இறைவர் திருப்பெயர் : வன்மீகநாதர், புற்றிடங்கொண்டார், தியாகராஜர்
இறைவியார் திருப்பெயர் : அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
திருமுறை : மூன்றாம் திருமுறை 45 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
இறைவியார் திருப்பெயர் : அல்லியம் பூங்கோதை, கமலாம்பிகை, நீலோத்பலாம்பாள்
திருமுறை : மூன்றாம் திருமுறை 45 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
பாடல் எண் : 01
அந்தம் ஆய் உலகு ஆதியும் ஆயினான்
வெந்த வெண் பொடிப் பூசிய வேதியன்
சிந்தையே புகுந்தான் திரு ஆரூர் எம்
எந்தை தானெனை ஏன்று கொளும்கொலோ?.
பாடல் விளக்கம்:
சிவபெருமான் உலகத்தின் ஒடுக்கத்திற்கும், தோற்றத்திற்கும் நிமித்த காரணன். திருவெண்ணீறு பூசிய வேத நாயகன். என் சிந்தையில் புகுந்து விளங்குபவன். திருவாரூரில் வீற்றிருந்தருளும் எம் தந்தையான அவன் என்னை ஏற்று அருள் புரிவானோ!.
பாடல் எண் : 02
கருத்தனே கருதார் புரம் மூன்று எய்த
ஒருத்தனே உமையாள் ஒருகூறனே
திருத்தனே திரு ஆரூர் எம் தீவண்ண
அருத்த என் எனை “அஞ்சல்!” என்னாததே?.
பாடல் விளக்கம்:
இறைவர் என் கருத்திலிருப்பவர். தம்மைக் கருதிப் போற்றாத பகையசுரர்களின் மூன்று புரங்களையும் அக்கினிக்கணை தொடுத்து எரித்துச் சாம்பலாகுமாறு செய்தவர். ஒப்பற்றவர். உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர். தூயவர். திருவாரூரில் வீற்றிருந்தருளும் தீ வண்ணர். எப்பொருட்கும் விளக்கமாய் அமைந்த பெரும்பொருள். அவர் என்னை அஞ்சற்க என்று மொழியாததன் காரணம் யாதோ?,
பாடல் எண் : 03
மறையன் மா முனிவன் மருவார் புரம்
இறையின் மாத்திரையில் எரியூட்டினான்
சிறைவண்டார் பொழில் சூழ் திரு ஆரூர் எம்
இறைவன் தான் எனை ஏன்று கொளும்கொலோ?.
பாடல் விளக்கம்:
இறைவன், வேதங்களை அருளிச் செய்து வேதப் பொருளாகவும் விளங்குபவன். பெரிய தவத்தன். பகையசுரர்களின் முப்புரங்களை நொடிப்பொழுதில் எரியூட்டியவன். சிறகுகளையுடைய வண்டுகள் ஒலிக்கும் சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் இறைவன் என்னை அடியவனாக ஏற்றுக் கொள்வானோ!.
பாடல் எண் : 04
பல் இல் ஓடு கை ஏந்திப் பலி திரிந்து
எல்லி வந்து இடுகாட்டு எரி ஆடுவான்
செல்வம் மல்கிய தென்திரு ஆரூரான்
அல்லல் தீர்த்து எனை “அஞ்சல்” எனும்கொலோ.
பாடல் விளக்கம்:
இறைவர் பிரமனின் பல் இல்லாத மண்டையோட்டை ஏந்திப் பலி ஏற்றுத் திரிபவர். இரவில் சுடுகாட்டில் நடனம் புரிபவர். செல்வச் செழிப்பு மிக்க அழகிய திருவாரூரில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் என் துன்பத்தைத் தீர்த்து அஞ்சாதே என்று சொல்லி அருள்புரிவாரோ!.
பாடல் எண் : 05
குருந்தம் ஏறிக் கொடிவிடு மாதவி
விரிந்து அலர்ந்த விரை கமழ் தேன் கொன்றை
திருந்து மாடங்கள் சூழ் திரு ஆரூரான்
வருந்தும் போது எனை “வாடல்” எனும்கொலோ?.
பாடல் விளக்கம்:
குருந்த மரத்தில் ஏறிப்படரும் மாதவியும், விரிந்து மலர்ந்து நறுமணம் கமழும் தேனுடைய கொன்றை மரங்களும் திகழ, மாட மாளிகைகள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் இறைவர் நான் வருந்தும் போது, என்னை வருந்தாதே என்றுரைத்து அருள் புரிவாரோ!.
பாடல் எண் : 06
வார்கொண் மென்முலையாள் ஒரு பாகமா
ஊர்களார் இடு பிச்சை கொள் உத்தமன்
சீர்கொண் மாடங்கள் சூழ் திரு ஆரூரான்
ஆர்கணா எனை “அஞ்சல்” எனாததே?.
பாடல் விளக்கம்:
கச்சணிந்த மெல்லிய முலைகளையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, ஊரிலுள்ளவர்கள் இடுகின்ற பிச்சையை ஏற்கும் உத்தமனாய், செல்வவளமிக்க அழகிய மாடங்கள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் நான் வேறு யாரைச் சரணாகப் புகுந்துள்ளேன் என்று கருதி அவன் என்னை அஞ்சாதே என்று கூறாமலிருக்கிறான்?.
பாடல் எண் : 07
வளைக்கை மங்கை நல்லாளை ஓர்பாகமா
துளைக்கை யானை துயர் படப் போர்த்தவன்
திளைக்கும் தண் புனல் சூழ் திரு ஆரூரான்
இளைக்கும் போது எனை ஏன்று கொளும்கொலோ?.
பாடல் விளக்கம்:
வளையலணிந்த கைகளையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட இறைவன், தன்னை எதிர்த்து வந்த யானையானது கலங்குமாறு அடர்த்து அதன் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவன். குளிர்ந்த புனல் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் இறைவன், இளைத்து வருந்தும் காலத்தில் என்னை ஏற்று அருள் புரிவானோ!.
பாடல் எண் : 08
இலங்கை மன்னன் இருபதுதோள் இறக்
கலங்க கால் விரலால் கடைக் கண்டவன்
வலம்கொள் மாமதில் சூழ் திரு ஆரூரான்
அலங்கல் தந்து எனை “அஞ்சல்” எனும்கொலோ?.
பாடல் விளக்கம்:
இலங்கை வேந்தனான இராவணனுடைய இருபது தோள்களும் நொறுங்கிக் கலங்கத் தன் காற்பெருவிரலை ஊன்றியவர் இறைவர். வலிமையுடைய பெரிய மதில்கள் சூழ்ந்த திருவாரூரில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் எனக்குப் பெருமை சேர்க்கும் மாலை தந்து அருளி, நான் வருந்தும் காலத்தில் அஞ்சாதே என்று அபயம் அளித்துக் காப்பாரோ!.
பாடல் எண் : 09
நெடிய மாலும் பிரமனும் நேர்கிலாப்
படியவன் பனி மாமதிச் சென்னியான்
செடிகள் நீக்கிய தென் திரு ஆரூர் எம்
அடிகள் தான் எனை “அஞ்சல்” எனும்கொலோ?.
பாடல் விளக்கம்:
நீண்டு உயர்ந்த திருமாலும், பிரமனும் காண முடியாத தன்மையராய்க் குளிர்ந்த சந்திரனைச் சடை முடியில் தாங்கிய இறைவர், மன்னுயிர்களின் பாவங்களை நீக்கி அழகிய திருவாரூரில் வீற்றிருந்தருளும் அடிகளாவார். அவர் என்னை அஞ்சாதே என்று அருள் புரிவாரோ!.
பாடல் எண் : 10
மாசு மெய்யினர் வண் துவர் ஆடை கொள்
காசை போர்க்கும் கலதிகள் சொல் கொளேல்
தேசம் மல்கிய தென் திரு ஆரூர் எம்
ஈசன் தான் எனை ஏன்று கொளும்கொலோ?.
பாடல் விளக்கம்:
அழுக்கு உடம்பையுடைய சமணர்களும், துவராடை அணிந்த புத்தர்களும், கூறும் பயனற்ற சொற்களைக் கொள்ளாதீர், அருளொளி விளங்கும் அழகிய திருவாரூரில் வீற்றிருந் தருளும் எம் இறைவரான சிவபெருமான் என்னை ஏற்று நின்று அருள்புரிவாரோ!.
பாடல் எண் : 11
வன்னி, கொன்றை, மதியொடு கூவிளம்
சென்னி வைத்த பிரான் திரு ஆரூரை
மன்னு காழியுள் ஞானசம்பந்தன் வாய்ப்
பன்னு பாடல் வல்லார்க்கு இல்லை பாவமே.
பாடல் விளக்கம்:
வன்னி, கொன்றை, சந்திரன், வில்வம், ஆகியவற்றைச் சடை முடியில் திகழச் சூடிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருவாரூரை, நிலைபெற்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் வாய்மலர்ந்து அருளிய இத்திருப்பாடல்களை ஓத வல்லவர்கட்குப் பாவம் இல்லை.
"ஓம் நமசிவாய...! சிவாய நம ஓம்...!"
"திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்'' "திருச்சிற்றம்பலம்''
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக