வியாழன், 17 டிசம்பர், 2015

ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை 26 - 30


பாசுரம் 26
மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடு உடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டு இசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருள் ஏல் ஓர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
பக்தர்களிடம் மிகுந்த அன்பு கொண்டவனே! நீலக்கல் நிறத்தவனே! பெரிய கடலில் ஆலிலையில் மிதப்பவனே! பெரியவர்களால் வழிவழியாக மேற் கொள்ளப்படும் மார்கழி நோன்பிற்கு, உலகத்தையே அதிர வைக்கும் ஒலியையும், பால் சாதம் போன்ற நிறத்தையும், உன் சங்காகிய பாஞ்சஜன்யத்தைப் போன்றதுமான வலம்புரி சங்குகளையும், பெரிய முரசுகளையும், பல்லாண்டு பாடும் பெரியோரையும், மங்கள தீபங்களையும், கொடிகளையும் தந்து, இந்த நோன்பை நிறைவேற்றுவதற்குரிய இடத்தையும் அளித்து அருள் செய்ய வேண்டும்.

பாஞ்சஜன்யம் என்னும் சங்கை திருமால் ஏந்தியிருக்கிறார். இந்த சங்கின் கதையைக் கேளுங்கள். பஞ்சசன் என்ற அசுரன் சாந்தீபனி என்ற முனிவரின் மகனைக் கொன்று விட்டு, கடலில் போய் மறைந்து கொண்டான். கிருஷ்ணர் அவரிடம் மாணவராகச் சேர்ந்தார். குரு தட்சணையாக தன் மகனைக் கொன்ற அசுரனை பழிவாங்க வேண்டும் என சாந்தீபனி முனிவர் உத்தரவிட்டார். கிருஷ்ணரும் பஞ்சசனைக் கொன்று அவனைச் சங்காக மாற்றி தனது கையில் வைத்துக் கொண்டார். அசுரசங்கு என்பதால் தான் குருக்ஷத்திரக்களத்தில் அதை ஊதும் போதெல்லாம் அதன் பேரொலி கேட்டு எதிரிப்படைகள் நடுங்கின.
-
மாலே! மணிவண்ணா! நாங்கள் மார்கழி நீராட்டம் என்ற நோன்பை அனுஷ்டிக்கிறோம். இது சாஸ்திரங்களில் சொல்லப்படும் அனுஷ்டானமா என்று கேட்காதே, இது பெரியோர்கள் செய்து வரும் ஒரு செயல். பெரியோர்கள் செய்வதை நாமும் செய்ய வேண்டும் என்று நீ கீதையில் சொன்னாய். ஆகையால் நாங்களும் செய்கிறோம். இதற்கு வேண்டிய சில பொருள்களை உன்னிடம் வேண்டுகிறோம். திருவாய்ப்பாடி முழுவதும் நடுங்கி உயர்விக்கும்படி உன் கையில் பாலின் நிறத்தைப்போல் இருக்கும் பாஞ்சசன்னியத்தைப் போன்ற சங்குகள், எல்லா இடங்களிலும் கேட்கும்படியாக ஓசை ஏற்படுத்தும் மிகப்பெரிய பறை, உனக்கு பல்லாண்டு பாடுகிறவர்கள் இருப்பதுபோல், எங்கள் கோஷ்டிக்கும் பல்லாண்டு பாடுவோர், அழகிய விளக்கு, ஒரு கொடி, மேலே பனிச்சாரல் விழாதபடி ஒரு மேற்கட்டு ஆகியவையும், இவற்றைப் போன்று பல பொருள்களும் எங்களுக்குக் கொடுத்து உதவ வேண்டும். பிரளய காலத்தில் எல்லா உலகங்களையும் வயிற்றில் அடக்கிக்கொண்டு ஓர் ஆலந்தளிர் மேல் குழந்தையாகப் படுத்துக்கொண்டு காப்பாற்றினாயே! உன்னால் முடியாதது ஒன்றுமில்லை என்கிறார்கள்.


பாசுரம் 27
கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகளும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழிவார
கூடியிருந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
எதிரிகளை வெற்றிகொள்ளும் சிறப்புமிக்க கோவிந்தனே! உன்னை நாங்கள் பாடி அருள் பெற வந்தோம். அருட்செல்வத்துடன் இவ்வுலக வாழ்விற்கான பொருட்செல்வமும் தருவாயாக! அது இருந்தால் தானே நாடு புகழ்கிறது. கையில் அணியும் சூடகம், தோளில் அணியும் பாஹுவலயம், காதில் அணியும் தோடு, கர்ணப்பூ, காலில் அணியும் பாடகம் ஆகிய அணிகலன்களை எங்களுக்குக் கொடு. புத்தாடைகளை வழங்கு. பின்னர் விரதத்தை நிறைவு செய்யும் வகையில், கூட்டமாக உன்னுடன் அமர்ந்து கையில் நெய் வழிய பால்சோறு உண்போம்.

கூடாரை வெல்லும் என்ற சொற்றொடரில் இருந்து "கூடாரவல்லி" என்ற வார்த்தை பிறந்தது. இப்போது பெருமாள் கோயில்களிலும், வைணவர்களின் வீடுகளிலும் கூடாரவல்லி விழா கொண்டாடப்படும். இன்று அக்கார அடிசில் எனப்படும் உணவு பிரசித்தம். சாப்பாட்டின் மீது நெய் மிதக்கும். சர்க்கரைப் பொங்கல் போன்ற இந்த உணவின் சுவை அலாதியானது. விரதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் ஆகியவற்றைத் துறந்த ஆயர்குலப் பெண்கள், இப்போது கண்ணனின் தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியில் இனிப்பான இந்த உணவை சாப்பிடுகிறார்கள். பால்சோறு என்பது பாற்கடலையும் குறிக்கும். கண்ணா! உன் தரிசனம் கிடைத்து விட்டது. நாங்கள் நீ பள்ளிகொள்ளும் பாற்கடலில் இருப்பது போல் உணர்கிறோம். இதுவே நித்யசுகம். இந்த சுகத்தை எங்களுக்கு நிரந்தரமாகக் கொடு, என வேண்டுகிறார்கள்.


பாசுரம் 28
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெருந்தனை புண்ணியம் யாம் உடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா உன்தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா! நீ தாராய் பறை ஏல் ஓர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
குறையே இல்லாத கோவிந்தனே! நாங்கள் பசுக்களின் பின்னால் சென்று அவற்றை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்பவர்கள். எங்களுக்கு அறிவென்பதே இல்லை. ஆனால், ஒன்றே ஒன்று மட்டும் எங்களுக்குத் தெரியும். உன்னை தலைவனாக அடைந்ததால் எங்களுக்கு வைகுந்தம் உறுதியென்பதை பிறவிப்பயனாக அடைந்திருக்கிறோம் என்பதே அது. உன்னோடு எங்களுக்குள்ள உறவைப் பிரிக்க யாராலும் முடியாது. விரதம் இருக்கும் முறை பற்றியெல்லாம் அறியாத பிள்ளைகள் நாங்கள்! அதுபோல் கண்ணா! மணிவண்ணா! கருணாகரா! என்றெல்லாம் உன்னிடமுள்ள உரிமையின் காரணமாக ஒருமையில் அழைத்தோம். அதற்காக கோபித்துக் கொள்ளாதே. எங்கள் இறைவனே! எங்கள் நோன்பை ஏற்று அருள் தருவாயாக.

குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வார்த்தையைப் படிக்கும் போது, கண்ணனுக்கு ஏதோ குறை இருந்தது போலவும், இப்போது தீர்ந்து விட்டது போலவும் தோற்றமளிக்கிறது. அவனுக்கு என்ன குறை? ராமாவதாரத்தில், ராம பட்டாபிஷேகம் நடந்த போது, இந்திர லோகத்தில் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ்ஞர், கவுதமர், விஜயர் என்ற எட்டு முனிவர்கள் என்று வால்மீகி ஏதோ ஆர்வத்தில் எழுதிவிட்டார். 

ராமனுக்கு இது ஒரு குறை. இந்திரனை ஜெயித்து இந்திரஜித் என்று பட்டம் பெற்றவனை நாம் நம் தம்பியை வைத்து ஜெயித்தோம். அப்படிப் பட்ட கீழான இந்திரனுடன் நம்மை வால்மீகி ஒப்பிட்டு விட்டாரே! அது மட்டுமல்ல, அவன் கவுதமரின் மனைவி அகலிகையுடன் தப்பாக நடந்தவனாயிற்றே! அவனோடு நம்மை ஒப்பிடலாமா? என்ற குறை இருந்ததாம். கிருஷ்ணாவதாரத்தில், அந்த இந்திரன் தனக்கு செய்த பூஜையை ஆயர்கள் நிறுத்தியதால் சீற்றமடைந்து மழை பெய்யச் செய்தான். கோவர்த்தனகிரியை தூக்கி மக்களைக் காத்த கண்ணனின் காலில் அந்த இந்திரன் விழுந்தான். ராமாவதாரத்தில் ஏற்பட்ட குறை கிருஷ்ணாவதாரத்தில் நீங்கிவிட்டதால், ஆயர் குலப்பெண்கள் அவரை இப்படி வர்ணித்தார்கள்.


பாசுரம் 29
சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்!
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!
எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்று ஏல் ஓர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
கண்ணா! அதிகாலையில் உன் பொன்போன்ற தாமரை பாதங்களை வணங்க வந்திருக்கிறோம். அதற்கான காரணத்தைக் கேள்! பசுக்களை மேய்த்துப் பிழைக்கும் ஆயர் குலத்தில் பிறந்த நீ, எங்களது இந்த சிறு விரதத்தைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடாதே! நீ தரும் சிறு பொருட்களுக்காக (அணிகலன் முதலானவை) இந்த விரதத்தை மேற்கொள்ளவில்லை. என்றும், ஏழு பிறவிகளிலும் நீ எங்கள் குலத்தில் பிறக்க வேண்டும். எங்களை உன் உறவினர்களாக ஏற்க வேண்டும். உனக்கு மட்டுமே சேவை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும். இது தவிர மற்ற விருப்பங்களை எல்லாம் நீயே அழித்து விடு.

விடியற்காலையில் எல்லோரும் வந்து, உன்னை சேவித்து, உன் திருவடித் தாமரைகளை போற்றிக்கொண்டு எங்களுக்கு வேண்டியதைக் கூறுகிறோம். நீ அதற்கு செவிசாய்க்க வேண்டும். மாடு கன்றுகளை மேய்த்து, அதில் வரும் வருவாயைக் கொண்டு உண்டு பிழைக்கிறோம். அப்படி வாழும் எங்கள் குலத்தைப் பார்த்தும், இந்தக் குலத்தில் வந்து பிறந்தாய். ஆதலால் நாங்கள் செய்யும் குற்றேவல்களை நீ ஏற்றுக்கொள்ளாமல் போகக்கூடாது. நாங்கள் பறையைக் கேட்டோம் என்பதற்காக, பெரிதும் ஒலிக்கின்ற பறையைக் கொண்டு வந்து கொடுக்கின்றார்கள். அறிவென்றுமில்லாத எங்கள் குலத்தில் பிறந்ததால், நாங்கள் கேட்கும் பறை என்ற சொல் உனக்குத் தெரியாமல் போயிற்றா? "கோவிந்தா" எத்தனை பிறவி எடுத்தாலும், ஏழேழ் பிறவியிலும் உனக்கு உற்றார் உறவினராகவே ஆகவேண்டும். உனக்கே கைங்கர்யம் செய்ய வேண்டும். ஏதேனும் ஒரு நேரத்தில் எங்களுடைய மனம் வேறு வழியில் சென்றால், செல்லாமல் தடுத்து திருப்பி உன் கைங்கர்யத்திலே ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். கோபியர்கள் பல பாடல்களில் கேட்டுக்கொள்ள வந்த "பறை" என்ற சொல்லின் பொருளை, அந்தரங்கக் கைங்கர்யம் என்று வெளியிட்டார்கள்.


பாசுரம் 30
வங்கக்கடல் கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உறைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கன் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பாசுர விளக்கம்:
அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீ வில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களையுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.

இந்தத் திருப்பாவையைச் சொன்னால் என்ன பயன் ஏற்படுகிறது என்பதைக் கூறுகிறது இந்தப் பாசுரம். கடலுக்குள் இருக்கும் அமுதத்தை எடுத்து, பகவான் தேவர்களுக்குக் கொடுத்தான். இப்படிப்பட்ட மாதவனை சந்திரன் போன்ற திருமுகத்தைக் கொண்டவர்களும், சிறந்த ஆபரணங்களை அணிந்த கோபியர்கள் அடைந்து, அவனைப் போற்றிப் புகழ்ந்து பறை என்ற ஒலிக்கருவியையும் கைங்கர்யத்தையும் கேட்டுப் பெற்றார்கள். அதை எப்படிப் பெற்றார்கள் என்பதை ஸ்ரீ வில்லிபுத்தூரில் அவதரித்த பட்டர்பிரான் என்ற பெரியாழ்வாரின் திருமகளான ஆண்டாள் அருளிச்செய்த சங்கத் தமிழ் மாலையாகிய திருப்பாவை முப்பது பாசுரத்தையும், ஒரு பாசுரத்தையும் விடாமல் பக்தியோடு கூறுகிறார்கள். சதுர்ப்புஜனாயும் தாமரைக் கண்ணனாயும் இருக்கும் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்று இப்பாசுரம் கூறுகிறது.

தொகுப்பு: திரு ஆதிரை மற்றும் ஸ்ரீ தில்லை இளந்தென்றல்


|| ----------- திருப்பாவை பாசுரம் முற்றிற்று ----------- ||


|| ----------- ஓம் நமோ நாராயணா ----------- ||

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக