செவ்வாய், 24 மார்ச், 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 02

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை முதல் திருமுறை 105 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருஞானசம்பந்த சுவாமிகள்


பாடல் எண் : 01
பாடலன் நான்மறையன் படிபட்ட கோலத்தன் திங்கள்
சூடலன் மூவிலைய சூலம் வலனேந்திக்
கூடலர் மூவெயிலும் எரியுண்ணக் கூர் எரி கொண்டு எல்லி
ஆடலன் ஆதிரையன் ஆரூர் அமர்ந்தானே.

பாடல் விளக்கம்:
திருவாரூரின்கண் எழுந்தருளிய இறைவன் பாடப்படும் நான்கு வேதங்களை அருளியவன். ஒப்பற்ற தோற்றத்தை உடையவன். திங்களை முடியிற் சூடியவன். இலை வடிவமான முத்தலைச் சூலத்தை வலக்கரத்தே ஏந்தித் தன் பகைவராக இருந்த அசுரர்களின் முப்புரங்களையும் எரியுண்ணச் செய்தவன். மிக்க எரியைக் கையில் ஏந்தி நள்ளிரவில் நடம்புரிபவன். திருவாதிரை நாளை உகந்தவன்.


பாடல் எண் : 02
சோலையில் வண்டு இனங்கள் சுரும்போடு இசை முரல சூழ்ந்த
ஆலையின் வெம்புகை போய் முகில் தோயும் ஆரூரில்
பாலொடு நெய் தயிரும் பயின்று ஆடும் பரமேட்டி பாதம்
காலையும் மாலையும் போய் பணிதல் கருமமே.

பாடல் விளக்கம்:
சோலைகளில் வண்டுகளும், சுரும்புகளும் இசை முரலவும், சூழ்ந்துள்ள கரும்பாலைகளில் தோன்றும் விரும்பத்தக்க புகை மேல் நோக்கிச் சென்று வானத்திலுள்ள முகில்களில் தோய்வதுமான திருவாரூரில் பால், நெய், தயிர் ஆகியவற்றை விரும்பி ஆடும் மேலான இறைவன் திருவடிகளைக் காலை மாலை ஆகிய இரு போதுகளிலும் சென்று பணிவது நாம் செய்யத்தக்க கருமமாகும்.


பாடல் எண் : 03
உள்ளமோர் இச்சையினால் உகந்து ஏத்தித் தொழுமின் தொண்டீர் மெய்யே
கள்ளம் ஒழிந்திடுமின் கரவாது இரு பொழுதும்
வெள்ளமோர் வார் சடை மேல் கரந்திட்ட வெள்ளேற்றான் மேய
அள்ளல் அகன் கழனி ஆரூர் அடைவோமே.

பாடல் விளக்கம்:
தொண்டர்களே! நீவிர் உள்ளத்தால் ஆராய்ந்தறிந்த விருப்போடு மகிழ்ந்து போற்றித் தொழுவீர்களாக. மறைக்காமல் உண்மையாகவே உம் நெஞ்சத்திலுள்ள கள்ளங்களை ஒழிப்பீர்களாக! காலை மாலை இருபோதுகளிலும் கங்கை வெள்ளத்தை ஒப்பற்ற நீண்ட தன் சடைமேல் மறையும்படி செய்தவனும், வெண்மையான ஆனேற்றை உடையவனுமான சிவபிரான் எழுந்தருளிய சேற்று வளம் மிக்க அகன்ற வயல்களால் சூழப்பெற்ற திருவாரூரை வழிபடுதற் பொருட்டு நாம் செல்வோம்.


பாடல் எண் : 04
வெந்துறு வெண் மழுவாள் படையான் மணிமிடற்றான் அரையின்
ஐந்தலை ஆடு அரவம் அசைத்தான் அணி ஆரூர்ப்
பைந்தளிர்க் கொன்றையந்தார்ப் பரமன் அடிபரவப் பாவம்
நைந்தறும் வந்து அணையும் நாள்தொறும் நல்லனவே.

பாடல் விளக்கம்:
அடியவர்களின் வினைகளை வெந்தறுமாறு செய்யும் வெண்மையான மழுவாளைக் கையில் ஏந்தியவனும், நீலமணி போன்ற கண்டத்தை உடையவனும், இடையில் ஐந்து தலையுடையதாய் ஆடும் பாம்பினைக் கட்டியவனும், அழகிய திருவாரூரில் பசுந்தளிர்களோடு கட்டிய கொன்றை மாலையை அணிந்தவனுமாகிய பரமனுடைய அடிகளைப் பரவ நம் பாவங்கள் நைந்து இல்லையாகும். நாள்தோறும் நமக்கு நல்லனவே வந்தணையும்.


பாடல் எண் : 05
வீடு பிறப்பெளிதாம் அதனை வினவுதிரேல் வெய்ய
காடு இடமாக நின்று கனலேந்திக் கை வீசி
ஆடும் அவிர்சடையான் அவன் மேய ஆரூரைச் சென்று
பாடுதல் கைதொழுதல் பணிதல் கருமமே.

பாடல் விளக்கம்:
வீடு பேற்றை அடைதல் நமக்கு எளிதாகும். அதற்குரிய வழிகளை நீர் கேட்பீராயின் கூறுகிறேன். கொடிய சுடுகாட்டைத் தனக்குரிய இடமாகக் கொண்டு கனலை ஏந்திக் கைகளை வீசிக்கொண்டு ஆடுகின்ற விளங்கிய சடைமுடியை உடையவனாகிய சிவபிரான் எழுந்தருளிய திருவாரூரை அடைந்து பாடுதல், கைகளால் தொழுதல், பணிதல் ஆகியனவற்றைச் செய்தலே அதற்குரிய வழிகளாகும்.


பாடல் எண் : 06
கங்கையோர் வார்சடைமேல் கரந்தான் கிளிமழலைக் கேடில்
மங்கையோர் கூறுடையான் மறையான் மழுவேந்தும்
அம் கையினான் அடியே பரவி அவன் மேய ஆரூர்
தம் கையினால் தொழுவார் தடுமாற்று அறுப்பாரே.

பாடல் விளக்கம்:
கங்கையை ஒப்பற்ற தனது நீண்ட சடைமுடிமேல் கரந்தவனும், கிளி போன்ற மழலை மொழி பேசும் கேடில்லாத உமை மங்கையை ஒரு பாகமாக உடையவனும், மழுவாயுதத்தை அழகிய கையில் ஏந்தியவனும் ஆகிய இறைவன் திருவடிகளையே பரவி அவன் எழுந்தருளிய திருவாரூரைத் தம் கைகளால் தொழுபவர் தடுமாற்றங்கள் தவிர்வர்.


பாடல் எண் : 07
நீறணி மேனியனாய் நிரம்பா மதி சூடி நீண்ட
ஆறணி வார்சடையான் ஆரூர் இனிது அமர்ந்தான்
சேறணி மாமலர்மேல் பிரமன் சிரமரிந்த செங்கண்
ஏறணி வெல்கொடியான் அவன் எம்பெருமானே.

பாடல் விளக்கம்:
திருநீறு அணிந்த திருமேனியனாய்த் திருமுடியில் இளம்பிறையைச் சூடி, கங்கை விளங்கும் அழகிய நீண்ட சடைமுடியை உடையவனாய், திருவாரூரின் கண் மகிழ்வோடு எழுந்தருளி விளங்குபவனும், சேற்றின்கண் அழகியதாய்த் தோன்றி மலர்ந்த தாமரை மலர்மேல் விளங்கும் பிரமனது சிரங்களில் ஒன்றைக் கொய்த, சிவந்த கண்களை உடைய விடையேற்றை வெற்றிக் கொடியாகக் கொண்டவனுமாகிய சிவபெருமானே எம் தலைவனாவான்.


பாடல் எண் : 08
(*) இப்பதிகத்தில் 8-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.


பாடல் எண் : 09
வல்லியந்தோல் உடையான் வளர் திங்கள் கண்ணியினான் வாய்த்த
நல்லியல் நான்முகத்தோன் தலையின் நறவு ஏற்றான்
அல்லியங் கோதைதன்னை ஆகத்து அமர்ந்து அருளி ஆரூர்ப்
புல்லிய புண்ணியனைத் தொழுவாரும் புண்ணியரே.

பாடல் விளக்கம்:
வலிய புலியினது தோலை உடுத்தவனும், வளர்தற் குரிய பிறைமதியைக் கண்ணியாகச் சூடியவனும், நல்லியல்புகள் வாய்ந்த பிரமனது தலையில் பலியேற்று உண்பவனும், அல்லியங்கோதை என்ற பெயருடைய அம்மையைத் தனது திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவனும் ஆகிய திருவாரூரில் விளங்கும் புண்ணியனைத் தொழுபவர்களும் புண்ணியராவர்.


பாடல் எண் : 10
செந்துவர் ஆடையினார் உடை விட்டு நின்றுழல்வார் சொன்ன
இந்திர ஞாலம் ஒழிந்து இன்புற வேண்டுதிரேல்
அந்தர மூவெயிலும் அரணம் எரியூட்டி ஆரூர்த்
தந்திர மாவுடையான் அவன் எம் தலைமையனே.

பாடல் விளக்கம்:
செந்துவர் ஊட்டப்பட்ட ஆடையை உடுத்தவரும், ஆடையின்றித் திகம்பரராய்த் திரிபவரும் ஆகிய புத்த சமணர்கள் கூறிய மாயப் பேச்சுக்களைக் கேளாது விடுத்து, இன்புற்று வாழ விரும்புவீராயின் வானத்தில் திரியும் மூவெயில்களாகிய கோட்டைகளை எரியூட்டி அழித்தவனும் திருவாரூரைத் தனக்கு நிலையான இடமாகக் கொண்டவனுமாகிய சிவபிரானே எம் தலைவன் என்று வழிபடுவீர்களாக.


பாடல் எண் : 11
நல்ல புனல் புகலித் தமிழ் ஞானசம்பந்தன் நல்ல
அல்லி மலர்க்கழனி ஆரூர் அமர்ந்தானை
வல்லது ஓர் இச்சையினால் வழிபாடிவை பத்தும் வாய்க்கச்
சொல்லுதல் கேட்டல் வல்லார் துன்பம் துடைப்பாரே.

பாடல் விளக்கம்:
தூயதான நீர் வளத்தை உடைய புகலியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன் அக இதழ்களையுடைய நல்ல தாமரை முதலிய மலர்கள் பூத்த கழனிகளால் சூழப்பட்ட திருவாரூரில் எழுந்தருளிய இறைவனைத் தனக்கியன்ற வல்லமையால் அன்போடு பாடிய வழிபாட்டுப் பாடல்களாகிய இப்பதிகத்தைப் பொருந்தச் சொல்லுதல் கேட்டல் வல்லவர்கள் துன்பம் துடைப்பவர்களாவர்.


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக