சனி, 11 ஏப்ரல், 2015

திருவாரூர் திருமுறை பதிகங்கள் 09

இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்

இறைவியார் திருப்பெயர் அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்

திருமுறை நான்காம் திருமுறை 20 வது திருப்பதிகம்

அருளிச்செய்தவர் திருநாவுக்கரசு சுவாமிகள்


பாடல் எண் : 01
காண்டலே கருத்தாய் நினைந்து இருந்தேன் மனம் புகுந்தாய் கழலடி
பூண்டு கொண்டு ஒழிந்தேன் புறம் போயினால் அறையோ
ஈண்டு மாடங்கள் நீண்ட மாளிகை மேல் எழு கொடி வானிளம் மதி
தீண்டி வந்து உலவும் திருவாரூர் அம்மானே.

பாடல் விளக்கம்:
நெருங்கிய மாடங்கள், உயர்ந்த மாளிகைகள், இவற்றின் மேல் ஏற்றப்பட்ட கொடிகள், வானில் உலவும் சந்திரனைத் தீண்டுமாறு உயர்ந்து காணப்படுகின்றன. இவ்வாறு செல்வச் செழிப்பு மிகுந்த திருவாரூர் நகரில் உறையும் எங்கள் தலைவனே, உன்னைக் காண்பதே எனது கருத்தாக, மற்ற சிந்தனை ஏதும் இல்லாமல் இந்நாள் வரை இருந்த நான் உன்னை எனது ஆசை தீர கண்டு கொண்டேன்; நீ எனது மனதினில் புகுந்ததையும் நான் உணர்ந்துவிட்டேன்; உனது காலில் விளங்கும் வீரக் கழல்களை, எனது மனதிற்கு அணிகலனாக நான் அணிந்துகொண்டேன்; மற்றப் பற்றுக்கள் அனைத்தையும் விட்டு விட்டேன்; நீ என்னை விடுத்து வெளியே போக விடமாட்டேன்.


பாடல் எண் : 02
கடம் பட நடம் ஆடினாய் களைகண்ணினக்கு ஒரு காதல் செய்து அடி
ஒடுங்கி வந்தடைந்தேன் ஒழிப்பாய் பிழைப்ப எல்லாம்
முடங்கு இறால் முது நீர் மலங்கு இளவாளை செங்கயல் சேல்வரால் களிறு
அடைந்த தண்கழனி அணி ஆரூர் அம்மானே.

பாடல் விளக்கம்:
வளைந்த இறால் மீன், பழைய நீர்ப்பள்ளத்தில் உறையும் மலங்கு, இளைய வாளை மீன், சிவந்த கயல் மீன்கள், சேல் மீன்கள், வரால் மீன்கள், களிறு என்ற மீன்கள் வந்து சேரும் குளிர்ந்த வயல்களை உடைய அழகிய ஆரூர்த் தலைவனே! பஞ்சமுக வாத்தியம் ஒலிக்கக் கூத்தாடுபவனே! அடைக்கலம் நல்குபவனாயுள்ள நின்பால் தனியன்பு கொண்டு உன் திருவடிகளில் உலகப் பற்றுக்கள் ஒடுங்க, வந்து அடைந்தேன். அடியேன் செய்த பிழைகளை எல்லாம் போக்குவாயாக.


பாடல் எண் : 03
அருமணித்தடம் பூண்முலை அரம்பையரொடு அருளிப்பாடியர்
உரிமையில் தொழுவார் உருத்திர பல்கணத்தார்
விரிசடை விரதிகள் அந்தணர் சைவர் பாசுபதர் கபாலிகள்
தெருவினில் பொலியும் திருவாரூர் அம்மானே.

பாடல் விளக்கம்:
விலை உயர்ந்த மணிகளாலாகிய பெரிய அணிகலன்களைப் பூண்ட மார்பினை உடைய தேவருலகப் பெண்கள் போல்வாரோடு, கோயில் பணி செய்பவர்கள். ஆதி சைவர்கள், சிவகணத்தார், விரிந்த சடையை உடைய, விரத ஒழுக்கம் பூண்ட மாவிரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள் ஆகியோர் தெருக்களில் பலராகக் காணப்படும் திருவாரூர்த் தலைவனே.


பாடல் எண் : 04
பூங்கழல் தொழுதும் பரவியும் புண்ணியா புனிதா உன் பொற்கழல்
ஈங்கு இருக்கப் பெற்றேன் என்ன குறை உடையேன்
ஓங்கு தெங்கு இலையார் கமுகு இளவாழை மாவொடு மாதுளம் பல
தீங்கனி சிதறும் திருவாரூர் அம்மானே.

பாடல் விளக்கம்:
உயர்ந்த தென்னை மட்டைகளைத் தொடும் அளவுக்கு உயர்ந்த பாக்கு மரங்கள், மற்றும் வாழை, மா, பலா, மாதுளை மரங்களிலிருந்து விழும் கனிகள் நிலமெங்கும் சிதறிக் கிடக்கும் திருவாரூர் தலத்தில் உறையும் அம்மானே, புண்ணியனே, புனிதனே, பூவினைப் போன்ற மென்மையான உனது திருப்பாதங்களைத் தொழுதும் புகழ்ந்து பாடியும், உனது பொற்கழல்கள் எனது நெஞ்சினில் இருக்கப் பெற்றேன்: எனக்கு இனிமேல் எந்த குறையும் இல்லை.


பாடல் எண் : 05
நீறுசேர் செழுமார்பினாய் நிரம்பா மதியொடு நீள் சடையிடை
ஆறு பாய வைத்தாய் அடியே அடைந்தொழிந்தேன்
ஏறி வண்டொடு தும்பி அம் சிறகு ஊன்ற விண்ட மலர் இதழ் வழி
தேறல் பாய்ந்து ஒழுகும் திருவாரூர் அம்மானே.

பாடல் விளக்கம்:
வண்டுகள் தும்பிகளோடு ஏறி மலர்களில் அமர்ந்து, அழகிய சிறகுகளை அவற்றில் அழுத்தி வைப்பதனால், மலர்களின் இதழ்கள் வழியாகத் தேன் பாய்ந்து ஒழுகும் திருவாரூர்த் தலைவனே! நீ திருநீறணிந்த வளமான மார்பினை உடையாய், பிறை மதியோடு உன் நீண்ட சடையிலே கங்கை பரவுமாறு அவற்றைச் சடையில் வைத்துள்ளாய். அடியேன் உன்னை அடைந்து தீவினைகளிலிருந்து நீங்கினேன்.


பாடல் எண் : 06
அளித்து வந்து அடி கை தொழும் அவர் மேல் வினை கெடும் என்று இவ்வையகம்
களித்து வந்துடனே கலந்தாடக் காதலராய்க்
குளித்தும் மூழ்கியும் தூவியும் குடைந்தாடு கோதையர் குஞ்சியுள் புகத்
தெளிக்கும் தீர்த்தம் அறாத் திருவாரூர் அம்மானே.

பாடல் விளக்கம்:
உலகிலுள்ள அடியார்கள் உன்னுடைய தியானத்திலே களிப்புக் கொண்டு வந்து ஒரு சேரக்கூடி ஆட, அதனைக் கண்டு தாமும் விருப்பமுற்றவராய்கக் கழுத்துவரை குளித்தும் தலை நனைய மூழ்கியும் தீர்த்தத்தை ஒருவர் மேல் மற்றவர் வாரி இறைத்தும், நீரில் உட்புக்கு நீராடும் மகளிர் மயிர் முடி மீது அபிடேக நீர் தெளிக்கப்படும் திருவாரூர்த் தலைவனே! அன்பு முதிரப் பெற்றுத் திருக்கோயிலுக்கு வந்து உன் திருவடிகளைக் கைகளால் தொழுகின்ற அடியார்களுடைய வரக்கடவ வினைகளும் அழிந்து விடும் என்று நீ தெரிவிக்கின்றாய் ஆதலின் அடியவர் உன்னடிகளைத் தவறாது வணங்குகின்றனர்.


பாடல் எண் : 07
திரியும் மூவெயில் தீ எழச் சிலை வாங்கி நின்றவனே என் சிந்தையுள
பிரியுமாறு எங்ஙனே பிழைத்தேயும் போகல் ஒட்டேன்
பெரிய செந்நெல் பிரம்புரி கெந்தசாலி திப்பியம் என்று இவ்வையகத்து
அரியும் தண்கழனி அணி ஆரூர் அம்மானே.

பாடல் விளக்கம்:
உயர்ந்த வகையான செந்நெல், பிரம்புரி, கெந்தசாலி, திப்பியன் நெல் வகைகள் அறுவடை செய்யப்படும், குளிர்ந்த தண்ணீர் நிறைந்த வயல்களைக் கொண்ட திருவாரூரில் உறையும் அம்மானே, வானத்தில் திரியும் மூன்று கோட்டைகளையும், தீயில் பற்றி எரியுமாறு, வில்லை ஏந்தி நின்றவனே, நீ எனது சிந்தையுள் நிறைந்து நின்றுவிட்டாய்; நீ எந்த வகையிலும் என்னை விட்டு பிரிந்து போகுமாறு நான் தவறியும் அனுமதிக்கமாட்டேன்.


பாடல் எண் : 08
பிறத்தலும் பிறந்தால் பிணிப்பட வாய்ந்து அசைந்து உடலம் புகுந்து நின்று
இறக்குமாறு உளதே இழித்தேன் பிறப்பினை நான்
அறத்தையே புரிந்த மனத்தனாய் ஆர்வச் குரோத நீக்கி உள்
திறத்தனாய் ஒழிந்தேன் திருவாரூர் அம்மானே.

பாடல் விளக்கம்:
திருவாரூர் அம்மானே! இறந்தால் பிறத்தலும் பிறந்தால் உடலில் புகுந்து நின்று பிணிகள் தோன்ற நுணுகி வருந்தி இறக்குமாறும் உள்ளவே. அதனால் பிறப்பை இழிவாகக் கருதி வெறுத்தேனாய், அறத்தையே விரும்பிய மனத்தினேனாய், ஆசை, பகை, வெகுளி இவற்றை நீக்கி உன் அடிமைத் திறத்தில் ஈடுபட்டேனாய் உலகியற் செயல்களிலிருந்து நீங்கினேன்.


பாடல் எண் : 09
முளைத்த வெண்பிறை மொய்ச்சடை உடையாய் எப்போதும் என் நெஞ்சு இடம் கொள்ள
வளைத்துக் கொண்டிருந்தேன் வலி செய்து போகல் ஒட்டேன்
அளைப் பிரிந்த அலவன் போய்ப் புகுது அந்த காலமும் கண்டு தன் பெடை
திளைக்கும் தண்கழனித் திருவாரூர் அம்மானே.

பாடல் விளக்கம்:
வளையிலிருந்து பிரிந்து சென்ற நண்டு மீண்டும் போய் வளையில் புகுந்த காலத்தை நோக்கிப் பெடை நண்டு அதனைக் கண்டு இன்பத்தில் திளைக்கும் குளிர்ந்த வயல்களை உடைய திருவாரூர் அம்மானே! பிறையை அணிந்த செறிந்த சடையனே! எப்பொழுதும் என் நெஞ்சினையே நீ இடமாகக் கொள்ளுமாறு உன்னைப் பலகாலும் சுற்றிக்கொண்டிருந்த அடியேன் இனிப் பிடிவாதம் செய்து அதனை விடுத்துப்போக ஒருப்படேன்.


பாடல் எண் : 10
நாடினார் கமலம் மலர் அயனோடு இரணியன் ஆகம் கீண்டவன்
நாடிக் காண மாட்டாத் தழலாய நம்பானை
பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு
தேடிக் கண்டு கொண்டேன் திருவாரூர் அம்மானே.


பாடல் விளக்கம்:
தாமரை மலரில் உறையும் பிரமதேவனும், அரக்கன் இரணியனின் உடலைக் கிழித்த வல்லமை படைத்த திருமாலும், சிவபெருமானை அறிய கடுமையான முயற்சிகள் செய்தும் செந்தழலாக ஓங்கி நின்ற சிவபெருமானது அடியையும் முடியையும் காண முடியவில்லை; அத்தகைய அரிய, சிவபெருமான், மிகவும் எளியவனாக, அவனைப் பணியும் பக்தர்கள், புகழ்ந்து பல்லாண்டு இசை பாடும் அடியார்கள் ஆகியோரின் மனதினில் புகுந்து இருப்பதை, பல இடங்களிலும் சிவபெருமானைத் தேடி அலைந்த நான் கண்டுகொண்டேன். அடியார்களுக்கு எளியவனாகவும், ஏனையோருக்கு அரியவனகவும் காணப்படும் சிவபெருமான், திருவாரூரில் உறைகின்றான்.


"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"

"திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்''  "திருச்சிற்றம்பலம்'' 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக