செவ்வாய், 24 மார்ச், 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 03

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை இரண்டாம் திருமுறை 79 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருஞானசம்பந்த சுவாமிகள்




பாடல் எண் : 01
பவனமாய்ச் சோடையாய் நாவெழாப் பஞ்சுதோய்ச் சட்டவுண்டு
சிவன தாள் சிந்தியாப் பேதைமார் போல நீ வெள்கினாயே 
கவனமாய்ப் பாய்வதோர் ஏறு உகந்து ஏறிய காளகண்டன் 
அவனது ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் விளக்கம்:
பெருமூச்சு வாங்கும் நிலையை அடைந்து வறட்சி நிலை எய்தி, நா எழாது உலர்ந்து பிறர் பஞ்சில் தோய்த்துப் பால் முதலியவற்றைப் பிழிய உண்டு மரணமுறுங் காலத்தில் சிவபெருமானின் திருவடிகளைச் சிந்தியாது இறக்கும் அஞ்ஞானியரைப் போல நமக்கும் இந்நிலை வருமா என நெஞ்சே நீ நாணுகின்றாய். கவனத்தோடு பாய்ந்து செல்லும் விடை ஏற்றில் ஏறிவரும் நீலகண்டனாகிய சிவபிரானது ஆரூரைச் சென்று தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 02
தந்தையார் போயினார் தாயரும் போயினார் தாமும் போவார்
கொந்த வேல் கொண்டு ஒரு கூற்றத்தார் பார்க்கின்றார் கொண்டு போவார்
எந்தநாள் வாழ்வதற்கே மனம் வைத்தியால்? ஏழை நெஞ்சே
அந்தணா ஆருர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் விளக்கம்:
ஏழை நெஞ்சே! தந்தை தாயர் இறந்தனர். தாமும் ஒரு நாள் இறக்கத்தான் போகின்றார். இயம தூதர்கள் வேலைக்கையில் கொண்டு குத்தி உயிர் போக்கப் பார்த்துக் கொண்டுள்ளனர். இப்படி வாழ்க்கை நிலையாமையில் இருத்தலால் நெஞ்சே இறவாமல் வாழ்வதற்கு எந்த நாள் மனம் வைப்பாய்? ஆரூர் இறைவனைத் தொழுதால் நீ உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 03
நிணம் குடர் தோல் நரம்பு என்பு சேர் ஆக்கைதான் நிலாயது அன்றால்
குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது எனக் குலுங்கினாயே
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம்கொடு ஏத்தும் 
அணங்கன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சமே.

பாடல் விளக்கம்:
நிணம், குடல், தோல், நரம்பு, என்பு இவற்றால் இயன்ற ஆக்கை நிலையானது அன்று. நல்ல குணங்கள் உடையார்க் இன்றித் தீய குணங்கள் உடையார்க்கு உளதாகும். குற்றங்கள் நீங்கா. நீயோ நடுங்கி நின்றாய். தேவர் அசுரர் முதலானோர் அனைவரும் வந்து வணங்கி மனம் கொண்டு வழிபடும் ஆரூர் இறைவனைத் தொழுதால் நீ உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 04
நீதியால் வாழ்கிலை நாள்செலா நின்றன நித்தம் நோய்கள்
வாதியா ஆதலால் நாளும் நாள் இன்பமே மருவினாயே 
சாதியார் கின்னரர் தருமனும் வருணனும் ஏத்து முக்கண் 
ஆதி ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் விளக்கம்:
நெஞ்சே! நீ நீதி வழியே வாழவில்லை. வாழ் நாள்கள் பல செல்லா நின்றன. நாள் தோறும் நோய்கள் பல துன்பம் செய்யாவாய் உள்ளன. ஆதலால் ஒவ்வொரு நாளும் நீ இன்பத்தையே கருதி நிற்கின்றாய். நற்குலத்தில் தோன்றிய கின்னரர், தருமன், வருணன் முதலியோர் வழிபட்டுப் போற்றும் ஆரூர் ஆதி முதல்வனாய முக்கண் மூர்த்தியைத் தொழுதால் நோய்கள் செய்ய உள்ள துயர்களிலிருந்து உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 05
பிறவியால் வருவன கேடு உள ஆதலால் பெரிய இன்பத் 
துறவியார்க்கு அல்லது துன்பம் நீங்காது எனத் தூங்கினாயே
மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி 
அறவன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் விளக்கம்:
நெஞ்சே! பிறவியால் கேடுகளே விளையும். பெரிய இன்பத்தை அடைய விரும்பும் துறவியர்க்கு அல்லது துன்பம் நீங்காது என மனம் சோர்கின்றாய். இறைவனை ஒருபோதும் மறவாதே! பெரியோர் கூறிய நல்வழிகளையே நீ பின்பற்றி வாழ்கின்றாய், புனிதமான கங்கை தங்கிய சடையினனாகிய அறவாழி அந்தணன் ஆரூர் சென்று தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 06
செடி கொள் நோய் ஆக்கையம் பாம்பின் வாய்த் தேரைவாய்ச் சிறு பறவை 
கடி கொள் பூந்தேன் சுவைத்து இன்புறலாம் என்று கருதினாயே 
முடிகளால் வானவர் முன் பணிந்து அன்பராய் ஏத்தும் முக்கண் 
அடிகள் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் விளக்கம்:
முடை நாற்றம் கொண்ட உடலகத்தே ஐம்பாம்பின் வாயில் அகப்பட்ட தேரையும், தேரையின் வாயில் அகப்பட்ட வண்டு, மணம் கமழும் பூந்தேனைச் சுவைத்து இன்புறக் கருதுவது போல உலகியல் இன்பங்களை நுகரக் கருதுகின்றாய். தேவர்கள் முடி தாழ்த்திப் பணிந்து அன்பராய்ப் போற்றும் ஆரூர் முக்கண் அடிகளைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!


பாடல் எண் : 07
ஏறுமால் யானையே சிவிகை அந்தளகம் ஈச்சோப்பி வட்டின் 
மாறி வாழ் உடம்பினார் படுவதோர் நடலைக்கு மயங்கினாயே 
மாறிலா வனமுலை மங்கையோர் பங்கினர் மதியம் வைத்த 
ஆறன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் விளக்கம்:
நெஞ்சே! உலா வரும் பெரிய யானை, சிவிகை, கவசம், விருது முதலியவற்றை ஆடைகளை மாற்றுவது போல மாற்றப்படும் பல பிறவிகள் எடுக்கும் உடலை உடையார் தாற்காலிகமாகப் பெறும் துன்ப மயமான வாழ்வைக்கண்டு மயங்குகின்றாய். ஒப்பற்ற அழகிய தனபாரங்களைக் கொண்ட உமையம்மை பங்கினரும், பிறை மதியையும் கங்கையையும் சூடிய முடியினரும் ஆகிய ஆரூர் இறைவரைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 08
என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் 
புன்புலால் நாறுதோல் போர்த்து பொல்லாமையால் முகடு கொண்டு
முன்பெலாம் ஒன்பது வாய்தலார் குரம்பையின் மூழ்கிடாதே 
அன்பன் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் விளக்கம்:
நெஞ்சே! எலும்புகளாய கழிகளைக் கட்டி இறைச்சியாகிய மண் சுவர் எழுப்பி, அற்பமான புலால் மணம் கமழும் தோலைப் போர்த்துப் பொல்லாமையாகிய முகடு வேய்ந்தமைத்தது நம் இல்லமாகிய உடல். பண்டு தொட்டு ஒன்பது வாயில்களை உடைய நம் உடலைப் பேணுதலாகிய முயற்சியிலேயே மூழ்கி விடாமல் நம்மேல் அன்புடையனாய ஆரூர் இறைவனை வணங்கினால் உய்தி பெறலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 09
தந்தை தாய் தன்னுடன் தோன்றினார் புத்திரர் தாரம் என்னும் 
பந்தம் நீங்காதவர்க்கு உய்ந்துபோக்கு இல் எனப் பற்றினாயே 
வெந்த நீறு ஆடியார் ஆதியார் சோதியார் வேத கீதர் 
எந்தை ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் விளக்கம்:
நெஞ்சே! தந்தை, தாய், உடன் பிறந்தார், புத்திரர், மனைவி ஆகிய பந்தங்களிலிருந்து விடு படாதவர்க்கு உய்தி அடையும் உபாயம் இல்லை எனத்தெளிந்து, வெந்த வெண்பொடி பூசிய வரும், ஆதியானவரும் சோதியாரும் வேதப்பாடல்களைப் பாடுபவரும், எந்தையும் ஆகிய ஆரூர் இறைவனைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 10
நெடியமால் பிரமனும் நீண்டு மண் இடந்து இன்னம் நேடிக் காணாப் 
படியனார் பவளம்போல் உருவனார் பனிவளர் மலையாள் பாக 
வடிவனார் மதிபொதி சடையனார் மணியணி கண்டத்து எண்தோள்
அடிகள் ஆரூர் தொழுது உய்யலாம் மையல் கொண்டு அஞ்சல் நெஞ்சே.

பாடல் விளக்கம்:
நெஞ்சே! நெடிய உருவெடுத்த திருமால், பன்றி உருவெடுத்து மண்ணிடந்தும், பிரமன் அன்ன வடிவெடுத்துப் பறந்து சென்றும் இன்று வரை தேடிக்காணாத நிலையில் தன்மையால் உயர்ந்த வரும், பவளம் போன்ற உருவினரும், இமவான் மகளாகிய பார்வதி தேவியைப் பாகமாகக் கொண்ட வடிவினரும், பிறையணிந்த தலை முடியினரும் நீலமணி போன்ற அழகிய கண்டத்தினரும் எட்டுத் தோள்களைக் கொண்டுள்ளவருமாகிய ஆரூர் அடிகளைத் தொழுதால் உய்யலாம். மையல் கொண்டு அஞ்சாதே!.


பாடல் எண் : 11
பல்லிதழ் மாதவி அல்லி வண்டு யாழ் செயும் காழி ஊரன் 
நல்லவே நல்லவே சொல்லிய ஞானசம்பந்தன் ஆரூர் 
எல்லியம் போதெரி ஆடும் எம் ஈசனை ஏத்து பாடல் 
சொல்லவே வல்லவர் தீது இலார் ஓத நீர் வையகத்தே.

பாடல் விளக்கம்:
பலவாகிய இதழ்களையுடைய மாதவி மலரின், அக இதழ்களில் வண்டுகள் யாழ் போல ஒலி செய்து தேனுண்டு மகிழும் காழிப் பதியூரனும் நல்லனவற்றையே நாள்தோறும் சொல்லி வருபவனும் ஆகிய ஞானசம்பந்தன் இராப்போதில் எரியில் நின்று ஆடும், ஆரூரில் எழுந்தருளிய எம் ஈசனை ஏத்திப் போற்றிய இப்பதிகப் பாடல்களைச் சொல்லி வழிபட வல்லவர்கள் கடல் நீரால் சூழப்பட்ட இவ்வையத்தில் தீதிலர்.


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

1 கருத்து:

  1. தங்களது திருமுறைப்பணி மிகச் சிறப்பு.சிவனருள் நின்று நிலாவூக

    பதிலளிநீக்கு