திங்கள், 23 மார்ச், 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 01

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை முதல் திருமுறை 91 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
சித்தம் தெளிவீர்காள் அத்தன் ஆரூரைப்
பத்தி மலர் தூவ முத்தி ஆகுமே.

பாடல் விளக்கம்:
சித்தம் மாசு நீங்கித் தெளிவடைய விரும்புகின்றவர்களே, அனைவர்க்கும் தலைவனாய் ஆரூரில் எழுந்தருளியிருக்கும் பெருமானைப் பக்தியோடு மலர் தூவி வாழ்த்துங்கள். சித்தத் தெளிவோடு முக்தி கிடைக்கும்.


பாடல் எண் : 02
பிறவி அறுப்பீர்காள் அறவன் ஆரூரை
மறவாது ஏத்துமின் துறவி ஆகுமே.

பாடல் விளக்கம்:
பிறப்பினை அறுத்துக் கொள்ள விரும்புபவர்களே, அறவடிவினனாகத் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் இறைவனை மறவாது ஏத்துங்கள் பிறப்பிற்குக் காரணமான ஆசைகள் நீங்கித் துறவு நிலை எய்தலாம்.


பாடல் எண் : 03
துன்பம் துடைப்பீர்காள் அன்பன் அணி ஆரூர்
நன்பொன் மலர் தூவ இன்பம் ஆகுமே.

பாடல் விளக்கம்:
துன்பங்களைத் துடைத்துக் கொள்ள விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளிய அன்பு வடிவான இறைவனை நல்ல பொலிவுடைய மலர்களைத் தூவி வழிபடுங்கள். துன்பம் நீங்குவதோடு இன்பம் உளதாம்.


பாடல் எண் : 04
உய்யல் உறுவீர்காள் ஐயன் ஆரூரைக்
கையினால் தொழ நையும் வினைதானே.

பாடல் விளக்கம்:
உலக வாழ்க்கையிலிருந்து கடைத்தேற விரும்புகின்றவர்களே, ஆரூரில் எழுந்தருளிய தலைவனாகிய இறைவனைக் கைகளைக் கூப்பி வணங்குங்கள். உங்கள் வினைகள் மெலிவடையும். உய்தி பெறலாம்.


பாடல் எண் : 05
பிண்டம் அறுப்பீர்காள் அண்டன் ஆரூரைக்
கண்டு மலர் தூவ விண்டு வினை போமே.

பாடல் விளக்கம்:
மீண்டும் பிறவா நிலையைப் பெற விரும்புகின்றவர்களே, ஆரூரில் எழுந்தருளிய அனைத்துலக நாயகனாகிய இறைவனைச் சென்று கண்டு மலர் தூவி வழிபடுங்கள். பிறப்புக்குக் காரணமான வினைகள் விண்டுபோம். பிறவாநிலை எய்தலாம்.


பாடல் எண் : 06
பாசம் அறுப்பீர்காள் ஈசன் அணி ஆரூர்
வாசமலர் தூவ நேசம் ஆகுமே.

பாடல் விளக்கம்:
உயிரோடு பிணைந்துள்ள பாசம் அகல வேண்டுமென விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளியுள்ள ஈசனை மணம் பொருந்திய மலர்களைத் தூவி வழிபடுங்கள். உம்பால் அவனது நேசம் உளதாகும். பாசம் அகலும்.


பாடல் எண் : 07
வெய்ய வினை தீர ஐயன் அணி ஆரூர்
செய்ய மலர் தூவ வையம் உமது ஆமே.

பாடல் விளக்கம்:
கொடிய வினைகள் தீர வேண்டுமென விரும்புகின்றவர்களே, அழகிய ஆரூரில் எழுந்தருளிய அனைத்துயிர்க்கும் தலைவனாகிய இறைவனைச் செம்மையான மலர்களைத் தூவி வழிபடுங்கள். உலகம் உம்முடையதாகும்.


பாடல் எண் : 08
அரக்கன் ஆண்மையை நெருக்கினான் ஆரூர்
கரத்தினால் தொழ திருத்தம் ஆகுமே.

பாடல் விளக்கம்:
அரக்கர் தலைவனாகிய இராவணனின் ஆற்றலைக் கால் விரல் ஒன்றால் நெருக்கி அடர்த்து அழித்து ஆரூரில் எழுந்தருளிய இறைவனைக் கைகளால் தொழுவீர்களாக. உமது மனக்கோணல் நீங்கும், திருத்தம் பெறலாம்.


பாடல் எண் : 09
துள்ளும் இருவர்க்கும் வள்ளல் ஆரூரை
உள்ளுமவர் தம்மேல் விள்ளும் வினைதானே.

பாடல் விளக்கம்:
செருக்குற்றுத் துள்ளிய திருமால் பிரமரின் செருக்கு அடக்கி அருள்செய்த, ஆரூரில் எழுந்தருளிய வள்ளற் பெருமானை மனத்தால் நினைத்து வழிபட வல்லவர்களின் வினைகள் நீங்கும்.


பாடல் எண் : 10
கடுக்கொள் சீவரை அடக்கினான் ஆரூர்
எடுத்து வாழ்த்துவார் விடுப்பர் வேட்கையே.

பாடல் விளக்கம்:
கடுக்காயைத் தின்று துவர் ஆடை போர்த்துத் திரியும் சமண புத்தர்களை அடக்கியவனாகிய ஆரூர் இறைவனே பரம்பொருள் எனச் சிறப்பித்து வாழ்த்துவார், வேட்கை என்னும் ஆசையை விடுப்பர்.


பாடல் எண் : 11
சீரூர் சம்பந்தன் ஆரூரைச் சொன்ன
பாரூர் பாடலார் பேரார் இன்பமே.

பாடல் விளக்கம்:
சிறப்புப் பொருந்திய ஞானசம்பந்தன் ஆரூர் இறைவன்மீது பாடிய உலகம் முழுதும் பரவிய பாடல்களைப் பாடி வழிபட வல்லவர் இன்பத்தினின்று நீங்கார்.


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக