வியாழன், 19 மார்ச், 2015

திருநெல்வாயில் திருமுறை பதிகங்கள் 01

இறைவர் திருப்பெயர் : உச்சி நாதேஸ்வரர், உச்சிநாத சுவாமி

இறைவியார் திருப்பெயர் கனகாம்பிகை

திருமுறை இரண்டாம் திருமுறை 26 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
புடையினார் புள்ளி கால் பொருந்திய 
மடையினார் மணிநீர் நெல்வாயிலார் 
நடையின் நால்விரல் கோவணம் நயந்த 
உடையினார் எமது உச்சியாரே.

பாடல் விளக்கம்:
வயற்பக்கங்களில் நண்டுகளை உடையதும், வாய்க்கால்களை அடுத்துள்ள நீர்மடையில் நீலமணி போன்று தெளிந்த நீரை உடையதுமான நெல்வாயில் இறைவர் ஒழுக்கத்திற்குக்காட்டாக நால் விரல் அளவுள்ள கோவண ஆடையை உடையவர். அவர் எம் முடிமேல் திகழும் மாண்பினர்.


பாடல் எண் : 02
வாங்கினார் மதில்மேல் கணை வெள்ளம் 
தாங்கினார் தலையாய தன்மையர் 
நீங்கு நீர நெல்வாயிலார் தொழ 
ஓங்கினார் எமது உச்சியாரே.

பாடல் விளக்கம்:
முப்புரங்கள் மீது கணை தொடுக்க வில்லினை வளைத்தவர். பெருகி வந்த கங்கை நீரைச் சடைமிசைத் தாங்கியவர். மேலான தன்மைகளை உடையவர். ஓடும் நீரினை உடைய நெல் வாயில் என்னும் தலத்தினர். நாம் தொழுமாறு புகழால் ஓங்கி விளங்குபவர். அவர் எம் முடிமேல் விளங்கும் மாண்பினர்.


பாடல் எண் : 03
நிச்சல் ஏத்தும் நெல்வாயிலார் தொழ 
இச்சையால் உறைவார் எம் ஈசனார் 
கச்சை ஆவது ஓர் பாம்பினார் கவின் 
இச்சையார் எமது உச்சியாரே.

பாடல் விளக்கம்:
நாள்தோறும் நாம் ஏத்தவும் தொழவும் நெல் வாயிலில் இச்சையோடு விளங்குபவர். எம் ஈசர். பாம்பைக் கச்சையாக அணிந்தவர். உயிர்கட்கு இச்சை உண்டாதற் பொருட்டு, தான் இச்சா சக்தியோடு விளங்குபவர். அவர் எம் உச்சியில் விளங்கும் மாண்பினர்.


பாடல் எண் : 04
மறையினார் மழுவாளினார் மல்கு
பிறையினார் பிறையோடு இலங்கிய 
நிறையினார் நெல்வாயிலார் தொழும் 
இறைவனார் எமது உச்சியாரே.

பாடல் விளக்கம்:
வேதங்களை அருளியவர். மழுவாகிய வாளினை உடையவர். சடை முடியில் பொருந்திய பிறையினை உடையவர். வானளாவ வளர்ந்து, நிறைந்து விளங்கும் நெற்பயிர் விளையும் வயல்களை வாயிலில் உடையதால், நெல்வாயில் எனப்பெற்ற தலத்தில் எழுந்தருளியிருப்பவர். நம்மால் தொழத்தகும் இறைவர். அவர் எமது முடிமிசைத் திகழ்பவர்.


பாடல் எண் : 05
விருத்தனாகி வெண்ணீறு பூசிய 
கருத்தனார் கனல் ஆட்டு உகந்தவர் 
நிருத்தனார் நெல்வாயில் மேவிய 
ஒருத்தனார் எமது உச்சியாரே.

பாடல் விளக்கம்:
முதியவராய்த் திருவெண்ணீறு அணிந்துள்ள தலைவர். தீயில் ஆடுதலை உகந்தவர். நடனம் புரிபவர். நெல்வாயில் என்னும் தலத்தில் விளங்கும் ஒருவர் என்னும் பெயருக்கு உரியவர். அவர் எமது உச்சியில் விளங்குபவர்.


பாடல் எண் : 06
காரினார் கொன்றைக் கண்ணியார் மல்கு
பேரினார் பிறையோடு இலங்கிய 
நீரினார் நெல்வாயிலார் தொழும் 
ஏரினார் எமது உச்சியாரே.

பாடல் விளக்கம்:
கார் காலத்தில் மலரும் கொன்றை மலரால் இயன்ற கண்ணியைச் சூடியவர். நிறைந்த புகழை உடையவர். பிறை சூடி விளங்கும் இயல்பினர். நெல் வாயிலில் உறைபவர். நாம் தொழத்தகும் அழகர். அவர் எமது உச்சியில் விளங்குபவர்.


பாடல் எண் : 07
ஆதியார் அந்தம் ஆயினார் வினை 
கோதியார் மதில் கூட்டு அழித்தவர்
நீதியார் நெல்வாயிலார் மறை 
ஓதியார் எமது உச்சியாரே.

பாடல் விளக்கம்:
உலகிற்கு ஆதி அந்தமாக விளங்குபவர். குரோதமான செயல்களைப் புரிந்த அசுரர்களின் மதில் கூட்டங்களை அழித்தவர். நீதியை உடையவர். நெல் வாயிலில் எழுந்தருளியிருப்பவர். மறைகளை ஓதியவர். அவர் எமது உச்சியில் உறைபவர்.


பாடல் எண் : 08
பற்றினான் அரக்கன் கயிலையை 
ஒற்றினார் ஒரு கால் விரல் உற 
நெற்றி ஆர நெல்வாயிலார் தொழும் 
பெற்றியார் எமது உச்சியாரே.

பாடல் விளக்கம்:
கயிலை மலையைப் பற்றி எடுத்த இராவணனை ஒரு கால் விரலைப் பொருத்தி அவன் தலைகள் முழுவதும் அடர ஒற்றியவர். நெல்வாயிலில் விளங்குபவர். நாம் தொழும் தன்மையர். அவர் எமது உச்சியில் உறைபவர்.


பாடல் எண் : 09
நாடினார் மணிவண்ணன் நான்முகன்
கூடினார் குறுகாத கொள்கையர்
நீடினார் நெல்வாயிலார் தலை 
ஓடினார் எமது உச்சியாரே.

பாடல் விளக்கம்:
நீலமணி போன்ற நிறத்தினனாகிய திருமாலும், நான்முகனும் கூடித் தேடிக்குறுக முடியாத இயல்பினராய் எரி உருவொடு நீடியவர். நெல்வாயிலில் எழுந்தருளியிருப்பவர். தலை ஓட்டைக் கையில் உடையவர். அவர் எமது உச்சியில் உறைபவர்.


பாடல் எண் : 10
குண்டு அமண் துவர்க்கூறை மூடர் சொல் 
பண்டமாக வையாத பண்பினர் 
விண் தயங்கு நெல்வாயிலார் நஞ்சை 
உண்ட கண்டர் எம் உச்சியாரே.

பாடல் விளக்கம்:
குண்டர்களாகிய சமணர்களும், துவர் ஏற்றிய ஆடையை அணிந்த மூடர்களாகிய புத்தர்களும் கூறும் சொற்களைப் பொருளாகக் கொள்ளாத பண்பினர். வானளாவ உயர்ந்துள்ள நெற்பயிர்கள் நிறைந்த நெல்வாயில் என்னும் தலத்தில் விளங்குபவர். அவர் எமது உச்சியார்.


பாடல் எண் : 11
நெண்பு அயங்கு நெல்வாயில் ஈசனைச் 
சண்பை ஞானசம்பந்தன் சொல் இவை
பண் பயன்கொளப் பாட வல்லவர்
விண் பயன்கொளும் வேட்கையாளரே.

பாடல் விளக்கம்:
நெல்வாயில் என்னும் தலத்தில் நட்புக்கொண்டு விளங்கும் ஈசனை, சண்பைப் பதியில் தோன்றிய ஞான சம்பந்தன் பாடிய சொல்மாலையாகிய இத்திருப்பதிகத்தைப் பண்ணின் பயன் கொள்ளுமாறு பாடி வழிபட வல்லவர், வீட்டுலக இன்பத்தை அடையும் வேட்கையினர் ஆவர்.


|| --- திருநெல்வாயில் திருமுறை பதிகம் முற்றிற்று --- ||


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக