புதன், 25 மார்ச், 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 04

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை இரண்டாம் திருமுறை 101 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
பருக்கை யானை மத்தகத்து அரிக்குலத்து உகிர்ப் புக
நெருக்கி வாய நித்திலம் நிரக்கு நீள் பொருப்பனூர்
கருக்கொள்சோலை சூழ நீடு மாட மாளிகைக் கொடி 
அருக்கன் மண்டலத்து அணாவும் அந்தணாரூ ரென்பதே.

பாடல் விளக்கம்:
பருத்த கையை உடைய யானையோடு போரிடும் சிங்கத்தின் கை நகங்கள் அதன் மத்தகத்தைக் கீறலால், மத்தகம் முத்துக்களைச் சிந்தும் கயிலை மால்வரையைத் தனக்கு இடமாகக் கொண்ட சிவபிரானது ஊர் பசுமையான சோலைகளால் சூழப்பெற்றுக் கதிரோன் மண்டலத்தைக் கிட்டும் கொடிகள் கட்டப்பட்ட மாட மாளிகைகளை உடைய திருவாரூர்.


பாடல் எண் : 02
விண்ட வெள் எருக்கு அலர்ந்த வன்னி கொன்றை மத்தமும்
இண்டை கொண்ட செஞ்சடை முடிச் சிவன் இருந்த ஊர் 
கெண்டை கொண்டு அலர்ந்த கண்ணினார்கள் கீத ஓசை போய் 
அண்டர் அண்டம் ஊடறுக்கும் அந்தணரூ ரென்பதே.

பாடல் விளக்கம்:
மலர்ந்த வெள்ளெருக்கு மலர், விரிந்த வன்னியிலை, கொன்றை மலர், ஊமத்தம் மலர் ஆகிய இவற்றால் இயன்ற இண்டை மாலையைச் சூடிய செஞ்சடை முடியினை உடைய சிவனது ஊர், கெண்டை மீன் போன்ற விரிந்த கண்களை உடைய மகளிர் பாடும் கீத ஒலி மேலுலகைச் சென்றளாவும் திருவாரூர்.


பாடல் எண் : 03
கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் காலன் இன்னுயிர்
மறுத்துமாணி தன்றன்ஆகம் வண்மை செய்த மைந்தனூர் 
வெறித்துமேதி ஓடி மூசு வள்ளை வெள்ளை நீள்கொடி 
அறுத்துமண்டி ஆவி பாயும் அந்தணரூ ரென்பதே.

பாடல் விளக்கம்:
கொடிய ஆலகால விடத்தை உண்டு இருண்ட கண்டத்தை உடையவரும், காலன் உயிரைக் கவர வந்த போது மார்க்கண்டேயரைக் காத்து அவரது உடல் என்றும் இளமையோடு திகழும் பேற்றை வழங்கியவருமான இளமையும் வலிமையும் உடைய சிவன் ஊர். எருமைகள் மயங்கியோடி வெள்ளிய வள்ளைக் கொடிகளை அறுத்துக் குளங்களில் பாயும் குளிர்ந்த திருவாரூர்.


பாடல் எண் : 04
அஞ்சுமொன்றி ஆறு வீசி நீறு பூசி மேனியில்
குஞ்சியார வந்தி செய்ய அஞ்சலென்னி மன்னுமூர்
பஞ்சியாரு மெல்லடிப் பணைத்த கொங்கை நுண்ணிடை  
அஞ்சொலார் அரங்கெடுக்கும் அந்தணாரூ ரென்பதே.

பாடல் விளக்கம்:
காமம், குரோதம் முதலிய அறுபகைகளை விடுத்து, ஐம்புலன்களும் ஒன்றி நிற்கத் தலையாரக் கும்பிட்டு வழிபடும் அடியவர்களுக்கு அஞ்சாதீர் என்று அபயமளிக்கும் சிவன் மன்னிய ஊர், பஞ்சு போன்ற மென்மையான அடிகளையும், பருத்த தனங்களையும், நுண்ணிடையையும், அழகிய இனிய சொற்களையும் உடைய மகளிர் அரங்கில் ஏறி நடஞ்செயும் ஆரூர்.


பாடல் எண் : 05
சங்குலாவு திங்கள் சூடி தன்னை உன்னுவார் மனத்து
தங்குலாவி நின்ற எங்கள் ஆதிதேவன் மன்னுமூர்
தெங்குலாவு சோலை நீடு தேனுலாவு செண்பகம் 
அங்குலாவி அண்டம் நாறும் அந்தணாரூ ரென்பதே.

பாடல் விளக்கம்:
சங்கு போன்ற வெண்மையான பிறை மதியைத் தலையில் சூடி, தன்னை நினைப்பவர் மனத்தில் நிறைந்து நிற்கும் எங்கள் ஆதிதேவன் மன்னிய ஊர், தென்னஞ் சோலைகளையும், வானுலகம் வரை மணம் வீசும் உயர்ந்த செண்பக மரங்களையும் உடைய திருவாரூர்.


பாடல் எண் : 06
கள்ள நெஞ்ச வஞ்சகக் கருத்தை விட்டு அருத்தியோடு
உள்ளம் ஒன்றி உள்குவார் உளத்துளான் உகந்தவூர்
துள்ளி வாளை பாய் வயல் சுரும்புலாவு நெய்தல்வாய் 
அள்ளல் நாரை ஆரல் வாரும் அந்தணாரூ ரென்பதே.

பாடல் விளக்கம்:
கள்ள நெஞ்சத்தையும் அது காரணமாகச் செய்யும் வஞ்சகச் செயல்களையும், தீய எண்ணங்களையும் கைவிட்டு, அன்போடு மனமொன்றி வழிபடும் அடியவர் உள்ளத்தில் விளங்கும் இறைவன் ஊர், வாளை மீன்கள் துள்ளிப் பாயும் வயல்களையும், சுரும்புகள் உலாவும் நெய்தல் மலர்களையும், நாரைகள் ஆரல் மீன்களைக் கவர்ந்து உண்ணும் சேற்று நிலங்களையும் உடைய ஆரூர்.


பாடல் எண் : 07
கங்கை பொங்கு செஞ்சடைக் கரந்த கண்டர் காமனை 
மங்க வெங்கணால் விழித்த மங்கை பங்கன் மன்னுமூர்
தெங்கினூடு போகி வாழை கொத்திறுத்து மாவின்மேல் 
அங்கண் மந்தி முந்தியேறும் அந்தணாரூ ரென்பதே.

பாடல் விளக்கம்:
பொங்கி வந்த கங்கையைச் சடையிற் கரந்த. சருவவியாபகரும், காமன் பொடிபட அனற்கண்ணைத் திறந்த வரும், மங்கைபங்கரும் ஆகிய சிவன் மன்னிய ஊர், அழகிய கண்களை உடைய மந்திகள் தென்னை மரத்தின் வழியே ஏறி வாழைக் குலைகளை ஒடித்து மாமரத்தின் மேல் ஏறும் சோலை வளம் சான்ற திருவாரூர்.


பாடல் எண் : 08
வரைத்தலம் எடுத்தவன் முடித்தலம் உரத்தொடும் 
நெரித்தவன் புரத்தை முன் எரித்தவன் இருந்த ஊர்
நிரைத்த மாளிகைத் திருவின் நேரனார்கள் வெண்ணகை
அரத்தவாய் மடந்தைமார்கள் ஆடும் ஆரூர் என்பதே.

பாடல் விளக்கம்:
திருக்கயிலை மலையை எடுத்த இராவணனுடைய தலைகளையும் மார்பினையும் நெரித்தவனும், திரிபுரங்களை எரித்தவனும் ஆகிய, சிவபிரான் ஊர், வரிசையாயமைந்த மாளிகைகளில் திருமகளை ஒத்த அழகும், வெண்ணகையும் செவ்வாயுமுடைய மகளிர் நடனமாடி மகிழும் ஆரூர்.


பாடல் எண் : 09
இருந்தவன் கிடந்தவன் இடந்து விண் பறந்து மெய் 
வருந்தியும் அளப்பொணாத வானவன் மகிழ்ந்தவூர்
செருந்தி ஞாழல் புன்னை வன்னி செண்பகம் செழுங்குரா
அரும்புசோலை வாசநாறும் அந்தணாரூ ரென்பதே.

பாடல் விளக்கம்:
தாமரை மலரில் இருந்த நான்முகனும், பாம் பணையில் கிடந்த திருமாலும் விண் பறந்தும் மண்ணிடந்து வருந்தியும் அளந்து காணமுடியாத முடியையும் அடியையும் உடைய பெருமான் விரும்பி எழுந்தருளியிருக்கும் ஊர், செருந்தி, ஞாழல், புன்னை, வன்னி, செண்பகம், குரா ஆகியன மலர்ந்து மணம் வீசும் சோலைகள் உடைய திருவாரூர்.


பாடல் எண் : 10
பறித்த வெண்தலைக் கடுப் படுத்த மேனியார் தவம் 
வெறித்த வேடன் வேலை நஞ்சம் உண்ட கண்டன் மேவுமூர்
மறித்து மண்டு வண்டல் வாரி மிண்டு நீர் வயற்செந்நெல்
அறுத்த வாய் அசும்பு பாயும் அந்தணாரூ ரென்பதே..

பாடல் விளக்கம்:
பறித்த வெள்ளிய தலையையும், கடுக்காய்ப் பொடி பூசிய மேனியையும், உடைய சமணர், மெய்யில்லாத தவம் மேற்கொண்டு கண்டு அஞ்சும் வேடமுடையவனும், நஞ்சுண்ட கண்டனும் ஆகிய சிவபெருமான் மேவும் ஊர், மீண்டும், மீண்டும் தோன்றும் வண்டலை வாரி நீரைத் தடுத்து, செந்நெல்லை அறுத்த வயல்களில் ஊற்று வழியே நீர்ப் பொசிவு தோன்றும், மண் வளமும், நீர் வளமும் உடைய திருவாரூர்.


பாடல் எண் : 11
வல்லி சோலை சூதம் நீடு மன்னு வீதி பொன்னுலா
அல்லி மாது அமர்ந்து இருந்த அம் தண் ஆரூர் ஆதியை
நல்ல சொல்லும் ஞானசம்பந்தன் நாவின் இன்னுரை
வல்ல தொண்டர் வானமாள வல்லர் வாய்மை ஆகவே.

பாடல் விளக்கம்:
கொடிகள் அடர்ந்த சோலைகளால் சூழப்பெற்று மாமரங்களைக் கொண்டு விளங்கும் திருவீதிகளை உடைய அழகு பொருந்திய அல்லியங்கோதையம்மையோடு எழுந்தருளி விளங்கும் ஆரூர் இறைவனை ஞானநெறிகளை உணர்த்தும் சொற்களைக் கூறும் ஞானசம்பந்தன் தன் நாவினால் பாடிப் போற்றிய இன்னுரைகளை ஓதும் தொண்டர்கள் வானம் ஆள்வர், இஃது உண்மை.



"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக