வியாழன், 16 ஏப்ரல், 2015

தசபுராண திருப்பதிகம்

திருமுறை நான்காம் திருமுறை 14 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்

பதினெட்டு புராணங்களில் பத்து புராணங்கள் சிவபுராணங்கள்; நான்கு புராணங்கள் வைணவத்தைச் சார்ந்தவை: பிரம புராணமும் பதும புராணமும் பிரமன் பற்றியவை, எஞ்சியுள்ள இரண்டு புராணங்கள், கைவர்த்த புராணம் (சூரியன் பற்றியது) மற்றும் ஆக்னேய புராணம் (அக்னிக்கு உரியது. சைவ புராணம், பவுடிக புராணம், மார்க்கண்டேய புராணம், இலிங்க புராணம், கந்த புராணம், வராக புராணம், வாமன புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், பிரமாண்ட புராணம் என்பன சைவ புராணங்கள். இவை தச புராணங்கள் என்று பொதுவாக அழைக்கப்படுகின்றன. இந்த தச புராணங்களில் சொல்லப்பட்டுள்ள நிகழ்ச்சிகளை குறிப்பிடும் பாடல்கள் கொண்ட பதிகம் என்பதால் தசபுராணத் திருப்பதிகம் என்று அழைக்கப்படுகின்றது.


பாடல் எண் : 01
பருவரை ஒன்று சுற்றி அரவம் கைவிட்ட இமையோர் இரிந்து பயமாய்த்
திருநெடுமால் நிறத்தை அடுவான் விசும்பு சுடுவான் எழுந்து விசை போய்ப்
பெருகிட மற்று இதற்கோர் பிதிகாரம் ஒன்றை அருளாய், பிரானே எனலும்
அருள் கொடு மாவிடத்தை எரியாமல் உண்ட அவன் அண்டர் அரசே.

பாடல் விளக்கம்:
பெரிய மந்தர மலையை மத்தாக பயன்படுத்தி, வாசுகி பாம்பினை கயிறாக அந்த மலையுடன் சேர்த்து வைத்து கட்டி பாற்கடலைக் கடைந்து கொண்டிருந்த தேவர்கள், பாற்கடலிலிருந்து கொடிய விடம் வெளிப்படவே, பயந்து போய் தாங்கள் கடைந்து கொண்டிருந்த செயலைக் கைவிட்டுவிட்டு ஓடினார்கள். அப்போது அங்கே வெளிப்பட்ட விடம், திருமால் முதலான தேவர்களை அழிப்பது போன்றும், ஆகாயத்தை சுட்டெரிப்பது போன்றும், வேகமாக அனைத்து இடங்களிலும் பரவியது; அஞ்சி ஓடிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று, தலைவரே இந்த விடத்திலிருந்து நாங்கள் எவ்வாறு தப்பிப்பது, எங்களுக்கு மாற்று வழி நீங்கள் தான், அருள வேண்டும் என்று வேண்டியபோது, தேவர்கள் பால் இருந்த கருணையினால் கொடிய ஆலகால விடத்தை, அந்த விடம் மற்றவர்களைத் தாக்காதவாறு தானே உட்கொண்ட சிவபிரான் தான் அனைத்து உலகங்களுக்கும் அரசனாவான்.


பாடல் எண் : 02
நிரவொலி வெள்ளம் மண்டி நெடு அண்டம் மூட நிலம் நின்று தம்பம் அதுவப்
பரம் ஒரு தெய்வம் எய்த இது ஒப்பது இல்லை இருபாலும் நின்று பணியப்
பிரமனும் மாலும் மேலை முடியோடு பாதம் அறியாமை நின்ற பெரியோன்
பர முதலாய தேவர் சிவனாய மூர்த்தி அவன் நமக்கொர் சரணே.


பாடல் விளக்கம்:
எங்கும் பரவிய ஒலியுடன் வெள்ளப் பெருக்கெடுத்து நீர் சுழித்து ஓடி, அனைத்து அண்டங்களையும் மூழ்கடிப்ப, நிலத்திலே நின்ற தீப்பிழம்பாக பரம்பொருள் சிவபெருமான் நின்ற போது, இந்த தீப்பிழம்பினை ஒத்த அழற்தூண் இதற்கு முன்னர் தொன்றியதில்லை என்பதை உணர்ந்த திருமாலும் பிரமனும், அந்த தீப்பிழம்பின் இருபுறத்திலும் நின்று பணிந்து பின்னர் அதன் அடியையும் முடியையும் தேட முற்பட்ட போது, அவர்களால் அடி முடி காணாத வண்ணம் ஓங்கி நின்ற பெருமான், பரம் என்று சொல்லிக்கொண்டு தங்களுக்குள் வாதம் செய்த பிரமன், திருமால் இருவருக்கும் மற்றுமுள்ள தேவர்களுக்கும் பெரியோனாகிய மூர்த்தி ஆவான். அத்தகைய பரம்பொருள் தான், நமக்கு ஒப்பற்ற அடைக்கலப் பொருளாக விளங்குகின்றான்.


பாடல் எண் : 03
காலமும் நாள்கள் ஊழி படையா முன் ஏக உருவாகி மூவர் உருவில்
சாலவும் ஆகி மிக்க சமயங்கள் ஆறின் உருவாகி நின்ற தழலோன்
ஞாலமும் மேலை விண்ணொடு உலகேழும் உண்டு குறளாய் ஒர் ஆலின் இலை மேல்
பாலனும் ஆயவர்க்கு ஒர் பரமாய மூர்த்தி அவனா நமக்கு ஒர் சரணே.

பாடல் விளக்கம்:
இருபத்தேழு நட்சத்திரங்கள் மற்றும் காலங்களால் பகுக்கப்பட்ட நாட்களுக்கும் முன்னமேயும், ஊழிக் காலத்தையும் கடந்தும், ஒரே உருவமாகத் திகழ்பவனும், மூன்று மூர்த்திகளின் உருவாகவும், அவர்களின் உயிராகவும் அமைந்த சிவபெருமான் ஆறு சமயத்தவர்களுக்கும் அவரவர்களின் சமயத்தின் பொருளாக விளங்குகின்றான்: சோதி வடிவாகத் திகழும் இந்த சிவபெருமான், ஊழிக்காலத்தில் அனைத்து உலகங்களையும் தனது வயிற்றில் அடக்கி ஒரு ஆலிலையின் மேல் துயில்பவனும் ஆகிய திருமாலுக்கும் மேம்பட்ட மூர்த்தியாக உள்ளான். இந்த சிவபெருமான் தான் சரண் அடையத்தக்க பரம்பொருள் ஆவான்.


பாடல் எண் : 04
நீடுயர் விண்ணும் மண்ணும் நெடுவேலை குன்றொடு உலகு ஏழும் எங்கும் நலியச்
சூடிய கையராகி இமையோர் கணங்கள் துதி ஓதி நின்று தொழலும்
ஓடிய தாரகன் தன் உடலம் பிளந்தும் ஒழியாத கோபம் ஒழிய
ஆடிய மாநடத்து எம் அனலாடி பாதம் அவையாம் நமக்கு ஒர் சரணே.

பாடல் விளக்கம்:
நெடிது உயர்ந்த ஆகாயம், நிலவுலகம், கடல், மலைகள், மற்றுமுள்ள ஏழுலகங்கள் அனைத்தும் வருந்துமாறு தாரகன் துன்புறுத்த, அதனால் வருந்திய தேவர்கள் சிவபிரானை அணுகி, தங்களது கைகளைத் தலை மேல் குவித்து அவரைத் தொழுது வேண்டினார்கள்: அதனால் மனம் மகிழ்ந்த சிவபிரான், பார்வதி தேவியின் அம்சமாகிய காளிக்கு வேண்டிய வல்லமை அளித்து தருகனைக் கொல்லுமாறு பணித்தார்: மிகுந்த வல்லமையுடன் காளி வருவதைக் கண்டு, தனது இறுதி நாள் நெருங்கிவிட்டதை உணர்ந்த தாரகன் தப்பி ஓட முயற்சி செய்த போது, அவனைத் துரத்திக் கொன்ற பின்னும் தனது கோபம் தணியாமல் காளியம்மை இருந்த போது, போட்டி நடனம் ஆடி அவளது கோபத்தைத் தணித்த சிவபெருமானின் திருப்பாதங்கள் நமக்கு ஒப்பற்ற அடைக்கலமாகும்.


பாடல் எண் : 05
நிலை வலி இன்றி எங்கும் நிலனோடு விண்ணும் நிதனம் செய்து ஓடு புரம் மூன்று
அலை நலி அஞ்சி ஓடி அரியோடு தேவர் அரணம் புக தன் அருளால்
கொலை நலி வாளி மூள அரவு அம் கை நாணும் அனல் பாய நீறு புரமா
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவனா நமக்கு ஒர் சரணே.

பாடல் விளக்கம்:
மண்ணுலகையும் விண்ணுலகையும் அழித்துக் கொண்டு பறக்கும் கோட்டைகளில் உலவிக் கொண்டிருந்த திரிபுரத்து அரக்கர்களின் வல்லமையைக் கண்டு அவர்களுக்கு எதிரே நிலைத்து நின்று சண்டையிடும் ஆற்றல் இல்லாததால், அவர்கள் இழைத்த துன்பங்களுக்கு அஞ்சி, திருமால் முதலான தேவர்கள் அஞ்சி சிவபிரானிடத்தில் தஞ்சம் புகுந்தனர்: அவர்கள் மீது கருணை கொண்ட சிவபிரான், கொலைத் தொழிலில் வல்லவராகிய திருமால் கூர்மை மிகுந்த அம்பாகவும், வாசுகி பாம்பு நாணாகவும், அம்பினில் தீக்கடவுள் இணையவும், மேருமலையை வில்லாக வளைவித்து, மூன்று புரங்களையும் சாம்பலாகச் எரித்தார். இத்தகைய வல்லமை பெற்ற சிவபிரான் தான் நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவர் ஆவார்.


பாடல் எண் : 06
நீல நன்மேனி செங்கண் வளை வெள்ளெயிற்றன் எரிகேசன் நேடி வருநாள்
காலை நன்மாலை கொண்டு வழிபாடு செய்யும் அளவின் கண் வந்து குறுகிப்
பாலனை ஓட ஓடப் பயம் எய்துவித்த உயிர் வவ்வு பாசம் விடும் அக்
காலனை வீடு செய்த கழல் போலும் அண்டர் தொழுது ஓது சூடு கழலே.

பாடல் விளக்கம்:
கருநீலநிறம் உடைய உடலையும், சிவந்த கண்களையும், வளைந்த வெண்மையான கோரைக் பற்களையும், நெருப்பு போன்று சிவந்த முடியினையும் கொண்ட காலன், சிறுவன் மார்க்கண்டேயனைத் தேடி வந்த அன்று, அந்த சிறுவன் அன்று காலையில் மலர்ந்த மலர்களைப் பறித்து சிவபிரானுக்கு வழிபாடு செய்து கொண்டிருந்தான்: அதனைப் பொருட்படுத்தாமல், அந்த சிறுவனை அச்சுறுத்தி, அவனது உயிரினை கவருவதற்காக தனது கையில் இருந்த பாசக் கயிற்றினை காலன் வீசவும், அந்த காலனை தனது காலால் உதைத்து அழித்த சிவபிரானின் திருவடிகள், தேவர்கள் தொழுது வாழ்த்தித் தங்கள் தலை மேல் சூடிக் கொள்ளும் திருவடிகளாகும்.


பாடல் எண் : 07
உயர் தவம் மிக்க தக்கன் உயர் வேள்வி தன்னில் அவி உண்ண வந்த இமையோர்
பயமுறும் எச்சன் அங்கு மதியோனும் உற்ற படி கண்டு நின்று பயமாய்
அயனொடு மாலும் எங்கள் அறியாமை ஆதி கமி என்று இறைஞ்சி அகலச்
சயமுறு தன்மை கண்ட தழல் வண்ணன் எந்தை கழல் கண்டு கொள்கை கடனே.

பாடல் விளக்கம்:
தவத்தில் மேம்பட்ட தக்கன் நடத்திய சிறப்பான வேள்வியில் கிடைக்கும் அவிர் பாகத்தை உண்ணுவதற்காக அந்த வேள்வியில் பங்கு கொண்ட வேள்வித் தலைவன், தேவர்களாகிய அக்னி, சந்திரன் ஆகியோர் பெற்ற தண்டனையைக் கண்ட பிரமனும் திருமாலும், நாங்கள் அறியாமையால் செய்த தவற்றினை மன்னித்து அருள வேண்டும் என்று வேண்டிய படியே வேள்விச் சாலையிலிருந்து அகன்று செல்லுமாறு, வெற்றி கண்ட, செந்தீயின் நிறத்தை ஒத்த மேனியை உடைய சிவபிரானின் திருப்பாதங்களைக்கண்டு வழிபடுவதே அனைத்து உயிர்களின் கடமையாகும்.


பாடல் எண் : 08
நலமலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயனத் தலங்கள் கரமா
உலகினை ஏழும் முற்றும் இருள் மூட மூட இருள் ஓட நெற்றி ஒரு கண்
அலர் தர அஞ்சி மற்றை நயனம் கை விட்டு மடவாள் இறைஞ்ச மதி போல்
அலர் தரு சோதி போல் அலர் வித்த முக்கண் அவனா நமக்கு ஓர் சரணே.

பாடல் விளக்கம்:
அழகும் பண்பும் நிறைந்த பார்வதி தேவி, விளையாட்டாக சிவபிரானின் இரண்டு கண்களையும் பொத்தின போது, பெருமானின் இரண்டு கண்களும் சூரிய சந்திரர்களாக விளங்கும் காரணத்தால், உலகெங்கும் இருள் சூழ்ந்தது. உலகினில் இருள் சூழ்ந்து, உலகினில் உள்ள அனைத்து உயிர்களும் வாடின. உயிர்களின் வாட்டத்தை நீக்கவேண்டி, சிவபெருமான் தனது மூன்றாவது கண்ணினைத் திறந்து ஒளி பரப்பவே உலகினைச் சூழ்ந்திருந்த இருள் அகன்றது. மூன்றாவது கண்ணிலிருந்து வெளிப்பட்ட வெப்பத்தைத் தாங்க முடியாமல், பார்வதி தேவி தனது இரு கைகளையும் எடுத்து, தான் செய்த தவறினை மன்னித்து அருளுமாறு இறைவனை வேண்டினாள். மீண்டும், சந்திரனைப் போலவும், சூரியனைப் போலவும் தனது இரண்டு கண்களையும் ஒளிரச் செய்து உலகினில் ஒளி பரப்பிய முக்கண் மூர்த்தி நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் தருபவராவார்.


பாடல் எண் : 09
கழை படு காடு தென்றல் குயில் கூவ அஞ்சு கணையோன் அணைந்து புகலும்
மழை வடி வண்ணன் எண்ணி மகவோனை விட்ட மலரான தொட்ட மதனன்
எழில் பொடி வெந்து வீழ இமையோர் கணங்கள் எரி என்று இறைஞ்சி அகலத்
தழல் படு நெற்றி ஒற்றை நயனம் சிவந்த தழல் வண்ணன் எந்தை சரணே.

பாடல் விளக்கம்:
கரும்புகள் காடு போல் வளர்ந்துள்ள கரும்புக் கொல்லையில் தென்றல் காற்று வீச, குயில்கள் கூவ, வசந்தகாலச் சூழ்நிலை நிலவியது: அப்போது ஐந்து மலர்களை அம்புகளாகக் கொண்ட மன்மதன், தன்னை இந்த முயற்சியில் பலவந்தமாக ஈடுபடுத்திய இந்திரன், திருமால், பிரமன் ஆகியோரை விட்டு நீங்கி, சிவபெருமான் தவம் செய்யும் இடத்திற்கு வந்து, மலர் அம்புகளை சிவபிரான் மீது எய்தான். மன்மதனின் அம்புகளால் தனது தவம் கலையவே, கோபம் கொண்டு எழுந்த சிவபிரான் தனது நெற்றிக் கண்ணினைத் திறந்தார்; உடன் நிற்பதாகச் சொல்லி மன்மதனை அழைத்து வந்த தேவர்கள், சிவபிரானின் நெற்றிக் கண்ணிலிருந்து எழுந்த நெருப்பினைக் கண்டதும் பயந்து ஓடினார்கள். அந்த தீ மன்மதனை எரித்து சாம்பலாக்கியது. இவ்வாறு, ஒப்பற்ற மூன்றாவது கண்ணினை உடைய, சிவபிரான் தான் நமக்கு அடைக்கலம் அளிக்க கூடியவன் ஆவான்.


பாடல் எண் : 10
தடமலர் ஆயிரங்கள் குறைவு ஒன்றதாக நிறைவு என்று தன் கண் அதனால்
உடன் வழிபாடு செய்த திருமாலை எந்தை பெருமான் உகந்து மிகவும்
சுடர் அடியால் முயன்று சுழல் வித்து அரக்கன் இதயம் பிளந்த கொடுமை
அடல் வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவனா நமக்கு ஒர் சரணே.

பாடல் விளக்கம்:
பெரிய தாமரை மலர்கள் ஆயிரம் கொண்டு தனது வழிபாட்டினைத் தொடங்கிய, திருமால், ஒரு பூ குறைவதைக் கண்டு, குறைந்த மலருக்கு பதிலாக தனது கண்ணினையே தோண்டி மலராக இறைவனுக்கு அளித்து வழிபாடு செய்தார். இவ்வாறு திருமால் செய்த வழிபாட்டினை மிகவும் உகந்து சிவபெருமான் ஏற்றுக்கொண்டார். முன்னொரு நாள் அரக்கன் சலந்தரனின் வலிமை வாய்ந்த மார்பினைப் பிளந்த கூர்மை மிக்க சக்கரத்தை, பாற்கடலில் படுக்கை அமைத்துக் கொண்ட திருமாலுக்கு பரிசாக சிவபிரான் அளித்தார், இந்த சக்கரப் படையானது, தனது ஒளி மிகுந்த செம்மையான திருவடியால், சிவபெருமான் நிலத்தில் ஒரு வட்டம் இட, அந்த வட்டம் சுழன்று ஆழிப்படையாக மாறியது. இவ்வாறு சிறப்பாக தயாரிக்கப்பட்ட படையினையும், தன்னை வழிபட்ட திருமாலுக்கு பரிசாக அளித்த கருணை உள்ளம் கொண்ட சிவபிரானே நமக்கு ஒப்பற்ற அடைக்கலம் நல்குபவன் ஆவான்.


பாடல் எண் : 11
கடுகிய தேர் செலாது கயிலாயம் மீத கருதேல் உன் வீரமொழி நீ
முடுகுவது அன்று தன்மம் என நின்று பாகன் மொழிவானை நன்று முனியா
விடு விடு என்று சென்று விரைவுற்று அரக்கன் வரை உற்று எடுக்க முடி தோள்
நெடு நெடு விற்று வீழ விரல் உற்ற பாதம் நினைவு உற்றது எந்தன் மனனே.

பாடல் விளக்கம்:
வானில் மிகவும் விரைந்து செல்லும் ஆற்றல் படைத்த தேராயினும், இந்த புட்பகத் தேர், கயிலாய மலை மீது செல்லாது; உனது வீரத்தைப் பெரிதாகக் கருதாது நீ செய்யும் முயற்சியை கைவிட்டு விடு, நான் உனக்கு சொல்லும் புத்திமதியைக் கொள்ளாது என்னிடம் நீ கோபம் கொள்வது அறமன்று என்று சொல்லி தேரை நிறுத்திய தேர்ப்பாகனின் நன்மை தரும் மொழிகளைப் புறக்கணித்து, அரக்கன் இராவணன் பாகனை வெகுண்டு, மிகவும் விரைவாக கயிலை மலை நோக்கிச் சென்றான் தான் செல்லும் வழியில் குறுக்கிட்டது என்று கருதி கயிலை மலையினை பெயர்த்து எடுக்க இராவணன் முயற்சி செய்த போது, அவனது தலைகளும் நெடிய தோள்களும், நெடிய உடலும் நொறுங்குமாறு, கயிலை மலையைத் தனது விரலால் அழுத்திய சிவபிரானின் பாதம் எனது நினைவிற்கு வந்தது. அத்தகைய திருவடிகளை நான் எண்ணுகின்றேன்.

நன்றி: திரு என். வெங்கடேஸ்வரன் ஐயா


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக