தாயே! நீயே எங்கள் கோரிக்கையை கவனிக்கவில்லையானால், அந்த மாயவனிடம் யார் எடுத்துச் சொல்வார்கள்? அவன் உன் மார்பில் தலைவைத்து கிடக்கும் பாக்கியத்தைப் பெற்றவள் நீ. எங்களுக்கு அவன் வாயால் "நன்றாயிருங்கள் என்று ஒரே ஒரு ஆசி வார்த்தை கிடைத்தால் போதும் என்கிறார்கள்.

நப்பின்னையும் நானும் இருக்கும்போது நப்பின்னையை மட்டும் கோபியர்கள் எழுப்புகிறார்களே என்று கண்ணன் குறைபட்டுக் கொண்டான். அதனால், இந்தப் பாசுரத்தின் மூலம் கண்ணனையும் நப்பின்னையையும் எழுப்புகிறார்கள். முதல் நான்கடிகளில் கண்ணனையும், அடுத்த நான்கடிகளில் நப்பின்னைப் பிராட்டியையும் எழுப்புகிறார்கள். வீரன் கொண்டு வரும் பொருளை வீரப்பத்தினி மிகவும் விரும்புவாள். அதுபோல், கம்சனால் ஏவப்பட்ட "குவலயாபீடம்" என்ற யானையோடு சண்டையிட்டு அதைக் கொன்று, அதன் தந்தங்களைப் பறித்து வந்தான். அந்த தந்தங்களினால் செய்யப்பட்ட கட்டிலில் நப்பின்னையும், கண்ணனும் உகந்து படுத்துள்ளனர். 

பாசுரத்தில் "கோடு" என்பது தந்தத்தைக் குறிக்கும். மங்களகரமாக குத்து விளக்கு ஒளிவீச, தந்தத்தினால் செய்யப்பட்ட கால்களைக் கொண்ட கட்டிலின் மேல், மென்மையான துயிலணையின் மேல் - கொத்துக் கொத்தாக தலையில் மலர்களை அணிந்த நப்பின்னையோடு படுத்திருக்கும் மலர்ந்த மார்பை உடையவனே! எங்களைப் பார்த்து 'மாசுச" (கவலைப்படாதே) என்று ஒரு வார்த்தை சொல்லலாமே! என்றனர். அவன் வார்த்தை சொல்லத் தொடங்கியதும் நப்பின்னை அவன் வாயை மூடிவிட்டாள். இந்த நிகழ்ச்சியை கோபியர்கள் சாளரத்தின் வழியாகக் கண்டார்கள். கண்ணன் வராததற்கு நப்பின்னை தான் காரணம் என்று உணர்ந்த கோபியர்கள், அழகிய கண்களை உடையவளே! நீ உன் மணாளனை ஒருபொழுதும் பிரியவிடமாட்டாய். லோகமாதாவான உனக்கு இது ஸ்வபாவமுமன்று; ஸ்வரூபமுமன்று என்று கூறுவதாக இந்தப் பாசுரம் சொல்கிறது. 


பாசுரம் 20
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்
செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்
செப்பன்ன, மென்முலை செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டு ஏல் ஓர் எம்பாவாய். 

பாசுர விளக்கம்:
முப்பத்து மூன்று கோடி தேவர்கள் இருந்தாலும், அவர்களுக்கெல்லாம் முன்னதாகச் சென்று பக்தர்களின் துயர் துடைக்கும் கலியுக தெய்வமே! நீ எழுவாயாக! நேர்மையானவனே! ஆற்றல் மிக்கவனே! பகைவர்களுக்கு வியர்வை பெருக்கெடுக்கும்படி செய்யும் தூயவனே! துயில் எழுவாயாக. பொற்கலசம் போன்ற மென்மையான ஸ்தனங்களும், பவளச் செவ்வாயும், சிற்றிடையும் கொண்ட நப்பின்னை பிராட்டியே! லட்சுமிக்கு நிகரானவளே! துயில் எழுவாயாக. எங்களுக்கு விசிறி, கண்ணாடி ஆகியவற்றையும், உன் கணவனாகிய கண்ணனையும் தந்து இப்போதே எங்களை அருள்மழையில் நனையச் செய்வாயாக.

கண்ணனின் திருக்குணங்களையும், நப்பின்னையின் அழகையும் வர்ணிக்கிறார்கள் ஆயர்குலப் பெண்கள். கண்ணன் கடவுள். அவள் எல்லோருக்கும் பொதுவானவன், அவன் நப்பின்னைக்கு மட்டும் சொந்தமானவன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் அவனையும் கேட்கிறார்கள். உக்கமும் தட்டொளியும் ஆகிய விசிறியையும், கண்ணாடியையும் ஏன் கேட்கிறார்கள். விசிறினால் காற்று வரும். வீசுபவனுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ளவனுக்கும் சேர்த்து! நம் செயல்பாடுகள் நமக்கு மட்டுமின்றி பிறருக்கும் பயன் தருவதாக அமைய வேண்டும் என்பது இதன் உட்கருத்து. கண்ணாடி உருவத்தைக் காட்டும். ஆனால், உருவத்தில் ஒட்டியுள்ள அழகையோ, அழுக்கையோ தன்னில் ஒட்டிக்கொள்ளாது. வாழ்க்கை என்றால் பட்டும் படாமலும், இந்த உடல் ஒரு வாடகை வீடு, இதை எந்த நேரமும் காலி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடனும் இருக்க வேண்டும் என்பதை விளக்குகிறது. ஆண்டாளின் கவித்திறமையில் ஒளிந்துள்ள மறைபொருளுக்கு ஈடேது!.

கோபியர்கள் இந்தப் பாசுரத்திலும் பகவானையும், பிராட்டியையும் எழுப்புகிறார்கள். தேவர்கள் முப்பத்து முக்கோடி பேர்கள். அஷ்டவசுக்கள், ஏகாதச ருத்ரர்கள், துவாதச ஆதித்யர்கள், அஸ்வினி தேவர்கள் இரட்டையர்கள் இவர்கள் தலைமையில் முப்பத்து முக்கோடி தேவர்கள். கோஷ்டி என்பதை கோ(ட்)டி என்பர். இவர்களுக்கு மரணம் என்பதே கிடையாது. அதனால் இவர்கள் "அமரர்கள்" எனப்படுவர். நீ தேவர்களுக்குத் தலைவனாகிய இவர்களுக்கு ஆபத்து வருவதற்கு முன், முன்னே இருந்துகொண்டு, பகைவர்களால் ஏற்படும் ஆபத்தை நீக்கி, இவர்களுடைய நடுக்கத்தைப் போக்கும் மிடுக்கு உடையவனே எழுந்திராய்! (பாரதப்போரில் பகதத்தன் அர்ஜுனன் மீது குறிவைத்து போடப்பட்ட ஒரு சக்தி மிக்க ஆயுதத்தை தேரோட்டியான கண்ணன், தேரிலிருந்து எழுந்திருந்து தன் மார்பில் வாங்கிக் கொண்டான். பீஷ்மர் போட்ட அஸ்த்ர சஸ்திரங்களை எல்லாம் தான் ஏற்றுக்கொண்டு அர்ஜுனனைக் காப்பாற்றினான்). 

நேர்மையும் திறமையும் கொண்டவனே! பகைவர்களுக்கு பயத்தை உண்டு பண்ணுபவனே! மிகவும் தூய்மையானவனே! என்று கண்ணனை எழுப்பினார்கள். ஆனால், அவன் எழுந்திருக்கவில்லை. கீழ்ப்பாசுரத்தில், நப்பின்னையை "தத்துவமன்று தகவுமன்று" என்று பேசிவிட்டார்கள் என்று கண்ணனுக்கு எண்ணம். அதனால் நப்பின்னையின் திருமேனி அழகைக் கூறுகிறார்கள். சாமுத்திரிகா லட்சணத்தில் சொல்லப்பட்டபடி, அழகிய திருமேனியைக்கொண்ட மகாலட்சுமியைப் போன்ற நப்பின்னையே எழுந்திரு. எங்கள் கோஷ்டிக்கு விசிறியும், கண்ணாடியும் கொடுத்து எங்களை கண்ணனோடு இப்போதே சேர்க்கவேண்டும் என்கிறார்கள்.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக