இறைவர் திருப்பெயர் : பாசுபதேஸ்வரரர், பாசுபதநாதர்
இறைவியார் திருப்பெயர் : சற்குணாம்பாள், நல்லநாயகி
திருமுறை : முதல் திருமுறை 39 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
இறைவியார் திருப்பெயர் : சற்குணாம்பாள், நல்லநாயகி
திருமுறை : முதல் திருமுறை 39 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
பாடல் எண் : 01
அந்தமும் ஆதியும் ஆகிய அண்ணல் ஆரழல் அங்கை அமர்ந்திலங்க
மந்த முழவம் இயம்ப மலைமகள் காண நின்றாடிச்
சந்தம் மிலங்கு நகுதலை கங்கை தண்மதியம் அயலே ததும்ப
வெந்த வெண்ணீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே.
பாடல் விளக்கம்:
உலகங்களைப் படைப்பவரும், இறுதி செய்பவருமாகிய, தலைமைத் தன்மையுடைய சிவபிரான் பிறரால் பொறுத்தற்கரிய தீகையின்கண் விளங்க, மெல்லென ஒலிக்கும் முழவம் இயம்ப, மலை மகளாகிய பார்வதி தேவி காணுமாறு திருநடம் புரிந்து, அழகு விளங்கும் கபால மாலை, கங்கை, தண் பிறை ஆகியன தலையின்கண் விளங்க, வெந்த வெண்ணீறு மெய்யில் பூசியவராய்த் திருவேட்கள நன்னகரில் எழுந்தருளியுள்ளார்.
பாடல் எண் : 02
சடைதனைத் தாழ்தலும் ஏற முடித்து சங்க வெண்தோடு சரிந்திலங்கப்
புடைதனில் பாரிடம் சூழ போதரும் ஆறு இவர் போல்வார்
உடைதனில் நால்விரல் கோவண ஆடை உண்பதும் ஊரிடு பிச்சை வெள்ளை
விடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன் நகராரே.
பாடல் விளக்கம்:
திருவேட்கள நன்னகர் இறைவன், தாழ்ந்து தொங்கும் சடை முடியை எடுத்துக் கட்டிச் சங்கால் இயன்ற வெள்ளிய தோடு காதிற் சரிந்து விளங்கவும், அருகில் பூதங்கள் சூழ்ந்து வரவும், போதருகின்றவர். அவர்தம் உடையோ நால்விரல் அகலமுடைய கோவண ஆடையாகும். அவர் உண்பதோ ஊரார் இடும் பிச்சையாகும். அவர் விரும்பி ஏறும் ஊர்தியோ வெண்ணிறமுடைய விடையாகும்.
பாடல் எண் : 03
பூதமும் பல் கணமும் புடை சூழ பூமியும் விண்ணும் உடன் பொருந்தச்
சீதமும் வெம்மையும் ஆகி சீரொடு நின்ற எம் செல்வர்
ஓதமும் கானலும் சூழ்தரு வேலை உள்ளம் கலந்து இசையால் எழுந்த
வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன் நகராரே.
பாடல் விளக்கம்:
கடல் நீர்ப் பெருக்கும் சோலையும் சூழ்ந்ததும், அந்தணர்கள் மனங்கலந்து பாடும் இசையால் எழுந்த வேத ஒலியும், அவர்கள் இயற்றும் வேள்விகளும் இடையறாது நிகழும் இயல்பினதும், ஆகிய திருவேட்கள நன்னகர் இறைவர், பூதங்களும் சிவ கணங்களும் அருகில் சூழ்ந்து விளங்க, விண்ணும் மண்ணும் தம்பால் பொருந்தத் தண்மையும் வெம்மையும் ஆகிப் புகழோடு விளங்கும் எம் செல்வராவார்.
பாடல் எண் : 04
அரை புல்கும் ஐந்தலை ஆடல் அரவம் அமைய வெண் கோவணத்தோடு அசைத்து
வரை புல்கு மார்பில் ஓர் ஆமை வாங்கி அணிந்தவர் தாம்
திரை புல்கு தெண் கடல் தண் கழி ஓதம் தேன் நல் அம் கானலில் வண்டு பண்செய்ய
விரை புல்கு பைம்பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே.
பாடல் விளக்கம்:
இடையிற் பொருந்திய ஐந்து தலைகளையுடைய தாய், ஆடும் பாம்பை வெண்மையான கோவணத்தோடும் பொருந்தக்கட்டி, மலை போன்று அகன்ற மார்பின்கண் ஒப்பற்ற ஆமை ஓட்டை விரும்பி அணிந்தவராய் விளங்கும் சிவபெருமானார் அலைகளையுடைய தெளிந்த கடல் நீர் பெருகி வரும் உப்பங்கழிகளை உடையதும், வண்டுகள் இசை பாடும் தேன் பொருந்திய கடற்கரைச் சோலைகளை உடையதும், மணம் கமழும் பைம்பொழில் சூழ்ந்ததுமாகிய திருவேட்கள நன்னகரில் எழுந்தருளி உள்ளார்.
பாடல் எண் : 05
பண்ணுறு வண்டறை கொன்றை அலங்கல் பால் புரை நீறு வெண்ணூல் கிடந்த
பெண்ணுறு மார்பினர் பேணார் மும்மதில் எய்த பெருமான்
கண்ணுறு நெற்றி கலந்த வெண் திங்கள் கண்ணியர் விண்ணவர் கைதொழுது ஏத்தும்
வெண்ணிற மால்விடை அண்ணல் வேட்கள நன் நகராரே.
பாடல் விளக்கம்:
திருவேட்கள நன்னகர் இறைவர், இசை பாடும் வண்டுகள் சூழ்ந்த கொன்றை மாலையை அணிந்தவராய், பால் போன்ற வெண்ணீறு பூசியவராய், முப்புரிநூலும் உமையம்மையும் பொருந்திய மார்பினராய்ப் பகைவர்களாகிய அசுரர்களின் மும்மதில்களையும் எய்து அழித்த தலைவராய், நெற்றிக் கண்ணராய், பிறைமதிக் கண்ணியராய் விண்ணவர் கைதொழுது ஏத்தும் வெண்மையான பெரிய விடை மீது ஊர்ந்து வருபவராய் விளங்கும் தலைவராவார்.
பாடல் எண் : 06
கறிவளர் குன்றம் எடுத்தவன் காதல் கண்கவர் ஐங்கணையோன் உடலம்
பொறிவளர் ஆர் அழல் உண்ணப் பொங்கிய பூதபுராணர்
மறிவளர் அம் கையர் மங்கை ஒரு பங்கர் மைஞ்ஞிற மானுரி தோல் உடை ஆடை
வெறிவளர் கொன்றை அம்தாரார் வேட்கள நன் நகராரே.
பாடல் விளக்கம்:
திருவேட்கள நன்னகர் இறைவர், மிளகுக் கொடிகள் வளர்ந்து செறிந்த கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்த திருமாலின் அன்பு மகனும், அழகு மிக்கவனும், ஐங்கணை உடையவனுமாகிய மன்மதனின் உடல், பொறி பறக்கும் அரிய அழல் உண்ணும்படி சினந்த பழையோரும், மான் ஏந்திய கரத்தினரும், மங்கை பங்கரும், கருநிறமுடைய யானையின் தோலை உரித்து ஆடையாகப் போர்த்தவரும், மணங்கமழும் கொன்றை மாலையை அணிந்தவருமாவார்.
பாடல் எண் : 07
மண் பொடிக் கொண்டு எரித்து ஓர் சுடலை மாமலை வேந்தன் மகள் மகிழ
நுண் பொடிச் சேர நின்று ஆடி நொய்யன செய்யல் உகந்தார்
கண் பொடி வெண் தலை ஓடு கை ஏந்திக் காலனைக் காலால் கடிந்து உகந்தார்
வெண் பொடிச் சேர் திருமார்பர் வேட்கள நன் நகராரே.
பாடல் விளக்கம்:
திருவேட்கள நன்னகர் இறைவர் மண்ணும் பொடியாகுமாறு உலகை அழித்து, ஒப்பற்ற அச்சுடலையில் சிறப்புத் தன்மையை உடைய இமவான் மகளாகிய பார்வதி தேவி கண்டு மகிழ, சுடலையின் நுண்பொடிகள் தம் உடலிற்படிய, நின்று ஆடி, அத்திருக்கூத்து வாயிலாக நுட்பமான பஞ்ச கிருத்தியங்கள் செய்தலை உகந்தவரும், கண் பொடிந்து போன வெள்ளிய தலையோட்டினைக் கையில் ஏந்தியவரும், காலனைக் காலால் கடிந்துகந்தவரும் வெள்ளிய திருநீறு சேர்ந்த அழகிய மார்பினரும் ஆவார்.
பாடல் எண் : 08
ஆழ்தரு மால் கடல் நஞ்சினை உண்டார் அமுதம் அமரர்க்கு அருளி
சூழ்தரு பாம்பு அரை ஆர்த்து சூலமோடு ஒண்மழு ஏந்தி
தாழ்தரு புன்சடை ஒன்றினை வாங்கித் தண்மதியம் அயலே ததும்ப
வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன் நகராரே.
பாடல் விளக்கம்:
திருவேட்கள நன்னகர் இறைவர், ஆழமான பெரிய கடலிடத்துத் தோன்றிய அமுதத்தைத் தேவர்க்கு அளித்தருளி நஞ்சினைத் தாம் உண்டவரும், சுற்றிக் கொள்ளும் இயல்பினதாய பாம்பினை இடையிற் கட்டி, சூலம், ஒளி பொருந்திய மழு ஆகியவற்றைக் கைகளில் ஏந்தியவரும், உலகையே அழிக்கும் ஆற்றலோடு பெருகி வந்த கங்கை நீரைத் தம் பிறை அயலில் விளங்கத்த லையிலிருந்து தொங்கும் மெல்லிய சடை ஒன்றினை எடுத்து அதன்கண் சுவறுமாறு செய்தவரும் ஆவார்.
பாடல் எண் : 09
திருவொளி காணிய பேதுறுகின்ற திசைமுகனும் திசை மேல் அளந்த
கருவரை ஏந்திய மாலும் கைதொழ நின்றதும் அல்லால்
அருவரை ஒல்க எடுத்த அரக்கன் ஆடு ஏழில் தோள்கள் ஆழத்து அழுந்த
வெருவுற ஊன்றிய பெம்மான் வேட்கள நன் நகராரே.
பாடல் விளக்கம்:
திருவேட்கள நன்னகர் இறைவர், அழகிய பேரொளிப் பிழம்பைக் காணும் பொருட்டு மயங்கிய நான்முகனும், எண்திசைகளையும் அளந்தவனாய்ப் பெரிதான கோவர்த்தன மலையைக் குடையாக ஏந்திய திருமாலும், அடிமுடி காண இயலாது கைதொழுது நிற்க, கயிலை மலை தளருமாறு அதனை எடுத்த இராவணனின் வெற்றியும் அழகு மிக்க தோள்களும் ஆழத் தழுந்தவும் அவன் அஞ்சி நடுங்கவும் தம் கால் விரலை ஊன்றிய பெருமான் ஆவார்.
பாடல் எண் : 10
அத்தம்மண் தோய் துவரார் அமண்குண்டர் ஆதும் அல்லா உரையே உரைத்துப்
பொய்த்தவம் பேசுவது அல்லால் புறனுரை யாதொன்றும் கொள்ளேல்
முத்தன வெண் முறுவல் உமை அஞ்ச மூரிவல் ஆனையின் ஈருரி போர்த்த
வித்தகர் வேத முதல்வர் வேட்கள நன் நகராரே.
பாடல் விளக்கம்:
செந்நிறமான காவி மண் தோய்ந்த ஆடைகளை அணிந்த பௌத்தர்கள், சமண் குண்டர்கள் ஆகியோர் பொருளற்ற வார்த்தைகளை உரைத்துப் பொய்த் தவம் பேசுவதோடு சைவத்தைப் புறனுரைத்துத்திரிவர். அவர்தம் உரை எதனையும் கொள்ளாதீர். முத்துப் போன்ற வெண் முறுவல் உடைய உமையம்மை அஞ்சுமாறு வலிய யானையின் தோலை உரித்துப் போர்த்த வித்தகரும் வேத முதல்வருமாகிய வேட்கள நன்னகர் இறைவரை வணங்குமின்.
பாடல் எண் : 11
விண்ணியன் மாடம் விளங்கொளி வீதி வெண்கொடி எங்கும் விரிந்திலங்க
நண்ணிய சீர்வளர் காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்
பெண்ணின் நல்லாள் ஒருபாகம் அமர்ந்து பேணிய வேட்களம் மேல் மொழிந்த
பண்ணியல் பாடல் வல்லார்கள் பழியொடு பாவம் இலாரே.
பாடல் விளக்கம்:
விண்ணுறவோங்கிய மாட வீடுகளையும், வெண்மையான கொடிகள் எங்கும் விரிந்து விளங்கும் ஒளி தவழும் வீதிகளையும் உடையதும், பொருந்திய சீர்வளர்வதும் ஆகிய சீகாழிப்பதியுள் தோன்றிய நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன் பெண்ணில் நல்லவளான நல்ல நாயகியை ஒரு பாகமாக விரும்பி ஏற்று எழுந்தருளியுள்ள திருவேட்களத்து இறைவர் மீது பாடியருளிய பண்பொருந்திய இப்பதிகப் பாடல்களை ஓத வல்லவர் பழி பாவம் இலராவர்.
"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக